/* up Facebook

Nov 9, 2010

உதவுங்கள்! ரிசானா நபீக் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்! - வேறோனிக்காரிசானா நபீக் திருகோணமலையில் பிறந்து இன்று சவுதி மரணதண்டனைச் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஒரு ஏழை இளம் பெண்.

2005 இல் சவூதிக் குழந்தையொன்றைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை ரியாத்திலுள்ள உயர்நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் அரபு நியூசுக்குக் சமீபத்தில் கூறியிருந்தது தெரிந்ததே.

இனியும் சட்டரீதியில் மேன்முறையீடு செய்யமுடியாத நிலையில், அவருக்கான கருணை மனு செய்யப்பட்டுள்ளது. பல சர்வதேச நிறுவனங்கள் ரிசானா விடயத்தை கருணையுடன் அணுகுமாறு சவுதியை வேண்டிக்கொண்டபோதும் சவுதி நீதித்துறை ரிசானாவுக்கு தண்டனை வழங்குவதில் உறுதியாகவே உள்ளதாக தெரியவருகிறது. சர்வதேச மன்னிப்புச் சபையும் இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகிறது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சமீபத்தில் ரிசானாவின் விடுதலையை கோரி சவுதி மன்னருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இது விடயத்தில் தனது சினேகபூர்வமான உறவை பிரயோகித்து இத்தண்டனையைய நிறைவேற்றாது தடுக்கும்படி சர்வதேச நிறுவனங்களும், இலங்கை நிறுவனங்களும் கோரி வந்தன. இளவரசர் சார்ள்ஸ் இது விடயத்தில் சவுதி அரசுக்கு தனது கோரிக்கையையும் முன்வைத்திருப்பதாக பல ஊடகங்களில் இந்த வாரம் செய்திகள் வெளிவந்தபோதும் அதனை பூரணமாக உறுதிசெய்யமுடியவில்லை.

தவாதாமி மேல் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் அப்துல்லா அல் ரோசாய்மி தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நீதிபதிகள் குழாம் ரிசானா றபீக் 4 மாதக் குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டியிருந்தது. நய்வ் ஜிசியான் காலவ்வின் ஆண் குழந்தையையே கொன்றதாக 2007 ஜூன் 16 இல் ரிசானாவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தது.

ரிசானா மேன்முறையீடு செய்ய முடியுமென நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனை அவர் செய்திருந்தார். அவரின் வழக்கு உயர்நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்பட்டபோது ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் குழுவானது சவூதிஅரேபிய சட்ட நிறுவனமான காதேப் அல்சமாரிக்கு ரிசானாவின் சார்பில் ஆஜராகுமாறு 1,50,000 சவூதி ரியாலை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர் அல் சமாரியின் மேன்முறையீடு தொடர்பாக மேலும் விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தவாதாமி நீதிமன்றத்துக்கு வழக்கை மீண்டும் பாரப்படுத்தியிருந்தது.

அல் கட்டாபியில் வீட்டுப்பணிப் பெண்ணாக வேலை செய்வதற்காக 2005 மே மாதம் 4 ஆம் திகதி ரிசானா நபீக் ரியாத்திற்குச் சென்றார். அவரின் கடவுச்சீட்டின் பிரகாரம் 1982 பெப்ரவரி 2 அவரின் பிறந்த திகதியாகும். ஆனால், அவர் உண்மையில் பிறந்தது 1988 பெப்ரவரி 4 இல் என்று பிறப்புச் சான்றிதழில் உள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட அந்த சந்தர்ப்பத்தில் அவரது வயது 17 மட்டுமே.

2005 மே 22 இல் அவர் குழந்தையைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்படுள்ளது. அதே தினத்தில் தவாதாமி பொலிஸ் அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரின் வாக்குமூலத்தை பதிவுசெய்ததில் பல குழறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரது வாக்குமூலத்தை மொழிபெயர்த்தவரை மீள் விசாரணைகளுக்காக மீண்டும் கொணரமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த வழக்குக்குத் தீர்வுகாண அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியைத்தான் நாடியுள்ளதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பசில் பெர்னாண்டோ ஞாயிற்றுக்கிழமை ஹொங்கொங்கிலிருந்து அரபு நியூசுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அல் கட்டாபிக்கு மனிதாபிமான அடிப்படையில் ரிசானா விவகாரத்தை பரிசீலனைக்கு எடுத்து மன்னிப்பு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய தருணத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பாக நாம் கருத்து எதனையும் கொண்டிருக்கவில்லை என்று ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட இராஜதந்திரி கூறியுள்ளார்.

