/* up Facebook

Jan 31, 2011

கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறேன் - தர்மினி

31

அவளின் அழுகுரல் …அழுகுரல் ……அழுகுரல் எண்ணிக்கைகளற்று இன்னும் நீண்டு செல்கிறது.
சொட்டிக் கொண்டிருக்கிறது துயர்.
உடல் நடுங்கிச் சாகும்… சாகும்…நித்தம் அவள் செத்துக் கொண்டிருக்கிறாள்.
வாழ்வின் உப்புக் காடி சுவைத்தபடி
அவள் கதைகளும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
அவை நரகத்து முட்களைச் சூடிய ராணியாகிய கதைகளும் பாடல்களும் கிளைக்கதைகளுமாக.
அவளது நாக்கு இரத்தம் ஊற்றிய படியிருக்க இதுவல்லவோ குரலென்று விம்மிவிம்மிப் பாடுகிறாள்.

“உப்புக் காடியை நான் குடித்து முடித்து விடுவேன். உனக்கில்லை…உனக்கில்லை”

எப்போதும் முதல் வரியைப் பாடிக் கொண்டிருப்பாள்.
மற்றுமொரு வரிக்கான காத்திருப்பில் பயனில்லை.
அவளே அறியாத வரியொன்றை எங்ஙனம் பாடுவதென்கிறாள்.
கன்றிப் போன தோல் ஊதா நிறம் படரும் பேய் என்பாள்.
கொல்ல ஊரும் பாம்பு விசிறிய பாதையென்றாள்.
கோடுகளால் வட்டங்களால் ஊதாவாகி
சிதறிய இரத்தத் துளிகளின் நிலம் வரைந்த வடிவமாக மெது மெதுவாகக் கரைந்ததைக் கண்டேன்.
சிவப்பாகி அவள் உடலில் வடிவதும் இரத்தம் தான்.
நித்திரையில்லா என் உறங்கும் நேரம்
காணப் போகும் வன் கனவின் பயம்
அவளின் கன்றிய முதுகைக் காட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
உறக்கத்தில் இடைபுகுந்து நடுங்கச் செய்யப் போகும் கனவைத் துரத்திக் கொண்டிருந்தேன்.

தனக்காக அழுவதற்கும் விழிப்பதற்கும் இருக்கின்ற என்னிரு கண்கள் பற்றி அம்மா அறிவாள்.

நன்றி தூமை 
...மேலும்

Jan 30, 2011

ஜென்னியின் காதல்..! - தமிழ் மதி


"குழந்தை பிறந்த போது தொட்டில் இல்லை இறந்தபோது சவப்பெட்டி இல்லை"

ஜென்னியின் கடிதத்தின் வாக்கியங்களைப் படித்தவுடன் கண்கள் கலங்கிவிடுகிறது. ஜென்னியின் வறுமைக்கு சவப்பெட்டி நிகழ்வு போதும். என்னாயிற்று குழந்தைக்கு? யார் இந்த ஜென்னி? இப்படியொரு கொடுமை பெற்றவளுக்கு இருந்தால் என்ன செய்வாள்?

பதறுகிறோம் நாம். இத்தனைக்கும் ஜென்னி மிக வசதியான வீட்டுப் பெண் தான். அவளுடைய உண்மை காதலுக்கு முன் இந்த வறுமையும் துச்சமென சிரித்து விரட்டுவாள் ஜென்னி. யார் அந்த அதிஷ்டகார காதலன்?

ஜென்னியின் முன்னோர்கள் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பிரபு வம்சத்தினர் என்றால் கிட்டத்தட்ட குட்டி ராஜாக்கள் போன்ற வசதியுடையவர்கள் என்றுக் கூட சொல்லலாம். மிகவும் பிற்போக்கான உணர்வு உடையவர்கள். ஜென்னியின் தந்தை ட்ரீவ்ஸ் என்னும் நகரின் பிரதம அதிகாரியாக வேலைமாற்றம் கிடைத்து தன் குடும்பத்தினருடன் ட்ரீவ்ஸ் வருகிறார். அப்போது ஜென்னிக்கு வயது 2. ஜென்னியின் பக்கத்து வீடு கார்ல் மார்க்ஸ். ஆனால் அப்போது கார்ல் மார்க்ஸ் பிறக்கவில்லை.

ஜென்னிக்கு 4- வயது நடக்கும் போது கார்ல் மார்க்ஸ் பிறந்தார்.
ஜென்னியை விட கார்ல் மார்க்ஸ் 4- வயது குறைவு. கார்ல் மார்க்ஸ் தந்தை வக்கீல் தொழில் செய்தவர். அவருக்கு மொத்தம் 8- குழந்தைகள். ஐந்து பெண்கள் 3- மகன்கள். இதில் இரண்டு பெண் குழந்தைகளும், 2- ஆண் குழந்தைகளும் எலும்புருக்கி நோயால் இறந்துவிட்டனர். அதனால் கார்ல் மார்க்ஸ் மீது தந்தை மிகவும் பாசமாக இருந்தார்.

பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்ததால் ஜென்னியின் தந்தைக்கும் கார்ல் மார்க்ஸின் தந்தைக்கும் நல்ல நட்பு இருந்தது. ஜென்னியும் கார்ல் மார்க்ஸிம் சிறுவயதில் இருந்தே ஒன்றாக பள்ளிக்கு செல்லும் போதும், விளையாடும் போதும் வேறு எங்குச் சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். 17- வயதில் கார்ல் மார்க்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கனவுகளில் ஜென்னி அக்கிரமித்தாள். ஒவ்வொரு மணித்துளியும் ஜென்னியின் ஞாபகம். கார்ல் மார்க்ஸ்சுக்கு காதல் வந்துவிட்டது. ஜென்னியின் பக்கம் பார்த்தால் காதல் உணர்வுகளில் கார்ல் மார்க்ஸ் ஹீரோவாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.

கார்ல் மார்க்ஸ் ´பான்´ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. ஜென்னியும், கார்ல் மார்க்ஸீம் திருமணம் செய்துக் கொள்வதாக இரகசியமாக பேசி முடிவு செய்துக் கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவது இருகுடும்பத்தினருக்கும் தெரியாது. கார்ல் மார்க்ஸீன் தந்தைக்கு முதன் முதலில் தெரிந்த போது அதிர்ந்து போனார். மிகப் பெரிய பணக்காரப் பரம்பரைச் சேர்ந்தவர்கள். நடக்கிற காரியமா இது? ஜென்னியின் தந்தை தன்னை என்ன நினைப்பாரென்று கவலைப்பட்டார். இந்த காதல் கூத்தில் தன்னுடைய நட்பு பிரிந்துவிடப் போகிறது என்ற கவலை வேறு. மகனிடம் பக்குவமாக சொல்லிப் பார்த்தார். முதலில் படிப்பை முடி என்று சொல்லி வைத்தார். கார்ல் மார்க்ஸ் ´பெர்லின்´ கல்லூரிக்கு மேற்படிப்புக்கு சென்ற போதும் கார்ல் மார்க்ஸீன் தந்தையிடம் இருந்து ´காதல் வேண்டாம்´ என்ற அறிவுரையோடு கடிதம் அடிக்கடி வந்துக் கொண்டே இருந்தது.

ஜென்னியும் கார்ல் மார்க்ஸீம் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். கார்ல் மார்க்ஸ் சம்பாதிக்க ஆரம்பித்ததும் திருமணம் செய்துக் கொள்வதாகவும் அதுவரையில் ஜென்னி காத்திருப்பதாகவும் முடிவாயிற்று. கார்ல் மார்க்ஸ் படிப்பை முடிக்கும் வரை 7- வருடங்களாக ஜென்னி காத்திருந்தாள். சிலமுறை அவளின் தந்தை வரன்கள் பற்றி பேச்சு எடுத்த போதும் தவீர்த்து வந்தாள். இருவரையும் விட கார்ல் மார்க்ஸ் தந்தை மிகுந்த சங்கடத்துடனும் பயத்துடனும் இருந்தார்.

ஜென்னியின் காதல் தவீர, சட்டம், சரித்திரம், பூகோளம், தத்துவம் பாடங்களை விட்டால் நூல் நிலையங்களுக்குச் சென்று தத்துவ நூல்களை விரும்பிப் படிப்பது இவை தவீர, கார்ல் மார்க்ஸ் வேறெதிலும் ஈடுபாடு காட்டியதில்லை. குறிப்பாக தத்துவம் பாடத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது கார்ல் மார்க்ஸீக்கு. தந்தைக்கோ மகன் தன்னைப் போல் வழக்கறிஞன் ஆகவேண்டும் என்று விரும்பினார். கார்ல் மார்க்ஸ்சின் சிந்தனையோ பாடங்களுடன் சமூகத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதிக சிந்தனை, இரவு நெடுநேரம் விழித்திருந்து படிப்பது அல்லது தத்துவங்கள் குறித்து எழுதிக் கொண்டிருப்பது என இருந்த கார்ல் மார்க்ஸ் அக்காலத்தில் புகழ்பெற்ற ´எகல்´ என்ற தத்துவத்தை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

கல்லூரி படிப்பை முடித்ததும் வேலை தேட ஆரம்பித்தார். தனக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜென்னியை நினைத்துக் கவலைப்பட்டார். எப்போதாவது வரும் கார்ல் மார்க்ஸீன் கடிதங்களும் நினைவுகளும் அவளை வாழ வைத்ததாக பிரிதொரு சமயத்தில் ஜென்னி சொல்கிறாள். அந்தளவுக்கு பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தாள். கார்ல் மார்க்ஸீம் அப்படியே.

மகன் தன்னுடைய சொல்லுக்கு கட்டுப்படாமல் ஜென்னியை திருமணம் செய்வதில் காட்டிய ஈடுபாட்டால் தந்தையிடம் பிரச்சனை வந்திருந்தது. மேலும் அக்கால அரசியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் சர்வாதிகாரங்கள் ஜெர்மனியில் இருந்தன. நேர்மையாளரான துடிப்பு மிக்க வாலிபனுடைய வார்த்தைகளில் பலவித தொந்தரவுகள் ஏற்பட கார்ல் மார்க்ஸீக்கு ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. அந்த கட்டத்தில் கார்ல் மார்க்ஸ் தந்தையும் இறந்து போனார். கார்ல் மார்க்ஸ் சிறுவயதாக இருக்கும் போதே அக்காக்கள் திருமணம் செய்துக் கொண்டு போய்விட்டார்கள். நெருங்கிய தொடர்பும் அவர்களுடன் இல்லை. கார்ல் மார்க்ஸீக்கு தனிமையில் தவீத்தார். ஜென்னியை திருமணம் செய்துக் கொள்வதும் ஜெர்மன் நாட்டை விட்டு வெறியேற வேண்டும் என்ற இரு குறிக்கோளைத் தவிர வேறொன்றையும் நினைக்கவில்லை.

1843- இல் ஜீன் 13-இல் க்ருஸ்னாக் என்ற ஊரில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அப்பொது ஜென்னியின் வயது 29. அத்துடன் ஜென்னியின் வசதி நிறைந்த வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. அதே வருடத்தில் பாரீசுக்கு வந்துவிட்டார் மார்க்ஸ். ஜென்னியின் வீட்டில் பணிப்பெண்கள் வேலை செய்வார்கள். ஜென்னிக்கு வறுமையும் தெரியாது, வேலையும் தெரியாது, பட்டினியும் தெரியாது. தன் காதலனின் விருப்பப்படி சொந்த நாட்டையும், குடும்பங்களையும் பிரிந்து வேலையில்லாத காதலனுடன் ஒருவேளை சாப்பாட்டுக்கும், தங்கி இருந்த மிகச் சிறிய அறையிலும் தன்னுடைய காதலனுடன் வாழ்க்கையை தொடங்குகிறாள். வறுமையின் விளிம்பில் இருந்த போதும் ஒருமுறைக் கூட காதல் கணவனை அவள் குற்றம் சுமத்தவில்லை. அவள் காதலை மட்டும் நேசித்தாள். கார்ல் மார்க்ஸிடம் அளவுக்கு அதிகமாக கிடைத்தது.

தத்துவவிவாதம் குறித்து ஜென்னியுடன் பேசியபோதெல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டும், உற்சாகத்துடன் ஊக்குவித்துக் கொண்டும் இருந்தாள் ஜென்னி. 1844- இல் மே 1-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்காலகட்டத்தில் மார்க்ஸ் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். படிப்பதும், சிந்திப்பதுமாக இருந்த கார்ல் மார்க்ஸ் பாரீசில் ஜெர்மன் தொழிலாளர்களுக்கும், பாரீஸ் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து தீவிர ஆர்வம் காட்டினார். குறைந்த கூலியில் வேலை செய்த ஜெர்மானியர்கள் மீது பாரீஸ் தொழிலாளர்கள் வெறுப்புடன் இருந்தனர்.

அந்தக்காலக்கட்டத்திலேயே பிரான்சில் சோஷலிஸக் கருத்துக்களுக்கு தீவிர ஆதரவு கிளம்பின. பல இடங்களில் கூட்டங்கள் நடத்தினர். இருப்பினும் தொழிலாளர்களிடம் தெளிவான கொள்கைகளோ, ஒற்றுமையோ இல்லாமல் பிளவுபட்டுக்கிடந்தது. முடிந்த வரை எல்லாக் கூட்டங்களுக்கும் செல்வார் கார்ல் மார்க்ஸ். கூட்டத்தில் பேசப்படும் கருத்துக்கள் மீது திருப்தி இல்லாமல் இருந்தது அவருக்கு. அதைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பார். வேலையில்லாத கணவன் எப்போதாவது கட்டுரை எழுதினால் அதில் வரும் வருமானம். ஜென்னி கைக் குழந்தையுடன் எப்படி சமாளித்தாளோ?

