/* up Facebook

Nov 30, 2010

29வது பெண்கள் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல்

அன்புடன் தோழியருக்கு,

புகலிடத்தில் வாழும் பெண்களின் கருத்துப் பரிமாற்றக்களமாக விளங்கும் பெண்கள் சந்திப்பின் 29வது தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.நிகழ்ச்சிகள்

உலகமயமாதலும் பெண்களும் -சந்திரலேகா கிங்ஸ்லி(இலங்கை)

இரு விவரணப் படக்காட்சிகள்- இயக்கம் சந்திரலேகா கிங்ஸ்லி

மல்லிகா : ஒரு நகரச் சுத்திகரிப்புப் பெண் தொழிலாளியின் கதை

வள்ளியம்மா :  தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் பெண்ணின் வீட்டு வேலை பற்றியது

வடக்கு கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னான சூழல் பற்றி . .  

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்கள் பற்றிய விவரணப்படம்

புகலிடத்தில் இளம் சந்ததியினர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் - -வாசுகி தங்கராஜா

பெண்ணியக் கவிதைத் தொகுப்புகளின் அறிமுகமும் விமர்சனமும்

பிறத்தியாள் - பானுபாரதி

சாவுகளால் பிரபலமான ஊர் - தர்மினி

-விஜி( பிரான்ஸ்)

மத்தியக் கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்களின் அவலம்

உமா வரதராஜன் எழுதிய மூன்றாம் சிலுவை நாவல் பற்றிய சில பெண்ணியப் புரிதல்கள் 

 -ஆழியாள்-,றஞ்சி(சுவிஸ்)காலம்:
11.12.2010  சனிக்கிழமை, 9.30 மணி


இடம்:
Washhaus Cafe Eugen Bolz Kehre 12 12351 Berlin Germany 

தொடர்புகட்கு:
உமா
Tel: 004930-61627808/ 015121564988
...மேலும்

திருமணம் vs லிவிங் டு கெதர் - ஜெயந்தி


ஆதி காலத்துல குகைகளில் நமது வாழ்க்கை இருந்தது. வேட்டையாடி உணவை பச்சையாக உண்டு வாழ்ந்து வந்தோம். பின்னர் அதையே வேக வைத்து உண்ணவும் கற்றுக்கொண்டோம். விவசாயம் வீட்டு விலங்கு வளர்ப்பு என்று காலங்கள் மாறிக்கொண்டே வந்தது. காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை பண்படுத்தி வந்தமையே பண்பாடு என்கிறோம். அப்படி மாறி வந்த பண்பாடுதான் இன்று நம்மை கணினி முன் அமர வைத்திருக்கிறது.

கலாச்சாரம் என்பது நமக்கான வாழ்க்கை முறைக்கான சட்ட திட்டங்கள். சமூகத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல இத்தகைய சட்டதிட்டங்கள் தேவையாக இருக்கிறது. இதுவும் ஆதி காலத்தில் இருந்து காலத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இப்போது உள்ளது நம் கலாச்சாரமா? நூறு ஆண்டுக்கு முன் இருந்தது நம் கலாச்சாரமா? என்று தேடிக்கொண்டு போனால் குகைகளில் போய்தான் அடையணும்.

மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு. ஒரு ஒழுங்கு உண்டு. பக்கத்துத்தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும்.

இந்த கலாச்சாரமும் பண்பாடும் ஒவ்வொரு நாட்டிற்க்கும் மாறுபடும். அவர்களின் பூகோள அமைப்பு, தட்பவெப்பம் போன்றவற்றிற்கு ஏற்ப அவரவர் கலாச்சாரத்தை அமைத்துக்கொண்டார்கள். உடையையே எடுத்துக்கொண்டால் தமிழ் நாடு வெப்ப பூமி என்பதால் பருத்தியால் நெய்த வேட்டியை கட்டிக்கொண்டார்கள். அதே வேட்டிதான் பெண்ணுக்கும், மேலே மறைப்பு ஏதும் இல்லாமல். குளிர் பிரதேசங்களில் கோட், சூட். பாலைவனங்களில் மணல் மேலே விழாமல் இருக்க தலையிலிருந்து கால் வரை மறைக்கும் ஆடைகள். பனிப்பிரதேசங்களில் விலங்குகளில் தோல்களினால் ஆன ஆடைகள். இந்த உடைகள் ஆரம்பகாலங்களில் ஆண் பெண் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருந்தது. பின்னர்தான் மாற்றமடைந்தது.

இதில் இந்தக்கலாச்சாரம் மட்டம் இந்தக்கலாச்சாரம் உயர்ந்தது என்பதெல்லாம் இல்லை. அவரவர்களின் வாழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்டதே இவை. அவரவர்களுக்கு அவரவர் கலாச்சாரம் உயர்ந்தது.

நாம் சிந்து சமவெளி நாகரீக காலங்களிலேயே சுட்ட செங்கற்கலால் வீடுகட்டியும் கழிவுநீர் வாய்க்கால் போன்ற வசதிகளுடனுன் வாழ்ந்து வந்த கலாச்சாரம் நமது. இப்போது உலகத்தில் சிறந்த உணவுகளில் முதலாவது இடத்தைப் பிடிப்பது இந்திய உணவுகள்தான். நமக்கு உணவே மருந்து மருந்தே உணவு.

நம் கலாச்சாரங்களில் பிற கலாச்சாரக் கலப்பு என்பது ஆரிய, இஸ்லாமிய, ஆங்கிலேயர் வருகைகளின்போது நடந்திருக்கும். அதுவும் பெரும் அளவில் நம் கலாச்சாரத்தை நாம் விட்டுக்கொடுத்துவிடவில்லை. அவர்களிடமிருந்து சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டு நம்மிடமிருந்து சிலவற்றை அவர்களுக்கு நாம் அளித்திருக்கிறோம்.

நம் கலாச்சாரத்தில் உள்ள சிக்கல்களை நாம் அவ்வப்போது களைந்துகொண்டேதான் இருக்கிறோம். இப்போதுகூட ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதில் உள்ள அதிகபட்ச சிரமங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு டைவோர்ஸ் செய்துகொண்டு மறுதிருமணம் செய்துகொள்ளலாம் என்ற மாற்றம் வந்துள்ளது. இன்னும் மாற்றங்கள் தேவை. அதை நாம்தான் செய்துகொள்ள வேண்டும்.

ஆனால் இப்போது நடப்பதைப் பார்க்கும் போது அந்நியக் கலாச்சாரம் நம்மேல் திணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. உலகமயமாக்கலுக்குப் பின் நடப்பவை அந்த நினைப்பைத் தருகின்றன. அந்நிய உடை ஏற்கெனவே நுழைந்துவிட்டது, உணவு, விழாக்களும் அவர்களுடையதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இந்த லிவிங் டு கெதர் என்கிற கலாச்சாரம் அப்படி எளிதாக கடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

இந்தியில் லிவிங் டு கெதர் வாழ்க்கை பற்றிய படங்கள் நிறைய வருகிறதாம். வட மாநிலங்களில் இந்தக் கலாச்சாரம் புகுந்துவிட்டதாம். தமிழ்நாட்டில்கூட நடந்துகொண்டிருக்கலாம். இதெல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா? இல்லை தாராளமயக்கொள்கையின் விளைவா?

அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் அனைத்து விதிகளையும் சரியாக கடைபிடிப்பவர்கள். லஞ்ச லாவண்கங்களில் மூழ்குவதில்லை. அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக்கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும்.

நமது நாட்டில் அதுவும் சமீப காலங்களில் சரியாகச் சொன்னால் உலகமயமாக்கலுக்குப்பின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், (எனது இந்த இடுகையை படிக்கவும்) பணத்தைத் துரத்திச் செல்வது, லஞ்சலாவண்யங்கள் தலைவிரித்தாடுவது போன்றவற்றைப் பார்க்கும்போது மனிதாபிமானத்தைத் தேட வேண்டியிருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்று நம் கலாச்சாரம் இருக்கும்போதே இரண்டு மூன்று மனைவிகளை வைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் நடக்கிறது. சமீபத்தில் ஓமலூரில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி தேர்வில் தோல்வியடைந்ததால் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள் என்று சொல்லப்பட்டது. பிறகு அவளது கர்ப்பப்பையில் 50 வயது ஆணின் விந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இப்படியான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த லிவிங் டு கெதர் சரிப்பட்டுவருமா?

இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள். தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.

டிஸ்கி : இது எந்தப்பதிவுக்குமான எதிர்ப்பதிவு அல்ல. என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்.

...மேலும்

Nov 29, 2010

இன்பம் ஆணுக்கு தண்டனை பெண்ணுக்கு - மாலதி மைத்ரி


சபா திவானின் ‘டெல்லி - மும்பை - டெல்லி

களிப்பு, துய்ப்பு, இன்பம், கொண்டாட்டம் இவை மனித உயிர்களுக்கு மட்டும் உரிய உணர்ச்சிகள் இல்லை. இவை உலக ஜீவராசிகளின் உயிர்த் தொடர்ச்சி அறுபடாமல் காக்கும் ஜீவ சக்தி. ஆனால் நம் பெரும்பாலான இந்தியச் சமூகங்களில் இன்று ஆட்டம், கொண்டாட்டம் என்பது பொது வெளியில் ஆண்கள் ஆட, சமூகம் ரசிப்பதும், உள் அரங்கில் பெண்கள் ஆட, ஆண்கள் ரசிப்பதுமாக இருக்கிறது. ஒரு பிரிவினர் தமது சுகத்திற்காகப் பிறரை பயன்படுத்தும் போது அது சுரண்டலாக மாறுகிறது. வர்க்கச் சுரண்டலைப் போல இது பாலின்பச் சுரண்டல். பொதுவெளியில் பெண்களின் உடல் இயக்கம் தடை செய்யப்படுகிறது. மறைமுக வெளியில் அவளது உடல் பாலின்பத்திற்காக இயக்கப்படுகிறது.

சமூகப் பொதுவெளியில் பெண்களுக்கான உடை வரையறைகளும் நடைமுறைகளும் அச்சு, காட்சி ஊடகவெளிகளில் அனுமதிக்கப் படுகின்றன. அதுபோல் சமூகப் பொது வெளியில் தடை செய்யப்பட்ட பெண்களின் ஆட்டம் திரைப்படம் மற்றும் உல்லாச விடுதிகளின் கூடாரத்துள் அனுமதிக்கப்படுகிறது. அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட சமூக ஒழுக்கம் ஒன்றாகவும் ஆனால் அது நடைமுறையில் சாத்தியமற்றதாகவும் உள்ளது. இந்த முரண்பட்ட சமூகக் கலாச்சார வெளிக்குள் வகுத்துக் கொண்ட, பின்பற்றப் படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட துய்ப்பு தொடர்பான செயல்பாடுகள் பெண்களுக்கு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. ஆனால் ஆண்கள் தடையற்ற சுதந்திரத்துடனும் தன்னிச்சையுடனும் காலங்காலமாக அனுபவித்து வருகின்றனர். இதன் தொடர் வினையாக பெண் உடல் நுகர்வுப் பொருளாக மாற்றப்பட்டு பொது சமூக மனோநிலை சுவீகரித்துக் கொள்கிறது. இதன் விளைவாக ஆரோக்கியமான மனநிலையற்ற வக்கிரம் பிடித்த மனிதச் சமூகம் உருவாகிறது.

இந்த ஆணாதிக்க மேலாண்மைச் சமூகம் பெண் உடலை குடும்ப வெளிசார்ந்த இடத்தில் புனித பிம்பமாகவும் அதன் அகம்சார்ந்த துய்ப்புவெளியில் நுகர்வுப் பொருளாகவும் வைத்திருக்கிறது. ஏற்றத் தாழ்வான சாதிப் படிநிலையுடைய இந்தியச் சமூகங்கள் பெண்களை - வீட்டு விலங்கு, செல்லப்பிராணி, சர்க்கஸ் விலங்கு போன்று வளர்த்தெடுத்து வருவதை இதன் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முடியும். சமூகம் விலங்குகளை தன் வசம் பழக்குவதற்கும் பெண்களைப் பழக்குவதற்கும் ஒரே மாதிரியான உத்தியையே கையாள்கிறது.

தமிழகத்தில் அறுவடை மற்றும் விழாக்களை ஒட்டி நடைப்பெற்ற ஊரே சேர்ந்து பங்கெடுக்கும் கோலாட்டம், கும்மி மற்றும் துணங்கைக்கூத்து போன்ற கலை வடிவங்கள் இன்று முற்றிலுமாக வழக்கொழிந்து வருகின்றன. (இன்று மேடை கலையாகிவிட்டது) சில பழங்குடி சமூகங்களில் மட்டுமே ஆட்டம் கொண்டாட்டம் பொதுமைப்படுத்தபட்டு இன்றும் தொடர்கிறது. இராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கரகாட்டம் போன்ற நாட்டுப் புறக்கலைக் கேளிக்கை ஆட்டங்களில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் ஆட, ஊர் சாதிக் கூட்டம் ரசிப்பது - பழந்தமிழகத்தில் நிலவிவந்த சதிர் போன்ற செவ்வியல் (சின்ன மேளம், பெரிய மேளம் உட்பட) நடனங்கள் - ஒதுக்கப்பட்ட தாசி பெண்கள் ஆட ஆண்கள் ரசிப்பது - சிலர் ஆட பலர் ரசிப்பது. அதுவும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள் ஆட ஆண்கள் ரசிக்கும் அந்தக்கால வழக்கம்தான் இன்று வெவ்வேறு வடிவங்களில் காலமாற்றத்திற்கு உட்பட்டு மதுவிடுதி நடனமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது.

