/* up Facebook

Oct 8, 2010

தலித்தியத்தில் மராத்திய மகர்கள் - புதிய மாதவி


மராத்திய மாநிலத்தை பூகோளரீதியில் நான்காகப் பிரிக்கலாம். 1) கொங்கன் மேற்கு கடற்கரைப் பகுதி 2) மேற்கு மராத்தியம் 3) விதர்பா 4) மராத்தாவாடா. இதில் விதர்பா பகுதி மத்திய பிரதேச ஆட்சியிலும் மராத்தாவாடா ஹைதராபாத் நிஜாமின் ஆட்சியிலும் இடம் பெற்றிருந்தன என்பதால் இவ்விரு பகுதிகளும் பொருளாதரரீதியாக பின்தங்கியிருந்தன. இன்றும் அந்த நிலைத் தொடர்வதை இப்பகுதியில் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள் உறுதி செய்கின்றன. பார்ப்பனர்கள், மராத்தாக்கள், கயஸ்த பிரபுக்கள் என்று மூன்று பெரும்பிரிவுகளாக இருந்த மராத்திய மண்ணில் வைசியர்கள் இல்லை.வணிகத்திற்காக மராத்திய பேரரசன் சிவாஜி குஜராத்திலிருந்து வணிகர்களை தன் மண்ணில் குடியேறவும் வணிகம் நடத்தவும் அழைப்பு விடுத்ததும் இதனால்தான். இவர்களில் கய்ஸ்த பிரபுக்களும் மராத்திய மண்ணில் வந்து குடியேறியவர்கள் என்ற வரலாறும் உண்டு. சிவசேனா பால்தாக்கரே இவ்வாறு குடியேறிய கயஸ்த பிரபு வம்சத்தைச் சார்ந்தவர் என்பதை தாக்கரே என்ற கயஸ்த பிரபு குடும்பப்பெயர் அடையாளம் காட்டுகிறது.

மராத்தாக்களில் மிகவும் வசதியானவர்களான தேஷ்முக் அடில்ஷா, நிஷாம்ஷா அரசுகளில் அமைச்சர்களாகவும் தளபதிகளாகவும் இருந்தனர். பார்ப்பனர்கள் அவர்களுக்கே உரிய மதகுரு அடையாளத்துடன் மராத்திய அரசின் உயர் அதிகாரிகளை நிர்ணயிப்பவர்களாகவும் இருந்தனர். கயஸ்த பிரபுக்கள் படைத்தளபதிகளாகவும் அரசு நிர்வாக அதிகாரிகளாகவும் இருந்தனர். படில் ஊர்த்தலைவன், இவன் ஊர் வருவாயிலிருந்து இனாமாக மற்றவர்களுக்கு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும் . அப்படி 12 இனத்தவர் மராத்திய ஊராட்சி அமைப்பில் இருந்தனர். 17ஆம் நூற்றாண்டிலிருந்து இம்முறை அமுலில் வந்திருக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். கணக்கு எழுதும் குல்கர்னி ( பெரும்பாலும் பார்ப்பனர் ), நிமித்திகர் (நாள், நட்சத்திரம் கணிப்பவர் ), தங்க ஆசாரி, கொல்லன், தச்சன், குயவன், நாவிதன், வண்ணார், குருக்கள் (சூத்திரர்களின் பூசாரி) இவர்கள் தவிர மகர், சாம்பர், மாங்க் என்ற மூன்று சாதிமக்களும் ஒடுக்கப் பட்டவர்கள். தோல்கருவிகள் செய்வது சாம்பர்கள், கயிறு திரிப்பதும் கூடைகள் முடைவதும் மாங்க் சாதியினர் செய்தனர். இப்படியான எவ்விதமான கைத்தொழில் பின்புலமும் இல்லாத அடிமைத் தொழில் செய்த பெரும்பான்மையான மகர்களின் பங்களிப்பும் இயக்க வரலாறுமே மராத்திய மண்ணின் பெருமைமிக்க தலித்திய வரலாறாக இடம் பெற்றுள்ளது.

