/* up Facebook

Dec 3, 2010

யூமா வாசுகியின் ரத்த உறவு: ஒரு வாசிப்பு - மிருணா      யூமா வாசுகியின் ரத்த உறவு  புத்தகத்தைப் பிரித்தால் செவ்வக உள்ளட்டையில்  ஒரு வாடிய சூரிய காந்தி கறுப்புப் பின்புலத்தில் இருக்கும்.. படித்து முடித்து கடைசிப் பக்கத்தைத் திருப்பினால் முழு உள்ளட்டையில், உள்ளங்கையை விடப் பெரிதாக கண்களுக்கு நெருங்கிய கோணத்தில், மஞ்சளாக  மலர்ச்சியாக சூரிய காந்தி பூத்திருக்கும். கதையும் அப்படித்தான். புதினத்தை வாசிக்கும் யாரின் மனமும் அப்படித்தான்  -  ஆரம்பத்தில் வாடியும் பின் மகிழ்ச்சியின் வெளியில் விகாசிக்கவும் செய்யும்.
     குடும்ப உறவுகளின் குரூரத்தையும், அதற்கு சற்றும் குறையாத மனித நேசத்தையும் பேசுபொருளாக்குகிறது ரத்த உறவு.  மங்களம்  பாட்டிக்கு கிட்டு, தினகரன், தனபால்  என்ற மூன்று மகன்கள். தினகரன் - ரமணிக்கு நான்கு பிள்ளைகள் - வாசுகி, ராமதுரை, மாதவன், மாரி. குடியால் தன்னிலை இழக்கும் தினகரன் தன் அத்தனை தோல்விகளுக்கும் வடிகாலாக மனைவியையும், பிள்ளைகளையும்  வன்முறைக்கு உட்படுத்துகிறார். பாட்டி, தினகரன், தனபால், அவரது மனைவி நாகு ஆகியோர் கொடூரத்தை வடிவப்படுத்த ரமணியும், வாசுகியும் கருணையையும், நேசத்தையும் பேசும் வார்ப்புகள் ஆகிறார்கள். ரத்தம் வன்முறையையும், உறவு அந்த வன்முறையின் ஊடாக மலரும் வாழ்க்கையையும் சுட்டும் குறிப்பான்கள்  ஆகின்றன. இதன் ஊடாக பெரியவர்களின் உலகில் உள்ள முரண்கள், முடிச்சுகள், மிருக வெளிப்பாடுகள் இவற்றை  எதிர்கொள்ளும்  குழந்தைகளின்  அக  உலகம் , அதன் சோகம், பயம், பாதுகாப்பின்மை, ஏக்கம், தப்பித்தோடுதல், அதோடு கிடைக்கும் மெல்லிய பற்றுக்கோடுகளைப் பிடித்தபடி செல்லும் அவர்களின் வாழ்வியல் நம்பிக்கை என விரிகிறது கதையுலகு.
     கட்டில், உலக்கை, மிதிவண்டி, மான்கொம்பு - என நீளும்  தினகரனின் வன்முறை, அவரது தாய் மங்களத்தில் இருந்து துவக்கம் பெறுகின்றன. அவளது கணவரை ரமணியின் மூத்த அண்ணன் சந்தர்ப்பவசத்தால் தூணில் கட்டி வைத்ததின் காயம் அவளுள் கனன்று கொண்டே இருக்கிறது.  அதனால், தினகரனை, மனைவி, பிள்ளைகளுக்கு எதிராகத் திருப்பி விட்டுக் கொண்டே இருக்கிறாள். அவளை 'சர்ப்பம்' ஆக உருவகப்படுத்துகிறார் கதைசொல்லி. அந்த சர்ப்பத்திற்கு நிறைய வாய்கள். 'எல்லா வாய்க்கும் தாகம்.' சிறுவன் மாரியின் மன உலக வார்த்தைகளில் ''அம்மாவின் ரத்தம் நிறைநாழியில் நிரம்புகிறது. ரத்தத்தில் திளைத்த பாம்பு குபீரென்று எகிறுகிறது. வீடு கொள்ளாமல்  அமர்கிறது சுருள் சுருளாக''.