கலைவடிவங்களை சமூகக் கலைஞர்கள் பொது வெளியில் நிகழ்த்துவது வேறு; பிறரை அனுமதிக்க முடியாத குறிப்பிடப்பட்ட பகுதியினருக்காக நிகழ்த்துவது வேறு. ஒன்று - அங்கீகரிக்கப்பட்ட கலைவடிவமாக இருந்தாலும் அது ஒடுக்கப்பட்ட பெண்களை பொதுவெளியில் ரசிக்கும் மேல்சாதி ஒடுக்குமுறை கலாச்சாரம். இரண்டு - ரகசிய தனியிடங்களில் பெண்களை ஆடவிட்டு ரசித்தபடி குடித்து, கூத்தாடி தன் வரைமுறையற்ற சுதந்திரத்தைப் பறைச்சாற்றும் வக்கிரக் கலாச்சாரம்.

குடும்பவெளிக்குள் ஆணின் உடல் இச்சையை தீர்க்கும் பெண் பத்தினியாகவும், பொதுவெளிக்குள் ஆணின் உடல் இச்சையைத் தீர்க்கும் பெண் பரத்தையாகவும் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. நவீன தாசி ஆட்டத்தின் அரங்கமாக நம்நாட்டு மதுவிடுதி கூடங்கள் மாறிவிட்டன. ஆண்களின் காமப்பசிக்குத் தீனிபோட பொதுமகளிர் தேவைப்படுவது போல ஆண்களின் மன அயர்ச்சியைப் போக்கவும் அவன் தன்னை தொடர்ந்து காமக் கருவியாகப் புதுப்பித்துக் கொள்ளவும் இது போன்ற நிகழ்வுகள் தேவை. இதற்காக ஆண் சமூகம் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு தனக்காக ஊழியம் செய்ய உருவாக்கப்பட்டதுதான் இந்த பாலியல் அடிமைக் கலாச்சாரம்.

ரியா, டெல்லியிலிருந்து ரயிலில் மும்பை சென்று மதுவிடுதிகளில் சில வாரங்கள் தங்கி ஆடிவிட்டு டெல்லி திரும்புகிறார். பிறகு சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் டெல்லி செல்கிறார். இப்படத்தில் தன் வாழ்க்கையை சொல்லும் ரியா, தன்னை போன்ற ஆயிரக்கணக்கான நடன பெண்களின் பிரதிநிதியாகிறார். “பதிமூன்று வயதில் திருமணமாகி பதினேழு வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருபது வயதில் விவாகரத்து பெற்றேன். எப்படி சமைப்பது, ஆணுடன் எப்படி பழகுவது என்று எதுவுமே எனக்குத் தெரியவில்லை. என் வயதொத்த பெண்கள் தெருவில் விளையாடிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருந்தபோது குடும்பத்தின் எல்லா பாரங்களும் என் மீது ஏற்றப்பட்டிருந்தது. சமைக்கத் தெரியவில்லை, கணவனுடன் பழகத் தெரியவில்லை என்று தினமும் என்னைக் கொடுமைப்படுத்தினர். எனக்கு ஒரே சிந்தனை மட்டும்தான் இருந்தது - இக்கொடுமையிலிருந்து எப்படி மீள்வது. மீண்டுவிட்டேன், ஆனால் என் குழந்தைகள் எனக்குக் கிடைக்கவில்லை” என்கிறார்.

நவநாகரீக தோற்றத்தில் இருக்கும் ரியாவுக்கு தன் பெயரைக்கூட எழுதத் தெரியவில்லை. பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட அவளின் தங்கை உதவுகிறாள். தன் தந்தை இறந்தபின் தாய், தங்கை, தம்பிக்காகவும் குடும்பத்தை நடத்தவும் சிறு சிறு கம்பெனிகளில் வேலை செய்ததாகச் சொல்கிறாள். வருமானம் போதாமல் கஷ்டபடும்போதுதான் தன் பகுதி பெண்கள் மூலமாக பூகொடுத்து வரவேற்கும் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்ததாகவும் அதற்குக் கிடைத்த குறைந்த ஊதியம் போதவில்லை என்பதால் நடனப் பெண்ணாகப் பணிபுரியத் தொடங்கியதாகவும் சொல்கிறாள். இத்தொழில் தனக்குப் பிடித்திருப்பதாகவும் தனது குடும்பத்திற்குத் தேவையான வருமானம் கிடைப்பதாகவும் குறிப்பிடுகிறாள். தான் சுதந்திரமாக இருப்பதாகவும், தான் விரும்பிய இடங்களுக்குச் செல்ல முடிவதாகவும் சொல்கிறாள். ஆனாலும் டெல்லி போலீஸ் அடிக்கடி வீட்டுக்கு வந்து என் அம்மாவை மிரட்டுவதால் சமூக உறவு பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறாள்.

மும்பை ரயில் பயணத்தில் தன் தாயைப்பற்றி பேசும்போது சொல்கிறாள் “என் தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிப்பார். என் அம்மா அவ்வளவு துன்பத்தையும் தாங்கிக் கொண்டார். இவன் சாவமாட்டானா என்று எதிர்பார்த்தார். என் தந்தை இறந்த பிறகு அக்கொடுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்தது. இப்பொழுதுதான் சந்தோஷத்தை அனுபவிக்கிறார்” இது இந்திய - கணவன் மனைவி உறவு குறித்து தெரிவிக்கப்பட்ட தைரியமான கருத்து.

மும்பைக்கு வரும்போது ஏஜெண்ட் வீட்டில் தங்குகிறாள். அவன் மனைவியும் இவளுடன் நடனமாடுகிறாள். கூட்டுக் குடும்பம்போல் ஐந்தாறு பெண்கள் ஒன்றாகத் தங்கி ஒன்றாகச் சமைத்து சாப்பிட்டு மாலையில் தங்கள் குழந்தைகளிடம் ‘அம்மா ஆபீஸ் போறன் டாட்டா சொல்லு’ என்றதும் அழும் குழந்தையை கணவனிடம் விட்டு விட்டு மதுவிடுதிக்குச் செல்கிறார்கள். ஒப்பனை அறையில் தங்களை அலங்கரித்துக் கொண்டு அன்றைய பேஷன் ஆடைகளை அணிந்து குறை இருட்டில் சினிமாப் பாட்டு பின்னணியில் அலற கண்ணாடிக்குவளை சத்தமும் குடிகாரர்களின் உளறலும் நிறைந்த கூடத்தின் நடுவில் ஆடத் தொடங்குகின்றனர். ஆண்கள் தள்ளாடியபடியே வந்து ரூபாய் நோட்டுகளால் அபிஷேகம் செய்கின்றனர். உடனே பணியாட்கள் அப்பணத்தைப் பொறுக்குகிறார்கள்.

“இதற்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் அந்த முதலாளி கொடுக்கிறான். வாடிக்கையாளர்கள் கொட்டும் பணம் மொத்தமும் முதலாளிக்கே. பரிசுப் பொருட்கள் கொடுத்தால் இன்றைய சந்தை விலையில் பாதி விலையை முதலாளிக்குக் கொடுத்துவிட வேண்டும். மேலும் பணம் கொட்டும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து வரவைத்தால்தான் எங்களுக்குத் தொடர்ந்து அங்கு வேலை கிடைக்கும். ஒவ்வொரு பெண்ணும் தனக்கான பணம் கொட்டும் பல வாடிக்கையாளர்களை வைத்திருக்க வேண்டும். ஏஜென்டுகள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். பகலில் அவ்வாடிக்கையாளர்களுடன் செல்போனில் தொடர்புகொண்டு கிளுகிளுப்பாகப் பேச வேண்டும். அவர்களுடன் சினிமா, பீச் என்று கம்பெனி கொடுப்பதும் சில சமயங்களில் அவர்களுடன் உடலுறவுக்குச் சம்பதிப்பதும் நேர்கிறது” என்கிறாள் ரியா.

இப்படம் ஒரு ஆண்டுகாலம் தொடர்ந்து ரியாவின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. மும்பை அரசாங்கம் பார் நடனத்திற்கு தடைவிதித்ததும் இவள் பெங்களூர் நகரத்தில் சில மாதம் நடனமாட போய்வருகிறாள். பிறகு அரபு நாடுகளுக்குச் சென்று வருகிறாள். அதுவும் சரிவராமல் தான் காதலித்து வந்தவனை திருமணம் செய்துகொண்டு கணவன் வீட்டுடன் வாழ்கிறாள். “தான் விரும்பிய இக்குடும்ப வாழ்க்கை தன்னை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருப்பதாகக் குறைபடுகிறாள். தன்னை தனியே காய்கறி வாங்கக்கூட அனுப்ப பயப்படுகிறார் என் மாமியார். என்னுடைய கடந்தகால வாழ்க்கை யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று நினைக்கின்றனர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதும் வீட்டாரின் மேலதிகக் கண்காணிப்பு வளையத்துக்குள் அடைப்பட்டுக் கிடப்பதாலும் ரொம்ப நாட்கள் இவ்வாழ்க்கையை நான் தொடர முடியாது என்று நினைப்பதாகவும்” சொல்கிறாள். இத்துடன் இப்படம் முடிகிறது.

நடுத்தர மற்றும் நட்சத்திர மதுவிடுதிகளில் ஆடும் பெண்கள் பெரும்பாலும் படித்த ஓரளவு வசதியோ அல்லது பெரும் பணக்கார குடும்பங்களிலிருந்து விரும்பி வந்த மாடல் அழகிகளோ ஆவர். அடித்தள மத்தியதர வர்க்க மதுவிடுதிகளில் ஆடும் பெண்கள் பெரும்பாலும் வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்கவே வருகின்றனர். இப்பெண்களின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் மேலும் அதிர்ச்சி தருகிறது. பன்னாட்டு வளர்ச்சித் திட்டங்களால் அகதியாக்கப்பட்டு தங்கள் நிலத்தைவிட்டு துரத்தப்பட்ட பழங்குடிப் பெண்கள், வறட்சியால் பஞ்சம் பிழைக்க வேலை தேடி நகரத்தின் வீதிகளில் அலையும் கிராமப்புற பெண்கள், நகரமயமாதலில் பாதிக்கப்பட்டு வேலையிழந்த புறநகர் பெண்கள். இந்த நடனப்பெண்கள் எழுபத்தைந்து சதவீதம் பேர் அதிகம் படிப்பறிவில்லாதவர்கள். மும்பை அரசாங்கம் மது விடுதி நடனத்தை தடைசெய்த போது அதிகமாக பாதிக்கப்பட்டது இப்பெண்களே. ஏனெனில் கிராமத்தில் விவசாயமும் பொய்த்துப் போய்விட்டது. படிப்பு இல்லாததால் நகரத்திலும் வேலை கிடையாது.

சென்ற ஆண்டு மகாராஷ்டிரா அரசு பார் நடனத்தை தடை செய்ததை எதிர்த்தும், ஆதரித்தும் பல போராட்டங்கள் நடந்தன.

1. பெண்ணியவாதிகளும் பல முற்போக்குக் குழுக்களும் மனித உரிமை அமைப்புகளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை நடனமாட அனுமதிக்கவேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். வேலையிழக்கும் பெண்கள் நேரடியாக விபச்சாரத்திற்குத் தள்ளப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் எச்சரித்தனர். இதனால் ஏற்படும் சமூக பாதிப்பும் எய்ட்ஸ் போன்ற நோய்களும் மிகப் பெரிய பிரச்சனையாக எதிர்காலத்தில் உருவாகி அரசுக்கு சமூக, பொருளாதார நெருக்கடியை உருவாகும் என்று சுட்டிக் காட்டினர்.

2. ஆனால் சில பெண்ணியவாதிகளும் பிற்போக்கு சக்திகளும் நம் குடும்ப ஆண்களும் பெண்களும் அரசின் உத்தரவை வரவேற்றனர். இதனால் நம் கலாச்சாரம் தூய்மை அடையும். இதே போல் பாலியல் தொழிலாளியையும் ஒழித்துவிட்டு சமூகத்தை ப்ளீச் செய்துவிடுங்கள் என்கின்றனர். அதற்காக இப்பெண்களை தூக்கில் போடக்கூட இவர்கள் தயார்.

சபா திவான் எடுத்த “டெல்லி மும்பை டெல்லி” என்ற விவரணப்படத்திலிருந்து பல உண்மைகளை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. இதையொட்டி சில அநீதிகளும் புரியவந்தது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டில் கிட்டத்தட்ட 40கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ, இந்த பார்களுக்கு வரும் ஆண்களின் பாக்கெட்களில் எப்படி இவ்வளவு அபரிமிதமான பணம் சேர்கிறது வாரி இறைப்பதற்கு. இந்த ஆண்கள் மிகவும் அபாயகரமானவர்கள். இவர்கள் இரவு விடுதிக்குவர லஞ்சம் வாங்கத் தயங்காத அரசுத்துறை அதிகாரிகள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டையே விற்று ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள். உல்லாசமாக வாழ கூலிப்படையாக இருக்கத் தயங்காத கொலைகாரர்கள். அதிக லாபம் சம்பாதிக்க உணவுப்பொருளில் நச்சுப்பொருள்களை கலக்கத் தயங்காத வியாபாரிகள். போலி மருந்துகளைத் தயாரித்து கொள்ளையடிக்கும் முதலாளிகள். கொத்தடிமைகளாக வேலைவாங்கி சொத்துச் சேர்க்கும் பண்ணையார்கள். இதுபோல் கூறிக்கொண்டே போகலாம். அறமற்ற முறையற்ற வழிகளில் வரும் கருப்புப் பணம் இந்த வழிகளிலும் வாரி இறைக்கப்படுகிறது.

