/* up Facebook

Dec 29, 2010

எழுதப்படாத வலி மற்றும் பகிரப்படாத கனவுகள் பற்றி - காயா

சுணைக்கிது
(சிறுகதைத் தொகுப்பு) – நிருபா

தமிழ் நவீனத்துவம் மிகவும் அச்சமூட்டக்கூடியது. குரலற்றுப் போனவர்களின் எண்ணிக்கை நவீனத்துவப் பரப்பில் அதிகம்.நவீனத்துவம் தனது நுண்ணிய வன்முறை மூலம் சிதறடித்த இருப்புக்களும் அடையாளங்களும் எண்ணற்றவை.

பீதிக்கனவுத் தன்மை மிக்க இச் சூழலில் இருந்து தமிழ் இலக்கியப் பரப்பு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதை ஸ்தூலமாகவே உணர முடிகிறது.

இதுவரை அடையாளங்கள் இல்லாது இருக்கும்படி நிர்ப்பந்திக்கப் பட்டவர்களும் குரல்வளை நெரிக்கப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்து தமது அரசியல் ரீதியான இருப்பை உறுதி செய்து வருவதை நாமறிவோம்.

தலித் அரசியல் பெண்ணியம் பாஸிச எதிர்ப்பு பற்றிய கதையாடல்கள் பின் நவீனத்துவப் புலத்தில் உக்கிரமாக நிகழ்த்தப்பட்டாலும் பின் நவீனத்துவம் நாசூக்காக ஒதுக்கும் விடயங்களும் உண்டு. (விதிவிலக்கு பிரேம்-ரமேஷ்) கலகத்தன்மை மிக்க சமபாலுறவு, முறைதகாப் பாலுறவு போன்ற விடயங்கள் மிக நாசூக்காக ஒதுக்கப் படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறான கலகத் தன்மைகள் ஏதுமற்ற சிறுவர் உலகு குறித்த கதையாடல்கள் நிகழ்த்தப்படாதிருப்பது தந்தை வழிச் சமூகத்தின் இன்னொரு வெளிப்பாடு தானோ எனச் சந்தேகிக்க வைக்கிறது. தந்தை வழிச் சமூகம் பெண்கள் மீது செலுத்தும் வன்முறையினைப் போன்றதே சிறுவர்கள் மீது மரபின் அங்கீகரிப்புடன் பிரயோகிக்கப்படும் வன்முறை.இந்த நிலை குறித்த விமர்சனம் எழாத ஒரு சூழலை ஆரோக்கியமானதென என்னால் எழுதிச் செல்ல முடியாது.

இத்தகைய சூழலில்வைத்து நிருபாவின் பிரதியை உள்வாங்குகையில் அதன் அரசியல் முக்கியத்துவத்தை பிரக்ஞைக்குள்ளாக்கியபடி மாத்திரமே வாசிப்பை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.இந்த வாசிப்பு நகர்த்தல் ஒருவகையில் தவிர்க்க முடியாததும் கூட.

".......சுணைக்கிது" என்ற தலைப்பு சிறுவர்களுக்கு ஏற்படும் சூழல் சார்ந்த ஒவ்வாமையை ஞாபகமூட்டுகிறது.தொகுப்பின் உள்ளடக்கத்துக்கு மிகப் பொருத்தமான ஒரு தலைப்பு.

முதலாவது சிறுகதையை வாசிக்கத் தொடங்கியதுமே நம்மை ஆச்சரியப்படுத்தும் விடயம் அதில் கையாளப்பட்டிருக்கும் வட்டார வழக்கு. அச்சு அசலான பிசிறுகள் ஏதுமற்ற வட்டாரத்தமிழ் பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த நிருபாவுக்குச் சாத்தியமாகியிருப்பது எப்படி?

