/* up Facebook

Nov 1, 2010

பதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுக் கதைகளாலான ஓர் ஆவணப்படம் - குட்டி ரேவதி

‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’

அரசு தபால்களை அனுப்பும் போது அதன் மீது, ‘கமுக்கம்’ என்று அச்சிட்டுத் தருவார்கள். அதாவது அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் இடையிலான ரகசியம் பொதிந்தது என்று பொருள்படும். அடித்தட்டுப் பெண்களிடமும் அத்தகைய சில சிறப்பான குணங்கள் உண்டு. துயரங்களை கமுக்கமாக வைத்துக் கொண்டு அந்தத்துயரத்தின் எல்லைகளை தாமே தனியே நின்று அசாதாரணமாகக் கடந்துவிடுவார்கள். மத்தியதர வர்க்கத்துப் பெண்களைப் போலவோ மேல்தட்டுப்பெண்களைப் போலவோ, ஆதிக்கசாதிப் பெண்களைப் போலவோ பெருங்கூச்சலுடன் ‘இதோ பார்! தாவுகிறேன் பார்!’ என்று கூவுதல் அவர்களிடம் கிடையாது. அவர்கள் பெற்றிருந்த கல்வியும் சூழல்களும் அப்படி அவர்கள் கூக்குரல்கள் எழுப்பினாலும் பொதுத் தளங்களைச் சென்றடையும் வாய்ப்புகளை அவர்கட்கு வழங்குவதே இல்லை. இதைப் பெண்ணிய விவாதத்தின் ஒரு முக்கியமான புள்ளியாக வைத்துக் கொண்டு பேசினால் தான் பெண்ணியம் என்பதின் குறுக்குவெட்டுகள் புலப்படும்.

‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’ எனும் ஆவணப்படம் பதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுப் பதிவு. இதற்கான பணிகளை சென்ற ஏப்ரல் மாதம் தொடங்கினேன். என்னுடன் பணியாற்ற கோகிலா, கணேசன், சூர்யா, ஆட்டோ ராஜா ஆகியோரும் இணைந்து கொண்டனர். இந்தியாவின் சிகப்பு மாயக்கம்பளமாக இருக்கும் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் சுவர்களுக்குள்ளே நடக்கும் அநீதியைப் பற்றியது இது. இங்கு வேலைபார்க்கும் கடைநிலை ஊழியர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்துவதில் அரசு நிறுவனம் எவ்வளவு தூரம் தேங்கிப்போயிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் முயற்சியும்.

இந்நிறுவனத்தைச் சேர்ந்த கடை நிலை ஊழியர்கள் பணியில் இருக்கும்பொழுதே விபத்தாலோ பிற காரணங்களாலோ மரணம் எய்தினால், அதற்குப் பின் அவர்களின் குடும்பத்தினரை அந்நிறுவனம் என்ன மாதிரியான மரியாதைகளுடன் நடத்துகிறது என்பது அந்நிறுவனத்தின் பெயருக்குச் சற்றும் பொருத்தமில்லாதது. அதாவது, அந்த பணியாளர் உயிருடன் இருக்கும் பொழுது மற்ற பணியாளர்கள் அவருடன் ஒரு வேளை தேநீரையாவது பகிர்ந்திருப்பார். அவருடைய வீட்டிற்குச் சென்று அவர் மனைவி மக்களின் கையால் விருந்து உண்டு மகிழ்ந்திருப்பார். ஆனால் அவர் இறந்த பின்பு தன்னை நண்பராக மதித்த அந்தப் பணியாளரின் மனைவியை அதே அலுவலகத்தில் ‘கருணை வேலை’ என்ற பெயரில் கழிப்பறைத் தூய்மை செய்பவராகப் பணியில் அமர்த்துகின்றனர். அந்தப் பணியை நிரந்தரப்படுத்துவதற்குக் கூட எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் அவர் குடும்பம் என்னென்ன கஷ்டங்களைக் கடக்கிறதோ அதற்குக் கொஞ்சமும் கருணை முகம் காட்டாது கணவனை இழந்த பெண்ணையும் தந்தையை இழந்த மகளையும் மகனையும் இன்னுமின்னும் இழிநிலைக்குத் தள்ளும் நெறியற்ற வேலையையும் செய்கின்றனர். இந்தக் கழிவறைத் தூய்மை செய்யும் பணியும் நிரந்தரப்படுத்தப்படாமல் இருபத்து மூன்று வருடங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்படுகிறது.