இந்த மதுவிடுதிகளையும் விபச்சார விடுதிகளையும் நடத்துபவர்கள், அங்கு வேலை செய்யும் பணியாளர்கள், அங்கு வரும் பல்லாயிரக்கணக்கான வடிக்கையாளர்கள் இவர்கள் யாரும் வேற்றுக் கிரகவாசிகள் அல்ல. இவர்கள் இந்திய தந்தைமார்கள், கணவன்மார்கள், சகோதரர்கள். விபச்சார விடுதிக்கோ உல்லாச நடன விடுதிக்கோ செல்லும் ஆண்களின் அந்தஸ்துக்கும் கௌரவத்துக்கும் சமூகத்தில் எந்த பங்கமும் இழப்பும் நேர்வதில்லை. சமூகக் கலாச்சார ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் இவர்கள் என்றும் கட்டுப்பட்டவர்கள் இல்லை. இவர்கள்தான் நமது அரசு அதிகாரிகள், இவர்கள்தாம் நமது நாட்டின் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்கள், இவர்கள்தாம் நம்மை ஆண்டுக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் தாம். . . இவர்கள்தாம் பெண்கள் ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்று போதிப்பவர்கள். இந்த மகான்கள் சகல உரிமைகளுடன் சுகபோகத்துடன் இங்கு வாழ்ந்து வரும் போது இத்தொழிலுக்கு பல்வேறு வாழ்வியல் நிர்ப்பந்தங்களாலும் வறுமையாலும் தள்ளப்பட்ட பெண்கள் மட்டும் சமூகத்தால் ஒதுக்கப்படுவதும் பழிக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும் ஏன்? பெண்களை மட்டும் குற்றவாளியாக்கி தண்டிக்க நினைப்பவர்கள் முதலில் தங்கள் வீட்டு ஆண்களிடமிருந்து சமூகத் தூய்மையாக்கத்தைத் தொடங்குங்கள்.

சபா திவான் இயக்கிய “டெல்லி மும்பை டெல்லி” ஆவணப்படம் 26.2.2006 அன்று டெல்லி, இந்தியன் ஹபிடட் மையத்தில் திரையிடப்பட்டது. இத்திரையிடலுக்குப் பின் இப்பெண்களின் மீது செலுத்தப்படும் சமூகக் கொடுமைகளையும் நிர்ப்பந்தங்களையும் பற்றி விவாதித்தோம். “சில நடனப் பெண்கள் தங்கள் குழந்தைகளை வெளி மாநிலத்தில் விடுதிகளில் தங்கி படிக்க வைக்கிறார்கள். அல்லது வெளிமாநிலத்தில் உள்ள தங்கள் பெற்றோரிடம் விட்டு வைத்திருக்கிறார்கள். அதனால் குழந்தைகள் நோயுறும்போது மிகுந்த மனஉளச்சலுக்கு உள்ளாகிறார்கள். குழந்தைகளைப் பார்க்கப் போனால் வேலைபோகும் அபாயம். ஏஜென்ட் மற்றும் போலீஸ் தரும் தொல்லைகள். தங்களுடனே இருக்கும்படி குழந்தைகளின் வற்புறுத்தலும் நிர்ப்பந்தமும் தன் உறவினர்களும் சமூகமும் தரும் புற நெருக்கடிகள் என இப்பெண்கள் பன்முக நெருக்கடிகளுக்கு இடையில் சிக்கித் தவிப்பதாக” சபா திவான் தெரிவித்தார்.

டெல்லி மும்பை டெல்லி (2006)
ஆவணப்படம் - 63 நிமிடங்கள்
இயக்கம் - சபா திவான்,
ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு - ராகுல் ராய்
எடிட்டிங் - அனுபாமா சந்திரா
ஒலி - ஆஷிஸ் பாண்டியா, சுந்தர்

நன்றி - அணங்கு 
...மேலும்

Nov 28, 2010

சு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல் - மிருணாசு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம் 14 சிறுகதைகளின் தொகுப்பு. தொகுப்பின் தலைப்பான ஒரு துளி துயரம் ஒரு உள்ளடங்கிய முரண்தொனி அமையப் பெற்றது. ஆங்கிலத்தில் அதை understatement எனலாம். ஏனெனில் இந்த 14 கதைகளின் பேசுபொருளும் துயரம்தான், துயரின் வேறுபட்ட வடிவங்கள்தான். ஒரு உறிஞ்சு தாளில் இடப்பட்ட மைத்துளி போல கதைகளில் துயர் விரிந்துகொண்டே போய் இறுதியில் கடலாக மாறுகிறது. வானம் பொய்த்த விவசாயிகளின், குழந்தைகளின், கைவிடப்பட்ட முதிய பெண்களின், குடும்ப அமைப்பில் நசுக்கப்படும் பெண்களின், வேலை இல்லா ஆண்களின், சாதி வேறுபாடுகளின், வன்மத்தின், வறுமையின் துயரம் அது.

கதைகளின் பேசுகுரல் பொதுவாக பெண்ணியக் குரலாக, குழந்தைகளின் குரலாக, வஞ்சிக்கப்பட்ட ஒருவரின் குரலாக உள்ளது. பெண்ணியக் குரல் தெளிவாக ஒலிக்கும் கதையாக கிடந்த கோலம் கதை இருக்கிறது. சமைப்பது, துவைப்பது, தண்ணீர் எடுப்பது, கடைக்குப் போய் வருவது, வீடு பெருக்குவது, விருந்து உபசரிப்பு என பெண் உழைத்துக்கொண்டே இருக்க ஆண் பள்ளி கொண்ட கோலத்தில் இருந்துவிட்டு இரவு மட்டும் பெண்ணை அணுகுவது குறித்தது. கதையின் அழுத்தமான கட்டம் பெண் 'இதுக்கு மட்டும்தான் நீயா' என சிரிப்பது குறித்தது. அது சிரிப்பல்ல வலி என்பது அவனுக்குப் புரியாமல் போவது அன்றாட நடைமுறையின் ஆழ்ந்த படப்பிடிப்பு. கூரு கெட்டவன் கதையிலும் பெண் ஏமாற்றப் படுகிறாள். குடும்ப மரியாதை கருதி அமைதி கொள்கிறாள்.

முதிய பெண்கள் தங்கள் மகன்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். கடைசிக் காலத்தில் உணவும், கவனிப்பும், மரியாதையும் அற்று போகிறார்கள். தீராக்குறை கதையின் மூன்று சகோதரிகளுக்கும் வயதான காலத்தில் பிள்ளைகளால் சுகமில்லை. தள்ளாத வயதில் கூலி வேலை, சுடு சொற்கள், ஒரு வாய் கஞ்சிக்கு மகனிடம் மற்றவர்கள் வழியாக சிபாரிசு தேடல் என அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. இதே போன்ற சூழலில் உள்ள தாய்மை கதையின் அம்மாவால் இறுதி வரையிலும் பிள்ளைகளைத் தண்டிக்க முடியவில்லை. வெறுத்துபோய் காசு வெட்டி போட நினைத்துக் கோவிலுக்குப் போகும் அவள் இறுதியில் அவர்களின் நல வாழ்விற்காக சாமி கும்பிட்டுவிட்டு வருகிறாள். தாய்மை குணம் என்பது அரவணைப்பாக, வளர்ச்சிக்கானதாக இருக்கிறது. உளப்பகுப்பாய்வு அப்படி உள்ள ஒருவருக்கு 'motheror' எனப் பெயரளிக்கிறது. அவர்கள் உடல்பூர்வமாக பெண்ணாக இருக்க வேண்டியதில்லை. கூரு கெட்டவன் கதையில் வரும் உடையாளை போல மனிதர்களை மன்னிக்கத் தெரிந்தவராக, உதவுபவராக இருந்தால் போதும்.
குழந்தைகள் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் கதைகளில். புற்று கதையின் சிறுமியின் நாய் வளர்க்கும் ஆசையும், அப்படி வளர்க்கும் நாய்க்குட்டி பெண் குட்டி என்பதால் காட்டில் எட்டி உதைக்கப்படும் நிலை கண்டு தானும் ஒரு பெண் தனக்குமந்த நிலை ஏற்பட்டுவிடுமோ எனக் கலங்குவதும் அடர்த்தியான வலியோடு பதிவு செய்யப்படுள்ளது. அம்மா சாகப் போகிறேன் எனும்போது 'நானும் வர்ரேன், என எப்போதும் போல் சொல்லும் குழந்தையும் கதையில் கவிதையாக வெளிப்படுகிறது.. நிரூபணம் கதையின் சிறுவனோ கைவிடப்பட்ட முதியவருக்கான கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையின் நிரூபணமாக உள்ளான். கதைகளில் தென்படும் அன்பு வறட்சிக்கான மாற்றாக குழந்தைகளே உள்ளனர்.

குதிரை மசால் தாத்தா கதையின் முதியவர் அப்படி குழந்தை மனம் உள்ள தாத்தாதான். அதனால்தான் 80 வயதிலும் உழைக்க முடிகிறது. ஊர்ப் பிள்ளைகளோடு ஒன்ற முடிகிறது. பாட்டி இறந்தால் தானும் காணாமல் போவேன் என பூடகமாகச் சொல்ல முடிகிறது. இதே பிணைப்பும், அன்பும் மெய்ப்பொருள் காண்பது அறிவு கதையின் அப்பாவுக்கு மகன் மேல். எப்படியாவது பிள்ளையை படிக்க வைக்க நினைக்கும் அப்பாவின் அன்பையும், வறுமையையும் புரிந்து கொண்டு மெய்ப்பொருள் அறியும் மகன். ஆனால் பொருள் இல்லாததை வெறுத்து ஒதுக்கும் மனைவி வாழும் கலை கதையில். கழைக் கூத்தாடி சிறுமியின் வாழ்வு பணம் கொடுத்துப் போகும் வாழும் கலை பயிற்சிகளை விடப் பாடம் புகட்ட கடின வேலைக்குத் திரும்பும் கணவனின் வலி பேசுகிற கதை.

பெண்ணை உடலாகப் பார்க்கும் பொதுப் புத்தியின் ஒருவரான நாயகன், அப்பாவை சாகக் கொடுத்துவிட்டு அவர் உடலை வீட்டுக்குக் கொண்டுவர உதவி கேட்கும் பெண்ணை, அவள் வெண்ணிலை நிலையில் ஆதரவற்று உள்ளதைப் புரிந்து வெட்கி மாறும் இயல்புக் கதை வெண்ணிலை. எனினும் தொகுப்பின் தலைப்புக் கதையான ஒரு துளி துயரம் காட்டுகின்ற உலகம் மாறுபட்டது. கொந்தளிப்பானது. திருமண மொய்ப் பணத்தை பதிவு செய்யும் சாக்கில் கொடுத்த கடனை எடுத்துக் கொண்டுவிட்ட நண்பனின் நம்பிக்கையின்மையை, துரோகத்தை எண்ணி எண்ணி மாய்ந்து போகும் மனிதன் ஒருவன் அடுத்த நாளே தற்கொலை செய்ய, அவனது மனைவி அவன் மாற்றுத் திறனாளியான தன் மேல் அன்பு காட்டிய அவனின் கவுரவத்திற்காக அந்த நண்பனுக்கு மிச்சமுள்ள கடன் தொகையை கொடுக்கும், அவன் வெட்கி வருந்துவான் என நினைத்து ஏமாறும், வலி கடலென அவளுள் அலைஎழுப்பும் கதை. மனித மனதின் சின்னத்தனமும், பெருந்தன்மையும் இணைமுரணாக வெளிப்படும் கதை.

பூமிக்குள் ஓடுகிறது நதியில் இரண்டு சாதியை சேர்ந்த அன்பான மனிதர்கள் மோசமான கலவரச் சூழலிலும் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் நேயம் பற்றியது. இந்த கதைகள் அனைத்துக்கும் மாறாக அக்குபாரிக் கிழவியின் அட்டகாசங்கள் கதை உள்ளது. அது உடல் குறித்த நனவுணர்வு அற்ற நிலையிலும் முதியவள் ஒருவள் சொத்து விஷயத்தில் மகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காக அவளுக்கே உரிய ரகசியத்தோடு, வன்மத்தோடு, மகனை, மருமகளை படுத்தும் பாட்டை, பெண்ணுக்கு அவர்களுக்குத் தெரியாமல் தோடும், பணமும் கொடுப்பதை, வித்தியாசமாகப் பதிவு செய்கிறது. குதிரை டாலருக்காக ஏங்கும் மகன் வழிப் பேரனை அவள் ஏமாற்றுகிறாள். அது அவளின் ரகசிய வன்ம வெற்றியாக, ஆணின் தோல்வியாக குறியீடாக உள்ளது.

கதைகளின் மொழி நடை மண் வாசனையோடு, இயல்பாக உள்ளது. இறுக்கமாகவும் உள்ளது. தீராக்குறை கதையில் மட்டும் dramatic monologue எனும் ஒருவர் பேச்சில் சூழல் சொல்லப்படும், எதிராளியின் பேச்சு ஊகிக்கப்படும் உத்தி கையாளப் பட்டுள்ளது. கதையின் மனிதர்கள் சூழலின் வெம்மையிலிருந்து தப்பிக்க பெரும்பாலும் நனவுரு கற்பனையில் (fantasy) மூழ்குகிறார்கள். இது அடிக்கடி உபயோகப்படுத்தப் படுவது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கிடந்த கோலம் கதை கந்தர்வனின் இரண்டாம் ஷிப்ட் கதையை நினைவுறுத்துகிறது தவிர்க்க இயலாமல். கூரு கெட்டவன் கதைப்பிரதியில் தாஸ்தொவ்ஸ்கியின் இடியட் மின்னி மறைகிறான். தற்செயலான ஒற்றுமையாக இருக்கலாம்.