சிறுவர் மீதான வன்முறையை வலியுடன் அதன் கசப்பு மிக்க உண்மைகளுடன் ஆவணப்படுத்துகிறது முதலாவது சிறுகதை.மலையகத்தொழிலாளர் மீதான வெறுப்பும் உயர்சாதியினரின் மேலாதிக்க வாதமும் 'தோட்டக்காட்டான்' என்ற பதப்பிரயோகம் மூலம் சொல்லப்படுகிறது. தோட்டக்காடு தேவையற்றோரை தள்ளி விடும் இடமாக, அருவருப்புக்குரிய இடமாக நிருபாவின் புனைவு வெளியில் வந்து போகிறது."போட்டுவாறன்" என்கிற இரண்டாவது சிறுகதை சிறுவர்கள் மீது உளவியல் வன்முறை அறிதலற்றுப் பிரயோகிக்கப்படுவதை கவனப்படுத்துகிறது. '....சுணைக்கிது' சிறுகதை சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை அதன் மூலம் ஏற்படும் வலியை நாசூக்காகக் கூறிச் செல்கிறது.

'அடிஅடியாய்' 'முதல்நாள்' 'மழை ஏன் வந்தது" போன்ற சிறுகதைகள் சிறுவர் நல நிலை நோக்கிலான வாசிப்பிற்கும் பெண்ணியவாத வாசிப்பிற்கும் இடமளிப்பவை.சிறுவர்களது அக உலகிற்கும் யதார்த்த உலகிற்குமிடையே நிலவும் முரண்களும் மோதுகைகளும் சிறுகதைகளாகப் பரிணமித்துள்ளதை உணரமுடிகிறது.

'கடுதாசிப் பூ' சிறுகதை சிறுபிள்ளைத்தனமான முதற்காதலை(?!) அதன் அர்த்தமின்மையுடன் அதன் பரிசுத்தத்துடன் எழுதிச் செல்கிறது.முதற்காதலின் வலியை சொல்கிறது 'காதல்' என்ற சிறுகதை. தொகுப்பினுள் ஒரு கிராமமே அதன் அத்தனை இயல்புகளுடனும் இயங்கிக் கொண்டிருப்பதான உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.

தொகுப்பின் மிகக் கனதியான அம்சம் ஆண் உயர்சாதி மையவாதங்களைக் கொண்ட இந்துத்வக் கலாச்சாரம் அங்கீகரிக்கும் வன்முறை மற்றும் அதன் போலி மதிப்பீடுகள் போன்றவற்றுக்கும் குழந்தைகளின் உலகிற்குமிடையேயான முரண்கள் கையாளப்பட்டிருப்பதுதான்.'அடிஅடியாய்' கதையில் தாலியைக் கழட்டி எறிந்த குஞ்சியம்மா திரும்பவும் தாலி அணிந்திருப்பதைப் பார்க்கும் சிறுமி குழம்புகிறாள்.பருவமடைந்த சிறுமி ஏன் எட்டுக்கோடு விளையாடக்கூடாது எனக் கேட்கிறாள்.

பருவமடைதலின் பின் சிறுமிகளின் குழந்தமை மூர்க்கத்தனமாக இந்துத்வப் பண்பாட்டால் பறிக்கப்படுவதை 'முதல்நாள்' சிறுகதை சொல்கிறது. 'நீ தண்ணி அள்ளக் கூடாதெல்லே, துடக்கெல்லே, இனிமேல் விளையாடக்கூடாது!." என்று சொல்லியவாறேயிருக்கிறார்கள்.சிறுமி கேட்கிறாள் 'எல்லாரும் ஏன் ஒரு மாதிரிப் பாக்கினம்? ஏன் இப்பிடிப் பாக்கினம்". ஒரு பெண்ணாக ஒரு இந்து ஆணுக்கு ஏற்ற பெண்ணாக அவள் வடிவமைக்கப்படுவதை ஆவணப்படுத்தும் இச் சிறுகதை மிக முக்கியமான ஒன்று.

