/* up Facebook

Nov 21, 2010

பொம்பளை வண்டி.. - எம்.ஏ.சுசீலா


மகளிர் மட்டும்...

காதுச் சவ்வே கிழிஞ்சு போயிடற மாதிரி இரைச்சலோட..கல்யாண வீட்டு ‘ஸ்பீக்கர்’பொட்டியிலேயிருந்து அலறிக்கிட்டிருந்த முக்கல் முனகல் சினிமாப்பாட்டுக்குப் பொடிசுகள் போட்டுக்கிட்டிருந்த கும்மாளம்,பிரியாணிச் சாப்பாட்டை ஒரு கை பார்த்துக்கிட்டே பொண்ணு மாப்பிள்ளையைக் கலாட்டா பண்ணிக்கிட்டிருந்த பொம்பளைங்களோட கலகலப்பு,அவங்க உடுத்திக்கிட்டிருந்த சரிகைச் சேலையெல்லாம் கூட்ட நெரிசலிலே கசங்கிப்போய் உச்சி வெயில் வேக்காட்டிலே வெளிப்படுத்திக்கிட்டிருந்த குமட்டலெடுக்கிற வேர்வை நாத்தம்...இதுங்களுக்கெல்லாம் மத்தியிலே - இதுங்களோட கூடவே ஈஸ்வரியும் இருந்தாலும்...காலையிலே புருஷன் கிட்டே வாங்கின ‘எத்து’ ,அவளோட அடிவயத்திலே பாறையாக் கனத்துக்கிட்டுத்தான் இருந்தது.
நிதமும்...இதே குத்தும்,எத்தும்தானா?இதுக்குத்தானா இந்தப் பொம்பளை சன்மம்..?அப்படித்தானே அவனும் சொல்றான்?
சிறுகச் சிறுகச் சிறுவாடு சேர்த்து வச்ச காசைக்கூட எடுத்துக்கிட்டுப்போய் அவன் குடிச்சுப் போட்டுட்டு வருவானாம் ! கட்டின பொண்டாட்டி மறுபேச்சுப் பேசக் கூடாதாம்!
’’ஆம்பளை நான் அப்படித்தாண்டி செய்வேன்...!அதுக்காகப் பொட்டச்சி நீ பத்து வீடு கேக்கற மாதிரி அலர்றியே..?பேசற வார்த்தை அடுத்த ஆளு காதுக்குக் கூடக் கேக்காம..அமைதியாப் பொறுத்துப் போறவதாண்டி நல்ல பொம்பள..!’’

அவன் மட்டுமா அப்படிச் சொல்றான்..?ஆயி அப்பன் கிட்டே ஒரு பாட்டம் அழுது பொலம்பலாம்னு போனா ...அவங்களும் இதையேதானே சொல்றாங்க..?
சரி..அதைக்கூட விட்டுறலாம்!தெரு முனையிலே பலசரக்குக் கடை வச்சிருக்கிற அண்ணாச்சி...! அவருக்கு இருக்கும் அறுபது வயசு....அப்பன் மாதிரியானவரு!உப்பு,புளி வாங்கப் போனவளை நிறுத்தி வச்சு ஏதோ ஆதரவா ரெண்டு வார்த்தை பேசிக்கிட்டிருந்தாரு!அதைப் பொறுக்க முடியாம வேட்டை நாய் மாதிரி மோப்பம் பிடிச்சுக்கிட்டு வந்து இந்த ஆளு போட்ட கூச்சல்!
‘’அதென்னடி இன்னோரு ஆம்பளை கிட்டே அப்படி ஒரு நெளிசல்..? புருஷனத் தவிர வேத்து ஆம்பளைய ஏறெடுத்துப் பாத்து ஒரு வார்த்த கூடப் பேசாதவதாண்டி நல்ல பொம்பள..’’
திரும்பின எடத்தில எல்லாம் பொம்பள சகவாசம் வச்சுக்கிட்டு உத்தம புத்திரன் மாதிரி அவன் பேசறதக் கேக்கிறப்ப ..அவளுக்குப் பத்திக்கிட்டுத்தான் வரும்!
‘இதைச் செய்..இதைச் செய்யாதே’ன்னு பொம்பளைக்கு ‘ரூல்’போடற மாதிரி...இந்த ஆம்பளைங்களுக்கு மட்டும் எதுவுமே கெடையாதா?

’’என்ன ஈஸ்வரீ..!கை காய்ஞ்சு போக என்ன கனாக் கண்டுக்கிட்டிருக்கே..!பொளுதோட பஸ் பிடிச்சு வீடு போகாட்ட புருஷன்காரன் கிட்டே உதை திங்க வேண்டியதுதான்..!’’

அஞ்சலையோட சத்தம்..ஈஸ்வரியோட நெனப்பிலே கல்லெறிஞ்சு உசுப்பிவிட,வெரசாக் கை கழுவிட்டுக் கூட்டாளிப் பொண்ணுங்க கூட பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேர்ந்தா...அங்க பாத்தா பயங்கரக்கூட்டம்.

‘’இன்னிக்குமுகூர்த்த நாளில்லே...?இருக்கிற இருப்பைப் பாத்தா பொளுதடஞ்சுதான் வீடு போய்ச் சேருவோம் போல’’ன்னா அஞ்சலை.
இவளுக்குத் ’திக்’குங்குது.
‘’ஏதோ பொண்ணு வீட்டுக்காரங்க ரெண்டு பக்கமும் சொந்தமாச்சே...நானும் வெளியூர் போக வேண்டியிருக்கேன்னுதான் ஒன்னைக் கலியாணத்துக்கே அனுப்பறேன்.போனமா..வந்தமான்னு மூணு மணிக்கெல்லாம் வந்து சேரு!’’
-புருஷனோட கொரல் உள்ளுக்குள்ளே மெரட்டலாக் கேக்கற நெனப்பிலே அவளுக்குக் கை காலெல்லாம் வேர்த்து நடுங்குது!