கணவனின் செயல்பாடுகள் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும் கார்ல் மார்க்ஸ் அசரவில்லை. தன் கருத்தை எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டே இருந்ததால் ஜெர்மானிய நாட்டு அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்திடம் கார்ல் மார்க்சை கவனிக்கும்படி சொல்லியது. பிரான்ஸ் அரசாங்கம் கார்ல் மார்க்ஸை 24- மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி சொல்லியது. ஜென்னியையும், குழந்தையையும் பிரான்சில் விட்டு பெல்ஜிக் சென்றார். ஜெர்மன் அரசாங்கம் அந்த நாட்டிலும் கார்ல் மார்க்ஸை நிம்மதியாக விடவில்லை. வெறுப்புற்ற அவர் ஜெர்மன் நாட்டின் பிரஜை என்ற உரிமை எனக்குத் தேவையில்லையென தூக்கியெறிந்தார். சில காலத்திற்கு பிறகே ஜென்னியை வரவழிக்க முடிந்தது.

´ப்ரஸ்ஸல்ஸ்´ என்னும் இடத்தில் அவர்கள் தங்கி இருந்தபோது பொதுவுடமைக் கழகத்தின் கட்டிடத்தில் கார்ல் மார்க்ஸ் மற்றும் தோழர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது பெல்ஜீய போலீஸ் கட்டிடத்தைச் சுற்றி வலைத்தது. கார்ல் மார்க்ஸை தவீர மற்ற அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். கார்ல் மார்க்ஸ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஜென்னிக்கு தகவல் தெரிந்ததும் பதறினாள். தன் கணவனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தாள். ஜென்னிக்கு அப்படி என்னத்தான் தீராத காதலோ? எதுவும் வேண்டாம் அவளுக்கு, கார்ல் மார்க்ஸ் தனக்கு அருகில் இருந்தால் போதும். தத்துவங்களுடன் தர்க்கம் செய்துக் கொண்டும், பேசிக் கொண்டிருந்தாலுமே போதும். கார்ல் மார்க்ஸீடன் ஒரு அடி ரொட்டித் துண்டை பகிந்து கொண்டு கந்தல் உடைகளை போட்டுக் கொண்டு வறுமையின் கொடுமையில் வாழ்ந்தாலும், ஜென்னி தாய் வீட்டில் இருந்த சந்தோஷத்தை விட அதிகமான சந்தோஷத்தையே கார்ல் மார்க்ஸீடன் இருந்த போதும் அவளுக்கு இருந்தது. அப்படிப்பட்டவளுக்கு கணவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் என்றால் எப்படி இருக்கும்?

கணவனைக் காப்பாற்றியாக வேண்டுமே. புதிய இடம்; யாரையும் தெரியவில்லை. பெல்ஜீயம் ஜனநாயக சங்கத்தின் தலைவரான ´ஜோட்ரான்ட்´ என்பவரிடம் நடந்த சம்பவங்களை கூறி உதவி கேட்டாள். தேவையான ஏற்பாடுகளை அவர் செய்வதாக சொல்லி ஜென்னியை பாதுகாப்பாக வீடு வரை சென்று விட்டு வரும்படி ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ´கிகாட்´ என்பவரை உடன் அனுப்பினார் தலைவர். வீட்டுக்கு வந்த போது வீட்டினுள் ஒரு போலீஸ் இருந்தான். "கார்ல் மார்க்ஸை பார்க்க வாருங்கள் அழைத்துச் செல்கிறேன்" என்றான். கிகாட்டுக்கு சற்று யோசனையாக இருந்தது. எதையும் வெளிக்காட்டாமல் ஜென்னி உங்களுடன் நானும் வருகிறேன் என்றார்.

போலீஸ் ஸ்டெஷனுள் ஜெயில் அதிகாரி மரியாதைக் குறைவாக பேச ஆரம்பித்தான். ´விபச்சாரி´ போன்ற வார்த்தைகளை உபயோகித்த போது கிகாட் கண்டித்தார். அதனால் கிகாட் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ´வில்லே´ என்ற சிறையில் விபச்சாரிகளுடன் ஜென்னியும் அடைக்கப்பட்டாள்; கணவனைத் தேடி வந்த ஜென்னிக்கு கிடைத்த இழிபேச்சுக்களும், விபச்சாரிகளுக்கு இணையாக அவளை ஜெயிலில் நடத்தியது அவளுக்கு எப்படி இருந்திருக்குமோ? அப்போது கூட அவளைப்பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டாள். கார்ல் மார்க்ஸை தான் நினைத்து கவலைப்பட்டிருப்பாள்.
ஜெயிலுக்குள் மற்ற கைதிகளுக்கிடையில் ஜென்னியைப் பற்றி செய்தி பரவியது. எல்லா பெண் கைதிகளும் ஜென்னிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். ஜென்னியை வெளியே விடு என்று விபச்சாரிகளும்
கோஷமிட்டனர்.


ஜென்னியை காணாமல் அவள் வீட்டில் இருந்த ´ஹெலன்´ என்ற பெண் எல்லோரிடமும் நடந்த விஷயத்தை கூறினாள். எல்லோரும் ஜெயிலை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். ஜெயிலைச் சுற்றி பதற்றமாக இருந்தது. மறுநாள் மாஜிஸ்ட்டிரேட் முன் ஜென்னியை நிறுத்தியபோது குழந்தைகளையும் ஏன் கைது செய்யவில்லையென்று போலீசை கண்டித்தார் என்றால் சட்டத்தின் ஒழுங்கை பாருங்கள்.

அரசாங்கம் மக்களிடம் கார்ல் மார்க்ஸீக்கு இருந்த ஆதரவைக் கண்டு வேறு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நாட்டை விட்டு 24- மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் குடும்பத்திற்கு கெடு வைத்தது. ஜென்னியும் கார்ல் மார்க்ஸையும் விடுதலை செய்தனர். 24- மணிநேரத்தில் 4- மணிநேரமே இருந்தது. வீட்டில் இருந்த சாமான்களை கூட எடுக்க முடியவில்லை. குழந்தைகளுடன் போலீஸ் ஜென்னியையும், கார்ல் மார்க்ஸையும் நாட்டின் எல்லையில் கொண்டுபோய் விட்டது.

சில துணி மூட்டைகள் குழந்தைகள் கணவனுடன் நாட்டை விட்டு துரத்தப்பட்ட ஜென்னி கார்ல் மார்க்ஸீடன் அந்த சூழலில் என்ன பேசி இருப்பாள்? வேறு பெண் அந்த இடத்தில் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாள்? ஜென்னியைப் போன்று ஒரு பெண் காதலால் இவ்வளவு பிரச்சனைகளை எதிர்க்கொண்டும் சாகும்வரையில் காதலனுடன் இருந்திருப்பார்களோ என்னவோ? பிரச்சனை, வறுமை, நாடு கடத்தப்படல் இப்படியே ஆயுள் முழுவதும் ஜென்னி எப்படி தாக்கு பிடித்திருப்பாளோ?

மீண்டும் கார்ல் மார்க்ஸ் தன் குடும்பத்தினருடன் பாரீஸ் வந்தார். பிறகு சில வாரங்களில் ஜெர்மனிக்கு சென்றார். தோழர்களுடன் கூட்டம், பிரச்சாரம் என போராட்டங்களை சுருக்கி எழுதவிட முடியாது. நீண்ட போராட்ட வாழ்க்கை அவர்களுடையது என்றாலும், ஜென்னியை மையப்படுத்தி செல்ல வேண்டுமென்பதால் மீண்டும் ஜென்னியிடமே செல்வோம்.

ஜெர்மனியில் இருந்த போது கார்ல் மார்க்ஸ் தொடங்கிய பத்திரிக்கை மிகப் பிரபலமாகியது. மார்க்ஸீய கருத்துக்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதும் ஜெர்மன் நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டளை வந்தது. அப்போது ஜென்னி கர்ப்பமாக இருந்தாள். மற்ற குழந்தைகளும் சிறியது வயதுடையவர்கள். மீண்டும் 1- வருடத்திற்கு பிறகு பிரான்சுக்கு வந்தார்கள். அங்கு வந்ததும் 1- மாதத்திற்குள் பிரான்சை விட்டு 24- மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்ற அரசு கட்டளை. ஜென்னி நிறைய மாத கர்ப்பிணி. வேலை எதுவுமில்லை. சின்ன குழந்தைகளையும் வைத்துக் கொண்டு இனியும் வேறு நாட்டுக்கு போகும் அளவு ஜென்னியின் உடல்நிலை இல்லாததால் அரசாங்கத்திடம் நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்யும்படி தன் சூழலை விரிவாக குறிப்பிட்டார் மார்க்ஸ். அரசாங்கம் வேண்டுமானால் மனைவியும், குழந்தைகளும் இருக்கட்டும். ஆனால் நீங்கள் இருக்கக் கூடாது என்றது. கார்ல் மார்க்ஸ் வேறு வழியின்றி அன்றே வேறு நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழல்.

ஜென்னிக்கு வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. எப்போது என்ன நடக்குமென்று தெரியாது. இருப்பினும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். கார்ல் மார்க்ஸீன் கொள்கைக்கு உறுதுணையாக இருந்தாள். லண்டனுக்கு மார்க்சை அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டாள். கார்ல் மார்க்ஸ் லண்டனுக்குச் சென்று ஜென்னியையும், குழந்தைகளையும் அழைத்துக் கொள்வதாக முடிவாகியது.

லண்டனில் மார்க்ஸ் குடும்பத்தினரை வரவழித்த போது வேலை எதுவும் இல்லை. நண்பனின் உதவித் தொகையில் வீட்டு வாடகை கட்டிக் கொள்ள மட்டும் முடிந்தது. பிள்ளைகளுக்கு ஒருவேளை உணவுக்கு கூட வழிக்கிடைக்காமல் பட்டினி கிடந்தன. நல்ல உடைகள் இல்லை. குளிருக்கு பாதுகாப்பான போர்வைகள் இல்லை. சிறிய ரொட்டித்துண்டகளும், சில உருளைக்கிழங்களும் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கின்றனர். ரொட்டியும் உருளைக்கிழங்கும் ஐரோப்பாவில் ஏழைகளின் உணவு. அது கூட மார்க்ஸ் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. பிச்சை எடுப்பவர்களுக்கு கூட ஒருவேளை உணவுகள் கிடைத்திருக்கும். குழந்தைகளையும், கணவனையும் நினைத்து மனதுக்குள் அந்த தாய்யுள்ளம் நிச்சயம் தவித்திருக்கும்.

குழந்தைகளின் தேவைகளைக் கூட கார்ல் மார்க்ஸீடம் ஜென்னி சொல்வதில்லை. குழந்தைகளின் கஷ்டத்தை நினைத்து கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள் சிதறிவிடக் கூடாது என்பதில் ஜென்னி உறுதியாக இருந்தாள். இருப்பினும் கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மனைவியை நினைத்தும், குழந்தைகளின் நிலையை நினைத்தும் மிகவும் வருந்தினார். போதிய சத்துணவு இல்லாததால் குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு அடைந்தன. ஜென்னிக்கு முதுகுவலி, நெஞ்சுவலி வர ஆரம்பித்தது. பசிக்கு அழும் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கக் கூட முடியாத நிலை. பாலுக்கு பதில் ரத்தம் தான் ஜென்னிக்கு வந்தது. நல்ல குளிரிலும் தரையில் படுத்தார்கள். வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல் போய்விட்டது.

வறுமையோடு போராடிய ஜென்னியிடம் குடியிருந்த வீட்டுக்கு உரிமையான பெண் ஏலம் போடுபவர்களுடன் வீட்டுக்குள் நுழைந்து எல்லா சாமான்களையும் பொறுக்கிக் கொண்டு வாடகையான 5- பவுன் பணத்தை உடனே கொடுக்காவிட்டால் அத்தனை பொருட்களையும் ஏலத்துக்கு விடுவேன் என்று கத்தினாள். மார்க்ஸ் பித்து பிடித்தவர் போல் உட்கார்ந்து விட்டார். குழந்தைகள் பயத்தில் அழுதன. நண்பர் ஒருவர் யாரிடமாவது உதவி கேட்கலாமென்று குதிரையில் புறப்பட அன்று பெரும் மழை பெய்துக் கொண்டிருந்தது. அதில் குதிரை தாக்கு பிடிக்க முடியாமல் தவறிவிழ நண்பருக்கு உடம்பெல்லாம் ரத்தக் காயம் ஏற்பட்டு வெறும் கையுடன் திரும்பினார்.

"வாடகை பணத்தை வை, இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறு" என்று வீட்டுக்காரப் பெண் பணத்தில் குறியாய் இருந்தாள். ஒரே ஒரு நாள் கெடு கொடுத்தாள். அப்படியே பணத்தை கொடுத்தாலும் உடனே வீட்டை காலி செய் என்று கட்டளை இட்டாள். டக்கென்று வேறு இடம் பிடிப்பதென்றால் நடக்கிற காரியமா? குழந்தைகள், மனைவியுடன் என்ன செய்வது?

கடைசியாக நண்பர் ஒருவர் வீட்டுகொஞ்சம் பணஉதவி செய்தார். மீதி பணத்திற்கு வீட்டில் இருந்த பொருட்களை விற்று வாடகை கட்டினார். மறுநாள் வீட்டுக்குள் ஏலம் எடுப்பவர்கள் நுழைந்த செய்தி அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். கார்ல் மார்க்ஸீடம் துக்கம் விசாரிப்பதுபோல் எல்லோரும் கேள்வி கேட்டார்கள். அவமானத்தில் குறுகிப் போவிட்டார் கார்ல் மார்க்ஸ். அவர் பட்ட கஷ்ட நஷ்டங்களை இப்படி எழுத்தாக்கி விளக்குவதற்கு கூட நமக்கு நெஞ்சம் பதறுகிறது.