'மாய மனிதன்' சிறுகதை ஒரு சிறுமியால் மாத்திரமே எழுதப்படக் கூடிய ஒன்று. ஒவ்வொரு வரியும் யதார்த்தம் யதார்த்தம் என்று நகர்கிறது.விவரணைகளின் துல்லியத்தன்மை சிறுவர்கலின் உலகினுள் இலகுவாக இ;ழுத்து விடுகிறது.

வட்டார வழக்குப்பிரயோகம் மற்றும் அதன் லாவகம் தவிர்ந்து நிருபாவின் சிறுகதைகள் நம்மை ஆச்சரியப்படுத்துவது அவற்றின் விவரணைத் துல்லியத்தின் காரணமாகத்தான். தனது தாய்மண் பற்றிய நினைவுகள் நிருபாவிடம் பசுமையானதாகவே காணப்படுவதை இவை காட்டுகின்றன.

கோபம், நேசம் போடுதல் , விசுக்கோத்து கைமாறுதல் அது இது என்று குழந்தமையின் சுவடுகள் நிருபாவின் தொகுப்பில் நிறையவே உண்டு.சிறுவர்களின் மனோநிலையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டும் - அதன் தர்க்கமின்மையை வெகு இயல்பாகச் சொல்லிச் செல்லும் வரிகள் தொகுப்பின் மிகப் பெரிய பலம்.பல்யத்தின் அறியாமை, பயம் என அனைத்து அம்சங்கலுடனும் அவை பதிவு செய்யப்படுகிண்றன. 'தோட்டக்காட்டிலயிருந்து தான் உன்னை எடுத்தனாங்கள்' என்று பகடியாகப் பெற்றார் சொல்வதைக் கேட்டு தனது சொந்த்த் தாய் தகப்பனைத் தேடி தோட்டக்காட்டிற்குச் செல்லும் ஒரு பிள்ளையின் மனனிலையை பின்வருமாறு நிருபா எழுதுகிறார். "ஒரு பாய். படுக்கத் தேவை தானே. ஒரு முட்டை. எனக்கு முட்டையெண்டா விருப்பம். பொரிச்ச முட்டை.ஒரு பாதித் துவாய்.பவுடர்ப் பேணி. நான் பவுடர்ப் பேணி சேர்க்கிறனான்.சிவப்பு ரோசாப்பூ படம் போட்ட தட்டப் பேணிப் பவுடர்.நல்ல வாசம். ஒண்டுக்குள்ள தான் கொஞ்சப் பவுடர் இருக்கு.காணும்.எடுத்து வைச்சன்"

நிருபாவிடம் இருக்கும் பால்யத்தின் பசுமையான நினைவுகளுக்கு மற்றுமொரு சான்று , அர்த்தமின்மையில் நகரும் சிறுபிள்ளைத்தனமான வார்த்தை விளையாட்டுக்கள்:

'என்ன அன்னம் ? சோத்தன்னம்.
என்ன சோறு ? பழஞ் சோறு.
என்ன பழம்? வாழைப் பழம்.
என்ன வாழை ? திரி வாழை.
-------- -----------? ------------.
. ....... என்றும்
என்ன வெள்ளை? மா வெள்ளை.
என்ன மா? ஸ்ரீமா. என்றும்
கோவங் கோவங் கோவம்.கண்ணக் கட்டிக் கோவம்.செத்தாலும் பாவம்.நடுச் சாமத்தில பாம்பு வந்து கொத்தும்; என்றும் நீளும் வரிகளால் நிரம்பியிருக்கின்றன சிறுகதைகள்.