முடிவாக, நன்மையும், தீமையும் ஊடு பாயும் உலகின் அதிகரித்துக்கொனடே போகும் துயரத்தின் சாயையை ஒரு துளி துயரம் தொகுப்பின் கதைகள் ஒரு விதமான வலியின் இழை கொண்டு வடிவங்களாக்குகின்றன எனலாம். இத்தனைக்கு மத்தியிலும் வாழ்கை ஓடும் விந்தையை மென்னகையோடு சொல்கின்றன தொகுப்பின் தலைப்பும், உள்ளடக்கமும் என்பது இத்தொகுப்பின் இன்னொரு ஊடிழையாக, இணைபிரதியாக (subtext) உள்ளது. அது தொகுப்பின் பலமாகவும் உள்ளது.

நன்றி - சைக்கிள்
...மேலும்

Nov 27, 2010

என்கவுண்டர் - ஜெயந்தி


குழந்தைகளை கொன்றவன் என்கவுண்டரில் கொல்லப்பட்டான் என்ற செய்தியைப் பார்த்தவுடன் மனதில் சந்தோஷமே தோன்றியது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய அனைவரின் மனநிலையும் அதுவாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது உணர்வு ரீதியாக சரி. ஆனால் ஜனநாயக நாட்டில் வாழும் நாம் இதை சரியென்று ஆமோதித்தால் ஜனநாயகத்தை மதிக்காத செயல்போல் இல்லையா? நிச்சயம் இதுபோன்ற குற்றங்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவோ முடியாத குற்றங்கள்தான். இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை அரசாங்கம் உடனடியாக விசாரித்து மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை சட்டப்படி இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றினால் அதைப்பார்த்து மற்றவர்களுக்கும் பயம் வரும். அதைவிடுத்து இதைப்போன்ற விசாரணையற்ற என்கவுண்டர்கள் தேவையா? இந்த என்கவுணடரில் உண்மையான குற்றவாளி கொல்லப்பட்டான் என்ற அளவில் சரி. இதேபோல் சரியாக விசாக்கப்படாத என்கவுண்டர்களில் குற்றம் செய்யாமல் யாராவது இறக்க நேரிட்டால்?

மக்கள் சில விஷயங்களில் மட்டும் பொங்கி எழுவது ஏன்? இதேபோல நிறைய நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் அவர்கள் அமைதியாக ஏன் இருக்கிறார்கள். எல்லா விஷயங்களிலும் மக்கள் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தாலே அரசாங்கம் பயப்படும். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை சட்ட ரீதியாக அளிக்கப்படும். குற்றம் செய்ய நினைப்பவர்களும் பயப்படுவார்கள்.

அம்பிகா என்ற இளம் பெண் நோக்கியா கம்பெனியில் பணி நேரத்தின்போது இயந்திரத்தில் மாட்டிக்கொண்டார் என்று சன் டிவியில் செய்தி பார்த்தேன். அதில் அவர்கள் மேலும் சொன்னது மெசினில் மாட்டிக்கொண்ட அம்பிகாவை உடனே வெளியே எடுக்க வேண்டுமென்றால் மெசினை உடைக்க வேண்டும். மெசின் இரண்டு கோடி என்பதால் அதை உடைக்கவில்லை. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அம்பிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்கு மனது பதறியது. இரண்டு மணி நேரம் அந்த சிறு பெண் மெசினுக்குள் அணுஅணுவாக இறந்து கொண்டிருந்தாள். சித்ரவதைக்கொலை இல்லையா? உயிரைவிட மெசின் முக்கியமா? இதைப் பார்த்தவுடன் ப்ளாக்கில் எழுத வேண்டும் என்று இருந்தேன். இன்ட்லியில் பார்த்துக்கொண்டு வந்தபோது அம்பிகா பற்றி வினவில் வந்திருந்ததைப் பார்த்தேன்.

அவர்கள் விரிவாக எழுதியிருந்தார்கள். அதில் வந்த அந்தத் தாயின் படம், என்னால் அந்தத் தாயின் படத்தையே பார்க்க முடியவில்லை. அம்பிகாவிற்கு ஜனவரியில் திருமணம் ஏற்பாடாகியிருந்ததாம். அவள் தனது வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கனவுகள் கண்டிருப்பாள். அத்தனை கனவும் அந்த மெசினுக்கும் நோக்கியாவிற்கும் அர்ப்பணமா? இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பன்னாட்டுக் கம்பெனிகளும் நம் மக்களின் உயிரை சூறையாடத் தொடங்கிவிடாதா?

விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலையேற்றம் என்று எதற்கும் யாருமே எந்த ரியாக்சனும் இல்லாமல் இருக்கிறார்களே? யாராவது பந்த் நடத்தினால்கூட கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்களே இதைப் பற்றியெல்லாம் ஏன் யாருமே கவலைப்படுவதில்லை என்று தோன்றும். இரண்டு நாட்களுக்கு முன் கல்வெட்டு அவர்களின் ப்ளாக்கில்

கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்

இந்த இடுகையைப் படித்தவுடன் எனது இந்த சந்தேகத்திற்கெல்லாம் விடை கிடைத்தாற்போல் தோன்றியது. இப்போது நடந்த கொலைக்கு மட்டும் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பொங்குவதன் மர்மமும் புரிந்தது.

நாமெல்லாம் டியூன் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போது கோபப்பட வேண்டும். எதற்காக கோபப்பட வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், எதற்கெல்லாம் ஆசைப்பட வேண்டும் என்றெல்லாம் டியூன் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் அதற்கேற்றார்போலவே நடந்துகொள்கிறார்கள்.

இவ்வளவிலும் எனக்கொரு சந்தோஷம். மக்கள் ஒன்றுதிரண்டு கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். அவர்களுக்கு கொந்தளிக்கவும் தெரிகிறது. அதைப் பார்த்தவுடன் மனதுக்கு நிறைவாக இருந்தது. என்ன நடந்தாலும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறார்களே என்று நினைத்திருக்கிறேன். அவர்களின் இந்தக்கொந்தளிப்பு சந்தோஷத்தையே கொடுத்தது.

ஒன்று நாமாக சிந்தித்து சமுதாயத்தை மாற்ற வேண்டும். அது இந்த சமுதாயத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு மாற்றுவார்கள் என்று தோன்றவில்லை. நம்மையெல்லாம் நல்ல வழியில் டியூன் செய்து வழி நடத்திச் செல்ல ரட்சகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி நல்லவர்களால் டியூன் செய்யப்பட்டாவது அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்.

...மேலும்

Nov 26, 2010

பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஆதிரை


பூவரசி வழக்கில் குறுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. பூவரசி குழந்தையைக் கடத்திக் கொலை செய்யும் செயலுக்கு தூண்டுதலாக இருந்த ஜெயக்குமார் தன்னை ஒரு உலக மகா யோக்கியனாக நீதிமன்றத்தில் நிறுவுகிறான். ஆணாதிக்க பொது ஒழுக்கத்தை பாதுகாக்கும் நீதியும் அதை ஏற்றுக் கொள்கிற போக்கிலேயே வழக்கு செல்கிறது. நான் அநேகமாக இன்னும் நான்கு மாதங்களுக்குள் நீதிமன்றம் பூவரசிக்கு தூக்குத் தண்டனையை வழங்கி தன்னை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும். ஜெயக்குமாரின் ஏமாளி மனைவியோ தூக்குத்தண்டனை விதிப்பதோடு மட்டுமல்ல உடனடியாக பூவரசியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கில் போட வேண்டும் என்று பேட்டி கொடுப்பார். சொல்ல முடியாது விருகம்பாக்க வாசிகள் வெடி கொளுத்தி இனிப்பு வழங்கி பூவரசியின் தீர்ப்பை வரவேற்றாலும் வரவேற்பார்கள்.

கொடூர குற்றவாளிகளுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதன் மூலம் கொடூர குற்றங்களையும் ஆதரிக்கிறீர்கள் என்று சில நண்பர்கள் என் மீது குறைபடுகிறார்கள். கொடூர குற்றங்கள் நடைபெறக் கூடாது என்பதுதான் நமது கவலையே தவிற கொடூர குற்றங்களுக்கு தண்டனையே தேவை இல்லை என்பதல்ல என் வாதம். ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர் குற்றம் சுமத்தப்பட்டவர்தான் அவருக்கான உரிமைகள் உண்டு. அவரை குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சுமத்தியவர்களுக்கு உண்டு அதை சட்டத்தின் வழி நின்று நிரூபிக்க வேண்டுமே தவிற பொதுப்புத்தி, பொது மனச்சாட்சி, மக்கள் விருப்பங்களுக்கெல்லாம் இங்கே இடம் கொடுக்கக் கூடாது. ஆனால் இந்தியாவில் பெரும்பலான தீர்ப்புகளில் சட்டத்தின் அளவுகோல்களை விட பொதுப்புத்தியும், நம்பிக்கையும், பெரும்பான்மனை மக்கள் விருப்பமுமே நீதியின் முடிவாய் இருக்கிறது. கோவை மோகன்ராஜ் என்கவுண்டரிலும், பூவரசி விஷயத்திலும் இதுதான் நடக்கிறது. நான் பூவரசி செய்த குழந்தைக் கொலையை எதை வைத்தும் நியாயப்படுத்த வில்லை. பூவரசியை மிக மோசமான முறையில் ஜெயக்குமார் மீண்டும் மீண்டும் ஏமாற்றி பாலியல் வன்முறை செய்திருக்கிறார். பூவரசி எல்லா இந்திய பெண்களையும் போல தன்னை திருமணம் செய்யும் படி ஜெயக்குமாரை வற்புறுத்த அவரோ ஒரு கட்டத்தில் பூவரசியை உதாசீனப்படுத்தியிருக்கிறார்.ஆண்களின் விஷக் கொடுக்குகளுக்கு தன்னை பலியாக்கிக் கொண்ட ஒரு பெண்ணின் மனப்போராட்டம் ஒரு பக்கம். இதை எதையும் கண்டு கொள்ளாத ஜெயக்குமார் மனைவி குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்தது இன்னொரு பக்கம் என பூவரசி மன ரீதியான துன்பங்களுக்கு ஆளான நிலையில் ஜெயக்குமாரை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அவரது குழந்தையைக் கடத்திக் கொன்று விட்டார். இப்போது ஜெயக்குமார் கதையை இப்படித் திரிக்கிறார். பூவரசி மீது தான் இரக்கப்பட்டு வேலை கொடுத்ததாகவும் அவர் விரும்பியே தான் அவருடன் பழகியதாகவும் கடைசியில் தன் குழந்தையைக் கொன்று விட்டதாகவும் சொல்கிறார். ஊடகங்களும் ஜெயக்குமாரின் வாதங்களை மட்டுமே ஒரு தலைப்பட்சமாக வெளியிடுகின்றன. பூவரசிகள் மீது ஊடகங்கள் கட்டும் வன்மத்தைப் பார்க்கும் போது அநேகமாக அந்தத் தீர்ப்பை ஆண்கள் எழுதி முடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.ஜெயக்குமாரின் மனைவிக்குமே தன் கணவன் இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய விளையாட்டால்தான் இக்கொலை நடந்தது என்ற எண்ணம் இருப்பது போலத் தெரியவில்லை. இந்த இடத்தில் ஜெயக்குமாரின் மனைவிக்கு இம்மாதிரியான தொடர்பு இருந்தால் அதை ஜெயக்குமார் மன்னித்து ஏற்றுக் கொள்வாரா என்கிற கேள்வியும் உண்டு. ஆக சொத்துடமை சமூகத்தின் இறுகிய கட்டமைப்பான ஆண் தலைமை தன் சகல அதிகாரங்களையும் பெண் மீது செலுத்துகிறது. ஜெயக்குமார் பூவரசியை ஏமாற்றியது ஆண் என்ற இயல்பில் என்பதை ஒரு பெண்ணின் தலை மீது சுமத்துகிறது.

ஊடகங்கள் நிகழ்த்தும் பாலியல் வன்முறை

பூவரசியை ஜெயக்குமார் பல முறை ஏமாற்றி பாலியல் வன்முறை செய்தார். ஊடகங்களோ அவர் விசாரணைக்கு வரும் போதெல்லாம் அந்த பெண்ணை அம்மணமாக்கி பாலியல் வன்முறை செய்கின்றது. ஓவ்வொரு முறை அவர் நீதிமன்றம் அழைத்து வரப்படும் போதும் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்படும் போது வெளியில் ஒரு கூட்டம் பெண்கள் துடைப்பங்களோடு திரண்டு வந்து அவரை அடிக்கிறோம் பேர்வழி என்று நிற்கிறார்கள். கையில் துடைப்பங்களோடு நிற்கும் அவர்களும் ஒவ்வொரு பூவரசிகள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தாத வரை அது இந்த சமூக அமைப்பிற்கு சாதகம் என்பதால் போலீசே சில நேரங்களில் குற்றம் சுமத்தப்பட்டவரை அடிக்க ஆள் திரட்டுகிறார்கள். பெண் போலீசின் பிடியில் அழைத்து வரப்படும் பூவரசியை இரண்டு நிமிடங்கள் பெண் போலீசே மீடியா முன்னால் நிறுத்துகிறார்கள். இது ஏதோ தற்செயலாக நடக்கிற நிகழ்வல்ல, அன்றைக்கு ஒரு புது பூவரசி கிளிப்பிங்ஸ் கிடைத்தால் செய்திக்கு முக்கியத்துவம் என்பதால் இவர்களின் போலீஸ் கூட்டு என்னும் அடிப்படையிலேயே பாளாஷ்களை அந்தப் பெண்ணின் மீது இறக்குகிறார்கள். ஆக அவர் தினம் தோறும் ஊடகங்களாலும் தொந்தரவு செய்யப்படுகிறார்.