மறுநாள் வேறு ஓர் இடத்திற்கு மார்க்ஸ் குடும்பத்தினருடன் இடம் மாறினார். அவை சேரிப்புறம் போன்றது. மிகவும் மோசமான சுகாதாரம். இரைச்சலும், அழுக்கும், துர்நாற்றமும் உடைய பகுதி அது. இரண்டு அறைகள் அடங்கிய அந்த வீட்டில் 6- வருடங்கள் வாழ்ந்தார்கள். அங்கு சென்றதும் மார்க்ஸீன் சிறிய குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மார்ப்புச்சலியால் அவதிப்பட்டு மூன்று நாட்களில் இறந்துவிட்டது. சவப்பெட்டி வாங்க கையில் பணம் இல்லை. ஜென்னியின் கதறிவிட்டாள்.

"குழந்தை பிறந்த போது தொட்டில் வாங்க பணமில்லை
அவன் இறந்த போது சவப்பெட்டி வாங்க பணமில்லை."

பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த 2- பவுன் பணத்தில் சவப்பெட்டி வாங்கி அடக்கம் செய்தனர். சில வருடங்களுக்கு பிறகு 6- வயது மகன் எட்கார் இறந்தான். குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த ஜென்னியும், கார்ல் மார்க்ஸீக்கும் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது. மார்க்ஸீக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடல் முழுவதும் கொப்பளங்கள் உண்டாயின. அத்தொற்று வியாதி ஜென்னிக்கும் வந்தது. சரியான சாப்பாடு இல்லாமல், பட்டினி, உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. விகாரத்தோற்றம் அருவெறுப்பாக மற்றவர்களை பார்க்கத் தூண்டும் அளவு கொப்புளங்கள். யாரும் வேலைக்கு கூட கூப்பிட மாட்டார்கள். தன்னுடைய பெரிய பெண்கள் இருவரையும் பணக்கார வீட்டில் வேலைக்கு அமர்த்திவிட்டு சிறிய குழந்தையும், ஜென்னியுடனும் ஏதாவது அனாதை விடுதியில் தங்கிவிடலாமா என்ற சிந்தனையும் கார்ல் மார்க்ஸீக்கு இருந்தது.

ஜென்னிக்கு வறுமையும், கஷ்டங்களும் அவமானங்களும் பெரியதாக தெரியவில்லை. தன்னுடைய குழந்தைகளின் மரணம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

"என் குழந்தைகள் இல்லாமல் நான் வாழ்கிற நாட்கள் அதிகரிப்பானது என் துன்பத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது" என்று குழந்தைகள் இறந்து 10- ஆண்டுகளுக்கு பிறகும் கூறிக் கொண்டே இருந்தாள். அக்குழந்தைகளைப் பற்றியே பேசினாள். யாருக்காவது கடிதம் எழுத நேர்ந்தால் இறந்த குழந்தைகளைப் பற்றியே எழுதினாள்.

டிசம்பர் 2, 1881- இல் ஜென்னி இறந்தபோது கார்ல் மார்க்ஸை நேசித்தாள். இறந்த குழந்தைகளை நினைத்து வருந்தினாள். ஜென்னி இறந்த போது கார்ல் மார்க்ஸ் இறந்து விட்டார். காதலியின் மறைவுக்கு பிறகு நடைப்பிணமாகவே அவர் இருந்தார். 1883- ஜனவரி 11- இல் மூத்த மகள் பாரீசில் இறந்த செய்தி கிடைத்தது. அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் சென்று மார்ச் 14- இல் மதியம் 2.45- க்கு கார்ல் மார்க்ஸ் இறந்தார்.

ஜென்னி தன் இளைய வயதில் இருந்த வசதியான வாழ்க்கை இனி கிடைக்காதே என்று ஏங்கவில்லை. அவளுக்கு பணம் பெரியதாக தெரியவில்லை. தன்னை நேசித்த கார்ல் மார்க்ஸின் காதலை மட்டும் கடைசி வரையில் பெற்றிருந்தாள். காதலில் ஜென்னி தோற்கவில்லை. காதலுக்கு அகராதியில் அர்த்தம் தேடுகிறோம். காதலின் உணர்வுகளை பலர் அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால், காதல் என்பது இருவரின் இதயத்தில் இருந்தும் உண்மையான நேசிப்பில் தொடங்கினால் நிச்சயம் வெறுப்பில் முடிந்துவிடும் உணர்வல்ல காதல் என்பதற்கு ஜென்னியின் காதல் முன் உதாணம்....

கார்ல் மார்க்ஸ் ஒவ்வொரு முறையும் ஜென்னியை விட்டு பிரிந்து செல்லும் கட்டாயம் ஏற்படும் போதெல்லாம் ஜென்னி சொல்லுவாள்....
"நீ என்னருகில் இல்லை என்ற உணர்வானது
நான் என்னிடம் இல்லை என்பதை
உணரக் கூட முடிவதில்லை"

நன்றி - என்னுள் 
...மேலும்

Jan 29, 2011

சங்ககாலப் பெண் கவிஞர்களின் அழகியல் நிலைகள் - வெளி ரங்கராஜன்


அண்மையில் சங்ககாலப் பெண் கவிஞர்கள் என்று அறியப்படும் 41 பெண் கவிஞர்களின் கிட்டத்தட்ட 180 கவிதைகள் அடங்கிய ந. முருகேசபாண்டியனின் தொகுப்பொன்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் சங்ககாலம் பற்றி உருவாக்கப்பட்டுள்ள பல புனைவுகளை ஒரு மறுபார்வை பார்க்கக்கூடிய வாய்ப்பாக அது இருந்தது. சங்ககாலம் பற்றி வெறும்போலிப் பெருமை பேசும் அலங்காரமான உணர்ச்சி சார்ந்த திராவிட இயக்க ஆய்வுகளும், சமூகவியல் காரணிகளையே அதிகம் முன்நிறுத்தம் ஒருவிதமான வறண்ட அறிவுவாதம் சார்ந்த மார்க்சிய ஆய்வுகளுமே அதிகமாக நம்மிடம் உள்ளன. இந்நிலையில் வாழ்வியல் சார்ந்தும், அழகியல் சார்ந்தும் அக்காலக் கவிதை மொழியின் பல்வேறு கூறுகளை நாம் இனங்காண வேண்டிய அவசியம் உள்ளது. உண்மையில் வரலாறு என்பதே மொழியின் மூலமாக உருவாக்கப்படும் புனைவுகளால் கட்டமைக்கப்படுவது தானே. சங்ககாலக் கவிதைமொழியின் ஊடாக வெளிப்படும் அழகியல் கூறுகளையும், வாழ்வியல் மதிப்பீடுகளையும் நாம் பரிசீலனை செய்வதன் மூலம் இன்றைய பின் நவீனச் சூழலில் நாம் தமிழ் இலக்கிய வரலாற்றை மீண்டும் மறுவாசிப்பு செய்யவும், அதன் விளக்கப்படாத பல பகுதிகளை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியங்களும் உருவாகின்றன.

முக்கியமாக சங்க காலம் என்று வரையறுக்கப்படும் கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டு கால கட்டத்தில் கிட்டத்தட்ட 41 பெண் கவிஞர்கள் சிறப்பான அழகியல் கூறுகளும், வாழ்வியல் உணர்வுகளும் கொண்ட கவிதைகளை உருவாக்கியுள்ளனர் என்பது வாழ்வியல் குறித்தும் கலை வெளிப்பாடு குறித்தும், பெண் கவிதை மொழி குறித்தும் அப்போதுநிலவிய செறிவான பல மதிப்பீடுகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அத்தகைய உணர்வுகளும், வெளிப்பாடுகளும் புரிதல்களும் பின்வரும் காலகட்டங்களில் ஏன் மேலெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை ஆராயும்போதே பிற்காலங்களில் பெண் மீது செலுத்தப்பட்ட தொடர்ந்த ஆதிக்கத்தின் தாக்கத்தை நாம் உணர முடியும். அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு இயல்பான வாழ்வியல் சார்ந்த உணர்ச்சிப் பெருக்குடன் இவ்வளவு சுதந்திரமாக வடிவம் கொண்ட பெண் வெளிப்பாடுகள் தொடர இயலாமல் போனதை பிற்காலத் தமிழ் இலக்கியத்தின் ஒரு இருண்ட நிலைப்பாடாகவே நாம் கொள்ள முடியும். இவ்வாறு பெண் வெளி குறுக்கப்பட்டு பெண் முடக்கப்பட்டதற்கு பிற்காலத்தில் தமிழ்ச் சூழலில் விரிவு கொண்ட மதவாத இயக்கங்களும் அவை உருவாக்கிய பாலியல் இருப்பு குறித்த வைதீக சனாதனப் பார்வையும் தான் காரணம் என்பதை உறுதியாகக் கூற முடியும். ஒருபுறம் சைவ, வைணவ பக்தி இயக்கங்கள் பெரும்பான்மையான மக்களை ஒருங்கிணைத்து ஒருவிதமான பாலியல் தன்மையை அங்கீகரித்தாலும் அவை பெண்ணின் சமூக இருப்பைப் புறக்கணிக்கவே செய்தன.

பல நூற்றாண்டுகள் கடந்து பெண் கவிஞர்கள் எழுச்சியும் வெளிப்பாடும் கொண்டுள்ள இன்றைய கால கட்டத்திலும்கூட பெண் கவிஞர்களின் கவிதைச் சொல்லாடல்கள் குறித்த சனாதனப் பார்வைகளே வெளிப்படுவதை அத்தகைய ஒரு வைதீக மனத்தின் தொடர்ச்சி என்றே கொள்ள வேண்டும். சங்ககாலத்தைப் பொற்காலமாக வர்ணித்து சங்கக் கவிதைகளின் காதல் உணர்வுகளை அரசியல் மேடைகளில்கூட போற்றிப் புகழ் பாடிய திராவிட இயக்கக் கவிஞர்கள்கூட இன்றைய பெண் கவிஞர்களின் சொல்லாடல்கள் குறித்த அறியாமைகளை வெளிப்படுத்துவது சங்கக் கவிதைகளை பிரசார நோக்கில் அன்றி அழகியல் நோக்கில் அவர்கள் மதிப்பீடு செய்வதில்லை என்பதையே காட்டுகின்றன. இத்தகைய ஒரு சூழலில் இக்கவிதைகள் வழி வெளிப்படும் சங்கப் பெண் கவிஞர்களின் செறிவான மொழிப் பயன்பாட்டையும், சொல்லாடல்களையும் எழுச்சி பெற்ற வாழ்வியல் உணர்வுகளால் அவர்கள் கவிதையில் கண்டு மேற்கொண்ட சுதந்திரத்தையும் நாம் ஆழ்ந்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

முக்கியமாக ஔவையார், அஞ்சில் அஞ்சியார், அள்ளுர் நன்முல்லையார், ஆதிமந்தியார், காக்கைப் பாடினியார், காவற்பெண்டு, தாயங்கண்ணியார், பாரி மகளிர், பேய்மகள் இளவெயினி, பொன்முடியார், வருமுலையாரித்தி, வெண்பூதியார், வெள்ளிவீதியார், வெறிபாடிய காமக்கண்ணியார், ஒக்கூர் மசாத்தியார், நெடும்பல்லியத்தை போன்ற குறிப்பிடத்தகுந்த பெண் கவிஞர்களின் தனித்துவம் வாய்ந்த பல கவிதைகள் பல சிறப்பான உணர்வுகளைத் தாங்கி நிற்கின்றன. சங்ககால சமூக அமைப்பில் குறுநில மன்னர்களிடையே நிலவி வந்த போர்ச்சூழல் ஒரு தொடர்ச்சியான ஆழ்ந்த மனபாதிப்பை ஏற்படுத்தியதும் சிறு இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள் போருக்காக இடம் பெயர்தலும் அந்நிய இனக்குழுக்களை எதிர்கொண்டு உறவுகொள்ள நேர்வதுமான நிர்ப்பந்தங்களும் ஏற்பட்ட நிலையில் மாறிவரும் வாழ்க்கை நிலைமைகள் குறித்தும், நிலவெளிகள் குறித்தும், ஆண் பெண் ஈர்ப்பு நிலைகள், பிரிவு, அகால மரணம் என வாழ்வு அலைவுறுவது குறித்தும் அவர்களுடைய எண்ணற்ற மனப்பதிவுகள் இக்கவிதைகளில் பதிவாகியுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை மரபுகள் சார்ந்து அத்திணைச் கூறுகளின் பின்புலத்தில் இக்கவிதைகள் உருவானாலும் சூழல் தாண்டிய ஒரு பிரபஞ்ச உணர்வை இக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. நாடாக இருந்தால் என்ன, காடாக இருந்தால் என்ன, மேடாக இருந்தால் என்ன, பள்ளமாக இருந்தால் என்ன எந்த இடத்தில் ஆள்பவர் நல்லவராக உள்ளனரோ அங்கு நிலமே நீ நல்லமுறையில் விளங்குவாய் என்று பொருள்படும்.

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி ஆடவர் நல்லவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே

என்ற ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் ஒரு சூழல் கடந்த பேருணர்வைப் புலப்படுத்துகிறது. இக்கவிதை வெளிப்பாட்டின் நேரடித்தன்மையும் கூர்மையும், மொழி கையாளப்பட்டுள்ள விதமும் ஒரு சிறப்பான அழகியல் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி நிற்கிறது.

ஔவையாரைப் பற்றிய புனைவுகளையெல்லாம் பொய்யாக்கும் விதமாக ஒரு இளம் பெண்ணின் மன நிலையுடன்இயல்பான பாலியல் உணர்வுகளின் வெளிப்படாக பின்வரும் கவிதை அமைந்துள்ளது. தென்றல் காற்று காதல் நோயின் கொடுமையை அறிந்து கொள்ளாமல் என்னைஅலைக்கழிக்கின்றது. அதனை அறியாமல் ஊரும் உறங்குகிறது. இவ்வாறு உறங்கும் ஊரார்க்கு எனது நிலைமையை எவ்வாறு கூறுவேன் என்று பொருள்படி அமைந்த

முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன், யானும் ஓர் பெற்றி மேலிட்டு
'ஆ அ ஒல்' எனக் கூவுவேன் கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சம் ஊர்க்கே

என்ற குறுந்தொகைப் பாடல் ஒரு இயல்பான பாலியல் மனதின் பரவசான கட்டற்ற உணர்ச்சிப் பெருக்காக உள்ளது. மேற்பூச்சற்று உணர்வுககு நெருக்கான ஒரு மொழி இங்கே கையாளப்பட்டுள்ளது.

