/* up Facebook

Nov 15, 2010

வேளச்சேரி டைம்ஸ் : ஜெனியின் யாத்திராகமம் - சந்தனமுல்லை


10,+2 படித்திருந்தாலும் ஜெனி இந்தியாவின் மிக நவநாகரிக‌மான பணியில் இருக்கிறாள். அல்லது அவ்வாறு நம்புகிறாள். அவளிடம் இரண்டு வகையான யூனிபார்ம்கள் உண்டு. வாரநாட்களில் ஒரு வண்ணமாகவும், வாரயிறுதிகளில் வேறொரு வண்ணமாகவும் அது மாறும். அன்றைய நாளுக்குரியதை எடுத்துக்கொண்டு சென்னையின் பஸ்களில் பயணித்து அவளது பெருமைக்குரிய பணியிட‌த்திற்கு வருகிறாள். பணியிடம், பார்ப்பதற்கு பகட்டானது என்றாலும் அவளது பணி அவ்வளவு மெச்சத்தக்கதாக‌ இல்லை. ஜெனி, வேளச்சேரியில்
இருக்கும் ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்கிறாள். ‍ வாக்ஸிங், பெடிக்யூர், ஹேர் கலரிங், ஆயில் மசாஜ் - அவளது அன்றாட வேலைகளில் சில.


'ஜென்ட்ஸோட உடலையா தொடுகிறோம், லேடீஸூக்குத்தானே' என்பதால் ஜெனிக்கு பிறரது உடல் பாகங்களை தொடுவது வித்தியாசமாக தோன்ற வில்லை. அதைக் குறித்து எந்த வெட்கமும் இல்லை. கடந்த மூன்று மாதங்களாகத்தான் இவ்வேலையைச் செய்தாலும், ஜெனி, இதற்கு முன் இரண்டு வருடங்களாக வேலை செய்தது ஒரு ஷோ ரூமில். ஜெனியின் ஊர்க்காரரான ரோமாவும் இங்கேதான் வேலை செய்கிறார்.அவரின் ரெக்கமண்டேஷனால் இந்த வேலைக்கு வந்துவிட்டாள்.

ஜெனி, ஆதம்பாக்கத்தில் அவளது அண்ணன்களுடன் தங்கி இருக்கிறாள். பஸ் பாஸ் வாங்கிக் கொண்டு சென்னையில் பஸ்களில் பயணிக்கிறாள். அலுவலகத்திற்கு வந்து யூனிஃபார்முக்குள் புகுந்து விட்டால், அவள் மணிப்பூரைச் சேர்ந்த கிராமத்துப் பெண் இல்லை. ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யப்பட்ட முடியுடன், திருத்தப்பட்ட புருவங்களுடன், கருப்பு ஷூவுடன், கண்ணாடி பளபளக்கும் அறைகளுடனான அச்சூழலில், தனது வேலையை நேர்த்தியாக, முழுமையாக செய்யும் ஒரு ஃப்ரொபஷனலாக‌ பொருந்திவிடுகிறாள்.

ஒருநாளைக்கு எட்டு முதல் ஒன்பது வருகையாளர்களை ஜெனி அட்டென்ட் செய்ய வேண்டும். ஜெனியின் வேலைநேரம் பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை. என்றாலும், சரியாக எட்டு மணிக்கு முடிந்துவிடாது. வாரநாட்களில் ஒன்பது மணிக்கு மேலாகிவிடுவதுண்டு. சில வாரயிறுதிகள் காற்றாடுவதும் உண்டு. எப்படியானாலும், ஜெனிக்கு வாரயிறுதிகளில் கண்டிப்பாக‌ விடுமுறை கிடையாது.


மணிப்பூரில் காலநிலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மணிப்பூரை பற்றிய நினைப்பே ஜெனியை உற்சாகம் கொள்ள வைக்கிறது. சென்னை மிகவும் வெப்பமாக இருக்கிறது. இருந்தாலும் ஜெனி சென்னையிலேயே தொடர்ந்து வாழ விரும்புகிறாள். இங்கே, அனைவரும் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறார்கள், மொழி ஒன்றுதான் அவளுக்கு பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. ஜெனி, ஊருக்குச் செல்ல வேண்டுமானால் அவளது பாஷையிலேயே சொல்ல வேண்டுமானால், "இரவு பகலாக‌ ரயிலிலேயே உட்கார்ந்துக் கொண்டே பயணம் செய்ய வேண்டும் ‍கௌஹாத்தி வரை. அங்கிருந்து அடுத்த ரயில் மணிப்பூருக்கு. பயணக்காலம் மட்டுமே ஒரு வாரம் ஆகிவிடும்". ஜெனி சென்னைக்கு வந்த இந்த இரண்டரை வருடங்களில் ஒருமுறைதான் வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். அம்மா, அப்பாவெல்லாம் அங்குதான் வசிக்கிறார்கள். அவளது ஊரில், நிறைய கிராமங்கள் இப்படித்தான் சிறுகுழந்தைகள் மற்றும் முதியவர்கள் மட்டும் தங்குமிடமாக மாறிவிட்டன.