எடிகா அன்னம்மாவும், பூவரசியும்

இரண்டு இளம் பெண்கள் ஒரு ஆணை காதலித்தார்கள். அதில் எடிகாவும் ஒருத்தி. தன்னைவிட மற்றவளிடம் அவன் நெருக்கமாக இருப்பதாக எடிகா பொறாமைகொண்டாள். எடிகா சமயம் பார்த்து அந்த இன்னொருத்தியையும் அவளது குழந்தையையும் கொன்று போட்டாள். எடிகாவுக்கு அப்போது வயது 21 அல்லது 22 தான் இருக்கும். அவளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. நமது மரியாதைக்குரிய பெரியவர் கிருஷ்ணய்யரிடம் வந்த வழக்கில் அவர் எடிகாவை கருணை காட்டி விடுதலை செய்தார் ( நான் கிருஷ்ணய்யரைக் கண்ட நேர்காணலை கீழே இணைத்துள்ளேன்) வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தத் தீர்ப்பில் கிருஷ்ணய்யர் "கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்று காந்தி சொன்னதை அந்த தீர்ப்பில் குறிப்பிட்டார்.இங்கு எடிகாவோடு பூவரசியையும் பொறுத்திப் பார்க்கலாம் தன்னை காதலித்தவன் ஏமாற்றியதால் அவன் மீது வரவேண்டிய கோபம் அந்த பெண்ணுக்கு அவனது குழந்தை மீது வந்து கொலையும் செய்து விடுகிறாள். இங்கே கொடூரமான குற்றங்களையோ பாலியல் சார்ந்த கொலைகளையோ பூவரசி மீதான குற்றச்சாட்டுகளோடு ஒப்பிடவே முடியாது.
பூவரசி கொலை செய்த சூழல், அவர் ஏமாற்றப்பட்ட நிகழ்வு, அவரது சமூகப் பின்னணி, தனிமை, ஏற்கனவே அவர் உளவியல் ரீதியாகவும், சிறை ரீதியாகவும் அனுபவித்து விட்ட தண்டனை உள்ளிட்ட சகல விஷயங்களையும் கணக்கில் கொண்டு பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும். அவருக்காக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

நன்றி - வன்மம்
...மேலும்

Nov 25, 2010

"Killing us softly"…. - கறுப்பிவிளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்களை மையமாக வைத்து ஜீன் கில்போன் பல விவரணப்படங்களை எடுத்து விருதுகளையும் பெற்றுள்ளார். Spin the Bottle”, “Deadly Persuasion” போன்ற இவரது விவரணப்படங்கள் மதுபானங்கள், சிகரெட் போன்றவற்றை விளம்பரங்கள் மூலம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எப்படி வியாபாரிகள் நுழைக்கின்றார்கள் என்றும் அதனால் மாணவர்களிடையே ஏற்படுத்தும் தாங்களை ஆதாரங்களோடும் விளக்கியுள்ளார். 

Killing Us Softly 3: Advertising's Image of Women from visionOntv on Vimeo.
Killing Us Softly 4 Trailer from Media Education Foundation on Vimeo.

ஜீன் கில்போனின் “Killing us softly” விளம்பரங்கள் பெண்களை எப்படியான இழிவுபடுத்துகின்றன என்பதோடு, விளம்பர நடிகைகளின் தோற்றங்கள் இளம்பெண்களின் மத்தியில் எப்படியான தாகங்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டி நிற்கின்றது. மின்னும் கன்னங்களும், பட்டுப்போல குலுங்கும் தலைமயிரும், வாரி எடுத்து விட்டது போல் கால்கள், இடுப்பு என்று ஆறு அடி உயரப் பெண்களை விளம்பரங்கள் மூலம் அலையவிட்டு இளைஞர்கள் மத்தியில் அழகு என்பதற்கு வரைவிலக்கணம் வகுத்து உடல்பருத்த, முகப்பரு கொண்ட பெண்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது.

இப்படியான விளம்பரங்களை கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு எடுத்துச் சென்று மாணவர்கள் மத்தியில் அதனைப் போட்டுக்காட்டி அவர்களுடைய கருத்துக்களையும் இந்த விவரணப்படங்களில் இணைத்திருக்கின்றார்கள். பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்குக் கூட இந்த விளம்பரங்கள் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை விளம்பர நடிகைகளின் தோற்றங்கள் கொண்ட பெண்களை தங்கள் மனம்;, கண்கள் நாடுகின்றன என்றும், தமது காதலி உடல்பருத்தால் தமக்குள்ளும் தாக்கங்கள் ஏற்படுகின்றது என்பதாய் இந்த மாணவர்கள் கூறுகின்றார்கள். 

அழகு என்றால் என்ன என்பதை வியாபாரிகள், ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் தமக்கான குறுகியவட்டத்திற்குள் வரவிலக்கணம் கொடுத்து இஞைர்களை அதற்கு அடிமையாக்கி தம் அழகு சாதனப்பொருட்களைச் சந்தைப்படுத்துகின்றார்கள். அத்தோடு தேவையற்ற பல பொருட்களுக்கும் பெண்களின் உடல் அங்கங்கள், அரைகுறை உடையணிந்த பெண்களின் தோற்றங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி பெண்களை ஒருகாட்சிப் பொருளாக்குகின்றார்கள். இவையனைத்து மேற்குலக வியாபாரத் தந்திரங்கள். இந்த வியாபாரிகளுக்கும், விளம்பதார்களுக்கும் எதிராக ஜீன் கில்போன் போன்றவர்களும், பல பெண்ணியவாதிகளும் குரல் கொடுத்த வண்ணமே இருக்கின்றார்கள். அண்மையில்; Dove;  சவர்காரப் பொருட்களுக்கு ரொறொண்டோவின் அனைத்துப் பாகங்களிலும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தது. பல நிறங்களில, பல அளவுகளில் பெண்களை இந்த சவர்க்காரப் பொருளுக்குப் பயன்படுத்தி ஒரு சாதனையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்றால் மீண்டும் பெண்களின் உடல்கள்தான் இங்கே காட்சிப் பொருளாக்கப்படுகின்றது. இவையனைத்தும் அமெரிக்க கனேடிய சஞ்சிகைகள், தொலைக்காட்சிகளுக்கான விளம்பரங்கள். 

போன கிழமை எனது நண்பர் ஒருவரின் வீட்டில் கனேடிய தமிழ் தொலைக்காட்சியை சில மணிநேரம் பார்க்க முடிந்தது. அந்த சிலமணி நேரங்களில் தமிழ் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட விளம்பரங்கள் அதிர்சி தரக்கூடியதாக அமைந்திருந்தன.

ஒன்று – Rapid Floor” இற்கான விளம்பரம். ஒருவர் வேட்டி சால்வையோடு மரத்தின் மேல் கையில் தாலிக்கயிற்றோடு தொங்குகின்றார், இவரின் பேச்சு மூளை பாதிக்கப்பட்டவர் போல் காட்டப்பட்டது. அதன் தேவை எனக்குப் புதியவில்லை. கீழே அவரின் தந்தை என்று சொல்லிக் கொண்டு அதே ஆண் வேறு வேடத்தில் நின்று கொண்டு “வடிவான பிள்ளை வீடும் சீதணமாத் தருகின்றார்கள் முகூர்த்த நேரம் போகப்போகுது வந்து தாலியைக் கட்டு” என்பதாய் கெஞ்ச மரத்தில் தொங்கும் மகன் “வீட்டுக்கு ரப்பிட் புளோரிங்கை கூப்பிட்டு Hardwood Floor, போன்றவை போட்டால்தான் வந்து தாலி கட்டுவன”; என்று கேட்பதாய் அந்த விளம்பரம் அமைந்திருக்கின்றது. 

பெண்ணுக்குத் தாலி கட்டுவதென்பது எவ்வளவு சிறுமைத்தனமாக பெண்ணால் ஒன்றும் செய்ய முடியாது என்பது போலும், புளோரின், காட்பெட் போன்று பெண்ணையும் ஒரு பொருளாக்கி இந்த விளம்பரத்தில் காட்டியிருக்கின்றார்கள். அந்த ஆண் எதற்கு அசட்டுத்தனமாகவே கதைக்கின்றார் என்பது எனக்கு எப்போதும் புரியாத புதிராகவே இருக்கின்றது. இந்த ஆணை எந்த ஒரு பெண்ணும் முன்வந்து கட்டிக்கொள்ளுவாளா என்பது பற்றி இந்த விளம்பரத்தை எடுத்தவருக்கு ஏன் சிந்தனை எழவில்லை. இந்த விளம்பரம் எந்த வகையில் ரப்பிட் புளோரிங்கின்று வியாபாரத்தைக் கூட்டிக்கொடுக்கப் போகின்றது.

அடுத்து “நிரு” சமையல் பொருட்;களுக்காக இந்தியா சென்று டொலர்களை அள்ளிக் கொடுத்து ஒரு விளம்பரம் பண்ணிக்கொண்டு வந்திருக்கின்றார்கள். “சமையல் நல்லாவே இல்லை, அம்மா சமையல் போல் இல்லை” என்று சாப்பாட்டு மேசைமேல் இருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இளைஞன் முகத்தைச் சுளித்து தனது அருகில் நிற்கும் இளம் மனைவியைப் பார்த்துச் சொல்லி விட்டுப் போகின்றார். இளைஞனின் தாயார் “நிரு ப்ராண்ட்” பொருட்களோடு வந்து மருமகளுக்கு சாப்பாட்டில் அதனை சேர்த்துக் கொள்ளச்சொல்லி குடுக்கின்றார் என்பதாய் விளம்பரம் அமைந்திருக்கின்றது.

புலம்பெயர்ந்து வந்த ஈழத்து ஆண்களில் பலரும், கனடாவில் பிறந்து வளரும் பல ஆண்களும் தமது வீட்டு வேலைகளை தமது மனைவிமாருடன் சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். மீண்டும் எதற்காக இந்தியக் குப்பைகளை இங்கே இழுத்து வந்து தொலைக்காட்சியில் போட்டுக்காட்டுகின்றார்கள். 

திரும்பத் திரும்ப ஒன்றை பார்ப்பதன் மூலம் மனதில் அது சரி என்று பதிந்து விடுவதாய் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால்தான் தற்போது இரவில் குழந்தை அழும்போது எழுந்து கொள்வது, டயப்பர் மாத்துவது, வீடு துப்பரவு செய்வது, உடுப்பு துவைப்பது போன்ற பல விளம்பரங்களுக்கு ஆண்களையும் பயன்படுத்துகின்றார்கள் சிந்திக்கத் தெரிந்த சமூக அக்கறை கொண்ட விளம்பரதாரர்கள். 

தமிழ் தொலைக்காட்சிகளில் இந்திய நாடகங்கள் தேவையில்லைத மனஅழுத்தங்களை புலம்பெயர்ந்த பெண்கள் மத்தியில் கொடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இப்படியான விளம்பரங்களை எதற்கான விளம்பரதாரர்கள் இணைத்துக்கொள்ளுகின்றார்கள் என்பது தெரியவில்லை. புலம்பெயர்ந்த எம்மவர் தயாரிப்பு நிரூப்ராண்ட் பொருட்கள். இதற்கு இப்படியான விளம்பர தேவை எதற்கு??

பழக்க தோசத்தில் நிரூ ப்ராண்டை வாங்கி வந்த நான் அந்த விளம்பரம் பார்த்த பின்னர் வாங்குவதில்லை. என்னால் முடிந்தது இவ்வளவே.

-கறுப்பி
...மேலும்

Nov 24, 2010

பெண்ணியம் - ஒரு பார்வைமீரா கிருஷ்ணன்குட்டி: படைப்புகளை தலித் என்றும் பெண்ணெழுத்து என்றும் பலவிதப்பட்ட லேபிள்களை ஒட்டி வெவ்வேறு அறைகளில் அடுக்கி வைக்கும் இன்றைய நிலையைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

ஜெயகாந்தன்: இது அவரவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒட்டிக்கொள்ளும் லேபிள் ஆயிற்றே -- அதனால் அவர்களுக்கு நன்மை இருக்கிறது என்று நினைத்துத்தானே அவர்கள், அதைச் செய்கிறார்கள். இல்லாவிட்டால் எழுத்தாளர்கள் அதைப் பிடித்து கிழித்து எறியட்டும். மாறுபட்ட முகவரியை விரும்புபவர்கள் அதைத் தொடரட்டும்.

மீரா கிருஷ்ணன்குட்டி: பெண்ணெழுத்து என்ற லேபிளை பெண்களே எடுத்து அணிந்து கொள்கிறார்கள் என்று கூறலாமா?

ஜெயகாந்தன்: தேவையில்லை என்பவர்கள் போராடி அதைக் கழற்றி எறியட்டும் தீர்மானிக்க வேண்டியவர்கள் பெண்களே.

மீரா கிருஷ்ணன்குட்டி: இப்படிப்பட்ட பிரிவினை வாசகர்களை சிந்தனைக் குழப்ப ங்களில் சிக்க வைத்துவிடாதா? நீங்கள் அதை ஆதரிக்கிறீர்களா?