அதேபோல் தோழியின் காதலை வெளிப்படுத்த அவள் மனம் கவர்ந்த தலைவனின் ஊர்ச்சிறப்பை இன்னும் பாடு என்று குறிசொல்பவளாகிய அகவன் மகளை விளித்துப் பாடுவதாக அமைந்த

அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பு அன்னநல் நெடுங்கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே
இன்னும் பாடுக, பாட்டே அவர்
நல் நெடுங்குன்றம் பாடிய பாட்டே

என்ற குறுந்தொகைப் பாடல் ஒரு நுட்பமான குறியீட்டு உணர்வைப் புலப்படுத்தும், தலைவியின் காதலை தலைவியின் தாய்க்கு மறைமுகமாகத் தெரிவிக்கும் விதமாக குறிசொல்பவளை அழைத்து தலைவன் தன்னுடைய உயர்ந்த மலையைப் பற்றிப் பாடிய பாட்டை இன்னும் பாடு என்று இன்னும் என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் தலைவியின் உணர்வைப் புலப்படுத்தும் விதம் நுட்பமும், இலக்கியச் செறிவும் கொண்டதாக உள்ளது.

அதியமான் அஞ்சியுடன் ஔவையார் தான் கொண்ட நட்பை வெளிப்படுத்தும் விதமாக சிறிதளவு கள் பெற்றால் அதை எனக்கே அளிப்பான். பெரிதளவு கள் பெற்றால் நான் பாட அவன் உண்டு மகிழ்வான் என்ற பொருள்படி அமைந்த

சிறிய கட்பெறினே எமக்கு ஈயும் மன்னே
பெரிய கட்பெறினே
யாம் பாட தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே

என்ற புறநானூற்றுப் பாடலில் ஒளிவு மறைவற்ற நட்பின் இழைகள் நெகிழ்வுடன் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இதுபோல பல சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் ஒளிவு மறைவற்ற தங்கள் இயல்பான உள்ளக் கிடக்கைகளைச் சுருக்கமான வார்த்தைகளில் ஆழ்ந்த உணர்வுடனும் நெகிழ்ச்சியுடனும் பல இடங்களில் வெளிப்படுத்துவதைக் காண முடியும்.

உதாரணாக வருமுலையாரித்தியின் இக்குறுந்தொகைப் பாடல் - தலைவன் நினைவில் உள்ள தலைவி அவனைக் குறித்து பின்வருமாறு சொல்கிறாள் - அவன் ஒருநாள் வந்தவனல்ல. இரண்டு நாட்கள் வந்தவன் அல்ல. பல நாட்கள் வந்து பணிவுடன் பேசி என் மனதை மகிழ்வித்தவன. பின்பு மலையில் முதிர்ந்து எவர்க்கும் பயனளிக்காததும் வீழ்ந்து வழிவதுமான தேனடையைப் போல போனவன். அத்தலைவன் இப்போது எங்கு இருக்கின்றானோ? காட்டில் பெய்த இடியோசையுடன் கூடிய மழை கலங்கி நம்முடன் வருவதுபோல எனது மனதும் அமைதியற்று அவன் நினைவில் கலங்குகின்றது. இதுதான் அப்பாடல் -

ஒருநாள் வாரலன், இரு நாள் வாரலன்
பல் நாள் வந்து பணி மொழி பயிற்றி என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்ந்த பின்றை
வரைமுதிர் தேனின் போகியோனே
ஆக ஆகு எந்தை யாண்ணாடு ஊன் கொல்லோ?
வேறு புலன் நல்நாட்டுப் பெய்த
எறுடை மழையின் கவிழும் என் நெஞ்சே

இப்பாடல் மிக மிக நுட்பமான வார்த்தைகளில் மனதின் நெகிழ்ச்சியைப் புலப்படுத்துவதைப் பார்க்கலாம். இங்கு பயன்படுத்தப்படும் மொழியின் நெகிழ்ச்சியின் மூலமாகவே நாம் அந்த மனநிலைகளின் செறிவை ஆழ்ந்து உணரமுடிகிறது. இத்தகைய ஒரு மொழிச் செறிவு ஒரு நாகரிக மனத்தின் அடையாளமாகவும் அத்தகைய நுட்பம் கைவரப் பெற்ற ஒரு சூழல் கலாச்சார செறிவு கொண்டிருக்கும் பல்வேறு சாத்தியங்களையே உணர்த்துகிறது.

மனநிலை விவரிப்புக்கான சூழலை வடிவமைப்பதில் இக்கவிதைகள் எண்ணற்ற பல நுண்ணிய விவரணைகளுக்குள் செல்கின்றன. அஞ்சில் அஞ்சியார் என்ற பெண் கவிஞரின் பின்வரும் கவிதையில் வெளிப்படும் சூழல் இது. கூத்தாட்டம் நடந்தவாறிருக்கும் பழமையான ஒரு ஊர் - வறுமையோ அயற்சியோ வாழ்வில் காணாத துணி வெளுக்கும் ஒருத்தி - இரவு உணவில் எஞ்சிய கஞ்சியிட்டு உலர்த்திய மெல்லிய ஆடையும் பொன்மாலையும் அணிந்தவள். பெரிய கயிறால் கட்டப்பட்ட ஊஞ்சலருகே நிற்கிறாள். தோழியர் கூட்டம் ஊஞ்சலை ஆட்டிட அவள் ஆடாதவளாய் கலங்கி நிற்கிறாள். காதல் கொண்ட தலைவன் வந்து ஊஞ்சலை அசைத்து மகிழும் நிலை வாய்க்கவில்லையே என வருந்துகிறாள். இதுதான் அந்த நற்றிணைப் பாடல்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பான்மையின் பெருங்கை தூவா
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடாமாலை துயல்வர ஓடி
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க, ஊங்காள்
அழுதனள் பெயரும் அம்சில் ஓதி,
நல்கூர் பெண்டின், சில வளைக் குறுமகள்
ஊசல் உறுதொழில் பூசல் கூட்டா
நயன்இல் மாக்களோடு கெழீஇ
பயன் இன்று அம்ம இவ் வேந்துடை அவையே -

என்ற இப்பாடல் சிறுசிறு விவரணைகளுக்குள் சென்று மனநிலையைக் கட்டமைக்கிறது.

அள்ளூர் நன்முல்லையாரின்

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்று இப்
பொழுது இடைதெரியின் பொய்யே காமம்

என்ற குறுந்தொகைப் பாடல் மடலேறித் தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்த எண்ணும் ஒரு தலைவனின் மனநிலையிலிருந்து நண்பகல், மாலை, நள்ளிரவு, வைகறை என்றெல்லாம் காலப்பொழுதுகளைக் கணக்கில் கொண்டால் காமம் என்பது பொய்யாகிவிடும் என்று உணர்வின் பின்புலத்தில் தோன்றும் காலமயக்கம் குறித்த கவனத்தை வேண்டுகிறது.

சிறப்புக்குரிய என் தலைவனை துணங்கைக் கூத்து நடக்கும் இடமெல்லாம் சென்று தேடுவதால் நானும் ஒரு ஆடுகள மகளாகவே தோன்றுகின்றேன். என் கையின்

'துடி ஒலிப்பவளே, பாணனே,
விறலியே இனிமேல் நீங்கள்
என்ன ஆவீர்கள்? இங்கு வாழ்தல்
அரிது, மயிர் மழித்து, அல்லியரிசி
உண்டு வாழும் கைம்மை மகளிர்
போல முடிவை நோக்கியிருத்தல்
எனக்கும் அரிதானதே...'

சங்கு வளைகளை நெகிழ வைத்து என்னையும் மெலிய வைத்த என் தலைவனும் ஒரு ஆடுகள மகனாகவே மாறி விட்டான் என்று பொருள்படும் ஆதிமந்தியாரின்

மன்னர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மான்மதக் கோனை
யானும்ஓர் ஆடுகள மகளே, என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே

என்ற குறுந்தொகைப் பாடல் தங்கள் நிலைமாறி தாங்களும் கூத்தர்களாகிவிட்டது போன்ற ஒரு விநோத உணர்வைத் தங்களிடம் தோற்றுவித்திருப்பதாக அவள் உணர்வது ஒரு நுண்ணிய மனதின் பிரதிபலிப்பாக உள்ளது. திடீரெனத் தங்கள் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் கூத்தாகவும், தாங்கள் ஆட்டுவிக்கப்படும் கூத்துப் பாத்திரங்களாகவு¢மாறிவிட்டது போன்ற உணர்வை வெளிப்படுத்தும் இக்கவிதை வாழ்வு மற்றும் புனைவின் வேறுபாடற்ற தோற்றநிலையை நெகிழ்வுடன் புலப்படுத்துகிறது.

பாணர் வாழ்வின் அவலத்தையும் நம்பிக்கையையும் புலப்படுத்தி நிற்கும் காக்கைப் பாடினியாரின் பின்வரும் பதிற்றுப்பத்துப் பாடல் அச்சூழலை இவ்வாறு விளக்குகிறது - பகற் பொழுதானது நீளாமல் இரவுப்பொழுது நீண்டு விளங்கும் விலங்குகள் குளிர் மிகுதலால் வருந்தும். மாசித் திங்களில் பனி பொருந்திய அரிய வழிகளில் கடந்து செல்ல நினைக்கும் பாணண் வருந்தும் வருத்தம் அகன்று போக சூரியன் கிழக்கில் கதிர்களைப் பரப்பும். அதைப்போன்று இரப்பதைத் தொழிலாக உடைய பரிசில் மக்களின் சிறுமை அடைந்த குடிகள் சிறுமை நீங்கி பெருக்கம் அடைய உலக உயிர்களைத் தாங்கி இனிது காப்பாய் என்ற பொருள்பட வரும்.

பகல்நீடு ஆகாது இரவுப்பொழுது பெருகி
மாசி நின்ற மாகூர் திங்கள்
பனிச்சரம் படரும் பாண்மகன் உவப்ப
புல் இருள் விடிய புலம்புசேன் அகல
பாய் இருள் நீங்க பல்கதிர் பரப்பி
ஞாயிறு குணமுதல் தோன்றி யாஅங்கு
இரவள் மாக்கள் சிறுகுடி பெருக
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம் மறை -

என்று பாடல் செல்கிறது விறலியரை ஆடவும் பாணரும் பொருநகருமான பரிசில் மக்களைப் பாடவும் அழைக்கும் ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் என்பனவும் இவருடைய கவிதை வரிகளே.

என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான் என்று பெருமிதத்துடன் கூறும் தாயின் குரலாக ஒலிக்கும் காவற் பெண்டுவின் பின்வரும் புறநானூற்றுப் பாடல் தீர்க்கமும் உறுதியும் கொண்ட பெண்ணின் குரலாக வெளிப்படுகிறது.

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளனோ என வினவுதி என் கன்
யாண்டு உளன்ஆயினும் அறியேன். ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ. போர்க்களத்தானே

என்னும் வரிகள் பெருமிதமும், இனிமையும் நிரம்பியதாக உள்ளன.

போர், மரணம் இழப்பு என அவல உணர்வுகளால் வாழ்க்கை அலைவுறுகின்றது. புரவலனை இழந்து பொலிவிழந்து காட்சிதரும் நகரின் தோற்றத்தை தாயங்கண்ணியார் தன்னுடைய புறநானூற்றுப் பாடலில் இவ்வாறு விவரிக்கிறார்.

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவியோடு, இனியே
புல்லென்றனையால் வளம்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே

என்ற பாடலில் தலைமயிர் குறைத்து, வளையல் களைந்து அல்லி அரிசியுணவு கொள்ளும் மனைவியைப் போலவும், தந்தை தனியே சென்ற பெருங்காட்டிற்கு பால் வேண்டியழும் சிறுவர் வான்சோற்றுடன் சென்றது போலவும் பொலிவிழந்து மனை என கவிஞர் விவரிக்கும் சித்திரம் அவலமும், நெகிழ்வும் நிறைந்ததாக இருக்கிறது. கணவனை இழந்த பெண்கள் தலைமயிரைக் குறைத்து வளையல்களைக் களைந்து அல்லியரிசி உணவு உண்டு வாழும் கைம்மை நிலை குறித்த உணர்வையும் பாடல் வெளிப்படுத்துகிறது.

மாற்றோக்கத்து நப்பசலையாரின் பின்வரும் புறநானூற்றுப் பாடலிலும் கைம்மை மகளிரின் அவலம் வெளிப்படுகிறது. மார்பில் பட்ட காயத்தால் சாவை நெருங்கிக்கொண்டிருக்கும் தலைவனின் நிலை குறித்த புலம்பலாக இப்பாடல் உள்ளது - துடி ஒலிப்பவளே, பாணனே, விறலியே இனிமேல் நீங்கள் என்ன ஆவீர்கள்? இங்கு வாழ்தல் அரிது, மயிர் மழித்து, அல்லியரிசி உண்டு வாழும் கைம்மை மகளிர் போல முடிவை நோக்கியிருத்தல் எனக்கும் அரிதானதே. அவன் இறுதி நெருங்குகின்றது. நீங்கள் வேற்றிடம் செல்க எனப்பாடல் விரிகின்றது.

துடிய ! பாண ! பாடுவல் விறலி!
என் ஆ குவிர்கொல்! அளியிர், நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும்
மண்ணுறு மதித்தலைத் தெண்நீர் வார
தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியற்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே -

என்னும் இப்பாடலில் ஒரு ஆழ்ந்த அவல உணர்வு வெளிப்படுகிறது.

