/* up Facebook

Oct 25, 2010

நோர்வே படைப்புலகின் முதன் மூன்று பெண்கள் - பானுபாரதி


கமில்லா கொல்லற், அமாலியா ஸ்கிறம், சிக்றிட் உன்செத் நோர்வேயின் பிரதான பெண் படைப்பாளிகளான கமில்லா கொல்லற், அமாலியா ஸ்கிறம், சிக்றிட் உன்செத் ஆகிய மூவரும் வெவ்வேறு விதமான இலக்கிய சகாப்தத்திலிருந்து வருகிறார்கள். அவர்களது காலப்பகுதியில் மிகவும் பிரபல்யமானவர்களாக இருந்ததோடு அன்றைய சமூகத்தில் பெண்களது நிலை பற்றி மிகவும் ஈடுபாடுள்ளவர்களாக இருந்தார்கள்.

கமில்லா கொல்லற்
காலப்பகுதி: 1813 - 1895

இவர் அன்றைய நோர்வேஜிய பெண்களமைப்பின் முதற் பெண்ணாகத் திகழ்ந்தவர். நடைமுறை அரசியல் விடையங்களில் ஈடுபாடற்றவராக இருந்த கமில்லா ஆண்களைப் போன்றே பெண்களும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் கோரிக்கையை முன்வைத்ததோடு, பெண்கள் தமது வாழ்க்கையைத் தாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் கோரி நின்றார். கமில்லாவினால் முன்வைக்கப்பட்ட பெண்கள் பிரச்சனை, அவர் தான் சார்ந்த மத்தியதர வர்க்கப் பெண்களின் பிரச்சனைகளாகவே இருந்தன. அத்தோடு, கவிஞரும், எழுத்தாளருமான யொகான் செபஸ்ரியனுடனான மகிழ்ச்சியற்ற, நிறைவேறாத அவரது காதலும் பெண்கள் பிரச்சனை பற்றியகருத்துக்களில் அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மத்தியதர வர்க்கத்துப் பெண்களே முதலில் சமஉரிமைக்காகக் குரல் கொடுத்தவர்கள். ஆனால் சமூக ரீதியிலான, பொருளாதார ரீதியான சமத்துவம்பற்றி இவர்கள் அக்கறை கொள்ளவில்லை. இவர்களால் பேசப்பட்ட பெண்கள் சமஉரிமை என்பது அவர்களது வர்க்கம் சார்ந்த ஆண்களுக்குச் சமதையான உரிமையாகவே இருந்தது.

மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் தொழிலாள வர்க்கப் பெண்களினதும், அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் பற்றியதுமான விடையங்களில் ஈடுபாடற்றவர்களாகவே இருந்தனர். கமில்லா ஒரு படைப்பாளியாக உருவாவதற்கு அன்றைய சமூகத்திலிருந்த பெண்களுக்கெதிரான மிகப்பெரிய தடையை உடைக்கவேண்டியிருந்தது. அவருடைய இந்த எழுச்சிதான் இலக்கியப் பரப்பில் ஏனைய பெண்களும் காலடியெடுத்து வைக்க வழி வகுத்ததெனலாம்.

கமில்லாவினது குழந்தைப்பருவம் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைந்தது. மதகுருவான அவரது தந்தை நிக்கொலாயினது விருப்புக்குரிய குழந்தையாக இருந்தார். அவரோடு அவரது ஏனைய நான்கு சகோதரர்களும் அன்றைய கால சம்பிரதாயங்களுக்கு முரணாக சுதந்திரமாக வளர்க்கப் பட்டனர். இள வயதில் தந்தையோடு வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரயாணம் செய்த கமில்லா டென்மார்க்கில் கல்வி பயின்றார். யொகான் செபஸ்ரியனுடனான காதல் முறிவுக்குப் பின்னர் 1841இல் பேடர் ஜோனாஸ் கொல்லற்றை திருமணம் செய்து கொண்டார். கமில்லாவை எழுதத் தூண்டியதும் அவரது கணவர்தான்.