சிறையில் வார இறுதியில் ரிசானாவைப் பார்க்கச் சென்ற சமூகப்பணியாளர் ஒருவர் கூறுகையில்; ரிசானா தனது பெற்றோர், குடும்பத்தினரைப் பார்ப்பதற்கான கவலையுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இறுதித் தீர்ப்புத் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிந்துள்ளபோதும் அவர்கள் அவருக்கு அதனை கூறியிருக்கவில்லை. நானும் கூறவில்லை என்று அந்தப் பணியாளர் கூறியுள்ளார்.


மூதூரில் தொழுகை
30 ஒக்டோபர் அன்று மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் றிசானா நபீக்கின் விடுதலைக்காக மைதானத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டனர்.

சிறுவர்கள் முதல் கூடிய மக்கள் இறைவனிடம் அழுது பிரார்த்தனை செய்தனர். மக்கள் ஒன்றுகூடி றிசானா நபீக்கின் விடுதலைக்காக கண்ணீர் மல்கி அழுது புலம்பிய காட்சி மக்கள் எல்லோரையும் மனம் உருகச் செய்தது.

சவூதி தூதரகம், சவூதி மன்னர் மற்றும் பணிப்பெண்ணாக பணிபுரிந்த குடும்பத்தார்கள் உள்ளிட்ட வர்களுக்கான கையெழுத்து விடுதலைக்கான மகஜர்களையும் அனுப்புவதற்கான நட வடிக்கை இடம்பெற்றன.


சவுதியில் மரணதண்டனையை அளிக்கும் அப்துல்லாஹ் அல் பிஸியின் (Abdullah Al-Bishi) யின் வாளுக்கு வேலை வந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சவுதியில் உத்தியோகபூர்வ கொலைத்தண்டனை நிறேவேற்றுனரான அப்துல்லா அல் பிஸிமக்கள் சூழ்ந்த இடத்தில் பல தலைகளை வெட்டித்தள்ளியவர். தலைவெட்டுவதில் நிபுணரான அவர் தனது தொழில் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பல பேட்டிகளில் தெரிவித்த ஒருவர் அவர்.உங்கள் எல்லோரையும் இலங்கைக்கு உயிருடன் வந்து பார்க்க ஆசைப்படுகிறேன் ‐ சவப்பெட்டியினுள்ளிருந்து அல்ல‐ றிஸானா நபீக்

என்னுடைய அன்பு நிறைந்த இலங்கைச் சகோதர சகோதரிகளே!

சவுதி அரேபியாவிலோ அன்றி இந்த உலகத்திலோ இது தான் எனது கடைசி ஹஜ் பெருநாளாக இருக்கக்கூடும். என்னுடைய முடிவு விரைவில் நிச்சயிக்கப்பட்ட விடும். நான் நிரபராதி எனக்காணப்பட்டால் எனது வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டு விடுவேன். அல்லாவிட்டால் நான் சிரச் சேதம் செய்யப்படுவேன். மூதூர்க் கிராமத்தில் வறுமையாலும் பட்டினியாலும் பீடிக்கப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து தனது பெற்றோரையும் சகோதரர்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும் என்ற பிடிவாதத்துடன் புறப்பட்ட அந்த யுவதியின் முடிவு அதுவாகத் தானிருக்கும். ஆரம்பத்தில், என்னை சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக அனுப்பினால் எமது குடும்பத்திற்கு துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என அந்த மனிதர் தன்னை வற்புறுத்துவதாக அப்பா அம்மாவிடம் முணுமுணுத்தார்.

எனது அம்மா அதிர்ச்சியடைந்தவராக "அவள் ஒரு சிறு பெண். அவளை எப்படி அவ்வாறு அனுப்ப வேண்டும்;" என மறுத்து விட்டார். நாட்கள் செல்லச்செல்ல அந்த மனிதரின் நச்சரிப்பால் அப்பா அதற்கு உடன்பட்டார். ஆனால் அம்மா அதற்குச் சம்மதிக்கவி;ல்லை. சாப்பிட்டால் என்ன பட்டினி கிடந்தால் என்ன நாங்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்தே இருப்;போம் என அம்மா கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆம் அது உண்மை தான். நாங்கள் சில சமயங்களில் சாப்பிட்டோம். பல சமயங்களில் பட்டினியாகவே கிடந்தோம். நாங்கள் ஒரு போதும் வயிறார உண்டதில்லை.