இத்தகைய ஓர் அவலச் சுவையின் உச்சமாக பாரி மகளிரின் பின்வரும் புறநானூற்றுப் பாடல் உள்ளது. பாரியையும், பறம்பு மலையையும் இழந்த பாரி மகளிரின் துயரம் இப்பாடலில் மிகவும் நுட்பமான வார்த்தைகளில் வெளிப்படுகிறது - அன்றைய திங்களில் வந்த வெண்ணிலவுக் காலத்தில் எங்கள் தந்தையையும் உடையவராக இருந்தோம். எங்கள் பறம்பு மலையையும் பிறர் கைப்பற்றிக் கொள்ளவில்லை. இன்றைய திங்களில் இந்த நிலவுக் காலத்தில் வெற்றி முரசுடைய வேந்தர் எமது மலையையும் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையும் இல்லாதவராய் ஆனோம் என்ற பொருளில் வரும்

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்று எறிமுரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார், யாம் எந்தையும் இலமே -

என்ற பாடல்இழப்பின் ஆழ்ந்த துயரை உணர்ச்சிப்படுதல் இன்றி வெளிப்படுத்தும் ஒரு நுண்ணிய வெளிப்பாடாகும்.

இவ்வாறாக பிரிவுத் துயரின் வலிகள் வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டுள்ளன. நெடும்பல்லியத்தை என்ற பெண் கவிஞரின்

மலை இடை யிட்ட நாட்டாரும் அல்லர்
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்
கண்ணில் காண நண்ணுவழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஓரீஇனன் ஒழுகும் என்னைக்குப்
பரிய லென்மன் யான், பண்டு ஒரு காலே - என்ற குறுந்தொகைப் பாடலில் பிரிவின் துயரம் இவ்வாறு வெளிப்பாடு கொள்கிறது. நம் தலைவர் மலைகள் இடைப்பட்ட குறிஞ்சியாகிய பகுதியைச் சேர்ந்தவரும் அல்லர். மரங்களின் உச்சிகள் மறைப்பதால் தோன்றாமல் விளங்குகின்ற முல்லையாகிய பகுதியைச் சேர்ந்தவரும் அல்லர். கண்ணால் காணும் அளவில் வருவதற்குரிய அண்மையில் இருந்தாலும் இறைத் தொடர்புடைய சான்றோர்போல நம்மைப் பிரிந்தே வாழ்கிறார். முன்பு நானும் அன்புடையவளாக இருந்தேன். இன்று அந்நிலை இல்லை என்று அன்பும் விலகலுமான ஒரு மனநிலையைப் பாடல் விவரிக்கிறது. எந்த நிலத்தைச் சேர்ந்தவர் என்றுதெரியவில்லை. ஆனால் அருகில் இருந்தும் தொலைவில் இருக்கிறார். மெதுவாக என் அன்பும் விலகிக்கொண்டிருக்கிறது என்று இனம் புரியாத ஒரு வினோதமான மனநிலையைக் கவிதை வெளிப்படுத்துகிறது.

குறைவான வார்த்தைகளில் தன்னுடைய காதல்வயப் பட்ட மனத்தையும், வலியையும், வேதனையையும் நுட்பமாக வெளிப்படுத்தும் இக்கவிதைகள் மிகுந்த இலக்கியச் சுவையுடன் காதல் உணர்வு கடந்த ஒரு பேருணர்வைப் புலப்படுத்தி நிற்கின்றன. தனிமை பற்றிய வெண்பூதியாரின் பின்வரும் குறுந்தொகைப் பாடல் தலைவியின் நிலையை இவ்வாறு விவரிக்கிறது. தலைவன் தந்த ஆறாத துன்பத்துடன் இங்கு தனித்துள்ளேன். அவனை என்னிடம் தந்த எனது நலன் அவனைத் தேடியவாறு கானலிடத்தே உள்ளது. துறைவனாகிய அவனோ பெற்றோருடன் தனது ஊரில் இருக்கிறான். என்னிடம் நிகழ்ந்த களவு உறவோ பலரறிய வெளிப்பட்டு ஊரலராகிப் பொதுவிடத்தும் ஆனது என்றவாறு பாடல் உள்ளது.

யானே ஈண்டை யேனே, என் நலனே
ஆனா நோயோடு கானலயஃதே
துறைவன் தம் ஊரானே
மறை அலர் - ஆகி மன்றத் தஃதே

என்ற இப்பாடல் தனிமை, விலகல், உதவியற்ற நிலை என்று பல்வேறு னநிலைகளின் தொகுப்பாக உள்ளது.

அதேபோல நாணத்தையும் விடமுடியாமல் அந்தரங்கத்தையும் வெளிப்படுத்த இயலாமல் தவிக்கும் தவிப்பைப் புலப்படுத்தும் பல பாடல்கள் உண்டு. வெள்ளிவீதியாரின் குறுந்தொகைப் பாடல் இது.

அரிதோ தானே நாணே நம்மொடு
நனிநீடு உழந்தன்று மன்னே, இனியே
வான் பூங்கரும்பின் ஓங்கு மணற் சிறுசிறை
தீப்புனல் நெரிதா வீந்து உக்கா அங்கு
தாங்கும் அளவைத் தாங்கி
காமம் நெரிதரக் கைந் நில்லாதே -

அதாவது நாணம் நம்மை விட்டுப் பிரியாம ல் பல காலம் வருத்துகிறது. கரும்பின் உயர்ந்த சிறுகரையில் அருவிப்புனல் விரைந்து பாய்வதால் அக்கரைதான் அழிவதுபோல காமம் மிகுந்து தாக்குவதால் நாணம் என்னிடம் இல்லாமலேயே அழிந்து நீங்கிவிடும் என்று தலைவி தன்னுடைய கையறு நிலையைத் தோழிக்கு விளக்குகிறாள். செறிவான சொல்லாடல்கள் மூலம் கட்டுண்டும் கட்டற்றும் விரியும் எண்ணற்ற நெகிழ்வுணர்வுகளைப் பாடல் புலப்படுத்துகிறது.

இன்னும் நிலவெளி மற்றும் உயிரினங்களின் இயக்கங்கள் குறித்த பல செறிவான பார்வைகளும், சுற்றுப்புற மனிதர்களின் வாழ்வியல் குறித்த கூரிய கவனமும் அவர்களுடைய பல பாடல்களில், சிறப்பாக வெளிப்படுகின்றன. வெண் பூதியாரின் பின்வரும் குறுந்தொகைப் பாடலில் வரும் விவரணைகள் இவ்வாறு உள்ளன - பாலை நிலத்தில் கிளைவிட்டு வளர்ந்துள்ள சுவையும் முடமும் உடைய கள்ளியின் காய் பெய்யும் மழையின்றித் துயருறுகிறது. அக்காய் வெடிக்கையில் பேரொலிஎழும். அவ்வொலியானது மெல்லிய சிறகுகளைக் கொண்ட ஆணும் பெண்ணுமாகிய புறாக்களை அங்கிருந்து அகல வைக்கும். அத்தகைய அரிய வழிகள் செல்லற்கரியன என்றும் கருதாமல் நம்மைப் பிரிந்து பொருள்தேடச் செல்வார் என்பாய். அவ்வாறு சென்றால் உலகில் பொருட்செல்வம் ஒன்றே மெய்யான உறுதிப்பொருள். அருட்செல்வம் தன்னை ஏற்பார் யாருமின்றி மறைந்து போவதாம் என்று தலைவி தோழிக்குச் சொல்வதாக பாடல் அமைந்துள்ளது.

பெயல் மழை துறந்த பலம்புஉறு கடத்துக்
கவைமூடக்கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் தூவி துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து
பொருள்வயிற் பிரிவார் ஆயின் இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே,
அருளே மன்ற ஆரும் இல்லதுவே

என்ற இப்பாடல் தன்னைச் சுற்றியுள்ள நிலவெளியின் உயிர்ப்பிலும் இயக்கத்திலும் தன்னுடைய உணர்வையும் இணைத்துப் பார்த்து தனக்கான செய்திகளை உணரும் ஒரு அரிய பார்வையைப் புலப்படுத்துகிறது.

சூழல் குறித்த விவரிப்பில் பல சிறப்பான கற்பனைகள் அவர்களுடைய பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. அள்ளூர் நன்முல்லையாரின் பின்வரும் அகநானூற்றுப் பாடல் ஒரு தலைவி தன்னுடைய தலைவனுடைய ஊரை இவ்வாறு வர்ணிப்பதாக உள்ளது. சேற்றுத் தரையில்நிற்பதைப் பொறுக்காத சிவந்த கண்களை உடைய எருமை ஊரார் உறங்கும் நள்ளிரவில் வலிய கயிற்றை அறுத்துக்கொண்டு புறப்பட்டுப்போய் கூர்மையான முள்ளை உடைய வேலியைத் தன் கொம்பால் அகற்றிவிட்டு நீர் மிகுந்த வயலில் மீன்கள் எல்லாம் அஞசி ஓடுமாறு இறங்கி அங்குள்ள வள்ளைக் கொடிகளைநிலைகுலையச் செய்து வண்டுகள் உள்ளிருந்து ஊதும் தாமரையின் குளிர்ந்த மலரைத் தின்னும் வளான ஊர் என்று தலைவன் ஊரை வர்ணிக்கிறாள்.

சேற்று நிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலில், நோன்தனை பரிந்து
கூர்ள் வேலிகோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீன் உடல் இரிய,
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டு ஊது பனிமலர் ஆரும் ஊர!

என்று தொடங்கும் இப்பாடல் சுற்றியுள்ள உயிரினங்களின் இயக்கங்கள் குறித்த செறிவான படிமங்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால் அவை வெறும் கற்பனைப் படிமங்களாக நின்றுவிடாமல் அத்தகைய உயிர்ப்பின் ஓட்டத்துடன் தங்கள் மனநிலைகளை இணைத்துப் பார்க்கும் உருவகங்களாகவும் தோற்றம் கொள்கின்றன.

முக்கியமாக இப்பெண் கவிஞர்களின் கவிதைகளில் தென்படும் செறிவான கற்பனைகளும், ஒலிநயம் மிகுந்த சொற்சேர்க்கைகளும் ஒரு சிறப்பான மொழி ஆளுமையையும் புரிதலையும் புலப்படுத்துபவை. ஒக்கூர் மாசாத்தியாரின் பின்வரும் அகநானூற்றுப் பாடலில் ஒரு முல்லை நிலக் காட்சியின் பின்புலத்தில் தலைவனின் தேர் செல்லும் வழி இவ்வாறு விவரிக்கப்படுகிறது - தளிர் போன்ற தன்மையுடைய கிளி இனிதாய் வளர்ந்த இளைய குஞ்சின் சிறகைப்போல மழை வளர்த்த பசுமையான பயிரை உடைய காடு. அக்காட்டில் பறையின் கண்ணைப் போன்று விளங்கும் நீரால் நிறைந்த சுனைகளில் மழைபெய்வதால் உண்டான குமிழிகள் தாமரை மொட்டுகள் போலத் தோன்றி மறையும். கிளையினின்றும் காற்று உதிர்வதால் நீரின் மேல் கிடந்து அழகு செய்த வண்டுகள் தேனுண்ட அழகிய மலர்களைத் தேரின் ஆழி அறுத்துச் செல்லும். அந்த ஆழி குளிர்ந்த நிலத்தில் பிளந்துபோன சுவட்டில் ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாய்ப் போகும் பாம்பைப் போல் நீர் விரைந்து செல்லும். முல்லை மலரும் மாலை நேரத்தில் நகரில் புகுவதை ஆராய்ந்து உணர்ந்து தலைவனின் தேர் செல்லும் என அக்காட்சி விரிகிறது.

தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த
வளரா ப்பிள்ளைத் தூவி அன்ன
உளர்பெயல் வளர்த்த, பைம்பயிர்ப் புறவில்
பறைக்கண் அன்ன நிறைச்சுனை தோறும்
துளிபடு மொக்குள் துள்ளுவன சால
தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளிசினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய்
சிறற்சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த
வண்டுண் நறு வீறமித்த நேமி
தண்நில மருங்கில் போழ்ந்த வழியுள்
நிரைசெல் பாம்பின் விரைபு நீர் முடுக
செல்லும், நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே

என நுண்ணிய குறிப்புகளும் ஓசைகளுமாக நீரோட்டம் போல் கவிதை செல்கிறது.

இதேபோல் நாரையை அழைத்துப் பாடும் வெள்ளிவீதியாரின் பின்வரும் நற்றிணைப் பாடலில் நுட்பமான குறிப்புகள் இடம்பெறுகின்றன. தலைவி நாரையைப் பார்த்து இவ்வாறு கூறுகிறாள். ’நீ எம் ஊரில் வந்து எமது நீர் அருந்தும் துறைகளில் துழாவிக் கெளிற்று மீன்களை உண்கிறாய். பிறகு அவர் ஊருக்குத் திரும்பிப் போகிறாய். அங்கேயுள்ள இனிய நீர் இங்கே பரவிக்கிடக்கும் வயல்களைக் கொண்ட நல்ல ஊரையுடைய என் அன்பருக்கு நீ எனது அணிகள் கழன்ற நோயைச் சொல்லாமல் இருக்கிறாய். நீ அத்தகைய அன்புடைய பறவையா அல்லது பெரிய மறதியுடைய பறவையா? எனக்கு விளங்கவில்லை’ என்று தலைவி கூறுகிறாள்.

எம் ஊர் வந்து, எம் உண் துறைத் துழைஇ,
சினைக் கொளிற் ஆரின் கையை அவர் ஊர்ப்பெயர்தி,
அனைய அனபினையோ, பெரு மறவியையோ
ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல்ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பா தோயே? என்ற இப்பாடலின் குறிப்பு சுவையும், செறிவும் கொண்டு ஒரு சிறப்பான மனநிலை வெளிப்பாடாக உள்ளது.