ஜெயகாந்தன்: பிரிவினையால் உண்டாகும் சிந்தனைக் குழப்பம் படிப்படியாக மறைந்து விடும். தெளிவு மீண்டும் பிறக்கும். பிறகு... நான் ஒரு சட்டம் உண்டாக்குகிறவன் அல்லது--நல்லது, கெட்டது என்றெல்லாம் கூறக்கூடிய ஆள் இல்லை நான்.

தமிழில் - சுரா

சிவதாணு: தற்போதைய பெண் கவிஞர்கள் உடல்மொழியை மையப்படுத்தி எழுதும் எழுத்துக்களை தவறு என்று பேசுபவர்களைப் பற்றி...

பாமா:
இதுவரையில் மொழியென்றாலே ஆண் மொழிதான். மொழியின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களுக்கு, பெண்கள் சுதந்திரமாக அவர்கள் மொழியில் எழுத ஆரம்பித்தபோது கூப்பாடு போடுகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது. காலம் காலமாகப் பெண்களை ஒடுக்கி வந்த கூட்டத்திற்கு, பெண்கள் மொழியாலும் ஒடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது.

சிவதாணு: பெண் கவிஞர்கள் தங்களின் உடல் மொழிகளில் எழுதுவதை ஆபாசம், வக்ரம் என்று சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். தாங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

நாஞ்சில் நாடன்: ஒருவிதமான ஆபாசமும் இல்லை. வக்ரமும் இல்லை. மனதளவில் உணர்ச்சியளவில் அதை இலக்கியமாக வெளிப்படுத்துவதில் ஆணுக்கு உண்டான சகல சுதந்திரங்களும் பெண்ணுக்குமுண்டு. நமது மொழியில் இது மிகவும் தாமதமாக வெளிப்பட்டுள்ளது. இவர்கள் ஆபாசம் என்றும், வக்ரம் என்றும் எதைச் சொல்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. பெண் உடல் ஆபாசம், பெண்மொழி ஆபாசம், பெண்ணின் வேட்கை வக்ரம், பெண்ணின் சுதந்திரதாகம் வக்ரம் என்று சொல்பவர்கள் பிற்போக்குவாதிகளும் மனநோயாளிகளுமாகவே இருப்பார்கள். அவ்வையாரும், ஆண்டாளும், சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களும் அன்று எடுத்துக்கொண்ட சுதந்திரத்தில் அரைப்பங்கு கூட இன்றைய பெண் இலக்கியவாதிகள் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

சிவதாணு : தற்போது எழுதிவரும் கவிஞர்களின் கவிதை பற்றிய உங்கள் பார்வை என்ன?

வல்லிக்கண்ணன்: எப்பவும் இரண்டு வகையாக எழுதுகிறார்கள். ஒன்று தனி மனித உணர்ச்சிகளை மையமாக வைத்து எழுதுகிறார்கள். இவர்கள் தங்களின் மனப்பதிவுகளை எழுதுவதால் சில சமயம் கவிதைகள் புரியாமல் போய்விடுகிறது. இன்னொரு வகை, சமூகப் பார்வையோடு, அரசியல் உணர்வோடு எழுதுகிறார்கள். இவர்களில் பலபேர் சொன்ன விஷயங்களையே திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் சமூக அவலங்களையும் வாழ்க்கைக்குறைபாடுகளையும் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இவர்களில் மாறுபட்ட ஒரு போக்காக பழமலை, தொன்மங்கள் பழைய மூதாதையர்கள் பற்றி கதைச்சுவையுடன் கவிதை எழுதி வழிகாட்டினார். சிலர் இவரைப் பின்பற்றுகிறார்கள். தலித்திய நோக்கில் அனேகர் எழுதுகிறார்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுடைய உணர்வுகளையும், வாழ்க்கைமுறைகளையும் கவிதையில் வெளிப்படுத்துகிறார்கள்.

பெண்ணியம் சார்ந்து பெண்கள் பலர் தீவிரமாகக் கவிதை புனைகிறார்கள். இவர்கள் பெண் உணர்வுகளையும், ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் வாழ்க்கை நிலைகளைப் பற்றியும் எழுதுவதுடன், அவர்கள் உடல் ரீதியான உறவுகளையும் காம வெளிப்பாடுகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுகிறார்கள். இது ஆண்களோடு போட்டியிடுவது போலவும், வாசகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், புரட்சிகரமான போக்கு என்று கருதி செயல்புரிவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு அப்படி எழுத உரிமை இருக்கிறது. என்றாலும் அது பண்பாட்டுச் சிதைவையே காட்டுகிறது. இப்படி சில ஆண்களும் எழுதுகிறார்கள். பெண்கள் எழுதினாலும் ஆண்கள் எழுதினாலும் இது தவறான போக்கேயாகும்.

சமீப காலத்தில் ஹைகூ என்று மூன்று வரிகளில் எழுதுவது அதிகரித்திருக்கிறது. அதிலும் சென்றியூ, லீமர்க்கூ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு புதுமை பண்ணுகிறார்கள். இவை பெரும்பாலும் கவிதையாக இருப்பதில்லை. எந்த வடிவத்தில் சொல்லப்பட்டாலும் கவிதை, கவிதை அழகுடன் விளங்கவேண்டும்.

சிவதாணு: “சில பெண்களைப் பார்க்கும் போது கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. ஆபாசமாகக் கவிதை எழுதும் பெண்களை அண்ணா சாலையின் நடுவில் நிறுத்தி சுடத் தோன்றுகிறது.” இப்படி சொன்ன திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் கூற்று பற்றி?

பா. செயப்பிரகாசம்: மனித சமூகத்தில் சரிபாதியாக இருப்பவர்கள் பெண்கள். ஒரு பாதி இன்னொரு பாதியை அடிமைப்படுத்துவது என்பதை நாம் அனுமதிக்க முடியாது. இந்த அடிமைத்தனம் என்பது பெண் ஒரு எதிர் பாலியல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் நிலவி வருகிறது - செயல்படுத்தப்படுகிறது. அடிமைப்படுத்தப்பட்ட பகுதி தன்னை விடுதலை செய்து கொள்வதற்காக எல்லா துறைகலும் மேலெழுந்து போராடுகிறது. விடுதலை என்பது விரும்பி தரப்படுவது அல்ல, தானே எடுத்துக்கொள்வது. எனவே அடிமைப்படுத்தப்பட்ட எதிர்ப் பாலியல் முதலில், எதன் காரணமாய் அடிமைப்படுத்துதல் தோன்றியதோ அந்த பாலியல் விடுதலையைக் கோருகிறார்கள். பெண் என்றாலே பாலியல் உறுப்புகளின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறாள். எனவே பாலியல் விடுதலையை வேண்டுகிற பெண் வர்க்கம் பாலியல் உறுப்புகளைப் பேசாமலோ பாலியல் செயல்பாடுகளைக் குறிப்பிடாமலோ படைக்க முடியாது. அதை இவர்கள் ஆபாசம், வக்ரம் என்று விஞ்ஞானமற்ற சொற்களால் குறிப்பிடுகிறார்கள்.

இதற்குமுன் ஆண்கள் பெண் உறுப்புகளின் செயல்பாடுகளை தங்களுடைய இச்சைக்கு உகந்ததாக வர்ணித்து வந்தார்கள். உண்மையில் இவர்கள் எழுதியதுதான் அநாகரீகம். சினேகன் தன்னை மேலாகவும் பெண்ணைக் கீழிடத்திலும் வைத்துப் பார்க்கிறார். பொதுவாக ஆண் பார்வையின்படி பெண்களை இரண்டாகப் பிரிக்கிறார். ஒருவர் பூஜிக்கத் தக்கவர் -- இன்னொருவர் அண்ணாசாலையில் வைத்து சுட்டுக் கொல்லத் தக்கவர் என்று. இந்த இரண்டுமே பெண்ணை அடிமைகளாகப் பார்க்கும் பார்வைதான். இந்த சினேகன் போன்றோர் குரல் கொடுக்காததனாலேயே பெண்கள் தங்களுக்காகவே தாங்கள் எழுத எழுந்தார்கள். அவர்கள் எழுதிய எழுத்துக்களுக்கு அண்ணாசாலையில் வைத்து அவர்களுக்கு மரணதண்டனை என்றால் - சினேகன் போன்றோர்க்கு என்ன தண்டனை அளிப்பது?

சிவதாணு : இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்று ஒன்று தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

ரமேஷ் – பிரேம் : இலக்கியம் என்பதில் முழு முற்றான- பொதுவான இலக்கியம் என்று எதுவுமில்லை. ஒவ்வொரு எழுத்திலும் மிகத் தீவிரமான அரசியல் படிந்துள்ளது. உண்மையான இலக்கியம் வேறுபாடுகளைப் பதிவு செய்யக்கூடியது. தமிழ் மரபில் மேலாதிக்க சாதி மனோ நிலை மறைமுக நஞ்சாகப் படிந்து கிடக்கிறது. இனி வரும் இலக்கியங்கள் வரலாற்றில் மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட குரல்களைப் பதிவு செய்வதாக இருக்கும். அவ்வகையில் தலித்தியமும், பெண்ணிய எழுத்துக்களும் மிக மிகத் தேவை யானவை. தலித்துகளும் பெண்களும் தமக்கு மறுக்கபட்ட மொழியில் தமது எதிர்ப்பையும் தமது உள்ளார்ந்த புலன் களையும் பதிவு செய்ய வேண்டியதிருக்கிறது. அந்தப் பதிவுதான் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. தலித்திலக்கியத்தை தலித் எழுத்தாளர்களும், பெண்ணிய எழுத்துக்களைப் பெண்களும் எழுதுதல் என்பதுதான் அறிவியல் அடிப்படையில் சாத்தியமாகும்.

சிவதாணு : ஆண் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர் என்று வகைமைப்படுத்துவது பற்றி உங்கள் கருத்து என்ன?

அசோகமித்திரன்: ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு வகை. ஆண், பெண் என்பது இயற்கையிலேயே உள்ளது. அதை நாம் ஏன் மறுக்க வேண்டும்?

சிவதாணு: தற்போதைய பெண் கவிஞர்களைப் பற்றி...

அசோகமித்திரன்: அனாமிகா, இளம்பிறை, வெண்ணிலா போன்றோரின் சில கவிதைகளைப் படித்து ரசித்திருக்கிறேன். மாலதி மைத்ரியின் கட்டுரைகள் பல சிறப்பாக அமைந்திருந்தன. ஆனால் அவரும் ஒரு பெண் கவிஞர்தான்.

சிவதாணு : பெண்ணியம் பற்றி...

எம். ஜி. சுரேஷ் : ‘சிமோன் தி பூவா’ என்ற பிரெஞ்சு பெண் சிந்தனையாளர்தான் ‘தி செகண்ட் செக்ஸ்’ என்ற நூலில் முதல் தடவையாகப் பெண்ணியம் பற்றிப் பேசினார். இதிலிருந்துதான் பெண்மொழி, பெண் உடல், பெண்ணியம், பெண் விடுதலை போன்ற சொல்லாடல்கள் தோன்றின. ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு ஆணுக்கான மதிப்பீட்டை ஆண் உருவாக்குகிறான். அதேபோல் ஒரு பெண்ணுக்கான மதிப்பீட்டையும் ஆணேதான் உருவாக்குகிறான். இதிலிருந்து பெண் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னுடைய மதிப்பீட்டை தானே உருவாக்க வேண்டும். பெண்ணைப் பற்றி ஒரு புதிய பார்வையைப் பெண்ணே உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஜேக் லக்கான் என்ற பிரெஞ்சு உளவியல் அறிஞர் ‘பெண் என்று யாருமே இல்லை’ (Women does not exit) என்கிறார். இதுதான் ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு பெண்ணின் நிலை. எனவே பெண் என்பவள் உருவாக்கத்தில் இருக்கிறாள். அதைச் சாதிப்பதற்குத்தான் பெண்ணியத்தின் பங்களிப்பு இருக்கிறது.

சிவதாணு : கலாச்சாரக் காவலர்களால் இன்று பெண்ணியம் கேள்விக்குறியாகியுள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலாப்ரியா : இதிலும் அடிப்படையான கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது எனக்கு உடன்பாடு இல்லை. இது உளவியல்ரீதியாக அணுக வேண்டிய ஒரு விஷயமாகத்தான் எனக்குத் தெரிகிறது. இதை அவர்கள் உணர்ச்சிப் பூர்வமாக அணுகுவதால் சமூகத்திற்கு ஒரு பிரயோசனமும் இல்லை. இதை ரொம்ப பரபரப்பான விஷயமாக மீடியாக்களோ, தனிநபர்களோ ஆக்குவதுகூட எனக்கு உடன்பாடு இல்லை. இவர்களுக்கு இன்னொரு ஸ்கூப் கிடைக்கும் பட்சத்தில் தானாகவே இந்தப் பிரச்சினை மறைந்துவிடும். ஒட்டு மொத்தமாக ஆணாதிக்கத்திற்கு எதிரான போராக கருத்து மற்றும் அறிவியல் ரீதியாக எடுக்கச் சொல்லப்பட வேண்டிய பிரச்சனை இது.

சிவதாணு : பெண் கவிஞர்கள் எழுதும் உடல்மொழிக் கவிதைகளைச் சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். நீங்கள் இதை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா?

