/* up Facebook

Nov 23, 2010

ஒரு அபலையின் அகிம்சைப் போராட்டம்


மகாத்மா காந்தி மனித குலத்திடம் கையளித்துவிட்டுச் சென்ற அரசியல் ஆயுதம் அகிம்சை. அந்த ஆயுதமே இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது என்று நம்புகிறோம். ஆனால், இன்றைய உலகச் சூழ்நிலையில் அகிம்சையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதில் இருக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியப் பிரச்சினை குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படவே செய்கின்றன. வன்முறை இல்லாத உலகம், போர் இல்லாத உலகம் என்ற கருத்து எவரையுமே கவரக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. நிதான புத்தியுடைய எவருமே வன்முறையை வன்முறை என்பதற்காக விரும்புவதில்லை. ஆனால், எம்மைச் சூழ்ந்திருக்கிற உலகிலே இன்று காணப்படக்கூடியதாக இருக்கின்ற வன்முறைக்கு மத்தியில் அகிம்சையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பயனுறுதியுடைய விளைவைப் பெற முடியுமா என்ற கேள்விக்கு காந்தியவாதிகளினால் கூட தடுமாற்றமின்றிப் பதில் சொல்வதென்பது முடியாத காரியமேயாகும்.

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச அகிம்சை தினமாக சில வருடங்களுக்கு முன்னர் பிரகடனம் செய்து அனுஷ்டித்து வருகிறது. காந்தியின் பிறந்த தினத்தன்று புதுடில்லியில் ராஜ்காட்டில் அமைந்திருக்கும் அவரது சமாதிக்குத் தவறாமல் சென்று மலர் தூவி அஞ்சலி செய்யும் இந்திய அரசியல் தலைவர்கள் அகிம்சை என்பது வாழ்க்கை முறையாகவும் ஆட்சிக்கான வழிவகையாகவும் இன்றும் கூடப் பொருத்தமானதாகவே இருக்கிறது

என்றும் அகிம்சை உண்மையில் துணிச்சல் உள்ளவர்களின் ஆயுதமே தவிர, கோழைகளின் ஆயுதமல்ல என்றும் போதனைகள் செய்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் சொந்த மண்ணிலேயே முன்னெடுக்கப்படுகின்ற அகிம்சைப் போராட்டங்கள் தொடர்பிலான இந்திய அரசியல்வாதிகளின் அணுகுமுறைகள் இந்திய ஜனநாயகத்தையும் அகிம்சைக் கோட்பாட்டையும் கேள்விக்குள்ளாக்குகின்றன என்பதில் சந்தேகமில்லை.

வட கிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் ஆயுதப்படை களுக்கு விசேட அதிகாரங்களை வழங்குகின்ற ஒரு கொடூரமான சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா சானு என்ற 39 வயதான பெண்மணி கடந்த ஒரு தசாப்தகாலமாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவருகிறார் என்பதை எம்மவரில் எத்தனை பேர் அறிந்திருக்கிறார்களோ தெரியவில்லை. மணிப்பூரின் மலோம் நகரில் 2000 நவம்பர் 2 இல் அசாம் ரைபிள் பரா இராணுவத் துருப்புகள் 10 இளைஞர்களைப் படுகொலை செய்ததையடுத்து படையினருக்கு அளவு கடந்த அதிகாரங்களை வழங்கும் அந்தச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்று மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து ஷர்மிளா அன்றைய தினமே தனது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். நேற்றைய தினத்துடன் அவரின் உண்ணாவிரதம் 10 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. ஆனால், இந்திய மத்திய அரசாங்கமோ அல்லது மணிப்பூர் மாநில அரசாங்கமோ ஷர்மிளாவின் கோரிக்கையைத் திரும்பிப்பார்க்கவும் தயாராயில்லை.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த மூன்று தினங்களில் ஷர்மிளாவைக் கைது செய்த பொலிஸார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி அவரை நீதிமன்றக் காவலில் வைத்தனர். மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு வைத்தியசாலையில் அன்று முதல் அவரை அனுமதித்த பொலிஸார் மூக்குத்துவாரங்களின் ஊடாக குழாய்களைப் பயன்படுத்தி மருத்துவர்களின் உதவியுடன் வலுக்கட்டாயமாக நீராகாரங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். 10 வருடங்களாக இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆயுதப்படைகளுக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்கும் சட்டம் மணிப்பூரில் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்துவருகிறது. இச்சட்டத்துக்கு எதிராக மணிப்பூர் மக்கள் தங்களால் இயன்ற சகல வழிவகைகளின் மூலமாகவும் ஆட்சேபத்தை வெளிக்காட்டி வந்திருக்கிறார்கள். தாய்மார்களின் நிர்வாண ஊர்வலம், மாணவர் அமைப்புகளின் தலைவர்களின் தீக்குளிப்பு, பிரமாண்டமான ஆர்ப்பாட்டப் பேரணிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளிடம் முறையீடு என்பவையும் அந்தப் போராட்டங்களில் அடங்கும்.1958 ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் தற்காலிக ஏற்பாடு என்று கூறிக்கொண்டே பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால், கவலைக்குரிய வகையில் அது 52 வருடங்களாக நடைமுறையில் இருந்துவருகின்றது.

பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இச் சட்டம் அவசியமானது என்று கூறும் அரசாங்கம் அதை வாபஸ் பெறப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.அதேவேளை, ஷர்மிளாவின் உண்ணாவிரதத்தைத் தொடரவிட்டு அவர் உயிர் துறப்பதை அனுமதிக்கவும் அரசாங்கம் தயாராயில்லை. மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தார்மீக வலுவைக் கொடுக்கக்கூடிய ஒரு அரசியல் சூழ்நிலையை ஷர்மிளாவின் உண்ணாவிரதம் தோற்றுவித்து விடாதிருப்பதை உறுதிசெய்வதில் அரசாங்கம் குறியாக இருந்து வருகிறது. தற்கொலை முயற்சிக் குற்றத்துக்காக கூடுதல் பட்சம் ஷர்மிளாவுக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனையைத்தான் விதிக்க முடியும். ஒரு வருடம் பூர்த்தியானதும் அவரை விடுவிக்கும் பொலிஸார் பின்னர் மறுநாளே கைது செய்து விடுகின்றனர்.இவ்வாறாக விடுதலையும் கைதும் 10 வருடங்களாகத்தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் மனித உரிமைகள் ஆர்வலர்கள் ஷர்மிளாவை இம்பால் விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியிலும் இரகசியமாக விமானத்தில் ஏற்றி புதுடில்லிக்கு அனுப்பி வைத்தனர். தலைநகரில் வந்திறங்கிய ஷர்மிளா நேரடியாக காந்தி சமாதிக்குச் சென்று மலர்தூவி அஞ்சலி செய்தார். "மணிப்பூர் மக்களுக்குக் கொடுமைகளைச் செய்யும் இராணுவத்தினருக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்ற எனது கோரிக்கை நிறைவேறாமலேயே நான் சாகவேண்டுமென்றால், மரணப் படுக்கையில் வீழ்வதற்கு முன்னதாக மகாத்மா காந்தியின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளவிரும்புகிறேன்' என்று அச்சந்தர்ப்பத்தில் ஷர்மிளா செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷர்மிளாவின் உறுதிதளராத உண்ணாவிரதம் அடிப்படை மனித உரிமைகளுக்கான போராட்டங்களின் வரலாற்றில் முன்னென்றுமில்லாத வகையிலான சத்திய வேள்வியாக மாறியிருக்கிறது. இந்திய திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ நிறுவனம் அண்மையில் 51 இலட்சம் ரூபா பெறுமதியான இரவீந்திர நாத் தாகூர் சமாதானப் பரிசை ஷர்மிளாவுக்கு வழங்கியிருக்கிறது. வைத்தியசாலையில் அவர் தங்கியிருக்கும் அறை நீதிமன்றக் காவலுக்கான சிறையாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கு வைத்து கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த ஷர்மிளா தனது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை என்று அறிவித்தார். "ஆயுதப்படைகளுக்கான விசேட அதிகாரங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் மணிப்பூரில் அச்சட்டம் முழுமையாக வாபஸ் பெறப்படும் வரை எனது போராட்டம் தொடரும். மனிதர்கள் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். ஆனால், வாழுங்காலத்தில் அவர்கள் முழுமையான கௌரவத்தைக் கொண்டிருக்கவேண்டும்' என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியத்துக்கு அப்பால் பெரிதாக அறியப்படாததாக இருக்கும் ஷர்மிளா வின் போராட்டம் உண்மையில் ஒடுக்குமுறைக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களின் சின்னங்களில் ஒன்றாக மிளிரும் என்பதில் சந்தேகமில்லை.


நன்றி - தினக்குரல் 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்