/* up Facebook

Nov 26, 2010

பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஆதிரை


பூவரசி வழக்கில் குறுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. பூவரசி குழந்தையைக் கடத்திக் கொலை செய்யும் செயலுக்கு தூண்டுதலாக இருந்த ஜெயக்குமார் தன்னை ஒரு உலக மகா யோக்கியனாக நீதிமன்றத்தில் நிறுவுகிறான். ஆணாதிக்க பொது ஒழுக்கத்தை பாதுகாக்கும் நீதியும் அதை ஏற்றுக் கொள்கிற போக்கிலேயே வழக்கு செல்கிறது. நான் அநேகமாக இன்னும் நான்கு மாதங்களுக்குள் நீதிமன்றம் பூவரசிக்கு தூக்குத் தண்டனையை வழங்கி தன்னை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும். ஜெயக்குமாரின் ஏமாளி மனைவியோ தூக்குத்தண்டனை விதிப்பதோடு மட்டுமல்ல உடனடியாக பூவரசியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கில் போட வேண்டும் என்று பேட்டி கொடுப்பார். சொல்ல முடியாது விருகம்பாக்க வாசிகள் வெடி கொளுத்தி இனிப்பு வழங்கி பூவரசியின் தீர்ப்பை வரவேற்றாலும் வரவேற்பார்கள்.

கொடூர குற்றவாளிகளுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதன் மூலம் கொடூர குற்றங்களையும் ஆதரிக்கிறீர்கள் என்று சில நண்பர்கள் என் மீது குறைபடுகிறார்கள். கொடூர குற்றங்கள் நடைபெறக் கூடாது என்பதுதான் நமது கவலையே தவிற கொடூர குற்றங்களுக்கு தண்டனையே தேவை இல்லை என்பதல்ல என் வாதம். ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர் குற்றம் சுமத்தப்பட்டவர்தான் அவருக்கான உரிமைகள் உண்டு. அவரை குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சுமத்தியவர்களுக்கு உண்டு அதை சட்டத்தின் வழி நின்று நிரூபிக்க வேண்டுமே தவிற பொதுப்புத்தி, பொது மனச்சாட்சி, மக்கள் விருப்பங்களுக்கெல்லாம் இங்கே இடம் கொடுக்கக் கூடாது. ஆனால் இந்தியாவில் பெரும்பலான தீர்ப்புகளில் சட்டத்தின் அளவுகோல்களை விட பொதுப்புத்தியும், நம்பிக்கையும், பெரும்பான்மனை மக்கள் விருப்பமுமே நீதியின் முடிவாய் இருக்கிறது. கோவை மோகன்ராஜ் என்கவுண்டரிலும், பூவரசி விஷயத்திலும் இதுதான் நடக்கிறது. நான் பூவரசி செய்த குழந்தைக் கொலையை எதை வைத்தும் நியாயப்படுத்த வில்லை. பூவரசியை மிக மோசமான முறையில் ஜெயக்குமார் மீண்டும் மீண்டும் ஏமாற்றி பாலியல் வன்முறை செய்திருக்கிறார். பூவரசி எல்லா இந்திய பெண்களையும் போல தன்னை திருமணம் செய்யும் படி ஜெயக்குமாரை வற்புறுத்த அவரோ ஒரு கட்டத்தில் பூவரசியை உதாசீனப்படுத்தியிருக்கிறார்.ஆண்களின் விஷக் கொடுக்குகளுக்கு தன்னை பலியாக்கிக் கொண்ட ஒரு பெண்ணின் மனப்போராட்டம் ஒரு பக்கம். இதை எதையும் கண்டு கொள்ளாத ஜெயக்குமார் மனைவி குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்தது இன்னொரு பக்கம் என பூவரசி மன ரீதியான துன்பங்களுக்கு ஆளான நிலையில் ஜெயக்குமாரை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அவரது குழந்தையைக் கடத்திக் கொன்று விட்டார். இப்போது ஜெயக்குமார் கதையை இப்படித் திரிக்கிறார். பூவரசி மீது தான் இரக்கப்பட்டு வேலை கொடுத்ததாகவும் அவர் விரும்பியே தான் அவருடன் பழகியதாகவும் கடைசியில் தன் குழந்தையைக் கொன்று விட்டதாகவும் சொல்கிறார். ஊடகங்களும் ஜெயக்குமாரின் வாதங்களை மட்டுமே ஒரு தலைப்பட்சமாக வெளியிடுகின்றன. பூவரசிகள் மீது ஊடகங்கள் கட்டும் வன்மத்தைப் பார்க்கும் போது அநேகமாக அந்தத் தீர்ப்பை ஆண்கள் எழுதி முடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.ஜெயக்குமாரின் மனைவிக்குமே தன் கணவன் இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய விளையாட்டால்தான் இக்கொலை நடந்தது என்ற எண்ணம் இருப்பது போலத் தெரியவில்லை. இந்த இடத்தில் ஜெயக்குமாரின் மனைவிக்கு இம்மாதிரியான தொடர்பு இருந்தால் அதை ஜெயக்குமார் மன்னித்து ஏற்றுக் கொள்வாரா என்கிற கேள்வியும் உண்டு. ஆக சொத்துடமை சமூகத்தின் இறுகிய கட்டமைப்பான ஆண் தலைமை தன் சகல அதிகாரங்களையும் பெண் மீது செலுத்துகிறது. ஜெயக்குமார் பூவரசியை ஏமாற்றியது ஆண் என்ற இயல்பில் என்பதை ஒரு பெண்ணின் தலை மீது சுமத்துகிறது.

