/* up Facebook

Nov 12, 2010

பணத்துக்காகச் செல்வோர் பிணமாகத் திரும்பும் அவலம்

 

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணம் சம்பாதிப்பதற்காக வீட்டுப்பணிப் பெண்களாகச் சென்று பிணங்களாக வறுமைப்பட்ட பெண்கள் பெட்டிகளில் வந்து கொண்டிருக்கையில், இலங்கையிலுள்ள உயர்தர வர்க்கத்தினர் தமது வீட்டுவேலைகளைச் செய்வதற்காக பிலிப்பைன்ஸிலிருந்து பணிப்பெண்களை இறக்குமதி செய்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மக்களுக்கு பேரதிர்ச்சியை மட்டுமன்றி நாட்டுக்கு கழுவப்பட முடியாத அவமானத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

இலங்கை இப்போது பிலிப்பைன்ஸிலிருந்து வீட்டுப் பணியாளர்களை தருவிக்கின்றது என்பதை நீங்கள் சில சமயம் நம்பமாட்டீர்கள். 20 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு அவர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இவ்வாறு தனது கம்பனியில் புதிதாக இணைக்கப்பட்ட முகாமைத்துவப் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றிய கார்கில்ஸ் சிலோன் பி.எல்.சி.யின் தலைமை நிறைவேற்றதிகாரி ரஞ்சித் பேக் கூறியுள்ளதன் மூலமே இத்தகவல் வெளிவந்துள்ளது.

வளைகுடா நாடுகளிலும் மற்றும் லெபனான், ஜோர்தான் போன்ற நாடுகளிலும் வீட்டுப்பணிப் பெண்களாக பணிபுரிவோரில் 81 சதவீதமானோர் இலங்கைப் பெண்களாகவுள்ள நிலையில் இலங்கையில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்ய பிலிப்பைன்ஸிலிருந்து பெண்கள் இறக்குமதி செய்யப்படுவதை கலிகாலம் என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படியல்லாது விட்டால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு இதையிட்டு நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அற்பசொற்ப பணத்துக்காக அடித்துப் பிடித்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறந்து செல்லும் எம் பெண்கள் அங்கு படும் வேதனைகளும் சித்திரவதைகளும் அவமானங்களும் ஒவ்வொரு இலங்கையரையும் கண்ணீர் வடிக்க வைத்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸிலிருந்து இலங்கைக்கு வீட்டுப் பணிப்பெண்கள் இறக்குமதி செய்யப்படுவதானது இரத்தக் கண்ணீர் விட வைக்கின்றது.

கற்பனைகளைச் சுமந்து கொண்டு தமது குடும்ப சொந்தங்களை விட்டுப் பிரிந்து எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் இன்று பல பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று சொல்லொணாத் துன்பங்களைத் தினம் தினம் அனுபவித்து வருகின்றனர்.படிப்பறிவற்ற பலர் ஊரில் வேலைவாய்ப்புகளின்மையால் தமது குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக வேறு வழியின்றித் தெரிந்தவர்கள் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்று பிணங்களாக நாடு திரும்பும் நிகழ்வுகளும் குற்றுயிரும் குலையுயிருமாக, நடைப்பிணங்களாகச் சித்திரவதைகளுக்குட்பட்டு சித்தப்பிரமை பிடித்தவர்களாக அனைத்தையும் இழந்தவர்களாக மத்திய கிழக்கு நாட்டு முதலாளிகளின் கருக்களையும் குழந்தைகளையும் சுமந்தவர்களாக நாடு திரும்பும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது.

சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஜோர்தான்,குவைத்,லெபனான் போன்ற நாடுகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகம் என்ற போதிலும் சவூதிஅரேபியா தான் இதில் முதலிடத்திலுள்ளது.மத்திய கிழக்காசிய நாடுகளில் பணிப்பெண்களாக பணிபுரிவதற்கு இலங்கையிலிருந்து கிட்டத்தட்ட 8 இலட்சத்து 10 ஆயிரத்து 500 பெண்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.

அதேவேளை, லெபனானின் பணிப்பெண்களாக கடமையாற்றும் இலங்கை, பிலிப்பைன்ஸ் எதியோப்பியாவைச் சேர்ந்த பணிப்பெண்கள் பெரும்பாலும் தமது எஜமானர்களிடமிருந்து தப்ப முயல்வதுடன்,தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.மேலும், இலங்கை,பிலிப்பைன்ஸ்,எதியோப்பியாவைச் சேர்ந்த இரண்டு இலட்சம் பேர் வரை லெபனானில் பணிப்பெண்களாக கடமையாற்றுகின்றனர். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 95 பணிப்பெண்கள் லெபனானில் உயிரிழந்துள்ளனர்.