185இல் "நகரபிதாவின் புதல்விகள்" என்ற நாவல் வெளிவந்தது. இந்த நாவல் அனாமதேய பெயரிலேயே வெளிவந்தது. இந்த நாவலை எழுதியது ஒரு பெண்தானென ஒருவரும் அறிந்திருக்கவில்லை. இந்த நாவல் நான்கு சகோதரிகள் பற்றியது. இந்த நாவலில் வரும் நான்கு சகோதரிகளுள் கடைசிப் பெண்ணான சோபியா என்பவள்தான் பிரதான பாத்திரமாக வருகின்றாள். சோபியாவின் மூன்று சகோதரிகளும் பெற்றோர்களால் தெரிவு செய்யப்பட்ட ஆண்களைத் திருமணம் செய்கின்றார்கள். அவர்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இருப்பதை காணுகின்ற சோபியா தனது சகோதரிகள் போன்று தானும் பெற்றோர்களால் தெரிவு செய்யப்படும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று தீர்மானிக்கிறாள். சோபியாவின் குடும்ப ஆசிரியரும் சோபியாவும் ஒருவரையொருவர் நேசம் கொள்கின்றனர். தற்செயலாக அவள் ஒரு உரையாடலைக் கேட்க நேர்ந்த சந்தர்ப்பத்தில் தனது காதலனான ஆசிரியருக்கு வேறொரு பெண்ணுடன் காதல் உறவிருப்பதாக தவறாகப் புரிந்து கொள்கின்றாள். இதை அவரிடமே நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாத சூழலில் (அன்றைய சூழலில் பெண்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படையாகக் கூற அனுமதிக்கப் படவில்லை) அவர்களது உறவு முறிவடைந்து போகிறது. ஆசிரியரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றார். திருமணமே செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வதைப்பற்றி சோபியா சிந்திக்கின்றாள். ஆனால் போதிய கல்வியறிவோ, வேலையோ அற்ற சூழ்நிலையில் அந்த முடிவு மிகவும் கடினமான ஒன்றாகின்றது. அதனால் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுள்ள ஒரு வயதானவரைத் (மனைவியை இழந்தவரை) திருமணம் செய்து கொள்கின்றாள். தனது சகோதரிகள் போலவே தன்னால் நேசிக்கப்படாத ஒருவருடன் அவள் வாழ நேரிடுகின்றது.

நாவல் பிள்ளைகளைக் கட்டாயமாக திருமணம் செய்து வைக்கின்ற நிலமையை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றது. அன்று மிகுந்த சர்ச்சையை உருவாக்கிய இந் நாவல் அன்றைய உயர்தர வர்க்கத்துப் பெற்றோர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. காதல் பற்றியதும், குடும்ப உறவு பற்றியதுமான இந்த நாவலையிட்டு பலரும் மிகவும் கோபம் கொண்டிருந்தனர். ஆனால் நாவல் பெண்கள் மத்தியில் அவர்களது பிரச்சனைகளை உணர்வுகளை அடையாளப்படுத்திக் காட்டியதுடன் அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. குறிப்பிட்ட காலத்தின் பின்னரே நாவலாசிரியர் யாரென்று தெரிய வருகின்றது. பல படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமான நோர்வேயின் முதலாவது குடும்பநாவலும் இதுவேயாகும். இத்தகைய நிலமைகளைத்தான் கமில்லா தனது நாவலிலே வெளிக்கொணர முற்பட்டார். இந்த நிலமைகள்தான் மாற்றமடைய வேண்டுமென்று விரும்பினார். ஏனெனில் தனது விடுதலையின் பொருட்டு பெருமைப்படும் ஒரு இனம், பெண்களை இத்தகைய கீழான நிலையில் வைத்திருப்பது அனுமதிக்க முடியாதது என்பதே அவருடைய வாதமாக இருந்தது. அத்தோடு இளம் பெண்கள் சமூகத்தின்பால் எத்தகைய ஈடுபாடும் அறிவுமற்ற நிலையில் வளர்க்கப்படுவதையிட்டு தனது விமர்சனத்தை கடுமையாக முன் வைக்கின்றார். பெண்களினது பெறுமதிமிக்க வாழ்வுக்கான போராட்டமே அவரது எழுத்துக்களில் முக்கியத்துவம் பெற்றது.