ஜெனிக்கு சென்னையில் வீட்டு ஓனர்கள் வாங்கும் அட்வான்ஸ்தான் மிகுந்த வருத்தத்தையும் கஷ்டத்தையும் தருகிறது. ஐம்பதாயிரம் ரூபாய் அட்வான்ஸ் என்பது அதிகமான தொகை.அவளால் நினைத்துப் பார்க்க முடியாதத் தொகை. அதோடு, வசதியற்ற வீடு. நிறைய பேருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய சூழல். வாங்கும் சம்பளத்தில் பாதி வாடகை கொடுக்கவே சரியாக இருக்கிறது. அப்புறம் அலைபேசி. அதனால்தான் நண்பர்களுடன் பேசும் மகிழ்ச்சியாவது அவளுக்குக் கிடைக்கிறது. அவளுக்கு பிடித்த பொருட்களை வாங்க முடியவில்லை.கையில் எடுக்குமுன் விலையை பார்த்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு நகர்ந்துவிட நேர்கிறது. இதில் மிச்சம் பிடித்து ஊருக்கு அனுப்ப வேண்டும்.ஜெனிக்கு தீபாவளி இல்லை என்பதால் அன்றும் அவள் வேலைக்கு வந்தாள்.

ஜெனிக்கு வயது 21. ஜெனிக்கு, அவளது எதிர்காலம் பற்றியெல்லாம் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. கிடைக்கும் வேலையைச் செய்து சம்பாரிக்க வேண்டும். செலவுகளை சந்திக்க வேண்டும். மணிப்பூரில் அதற்கெல்லாம் வாய்ப்பு கிடையாது. ஓரளவு வருமானம் வரக்கூடிய வேலை வேண்டுமானால் எல்லையைத் தாண்டிதான் வந்தாக வேண்டும்.இதைத்தாண்டி வேறு எதுவும் ஜெனிக்கு யோசனை இல்லை. திருமணம் குறித்தெல்லாம் யோசிக்கவே இல்லை. திருமணம் செய்துக் கொண்டாலும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்றே ஜெனி விரும்புகிறாள்.

மணிப்பூரிலும் பியூட்டி பார்லர்கள் உண்டென்றாலும் அங்கு இதுபோல கிடையாது. மிகவும் சிறியவை. இங்கு பியூட்டி பார்லர்கள் பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆனால், சம்பளம்தான் போதவில்லை. மாதம்
ரூ5000 என்பது வாடகைக்கும், மற்ற செலவுகளுக்குமே சரியாக இருக்கிறது. சமயங்களில், பஸ் கிடைக்காத நாட்களில் ஆட்டோ பிடித்து வர நேர்ந்தால் ஒரு ட்ரிப்புக்கு ரூ 50 கொடுக்க நேர்கிறது. மழைநாட்களில்தான் திண்டாட்டம்.

வேறு நல்ல வேலை,இதைவிட அதிகமாக வருமானம் தரக்கூடிய‌ வேலை ஏதாவது இருந்தால் ஜெனிக்குச் சொல்வீர்களா?

அப்படியே, ஜெனிக்குள் எழும் சில கேள்விகளுக்கு விடைகளைத் தருவீர்களா?

ஜெனியும், அவளது அண்ணன்களும் பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்வி கற்க முடியாதது ஏன்? கோடிகள் புரளும் ஐபிஎல், பல்லாயிரம் கோடிகளில் விலைபோகும் அணிகள் இருக்கும் நாட்டில் , ஜெனிக்களும் ரோமாக்களும் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்காக ஏன் இரவும் பகலும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது?

காமன்வெல்த் போட்டிகளை அடுத்து, ஒலிம்பிக் நடத்தும் தகுதி பெற்றுவிட்ட இந்தியாவில், வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே உழைத்து தேய வேண்டிய அவலம் ஏன்? சொந்த ஊரை விட்டு வந்து ஓயாமல் உழைத்தும் கைகளில் மிஞ்சுவது என்ன?

ரெஸ்டாரண்ட்கள் மற்றும் ஃபாஸ்ட் புட் கடைகளின் எடுபிடி வேலைக‌ள், பியூட்டி பார்லர்கள் எல்லாம் ஜெனி மற்றும் ரோமாக்களாலும், அவர்களது அண்ணன்களாலும் குறைவான சம்பளத்திற்கு இட்டு நிரப்பப்படுகிறதே, எதனால்?
எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போய் நின்றுக்கொண்டே பத்துமணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய நேரிடுவது எதனால்? புதிய வேலை வாய்ப்பு என்பது இதுதானா?

நாற்கர சாலைகளாலும் மெட்ரோக்களாலும் சாலைவசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ள இந்தியாவில் ரோமா தனது ஊருக்குச் செல்வதற்கு மட்டும் ஒரு வார காலமாவது ஏன்?

(பி.கு : ஜெனியை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேளச்சேரியின் ஒரு பியூட்டி பார்லரில் கடந்த வாரத்தில் சந்தித்தேன். அவரிடம் உரையாடியதிலிருந்து...)

2 comments:

கொற்றவை said...

இந்த சமச்சீரற்ற பொருளாதாரம் இப்பெண்களை (பெண்களை) பாலியல் சுரண்டலுக்குள் தள்ளும் ஆபத்தும் உள்ளது...

Pathmakandee said...

சென்னையில் இரயில் பயணங்களில் பல இமாதிரியான மணிப்பூர் பெண்களைப் பார்த்துள்ளேன். இவர்கள் ஏன் இங்கே என்று பல தடவை யோசித்ததுண்டு - உங்கள் ஆக்கம் அவர்கள் வாழ்க்கையும் படம்பிடித்தள்ளது. வாழ்த்துக்கள்

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்