/* up Facebook

Nov 8, 2010

இஞ்சித் தேத்தண்ணியும் குருட்டுப் பட்சியும்....! -நிலா


படபடவென்று
இறக்கையை அடித்துக் கொண்டு
அந்தரத்தில் துடிக்கின்ற அந்த இரவுப் பட்சி,
இரவின் கவிந்து போன நரையை
ரசிகத் தன்மைக்கு அப்பாலே எட்ட நின்று பார்க்கிறது-
இருந்தும் கூடக்குறைய அதன் மையப்புள்ளிக்குள்
அதனால் இறங்கமுடியவில்லை.

நான்
சாய்வு நாற்காலியைத் தேர்ந்தெடுத்து,
ஆயாசமாக உட்கார்ந்து கொண்டு
இஞ்சித் தேத்தண்ணியை ருசிக்கிறேன்.
எனக்கு எல்லாவற்றிலும் ரசனையுண்டு.

அந்த மாமரத்தில்,
தளிர் வரத்தொடங்கி நாளாகீற்று-
மாம்பூ பூத்துக் குலுங்கும் குடலையின் உன்னத வாசம்...!

அன்றைய மாலை,
இருண்டு போன சூரியனின் அழைப்பை மீறி
வௌவால்களை மரத்துக்கு அழைக்கிறது.
எங்கிருந்தோ நெடிய வீச்சத்துடன் வரும்
பீத்தோவனின் மேற்கத்தைய இசையொன்றோடு
என் இஞ்சித் தேத்தண்ணியும் தீர்ந்து போகிறது.
தீர்ந்து போன படியினால்,
இன்னொரு நாள்
இஞ்சித் தேத்தண்ணியைக் குடிக்கமாட்டேன் என்றதிலை.
என் சுரனையில்லாத் தனம்
என் போலவே என்னையும் ஏமாற்றிக் கொண்டிருந்தது.

அந்த இராப் பட்சி,
இன்னமும் இறக்கையை அடித்து ஓயவில்லை.
அம்மாவோ, யாரோவோ வந்து
வெள்ளிப் பேலா நிறைய,
பாயாசம் கொண்டு வந்து தந்தார்கள்.
இப்போதெல்லாம் -யாரையும்
நிமிர்ந்து பார்ப்பதில்லை என்றானதன் பின்பு,
வந்து பாயாசம் கொடுத்த
'அம்மாவையும்' இனங்கண்டு கொள்ளவில்லை.
தேத்தண்ணீரையும் பாயாசத்தையும்
நான் ,
குழப்பிக் கொள்ளவும் விரும்பவில்லை.
அந்த அம்மாவோ யாரோவோ போனதின் பின்,
நான் வாரப்பத்திரிக்கையை
தலைகீழாகப் பார்க்கத் தொடங்கினேன்.

இன்னும் யாரும்
வெளி வராந்தாவின் வெளிச்சக் குமிழைப்
போட்டு விடவில்லை.
ஒரே நுளம்பு!
காதுக்குள் நுளம்புகள் போடும் கூச்சல்-
அதுவும் இன்னொரு இசை,
பீத்தோவனிலும் சிறந்ததா இது?
யாரையும் நான் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை.
ஆனாலும் ரசிக்கத் தவறவில்லை.

இன்னும்..
அந்த இரவுப் பட்சி
இறக்கையை அடித்துக் கொண்டே இருந்தது,
படபடப்புடன்!
ஒரு வேளை குருட்டுப் பட்சியோ??

கையிருப்பிலிருந்த
வெள்ளிப் பேலா நிறைந்த -
முந்திரிகைப் பருப்புத் தூவிய -
பாயாசமும் தீர்ந்து போயிற்று-
ஆனாலும்
அந்த முடிந்து போன
இஞ்சித் தேத்தண்ணியை நான் மறக்கவேயில்லை.

குருட்டுப் பட்சி
இறக்கையை அடித்துக் கொண்டே இருந்தது.
வெளியே நிலா வரத் தொடங்கிற்று-

வயசாலித் தாத்தா,
குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு -
உடம்புக்கு ஒத்துவராத இராக் காற்றில் உலாத்துகிறார்.