பசியை நான் தாங்கிக் கொள்ளும் போது நான் நோன்பு இருப்பதாகவே நினைத்துக் கொள்வேன். ஆனால் அந்த நேரத்தில் எனது இளைய சகோதரர் பசிக்களையால் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டு அப்பா எதையாவது கொண்டு வரமாட்டாரா என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாமலிருந்தது.

இதன்காரணமாக நான் எனது மனதை மாற்றிக் கொண்டு, எனது பெற்றாரிடம் எமது குடும்பத்தின் இக்கட்டான நிலைமையை எடுத்துக் கூறி பணிப்பெண்ணாக நான் சவுதி அரேபியாவுக்குப் புறப்படத் தயார் எனச் சொன்னேன். எனது முடிவு அப்பாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அம்மாவின் முகத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி முகத்தை மறைத்தது. நான் சொன்னேன் "கவலைப்படாதீர்கள் உம்மா. நான் என்னைப் பார்த்துக் கொள்வேன். எப்போதுமே நாங்கள் இவ்வாறு வறுமையில் உழல முடியாது. மூத்த பிள்ளை என்றளவில் குடும்பம் குறித்து பொறுப்புக்கள் எனக்கும் உண்டு. அதை நான் செய்கிறேன்;" என்று கூறினேன்.

திருமலை நகரத்தின் ஒரு பகுதியில் இருந்ததைத் தவிர பெரிய நகரம் ஒன்றிலும் நான் ஒரு போதும் வாழ்ந்ததில்லை. பெரிய பஸ் நிலையத்தையோ அல்லது பெரிய ரயில் நிலையத்தையோ நான் ஒரு போதுமே கண்டதில்லை. திருமலை நகரத்தின் சீனன்குடா விமானப்படைத்தளத்திருந்து விமானங்கள் பறப்பதைக் கண்டிருக்கிறேன். என்றோ ஒரு நாள் விமானத்தில் ஏறுவேன் என்று நான் கற்பனை பண்ணிக் கூடப் பார்த்ததில்லை.

மிகத் தொலைவிலுள்ள ஒரு நாட்டுக்குத் தன்னந்தனியே பிரயாணம் செய்வதையிட்டு என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன். ஒவ்வொன்றுமே அச்சமூட்டுகிற ஒன்றாகவே எனக்கு இருந்தது. மீதி ஒரு வரலாறாகி இருக்கிறது. ஆம் வரலாறு. றிஸானா நபீக்கினுடைய வரலாறு. நீங்கள் எல்லாரும் அறிந்தது தான். நான் இழைக்காத தவறுக்காக கடந்த ஐந்து வருடங்களாக இந்தச் சிறையில் நான் அடைபட்டிருக்கிறேன்.

விரைவில் நான் விடுதலை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம். அதைப்பற்றிப் பரவாயில்லை. ஆனால் நான் ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அது என்னவென்றால் நான் ஒரு குற்றமும் இழைக்காதவள் என்பது தான். அந்தக்குழந்தையை நான் ஒரு போதும் கொல்லவில்லை. அந்த அப்பாவிக் குழந்தை மீது அவ்வாறான ஒரு பேய்த்தனமான நடவடிக்கையை மேற்கொள்ள எனக்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை. அந்தச்சிறுவனுக்கு நான் உணவூட்டியது அது தான் முதன் முறையுமல்ல.

அன்று அவனை என்னிடம் தந்த போது அவர்களது உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் நான் இந்த அரபு நாட்டுக்கு வந்தது மாடு போல் உழைத்தாவது எனது குடும்பத்தாருக்கு மூன்று வேளை உணவு போடத்தான். எனது பணி உடன்படிக்கையில் என்ன உள்ளது என்பதை நான் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. எனினும் இரவோ பகலோ எனக்குத் தரப்படும் எந்த வேலையையும் நான் செய்யத் தயாராக இருந்தேன்.

குழந்தைக்கு ஏதோ நடந்து விட்டது என்பதை அறிந்ததும் எஜமானி வீரிட்டுக் கத்தினாள். கூக்குரலிட்டாள். கோபத்துடன் அராபிய மொழியில் என்னை வைதாள். அவள் என்ன பேசினாள் என்பதை நான் அறியேன். எஜமானும் அந்த நேரத்தில் வந்து விட்டார். அடுத்த கணமே இடம் வலம் என நான் அறையப்பட்டேன். ஒரு பந்தை உதைப்பது போல என்னை உதைத்தனர். அல்லா அல்லா எனக்கத்தியபடியே தவறாக நான் எதையும் செய்யவில்லை என நான் தமிழில் சொன்னேன். ஆனால் நான் சொன்னது எதுவும் அவர்கள் காதில் ஏறவில்லை.

