/* up Facebook

Nov 28, 2010

சு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல் - மிருணாசு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம் 14 சிறுகதைகளின் தொகுப்பு. தொகுப்பின் தலைப்பான ஒரு துளி துயரம் ஒரு உள்ளடங்கிய முரண்தொனி அமையப் பெற்றது. ஆங்கிலத்தில் அதை understatement எனலாம். ஏனெனில் இந்த 14 கதைகளின் பேசுபொருளும் துயரம்தான், துயரின் வேறுபட்ட வடிவங்கள்தான். ஒரு உறிஞ்சு தாளில் இடப்பட்ட மைத்துளி போல கதைகளில் துயர் விரிந்துகொண்டே போய் இறுதியில் கடலாக மாறுகிறது. வானம் பொய்த்த விவசாயிகளின், குழந்தைகளின், கைவிடப்பட்ட முதிய பெண்களின், குடும்ப அமைப்பில் நசுக்கப்படும் பெண்களின், வேலை இல்லா ஆண்களின், சாதி வேறுபாடுகளின், வன்மத்தின், வறுமையின் துயரம் அது.

கதைகளின் பேசுகுரல் பொதுவாக பெண்ணியக் குரலாக, குழந்தைகளின் குரலாக, வஞ்சிக்கப்பட்ட ஒருவரின் குரலாக உள்ளது. பெண்ணியக் குரல் தெளிவாக ஒலிக்கும் கதையாக கிடந்த கோலம் கதை இருக்கிறது. சமைப்பது, துவைப்பது, தண்ணீர் எடுப்பது, கடைக்குப் போய் வருவது, வீடு பெருக்குவது, விருந்து உபசரிப்பு என பெண் உழைத்துக்கொண்டே இருக்க ஆண் பள்ளி கொண்ட கோலத்தில் இருந்துவிட்டு இரவு மட்டும் பெண்ணை அணுகுவது குறித்தது. கதையின் அழுத்தமான கட்டம் பெண் 'இதுக்கு மட்டும்தான் நீயா' என சிரிப்பது குறித்தது. அது சிரிப்பல்ல வலி என்பது அவனுக்குப் புரியாமல் போவது அன்றாட நடைமுறையின் ஆழ்ந்த படப்பிடிப்பு. கூரு கெட்டவன் கதையிலும் பெண் ஏமாற்றப் படுகிறாள். குடும்ப மரியாதை கருதி அமைதி கொள்கிறாள்.

முதிய பெண்கள் தங்கள் மகன்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். கடைசிக் காலத்தில் உணவும், கவனிப்பும், மரியாதையும் அற்று போகிறார்கள். தீராக்குறை கதையின் மூன்று சகோதரிகளுக்கும் வயதான காலத்தில் பிள்ளைகளால் சுகமில்லை. தள்ளாத வயதில் கூலி வேலை, சுடு சொற்கள், ஒரு வாய் கஞ்சிக்கு மகனிடம் மற்றவர்கள் வழியாக சிபாரிசு தேடல் என அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. இதே போன்ற சூழலில் உள்ள தாய்மை கதையின் அம்மாவால் இறுதி வரையிலும் பிள்ளைகளைத் தண்டிக்க முடியவில்லை. வெறுத்துபோய் காசு வெட்டி போட நினைத்துக் கோவிலுக்குப் போகும் அவள் இறுதியில் அவர்களின் நல வாழ்விற்காக சாமி கும்பிட்டுவிட்டு வருகிறாள். தாய்மை குணம் என்பது அரவணைப்பாக, வளர்ச்சிக்கானதாக இருக்கிறது. உளப்பகுப்பாய்வு அப்படி உள்ள ஒருவருக்கு 'motheror' எனப் பெயரளிக்கிறது. அவர்கள் உடல்பூர்வமாக பெண்ணாக இருக்க வேண்டியதில்லை. கூரு கெட்டவன் கதையில் வரும் உடையாளை போல மனிதர்களை மன்னிக்கத் தெரிந்தவராக, உதவுபவராக இருந்தால் போதும்.
குழந்தைகள் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் கதைகளில். புற்று கதையின் சிறுமியின் நாய் வளர்க்கும் ஆசையும், அப்படி வளர்க்கும் நாய்க்குட்டி பெண் குட்டி என்பதால் காட்டில் எட்டி உதைக்கப்படும் நிலை கண்டு தானும் ஒரு பெண் தனக்குமந்த நிலை ஏற்பட்டுவிடுமோ எனக் கலங்குவதும் அடர்த்தியான வலியோடு பதிவு செய்யப்படுள்ளது. அம்மா சாகப் போகிறேன் எனும்போது 'நானும் வர்ரேன், என எப்போதும் போல் சொல்லும் குழந்தையும் கதையில் கவிதையாக வெளிப்படுகிறது.. நிரூபணம் கதையின் சிறுவனோ கைவிடப்பட்ட முதியவருக்கான கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையின் நிரூபணமாக உள்ளான். கதைகளில் தென்படும் அன்பு வறட்சிக்கான மாற்றாக குழந்தைகளே உள்ளனர்.

