/* up Facebook

Nov 14, 2010

ஆங் சாங் சூச்சி விடுதலை (வீடியோ இணைப்புடன்)


ஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில் இருந்து ஆங் சாங் சூச்சி வெளியே வந்த போது ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் ஆரவாரித்தனர்.

கடந்த ஏழாண்டு காலமாக இவர் இந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

ஆங் சான் சூச்சி விடுதலை
அவரது இல்லத்தை சுற்றியிருந்த பாதுகாப்பு தடைகளை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்றினர். ஆதரவாளர் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து ஏராளமான அதிரடி பொலிஸார் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரான 65 வயதான ஆங் சாங் சூச்சி கடந்த 21 ஆண்டு காலத்தில், 15 ஆண்டு கால பகுதி தடுத்தே வைக்கப்பட்டிருந்தார்.

இவர், முன்னரே, அதாவது கடந்த வருடமே விடுவிக்கப்படவேண்டியவராக இருந்தார். ஆனால் அமெரிக்கர் ஒருவர் வாவியைக் கடந்து நீந்திச் சென்று சூச்சியின் வீட்டுக்குச் சென்ற சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அவர் சூச்சியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எனக்கூறி, இறுதியாக மீண்டும் தடுத்துவைக்கப்பட்டார்.

கடந்த ஞாயிறன்று இராணுவ ஆட்சியாளர்களின் ஆதரவுபெற்ற கட்சியே, இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. ஆனால் இந்தத் தேர்தல் முறைகேடுகள் மிக்கது என பரவலாக கண்டிக்கப்பட்டது.

மக்கள் ஆரவாரம்

சனிக்கிழமை காலை முதலே, சூச்சியின் விடுதலைச் செய்தியைக் கேட்பதற்காக, அவரது வீட்டுக்கருகிலும் இதுவரை தடைசெய்யப்பட்ட நிலையிலுள்ள என்.எல்.டீ என்ற ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைமையகத்துக்கு அருகிலும் மக்கள் கூட்டம் உணர்வுபூர்வமாக காத்திருந்தது..

அனேகமானவர்கள் 'நாம் ஆங்சாங் சூச்சிக்கு தோள்கொடுப்போம்’ என்ற பொருள்படும் டீசர்ட்டுகளுடன் காணப்பட்டனர்.

Freedom From Fear from Soul Rebel Films on Vimeo.
ஆங் சான் சூச்சியின் ஆதரவாளர்கள்

மாலை நேரமளவில், சூச்சியின் வாவிக் கரையோரத்து வீட்டுக்குச் செல்லும் பாதையை மறித்து போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடைக்கு எதிர்ப்புறமாக இருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் ஆயுதந் தரித்திருந்த கலகத்தடுப்புப் பொலிசாருக்கும் இடையில் வாக்குவாதங்களும் தள்ளு முள்ளுகளும் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து, அந்த மக்கள் கூட்டத்தில் பலர் நடு வீதியிலேயே அமர்ந்துவிட்டனர்.

பின்னர், மாலை ஐந்து மணியளவில் நிலைமை இன்னும் மோசமடைந்த போது பாதுகாப்புப் படையினர் தடைகளை அகற்றத்தொடங்குவதாக செய்திகள் வர ஆரம்பித்தன.

இறுதியாக,அதிகாரிகளின் கார்கள் வீட்டு வளாகத்துக்குள் நுழைவதைக் காணமுடிந்தது.பின்னர், விடுதலை உத்தரவு சூச்சியிடம் வாசிக்கப்பட்டதாக சிவில் உடையில் வந்த அதிகாரிகள் அறிவித்தனர்.

உடனடியாக நூற்றுக்கணக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சூச்சியை வாழ்த்துவதற்காக அவரது வீட்டை நோக்கி ஒடிச்சென்றனர்.

அதனையடுத்து, பாரம்பரிய உடையுடன் ஆங்சாங் சூச்சி, அவரது வீட்டுவளாக வாயிலில் உள்ள பீடத்திலிருந்து மக்கள் முன்னிலையில் தோன்றினார்.மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.தேசிய கீதத்தைப் பாடி மக்கள் கௌரவத்தை செலுத்தினார்கள்.

நெடிய பயணம்

1947ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட, பர்மாவின் சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்படும் ஜெனரல் ஆங் சானின் மகளாக 1945 ஆம் ஆண்டில் பிறந்தார் சூச்சி.

1960களில் பர்மாவிலிருந்து வெளியேறிப்பின் பிரிட்டனில் கல்வி பயின்ற இவர், 1988 ஆம் ஆண்டில் தனது தாயாரின் உடல்நலனைக்கருத்தில் கொண்டு நாடுதிரும்பினார்.