மகர்கள்

மராத்திய பட்டியல் சாதியினரில் பெரும்பாலானோர் மகர்கள். படில் (Patil) என்றழைக்கப்படும் பண்ணையார்களின் விளைநிலத்தில் விதைப்பதும் பயிரிடுவதும் அறுப்பதும் மட்டுமின்றி கிராம நிர்வாகத்தில் முக்கியமான வரிவசூலிப்பில் அடியாளாக உதவுவதும் மகர்களின் பணி. இத்துடன் கிராமங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதும் ஒரு கிராமங்களுக்டையே செய்திகளையும் பணத்தையும் எடுத்துச்செல்லும் தபால்காரர் வேலையும் மகர்களுக்கானது. இழவுச்செய்தியை வீடுவீடாகவும் அண்டை கிராமங்களுக்கும் எடுத்துச்செல்வதும், இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துவதும் கிராமத்தூய்மையும் மகர்களுக்கு என்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தீட்டுத்தொழில்கள். நிலத்தகராறு வந்தால் வாதியும் பிரதிவாதியும் ஊர்க்காவல்காரரான மகர் சொல்வதை ஏற்றுக்கொண்டனர் என்பது இன்னொரு சுவையானச் செய்தி! இந்த வேலைகளுக்கு கைமாறாக பண்ணையார் தன் விளைநில வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மகர்களுக்கு வழங்கவேண்டும். இது மகர்வாட்டன் (the inams and baluta collectively known as mahar watan) என்றழைக்கப்படும். வாட்டன் என்பது நிலவருவாய். பலுதா என்பது மகர்கள் கிராமங்களில் வசூலிக்கும் தானியங்களின் ஒரு பகுதி. இந்த மகர்வாட்டன் எந்த ஒரு தனி மகருக் கும் வழங்கப்படுவதில்லை. கிராமத்தின் ஒட்டுமொத்த மகர்களுக்கும் வழங்கப்படும். அதை மகர்களின் பஞ்சாயத்து கூடி அவர்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளும் முறை அமுலில் இருந்தது.

அரசர்களால் மகர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களே இந்த வாட் டன் மகர் நிலங்கள் என்பது வரலாறு. மகர் வாட்டன் உரிமையை தமது நிலவுடமை வரலாற்றுடன் இணைத்துப் பேசுவர் பவுத்த மகர்கள். நிலவுரிமையை வந்தேறிய ஆரியர்களிடம் போரிலோ பிற காரணங்களினாலோ இழந்த மகர்களின் வரலாறாக அவர்கள் மறு வாசிப்பு செய்வர். நிலங்களை நிரந்தரமாக அடமானம் வைத்த மகர்களுக்கு பண்ணையார்கள் அதன் வருவாயில் வழங்கும் ஒரு பகுதி.

சிவாஜி பேரரசில் மகர்கள் போர்வீரர்களாக மராத்தா படையில் சேர்க்கப்பட்டார்கள். ஒரு நாட்டிலிருந்து /எல்லையிலிருந்து இன்னொரு நாட்டிற்கு/ எல்லைக்கு இலட்சக்கணக்கில் கஜானாவிலிருந்து பணத்தை எடுத்துச் செல்லும் மிகவும் நம்பிக்கைக்குரிய தேசிய சேவையிலும் மகர்கள் ஈடுபட்டனர். இவ்விரு பணிகளும் மகர்களின் கடந்தகால வரலாற்று பெருமைமிக்க அடையாளமாக பிற்காலத்தில் மகர்களின் தலித்திய இயக்கங்களால் பேசப்பட்டன.

வெள்ளையர் ஆட்சியில்

உலக அரங்கில் அமெரிக்க உள்நாட்டுப் போரும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் பருத்தி பணப்பயிர் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்களை அரசியல் பின்னணியுடன் உருவாக்கின. நூற்பாலைகளுக்குத் தேவையான போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் கடின உடல் உழைப்பு வேலையில் மகர்களின் பங்கு மகத்தானது என்று அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.(khandesh gazetter of 1889, 1881 notes: mahars make excekkent railway gang labourers and have gained almost a monopoly of the unskilled railway labour market... the railway has done much for the mahars). ரயில்வே பணிகள் நடந்த மாவட்டங்களில் மகர்கள் தமது சொற்ப நிலங்களை விற்றுவிட்டு ரயில்வே கட்டுமானப் பணியில் தொழிலாளர்களாகச் சேர்ந்தார்கள்.