குதிரை மசால் தாத்தா கதையின் முதியவர் அப்படி குழந்தை மனம் உள்ள தாத்தாதான். அதனால்தான் 80 வயதிலும் உழைக்க முடிகிறது. ஊர்ப் பிள்ளைகளோடு ஒன்ற முடிகிறது. பாட்டி இறந்தால் தானும் காணாமல் போவேன் என பூடகமாகச் சொல்ல முடிகிறது. இதே பிணைப்பும், அன்பும் மெய்ப்பொருள் காண்பது அறிவு கதையின் அப்பாவுக்கு மகன் மேல். எப்படியாவது பிள்ளையை படிக்க வைக்க நினைக்கும் அப்பாவின் அன்பையும், வறுமையையும் புரிந்து கொண்டு மெய்ப்பொருள் அறியும் மகன். ஆனால் பொருள் இல்லாததை வெறுத்து ஒதுக்கும் மனைவி வாழும் கலை கதையில். கழைக் கூத்தாடி சிறுமியின் வாழ்வு பணம் கொடுத்துப் போகும் வாழும் கலை பயிற்சிகளை விடப் பாடம் புகட்ட கடின வேலைக்குத் திரும்பும் கணவனின் வலி பேசுகிற கதை.

பெண்ணை உடலாகப் பார்க்கும் பொதுப் புத்தியின் ஒருவரான நாயகன், அப்பாவை சாகக் கொடுத்துவிட்டு அவர் உடலை வீட்டுக்குக் கொண்டுவர உதவி கேட்கும் பெண்ணை, அவள் வெண்ணிலை நிலையில் ஆதரவற்று உள்ளதைப் புரிந்து வெட்கி மாறும் இயல்புக் கதை வெண்ணிலை. எனினும் தொகுப்பின் தலைப்புக் கதையான ஒரு துளி துயரம் காட்டுகின்ற உலகம் மாறுபட்டது. கொந்தளிப்பானது. திருமண மொய்ப் பணத்தை பதிவு செய்யும் சாக்கில் கொடுத்த கடனை எடுத்துக் கொண்டுவிட்ட நண்பனின் நம்பிக்கையின்மையை, துரோகத்தை எண்ணி எண்ணி மாய்ந்து போகும் மனிதன் ஒருவன் அடுத்த நாளே தற்கொலை செய்ய, அவனது மனைவி அவன் மாற்றுத் திறனாளியான தன் மேல் அன்பு காட்டிய அவனின் கவுரவத்திற்காக அந்த நண்பனுக்கு மிச்சமுள்ள கடன் தொகையை கொடுக்கும், அவன் வெட்கி வருந்துவான் என நினைத்து ஏமாறும், வலி கடலென அவளுள் அலைஎழுப்பும் கதை. மனித மனதின் சின்னத்தனமும், பெருந்தன்மையும் இணைமுரணாக வெளிப்படும் கதை.

பூமிக்குள் ஓடுகிறது நதியில் இரண்டு சாதியை சேர்ந்த அன்பான மனிதர்கள் மோசமான கலவரச் சூழலிலும் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் நேயம் பற்றியது. இந்த கதைகள் அனைத்துக்கும் மாறாக அக்குபாரிக் கிழவியின் அட்டகாசங்கள் கதை உள்ளது. அது உடல் குறித்த நனவுணர்வு அற்ற நிலையிலும் முதியவள் ஒருவள் சொத்து விஷயத்தில் மகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காக அவளுக்கே உரிய ரகசியத்தோடு, வன்மத்தோடு, மகனை, மருமகளை படுத்தும் பாட்டை, பெண்ணுக்கு அவர்களுக்குத் தெரியாமல் தோடும், பணமும் கொடுப்பதை, வித்தியாசமாகப் பதிவு செய்கிறது. குதிரை டாலருக்காக ஏங்கும் மகன் வழிப் பேரனை அவள் ஏமாற்றுகிறாள். அது அவளின் ரகசிய வன்ம வெற்றியாக, ஆணின் தோல்வியாக குறியீடாக உள்ளது.

கதைகளின் மொழி நடை மண் வாசனையோடு, இயல்பாக உள்ளது. இறுக்கமாகவும் உள்ளது. தீராக்குறை கதையில் மட்டும் dramatic monologue எனும் ஒருவர் பேச்சில் சூழல் சொல்லப்படும், எதிராளியின் பேச்சு ஊகிக்கப்படும் உத்தி கையாளப் பட்டுள்ளது. கதையின் மனிதர்கள் சூழலின் வெம்மையிலிருந்து தப்பிக்க பெரும்பாலும் நனவுரு கற்பனையில் (fantasy) மூழ்குகிறார்கள். இது அடிக்கடி உபயோகப்படுத்தப் படுவது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கிடந்த கோலம் கதை கந்தர்வனின் இரண்டாம் ஷிப்ட் கதையை நினைவுறுத்துகிறது தவிர்க்க இயலாமல். கூரு கெட்டவன் கதைப்பிரதியில் தாஸ்தொவ்ஸ்கியின் இடியட் மின்னி மறைகிறான். தற்செயலான ஒற்றுமையாக இருக்கலாம்.

முடிவாக, நன்மையும், தீமையும் ஊடு பாயும் உலகின் அதிகரித்துக்கொனடே போகும் துயரத்தின் சாயையை ஒரு துளி துயரம் தொகுப்பின் கதைகள் ஒரு விதமான வலியின் இழை கொண்டு வடிவங்களாக்குகின்றன எனலாம். இத்தனைக்கு மத்தியிலும் வாழ்கை ஓடும் விந்தையை மென்னகையோடு சொல்கின்றன தொகுப்பின் தலைப்பும், உள்ளடக்கமும் என்பது இத்தொகுப்பின் இன்னொரு ஊடிழையாக, இணைபிரதியாக (subtext) உள்ளது. அது தொகுப்பின் பலமாகவும் உள்ளது.

நன்றி - சைக்கிள்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்