சூச்சியின் விடுதலை கோரி நடந்த போராட்டம்
இக்காலத்தில், சர்வாதிகார ஆட்சிநடத்திய ஊன ந வின் இற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டபோதே 89 இல், பர்மிய ஜூன்டா ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இராணுவ சட்டத்துக்குள்ளாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

1990 ஆம் ஆண்டில் சூச்சியின் ஜனநாயக ஆதரவு முன்னணிக்கட்சி வெற்றிபெற்றபோதும் இராணுவத்தினர் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை.

1991 ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற ஆங்சாங் சூச்சி, 1995 ஆம் ஆண்டில் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் அவரது நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

2000 ஆம் ஆண்டில் மீண்டும் வீட்டுக் காவலுக்குள்ளானார் சூச்சி.

இறுதியாக இந்த மாதத்தில் நடைபெற்ற தேர்தலை, சூச்சியின் என்.எல்.டி கட்சி நிராகரித்த நிலையில், அந்தக்கட்சி தடைசெய்யப்பட்டது.


தற்போது சூச்சியின் நீண்ட வீட்டுக் காவலும் ஒருவாராக முடிவுக்கு வந்துவிட்டது. பர்மாவின் அடுத்த அரசியல் களம் எவ்வாறு அமையப்போகிறது.

சூச்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முழு உலகும் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது

இதற்கிடையில் எதிர்வரும் டிசம்பர் 10 அன்று நோர்வேயில் நடைபெறவிருக்கும் வருடாந்த நோபல் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள சூச்சி அழைக்கப்பட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு அவருக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொள்ள மியான்மார் அரசு அவரை அனுமதிக்கவில்லை. சூச்சியின் இரு புதல்வர்களே அதனை அவர் சார்பில் பெற்றுக்கொண்டனர். நோபல் கமிட்டியின் தலைவர் ஜக்லான்ட் இன் அழைப்பை மியான்மார் அரசு இன்னமும் அனுமதிக்கவில்லை. நோர்வேயின் வெளிவிவகார அமைச்சும் சூச்சியை இம்முறை நோர்வே அழைக்க முயன்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆங் சான் சூ கீ -  விக்கிபீடியாவில் இருந்து.

ஆங் சான் சூ கீ (Aung San Suu Kyi)

பிறப்பு சூன் 19 1945 (அகவை 65)
ரங்கூன், பர்மா
வாழ்விடம் யங்கோன், மியான்மார்
அறியப்படுவது சனநாயகத்துக்கான தேசிய அமைப்பின் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
தொழில் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டவர்
சமயம் பௌத்தம்

ஆங் சான் சூ கீ (Aung San Suu Kyi, பிறப்பு: ஜூன் 19, 1945 மக்களாட்சி-ஆதரவாளர், மியான்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். கடைசியாக 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 நவம்பர் 13 ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை வீட்டுக்காவலில் இருந்து வந்துள்ளார்.
இவரது தந்தை ஆங் சான் அன்றைய பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தவர். 1947 இல் இவர் படுகொலை செய்யப்பட்டார். சூ கீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாகரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்றார். 1992 இல் இந்திய அரசின் ஜவகர்லால் நேரு அமைதிப் பரிசைப் பெற்றார். 1990இல் மியான்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொண்டது. ஆனாலும் இவர் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை.
1945 ஆனி 19 இல் பிறந்த ஆங்சான் சூகிக்கு இரண்டு வயது இருக்கையில் 1947 ஆடி 19 இல் அவரது தந்தை ஜெனரல் ஆங் சான் (Aung San) படுகொலை செய்யப்பட்டார். பின் 1948 தை 04ம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து பர்மா (அப்போது மியன்மார், பர்மா என்றே அழைக்கப்பட்டது) விடுதலையாகிறது. தனது கல்வியை இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பின் அமெரிக்காவிலும் நிறைவு செய்த ஆங்சான் சூயி 1972 தை 01இல் பிரித்தானியரான மைக்கேல் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். 1988இல் தாயாரின் உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்குத் திரும்பிய அவர், 1988 புரட்டாதி 24இல் உருவாக்கப்பட்ட NDL (National League for Democracy) இன் பொதுச்செயலாளராக பதவியேற்றார். 1988 மார்கழி 27 இல் தாயார் மரணமடைய, 1989 தை 02 இல் நடைபெற்ற தாயாரின் இறுதிக்கிரியைகளை அடுத்து மியன்மார் அரசியல் களத்தில் ஆங்சான் சூகி தீவிரமாகக் களமிறங்கி இராணுவ அடக்குமுறைக்கெதிராகப் போராடினார். அதைத் தொடர்ந்து 1989 ஆடி 20இல் அவர் இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990 வைகாசி 27 இல் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 82% பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் இராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சி பீடத்தில் ஏறவிடாது தடுத்ததுடன், ஆங்றான் சூகி அவர்கள் வெளிநாட்டுக்காரரை (பிரித்தானியர்) மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்றும் அறிவித்து விட்டனர். 1991 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் அவர் ஆங்சான் சூகி பெற்றுக்கொண்டார்.

நன்றி . பிபிசி, விக்கிபீடியா

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்