/* up Facebook

Nov 2, 2010

இந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகளா? - ரவிக்குமார்


உலகில் வேகமாகப் பரவி வரும் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்று ‘எய்ட்ஸ்.’ அதைத் தடுப்பதற்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் ஏராளமாக பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கின்றன. பல மருந்துகள் இப்போது சோதனை கட்டத்தில் உள்ளன. இப்படியான ஆராய்ச்சிகள் சில நேரம் எதிராகப் போய் விடுவதும் உண்டு. அப்படித்தான் எய்ட்ஸைத் தடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்று எய்ட்ஸ் பரவுவதற்கு வழி செய்து விட்டது. அது இப்போதுதான் தெரியவந்திருக்கிறது. எனவே அந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு இப்போது தடை விதித்திருக்கிறார்கள்.

பாலிடெக்ஸ் பார்மாசூடிகல்ஸ் என்பது கனடாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆகும். எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த அது ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. செல்லுலோஸ் சல்ஃபேட்டை அடிப்படையாகக் கொண்டு எய்ட்ஸ் தடுப்பு மருந்து ஒன்றை அந்த நிறுவனம் உருவாக்கியது. உஷர்ஸெல் (Ushershell) என்பது அந்த மருந்தின் பெயர். பாலிடெக்ஸ் நிறுவனத்தலைவர் ஜார்ஜ் உஷர் என்பவரின் பெயரால் அந்த மருந்துக்கு உஷர்ஸெல் என்று பெயரிடப்பட்டது.

உடலுறவின்போது பெண்கள் தமது உறுப்பில் தடவிக்கொள்ளக்கூடிய ஒருவித ‘ஜெல்’ வடிவில் இந்த மருந்து தயாரிக்கப்பட்டது. இது எய்ட்ஸ் கிருமிகளைத் தடுப்பதோடு கர்ப்பம் உண்டாகாமலும் காப்பாற்றக்கூடியது என அந்த நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறி வந்தனர். கடந்த பத்தாண்டுகளாக இந்த மருந்தைப் பல கட்டங்களாக அவர்கள் சோதித்து வந்தனர். இந்தியா உட்பட நான்கு நாடுகளில் ஆயிரத்து ஐநூறு பெண்களிடம் இந்த மருந்தை அவர்கள் சோதித்துப் பார்த்ததில் இதைப் பயன்படுத்தியவர்களுக்கு எய்ட்ஸ் தாக்கும் அபாயம் அதிகரித்து விட்டதாகத் தெரியவந்துள்ளது. ஆயிரத்து ஐநூறு பேரில் இப்போது முப்பத்தைந்து பெண்கள் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் இந்த சோதனையை உடனடியாக நிறுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எய்ட்ஸைத் தடுப்பதற்கென உருவாக்கப்பட்டு தோல்வியடைந்த இரண்டாவது மருந்து இது. இதற்கு முன் நோனாக்ஸினோல்\9 என்ற மருந்தும் இப்படித்தான் எய்ட்ஸ் தாக்கும் அபாயத்தை அதிகரித்து விட்டதென்று கூறப்பட்டு கைவிடப்பட்டது. இந்த இரண்டு மருந்துகளைத் தவிர மேலும் நான்கு மருந்துகள் மூன்றாம் நிலை சோதனை கட்டத்தில் உள்ளதாக சர்வதேச எய்ட்ஸ் சங்கத்தின் (மிகிஷி) தலைவர் பெட்ரோ கான் தெரிவித்திருக்கிறார்.