     தினகரன் பிள்ளைகளிடம் காட்ட வேண்டிய வன்முறையை பாட்டி நுட்பமாக வெளிப்படுத்துகிறாள்: ''இப்புடியா வளந்திய நீங்களுவல்லாம், ஒனக்குந்தான் ஒன்றரை அகப்பை கொழுப்பு தண்டோரா போட்டிருச்சு! பத்தாப்பு பரிட்சையில தோத்துபுட்டு அழுது புளுதுகிட்டு வந்து நின்ன. பிஞ்சு விரலாச்சேனு கொஞ்சம்னாலும் யோசனை பண்ணாரா ஒங்கப்பா? அடுப்பு மோடயில கைய வைக்கச் சொல்லி ஊதாங்குழாயால ஓ வெரல முறிக்கலையா? கொடக்கம்பால அடிச்சி அடிச்சி விரட்டி தொரத்தலையா?'' அன்று வாங்கிய அடியின் ஒடுக்கப்பட்ட நினைவு இன்று மேலெழுப்பப்படுகிறது காரணத்தோடு. அதன் வீச்சு, மாமரத்தில் இருந்து உதிர்ந்த பழத்தை 'திருடிய' குற்றத்திற்காக மகனை சிவப்பெறும்புகள்  கடிக்க மரத்தில் கட்டி வைப்பது முதல் மனைவியின் முதுகில் கட்டிலை எறிவது வரை தொடர்கிறது. பாட்டியின் திட்டம் பலிக்கிறது:''கொல்லைப் புறத்திலே கறுப்புப் புகை சூழ உட்கார்ந்திருந்த பாட்டியின் முகத்தில்  மந்தகாசப் புன்னகை. மனதில் ஒதுக்கி அசை போட்டு வந்த வெறி தாத்தா இறந்து பல வருடங்களான பின் இன்றுதான் சற்று தணிந்தது."
     உளவியல்  காரணங்களோடு பாத்திரங்கள் படைக்கப் பட்டிருப்பதால்  நூலில் ஒற்றை பரிமாணப் பாத்திரங்கள் இல்லை. தனபாலின் மனைவி நாகு சித்தி, தினகரனைத் தன் கொடூரத்தின் கருவியாக்குகிறாள். தினகரன் குடிப்பதற்காக அவளிடம் பணத்தை வேண்டி பெற வேண்டிய நிலையில் உள்ளார். அவர்களிடையே திருமணம் மீறிய உறவு நிலையும்  உள்ளது. இந்த அவளது வன்முறையின் துவக்கப்புள்ளி, அவள் கணவனின் பிசகிய நடத்தையில் துலக்கம் பெறுகிறது. பாட்டியின் கணவரும் அவளது தங்கையிடம் தொடர்பு வைத்துள்ளார். இந்த காயங்கள் இருவரையும் ஆத்திரத்தோடு பழி வாங்கத் துடிக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. பொருளாதார வலுவோ, சமுதாயப் பழியை ஏற்கும்  துணிவோ இல்லாத நிலையில் பெண்களின் துயரம், கணவன் மீதான நியாயமான கோபத்தை வெளிக்காட்ட இயலாத அவலம், மற்றவர்கள் மேல், குறிப்பாக யாரால் பதிலுக்குத் தாக்க முடியாதோ அவர்கள் மேல் ஆத்திரமாக மடைமாற்றம் பெறுகிறது. மாதவனின் கையை ஒடித்து அடுப்பில் வைத்தால் என்ன என்று கேட்டுவிட்டு இயல்பாகத் தன் குழந்தையை 'யாரடிச்சா சொல்லியழு ... ஏஞ் சந்தனமே' எனக் கொஞ்ச நாகுவால் முடிகிறது.
   இந்த புத்தகத்தின் கவிதைகள் குழந்தைகள்தான். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய இயல்பில் மலர்கிறார்கள். அக்காவான சிறுபெண் வாசுகி,  மாதவனை சித்திரவதைக்கு உள்ளாகும் அப்பாவை தடுக்க இயலாமல், என்ன செய்வதென்று தெரியாமல்  தொட்டியில் நீர் வழிய, வழிய மீண்டும் மீண்டும் கிணற்றில் இருந்து நீர் எடுத்து ஊற்றுகிறாள். இங்கு தண்ணீர் அவள் கண்ணீரின் குறியீடாகிறது, அதன் ஈரம் தம்பியின் மீதான அவள் பரிவின் உள்ளீடாகிறது. குட்டித் தம்பியும் அண்ணனைத் தேற்ற முயல்கிறான் -
          கட்டுக்களிலிருந்து  விடுபட்டு அண்ணன் வந்தால் அவனிடமிருந்த எம்ஜியார், சிவாஜி படம் அத்தனையும் அண்ணனுக்குக் கொடுக்கச் சித்தமாயிருந்தான்... அவனுக்குக் கிடைக்கிற காசுகளை எல்லாம் அண்ணனிடம் தந்து விடுவான். அண்ணன் எவ்வளவுதான் குட்டினாலும் அவனுக்கு வலிக்கவே வலிக்காது... தம்பிமெதுவாக அண்ணனின் காலை வருடி அழைத்தான் அண்ணே...
இது அண்ணனின் வலிக்குத் தம்பியின் பிள்ளை  மனப் பரிகாரம்.