ஒரு இடத்தில் அவர் இவ்வாறுஎழுதுகிறார்:-
"விபத்து என்னவெனில் எல்லா இடங்களிலும் பெண்களது பிரச்சனைகள் அவர்களின் கரங்களில்த்தான் திணிக்கப் பட்டுள்ளது. ஸ்கன்டிநேவிய நாடுகளைப் பொறுத்தவரை பெண்களது உரிமைக்காகக் குரல் கொடுத்த ஒரு ஆண் மகனையாவது நான் அறியவில்லை. பிரச்சனைகள் யாருக்குள்ளதோ அவர்கள்தான் அதற்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் ஆகின்றார்கள்." .

திருமணமாகி பத்து வருடங்களில் கமில்லாவின் கணவர் இறந்து போகிறார். தொடாந்த அவரது வாழ்வு அவர் இறக்கும் வரை பெண்களது நலன்களுக்காக எழுதுவதிலேயே கழிந்தது.

நோர்வே அரசு இவரது உருவம் பொறித்த தபால்தலை
வெளியிட்டுக் கௌரவித்ததோடு நூறு குரோணர்
தாளிலும் இவரது உருவத்தை வெளியிடடுள்ளது.
*************அமாலியா ஸ்கிறம்
காலப்பகுதி:- 1846 - 1905