கலாப்ரியா : முழுக்க முழுக்க இதை நான் ஆதரிக்கிறேன். என்னுடைய கவிதைகளி லேயே இதற்கான கூறுபாடுகள் இருக்கின்றன. ஒரு விடுதலையை நோக்கிய புதிய பயணத்தில் இதுபோன்ற எதிர்க்குரல்களை நிர்தாட்சண்ய மாகப் புறம் தள்ளிவிடலாம். இப்போது பரபரப்பாகப் பேசக்கூடிய உடல்மொழியை மிகச் சாதாரணமாகச் சொல்லுவதென் றால், இது அடுக்ளைமொழிதான். அடுக்களை மொழியைக்கூட நாம் இன்னும் முழுமையாக வெளிக்கொணரவில்லை.

சிவதாணு : இன்றைய பெண் கவிஞர்களின் அனேக கவிதைகளில் உடல்மொழி பிரதானப்படுத்தப்படுகிறது. இதை ஆண் ஆதிக்கச் சிந்தனைக்கு எதிரான ஒரு செயல்பாடாகக் கருதலாமா?

பொன்னீலன் : உடல்மொழிப் பிரதானப் படுத்துவதும், பிரதானப்படுத்தாமல் இருப்பதுவுமல்ல இலக்கியத்தின் பிரச்சினை. ஆது இலக்கியமாகி இருக்கிறதா? அழகியல் பார்வை பெற்றிருக்கிறதா? சமூக அர்த்தம் கொண்டிருக்கிறதா? என்பதுதான் பிரச்சினை. எனக்குத் தெரிந்த வரையில் குட்டி ரேவதியின் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவர்களின் படைப்புகள் வெறும் உடல்சார் சம்பவங்களாகச் சிறுத்து நிற்கின்றன. கலைப் படைப்புகளாக அவை பரிணமிக்கவில்லை. உடல்சார்ந்து எழுதுகின்றவர்களில் பலர் சுயகவனம் பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது.

சிவதாணு : பெண் கவிஞர்கள் எழுதும் உடல் மொழிப் பற்றி...

ஜெயமோகன் : கவிஞர்கள் எப்படியும்- எதை வேண்டுமானாலும் எழுதலாம். சுதந்திரத்திற்கு மறுபெயர் கவிதை. அவை நல்ல கவிதைகள் என்றால் அச்சுதந்திரம் கொண்டாடப்படுகிறது என்றே பொருள்.

அதே சமயம் எதிர்ப்புகளைக் கண்டு அணிதிரள்வது படைப்பாளி செய்யக்கூடிய செயல் அல்ல. எழுத்தாளர்களின் எழுத்து சமூகத்தில் பரபரப்பையோ, எதிர்பையோ உருவாக்குவது இயல்பே ஆகும். மேலை நாட்டிலும் பெண் கவிஞர்களுக்கு எதிர்ப்புகளும் மறுப்புகளும் உண்டு. இது எழுத்தின் இயல்புகளே.

சிவதாணு : இன்றைய சூழலில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு எப்படி உள்ளது?

சாரு நிவேதிதா : பெண் படைப்பாளிகளின் எழுத்து சொல்லும்படியாக இல்லை. மிகப் பலவீனமாக உள்ளது. சுகிர்தராணியின் கவிதைகளில் பாலியல் வெளிப்பாடு உள்ளது - ஆனால் கவிதை இல்லை. சல்மாவிடம் சுயதொழில் செய்வோரின் (Entre preneur) முனைப்புதான் தெரிகிறதே தவிர இலக்கியம் இல்லை. மாலதி மைத்ரியின் கவிதைகள் மட்டுமே செறிவாக உள்ளது. ஆனால் அவர் எப்போதுமே கையில் குண்டாந்தடியுடன் அலைவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. உமாமகேஸ்வரி பாவம்... எல். கே. ஜியிலேயே நான்கைந்து ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக பெண்படைப்பாளிகள் எழுத்தில் பலவீனமாக இருப்பதன் காரணத்தை அவர்கள் கண்டுபிடித்துக் களைய வேண்டும். எனக்குத் தெரிந்து சில காரணங்களைச் சொல்லலாம்.

தன் எழுத்தை ‘promote’ செய்வதற்காகத் தன் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுவது. உலக இலக்கியங்களைக் கற்காதது. சுற்றுப்புறத்தையும் குடும்பத்தையும் பார்த்து பயப்படுவது. சில பெண் கவிஞர்களின் புத்தகங்களைச் சமீபத்தில் பார்த்தேன். தரத்தில் மிகவும் கீழே இருக்கும் அப்புத்தகங்களுக்குப் பிரம்மராஜன், ஞானக்கூத்தன், சுகுமாரன், ஜெயமோகன் போன்றவர்கள் முன்னுரை எழுதி ஆகா, ஓகோ என்று புகழந்து தள்ளியிருப்பதைப் பார்த்த போது, இக்கவிதை நூல்களை ஆண்கள் எழுதியிருந்தால் இவர்கள் இப்படிச் புகழ்ந்திருப்பார்களா என்று எண்ண வைத்தது. இப்படிச் செய்வது அதர்மம் அல்லவா; அதனால்தான் சொல்கிறேன். பெண் எழுத்தாளர்கள் எழுத்தில் கவனம் செலுத்துவதில்லை என்று. எழுத்து நன்றாக இருந்தால் எதற்கு இந்த முன்னுரை, பின்னுரை எல்லாம்?

நன்றி - உதயம் நேர்காணல்கள்
...மேலும்

Nov 23, 2010

ஒரு அபலையின் அகிம்சைப் போராட்டம்


மகாத்மா காந்தி மனித குலத்திடம் கையளித்துவிட்டுச் சென்ற அரசியல் ஆயுதம் அகிம்சை. அந்த ஆயுதமே இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது என்று நம்புகிறோம். ஆனால், இன்றைய உலகச் சூழ்நிலையில் அகிம்சையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதில் இருக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியப் பிரச்சினை குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படவே செய்கின்றன. வன்முறை இல்லாத உலகம், போர் இல்லாத உலகம் என்ற கருத்து எவரையுமே கவரக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. நிதான புத்தியுடைய எவருமே வன்முறையை வன்முறை என்பதற்காக விரும்புவதில்லை. ஆனால், எம்மைச் சூழ்ந்திருக்கிற உலகிலே இன்று காணப்படக்கூடியதாக இருக்கின்ற வன்முறைக்கு மத்தியில் அகிம்சையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பயனுறுதியுடைய விளைவைப் பெற முடியுமா என்ற கேள்விக்கு காந்தியவாதிகளினால் கூட தடுமாற்றமின்றிப் பதில் சொல்வதென்பது முடியாத காரியமேயாகும்.

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச அகிம்சை தினமாக சில வருடங்களுக்கு முன்னர் பிரகடனம் செய்து அனுஷ்டித்து வருகிறது. காந்தியின் பிறந்த தினத்தன்று புதுடில்லியில் ராஜ்காட்டில் அமைந்திருக்கும் அவரது சமாதிக்குத் தவறாமல் சென்று மலர் தூவி அஞ்சலி செய்யும் இந்திய அரசியல் தலைவர்கள் அகிம்சை என்பது வாழ்க்கை முறையாகவும் ஆட்சிக்கான வழிவகையாகவும் இன்றும் கூடப் பொருத்தமானதாகவே இருக்கிறது

என்றும் அகிம்சை உண்மையில் துணிச்சல் உள்ளவர்களின் ஆயுதமே தவிர, கோழைகளின் ஆயுதமல்ல என்றும் போதனைகள் செய்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் சொந்த மண்ணிலேயே முன்னெடுக்கப்படுகின்ற அகிம்சைப் போராட்டங்கள் தொடர்பிலான இந்திய அரசியல்வாதிகளின் அணுகுமுறைகள் இந்திய ஜனநாயகத்தையும் அகிம்சைக் கோட்பாட்டையும் கேள்விக்குள்ளாக்குகின்றன என்பதில் சந்தேகமில்லை.

வட கிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் ஆயுதப்படை களுக்கு விசேட அதிகாரங்களை வழங்குகின்ற ஒரு கொடூரமான சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா சானு என்ற 39 வயதான பெண்மணி கடந்த ஒரு தசாப்தகாலமாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவருகிறார் என்பதை எம்மவரில் எத்தனை பேர் அறிந்திருக்கிறார்களோ தெரியவில்லை. மணிப்பூரின் மலோம் நகரில் 2000 நவம்பர் 2 இல் அசாம் ரைபிள் பரா இராணுவத் துருப்புகள் 10 இளைஞர்களைப் படுகொலை செய்ததையடுத்து படையினருக்கு அளவு கடந்த அதிகாரங்களை வழங்கும் அந்தச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்று மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து ஷர்மிளா அன்றைய தினமே தனது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். நேற்றைய தினத்துடன் அவரின் உண்ணாவிரதம் 10 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. ஆனால், இந்திய மத்திய அரசாங்கமோ அல்லது மணிப்பூர் மாநில அரசாங்கமோ ஷர்மிளாவின் கோரிக்கையைத் திரும்பிப்பார்க்கவும் தயாராயில்லை.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த மூன்று தினங்களில் ஷர்மிளாவைக் கைது செய்த பொலிஸார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி அவரை நீதிமன்றக் காவலில் வைத்தனர். மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு வைத்தியசாலையில் அன்று முதல் அவரை அனுமதித்த பொலிஸார் மூக்குத்துவாரங்களின் ஊடாக குழாய்களைப் பயன்படுத்தி மருத்துவர்களின் உதவியுடன் வலுக்கட்டாயமாக நீராகாரங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். 10 வருடங்களாக இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆயுதப்படைகளுக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்கும் சட்டம் மணிப்பூரில் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்துவருகிறது. இச்சட்டத்துக்கு எதிராக மணிப்பூர் மக்கள் தங்களால் இயன்ற சகல வழிவகைகளின் மூலமாகவும் ஆட்சேபத்தை வெளிக்காட்டி வந்திருக்கிறார்கள். தாய்மார்களின் நிர்வாண ஊர்வலம், மாணவர் அமைப்புகளின் தலைவர்களின் தீக்குளிப்பு, பிரமாண்டமான ஆர்ப்பாட்டப் பேரணிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளிடம் முறையீடு என்பவையும் அந்தப் போராட்டங்களில் அடங்கும்.1958 ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் தற்காலிக ஏற்பாடு என்று கூறிக்கொண்டே பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால், கவலைக்குரிய வகையில் அது 52 வருடங்களாக நடைமுறையில் இருந்துவருகின்றது.

பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இச் சட்டம் அவசியமானது என்று கூறும் அரசாங்கம் அதை வாபஸ் பெறப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.அதேவேளை, ஷர்மிளாவின் உண்ணாவிரதத்தைத் தொடரவிட்டு அவர் உயிர் துறப்பதை அனுமதிக்கவும் அரசாங்கம் தயாராயில்லை. மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தார்மீக வலுவைக் கொடுக்கக்கூடிய ஒரு அரசியல் சூழ்நிலையை ஷர்மிளாவின் உண்ணாவிரதம் தோற்றுவித்து விடாதிருப்பதை உறுதிசெய்வதில் அரசாங்கம் குறியாக இருந்து வருகிறது. தற்கொலை முயற்சிக் குற்றத்துக்காக கூடுதல் பட்சம் ஷர்மிளாவுக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனையைத்தான் விதிக்க முடியும். ஒரு வருடம் பூர்த்தியானதும் அவரை விடுவிக்கும் பொலிஸார் பின்னர் மறுநாளே கைது செய்து விடுகின்றனர்.இவ்வாறாக விடுதலையும் கைதும் 10 வருடங்களாகத்தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் மனித உரிமைகள் ஆர்வலர்கள் ஷர்மிளாவை இம்பால் விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியிலும் இரகசியமாக விமானத்தில் ஏற்றி புதுடில்லிக்கு அனுப்பி வைத்தனர். தலைநகரில் வந்திறங்கிய ஷர்மிளா நேரடியாக காந்தி சமாதிக்குச் சென்று மலர்தூவி அஞ்சலி செய்தார். "மணிப்பூர் மக்களுக்குக் கொடுமைகளைச் செய்யும் இராணுவத்தினருக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்ற எனது கோரிக்கை நிறைவேறாமலேயே நான் சாகவேண்டுமென்றால், மரணப் படுக்கையில் வீழ்வதற்கு முன்னதாக மகாத்மா காந்தியின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளவிரும்புகிறேன்' என்று அச்சந்தர்ப்பத்தில் ஷர்மிளா செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷர்மிளாவின் உறுதிதளராத உண்ணாவிரதம் அடிப்படை மனித உரிமைகளுக்கான போராட்டங்களின் வரலாற்றில் முன்னென்றுமில்லாத வகையிலான சத்திய வேள்வியாக மாறியிருக்கிறது. இந்திய திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ நிறுவனம் அண்மையில் 51 இலட்சம் ரூபா பெறுமதியான இரவீந்திர நாத் தாகூர் சமாதானப் பரிசை ஷர்மிளாவுக்கு வழங்கியிருக்கிறது. வைத்தியசாலையில் அவர் தங்கியிருக்கும் அறை நீதிமன்றக் காவலுக்கான சிறையாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கு வைத்து கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த ஷர்மிளா தனது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை என்று அறிவித்தார். "ஆயுதப்படைகளுக்கான விசேட அதிகாரங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் மணிப்பூரில் அச்சட்டம் முழுமையாக வாபஸ் பெறப்படும் வரை எனது போராட்டம் தொடரும். மனிதர்கள் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். ஆனால், வாழுங்காலத்தில் அவர்கள் முழுமையான கௌரவத்தைக் கொண்டிருக்கவேண்டும்' என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியத்துக்கு அப்பால் பெரிதாக அறியப்படாததாக இருக்கும் ஷர்மிளா வின் போராட்டம் உண்மையில் ஒடுக்குமுறைக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களின் சின்னங்களில் ஒன்றாக மிளிரும் என்பதில் சந்தேகமில்லை.