சங்கப் பெண் கவிஞர்களின் இக்கவிதைகள் ஒரு இயல்பான உணர்ச்சிப் பெருக்குடன் தீவிரமான உணர்வுநிலைகளின் வெளிப்பாடாக விளங்கினாலும் அக்கால கட்டத்தில் நிலவிய பல்வேறு மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்களையும் கொண்டுள்ளன. பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கி அக்காலக் கவிதை மரபுகளை நன்கு கற்றுத் தேர்ந்திருந்தனர் என்பதற்குப் பல கவிதைகள் அடையாளமாக உள்ளன. அவர்களுடைய பல அகப்பாடல்கள் ஐந்திணை மரபுகள் சார்ந்து இயங்குவது போன்ற தோற்றம் கெண்டிருந்தாலும் அவை வாழ்வியல் தன்மைகளுக்கே அதிகம் கட்டுப்பட்டவையாக இருந்ததைப் பார்க்க முடியும். அதனாலேயே ஆற்றொழுக்கு போன்ற கவிதை நடை அவர்களுக்கு வசப்பட்டிருந்தது. எங்கும் உயர்வு நவிற்சியோ இயற்கைக்கு மாறான செயற்கைப் பொலிவோ அப்பாடல்களில் இல்லை. வெறும் கவிதை மரபு குறித்த அறிவால் மட்டும் இது சாத்தியப்பட்டிருக்க முடியாது. அனைத்து உயிரினங்களின் தன்மைகளையும் அழகுகளையும் கண்டு மக்கள் யாவரையும் ஒரு குடும்பமெனக் கருதி ஒரு அன்பு நீரோட்டத்துடன் அணுகிய நிலையிலேயே அக்கவிதைகள் இத்தகைய செறிவையும், சொல்வளத்தையும் பெற்றிருந்தன. நம்பத் தகுந்த உண்மைகளை ஏற்கும் வகையில் கூறும் நடுநிலையும் உண்மையை அறிவுறுத்தும் உறுதியும் ஒரு அறிவார்ந்த தெளிவினாலேயே அவர்களுக்கு கவிதைகளில் சாத்தியப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய மனப்பாங்கையும், வாழ்க்கைப் புரிதலையுமே இக்கவிதை மொழி புலப்படுத்தி அக்காலகட்ட பண்பாட்டுத் தடங்களின் பல்வேறு கூறுகளை நாம் அறிய வகை செய்கிறது.

இன்னும் கிளி, நாரை முதலிய பறவைகளை விளித்துரைத்தல், மகளிர் விளையாட்டு வகைகளை புகழ்மாலை கருவியாகக் கொள்தல், குறக்குடிசிறார் குறி சொல்லுதல், சிறு பிள்ளைகள் சிறு தேர் உருட்டி விளையாடுதல், பெண்கள் துணங்கைக் கூத்தாடுதல், வண்ணாத்தி கஞ்சிப்பசை போடுதல், விளையாட்டு மகளிர் மணல் வீடு கட்டுதல், நுளைச்சியர் நெல் பெற்று உப்பு தருதல் போன்ற பல பண்டைய வழக்கங்கள் இக்கவிதைகளில் அறியக்கிடக்கின்றன. காதலி சுவரிலே கோடிட்டு பிரிந்த தலைவன் வருநாளை எண்ணுவதும், தினைப்புனத்தில் கிளியோட்டும் வழக்கமும், காதலர் வரவை பல்லி கூறுவதாகக் கருதுவதும் காலால் பந்து விளையாடுதலும் ஆகிய பல செய்திகளும் இப்பாடல்களில் உண்டு. இளவேனிற் காலத்தில் ஆற்றில் தண்ணீர் குறைந்து ஒடுங்கிச் செல்வது பாம்பு நெளியும்போது அதன் முதுகு நெளிவதுபோன்றிருப்பது, பேயின்கைவிரல் முள்முருக்கின் உலர்ந்த துணரைப் போன்றிருப்பது, பெண் யானை தன் கன்றைப் புலியிடந்து பாதுகாத்தலும் என இயற்கையின் அரிய தருணங்களை அவர்கள் கவிதைகளில் வெளிப்படுத்தி மகிழ்வது அவர்கள் சூழலுடன் கொண் எண்ணற்ற உறவுநிலைகளைப் புலப்படுத்தும்.

தங்களுடைய பாலியல் உணர்வுகளையும், பாலியல் உறுப்புகள் சார்ந்த சொல்லாடல்களையும் குற்ற உணர்வின்றி இயல்பான உணர்ச்சிப்பெருக்குடன் இக்கவிதைகளில் அவர்கள் கையாண்டது அந்த உணர்வுகளுக்கு அவர்கள் அளித்த மதிப்பையும் அங்கீகாரத்தையும் அச்சூழலில் நிலவிய ஒளிவுமறைவற்ற தன்மையையுமே புலப்படுத்தும், அத்தகைய உணர்வுகள்இலக்கியத் தன்மையுடன் வெளிப்பாடுகொள்ளும் எண்ணற்ற வழிகளையும் சாத்தியங்களையும் இக்கவிதைகள் அவர்களுக்கு உருவாக்கின. இவ்வாறு செறிவான வாழ்வியல் உணர்வுகளும் சூழல் சார்ந்த அழகியல் உணர்வுகளும் கொண்ட எண்ணற்ற பண்பாட்டுக் கூறுகளை அவர்கள் வெளிப்படுத்திய மொழியின் நுட்பத்தால் அறிய முடிகிறது. உண்மையில் வரலாறு என்பது மொழியின் மீது கட்டமைக்கப்படும் புனைவு என்பதையும் மொழி தான் சிந்தனை என்ற நிலைப்பாட்டையும்தான் இன்றைய அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவ காலகட்டங்கள் வலியுறுத்துகின்றன.

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதை நிலைப்பாடுகளிலிருந்து நாம் இன்றைய காலகட்டத்துக்கு எடுத்துக் கொள்ள பல செய்திகள் உள்ளன. மொழியின் நுண்மையையும் வாழ்வியலையும் ஆதாரமாகக் கொண்ட சங்ககால இலக்கிய மதிப்பீடுகள் பிற்காலத்தில் ஆதிக்கம் பெற்ற மதவாதத்தால் நீர்த்துப்போய் திசை மாறிப்போனதையே தமிழ் இலக்கிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. பரவலான மக்களைச் சென்றடைதல் மற்றும் ஜனநாயகப் படுத்துதல் ஆகிய மத இயக்கங்களின் அடிப்படைச் செயல்பாடுகள் இலக்கியத்தின் ஆதாரமான உணர்வுகளை உள்வாங்கினாலும் அவை ஒழுங்குபடுத்தப்பட்ட அறவியல் சட்டகங்களுக்குள் மனித எழுச்சிகளின் உணர்ச்சிப் பெருக்குகளைப் புறந்தள்ளின. அதனாலேயே பின்வரும் காலகட்டங்களில் இயல்பான மன எழுச்சிகளின் இலக்கிய அங்கீகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வரையறுக்கப்பட்ட சூத்திரம் சார்ந்த நிலைப்பாடுகள் முன்னிலை பெற்றன. அச்சூழலிலேயே பெண்ணின் சமூக வெளி குறுக்கப்பட்டு எழுச்சி பெற்ற சங்கப் பெண் கவிஞர்களின் பெண் குரலின் தொடர்ச்சியைப் பின்வரும் காலகட்டங்களில் நாம் காண இயலாமல் போனது.

இன்றைய நவீன காலகட்டத்தில் வரையறுக்கப்பட்ட சட்டகங்களைக் கடந்து வாழ்க்கை உணர்வுகளின் அடிப்படையில் மீண்டும் இலக்கிய நிலைப்பாடுகள்உறுதி கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. பெண் உடல் குறித்து உருவாக்கப்பட்டுள்ள போலி கட்டுமானங்களை உடைத்து உடலின் பரவசங்களையும் உடலின்கொண்டாட்டத்தையும் முன் நிறுத்தும் இன்றைய பல நவீனப் பெண் கவிஞர்களின் குரலில் சங்கப் பெண் கவிஞர்கள் அதிக எண்ணிக்கையில் தங்களுக்கான இடத்தையும் அங்கீகாரத்தையும் கோரும் விதமாக தங்கள் குரல்களைப் பதிவு செய்யும் நிலை உள்ளது. இன்று ஆதிக்கங்கள்இடம்பெயர்ந்துள்ள நிலையிலும் பெண் குறித்த மரபுரீதியான பார்வையிலிருந்தும் சொல்லாடல்களிலிருந்தும் தமிழ்ச் சமூகம் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. வைதீக சனாதனப் பார்வை கொண்ட பெண் ஆதிக்கக் குரல்கள் வேறு வடிவங்களில் இன்றும் தொடர்ந்தவாறே உள்ளன. இத்தகைய ஒரு சூழலில் சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த கவனங்கள் தீவிரப்படுவது அங்கு ஒலிக்கும் பல்வேறு குரல்களின் பின்புலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை மீண்டும் மறுவாசிப்பு செய்யவும் மறுபரிசீலனை செய்வதற்குமான பல சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

நன்றி - கூடு
...மேலும்

Jan 28, 2011

சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்... - ராமலக்ஷ்மி


இன்றைக்கும் காணக் கிடைக்கிற காட்சிதான் இது. உற்சாகக் கூவலுடன் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடியபடி இருக்க அவர்கள் வயதொத்த சிறுமி ஏக்கமாய் பார்த்தபடி அமர்ந்திருப்பது. கடந்து செல்லுபவர்கள் ‘இவளையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்றால் "இது பாய்ஸ் கேம்ஸ்’ என்பதாக இருக்கும் வருகிற பதில். ஒரு ஓவர் பவுலிங் கொடுத்துப் பார்க்கும் முன்னரே ஏன் இந்த முடிவு? ‘அவளாலே முடியாது’ அப்போதுதான் நம் கண் எதிரே அருமையான கேட்சை தவறவிட்ட சிறுவன் அலட்சியமாகச் சொல்லுவான்.

துறுதுறுவென ஓடிச்சாடி அந்தச் சிறுமியின் கால்கள் காட்டத் துடிக்கும் வேகத்தை அத்தனை எளிதாய்ப் புறக்கணித்தால் எப்படி? கண்கள் கவனத்தைக் குவிக்க, தாவிக் கைகள் பிடிக்க என அவள் பந்துகளைத் தடுத்தாள ஒரு வாய்ப்புக் கூட மறுக்கப்பட்டால் எப்படி? உடல் பலத்தில் ஒருபடி கீழே இருந்தாலும் கூட உற்சாகத்தை உயிரினுள்ளிருந்து திரட்டி, பிடித்திருக்கும் மட்டைக்கு ஊட்டி, அவளால் இயன்ற வரை ஓங்கி அடிக்கிற பந்து சிக்சரா ஃபோரா, இல்லையேல் காற்றிலே மட்டை மட்டும் சுழல க்ளீன் போல்டா, பரவாயில்லை எதுவானாலும் ஆடிப் பார்க்கதான் விடுங்களேன்.

சகமனிதனுக்கான வாய்ப்பைக் கிடைக்கவிடாமல் செய்வதைப் போன்றதொரு மட்டமான விஷயம் வேறில்லை உலகில். அதுவே பெண்கள் என வருகையில் சமுதாயம் இதை எப்போதும், அந்தச் சிறுவனைப் போலவே தயங்காமல், ‘இதுவே உங்களுக்கு விதிக்கப்பட்டது’ என்கிற மாதிரியான மனோபாவத்துடன் இன்றளவும் செய்து கொண்டேதான் இருக்கிறது. அதையும் உடைத்துக் கொண்டு வெளியில் வந்து காண்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் பெண்கள். 2009 நவம்பர் 20ஆம் தேதி இந்திய கடற்படையின் வரலாற்றில் ஒரு குறிப்பு பொன் எழுத்துக்களால் பதிக்கப் பட்டது. அன்று இருபத்து இரண்டு வயதே நிரம்பிய அம்பிகா ஹூடா, சீமாராணி ஆகிய இரு பெண் அதிகாரிகள் துணை லெப்டினென்ட் பொறுப்பேற்றனர்.

இதுகாலம் வரையில் பெண் பைலட்டுகள் சரக்கு மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்கி வந்துள்ளனர். ஆனால் இந்த சாதனை மகளிர் கப்பற்படையின் குண்டு பொழியும் வசதிபடைத்த டார்னியர் விமானங்களை ஓட்டி ரேடார் மூலமாகக் கடலைக் கண்காணிப்பது, போர் விமானங்களின் வருகையைக் கவனித்து விமானப் படைக்குத் தகவல் தருவது போன்ற மிகப் பெரிய பொறுப்புகளைக் கையாளப் போகிறார்கள். ஆக, ஆண்களால் மட்டுமே முடியுமென நினைக்கப்பட்ட விஷயங்களை பெண்களும் செய்து பார்க்க அனுமதி அளிக்கப் பட்டதால்தானே இது சாத்தியப்பட்டது. அவர்கள் முயற்சித்துதான் பார்க்கட்டுமே. முடியவில்லை எனத் தோற்றாலும் நட்டமொன்றும் இல்லை. ஆனால் முயற்சிக்க விடுங்கள்!

‘ஆமாம் இப்போது இங்கே எந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது? சொல்லபோனால் எங்களுக்கான வாய்ப்புகளும் இவர்களால்தான் கெட்டுப் போகிறது’ என முணுமுணுக்கும் ஆண்கள் பலருண்டு. உதாரணத்துக்கு கடந்த வாரம் ஹரியானா மாநில அரசானது அரசுப்பணியிலிருக்கும் பெண்களுக்கு இரண்டு வருட சி.சி.எல் எனும் சைல்ட் கேர் லீவ் ஒன்றை அறிவித்துள்ளது. முதலிரண்டு குழந்தைகளுக்கு மட்டுமென்றும், பதினெட்டு வயதை அவர்கள் எட்டும் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை பிரித்து எடுத்துக் கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

இது சரியா தவறா எனும் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘இனிமேல் இவர்களுக்கு கொண்டாட்டம்தான். பெரும்பாலும் அலுவலகங்கள் இதனால் காலியாகத்தான் இருக்கப் போகின்றன. எந்த வேலைகளும் நடக்கப் போவதில்லை’ எனும் எக்காளம் வலுக்கிறது. தம்மை ஈன்றவளும் தம் வாரிசுகளைச் சுமந்தவளும் பெண் என்பதை இவர்கள் மறந்தொன்றும் போகவில்லை. மதிக்கின்ற மனம்தான் இல்லை. ஆனால் ஹரியானாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கீதா புக்கல், தாய்மையைப் மதித்துப் போற்றும் அடையாளமாகவே இச்சட்டம் அமலுக்கு கொண்ட வரப்பட்டதாக அறிவித்துள்ளார்.