இந்தப் பணிக்குச் செல்லும் பெண்களின் கடந்த காலக் கதைகள் வழமையாகப் பெண்களுக்கு திணிக்கப்படுவதைப் போன்ற திருமண வாழ்க்கையே. குறைவான கல்வித் தகுதியுடன் குறுக்கப்பட்டு குடும்பவாழ்வை நோக்கி அனுப்பப்படுகின்றனர். கணவனுக்கான பணிவிடையிலும் பிள்ளைகளே கதி என்ற வாழ்க்கையிலும் திருப்தி கொண்ட பெண்களாய் வாழ்ந்த இவர்களை, திடீரென்று நிகழும் கணவனின் மரணம் கண்ணைக் கட்டிக் காட்டில் விடுகிறது. அவர்களுக்கு உரிமையான கருணைப் பணி வழங்கப்படும்போது அதை ஒரு முதன்மையான ஆதரவாக எண்ணித்துணிந்து அவ்வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வழங்கப்படும் வேலை கழிவறைகளைத் தூய்மை செய்வதே. கணவன் எத்தகைய மேலான பணியில் இருந்தாலும் கழிவறைப் பணியே கருணை வேலையாக வழங்கப்படுகிறது. பெண்ணென்றாலே தூய்மைசெய்தல், அதிலும் தாழ்த்தப்பட்ட பெண்கள் என்றால் கழிவறைத் தூய்மை என்று அரசு நிறுவனங்களும் சாதிய ஒடுக்குமுறையைச் செயல்படுத்துகின்றன. இவர்களில் ஒருவர், படிக்காததினால் தானே தனக்கு இந்த வேலை என்று மிகவும் சிரமப்பட்டுப் பயின்று மேலும் தன் கல்வித்தகுதியை உயர்த்திக் கொண்ட போதும் இன்னும் அதே வேலையைத் தான் அவர் செய்யவேண்டியிருக்கிறது.

இந்தப்பட உருவாக்கத்தில் ஈடுபட்ட அனைவருக்குமே அவர்களின் தன் வரலாற்றுப் பதிவு என்பது வேதனை நிறைந்ததோர் அனுபவமாக இருந்தது. கணவனை இழந்த இப்பெண்கள் துயர் மிகுந்த ஏழைமையான காலத்தைத் தம் முதுகின் மீது சுமந்தவாறே தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு தம் இருண்ட மனக்குகையிலிருந்து வெளியேறுகின்றனர். திருமணத்தினாலும் அதன் கட்டுப்பாடுகளாலும் தாங்கள் இழந்த சுயத்தை மீண்டும் வருவித்துக் கொள்ளும் பயணமாகவும் இது இருக்கிறது. கணவனை இழந்த இவர்கள் தமக்குப் பாரமாகிவிடுவார்களோ என்று இவர்களின் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் படக்குழுவினரைப் பார்த்ததும் பெறும் உற்சாகம் அளவிலாதது. ஒவ்வொரு நாளும் எவருடைய வீட்டில் படப்பிடிப்பு நடக்கிறதோ அங்கு தான் எங்களுக்கு உணவு. அவர்களுடைய உணவுதான் எங்களுடைய உணவும்.