தாத்தா....அந்தா...நிலா...,
தாத்தா,
ம்ம் என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டே
ஆழ்ந்து போனார் மௌனத்துள்.
ஏன் தாத்தா கதைக்கிரிங்களில்ல...?
குழந்தை கேட்டான்.

தாத்தா,
எதோ தன் முந்திய பாலிய காலத்தை
ஞாபகப்படுத்த முனைபவர் போலே-
கண்ணைச் சுருக்கி
மூக்குக் காண்ணாடியைக் கழற்றி
பெருமூச்சொன்றை விட்டார்.
தாத்தா எதோ சொல்ல வாய் எடுப்பதகுள்,
குழந்தையைக் கையிலே
விருட்டென வாங்கிக் கொண்டு,
வராந்தாவுக்குள் ஓடி வந்தேன்.
தாத்தா ஏம்பலித்துப் போனார்.
ஒரு வேளை தான் சொல்ல வந்ததை,
குழந்தையிடம் சொல்லி முடித்திருந்தால்,
இன்னமும் இரண்டு நாள்-
அவர் கூட வாழ்ந்திருக்கலாம் !

இராக் காத்து
ஒத்து வராதெண்டு தெரிஞ்சும்
இரவுக் காத்துக்குள்ள உலாத்தினவர் -என்ற
பழியைச் சுமந்து கொண்டே மாண்டு போனார் தாத்தா.
தாத்தா செத்துப் போவார் என்றது தெரியாமலேயே
மிச்சப் பாயாசத்தின் கடைசிச் சொட்டையும்
உறிஞ்சிக் குடித்து முடித்தேன்.

நல்ல காலம்,
குழந்தையிடம் தாத்தா எதுவும் சொல்லவில்லை.
அவனுக்கு விளங்கியிருக்காது.
விளங்கியிருந்தால் வயதுக்கு வந்ததும் யோசிப்பான்-
இப்போது என் போல.
சூரியனிட்ட இருந்து தான்
சந்திரன் வெளிச்சத்தை வாங்குது.
அண்டைக்கென்னமோ பாதி வெளிச்சம் தான் சந்திரனில் இருந்தது.
சோபையிழந்த சந்திரனைப்
பார்க்கப் பிடிக்காமலேயே திருப்பிப் போய்-
சாய்மனையில் படுக்கிறேன்.
இராக் காற்று சுழன்று கொண்டு உலுப்புகிறது.

இன்னமும் இராப்பட்சி,
குருட்டுப் பட்சி,
எதுவோ ஒன்று ,
பரபரப்பாக இறக்கையை அடித்துக் கொண்டே இருக்கிறது.
ஹோ..சூ....தூரப் போ !
கத்தி, விரட்டிப் பார்த்தேன்.
பறவை அகலவில்லை.
அதன் விடா முயற்சி பிடித்திருந்தாலும் -அது
தரும் தொந்தரவு பிடிக்கவில்லை,
ஒ...கறுப்புப் பட்சியாய் இருந்ததினால்
குருட்டுப் பட்சியாயும் இருக்குமென்று
நினைத்தது என் தவறு தானோ??

இப்போது எனக்கு
சுவைப்பதற்கு பாயாசமும் இல்லை,
இஞ்சித் தேத்தண்ணியும் இல்லை.
ஆனால் இன்னொரு நாள்
நானும் போடுவேன் இஞ்சித் தேத்தண்ணி !

இப்போதைக்கு ஆராவது,
என்னை ஒரு பாலைவனத்திலே
உட்கார வைத்து
கதை சொல்லி வருடி விட்டால்
பரவாயில்லை போலிருந்தது.

இஞ்சித் தேத்தண்ணி பற்றி
கனவு கண்டு கொண்டே உறங்கிப் போனேன்.

இன்னமும் கனவு வெளியிலே
குருட்டுப் பட்சி சிறகடித்துக் கொண்டிருந்தது!


நன்றி - நிலாவின் முகநூல்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்