இவற்றுள் 45 மரணங்கள் தற்கொலையினால் ஏற்பட்டனவெனவும் 24 மரணங்கள் தமது எஜமானர்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காகக் கட்டிடங்களிலிருந்து குதித்தபோது ஏற்பட்டவையெனவும் கிழமைக்கு ஒரு பணிப்பெண் வீதம் லெபனானில் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் பணிப்பெண்களாகக் கடமையாற்றுபவர்களுக்கான கொள்கைகளை சட்டதிட்டங்களை, லெபனான் திருத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்களில் ஆண்டொன்றுக்கு 350 இற்கு மேற்பட்டவர்கள் பிணங் களாக நாடு திரும்புவதுடன், மேலும் நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாகவும் மனநோயாளர்களாகவும் திரும்பி வருகின்றனர்.

இந்த எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதற்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுப்பது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமோ, முகவர்களோ,அரசாங்கமோ எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு கற்பனைகளுடன் பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்லும் ஒருவர் 23 வருடங்கள் பணியாற்றும்போது அவர் ஒரு நோயாளியாகவே நாடு திரும்புகிறார். குணப்படுத்த முடியாத நோய் அவரைப் பீடித்துக் கொள்கிறது. மனநோய்,நீரிழிவுநோய், அதிக இரத்த அழுத்தம்,கொலஸ்ரோல் உள்ளிட்ட நோய்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

பெருமளவு பணிப்பெண்கள் கல்வியறிவுக் குறைவால் அல்லது அக் கறையின்மையால் வேலை ஒப்பந்தத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைக் கவனிப்பதில்லை. எனவே, ஒப்பந்தத்தை மீறும் எஜமானர்கள் பணிப்பெண்களை உரிமைகளற்ற அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகின்றனர். ஒப்பந்தத்தை மீறும் தொழில் வழங்குநர் மீது நடவடிக்கையெடுக்கப் போனால் நிறையப் பணமும் அதிக காலமும் எடுக்கும் என்பதுடன், சித்திரவதைகள்,கொடுமைகளை அனுபவிக்க வேண்டி வரும் என்பதால் பல பணிப்பெண்கள் தமது தாய்நாட்டிற்கே தப்பி வந்து விடுகின்றனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் பணிப்பெண்களாக கடல் கடந்து செல்கின்றவர்கள் அங்கு அடிமையிலும் கேவலமாக நடத்தப்படுவது அவ்வப்போது வெளிவந்த, வருகின்ற தகவல்களிலிருந்து அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.

குடும்ப சூழலைக் கருத்திற்கொண்டு வேலைதேடிச் செல்லும் பணிப்பெண்கள் வயது வித்தியாசம் பாராது பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்படுவது பகிரங்க இரகசியமாகவே இருந்து வருவது ஒருபுறமிருக்க உடல்ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொள்கின்ற சம்பவங்கள் கொடிய உள்ளம் படைத்த வக்கிரப்புத்தியுடைய எஜமானர்களால் அரங்கேற்றப்பட்டு வருவதும் ஆணி அறையப்பட்ட ஆரியவதி போன்ற பெண்களின் மூலம் உலகம் அறியக்கூடியதாகவிருந்தது.

பணிப்பெண்கள் மீதான சித்திரவதைகள்,கொடுமைகள்,வீண்பழிகள்,வக்கிரத்தன்மை,ஆணிகளையும் இரும்புக் கம்பிகளையும் உடலில் ஏற்றி இன்பம் காணும் அளவிலான இரக்கமில்லா இரும்புக்குணம் படைத்தவர்களின் கொடுமையான செயற்பாடுகள் இன்று உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த 19 வயதேயான ரிசானா நபீக்கிற்கு 4 மாதக் குழந்தையைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இக்குற்றச்சாட்டுத் தொடர்பிலும் சவூதிஅரேபிய உயர்நீதிமன்றம் ஒரு சாராரின் குற்றச்சாட்டை மட்டுமே கவனத்திற்கொண்டு செயற்பட்டுள்ளது. மொழிப்புலமையில்லாத ரிசானாவின் கதி அதோகதி என்ற நிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டு கடந்த 3 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். இவரின் மரணதண்டனையை இரத்துச் செய்து மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசுக்கு ஜனாதிபதி, அரசியல் கட்சிகள், மனிதஉரிமை அமைப்புகள், மத அமைப்புகள் என பல தரப்பினரும் வேண்டுகோள்கள் விடுத்துள்ளபோதும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவேயுள்ளது.