அவர்கள் பலமுறை பலருக்கு தொலைபேசி எடுத்தார்கள். சில உறவினர்கள் பெரும் சத்தம் போட்டுக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். நான் தேம்பியழுதபடி அந்த ஹோலின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தேன். மனிதத் தன்மையற்ற அவர்களுடைய தாக்குதலைத் தாங்க முடியாதவளாக இருந்தேன். நாங்கள் ஏழைகள் தான். அதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் கிரிமினல்கள் அல்ல. என்னுடைய தாயோ அல்லது தந்தையோ என்னை ஒரு போதும் தொட்டதில்லை.

அவர்கள் குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு போகும் அவசரத்தில் இருந்தார்கள் என உணர்ந்தேன். அதேவேளை பொலிஸாரின் வாகனம் ஒன்று சைரன் ஒலியை எழுப்பியவாறு வந்து சேர்ந்தது. அங்கிருந்தவர்கள் என்னைச் சுட்டிக்காட்டி பொலிஸாரிடம் ஏதோ பேசினார்கள்.

எனக்கு நடுங்கத் தொடங்கியது. நான் சிறு வயதிலிருந்தே பொலிஸாரைக் கண்டால் அஞ்சுபவள். ஏன்னுடைய பாடசாலை நாட்களில் பொலிஸாரைக் கடந்து செல்லவேண்டி ஏற்பட்டால் அந்நேரத்தில் பயம் காரணமாக நான் கதைப்பதை நிறுத்துவதுடன் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவேன். இப்போது நான் உணர்ந்தேன் நான் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளேன் என. பொலிஸார் என் கைகளில் விலங்கை மாட்டினர். நான் அழுதேன். தங்களுடன் வரும்படி அவர்கள் என்னைக் கேட்டனர். நான் மறுத்தேன்.

அவர்கள் சங்கிலியைப்பிடித்து இழுத்துக் கொண்டு அராபிய மொழியில் என்னைத் திட்டினர். அது மிகவும் வலி தருவதாக இருந்தது. நான் அவர்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். எனது மனம் மூதூருக்குப் பறந்து போனது. அன்பான உம்மா, உங்களுடைய மகளுடைய கதி இப்போது என்னவென்று அறிய நேர்ந்தால் உங்களுடைய இருதயம் நின்று விடும்.

ஆனாலும் உம்மா நான் எந்தவொரு தீங்கையும் இழைக்கவில்லை. அதனால் நீங்கள் கவலைப்படாதீர்கள்? இதனை நான் அல்லாவிடம் விட்டு விட்டேன். இந்த அப்பாவியான வெள்ளாட்டை அந்தச் சிங்கங்களிடமிருந்து அவர் தான் காப்பாற்ற வேண்டும். நான் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் தமக்கிடையே இது குறித்து ஏதோ வாதித்தார்கள்.

அரபு மொழியில் எழுதப்பட்ட சில காகிதங்களைத் தந்து என்னை ஒப்பமிடச் சொன்னார்கள். நான் தமிழில் ஒப்பமிட்டேன். வேறு சில பெண்களுடன் சேர்த்து நான் சிறையில் அடைக்கப்பட்டேன். அவர்கள் என்னைச் சுற்றி இருந்தபடி என்னை அழுவதை நிறுத்தும்படி கேட்டார்கள். எனக்கு அவர்கள் உதவுவதாக வாக்குறுதி அளித்தார்கள். அவர்கள் என்னிடம் வேறு மொழியில் கேள்விகளைக் கேட்டார்கள். நான் தமிழில் விளக்கமளித்தேன். அவர்கள் புரிந்து கொண்டார்களா இல்லையா என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் அவர்களில் ஒருவரோ இருவரோ அரபு மொழியில் நன்றாகப் பேசக்கூடியவர்களாக இருந்தனர். அங்கு இரண்டு சிங்களப் பெண்களும் இருந்தார்கள் அவர்களிடமிருந்து பின்னர் நான் சிங்களத்தைக் கற்றுக் கொண்டேன். அவர்கள் சிறிலங்கா? சிறிலங்கா? என என்னை விசாரித்தனர். நான் ஆம் என்று தலையசைத்தேன்.