உலகெங்கும் சுமார் நான்கு கோடி பேர் இப்போது எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள். இந்த ஒரு கோடியில் இந்தியாவில் இருக்கிற எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சமாகும். தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி நான்கு லட்சத்து முப்பத்துரெண்டாயிரம் பேர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் தான் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் என்று கூறப்பட்டது. லாரி டிரைவர்களும், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களும் தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக முன்னர் சொல்லி வந்தனர். ஆனால் இப்போது சமூகத்தின் மேலும் சில பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் இந்த நோய் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களில் வேலை செய்பவர்கள், மீனவர்கள், வேலை தேடி இடம் பெயரும் தொழிலாளிகள், முதலானவர்களும் அதிக அளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் முதன் முதலில் எய்ட்ஸ் தாக்கிய செய்தி வந்தபோது பெரும்பாலோருக்கு அந்த நோயைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது 98 சதவீதம் மக்கள் இதைப்பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதற்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட பிரச்சாரங்களே முக்கிய காரணம். எய்ட்ஸைத் தடுக்கும் பிரசாரத்தில் ஆணுறை பயன்படுத்தச் சொல்லும் பிரச்சாரமே முதன்மையானது. ரத்தம் செலுத்துதல், போதை மருந்துகளை ஊசிகள் மூலம் பயன்படுத்துதல், ஒருபால் உறவு முதலியவற்றாலும் எய்ட்ஸ் தொற்றுகிறது என்ற போதிலும் உடலுறவு மூலம் தான் அது அதிகமாகப் பரவுகிறது. அதைத் தடுக்க இப்போதிருக்கும் வழி ஆணுறை ஒன்று தான். ஆனால் அதை ஆண்கள் அதிகம் விரும்புவதில்லை. ஆண், பெண் சமத்துவம் இல்லாத நமது சமூகத்தில் ஆணுறை அணியச் சொல்லி நிர்ப்பந்திக்கும் ஆற்றல் பெண்களுக்கு இருப்பதில்லை. இதனால் பெண்களே மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதனால் தான் உடலுறவின்போது ஆண்களுக்குத் தெரியாமலேயே பெண்கள் தம்மை தற்காத்துக்கொள்ள உதவக்கூடிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் சர்வதேச நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஜர் ஷார்ட் என்ற பேராசிரியர் சிட்ரிக் அமிலம் எய்ட்ஸ் கிருமிகளைக் கொல்வதற்குப் பயன்படும் என்பதைக் கண்டறிந்தார். ஆப்ரிக்க நாடுகளில் எலுமிச்சம் பழச்சாற்றை கருத்தடைக்காகப் பெண்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். உடலுறவுக்கு முன்னும், பின்னும் எலுமிச்சம் பழச்சாற்றால் பிறப்புறுப்பைக் கழுவுவதன் மூலம் கருவுறாமல் தடுக்கலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. இதை மருத்துவ ரீதியில் சோதித்துப் பார்த்த, ரோஜர் ஷார்ப் அது உண்மைதான் என்பதைக் கண்டார். இதையே எய்ட்ஸ் நோயிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுத்தலாமா என்று முயற்சித்துப் பல பெண்களை சோதனைக்கு உட்படுத்தினார். எலுமிச்சம் சாறு, குறைவான அடர்த்தியோடு பயன்படுத்தப்பட்டால் அது உடலுக்கு தீங்கு எதையும் விளைவிக்கவில்லை. ஆனால் எய்ட்ஸ் கிருமியைக் கொல்லும் வீரியம் அப்போது அதில் இல்லை. அதிக அடர்த்தியோடு கூடிய எலுமிச்சம் சாறு எய்ட்ஸ் கிருமியைக் கட்டுப்படுத்தியது. ஆனால் அதைப் பயன்படுத்தும் போது வலியும், எரிச்சலும் ஏற்பட்டதோடு உடலுறுப்பில் புண்ணும் உண்டானது. எனவே இது சரிப்படாது எனக் கைவிடப்பட்டது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் சுமார் இரண்டரை கோடி பேர் எய்ட்ஸால் உயிரிழந்துள்ளனர். எய்ட்ஸைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக மெர்க், வாக்ஸ்ஜென், க்ளாக்ஸோ, வயத் ஆகியவை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. மார்க்கெட்டில் இப்போது விற்பனையில் இருக்கும் எய்ட்ஸ் தொடர்பான மருந்துகளின் வர்த்தகம் இதயநோய், புற்று நோய், சர்க்கரை வியாதி போன்றவற்றுக்கான மருந்துகளின் வர்த்தகத்தை ஒப்பிட்டால் மிக, மிக குறைவு தான்.

