/* up Facebook

Nov 18, 2010

லெச்சுமி : 14 ஆணிகள் ஏற்றப்பட்டட உடலுடன்... - வெறோனிக்கா


கடந்த 3மாதங்களுக்குள் 3 இலங்கைப் பெண்கள் உடலில் ஆணி ஏற்றப்பட்ட நிலையில் மத்திய கிழக்கில் இருந்து திரும்பியுள்ளனர். சமீபத்தில் பெண்ணியத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையொன்றில் ஆரியவத்திக்கு நேர்ந்த அவலத்தை வெளியிட்டிருந்தோம். சவுதியில் பணிபுரியச் சென்ற ஏழைப் பெண்ணான ஆரியவத்தி 23 ஆணிகளும், கம்பிகளும் உடலெங்கும் ஏற்றப்பட்ட நிலையில் திரும்பியிருந்தார்.

ஜோர்தானுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற மன்னம்பிட்டியைச் சேர்ந்த சாந்தனி எனும் இலங்கைப் பெண்ணை 6 ஆணிகளை வலுக்கட்டாயமாக விழுங்கப்பண்ணிய சம்பவம் கடந்த ஒக்டோபர் மாதம் நிகழ்ந்தது. சுகவீனமுற்ற சாந்தனி தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லும்படி கெஞ்சியபோது வீட்டு எஜமானர்களால் தாக்கப்பட்டு, கிளாசில் தண்ணீருடன் ஆறு ஆணிகளை இட்டு வலுக்கட்டாயமாக விழுங்கச்செய்திருக்கிறார்கள். இதில் இரண்டு ஆணிகளை பின்னர் சிகிச்சையின்போது மலங்கழிக்கச்செய்து வெளியேற்றிய போதும் மேலும் 4 ஆணிகள் இன்னமும் சாந்தனியின் வயிற்றிலேயே இருக்கின்றன. சாந்தனி சிறுநீர் கழிக்கக் கூட இப்போது சிரமப்படுவதாகவும், மலங்கழிக்கும்போதும், சிறுநீர் கழிக்கும்போதும் இரத்தம் வெளியேறுவதாகவும் அவரது தாயார் தெவித்துள்ளார். "நான் பிரேதப் பெட்டிக்குள் இலங்கை வரவிரும்பவில்லை... என்னை இலங்கைக்கு கொண்டுசெல்லுங்கள்" என்று சாந்தனி டெலிபோனில் கதறியிருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்து ஒரே மாதத்தில் இதோ லெச்சுமியின் கதை.


லெச்சுமி
இப்பாகமுவ எனும் இடத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இந்திய வம்சாவளிப் பெண்ணான வீரய்யா லெச்சுமி இரண்டு குழந்தைகளின் தாய் ஆவார். மகளுக்கு வயது 9, மகனுக்கு வயது 7.

கடந்த 12ஆம் திகதியன்று அவரின் உடலிலிருந்த 9 கம்பிகளை சத்திரசிகிச்சையின் மூலம் நீக்கினர். நவம்பர் 15 ஆம் திகதியன்று வலது கையிலிருந்து 4 கம்பிகளும், இடது கையிலிருந்து 1 கம்பியையும் குருநாகல் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் மூலம் நீக்கினார்கள் மருத்துவர்கள்.

லெச்சுமியின் கணவர் ராஜா ஒரு கூலித் தொழிலாளி, அவர்களுக்கு இருப்பதற்கு வீடு இல்லை. லெச்சுமியின் பெற்றோர் வீட்டிலும், லெச்சுமியின் சகோதரனின் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். வருமானமில்லாத நாட்களில் பிள்ளைகளுடன் ஒருவேளை உணவு கூட இன்றி பட்டினி கிடந்திருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு சிறு குடிசையையாவது அமைத்துக் கொள்ளும் நோக்கத்திலேயே கடந்த மே 10ஆம் திகதியன்று குவைத்துக்கு பணிப்பெண்ணாகச் சென்றிருக்கிறார். லெச்சுமி இப்படி கூறுகிறார்....