     வாசுகியின்  மனமோ  அன்பால் ஆனது. அவள் அம்மா விரட்டப்படுகிறாள். பிள்ளைகள் அப்பாவால் அடித்து நொறுக்கப் படுகிறார்கள்.அத்தனை சித்திரவதைக்குப் பின்னும் அவளுக்கு அப்பாவின் மேல் நம்பிக்கை இருக்கிறது.அதனால் தந்தையிடம் பக்குவமாகப் பேச முயல்கிறாள்: 
         நா சொல்றேன்னு கோச்சுக்காதிங்கப்பா... ராத்திரி நீங்க தம்பிங்களப் போட்டு அப்பிடி அடிச்சிருக்கக் கூடாதுப்பா... ரொம்பச் சின்ன புள்ளிங்கப்பா ரெண்டும். செத்துகித்துப்போயிருந்துச்சுன்னா என்னப்பா செய்யுறது. எனக்குக் கூட இடுப்பில பெருசா அடிபட்டிருக்கும் போலருக்குப்பா. வீங்கியிருக்கு, நடந்தா உயிர் போறாப்ல வலிக்குதுப்பா... நீங்க எதையுமே கண்டுக்க மாட்டேங்கறீங்கப்பா. எங்களப்பத்தி நெனச்சிகூடப் பாக்கமாட்டேங்கறீங்க. தம்பிங்க கிழிஞ்ச சட்டைப் போட்டுக்கிட்டு பள்ளிக்கூடம் போகுதுங்கப்பா... எனக்கு முடியலப்பா, பயமா இருக்குப்பா, காப்பாத்துங்கப்பா, இவ்வளவும் பேசறேன்னு தப்பா நெனச்சுக்காதிங்கப்பா  அம்மாட்ட கொண்டுபோய்  விட்டுடுங்கப்பா, நாங்க  நல்லபடியா  இருப்பம்பா, மறுபடியும்  குடிச்சுட்டு  வந்து  அடிக்காதிங்கப்பா, எங்களுக்கு  வலி  தாங்கமுடில.   
பின்னும் தினகரன் கொடூரமாக அடிக்கிறார்.  அவள் கண்ணாடித் துண்டுகளை அரைத்து குடிக்கிறாள். அம்மாவின் முயற்சியால் உயிர் பிழைக்கிறாள். அவளது ஆன்ம பலம் அவளை துடிப்போடு இயக்குகிறது. தந்தை காசு கொடுக்காத சூழலில் அவள் அப்பளம் விற்றாள், சாணி தட்டி விற்றாள், பூத் தொடுத்தாள். அப்பா இறந்த பின் அழவும் செய்தாள்.  
      இன்னொரு பிள்ளையான மாதவனின் மன உலகம் விளையாட்டுக்களில் தன் துயரை  மறக்கிறது. பின் ஊரை விட்டு ஓடுவதன் மூலம் தப்பிக்க முயல்கிறது. கதையில் ஒரு முறை நாகு சித்தி அவனை புளித்து நாறும் பழைய சாதத்தை உண்ணுமாறு அதட்டுகிறாள். அவளை மீற முடியாமல் காடி நுரைக்கும் அந்த சோற்றை அவன் இனிப்பு மிட்டாயுடன் உண்ணத் தலைபடுகிறான்.ஒருவகையில் இது அவன் வாழ்வின் குறியீடாகிறது. உறவுகளின் கொடுமையால் வடியும் ரத்தத்தின் புளிப்பினை, விளையாட்டு இனிப்பில் கரைத்து சமன் காண முயல்கிறது அவன் வாழ்வியல் திறன்.
      இறுதியாகத் தம்பி என்றழைக்கப்படும் மாரி கதையின் எல்லா பாத்திரங்களையும் விட புத்துயிர்ப்போடு சித்தரிக்கப் பட்டுள்ளான். அவனது பிரத்யேக குழந்தைப் பருவ உலகமே புதினம் காட்டும் மனித கொடூரத்தின் பாலைக்கு மாற்றாக உள்ளது. பொன் வண்டுகளும், சிகரட் அட்டைகளும், அக்காவுக்காக சேர்த்து வைக்கும் மகிழம் பூக்களும், கொக்கு நகத்தில் போடும் அடையாளத்திற்காய் ஏக்கமும் கொண்டது அவனது எளிய மனம். வீட்டின் வன்முறை அவனது பிஞ்சு மனதை பயமுறுத்துகையில் அவன் தும்பை காட்டிலோ, வீட்டின் பெரிய அலமாரிக்கும், சுவருக்கும் இடையிலோ தஞ்சம் புகுகிறான். அவனது ஆறுதல் அக்காவின் புன்னகை மட்டுமே.