மனுசக்கும்பலோட பாரம் தாங்காமக் கொடை சாய்ஞ்சுக்கிட்டு வந்த ரெண்டு பஸ்ஸும் நிக்காமலே போயிடிச்சு.கொஞ்ச நேரம் சென்னு சுமாரான கூட்டத்தோட வந்த ஒரு பஸ் எதோ மனசு வச்சு நின்னுது.
முண்டியடிச்சுக்கிட்டுத் தலய நொளச்ச கூட்டத்தைத் தடுத்த கண்டக்டர்
‘’’’இது பெண்கள் வண்டிப்பா! ஆம்பளைங்க யாரும் ஏறாதீங்க..பொம்பளைங்க மட்டும் ஏறிக்குங்க’’ன்னாரு!
கூட்டத்தோட கூட்டமா ஏறிக்கிட்ட ஈஸ்வரி சுத்துமுத்தும் பாத்தா..!
எல்லாம் எள வயசு ‘டவுனு’பொண்ணுங்க!

‘’இது காலேசுப் பொண்ணுங்களுக்காகவே விடற பஸ்ஸாம்’’-காது கிட்டே அஞ்சலை கிசுகிசுத்தா.

அடுத்த ஸ்டாப்பிலே வேகம் கொறஞ்சு பஸ்ஸு நின்னப்ப மூச்சுப்பிடிச்சு ஓடிவந்து ஏறப்போன நாலஞ்சு ஆம்பளங்களைக் கொண்ட போட்டுக்கிட்டு முன்னாடி சீட்டுலே உக்காந்திருந்த டீச்சருங்க வெளியே தலையை நீட்டித் தடுத்து
‘’இது ‘லேடீஸ் வண்டி..நீங்க ஏறக்கூடாது’’ன்னாங்க!
பஸ் கடசியிலே ஒக்காந்திருந்த காலேசுப் பிள்ளைங்களும் இதையே சொல்லிச்சொல்லி ஆம்பளைங்களை எறக்கிவிட....இதைப் பாத்துக்கிட்டிருந்த ஈஸ்வரியோட கூட்டாளிப் பொண்ணுங்களுக்கும் குதியாட்டமாயிடிச்சு!
அடுத்தடுத்த ஸ்டாப்பிலே பஸ் நின்னபோதெல்லாம் ஆம்பளைங்க ஏறினா,
‘’அட எடுய்யா கைய..’’’’எறங்குய்யா மொதல்லே’’’’இது பொம்பளை வண்டி பாத்தா தெரியலே’’..அப்படீன்னு தலைக்குத் தல சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

‘’அந்தா பாரு அந்த ஆளை...ஏதோ பைத்தியக்காரன் மாதிரி வேட்டியை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு ஓடி வாறத’’
‘’நாம இறக்கி விட்ட ஒடனே அந்த ஆளு மொகத்திலே அசடு வளிஞ்சதை நீ பாக்கணுமே கண்ணு..’’
-இப்படியெல்லாம் பேசிக்கிட்டுக் கண்டக்டர் வேலையத் தாங்களே எடுத்துக்கிட்டு அவங்க அடிச்சுக்கிட்டிருக்கிற கூத்தையெல்லாம் ஈஸ்வரி வேடிக்கை பாத்து ரசிச்சுக்கிட்டே வந்தா!அவ எறங்க வேண்டிய ஸ்டாப் வந்து எல்லாரும் எறங்கினதுக்கு அப்பறம் கடைசியா ஈஸ்வரி எறங்கிக்கிட்டிருந்தா.
சரியா அந்த நேரம் பாத்து எங்கே இருந்தோ ஓடி வந்த ஒரு ஆளு அவளத் தள்ளிக்கிட்டுப் பஸ்ஸுக்குள்ள ஏற வந்தான்.

‘’ஏன்யா...மாடு மாதிரி வந்து விளுகிறியே..?பொம்பள வண்டின்னு எத்தனை பெரிசா போர்டு போட்டு வச்சிருக்காங்க கண்ணு தெரியலே?இதிலே பொம்பளைங்க மட்டும்தான் ஏறலாம்!ஆம்பளைங்க யாரும் இதிலே ஏறக் கூடாது...ஏறவும் முடியாது!அப்படித்தான் சட்டம் தெரிஞ்சுக்க..எறங்குய்யா மொதல்லே...!’’

.-இத்தனை நேரம் ஊமைக்கோட்டான் மாதிரி ‘தேமே’ன்னு வந்த ஈஸ்வரி..ஏதோ சாமி வந்த மாதிரி போடற ஆவேசக் கூச்சலைக் கேட்டுட்டுக் கூட வந்த பொண்ணுங்க தெகச்சுப் போய் நின்னுட்டாங்க!
அந்த நேரத்திலே ஈஸ்வரியோட மனசு முச்சூடும் முட்டிக்கிட்டு நின்னது,அவ புருஷனோட மொகம் மட்டும்தான்னு பாவம்...அவங்களுக்கு எப்படித் தெரியும்?

பி.கு;பெண்ணுக்கு வேண்டியது சம உரிமையே,சலுகைகள் அல்ல என்பதே என் தனிப்பட்ட கொள்கை என்றபோதும் - இன்னும் அடிப்படைஉரிமைகளைக் கூடப் பெறாத நிலையில் இருப்பவர்களின் உளவியலைச் ‘செம்மலர்’ இதழில் வெளிவந்த எனது இச் சிறுகதை வழி சொல்ல முயன்றிருக்கிறேன்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்