கேமராவை இயக்கத் தொடங்கினாலே அவர்களின் நினைவுச் சக்கரம் கடந்த காலத்தை நோக்கி இயங்கத் தொடங்கிவிடும். அவர்களால் கட்டுப்படுத்த முடியாத கண்ணீரின் கடல் அவர்களின் கதைச்சுருளாய் பெருக்கெடுத்துப் பாயும். கதை நிறைவுக்கு வருகையில் படப்பிடிப்புக்குழுவினர் அனைவரின் கண்களையும் அக்கதை கண்ணீர் அலைகளால் மூழ்கடித்திருக்கும். அதிகாரத்தின் நாவுகள் அவற்றிற்கான இச்சைகளை உச்சரிக்கும் போதெல்லாம் அது தனது சொற்களை சாதி ஆதிக்கத்தின் பெயரால் தான் பொருள் விளங்கிக் கொள்கிறது என்பதை ஏர் இந்தியாவின் அனுபவம் மட்டுமல்ல எந்த ஓர் அரசு நிறுவனமும் இதே விதமான அதிகார ஒழுங்குகளைத் தான் கொண்டிருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

‘நல்லா தான இருக்க. புருஷன் போனதுக்கு அப்புறம் ஒனக்கெதுக்கு காசு தேவைப்படுது’ என்று சொல்லும் போதும் சரி, ‘ஒங்களுக்கு என்ன ஆபீஸ் வேலை கேக்குது. போய் டாய்லெட்டை க்ளீன் பண்ணுங்க’ என்று சொல்லும் போதும் இந்தியாவின் சாதிய பாலின ஒழுங்கு முறையை இப்பெண்கள் தனித்து நின்று குலைக்கமுடியாத இயலாமையை மறைக்க முடிவதில்லை. இரண்டு தலைமுறைகள் தொடர்ந்து துயர் தாங்கிய இப்பெண்கள் இழந்தவை, கற்பனைக்கெட்டாதவை. விமானத்தில் பறக்கும் ஒரு வாய்ப்பை இழந்தது போன்றதோர் அற்பமான சுகம் மட்டுமேயன்று.

இந்தப் படத்தை நான் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே முதலில் திரையிட எண்ணியுள்ளேன். பகிரங்க உரையாடல்கள், திரையிடல்கள் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த ஆவணப் படத்தைப் பார்க்க விரும்பும் பத்திரிகை நண்பர்களுக்கு இப்படத்தினை திரையிட்டுக் காட்ட விரும்புகிறேன். தனித்த ஒருவருக்கு என்றாலும். தனித்திரையிடல்கள் என்றாலும் எனக்குச் சம்மதமே. இப்படம் 33 நிமிடங்கள் ஓடக்கூடியது. ஒளிப்பதிவு: ஆர். கணேசன், படத்தொகுப்பு: பி. தங்கராஜ், உதவி இயக்கம் மற்றும் கருத்தாக்கம்: கோகிலவாணி, தயாரிப்பு: ஓஹோ புரொடக்‌ஷன்ஸ், வடிவம் & இயக்கம்: குட்டி ரேவதி.

இப்படத்தை நீங்கள் ஒரு முறையேனும் பார்ப்பது என்பதும் உங்கள் நண்பர்களுக்கு இப்பிரச்சனையை முன்வைப்பது என்பதும் அவர்கள் துயரத்தில் நீங்களும் பங்கு கொள்வது என்பதாய் இருக்கலாம். அல்லது அவர்களுடன் இணைந்து அவர்களின் துயர் களைவதற்கான உங்களுடைய முனைப்பாயும் இருக்கலாம். அவர்களின் பிரச்சனை குறித்த விழிப்புணர்வை உங்களுக்கும் பிறருக்கும் ஏற்படுத்திக் கொள்வதாய் இருக்கலாம். அதிகார அமைப்பைக் குலைக்கும் ஒற்றை முயற்சி, சமூகத்தின் எந்த ஒரு புள்ளியிலிருந்தும் தொடங்கலாம். இப்படத்தினுடனான எனது தனிப்பட்ட உரிமை என்பது பெயரளவில் மட்டுமே.

தொடர்பு மின்னஞ்சல்: kuttirevathi@gmail.com


பின் குறிப்பு: ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’ - கவிஞர் பிரமிளின் கவிதை வரி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்