நன்றி - தினக்குரல் 
...மேலும்

Nov 22, 2010

என‌க்கு நிறைய‌ க‌ண்க‌ள் உண்டு!!! - வீ.அ.மணிமொழி


மொழியின் அடிப்படை தத்துவம் புரிதல். ஒருவர் சொல்ல வரும் செய்தியை மற்றொருவர் விளங்கிக் கொண்டு அதற்கு பதில் செய்தியைத் தந்து விட்டால், அந்த மொழி வெற்றிப் பெற்றதாகி விடுகிற‌து என‌ மொழியிய‌ல் கூறுகிற‌து. இந்த அடிப்படை தத்துவத்தை நிறைவேற்ற மொழிக்கு எவ்வ‌கையான‌ ஆப‌ர‌ண‌ங்க‌ளும் தேவையில்லை எனத் தோன்றுகிறது. வெற்றிப் பெறுகின்ற‌ அந்த மொழி எழுத்தாக அமையலாம், வரைப்படமாக அமையலாம், கோடாக இருக்கலாம், அசைவாகக்கூட‌ இருக்கலாம். மொழி, எழுத்திலும் நாவிலும் மட்டும் உயிர்த்திருக்க‌வில்லை. ச‌க‌ல‌ உடல் உறுப்புகளிலும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிற‌து.

ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு மாதிரியான மொழி உலகம் இருப்பதைப் ப‌ல‌ த‌ருண‌ங்க‌ளில் உணர்ந்துள்ளேன். எனது மொழிதான் சிறப்பானது என ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வ‌கையில் கூட்ட‌ம் போட்டு பறைசாற்றிக்கொள்கின்றனர். இதில் எனக்கு துளியளவும் உடன்பாடில்லை. ஒவ்வொருவரும் தனது மொழி உலகத்தைவிட்டு மற்றொருவரின் மொழி உலகத்திற்குள் புகும்போது இத‌ற்கான‌ கார‌ண‌த்தை நிச்சயம் உணர்வர்.

முதுகலை பட்டப்படிப்பிற்கான இரண்டாம் பருவம் தொடங்கியதும் எல்லா மாணவர்களையும் போன்று நானும் எனது துறைக்கான பாடங்களை அலசி ஆராய்ந்தபின் இரண்டு பாடங்களை மட்டும் தேர்வுச் செய்தேன். பெரும்பாலும், பருவம் தொடங்கிய முதல் இரண்டு வாரங்கள் பல்கலைக்கழக மாணவர்கள், பாடங்களைத் தேர்வுச் செய்தப்பின் வகுப்பில் கலந்து பார்வையிடுவர். அப்பாடத்தின் உள்ளடக்கம், விரிவுரையாளர் போதிக்கும் விதம் பிடித்திருந்தால் அந்த வகுப்பிலேயே பாடத்தைத் தொடர்வார்கள். மாணவர்களும் விரிவுரையாளர்களும் இந்த இரண்டு வாரங்களை ‘தேனிலவு’ வாரமென்றும் ‘விண்டோ ஷோப்பிங்’ செய்யும் வாரமென்றும் அழைப்பர்.

வகுப்பு தொடங்கி இரண்டாவது நாள். 20 நிமிடங்களுக்குப் பிறகு, விரிவுரையாளர் வகுப்பினுள் நுழைந்தார். வந்திருந்தோரின் வருகையைப் பதிவு ஏட்டில் பதிவுச் செய்து விரிவுரையைத் தொடங்குவதற்கு முன் ஒரு முறை வகுப்பில் அடங்கியுள்ள எங்களின் முகத்தை நோட்டமிட்டுக் கொண்டே “அந்தோணி பெலும் சம்பாய்…? கித்தா துங்கு உந்தோக் அந்தோணி செகஜாப்”, (அந்தோணி இன்னும் வ‌ர‌வில்லையா? நாம் அவ‌ருக்காக‌ சிறிது நேர‌ம் காத்திருக்க‌லாம்) என்றார்.

காத்திருந்த அந்த பத்து நிமிடங்களில், “அந்தோணி யார்?” என்ற ஆராய்ச்சியிலே கழிந்தது. நானும் எனது தோழியும்தான் இந்த ஆராய்ச்சியில் இறங்கினோம். விரிவுரையாளர் காத்திருக்கும் அளவிற்கு அந்த அந்தோணி யாராக இருக்கும் என்ற ஆவல் பிறந்தது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எந்த மாணவர்களுக்காகவும் காத்திருக்க மாட்டார்கள். வகுப்பில் நுழைந்ததும் விரிவுரையைத் தொடங்கி விடுவார்கள். மேலும் முதல்நாள் வகுப்பில் அந்தோணியின் பெயர் எங்கள் வகுப்பு பெயர் பட்டியலில் இல்லாத‌தும் எங்க‌ளைக் குழ‌ப்ப‌ம‌டைய‌ச் செய்த‌து.

பத்து நிமிடம் கழித்து, அந்தோணி வந்து நுழைந்தார். சுமாராக இருந்த அந்தச் சீன இளைஞன் புன்னகைத் தந்து நாற்காலியில் உட்கார்ந்தார். புத்தகப் பையிலிருந்து பேனாவும் ஒரு டைரியையும் வெளியே எடுத்து விரிவுரையைக் கேட்க தயாரானது போல் தோன்றியது. சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பெண்மணி நுழைந்தார். நாற்பது வயதைத் தாண்டியிருந்த‌ அந்தப் பெண்மணி, அந்தோணியின் அம்மாவாக இருக்குமோ என நினைத்துக் கிசுகிசுத்தோம். அவர் அந்தோணியின் எதிர்புறம் உட்கார்ந்த போது, ஏன் அந்தோணியின் அம்மாவிற்கு இவ்வளவு முன்னுரிமை? என‌ மீண்டும் கேள்விகள்.

விரிவுரையாளர் உரையைத் தொடங்கலானார். அந்தப் பெண்மணி கைகளை அசைக்கத் தொடங்கினார். விரிவுரையாளரின் உரையை தனது கண், வாய் அசைவு, கை அசைவுகளில் அந்தப் பெண்மணி அந்தோணிக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அந்தோணியும் அசைவுக்கு மறு அசைவு தந்து தனது புரிதலை வெளிக்கொணர்ந்தார். என‌க்கு மனம் கனத்தது. உடல் தளர்ந்தாற்போல் ஆனது. மௌனம் சூழ்ந்த வெளியில் க‌ல‌ந்தேன். அந்தோணி காது கேட்காத வாய் பேச முடியாத ஒரு இளைஞன் எனப் பிற‌கு புரிய வந்தது. மனதில் எழும்பிய எல்லா கேள்விகளும் ஒடுங்கிப்போயின‌.

அந்நாள் வரை காது கேட்காத வாய் பேசாதவர்களைப் பற்றி படித்திருந்திருக்கிறேன்; கேள்விப்பட்டிருக்கிறேன்; தூரத்திலிருந்து கவனித்திருக்கிறேன். ஆனால், பக்கத்திலிருந்து அவர்களை உணர்ந்து கொண்டது இதுவே முதல்முறை. அந்தோணியின் அம்மா என்று நினைத்த அவர், உண்மையில் அந்தோணியின் ஆசிரியர். அவ‌ர் கனடா நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில் அசைவுமொழித் துறையில் சிறப்பு பட்டம் பெற்றவர். சிறு வயது முதல் அந்தோணியின் நிழலாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அந்தோணியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அந்தோணியின் மொழி உலகம் வியப்பாகத் தோன்றியது எனக்கு. மனதில் எழும் கேள்விகளையும் ஆசைகளையும் எத்தனை முறை இறக்கடித்திருப்பார் எனத் தெரியவில்லை. இவரைப் போன்றவர்கள் ச‌ராச‌ரி மனிதர்களைவிட ஆற்றல் அதிகம் நிறைந்தவர்களென்று படித்திருக்கின்றேன். அந்தோணி கணினி துறையில் இளங்களைப் பட்டம் பெற்றவர் என்றும் அவ‌ர் புத்ராஜெயாவில் பணிப்புரிகிறார் என்றும் அவ‌ரின் ஆசிரிய‌ர், சுய‌மாக‌ அந்தோணி வாக‌ன‌த்தையும் செலுத்துவார் என்றும் தெரிவித்தார்.

விரிவுரையாளர் சொல்லும் குறிப்புகளை எனது குறிப்பு புத்த‌க‌த்தில் ப‌ல‌ ப‌க்க‌ங்க‌ளில் பதிவு செய்து கொண்டே வந்தேன். அந்தோணியின் நோட்டில் வெறும் சொற்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டிருந்தன‌. விரிவுரையாளர் புது புது வார்த்தைகளையும் சில அறிஞர்களின் பெயர்களையும் அறிமுகம் செய்தார். இது அந்தோணிக்குப் புரிந்திருக்குமா என அந்தப் பெண்மணியை வினவியப் போது, அவர் அளித்த விளக்கம் மிகவும் திருப்தி அளித்தது. “ஒவ்வொரு முறையும் இது போன்ற புது புது வார்த்தைகளை அந்தோணிக்கு எழுத்து அசைவுகளாக‌ச் செய்து காட்டுவேன். அப்படிச் செய்யும் பொழுது அவர் விரைவாக எழுத்துக் கூட்டி அந்த வார்த்தை என்னவென்று அறிந்து கொள்வார். அசைவு மொழியின் வடிவம் ஆங்கிலத்திலேயோ அல்லது மலாய், சீன, தமிழ் மொழியிலேயோ அமைவதில்லை. அது அசைவுகளால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்த‌ மொழி. எழுத்து வடிவங்களை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறோம் வாசிப்பதற்கு. மற்றவை எல்லாம் அசைவுகள் மட்டும் தான். அந்தோணிக்கு வார்த்தை பதிவுகள் மட்டுமே அவசியம். அந்த வார்த்தைக‌ளைக் கொண்டு அன்றைய பாடத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அதனால்தான் அவர் உங்களைப் போன்று பக்கம் பக்கமாக எழுதுவதில்லை.”

அசைவுமொழியைக் காட்டும் இது போன்ற‌ ஆசிரிய‌ர்க‌ள், பூ அல்லது நிறைய வண்ணங்கள் கலந்த ஆடைகளை அணிய முடியாது. அது பார்வையின் வேகத்தையும் அர்த்தங்களையும் திசை மாற்றக்கூடும். மொழிப்பெயர்ப்புத் துறை நாம் நினைக்கும் அளவிற்கு சுலபமான விஷயம் இல்லை. சாதாரணமாக, நம் கண் முன் நடந்த ஒரு சின்ன செய்தியை, ஒரு முறை வர்ணித்துக் கூறியது போன்று மற்றொரு முறை அதேபோல‌ வர்ணிக்க இயலாது. நிச்சயம் சில குறைப்புகளும் சேர்ப்புகளும் இருக்கும். விரிவுரையாளர் கூறும் புது புது வார்த்தைகள், சொல்ல வரும் கருத்துகள் எந்தவொரு பிறழ்வுகளும் இன்றி அசைவுகளைக் கொண்டு புரிய வைப்பது சாதனைதான்.

மேலும், அந்தோணி அந்தப் பெண்மணியை நூறு சதவீதம் நம்புவ‌தை வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வுக‌ளாக‌ என்னுள் உலாவுகின்ற‌ன‌. அந்தோணியின் க‌ண்க‌ள் அந்த‌ப் பெண்ம‌ணியையே கூர்ந்து நோக்கிய‌ப‌டி இருந்த‌ன‌. அந்த‌ப் பெண்ம‌ணிதான் இந்த‌ உல‌க‌த்தை அந்தோணி அறிய‌ ப‌ய‌ன்ப‌டும் ஒரே ஒரு க‌ண்ணாடி. தனது கல்வி குறித்தான எந்தப் பயமுமின்றி தடுமாற்றமில்லாமல், அந்தப் பெண்மணி காட்டும் அசைவை நம்பி கற்றுக் கொள்வது மொழிப்பெயர்ப்புத் துறையின் கடினத்தையும் நம்பிக்கையையும் காட்டிய‌து.

அந்தோணியின் நடவடிக்கைகள் மேலும் என்னை ஈர்த்த‌ப‌டி இருந்த‌ன‌. அந்தோணியிடம் எப்படியாவது நட்புக் கொள்ள எண்ணம் தோன்றியது. நான் அவரோடு நட்புக்கொள்ள ஆசைபடுவதாக அந்தப் பெண்மணியிடம் கூறினேன். அந்தப் பெண்மணி சைகையிலேயே அதை அந்தோணிக்கு உணர்த்தினார். என‌து தொட‌ர்ந்த‌ கேள்விக‌ளை உள்வாங்கிய‌ பெண்ம‌ணி அதை அந்தோணியிட‌ம் கூற‌ அத‌ற்கான‌ ப‌தில்க‌ளைப் பெற்று மீண்டும் அந்த‌ப் பெண்ம‌ணி என‌க்குத் தெரிவித்தார்.

நான் அந்தோணியிட‌மே மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன்.

“ஏன் இவ்வ‌ள‌வு குறைவாக‌க் குறிப்புக‌ள் எழுதியுள்ளீர்க‌ள்?”

அந்தோணி அந்த‌ ஆசிரிய‌ரிட‌ம் அசைவுக‌ளில் கூறிய‌து என‌க்கும் புரிந்த‌து…

“என‌க்கு நிறைய‌ க‌ண்க‌ள் உண்டு!!!”

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்