இதேபோல் எத்தனையோ இலங்கைப் பணிப்பெண்கள் துயரங்களை அனுபவித்து வந்தபோதிலும் அது தொடர்பிலான தகவல்கள் வெளியில் வருவது குறைவாகவேயுள்ளது.

இது இவ்வாறிருக்க, மார்ச் மாதம் சவூதியின் தலைநகரான றியாத்திற்கு பணிப்பெண்ணாகச் சென்ற எல்.ஆரியவதியின் நிலையும் சோகமானது. இந்த ஏழைப்பெண் தனது கனவெல்லாம் நனவாகப்போவதாக நினைத்தார். அக்கனவு கானல் நீராகிப்போய் உடலில் 24 இரும்பு ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையிலேயே இலங்கை வந்து சேர்ந்தார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போது சவூதி அரேபியாவுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் தமக்கேற்பட்ட நிலைமை தொடர்பாகக் கூறுகையில்;

பணிப்பெண்களாக செல்வோர் வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்றனர். அடி, உதை, தாங்க முடியாத தண்டனைகள், உணவு வழங்கப்படாமை ஆகிய சித்திரவதைகளுக்கு உள்ளாகுவோரை சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. எம்மைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களை தூதரகங்கள் கைவிட்டு விடுகின்றன எனக் குற்றம்சாட்டினார்கள்.

இலங்கையைச் சேர்ந்த சுமார் 18 இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் தொழில்புரிகின்றனர். இவர்களில் 70 வீதமானவர்கள் பெண்களாவர்.

கடந்த வருடம் மாத்திரம் சவூதி அரேபியாவுக்கு 77 ஆயிரத்து 827 பேர் பணிப்பெண்களாக சென்றுள்ளனர். இவர்களில் எத்தனை பேர் இவ்வாறான கொடுமைகளில் சிக்கித் தவிக்கின்றனர் என்பது மறைந்து கிடக்கும் உண்மையாகவே இருக்கிறது.

2004ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டுவரை 6741 துன்புறுத்தல் சம்பவங்களும் 14 கொலைச்சம்பவங்களும் 47 தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.

இதேவேளை கடந்த 270 நாட்களுக்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றவர்களுள் 253 பேர் பிணமாக இலங்கை திரும்பியுள்ளனர். அதாவது கடந்த ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 253 சடலங்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

எனவே பணிப்பெண்களின் எதிர்காலம் தொடர்பில் தூதரகம், அதனைவிட முகவர் நிலையங்களும் இது தொடர்பில் உரிய நடடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

விளம்பரங்களினூடாக வறுமைக்கோட்டினுள் வாழ்கின்ற அப்பாவிப் பெண்களை மயக்குகின்ற மேற்படி முகவர் நிலைய அதிகாரிகள் தம்மை நம்பி வருகின்ற பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி தமது வலையில் சிக்கவைத்து வெளிநாட்டு எஜமான்களுக்கு இரையாக அனுப்புவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

எனவே வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவது தொடர்பில் அரசு கடுமையான சில சட்டதிட்டங்களை அமுல்படுத்தவேண்டும். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்வதுடன், அவர்களால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெண்களில் யாராவது சித்திரவதைகளுக்கு, உயிரிழப்புகளுக்கு ஆளானால் சம்பந்தப்பட்ட முகவரே பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அறிவிக்கவேண்டும்.

அத்துடன், பணிப்பெண்களாக செல்வோருக்குரிய வயதுக்கட்டுப்பாடொன்றை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பதுடன் சம்பந்தப்பட்ட நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாக இலங்கைப் பணிப்பெண்களின் நலன்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கேற்ற வகையில் மனிதநேயம் மிக்க அதிகாரிகளை அங்கு நியமிப்பதுடன், மாதத்திற்கு ஒரு தடவை பணிப்பெண்களின் குறைநிறைகளைக் கேட்பதற்கான ஒன்றுகூடல்களையும் நடத்தவேண்டும்.

அதைவிடுத்து பாதிக்கப்பட்டு பிணங்களாக, நடை பிணங்களாக, மனநோயாளிகளாக, குற்றுயிரும் குலையுயிருமாக நாடு திரும்புவோருக்கு நஷ்டஈடுகளை வழங்குவதாலேயோ, கவலைகள், கண்டனங்களை தெரிவிப்பதாலேயோ எந்தவித நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்