/* up Facebook

Dec 18, 2010

தண்டனை மட்டும் தீர்வாகாது


ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும். பரிபூரண சுதந்திரத்துடன் இருப்பவளே இந்துப் பெண்ணாக இருக்க முடியும். தற்கால இந்துப் பெண்ணின் வாழ்க்கையின் வட்டத்தின் மையம் மனைவி. அந்த மையத்தை நிர்ணயிப்பது அவளது கற்பு. இந்துப் பெண்கள் உலகில் மற்ற எந்தப் பெண்களையும் விட ஆன்மீக நாட்டம் அதிகம் உடையவர்கள். மத விடயங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.இந்த அற்புதமான பண்பு நலன்களைப் பாதுகாப்பதுடன், அவர்களது அறிவையும் வளர்த்தோமானால் எதிர்கால இந்துப் பெண் உலகத்துக்கே இலட்சியப் பெண்ணாக விளங்குவாள் என்றார் சுவாமி விவேகானந்தர்.

விவேகானந்தர் கூறுவது போல பெண்களுக்கு முழு உரிமைகளைக் கொடுத்து மதித்து பாதுகாத்துப் போற்றும் நாடுதான். முன்னேற்றத்தின் விளிம்பைத் தொடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், பெண்களுக்குத் தர வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட இன்று மறுக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து பெண்கள் கடத்தப்பட்டு,கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் மிகவும் கொடுமையான செய்தி என்னவென்றால் ஒன்றுமே அறியாத ஐந்து,ஏழு, பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளைக் கடத்தி பலாத்காரம் செய்வதும் கற்பழித்துக் கொலை செய்யப்படுவதும்தான்.

சில நாட்களுக்கு முன்பு வெளியான பத்திரிகைச் செய்தி பல பெற்றோர்களையும் கவலைக்குள்ளாகியுள்ளது. 9 வயதுச் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பல மாநிலங்களில்,பல நாடுகளில் தொடர் கதையாகி வரும் சம்பவம் தான். அதுவும் பள்ளி ஆசிரியர்களே,சிறுமியர்களை நாசமாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் இது தொடர்வது தான் வேதனைக்குரியது.

மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மற்றும் கல்லூரி மாணவியரைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர் பெற்றோர்கள். ஆனால், இப்போதெல்லாம் ஆடிப்பாடி விளையாடும் இளம் சிறுமிகளும் குறிவைக்கப்படுகின்றனர்.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும் சிறுமியர்களுக்கு இப்போதைய அவசியத் தேவை. அவர்களது வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய வாழ்க்கைக் கல்விதான். உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளிவட்டாரத்தில் பழகக்கூடிய ஆண்களின் சிறுசிறு சீண்டல்களில் தீண்டல்களில் இருந்து எப்படித் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்றும் அதையும் மீறி ஒரு ஆணால், பலவந்தமாகக் கடத்தப்பட்டாலோ தவறான முறையில் தன்னை அணுகினாலோ அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளையும் தான் ஒவ்வொரு ஆரம்பப் பள்ளியிலும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

9 வயதுச் சிறுமியை கற்பழித்துக் கொலை செய்த குற்றத்துக்காக உச்சநீதிமன்றம் அந்தக் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கதுதான். ஆனால்,பெற்றோரின் மனவேதனை,குற்றவாளிக்குத் தண்டனையளிப்பதால் மட்டும் தீர்ந்துவிடுமா? தண்டனை தருவது மட்டுமே எந்தவொரு குற்றத்துக்கும் தீர்ப்பாகாது. இதுபோன்ற குற்றங்கள் நாட்டில் இனியும் நடக்காமல் இருக்க என்ன வழி என்பதை ஆராய்ந்தறிந்து அதைத் தடுக்க உடனே நடவடிக்கையெடுக்க வேண்டியது காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் தலையாய கடமை.

பொதுவாக மனிதனின் அடிப்படை உரிமைகள் என்பது உணவு, உறைவிடம் போன்றவற்றோடு சமுதாயத்தால் அவமதிக்கப்படாமல், சித்திரவதை செய்யப்படாமல்,கொலை செய்யப்படாமல்,பலாத்காரம் செய்யப்படாமல் வாழ்வதற்கான உரிமைகள்தான்.

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் 1948 டிசம்பர் 10 ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானம் 217 ஏ பிரிவு மூன்றின் படி, முக்கியமான விதிகளைக் கொண்ட முதல் 30 பிரிவுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எவரையும் அடிமையாகவோ, கொத்தடிமைத்தனத்திலோ வைக்கக்கூடாது. எவரையும் சித்திரவதை செய்தல், கொடுமைப்படுத்துதல், கேவலமாக நடத்துதல் அல்லது தண்டனைக்கு உள்ளாக்குதல் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

பெண்களை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது, அடித்துத் துன்புறுத்துவது, வரதட்சணை என்ற பெயரில் எரித்துக் கொலைசெய்வது, வீட்டு வேலை என்ற பெயரில் அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்வது, ஆடு மாடுகளைப் போல வேற்று நாடுகளுக்கு விற்பது, விபசாரத்தில் ஈடுபடுத்துவது போன்ற வன்கொடுமைகள் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதில் சின்னஞ்சிறு மொட்டுகள், மலரும் முன்பே கருகிச் சாம்பலாவதுதான் மன்னிக்க முடியாத குற்றம்.

பெண்களுக்குப் பாதுகாப்புத் தராத, பெண்களை மதிக்காத எந்த ஒருநாடும் செழிப்புடன் திகழ்ந்ததாக வரலாறு கிடையாது. நாளைய உலகம் இலட்சியப் பெண்கள் நிறைந்த உலகமாக விளங்க வேண்டும் என்றால், பெண்கள்குறிப்பாக, சிறுமியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒருபுறும் இருக்க. இந்தப் பிரச்சினை சட்டத்தால் மட்டுமே முற்றிலுமாகத் தடுக்கப்படுவது இயலாத ஒன்று. மேலை நாடுகளிலும் இரண்டாம் உலகப்போர் முடிந்த ஆரம்ப காலங்களில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் பரவலாகக் காணப்பட்டது. ஆனால், சமுதாயம் தன்னைத்தானே உணர்ந்துகொண்டு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டது.

இந்தியாவில், பெண்களின் சமஉரிமைக்காகப் போன நூற்றாண்டின் ஆரம்பம் முதலே விவேகானந்தர், பாரதியார், மகாத்மா காந்தி என்று பலர் குரல் கொடுக்கத் தொடங்கியபோதும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியும் இங்கே இன்றும் அந்தச் சமுதாய மாற்றம் ஏற்படாததுதான் வியப்பாக இருக்கிறது.

பாலியல் பலாத்காரம் என்பது ஒருவித மனநோய் என்றோ, வன்முறையின்பாற்பட்டது என்றோ புறந்தள்ளிவிட முடியாது. இதை ஒரு சமூகப் பிரச்சினையாகக் கருதி அணுகுவது மட்டுமே நிரந்தரத் தீர்வாகுமே தவிர, சந்திக்கு வரும் சம்பவங்கள் தண்டனைக்கு உள்படுத்தப்படுவது மட்டுமே தீர்காவாது!

நன்றி - தினமணி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்