     அப்பா குறித்த தம்பியின்  பயங்கள் நனவிலி மனதிற்கே உரிய நிழல்-ஒளி அழகோடு, வசீகரமான கவிமொழியில், ஓவியரும், கவிஞருமான யூமா.வாசுகியால் உருவகிக்கப் பட்டுள்ளது. அப்பா அவன் நினைவுகளில் அவனை விழுங்கும் கரிய எலியாகவோ, குரலாகவோ, பூச்சியாகவோ பயம் கொள்ள வைக்கிறார். கனவு, நனவில் இன்னும் பயங்கரமாக உள்ளது.தொலைத்த 25 காசைத் திருப்பித் தராவிட்டால் தொலைத்து விடப் போவதாய் மிரட்டும் அப்பாவுக்குப் பயந்து காணாமல் போகிறான். அக்காதான் வீட்டிற்கு அழைத்து வருகிறாள். கதவை முன்னெச்சரிக்கையாய் தாளிடுகிறாள். பின்னும் அவன் அப்பா, அவனைக் கொளுத்தப் போவதாய் அலறுகிறார். நடுங்கும் அவன் பிள்ளை உடல் அக்காவிடம் ஐக்கியம் ஆகிறது.
      தம்பிக்கு  இயற்கை மீதான ஈடுபாடு உள்ளது. பிற உயிர்களை நேசிக்கும் அன்பு மனமும் உள்ளது. அவனைப் பார்த்துப் பயந்து பறக்கும் குருவிகள் அவனை வருந்தி அழச் செய்கின்றன. அவை உண்பதற்காக, உடல் அசையாமல், கண் மூடி அமர்கிறான் கையில் சோற்றுத் தட்டை ஏந்தியபடி. அப்பா அடித்ததால் ஏற்பட்ட புண்ணைக் கூட மேல் தோலைப் பிய்த்து பிற சிறுவர்களுக்கு ''என் ரத்தம் காஞ்சிடிச்சு...காக்கா ரத்தம் காயல'' என வேடிக்கை காட்ட முயலும் அதிசய சிறுவன் அவன்.
     தினகரன் குடியால் இறந்து விடுகிறார். எல்லோரும் அழுகிறார்கள். அம்மாவும், அக்காவும், தம்பியை அப்பாவுக்காக அழச் சொல்கிறார்கள். அப்போது அவனது வெளிப்பாடு,  இந்த புதினத்தின் உச்ச வெளிப்பாடு. அவர்கள் சொன்னதை கேட்ட அவன்:
          கொல்லைப்புறத்துக்கு ஓடினான். நீட்டி முழக்கி வகை வகையான தன்மையில் பீப்பி ஊதி கிணற்றையும், மரங்களையும் சுற்றி வந்தான். ஒப்பாரி இரைச்சலுக்கு இணையாக வாசல்படியில் அமர்ந்து ஊதினான். உற்சாகத்துடன் மூச்சை இழுத்துப் பிடித்து ஊதினான்.
மற்றவர்கள் போல அவன் வளர்ந்தவன் அல்ல. இடையறாது கொடுமைப்படுத்திய அப்பாவின் மரணம் அவனுக்கு ஒரு விடுதலையாகத்தான் உள்ளது. அன்பில் இருந்துதான் அன்பு பிறக்கும். வன்முறையில் இருந்து மீண்ட சிறுவனின் இசை  இதையே      குறியீடாகச் சொல்கிறது.
   ரத்த உறவு    புதினம் கலைப்படுத்தும் மனித உறவுகள் புதிர் நிறைந்த மனித இயல்பின் குரூரத்தையும், குழந்தைகளின் பெருங்கருணையையும் பேசுகின்றன. குழந்தைகளின் விளையாட்டும், இயற்கை மீதான ஈடுபாடும், அன்புள்ளமும் பெரியவர்களுக்குப் புரிவதே இல்லை. அவர்கள் போல பெரியவர்களாலும் தங்களை தங்கள் வலிகளில் இருந்து இயல்பாக மீட்டெடுக்க முடியும்.  இது ஒரு தவிர்க்க இயலாத மறைபிரதியாக கதையில் ஊடு பாய்கிறது. அதோடு குடும்பம் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, சமயங்களில் ஆண்களுக்கு இழைக்கும் வன்முறை மிக அழுத்தமாகவே பதிவு செய்யப் பட்டுள்ளது. குடி ஒரு கலாச்சார அங்கமாக கொண்டாடாடப் படுகிற அதே வேளையில், வரம்பற்ற குடியை வன்முறைக்கான விஷயமாக பார்க்கத் தவறும் இந்த பின்நவீன இலக்கிய களத்தில் யூமா வாசுகியின் குரல் தனித்தும், யதார்த்தத்தோடும், சிறப்பான கவிமொழியோடும் ரத்த உறவில் ஒலிக்கிறது.

நன்றி  www.cycle2live.blogspot.com

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்