‘பெண்கள் தாங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக மட்டுமேயன்றி தம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரவும்தான் வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டிலும் வெளியிலுமாக சுமைதாங்கும் அவர்களுக்கு இது தேவையான ஒன்றுதான்’ என அனுசரணையாகக் குரல் எழுப்பியுள்ளனர் அம்மாநில அரசு அதிகாரிகள் சிலர். இருப்பினும், கிளம்பியிருக்கும் அதிருப்தியால் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்ற முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்க இன்றளவிலும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான பிரசவகால விடுப்பு மூன்றுமாதங்களாகவே இருந்து வருகிறது.

விடுப்பு கிடைக்கிறது என்பதற்காக எவரும் தேவையில்லாமல் அதை பயன்படுத்துவார்கள் எனத் தோன்றவில்லை. ஏனெனில் வேலையின் மீதான் அக்கறையும், போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில் தன்னை நிரூபித்தாக வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் பெண்கள். இடைக்காலங்களில் தவிர்க்கமுடியாமல் நீண்ட விடுப்புகள் தேவைப்படுகையில் வேறுவழியின்றி பார்த்து வந்த வேலையை ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் ராஜினாமா செய்து விட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் உண்டு. அந்த நிலைமை ஏற்படாமலிருக்கவும் இந்த சட்டம் உதவும் என்கிற வகையில் நிச்சயம் இது பாராட்டுக்குரியதே.

பிரசவகாலம் தவிர்த்து தன்னை ஒரு பெண் என்பதை முன்னிறுத்தி சலுகைகள் பெறுவதில் அத்தனை நாட்டமோ விருப்பமோ கொண்டவர்களாகத் தெரியவில்லை இன்றைய மங்கையர். எந்த உடல் உபாதையானாலும் பொறுத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் வேலை செய்கிறார்கள். தமது குழந்தைகளுக்கொரு பிரச்சனை, எதிர்பாராத உடல்நலக் குறைவு என வரும் போது விடுப்பு எடுக்கும் சூழல்கள் அமைந்துதான் போகிறது. தாய்மையா வேலையா என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிற நிலைமைதான். இதையே சாதகமாக்கி, ஒரு பதவி உயர்வென்று வருகையில், திறமையிலும் அர்ப்பணிப்புடன் வேலை செய்வதிலும் பலமடங்கு முன்னணியில் இருந்தாலும்கூட பெண் எனும் காரணத்தால், குடும்பப் பொறுப்புடன் இந்தப் பொறுப்பை சரிவர செய்வது அத்தனை சாத்தியப்படாது என அவர்களைப் பின்தள்ளுவது நடப்பதேயில்லை என யாராவது சொல்ல இயலுமா?

சமுதாயத்தைப் பார்த்து எழுப்பப்படும் இக்கேள்விகள் யாவும், கவனிக்க, பெண்களுக்கும் உரித்தானதே. மேலதிகாரியாக இருப்பது ஒரு பெண்ணே ஆனாலும், அலுவலக நன்மை கருதியென இந்தமாதிரியான கட்டங்களில் பதவி உயர்வை திறமையில் ஒருபடி கீழே இருக்கும் ஆணுக்குத் தந்து விடுவதுண்டு. அந்த வாய்ப்பை உரிய தகுதியுடைய அந்தப் பெண்ணுக்கேதான் வழங்கிப் பாருங்களேன். எப்பாடு பட்டேனும் மூன்று குதிரையில் கூட சவாரி செய்து உங்கள் அலுவலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவார். இந்த இடத்தில்தான் வீட்டிலுள்ளவர்கள் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகிறது ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு.

வீடும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்தானே? தினசரி வீட்டு வேலைகளில் உதவுவதில் முடிந்து விடுவதில்லை கணவனின் கடமை. குழந்தைகளின் பள்ளியில் பெற்றோர் சந்திப்புகள் அல்லது அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்ற பொறுப்புகள் தந்தைக்கும் உண்டு.தன்னைவிட மனைவி பெரிய பொறுப்பில் இருந்தால் ‘என் வேலை அத்தனை முக்கியம் இல்லை என நினைத்தாயா?’ என்றோ, அல்லது தான் உயர்பதவி வகிக்கும் கர்வத்தில், ‘என்வேலை முக்கியமா உன் வேலை முக்கியமா’ என்றோ விவாதம் செய்வது சரியல்ல. குறிப்பிட்ட அத்தினத்தில் மனைவிக்கு அலுவலகத்தில் ஏதேனும் அதிமுக்கிய வேலை இருக்கலாம். அவரது வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லை எட்ட வைக்கக் கூடியதாக இருக்கலாம்.

கவனித்துப் பார்த்தால் இது போன்ற ‘நீயா நானா’வில் பெரும்பாலும் விட்டுக்கொடுப்பவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஊர் மாற்றமோ வேலை மாற்றமோ ஆணுக்கு நிகழுகையில், அதே ஊருக்கு தனது அலுவலகம் மூலமாக மாற்றலாகிட வழியில்லாது போகையில், அதுவரை பார்த்துச் சேர்ந்த பெயர் பதவி எல்லாவற்றையும் துறந்து வேறுவேலையைத் தேட கணவனுக்காகக் பொட்டியைக் கட்டும் மனைவியர்தான் எத்தனைபேர்? மறுபடியும் ஆரம்பப் புள்ளியிலிருந்து புதிய இடத்தில் வேலையைத் தொடங்க ஆண்களே அதீத தயக்கம் காட்டுகையில் குழந்தைகளின் படிப்பு,வீடு,வேலை,இட மாற்றங்களுக்கு மனத்திண்மையுடன் தம்மை தயார் செய்து கொள்கிறார்கள் பெண்கள்.

சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற. வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.

பிறப்பால் பெண் எனும் அந்தச் சங்கிலியை அனுசரணையுடன் அறுத்தெறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுப்பதில்தான் இருக்கிறது அதே பிறப்பால், தேக பலம் எனும் ஒரேயொரு கூடுதல் வரத்தால், தம்மை உயர்வாய்க் கருதிக் கொள்பவர்களின் உண்மையான பெருமிதம். சக மனுஷியை சக உயிராய் மதித்து எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுங்கள். வளர்ச்சிக்கு வழி விடுங்கள். வானம் தொடுவார்கள். வாழ வைப்பார்கள்.

 கட்டுரையை அனுப்பி வைத்த ராமலக்ஷ்மிக்கு நன்றிகள்.

ராமலக்ஷ்மியின் வலைதள முகவரி 

...மேலும்

Jan 27, 2011

பெண்ணியம் சங்ககாலம் முதல் சமகாலம் வரை - தமிழ் மதி


பெண்ணியம்
சமூகத்தின் ஆதிக்க தலைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு பெண்கள் தங்களிடைய உரிமைகளுக்காக போராடும் தன்மையே பெண்ணியம் ஆகும். ஆணைப் போலவே பெண்ணும் தன் எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப சுதந்திரமாக வாழும் வாழ்வியல் முறையே பெண்ணியம் ஆகும்.பென்னியமானது அடிமைகளாகவே வாழ்ந்துக் கொண்டு இருக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வையும், சுதந்திர வேட்கையையும் ஊட்டுகிறது. பெண்ணியம் என்பது பெண்ணொருத்தியின் சிக்கல்களை மட்டும் ஆராயாமல் ஒட்டுமொத்த பெண்ணினத்தின் சிக்கல்களை ஆராய்கிறது.

பெண்ணியத்தின் தோற்றம், வளர்ச்சி
பெண்ணியத்தின் தோற்றம் சுமார் அறுநூறு ஆண்டு கால பழமை வாய்ந்தது. பெண்கள் தங்களை துன்புறுத்தும் ஆண்களை எதிர்த்தும், பாலியல் உறவு முறைகளை நாகரிகமானதாக கருதியும், சமூக அங்கீகாரத்தையும், மதிப்பையும் பெற வேண்டும் என்று தோன்றியதே பெண்ணியத்தின்
தோற்றத்திற்கு அடிப்படை காரணம் ஆகும்.

சங்க இலக்கியத்தில் விதைவைகளின் நிலை
சங்க காலத்த்தில் கணவனைப் பிரிந்த பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் உரிமையை பெற்றிருக்கவில்லை. அணிகலன்கள், மலர்கள் போன்றவற்றை சூடுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

" எம்மினும் பேர் எழில் இழந்து வினை எனப்
பிறர்மனை புகுவல் கொல்லோ
அளியல் தானே பூவிலைப் பெண்டே"

- தனிமை துயர் மிக்கு எழில் இழைக்கும் மனை மகளீரை விடப் பூவிற்கும் பெண்டிர் பூ வாணிகம் குன்றித் துயர் அடைந்தனர் என்று எடுத்து உரைக்கும் இப்பாடல், கணவனை இழந்த பண்டைய காலப் பெண்களின் நிலையை புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது

சங்க இலக்கியங்களில் பெண்கல்வி
வேத காலத்தைப் போலவே சங்க காலத்திலும் ஆண், பெண் இருபாலரும் கல்வி கற்று இருந்தனர் என்பதற்கு பெண் பாற்புலவர்களும், அவர் தம் பாடல்களும் சான்றுகளாகும். இதிலிருந்து சங்க கால பெண்கள் கல்வி சுதந்திரமும், படைப்பு சுதந்திரமும் பெற்றிருந்தார்கள் என்பது தெரிய வருகிறது.

ஔவையார், வெள்ளி வீதியார், காக்கை பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், முடத்தாம கண்ணியார், குறமகள் இளவெயினி, பாரி மகளிர், ஆதி மந்தி ஆகிய பெண்களின் பாடல்களை நான் இலக்கியங்களில் அறிந்து இருந்தாலும் ஓதலில் பிரிவு ஆண்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது என்பதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.

இலக்கியங்களில் ஆண்களுக்கு அறிவுறுத்தியபெண் கவிஞர்கள்
ஆண் படைப்பாளிகள் பெண்களுக்கு ஒழுக்கத்தையும், நன்னடத்தையையும் அறிவுறுத்தி இருந்ததை போலவே ஔவை என்ற பெண் கவி, ஆண்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பது பெண்மையின் இலக்கிய ஆளுமைக்கு சிறந்த சான்றாகும்.

" எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே "

சங்க இலக்கியத்தில் களவும் ,கற்பும்
சங்க காலத்து பெண்கள் காதல் சுதந்திரமும், திருமண சுதந்திரமும் பெற்று இருந்தார்கள் என்பதற்கு களவு மனம், உடன் போக்கு போன்ற பல ஆதாரங்கள் உள்ளன. குறுந்தொகையில் அறிமுகம் இல்லாத தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் இணைந்து களவு மணம் புரிந்திருக்கிறார்கள் என்பதையே ,

" யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புல பெயனீர் போல
அம்புடை நெஞ்சம் தாங் கலந்தனவே "
-என்ற குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது.

சங்க இலக்கியங்களில் விருந்தோம்பலும், பெண்ணும்
சங்க காலத்தில் விருந்தோம்பல் பெண்ணுக்குரிய தலையாய கடனாகக் கருதப்பட்டது. பொழுது பாராமல் எல்லா நேரங்களிலும் பெண் விருந்தோம்பினாள் என்பதை நற்றிணை பாடல் ஒன்று சாட்ச்சி அளிக்கிறது
" அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் "

சங்க இலக்கியங்களில் ஆண்பெண் உறவு நிலை
வரைவின் மகளிர் என்று பெண்கள் அடையாளப்படுத்தப்பட்டதில் இருந்து சங்க காலத்தது பெண்களின் அடிமைத் தனத்தை உணர்ந்துக் கொள்ள முடிகிறது. ஆனால், பரத்தையிடம் இன்பம் நுகர்ந்து திரும்பும் தலைவனைப் பார்த்து "இம்மை மாறி மறுமையாகினும் நீ யாகியர் என் கணவனை யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே" என்று சொல்வதில் இருந்து ஒருத்திக்கு ஒருவன் என்று பெண்ணை மட்டுமே அக்கால சமூகம் வாழப் பழகி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

சங்க இலக்கியங்களில் போர்களும் பெண்களும்
போருக்கான வீர மறவர்களை ஈன்று புறந்தருதலே பெண்களின் கடமையாகக் கருதப்பட்டது.

"வினையே ஆடவர்க்கு உயிரே வானுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் "

- என்னும் குறுந்தொகைப் பாடல் குடும்பத்தில் பெண்களின் உழைப்பு சுரண்டப்பட்டிருப்பதையும், ஆடவரை உயிராக கொண்டு வாழவேண்டும் என்று பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இருப்பதையும் அறிவிக்கிறது.