அவர்களுள் வயதானவரான ஒருவர் என்னை தன்னுடன் மார்பில் அணைத்துக் கொண்டார். அப்போது எனது தாயின் அரவணைப்பில் இருப்பது போன்று நான் உணர்ந்தேன். இரண்டு நாட்களுக்குப்பிறகு நான் இன்னொரு விசாரணை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். கறுத்த சற்றே பருத்த ஒரு இந்தியர் என்னிடம் தமிழில் சில கேள்விகள் கேட்டார். அந்தத் தமிழ் என்னுடைய தமிழ் அல்ல. அது நாங்கள் சினிமாவில் வழமையாகக் கேட்கிற தமிழும் அல்ல. சற்று வித்தியாசமானது. நான் முடிந்தளவு அவருடைய கேள்விகளைப் புரிந்து கொண்டு அழுதவாறே பதிலளித்தேன். நான் சவுதியில் இறங்கிய இரண்டு வாரத்தின் பின்னர் முதன் முதலில் தமிழ் பேசக் கிடைத்த சந்தர்ப்பம் அது.

ஆனால் அந்த இந்திய மனிதர் எனது கதையை முழுவதுமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்று நான் நினைக்கவில்லை. நான் சொன்னவற்றை அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் அவர் மொழி பெயர்த்துச் சொன்னார். அவ்வதிகாரி அவரிடமும் என்னிடமும் பல கேள்விகளைக் கேட்டார். இறுதியாக அவர் என்னைக் கையொப்பமிடச் சொன்னார். நான் கையொப்பம் இட்டேன்.

என்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் என்னை அனுப்பி விடுவார்கள் என்றே நான் நினைத்திருந்தேன். இல்லை. அவ்வாறு நடக்கவில்லை. அது எனது சோதனைக் காலத்தின் முடிவு அல்ல. அது தான் ஆரம்பம். அவ்வாறு ஆரம்பித்த விடயங்கள் விரைவிலேயே துன்பகரமான முடிவுக்கு இட்டுச் சென்றது.

அல்லாவிடம் மன்றாடுவதையும் அழுவதையும் தவிர எனக்கு வேறு எந்த வழியும் இல்லாதிருந்தது. எனது எல்லாப் பிரார்த்தனைகளிலும் அதனையே நான் செய்தேன். நான் படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் அல்லாவிடம் எனது விடுதலைக்காகப் பிரார்த்தித்துக் கொண்டே படுக்கைக்குச் செல்வேன். இந்த நாள் எனது விடுதலைக்கான நல்ல செய்தியைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் அதிகாலையில் தொழுவதற்காக எழுந்து விடுவேன்.

சிறைச்சாலையில் குர்ஆனை வாசிப்பதற்கும் தொழுவதற்கும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போதைய நிலைமை எனக்கு அதிக நம்பிக்கையைத் தருவதாக இல்லை. எனது எஜமானியின் வீட்டில் பணியாற்றிய இரண்டு வாரங்களைவிட மிக அதிகமான நாட்களை நான்இந்தச் சிறையில் கழித்து விட்டேன். என்னுடைய பெற்றார் இங்கு வருகை தந்தனர்.

அவர்களுடைய வருகை எனக்கு நிறைந்த மகிழ்ச்சியைத் தந்தது. என்னால் அவர்களுடன் அதிகம் பேச முடியவில்லை. ஆனால் அழ மட்டுமே முடிந்தது. நான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. ஆனால் எனது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை என்னால் தடை செய்ய முடியவில்லை. அதேவேளை எனது வாயிலிருந்து சொற்கள் இலகுவாக வெளியே வரவுமில்லை. அவர்களும் தேம்பித் தேம்பி அழுதபடியே தான் பிரிந்து சென்றார்கள்.

எங்களுடை விதியை நொந்து கொண்டே அவர்கள் போனார்கள். மறுபுறத்தில் எனது கழுத்தில் கத்தி இறங்கும் வரையும் எனது இறுதி மூச்சு உள்ளவரையும் இந்த முகம் தெரியாத துரதிர்ஷ்டம் பிடித்த பெண்ணிற்காக தங்களது பணத்தையும் நேரத்தையும் செலவழித்த அனைவருக்காகவும் அவர்களுடைய நல்வாழ்க்கைக்காகவும் நான் அல்லாவிடம் பிரார்த்திப்பேன்.