ஆங்கிலேயரது இராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அதிகமான மகர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். மகர்களின் வாழ்விடங்களை ஒட்டியே இத்தொழிற்சாலைகள் (ammunition factories) நிறுவப்பட்டன என்கிறார் ஹெரால்ட் மன். நாக்பூர், விதர்பா மாவட்டங்களில் மகர்களில் சிலர் ஆடை நெய்வதை தொழிலாகக் கொண்டிருந்தனர். எனவே 1850களில் விதர்பா பகுதியில் பருத்தி ஆலைகளும் நூற்பாலைகளும் தொடங்கப்பட்ட போது மகர்களின் நெசவு அனுபவம் கைகொடுத்தது. பம்பாய் நூற்பாலைகளில் வேலைக்குச் சேர்வதற்கு முன்பே நாக்பூர் சோலாப்பூர் பகுதிகளில் மகர்கள் நூற்பாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். 1872ல் பம்பாயில் பருத்தி ஆலைகள் ஆரம்பிக்கப்பட்டபின் மகர்களின் எண்ணிக்கை பம்பாய் மகாணப்பகுதிகளில் அதிகமானது. இத்துடன் பம்பாய் நகர பஞ்சாயத்துகளில் துப்புரவாளர் பணியிலும் நகரப்பேருந்துகளில் (BEST) ஓட்டுநர் நடத்துநர் பணிகளிலும் மகர்களின் எண்ணிக்கை கணிசமாக (சற்றொப்ப 91.9%) இருந்தது.

ஏற்கனவே சிவாஜி அரசில் படைவீரர்களாக பணி செய்த அனுபவம் ஆங்கிலேயரின் ஆட்சியில் இராணுவத்தில் மகர்களுக்கு தனி இடத்தைக் கொடுத்தது. ஆங்கிலேயர் படைப்பிரிவில் சேர்ந்த மகர்களில் பெரும்பாலோர் ரத்தினகிரி மாவட்டத்தவர். இராணுவவீரர்களுக்கு கிடைத்த அடிப்படைக்கல்வியும், கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்ற ஆங்கிலேயர் சட்டமும் மகர்களின் எழுச்சிக்கு வித்திட்டன. 1830களில் கிராமத்து திண்ணைப்பள்ளிகள் தீண்டப்படாதவர்களுக்கு இடம் கொடுத்தன. ஆரம்பக்காலத்தில் இந்தப் பள்ளிகளில் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் எனினும் இதுவே பிற்காலத்தில் கல்வியின் மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய விழிப்புணர்ச்சிக்கு பாதை போட்டது. கிறித்துவ அமைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்கியதுடன் இதுவரை அவர்கள் நம்பியிருந்த இந்துமதக் கோட்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தின. மூடநம்பிக்கையிலும் முற்பிறப்பின் பாவ புண்ணியத்திலும் பலமாக கட்டப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் பிறவி விலங்கு தானே பலமிழந்து அறுந்து விழுந்தது.

ஆண்டுக்கொருமுறை தரப்படும் 'வாட்டன்' 'பலுதா'வுக்காக இழிநிலையைத் தாங்கிக்கொண்டு படில் சமூகத்திற்கு அடிமையாக கிராமப்புறத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை மேற்கண்ட நகர்ப்புற தொழில்வாய்ப்புகள் வழங்கின. வேலைத்தேடி வந்தவர்கள் அதன்பின் தங்கள் மனைவி மக்களுடன் பருத்தி ஆலைத் தொழிலாளர்கள் குடியிருப்பில் வாழத் துவங்கினர். ஆலைகளின் சிம்னியும் அவர்கள் வாழ்ந்த "சால்" என்ற குடியிருப்புப் பகுதியும் மராத்திய தலித் இலக்கியத்தின் உயிருள்ள கதாபாத்திரங்களாக மாறியது இப்படித்தான்.

இராணுவ அதிகாரிகளாக பதவிஉயர்வு பெற்ற மகர்களின் கட்டுப்பாட்டுக்குள் பிற சாதி சிப்பாய்களும்இருந்தனர். இந்த இராணுவ வாழ்க்கை மகர்களுக்குள் உளவியல்ரீதியாக மிகச்சிறந்த தாக்கத்தை செலுத்தியது. இராணுவத்தில் பணி செய்த தலித்துகள் ஓய்வு பெற்ற பின் தமது கிராமங்களுக்குப் போனார்கள். நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்கள் ஆண்டுக்கொரு முறையாவது தம் கிராமங்களுக்குப் போனார்கள். காலங்காலமாய் சுமந்த இழிநிலையை எதிர்த்து கிராமங்களிலும் அவர்களது குரல் ஒலிக்க ஆரம்பித்ததும், இப்படித்தான். ஒரு தலைமுறை கல்வி கற்று வெளிவந்ததும் இதனால்தான். இராணுவம் தவிர்த்து பட்லர் தொழிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டது என்று சொல்லலாம். வெள்ளைக்கார துரைக்கும் அவர் குடும்பத்தினருக்கும் நெருக்கமானதன் மூலமாகவும் ஆங்கிலமொழியைக் கற்றுக் கொண்டதும் சமூகப்பிரச்சனைகளை வெள்ளையரிடம் நேரில் சொல்லும் வாய்ப்பை பட்லர் தொழில் வழங்கியது.