இவர் பிறந்தது 1846இல். பேர்கன் நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு நான்கு சகோதரர்கள். அமாலியாவின் தந்தை சிறிய வியாபார நிலையமொன்றை நடாத்தி வந்தபோதும் அவர்களது குடும்பத் தேவைக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. அமாலியாவின் இளமைப்பருவம் வறுமையினாலும், அக்கறையின்மையாலும் சூழப்பட்டிருந்தது. அவருக்குப் பதினேழு வயதாக இருந்தபோது அவரது தந்தை மீதமிருந்த சிறு வியாபாரத்தையும் இழந்து அமெரிக்காவுக்குத் தலைமறைவானார். தாயார் ஐந்து பிள்ளைகளுடனும் தனித்து விடப்பட்டார். அமாலியா, அவரைவிட ஒன்பது வயது அதிகமான ஒரு பணக்கார கப்பல் தளபதிக்கு திருமணம் செய்து வைக்க தாயினால் நிர்ப்பந்திக்கப்பட்டார். தனது குடும்பத்தை இந்தத் திருமணத்தின் மூலம் பாதுகாக்க வேண்டிய தேவை அமாலியாவின் தாயாருக்கு இருந்தது. அமாலியா இந்தத் திருமணத்தை விரும்பாதபோதும் தனது குடும்பத்தினருக்காகச் சம்மதித்தார். அவரது திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாக இருந்தது. அதைவிட்டு வெளியேறிவிட விரும்பினார். ஆனால் அன்றைய சூழலில் விவாகரத்து என்பது மிகவும் நாசகாரியம் என்றே அறியப்பட்டிருந்தது. அதிகமான மன அழுத்தத்தின் விளைவாக அவர் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார். 13வருட மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வுக்குப்பிறகு தனது கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொள்கின்றார். கிறிஸ்ரியானியாவில் (இன்றைய ஒஸ்லோ) "விவாகரத்துப் பெற்ற தாயாக" தனது இரு மகன்களுடனும் வாழ்க்கையைத் தொடர்கின்றார். அமாலியா விவாகரத்துக்குப் பின்னரே எழுத்துலகில் காலடி வைக்கின்றார். அவருக்குப் பல இலக்கிய நண்பர்கள் அறிமுகமாகின்றனர். ஒரு விருந்தின்போது டென்மார்க் எழுத்தாளரான எரிக் ஸ்கிரம் என்பவரை சந்திக்கின்றார். நீண்டகாலக் கடிதப் பரிமாற்றங்களின் பின்னர் 1884இல் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அமாலியா அதிகளவான நேரம் உழைத்ததோடு அதே நேரத்தில் தாயாகவும் மனைவியாகவும் வீட்டிலும் அதிகளவாக உழைத்தார். அத்தோடு அவரது எழுத்துக்களுக்கெதிரான கடுமையான விமர்சனங்களும் அவரை மிகவும் பாதித்தன. மீண்டும் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட அமாலியா 1894இல் டென்மார்க் உளவியல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1900ம் ஆண்டு எரிக் ஸ்கிரம்மிடமிருந்து பிரிவினை பெற்றுக் கொண்டார். 1905இல் கொப்பன் ஹேகனில் நோய்வாய்ப்பட்ட, மகிழ்ச்சியற்ற கடுமையான விமர்சனங்களுக்குள்ளான நிலையில் இறந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அவரால் எதிர்பார்க்கப்பட்ட அவரது எழுத்துக்களுக்கான வரவேற்பும், ஆதரவும், புகழும் அவரது இறப்பிற்குப் பின்னரே கிடைத்தது.
பேர்கன் நகரில் அமாலியாவுக்கு வைக்கப்பட்டுள்ள சிலைபத்திரிகைகள் அவரது எழுத்துக்களையிட்டு சாதகமாக எழுதத் தொடங்கின.
ஆரம்பத்தில் இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதிவந்த இவர் கொப்பன் ஹேகனில் குடியேறிய பின்னர் தனது முதலாவது நாவலை எழுதினார். 1885இல் Constance Ring என்ற அவரது முதலாவது நாவல் வெளி வந்தது. இது மகிழ்ச்சியற்ற, விருப்பமில்லாத திருமண வாழ்வைப்பற்றிப் பேசியது. அத்தோடு ஆண்களினது நம்பிக்கைத் துரோகத்தனத்திற்கும், பல பெண்களுடன் அவர்கள் உறவு கொள்வதற்குமான தாக்குதலாகவும் அமைந்தது. இது சமுகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை, எதிர்ப்பை உருவாக்கியது. ஏனெனில் அன்றைய நாட்களில் இவைகள் வெளிப்படையாகப் பேசப்படும் விடையமாக இருக்கவில்லை. அதிலும் ஒரு பெண்ணால் எழுதப்பட்டதென்பதானது அதிகளவான எதிர்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் இந் நாவலை வெளிப்படையாக ஆதரித்தவர் அமாலியாவின் இலக்கிய நண்பரும், எழுத்தாளருமான ஆர்னெ கர்போர்க்.