ஊடகங்கள் நிகழ்த்தும் பாலியல் வன்முறை

பூவரசியை ஜெயக்குமார் பல முறை ஏமாற்றி பாலியல் வன்முறை செய்தார். ஊடகங்களோ அவர் விசாரணைக்கு வரும் போதெல்லாம் அந்த பெண்ணை அம்மணமாக்கி பாலியல் வன்முறை செய்கின்றது. ஓவ்வொரு முறை அவர் நீதிமன்றம் அழைத்து வரப்படும் போதும் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்படும் போது வெளியில் ஒரு கூட்டம் பெண்கள் துடைப்பங்களோடு திரண்டு வந்து அவரை அடிக்கிறோம் பேர்வழி என்று நிற்கிறார்கள். கையில் துடைப்பங்களோடு நிற்கும் அவர்களும் ஒவ்வொரு பூவரசிகள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தாத வரை அது இந்த சமூக அமைப்பிற்கு சாதகம் என்பதால் போலீசே சில நேரங்களில் குற்றம் சுமத்தப்பட்டவரை அடிக்க ஆள் திரட்டுகிறார்கள். பெண் போலீசின் பிடியில் அழைத்து வரப்படும் பூவரசியை இரண்டு நிமிடங்கள் பெண் போலீசே மீடியா முன்னால் நிறுத்துகிறார்கள். இது ஏதோ தற்செயலாக நடக்கிற நிகழ்வல்ல, அன்றைக்கு ஒரு புது பூவரசி கிளிப்பிங்ஸ் கிடைத்தால் செய்திக்கு முக்கியத்துவம் என்பதால் இவர்களின் போலீஸ் கூட்டு என்னும் அடிப்படையிலேயே பாளாஷ்களை அந்தப் பெண்ணின் மீது இறக்குகிறார்கள். ஆக அவர் தினம் தோறும் ஊடகங்களாலும் தொந்தரவு செய்யப்படுகிறார்.

எடிகா அன்னம்மாவும், பூவரசியும்

இரண்டு இளம் பெண்கள் ஒரு ஆணை காதலித்தார்கள். அதில் எடிகாவும் ஒருத்தி. தன்னைவிட மற்றவளிடம் அவன் நெருக்கமாக இருப்பதாக எடிகா பொறாமைகொண்டாள். எடிகா சமயம் பார்த்து அந்த இன்னொருத்தியையும் அவளது குழந்தையையும் கொன்று போட்டாள். எடிகாவுக்கு அப்போது வயது 21 அல்லது 22 தான் இருக்கும். அவளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. நமது மரியாதைக்குரிய பெரியவர் கிருஷ்ணய்யரிடம் வந்த வழக்கில் அவர் எடிகாவை கருணை காட்டி விடுதலை செய்தார் ( நான் கிருஷ்ணய்யரைக் கண்ட நேர்காணலை கீழே இணைத்துள்ளேன்) வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தத் தீர்ப்பில் கிருஷ்ணய்யர் "கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்று காந்தி சொன்னதை அந்த தீர்ப்பில் குறிப்பிட்டார்.இங்கு எடிகாவோடு பூவரசியையும் பொறுத்திப் பார்க்கலாம் தன்னை காதலித்தவன் ஏமாற்றியதால் அவன் மீது வரவேண்டிய கோபம் அந்த பெண்ணுக்கு அவனது குழந்தை மீது வந்து கொலையும் செய்து விடுகிறாள். இங்கே கொடூரமான குற்றங்களையோ பாலியல் சார்ந்த கொலைகளையோ பூவரசி மீதான குற்றச்சாட்டுகளோடு ஒப்பிடவே முடியாது.
பூவரசி கொலை செய்த சூழல், அவர் ஏமாற்றப்பட்ட நிகழ்வு, அவரது சமூகப் பின்னணி, தனிமை, ஏற்கனவே அவர் உளவியல் ரீதியாகவும், சிறை ரீதியாகவும் அனுபவித்து விட்ட தண்டனை உள்ளிட்ட சகல விஷயங்களையும் கணக்கில் கொண்டு பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும். அவருக்காக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

நன்றி - வன்மம்

1 comments:

திருமங்கலத்தான் said...

பூவரசி மன்னிக்கப்பட வேண்டும். மேலும் அவருக்கு நல்ல அரவணைப்பும் வேண்டும்.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்