"...அந்த வீட்டு எஜமான் பொலிஸில் பெரிய உத்தியோகத்தில் இருப்பவர். எஜமானி ஒரு பாடசாலை ஆசிரியை. வீட்டில் 4 பிள்ளைகள் இருக்கிறார்கள. அத்தனை பேருக்கும் பணிவிடைகள் செய்து, வீடு துப்பரவு செய்வது, உடுதுணி துவைப்பது, சமைப்பது போன்றவை எனக்குரிய வேலைகள். சில நாட்கள் காலையில் தேனீர் கூட குடிக்காமல் வேலையைத் தொடங்கினால் இரவு வேலை முடியும் வரை உணவு உண்பதற்கு கூட சந்தர்ப்பம் கிடைக்காது. சில நாட்களில் விடியற்காலை 3 மணிக்கு சாப்பிட்டு வேலை தொடங்கினால் இரவு நடு சாமத்தில் 1 மணிக்கு தான் அடுத்தவேளை சாப்பிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

மாத இறுதியில் எனது சம்பளம் குறித்து எனது எஜமானியிடம் கதைத்தேன். இந்த மாத சம்பளத்தை அடுத்த மாதம் தான் தரலாம் என்றார். இரண்டு மாதங்கள் கழிந்தும் எனக்கு அவர்கள் சம்பளம் தரவில்லை. கடந்த ஓகஸ்ட் 23 அன்று என் பிள்ளைகளை நினைத்து அழுதுகொண்டிருந்தேன். மாடிப்படிகளுக்கருகில் வந்துகொண்டிருந்தபோது எஜமானும், எஜமானியும் அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்தார்கள். ஏன் அழுதுகொண்டிருக்கிறாய் என்று என்னை அதட்டினார்கள்.

"வீட்டினரைப் பற்றி கவலையாக உள்ளது. குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள், தயவுசெய்து எனது சம்பளத்தைத் தாருங்கள் என்று கெஞ்சினேன். அப்போது வீட்டு எஜமான் என்னை சுவற்றில் சாய்த்து பிடிக்க, எஜமானி அம்மா சமையலறையிலிருந்து சில கம்பிகளைக் கொண்டவந்தார். கொண்டுவந்த ஊசியொன்றினை விரகளால் எனது உடம்பில் தள்ளினார். என்னைக் கொல்லாதீர்கள் தெய்வமே நான் சம்பளத்தை மட்டும் தானே கேட்டேன் என கெஞ்சிக் கதறினேன். உடம்பில் கம்பிகளை ஏற்றினார்.சிறிது கூட இரக்கமின்றி எனது கால்களிலும், கைகளிலும் அவர்கள் இருவருமாக கம்பிகளை ஏற்றினார்கள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த வீட்டு சிறுமி விழுந்துவிட்டாள். அவர்களின் கவனம் சிறுமியின் பக்கம் திரும்பியதும்: அந்த வீட்டின் அருகிலுள்ள எஜமானின் தாயாரின் வீட்டுக்கு தப்பிப் போய் நிலைமையை காட்டி அழுதேன். அவர், இவர்களை திட்டி என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்த மருத்துவர் எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு "இவரின் உடலில் குண்டுசிகள் இருக்கின்றன உடனேயே இலங்கைக்கு அனுப்புவதே உங்களுக்கு நல்லது" என கூறியிருக்கிறார். அந்த முதிய பெண் என்னிடம் "நீ என்னோடு வர விரும்புகிறாயா அல்லது இலங்கை திரும்பப் போகிறாயா" என்று கேட்டார்.

