/* up Facebook

Dec 12, 2010

உள்ளங்கால் புல் அழுகை’ 'ஜீவநதி' சிறுகதை எழுப்பும் சில சிந்தனைகள் - எம்.கே.முருகானந்தன்


அண்மையில் ஜீவநதி ஆண்டு மலர் படிக்கக் கிடைத்தது. அருமையான பல கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என நிரவிக் கிடந்தது.

அதில் ஸ்ரீரஞ்சனி என்ற ஒரு எழுத்தாளரின் படைப்பான சிறுகதையைப் பற்றி சில கருத்துக்களைக் கூறலாம் என நினைக்கிறேன். மிக வித்தியாசமான சூழலில் அமைந்த கதைதான் ‘உள்ளங்கால் புல் அழுகை’.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் எமக்கு அந்நியமான ஒரு பிரச்சனை பற்றிப் பேசுகிறது. களம் புதிது, காரியம்; புதிது. ஆனால் அதிலுள்ள அடிப்படைப் பிரச்சனை அனைவருக்கும் பொதுவானது.

ஓரு பெண் குழந்தையின் பார்வையாக சிறுகதை சொல்லப்படுகிறது. சொல்லப்படும் விதத்தைப் பொறுத்த வரையில், நிகழ் காலத்தில் ஆரம்பித்து, கடந்த காலத்தில் நனைவது எமக்கு ஒன்றும் புதினமானது அல்ல. ஆனால் எதிர்காலத்தில் கால் பதித்து நிறைவுறுவது சற்று தாக்கத்திற்குரிய மாற்றமாகத் தென்படுகிறது.

ஒரு குழந்தையின் பண்புகளை, நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் சமூகத்தின் பங்கு எவ்வளவு ஆழமானது என்பதை முகத்தில் ஓங்கி அறைவது போலச் சொல்லி முடிகிறது. ஆனால் ஆசிரியர் கூற்றாக அல்ல. எமது சிந்தனையை விரிவிப்பதன் மூலம் நாமாக புரிந்து கொள்ள வைப்பதே அதன் சிறப்பு.

குற்றம் செய்த தகப்பனைத் தண்டித்து, நோயுள்ள தாயை பிள்ளைகளிடமிருந்து பிரித்து மருத்துவம் செய்யப்படும்போது, இவை எவற்றிலும் சம்பந்தப்படாத குழந்தை மனிதாபமின்றித் தண்டிப்புக்கு ஆளாவதையே இச் சிறுகதை பேசுகிறது.

புதிர் போல ஆர்ம்பிக்கிறது கதை. “மை நேம் இஸ் ரோசி.வட்ஸ் யுவர் நேம்” குழந்தை பேசாமல் நிற்கிறது.

“சோ யு ஆர் நொட் ரெடி ரு ரோக் ரு மீ”

நன்றாக ஆங்கிலம் பேசக் கூடிய தமிழ்க் குழந்தை இது. இவளைப் பராமரிப்பதற்கான இடத்திலுள்ள பெண் அவ்வாறு பேசுகிறாள். அவளைப் பாரத்ததும் தனது ஸ்கூலில் ரீச்சர் வராத நாட்களில் வரும் சப்பிளை ரீச்சர்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஏனெனில் இவளது வழமையான ரீச்சரைப்போல அல்லது அம்மா போல பிள்ளையில் அன்பும் கரிசனை உள்ளவர்களாக இல்லை.

சம்பளம் வாங்கிப் பணி புரியும் பெண்தான் ரோசி. அவள் அம்மா போல இருக்க முடியாது. தாயைப் பிரிந்து தனியே புது இடத்திற்கு வந்திருக்கும் குழந்தையின் சோகத்தை, ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாத வெறும் ஊழியர் அவர். சாப்பிட மாட்டேன் என மறுக்கும் குழந்தைக்கு ஆறுதல் வார்த்தை கூறத் தெரியாதவள்.
“அபர்ணா வில் டேக் கெயர் ஒவ் யூ” எனச் சொல்லித் குழந்தையின் பாலான தன் கடமையை முடித்துக் கொண்டு பைல் லுக்குள் மூழ்கமட்டும் தெரிந்த கடமையுணர்ச்சியுள்ள பெண் அவள்.

ஏன் அவள் பெற்றோரைப் பிரிந்தாள் என்பது நினைவோட்டமாக வருகிறது. வழமையாக தாய் தகப்பனுக்கு இடையேயான முறுகல் அன்று சற்று தீவிரமாகிவிட்டது. தகப்பன் தாயின் தலை முடியைப் பிடித்து அடிக்க அவள் குளற, பக்கத்து வீட்டுக்காரன் பொலீசுக்கு போன் பண்ண பொலீஸ் அவனைப் பிடித்துக் கொண்டு போய்விட்டது. தாயையும் மனநிலை பிறந்தவள் என அழைத்துப் போய்விடுகிறது.

சிறுகுழந்தையான இவளது தங்கையுடன் இவளையும் வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாது என்பதால்தான் இவள் காப்பகத்திற்கு வர வேண்டியதாயிற்று. தாய் இல்லை. தந்தையில்லை. கூட விளையாடும் தங்கையும் இல்லை. கடல் மீனைக் கரையில் தூக்கிப் போட்டது போலாயிற்று அக் குழந்தையின் நிலை.

எவ்வளவு சமூக அக்கறை அற்ற மனிதர்களாக மாறிவிட்டது உலகம். தனது அமைதியான வாழ்வில் அடுத்த வீட்டுச் சத்தம் கூட குறுக்கிடக் கூடாது என நினைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. பாரம்பரிய சமூகமாக இருந்தால் அடுத்த வீட்டுப் பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைத்திருக்கும் அல்லது பிரச்சனை வரும்போது ஒத்தாசையாக நின்று உதவியிருக்கும். ஆனால் இவர்களுக்கு பொலீசைக் கூப்பிட்டு பிரச்சனையைப் பெருப்பிக்கவே தெரிகிறது.

குடும்பம் சிதைகிறது. குழந்தைகள் நிர்க்கதியாகின்றனர். ஆனால் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் சட்டப்படியே நடக்கின்றனர்.

ஆனால் குழந்தையின் மனநிலையைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. குழந்தையின் ஏக்கம் தனது அம்மாவுடன், அவளது அன்பில் தோய்ந்து, அரவணைப்பில் கட்டுண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தனது முன்னைய வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்பதே. அதற்கு என்ன செய்ய வேணடும் எனச் சிந்திக்கிறது.

அந்தப் பிள்ளை எடுக்கும் முடிவுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. வன்முறையின் மூலமே தனது தேவையைப் பூர்த்தி செய்ய முடியும், அதன் மூலமே பொற்காலமான பழைய வாழ்வு கிடைக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

“நான் பிரளி பண்ண வேண்டும், சாமான்களைப் போட்டு உடைக்க வேண்டும். அப்பொழுதுதான் ரோசியால் என்னைச் சமாளிக்க முடியாது போய்விடும். என்னை அம்மாவிடம் கொண்டு போய் விட்டுவிடுவாள்” என அந்தப் பிஞ்சு மனம் சிந்திக்கிறது.

வன்முறை தவிர்த்த சரியான வழியில் குழந்தைகளைச் சிந்திக்க வைக்க எமது சமூகம் சரியான வழி காட்டுமா?

அல்லது பழைய குருடி கதவைத் திறவடி கதைதானா?

நல்ல சிறுகதையைத் தந்த எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனிக்கும் ஜீவநதி சஞ்சிகைக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்