கதைகள் நிகழும் சிறுவர்களின் உலகில் இருந்து நான் நகர்ந்து மூன்று வருடங்கள் தான் நகர்ந்திருக்கிறது.யதார்த்த உலகு குறித்த பிரக்ஞையும் அப் பிரக்ஞையுடன் என் அக உலகு எதிகொள்ளும் தீராத முரண்களும் பால்யம் பற்றிய என் நினைவுத் தளத்தை ஏறக்குறைய அழித்துவிட்டிருக்கின்றன.தொடர்ச்சியான வாசிப்புக்களின் மூலம் நான் பெற்றது நினைவுத் துண்டிப்புக்களேயன்றி வேறல்ல என்பதை நிருபாவின் பிரதியின் முன் ஒப்புக் கொள்ளவேண்டியிரு;க்கும் நிலையில்: புகலிடச் சூழலின் குரூர யதார்த்தம், கலாச்சார மொழி ரீதியான நெருக்கடிகள் சிக்கல்களுக்கிடையில் நிருபா தன் நினைவுத் தளத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஒரு சிறுகதையாசிரியராக நிருபா கொண்டிருக்கும் பலவீனங்களை கவனப் படுத்த வேண்டியுள்ளது.இத் தொகுப்பின் நோக்கும் அதன் இலக்கும் உன்னதமானவையாகவே இருந்த போதும் இதன் சூழல் சார் முக்கியத்துவம் மிகப் பெரியதாகவே உள்ள போதும் பலவீனங்களைக் குறித்து நிருபா விழிப்புடனிருப்பது மிக அவசியம்.

சிறுகதைத் தொகுப்பாக வாசிப்பதற்கும் அத்தியாயங்கள் இடம் மாறி அடுக்கப் பட்ட ஒரு நாவலாக வாசிப்பதற்கும் இடமளிக்கிறது இத் தொகுதி. Bildungsroman வகையின் உத்திகள் வீச்சுடன் கையாளப்பட்டிருந்தால் மிக முக்கியமான ஒரு நாவல் நமக்குக் கிடைத்திருக்கும்.

இத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் இருமை எதிர்வுகளாலேயே வளர்த்துச் செல்லப் படுகின்றன.நாயகப் பண்பு X எதிர் நாயக வில்லத்தனம் என்கிற எதிர்வு ஒவ்வொரு கதையினுள்ளும் தொழிற்பட்டவாறேயிருக்கிறது.நிருபா தன் நாயக நாயகிகளுக்காக உருக்கமான வாக்குமூலங்களை எழுதுகிறார், பல தருணங்களில் வாசகனிடம் கோள் மூட்டுகிறார். ஆனால் மற்றவர்கள் (அல்லது வில்லன்கள்) குறித்து நிருபா அலட்டி மெனக்கடுவதில்லை. அவர்களுக்கு இருந்திருக்கக் கூடிய நியாயங்கள் நிருபாவின் புனைவு வெளிக்குள் பதிவு செய்யப் படுவதில்லை.எதார்த்தவாத எழுத்து முறையை கதைகூறலுக்கென தெரிவு செய்துள்ள நிருபா அதன் வன்முறை குறித்து விழிப்புடனிருந்திருக்க வேண்டும்.ஷோபா சக்தியின் எதார்த்தவாத சிறுகதைகள் சில மற்றமைகளின் இருப்புக் குறித்த பிரக்ஞையுடன் எழுதப்படுவதை இங்கு நினைவு கூரலாம்.சல்மா கூட தன் எதார்த்த வாத நாவலில் பின்நவீனத்துவ ஜனநாயகப் பண்புகளை கையாண்டிருந்தார்.

ஆனால் நிருபாவின் சிறுகதைகள் கோரி நிற்கும் மாற்றங்கள் தெளிவானவை.அனைத்துமே வன்முறையை எதித்தவாறிருப்பவை.தமது மொழியில் தமது கதையைச் சொல்லியவாறிருப்பவை. பலவீனங்களோடு பார்த்தால்க் கூட நிருபாவின் "....சுணைக்கிது" மிக முக்கியமான பிரதியாக தன்னை முன்நிறுத்திக் கொள்கிறது.

(நன்றி - வீரகேசரி உயிரெழுத்து)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்