அதேபோல் எனக்காகப் பிரார்த்தித்த இலங்கையின் சகோதர சகோதரிகளையும் நான் அறிவேன். இங்கு தங்களுடைய பிரார்த்தனைகளின் போது என்னை நினைவு கூர்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் நான் நினைவு கூர்கிறேன். ஹஜ் முடியும்வரை எவரும் சிரச்சேதம் செய்யப்பட மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். இறுதியாக என்னுடைய விடுதலைக்காக தங்களாலான என்னென்ன முயற்சிகளைச் செய்யலாமோ அவ்வளவு முயற்சிகளையும் செய்த இலங்கையின் ஜனாதிபதி மற்றும் முகமறியாத ஆண்களும் பெண்களுமான பலருக்கும் எனது நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

உங்கள் எல்லோரையும் இலங்கைக்கு உயிருடன் வந்து பார்க்க வேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன். சவப்பெட்டியினுள்ளிருந்து அல்ல. அது முடியாது போனால் நான் உங்களை சொர்க்கத்தில் சந்திப்பேன். நிச்சயமாக அங்கு எனக்கு ஒரு இடம் இருக்கும். ஏனென்றால் உண்மையாகவே முழுமையாக நான் ஒரு அப்பாவி.

சலாம்.

றிஸானா நபீக்
(இது உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.)

-நன்றி : எம்.எஸ் ஷாஜ்ஜகான்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்ப்பிரதேசத்தைச் சேர்ந்த றிஸானா நபீக்கிற்கு சவுதி அரேபிய உயர் நீதிமன்றம் 2007 ஜுன் 16இல் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் பணிப்பெண்ணாகக் கடமை புரிந்து வந்த அவர் 2005ஆம் ஆண்டு மே மாதம் அவரது பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கொன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே இம் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர் மீதான குறுக்குவிசாரணையின் போதோ அல்லது நீதிமன்ற விசாரணையின் போதோ அவர் சட்டத்தரணிகளுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை0.

அவருடைய பராமரிப்பில் இருந்த குழந்தை இறந்த போது நிஸானா றபீக்கிற்கு வயது 17. தான் 1988ஆம் ஆண்டே பிறந்ததாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். எனினும் அவருடைய பாஸ்போர்ட்டில் 1982 ஆம் ஆண்டு எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. ( மத்தய கிழக்கிற்கு பணிப்பெண்களை அனுப்பும் பல ஏஜென்சிகள் வயது மதம் போன்றவற்றில் பாஸ்போர்ட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி அனுப்புவதென்பது இலங்கையில் வழமை) அவருடைய வயது குறித்து மருத்துவ பரிசோதனைகள் எதுவும் நடாத்தப்படவில்லை. அவருடைய பிறப்புச்சான்றிதழைச் சமர்ப்பிக்க வாய்ப்பும் வழங்கப்படவில்லை என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.

றிஸானா மீதான மரண தண்டனையை ரத்துச் செய்வதில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகள் பணியகம் உட்படப் பல அமைப்புக்கள் முயற்சி எடுத்து வருகின்றன. 2007இல் 76 வெளிநாட்டவர்கள் உட்பட 158 பேருக்கு மரண தண்டனை வழங்கியிருக்கிறது. 2008இல் 40 வெளிநாட்டவர் உட்பட 102 பேருக்கு மரண தண்டனை வழங்கியிருக்கிறது. 2009இல் 19 வெளிநாட்டவர் உட்பட ஆகக்குறைந்தது 69 பேருக்கு மரணதண்டனை வழங்கியிருக்கிறது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

 ரிசானா ஆதரவு முகநூல்


ஒப்பமிட 

Save Rizana


முகப்புப் பக்கம் http://www.facebook.com/group.php?gid=2522506930 

2 comments:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அவர் உண்மையில் அப்பாவியா என்பதை நிறுபிக்க சட்டத்தில் வழி இல்லையா. அவர் குற்றவாளி இல்லையென்றால், தண்டனை கிடைக்காமல் இருக்கட்டும்.

ஆனால் குற்றவாளிதான் என்றால் குழந்தையை கொன்றமைக்கு சரியான தண்டனை மரணம் அல்ல,...

colvin said...

இஸ்லாமி சட்டப்படிபார்த்தால் அவருக்கான தண்டனை சரியானதுதான். கொலைக்கு மரணதண்டனை என்பதே இஸ்லாமிய சட்டம். ஆனால் மனித நேய அடிப்படையை கருத்திற்கொண்டால் மிகவும் தவறானது என்பதே எனது கருத்து. அவருக்காக பிரார்தனை செய்வோம். நிச்சியம் அவருக்கு விடுதலை கிடைக்கும்.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்