பெண்ணை முன்னிறுத்தி எர்ப்படுத்தப்பட்ட கர்ப்போளுக்கம் ஆணுக்கு வரையறுக்கப் படவில்லை. ஆகவே, பல பெண்களுடனும், பரத்தையர்களுடனும் உறவு கொள்ளும் தனிச்சையான பாலியல் சுதந்திரத்தை ஆண்கள் அனுபவித்து வந்தார்கள். சங்ககால பெண்கள் பெண்கள் குடும்பம், சமூகம் ஆகிய இரு தளங்களில் நன்மதிப்பை பெற்று இருந்தாலும், பெண் அடிமை தனத்தையும் அனுபவித்து இருப்பதோடு, சுதந்திர சுகங்களையும், அடிமை வலிகளையும் ஒரு சேர பெற்று இருந்தனர் என்பதை அறிய முடிகிறது

நன்றி - என்னுள் 
...மேலும்

Jan 26, 2011

இல்லத்தரசர்கள் ஏன் உருவாவதில்லை? – லக்ஷ்மி பாலகிருஷ்ணன்


எழுத்தோ இசையோ சிற்பமோ கலை எதுவாயினும் கலைஞன் என்பவன் ஒரு விசேஷமான பிறவிதான். எந்தக் கலையும் மறையாத நுண்ணுர்வையும்இ தீராத படைப்பூக்கத்தையும் கோருவது. ஒரு மனிதன் கலையை ரசிக்கவே நுண்ணுர்வோடும்இ ரசனையோடும் அதற்கென தனிப்பட நேரம் செலவிடத் தயாராகவும் வேண்டுமென்றால் கலைஞன் அக்கலைப் படைப்புகளை படைக்க எவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கும்? அப்படி தன் உணர்வுகளையும்இ வாழ்நாளையும் ஆகுதியாக்கி கலையை போஷித்துக் கொண்டிருப்பவன் தன் பொருளாதாரத் தேவைகளைத் தானே நிறைவேற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டால் முதலில் அடிவாங்குவது அவனது வித்யா கர்வம் - இன்னொருவனிடம் கைகட்டி நிற்கத் தேவையில்லாது பொருள் வரும் வழி எங்குமில்லை.

சொந்தத் தொழில் செய்வோருக்கு அதில்லையே என்று நினைத்தால் அது நம் அறியாமையே. அங்கும் வாடிக்கையாளர் ஒவ்வொருவரையும் நம் முதலாளியாக நினைத்தே செயல்பட வேண்டியிருக்கும். அதிலும் நிலப்பிரபுத்துவக் காலகட்டம் போலின்றி இன்று இருக்கும் அரசுஃதனியார் நிறுவன அமைப்புகளில் இருக்கும் உள்ளரசியலும்இ சூதுவாதுகளும் ஒரு மனிதனை கசக்கிப் பிழிய போதுமானவை.

இப்படியான சிக்கல்களில் இருந்து கலைஞர்களை காக்கவே அரசனோ பெரும் நிலப் பிரபுக்களோ கலைஞர்களை அரசவையில் வைத்துப் பராமரிக்கும் வழக்கம் இருந்தது. அந்தப் புரவலனை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தாக வேண்டிய கட்டாயம் இருந்தாலுமே கூட வேறு சிக்கல் எதுவும் அக்கால கலைஞர்களுக்கு இல்லை. அரச முறை வழக்கொழிந்தபோது கலைஞர்கள் மாற்றாக என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடியதும் நம் நாட்டில் கலை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் நேர்ந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

எந்த ஜமீந்தாரைத் தன் சின்ன சங்கரன் கதையில் காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சினாரோ அதே ஜமீந்தாருக்கு சீட்டுக் கவியெழுதி இறைஞ்ச நேர்ந்த போது பாரதிக்கு எப்படி வலித்திருக்கும்? மக்கள் கலைஞர்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை தன் பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் குறிப்பிட்டு அந்நூலையும் அப்படி கலைஞர்களை காத்து நிற்கப் போகும் வருங்கால பிரபுக்களுக்கே சமர்ப்பித்தவர் அவர். ஆனால் அந்த மகாகவியின் சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் எண்ணிக்கை பதிமூன்று. எப்பேர்பட்ட கொடுமை இது.... சரிஇ அரசன் இல்லை. மக்களும் கலைஞனை கவனிப்பதில்லை. வேறு என்னதான் வழி? அடுத்து அந்தப் பொறுப்பு வந்து சேர்வது அக்கலைஞரைச் சூழ்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு - அதிலும் குறிப்பாக அவரோடு தன் வாழ்வை பிணைத்துக் கொண்ட வாழ்கைத் துணைக்கு.

பெண்கள் வேலைக்குச் செல்வது மிக எளிதாகிவிட்ட சூழலில் இப்படி கணவரை போஷித்துஇ பொருளியல் நெருக்கடிகளையும்இ குடும்பப் பொறுப்புகளையும் தன் தலை மேல் போட்டுக் கொண்டு ஒரு கோழி தன் சிறகால் மூடி குஞ்சுகளைக் காப்பது போல் இந்த சமூகத்தின் தாக்குதல்கள் எல்லாவற்றிலிருந்தும் அவருக்கு ஒரு சிறு கீறல் கூட விழாது காக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்று மிக அதிகம். காதல் ஒருவனைக் கைபிடித்துஇ அவன் காரியம் யாவிலும் கைகொடுக்கும் இத்தகையோரே உண்மையில் பாரதியின் புதுமைப் பெண்கள்.

சமீபத்தில் வார இதழொன்றில் ஒரு பிரபல எழுத்தாளரின் நேர்காணலை இ அவரது மனைவி பற்றிய மதிப்பீட்டை படிக்க நேர்ந்தது. எப்படியெல்லாம் தன் மனைவி தன்னை போற்றிப் பாதுகாக்கிறார் என்பதை கேட்போர் நெகிழும் வண்ணம் சொல்லியிருந்தார் அந்த எழுத்தாளர். சில பத்து வருடங்களின் பின்னும்இ எத்தனையோ பிரச்சனைகளுக்குப் பிறகும் கூட 'அன்றன்ன விருப்புடன்' வாழும் அவர்களின் பெருங்காதல் பற்றி படித்த போது கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

இன்றுள்ள சூழலில் நிறைய ஆண் எழுத்தாளர்கள் இது போன்ற நெகிழ்வு மிக்க விஷயங்களை யாரும் தன்னை குறைவாக நினைப்பார்களோ என்ற எண்ணமின்றி பதிவு செய்வது நல்ல விஷயம். இது ஒரு பொருட்படுத்த வேண்டிய முன்னேற்றமே.

சரிஇ எதிர்ப்பக்கத்தில் பெண் எழுத்தாளர்கள் தன் குடும்பம் தன்னை எப்படி நடத்துகிறது என்று பதிவு செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். பெரும்பாலான பெண்களின் பேட்டி இப்படி இருக்கும்."என் கணவர் ரொம்ப நல்லவர். புகுந்த வீட்டு மனிதர்களும் ரொம்பப் பெருந்தன்மையானவர்கள். நான் எழுதுவதை ரொம்பவே ஊக்குவித்தவர்கள். அதற்காக வீட்டு வேலைகளில் நான் எந்தக் குறையும் வைத்துவிடுவதில்லை. சமையல்இ குழந்தை வளர்ப்பு எல்லாவற்றையும் நான் சரியாகச் செய்து முடித்துவிட்டுத் தான் எழுதவே உட்காருவேன். அப்படி எழுதுகையில் என் எழுத்தை வீட்டில் உள்ள யாரும் தொந்தரவே செய்ய மாட்டார்கள்" இப்படியாகப் போகும் அவர்களின் பேட்டியில் தெரிக்கும் நன்றியுணர்வு அதீதமானது.

அதாவது வீட்டு வேலைகளை முடித்து விட்டுஇ பிறகு உட்கார்ந்து தான் எழுதி வீணாக்கும் நேரத்தில் கூட குடும்ப வேலைகளை இன்னும் பொறுப்பாகச் செய்திருக்கலாமோ என்ற குற்றவுணர்வும் அதில் அடிநாதமாக இழையோடும். அப்படியான ஓவர் டைம் பொறுப்புணர்வு தனக்கு இல்லாது போனதைத் தன் குடும்பம்இ குறிப்பாக கணவரும் அவர் வீட்டாரும் மன்னித்து அருளுவதாகவே பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் நம்புகிறார்கள்.

ஒரு ஆண் எழுத்தாளர் ஆக இ குடும்பத்தில் ஆணின் பொறுப்பாகக் கருத்தப்படும் பொருளீட்டலை பெண் எடுத்து நடத்திஇ சுதந்திரம் தர வேண்டும் என்றால் அதே போல் ஒரு பெண் எழுத்தாளர் ஆகவும் குடும்பத்தில் அவரது பொறுப்பில் இருக்கும் சமையல் குழந்தை வளர்ப்பு போன்றவை கணவன் எடுத்து நடத்த வேண்டும் இல்லையா? ஆனால் யதார்த்தத்தில் அப்படி இருப்பதில்லை.

இலக்கியம்இ கலை மட்டும்தான் என்றில்லை. தொழில் தொடங்கி நடத்துவதிலிருந்து விளையாட்டில் ஜெயிப்பது வரை சகல விஷயங்களுக்குமே இந்த புரிந்துணர்வு அவசியம். யாரேனும் ஒருவர் ஜெயிக்க குடும்பம் முழுமையும் ஒத்துழைப்பது என்பது ஆணுக்கு எப்படி முக்கியமோ அப்படியே பெண்ணுக்கும் முக்கியம். சமீபத்தில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தட்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையான கிருஷ்ணா பூனியா பத்திரிக்கையாளர் சந்திப்பில் எதிர்கொண்ட முதல் கேள்வி – ’உங்கள் குழந்தையை பிரிந்து வெளிநாடு சென்று பயிற்சியெல்லாம் பெற்றிருக்கிறீர்களேஇ இது உங்களுக்கு மன உளைச்சலைத் தரவில்லையா?’ என்பதுதான். இத்தனைக்கும் அப்பெண்ணின் கணவரே அவரது பயிற்சியாளரும் கூட.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று இன்போசிஸ் நிறுவனர் நாரயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி போன்றோர்களைப் பற்றி பெருமையாகப் பேசும் மீடியாவால் கிருஷ்ணாவின் கணவர் விஜேந்தரை அப்படி புகழ முடியவில்லை என்பது எவ்வளவு மோசமான நிலை?

செய்யும் தொழிலில் வேறுபாடு பாராட்டுவது கூடாது என்பதை இன்று அறிவுத் தளத்தில் அனைவருமே ஒப்புக் கொள்ளுவார்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். –குறள்.972

-எனவள்ளுவரும் கூட செய்யும் தொழிலில் காட்டும் திறமையால்தான் சிறப்பு வரும் என்கிறாரே தவிர்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தொழிலால் இல்லை. வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யும் தொழிலிலேயே வேறுபாடு கூடாதென்றால்இ நம் சொந்த வீட்டிற்குள் செய்ய நேரும் வேலைகளில் என்ன ஏற்றத் தாழ்வு இருந்துவிட முடியும்? இதெல்லாம் வாதிட நன்றாகவே இருக்கும்.

ஆனால் இன்னமும் நம் ஆழ்மனதில் அல்லது மரபணுக்களில் உறைந்திருக்கும் சாதீய ஆணாதிக்க சிந்தனைகள் முழுமையாகக் களையப்பட்டுவிடவில்லை என்பது தொழில்களுக்கு இருக்கும் மதிப்பை ஒப்பிட்டாலே புரியும். ஆண் அணியும் பேன்ட் - சட்டையை பெண் அணிந்தால் அது முன்னேற்றம். சரிஇ ஒரு விளையாட்டுக்கு பெண் அணியும் சேலை அல்லது சுடிதாரை ஆண் அணிந்தால் ஒன்று அது காமெடி அல்லது கேவலம் என்றே பார்க்கப் படும். அது போலவே குடும்பப் பொறுப்பில் ஆணின் தட்டில் இருக்கும் பொருளீட்டலை பெண் கையிலெடுத்துக் கொண்டால் அவள் புரட்சிப் பெண். அதே பெண்ணிற்கு நேர்ந்து விடப்பட்ட சமையலையோ குழந்தை வளர்ப்பையோ ஆண் செய்தால் அது கேவலம் என்றே சமூகம் கருதுவதால் வரும் வினையே இது.

ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில் கூட அப்பா ஈசிச்சேரில் அமர்ந்து பேப்பர் படிப்பார். அம்மா காய் நறுக்குவார். இப்படியான படங்களைப் பார்த்து கதை சொல்லிஃகேட்டு வளர்ந்தவர்கள் தானே நாம்? அவ்வளவு எளிதில் இந்த பிரிவினைகள் தகர்ந்து விடுமா என்ன? இதில் ஆண்களை மட்டுமே நான் குற்றம் சொல்வதாக நினைக்க வேண்டாம்.

உன் வேலை அல்லது எழுத்து முக்கியம். நான் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கணவன் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெரும்பாலான பெண்களுக்கே இருப்பதில்லை என்பதுதான் நிஜம். அப்படியே அவர்கள் இருவரும் தன் குடும்ப நிலையை உத்தேசித்து இப்படி ஒரு முடிவை எடுத்தாலும் அக்கம் பக்கத்தவரோ இல்லை உறவினர்களோ இதை சகஜமாக எடுத்துக் கொள்வதில்லை. முதலில் இது அவர்களுக்கு ஒரு கலாச்சார அதிர்ச்சியாக இருக்கும். அடுத்த கட்டத்தில் அந்தக் குடும்பத்தையே இளக்காரமாகப் பார்க்கத் தொடங்குவார்கள். இதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களுமே இப்படித்தான் யோசிப்பார்கள் என்பது மறுக்க முடியாத கசப்பான நிஜம்.

வேலைக்குச் செல்வதோ வீட்டிலிருப்பதோ அது அவரவர் தேர்வு. பொருளீட்டல் யார் செய்ய வேண்டும்இ சமையல் யார் செய்ய வேண்டும்இ குழந்தைக்கு யார் கால் அலம்பி விடுவதுஇ வீட்டில் உட்கார்ந்தால் இலக்கியம் வளர்க்கலாமா இல்லை சீரியல் பார்த்தால் போதுமா - இது போன்ற கொள்கை முடிவுகள் எடுக்கப் படவேண்டியது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே. முடிவு செய்யும் முழுமுதல் உரிமை கணவனுக்கும்இ மனைவிக்கும் மட்டுமே உண்டு என்பதை சமூகம் முழுமையும் உணரும் நாளில்தான் உண்மையான சமத்துவம் பெற்றுவிட்டோம் என்று பொருள்.

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்