1892இல் அமாலியா எழுதிய இன்னொரு நாவலான "நம்பிக்கைத் துரோகம்" வெளிவந்தது. சமூகத்தில் பாலியல் பற்றிய கருத்தாக்கம் எவ்வாறு மொத்தமான பெண்கள் சமூகத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது என்பதைப் பற்றியதாக இந்நாவல் அமைந்தது. குறிப்பாகச் சொல்வதானால் இது அவரது முதல் திருமண வாழ்க்கையைப் பற்றியதாக அமைந்தது எனலாம். நாவலில் 17வயதான ழுசல என்ற அப்பாவியான இளம்பெண், ஆண் பெண் உறவு பற்றி எதுவும் அறிந்திராத நிலையில் 30வயதுடைய கப்பல் தலைவனுக்குத் திருமணம் செய்து வைக்கப் படுகின்றாள். பாலியல் பற்றி அவள் அறிந்ததெல்லாம் ஆண் பெண் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக ஒரே படுக்கையில் படுத்திருந்தால்போதும் என்பதுதான். திருமணத்தின்போது குழப்பமுற்ற அவளுக்கு "மற்றைய பெண்களைவிட உனக்கு எதுவும் மோசமாக நடந்து விடவில்லை" என்று அவளது தாயால் அறிவுரை கூறப்படுகின்றது. தனக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாக வருந்தும் Ory திருமண இரவில் வெளியேறிவிட முயற்சிக்கின்றாள். அவளது முயற்சி தடுக்கப்பட்டு திருமணவாழ்க்கைக்குள் பலவந்தமாக ஈடுபடுத்தப் படுகின்றாள்.
அன்றைய காலகட்டத்தில் பெண்கள் மிகத் தூய்மை பேண வேண்டியவர்களாகவும், திருமணத்துக்குமுன் எந்த ஆணுடனும் உறவு வைத்துக்கொள்ளாது கன்னித் தன்மை பேண வேண்டியவர்களாகவும் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதேவேளையில் ஆண்கள் சுதந்திரமாகவும், எவ்வித கட்டுப்பாடுகள் அற்றவர்களாகவும் எப்படியும் வாழலாம் என்ற நிலை, ஒரு சாதாரணமான, நேர்மையான, இயல்பான குடும்ப உறவை எவ்விதமாகவெல்லாம் பாதிக்கும் என்பது பற்றியும் நாவல் பேசியது. 1800களில் இவ்வாறாக மந்தமான, சகிப்புத்தன்மை கொண்டதான திருமணவாழ்வுதான் சமூகத்தின் எல்லாத் தரப்புப் பெண்களினதும் வாழ்வாக இருந்தது.பெரியவர்களால் தகுந்த கவனிப்புக்கு உட்படாமல் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் குழந்தைகளினது நிலமையை அமாலியா புரிந்து கொண்டதுபோல் வேறெந்தப் படைப்பாளிகளும் ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை. 1890இல் வந்த குழந்தைகளுக்கான படைப்பில் இந்தப் புரிந்துணர்வு இழையோடுவதைக் காணலாம். அமாலியா ஒரு கலைஞர் அல்ல. ஆனால் அவருக்கு இருந்த ஆழமான மனிதத் தன்மை அவரது படைப்புகளில் பிரதிபலிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனித வாழ்விலும், குறிப்பாகப் பெண்கள் வாழ்விலும் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனைகளை அதே யதார்த்தத்தோடு வெளிக் கொணர்ந்தார். அதனாலேயே அவருடைய படைப்புக்கள் என்றும் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனலாம்.
*****


சிக்றிட் உன்செத்
காலப்பகுதி:- 1882 - 1949

டென்மார்க்கில் பிறந்தவர். புதைபொருள் ஆய்வாளரான இவரது தந்தை நோர்வேயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது தாயாரின் பிறப்பிடமான டென்மார்க்கில் இரண்டு வருடங்கள் வாழ்ந்தபின் நோர்வேக்கு குடி பெயர்ந்தனர். சிக்றிட் அவரது தந்தையார் நோயுற்றிருந்த வேளைகளில் தனது அதிகமான நேரத்தை தந்தையுடனே செலவிட்டார். தந்தைக்காக வரலாற்று நூல்களையும், நோர்வேயின் பழைய மதமாகிய நொரொன் (Norrøn) இலக்கியங்களையும், வைக்கிங்காலத்து வரலாற்று நூல்களையும் உரத்து வாசித்தார். அவருக்கு பதினோரு வயதாக இருந்தபோது தந்தையார் இறந்துபோனார். தாயார் அவருக்கு தொடர்ந்து கல்வி பயிற்றுவிக்கத் தயாராக இருந்தபோதும் தந்தை இறந்தபின், அவர்களது குடும்ப பொருளாதார நிலமை மோசமாக இருந்ததால் வர்த்தகக் கல்லூரியில் சேர்ந்து பதினேழு வயதிலேயே ஒரு அலுவலக நிர்வாக வேலையைத் தேடிக் கொண்டார். அலுவலக நிர்வாகத்தில் பத்து வருடங்கள் பணி புரிந்த சிக்றிட்டுக்கு அந்த வேலை மிகவும் சலிப்பூட்டியது. தனது வேலை நேரம் தவிர்ந்த ஓய்வு நேரங்களில் எழுதுவதில் ஈடுபட்டார்.