எய்ட்ஸ் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. 2005 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால் தனியார் நிறுவனங்கள் 75 மில்லியன் டாலர்தான் இதற்காக செலவிட்டுள்ளன. புதிய மருந்துகளுக்கான ஆராய்ச்சிகளுக்கென்று செலவிடப்பட்டதில் இது பத்து சதவீதம் மட்டுமே. எய்ட்ஸ் தொடர்பாக உலக அளவில் செலவிடப்படும் தொகையில் மூன்று சதவீதம் தொகை மட்டும் தான் எய்ட்ஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க செலவழிக்கப்படுகிறது. மற்றதெல்லாம் எய்ட்ஸ் நோயாளிகளின் சிகிச்சைக்குத்தான் செலவாகிறது.

மருந்து கம்பெனிகள் எய்ட்ஸ் தடுப்புக்கான மருந்து கண்டுபிடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் அதிக பணம் செலவழித்து இந்த மருந்தை வாங்கமாட்டார்கள் என்று அவை கருதுகின்றன. இரண்டாவது, இப்படியொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது சர்க்கரை நோய் அல்லது இதய நோய் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளைப்போல் தொடர்ந்து உட்கொள்ளப்படும் மருந்தாக இருக்காது, எனவே இந்த மருந்து பெரிய அளவில் லாபம் தராது என அந்த கம்பெனிகள் எண்ணுகின்றன. இந்த ஆராய்ச்சிக்கு சில தனியார் அமைப்புகளே நிதியளித்து வருகின்றன. பாலிடெக்ஸ் நிறுவனம் தயாரித்த ‘உஷர்ஸெல்’ மருந்துக்கான ஆராய்ச்சிக்காக பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு நாற்பது மில்லியன் டாலர் நிதி உதவி செய்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் எய்ட்ஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்காக அந்த அமைப்பு கடந்த ஆண்டு 287 மில்லியன் டாலர்களை பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது. எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கென அதிக அளவில் நிதி உதவி வழங்குவது இந்த அமைப்புதான்.

எய்ட்ஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இருக்கும் இன்னொரு சிக்கல், அந்த மருந்தை சோதிப்பதற்கு ஆள் கிடைப்பது அரிதாக இருப்பதுதான். தற்போது ஏற்பட்டுள்ளது போல எதிர்விளைவுகள் ஏற்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழக்கும் ஆபத்து இதில் அதிகமாக உள்ளது.

இப்படியான சோதனைகள் பெரும்பாலும் ரகசியமாகவே வைக்கப்படுகிறது. வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களே இத்தகைய சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். உஷர்ஸெல் மருந்தையும் கூட ரகசியமாகத்தான் சோதித்து வந்துள்ளார்களா என்பது தெரியவில்லை. அந்த மருந்து சோதிக்கப்பட்ட 1500 பெண்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர்? அதில் இப்போது எய்ட்ஸ் தாக்கியுள்ளதாகக் கூறப்படும் 35 பெண்களில் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பதும் கூறப்படவில்லை. அந்த மருந்து எந்த விதத்தில் தோல்வியடைந்தது என்ற விவரமும் அந்த மருந்து கம்பெனியால் வெளியிடப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னால் லிபியாவில் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. பல்கேரியாவைச் சேர்ந்த ஐந்து நர்சுகளும், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவரும் லிபியாவில் 426 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பி விட்டனர் என்றும், அதில் 52 குழந்தைகள் இறந்து விட்டன என்றும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அந்த தண்டனையை கடந்த டிசம்பர் 19ஆம் தேதி லிபியாவின் உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. குழந்தைகளிடம் ரகசியமாக எய்ட்ஸ் மருந்து எதுவும் சோதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இந்த வழக்கில் எழுந்தது. தற்போது ‘உஷர்ஸெல்’ மருந்தும் அப்படி ரகசியமாக சோதிக்கப்பட்டிருந்தால் அது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். இதுபற்றி இந்திய அரசின் சுகாதார அமைச்சகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? ‘உஷர்ஸெல்’ மருந்து ரகசியமாக சோதிக்கப்பட்டு நம் நாட்டுப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டியது மத்திய சுகாதார அமைச்சகத்தின் கடமையாகும்.

வல்லரசாக வளர்ந்து விட்டோம். எனவே ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வேண்டும் எனக்குரல் கொடுக்கும் இந்திய அரசு, தனது குடிமக்களை இப்படி பன்னாட்டு நிறுவனங்களின் சோதனை எலிகளாக வைத்திருப்பது பெருமைக்குரியதல்ல.

நன்றி : ஜூனியர் விகடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்