மீண்டும் அந்த நரகத்துக்கு நான் போகவில்லை என்னை என் நாட்டிற்கே அனுப்பி வையுங்கள் என அவரிடம் கெஞ்சினேன். அவர் ஏஜென்சியடன் கதத்தார்., ஆனால் ஏஜென்சியைச் சேர்ந்தவர்களோ, இலங்கையிலிருந்து 3 பேர் வந்ததன் பின்னர் தான் என்னை அனுப்ப முடியும் எனக் கூறினார்கள். ஓகஸ்ட் 23இலிருந்து ஒக்டோபர் 18ஆம் திகதி வரை ஏஜென்சிகாரர்களுடன் தான் காத்திருந்தேன். எனது உடலில் நாளுக்கு நாள் வலி அதிகரித்துக்கொண்டே இருந்தது.

23ஆம் திகதி நான் நாடு திரும்பினேன். வீட்டில் நடந்ததைக் கூறினேன். எனது பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவகர் என்னை பொலிஸில் முறையிடும்படி கூறினார். எனது சம்பளப் பிரச்சினை பற்றி ஏஜென்சியிடம் முறையிட்டபோது, நடந்தவற்றை யாரிடமாவது கூறினால் கொலை செய்வோம் என்றார்கள். எனது கணவரும் என்னை பொலிசுக்கு போக வேண்டாம் என்றார். அவர்கள் மீண்டும் மீண்டும் வந்து மிரட்டி விட்டு போனார்கள். இறுதியில் துணிச்சலாக பொலிஸில் முறையிடுவது என நான் தனியாக முடிவெடுத்தேன்.

தங்களிடம் முறையிட்டு பிரயோசனமில்லை... இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறையிடும்படி பொலிசார் கூறினார்கள். அங்கும் போய் முறையிட்டேன். அவர்கள் ஒரு பொருட்டாக இதனை ஆரம்பத்தில் எடுக்கவில்லை. எனது உடலில் இருந்த வலி வேதனைகளை தாங்க முடியாமல் நான் குருநாகல் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கு அவர்கள் தான் 14 இரும்புக் கம்பிகள் உடலில் ஏற்றப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்கள்.

செடிகளின் முள் காலில் ஏறினாலே தாங்க முடியாத என்னால் இந்த கம்பிகளை ஏற்றிய போது கிடைத்த வேதனையை வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது... அந்த வலியை வெறும் சொற்களால் என்னால் விளக்க முடியாது. என்னைப் போன்ற பலர் பல கனவுகளுடன் அங்கு போய் படும் சித்திரவதை தொடரக்கூடாது..."

என அதிகாரிகளிடன் கேட்டுக்கொண்டார் லெச்சுமி.

வழமைபோல விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இலங்கையில் இருந்து அதிகாரிகள் குவைத் நோக்கி பயணப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. ஆனால் மத்திய கிழக்கில் பணிபுரியச் சென்ற பல பெண்களுக்கு இதுவரை நிகழ்ந்த எந்த கொடுமைகளுக்கும் இது வரை நீதி கிடைத்ததாக ஒரு உதாரணம் கூட இல்லை இந்த செய்தியின் சூடு மறைவதற்குள் இன்னொரு செய்தியில் அனைவரும் மூழ்கிவிடுவார்கள். அதுவும் தீர்க்கப்படாத நிலையில் இன்னொரு செய்தி அதனையும் மூடி மறைத்துவிடும். இலங்கையில் இப்போதெல்லாம் இது வெறும் சீசனுக்கான பரபரப்பு செய்தி மட்டும்தான். அதற்கப்பால் ஒன்றுமில்லை.

குறிப்பு
  • மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் சராசரி 20 சடலங்கள் மாதாந்தம் இலங்கை கொண்டுவரப்படுகின்றன. இயற்கை மரணங்கள், ஏனைய விபத்துக்களினால் மரணித்தவர்கள் அதில் அடக்கம்.
  • வெளிநாடுகளில் நாடுகளில் 1.8 மில்லியன் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
  • இவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர்.
  • சவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர்.
  • இதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள்.
  • இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
  • மாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.
  • இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர்.
மேலதிக வாசிப்புக்கு


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்