1907இல் அவரது முதலாவது படைப்பான "திருமதி மார்த்தா ஒலியா" வெளிவந்தது. சிக்றிட் அமாலியாவின் தீவிர வாசகியும் ரசிகையுமாக இருந்தார். கமில்லா, அமாலியா, ஆகியோரது படைப்புக்களின் பாதிப்பு இவரது முதலாவது நாவலான "திருமதி மார்த்தா ஒலிவியா"வில் காணப்படுகின்றது. முதலாவது நாவல் வெளிவந்ததைத் தொடர்ந்து சிக்றிட் முழுநேரப் படைப்பாளியாகிறார். புலமைப்பரிசில் பெற்று இத்தாலியாவுக்குச் சென்றவர் ஓவியர்கள், கலைஞர்கள் போன்றோரது சூழலில் வாழ்கிறார். 27வயதான சிக்றிட் தன்னைவிட 13வயது அதிகமான அன்டர்ஸ் சிவஸ்தாட் என்பவரைச் சந்திக்கின்றார். இருவரும் ஒருவரையொருவர் நேசங் கொள்கின்றனர். அன்டர்ஸ் ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானவர். இருவரும் 1912இல் திமணம் செய்து லண்டனில் குடியேறுகின்றனர். இவர்களது மகன் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த காலப் பகுதியில் சிக்றிட் மகனுடன் தனது தாயாரிடம் வருகின்றார். அவர்களது திருமண வாழ்வு அடிக்கடி ஏற்பட்ட நீண்ட பிரிவுகளினால் பாதிக்கப் பட்டிருந்தது. இவர்களுடைய இரண்டாவது மகளும் வலிப்பு நோயினால் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தாள். தாயெனும் பாத்திரம் சிக்றிட்டினது வாழ்வில் நடைமுறையிலும் எழுத்திலும் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஒரு இலட்சியத்தாயாக அவரால் விளங்க முடியவில்லை. 1919இல் வீட்டு ஒப்பந்தத்தை இழந்த நிலையில் சிக்றிட்டினது கணவர் தனியாகக் குடியேறுகிறார். கணவனும் மனைவியும் வேறு வேறு இடத்தில் வாழ நேர்ந்தமையை குடும்ப வாழ்வின் வீழ்ச்சி என்றே சிக்றிட் கருதினார். இந்த இடைவெளி அவர்களை விவாகரத்து வரையும் கொண்டு சென்றது. 1924இல் "டொமினிக்கன்" கத்தோலிக்க சபையில் சேர்ந்து சகோதரிஒலிவியா எனப் பெயர் மாற்றம் செய்கின்றார். நம்பிக்கை நிறைந்த ஒரு கத்தோலிக்கராக இருந்தபோதிலும் சிக்றிட் விவாகரத்துப் பெற்ற காரணத்தினால் முழுமையாக மத நடவடிக்கைகளில் பங்கெடுக்க முடியவில்லை. ஏனெனில் விவாகரத் செய்வதென்பது கடுமையான பாவமாக அன்றைய கத்தோலிக்க திருச்சபையினால் கருதப் பட்டது.

1928இல் ”கிறிஸ்ரின் லவறன்ஸ் டத்தர்” நாவலுக்காக இவருக்கு இலக்கியத்துக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது. இந்நாவல் மூன்று தொடர் பகுதிகளைக் கொண்டது. வரலாற்று ஆதாரங்களுடன் வெளிவந்த முதல் யதார்த்தவாத நாவலும் இதுவாகும். (இந்த நாவல் நோர்வேயில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது) இதற்குக் கிடைத்த நிதியில் அரைப்பகுதியை மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிதியத்திற்கு சிக்றிட் வழங்கினார். மிகுதியை ஏழை கத்தோலிக்கர்களுக்கும், எழுத்தாளர் சங்கத்திற்கும் வழங்கினார்.

இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது சுதந்திரமான நோர்வேக்காக பல கட்டுரைகளை எழுதினார். தனது எழுத்துக்களினூடாக நாஸிசத்துக்கெதிரான மிகவும் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டார். நோர்வேயின் அன்றைய காலகட்டத்திலிருந்த படைப்பாளிகளுள் நாஸிகளினால் மிகவும் வெறுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. 1949 யூன் 10ம் திகதி சிக்றிட் மரணமடைந்தார். சிக்றிட் உன்செத் தனது எழுத்துக்களினூடாக நவீன யதார்த்தவாதியாக அறியப் பட்டவர். தான் வளர்ந்துவந்த சூழலோடு மாறுபட்டு அதிலிருந்து வெளியேறியவர். மத்தியதர வர்க்கத்தினுடைய எழுச்சியினால்த்தான் எல்லா சமூகப்பிரிவினது பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். தனது முதலாவது நாவலான "திருமதி மார்த்தா ஒலியா" வில், மார்த்தா தனது கணவனுக்கு நம்பிக்கையற்ற விதமாக நடந்து கொள்கிறாள். ஆனால் சமூகத்தினது தீர்ப்புக்கு அவள் ஆளாகவில்லை. மாறாக, தன்னைத் தானே தீர்ப்பிடுகின்றாள். தனது நம்பிக்கைத் துரோகத்தைத் தானே நொந்து கொள்கின்றாள். சிக்றிட்டினது கவிதைகளில் பெண்கள் தாமாகவே தவறிழைத்தல் என்பது மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப் படுகின்றது. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம் என்பது ஒவ்வொருவருக்குள்ளேயும் நடைபெறுவது. பெண்கள் தங்களது வாழ்க்கைக்குத் தாமே பொறுப்பாவார்கள். அதே நேரம் அவர்கள் தவறுகள் செய்வார்களேயானால் மற்றவர்களை அவர்கள் குற்றம் சுமத்த முடியாது என்பதே அவரது கருத்தாக இருந்தது. குறிப்பிட்டுச் சொல்வதானால் பெண்களது பிரச்சனைகள் ஒரு சமூகப் பிரச்சனையாக இவரால் நோக்கப்படவில்லை. அன்றைய பெண்கள் அமைப்பினராலும், பெண்ணியவாதிகளாலும் இவரது பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகின.

1880களில் இருந்த படைப்பாளிகளான கமில்லா, அமாலியா போன்றவர்கள் சமூகத்தின்மீது வைத்த கடும் விமர்சனம் போன்று இவர் முன் வைக்கவில்லை. இதனால் சிக்றிட் உன்செத்தை பெண்நிலைவாதிகளின் வரிசையில் சேர்ப்பதென்பது சரியானதா என்ற கேள்வியும் நிலவுகின்றது. எனினும், பெண்ணெதிர்ப்பு வாதிகளின் முகாமுக்குள் அவரைச் சேர்ப்பதென்பதுவும் சரியானதல்ல. கருத்துரீதியான வேற்றுமைகள் இருப்பினும் அன்றைய பெண்களது நிலமைகளைத் தனது படைப்புக்களில் உள்ளதை உள்ளபடியே வெளிக் கொணர்ந்தவர் என்ற வகையில் சிக்றிட் உன்செத் முக்கியத்துவம் பெறுகின்றார். இவரது உருவப்படத்தைத் தாங்கிய தபால்லத் தலையை நோர்வே அரசு வெளியிட்டதோடு, 500குரோணர் தாளிலும் பொறித்து கெவுரவித்துள்ளது.

உயிர்மெய்-2 (2006)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்