சிப்பாய்க் கலகத்தின் எதிரொலி

1857ல் நடந்த சிப்பாய் கலகத்தின் காரண காரியங்களை ஆராய்வதற்கு 1858ல் ஏற்படுத்தப்பட்ட பீள் கமிஷன் சில பரிந்துரைகளை முன் வைத்தது. அதன்படி ஏற்கனவே இந்தியாவில் இருந்த சமூகப்படிநிலை கட்டுமானத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது என்று முடிவுக்கு வந்தது. அதாவது சாதிய வர்ணபாகுபாட்டை அப்படியே ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப தங்கள் சட்டதிட்டங்களை மாற்றிக் கொள்வது என்பதுதான் அது. (we cannot practically ignore it ( the caste system) so long as the natives socially maintain it).

இக்கமிஷனின் பரிந்துரைப்படி 1890ல் ஆங்கிலேயர் படைகளைச் சீரமைத்தனர். இராணுவத்தளபதி லார்ட் கிட்சனர் படைவீரர் சேர்ப்புக்கான விதிகளை இந்தியச் சமுதாய அடித்தளக் கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றம் செய்தார். அதாவது, martial races - ஷத்திரிய ரத்தச் சம்பந்தமே படைவீரர்களுக்கான முன்தகுதியாக்கப்பட்டது. இதனால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் இராணுவத்திலிருந்த மகர்கள்தான். இராணுவத்தால் கிடைத்த அதிகாரம், பதவிஉயர்வு, சமூக அந்தஸ்து, செல்வாக்கு அனைத்தையும் இழந்தனர். சற்றொப்ப 100 ஆண்டு கால சுயமரியாதைமிக்க இராணுவ வாழ்க்கை ஒருநொடியில் மகர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. இதனால் மகர்கள், குறிப்பாக இராணுவ வாழ்க்கை சார்ந்த குடும்பப்பின்னணியில் வந்த மகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இந்தச்சூழலே உரிமையை மீட்டெடுக்கும் உணர்வை மகர்களுக்கு உருவாக்கியது.

கோரிக்கையாய் ஒலித்தக் குரல்கள்

மகர்கள் இராணுவத்தில் சேரும் தகுதியற்றவர்கள் என்ற அரசின் நிலைப்பாட்டால் தங்களது முன்னேற்றத்திற்கான பாதை அடைபட்டு விட்டதைக் கண்டு திகைத்துப்போன மகர்களில் ஒருவர், கோபால் பாபா என்று மகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கோபால்நக் விதல்நக் வலன்க்கர் (Gopalnak vithalnak walangkar ). இராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ரத்தினகிரி மாவட்டம் தபோலியில் வாழ்ந்தார். அம்பேத்கரின் மனைவி ரமாபாயின் தந்தை பிக்கு வலன்கரின் உறவினர். தனிப்பட்ட வாழ்வில் வலன்கர் மிகவும் வசதியான வாழ்க்கைத்தரத்தையும் சமூகத்தில் மதிப்பையும் பெற்றிருந்தார். சாதி இந்துக்களின் எதிர்ப்பையும் மீறி மகட் தாலுகா போர்டில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

வலன்கர் மகர்களை மீண்டும் இராணுவத்தில் சேர்க்கவேண்டும் என்று எழுதிய மனுவை ஓய்வூதியம் பெறும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒப்புதலுக்காக கையொப்பம் வேண்டி சுற்றறிக்கையாக அனுப்பினார். அந்த மனுவுடன் பண்டிட் கோண்டிராமின் நீள்கவிதையும் இணைக்கப்பட்டிருந்தது. இம்மனுவால் எதையும் சாதிக்க முடியாது என்று அவர்கள் யாரும் மனுவில் கையெழுத்திடவுமில்லை ( memories of vithal ramji shinde, 1958:214) அரசுக்கு அனுப்பப்படவுமில்லை! பத்திரிகைச்செய்திகளும் வலன்கரின் பேச்சுகளும் இம்மனுவைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளன.

அவர் தீண்டாமை ஒழிப்புச் சங்கம் - அனர்ய தோஷ் பரிஹார் சமாஜ் ( Society for the removal of the stigma of untouchablity) என்ற அமைப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு பகுதியாக சென்று பேசியும் கீர்த்தனைகளாகப் பாடியும் தன் கருத்துகளைப் பரப்பினார். 1888ல் விட்டல்வித்வான்சக் என்ற பத்திரிகையை நடத்தினார். மராத்திய மண் ணில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்திரிகை இதுவே. அகர்கரின் Sudhrak and dinbandhy போன்ற மிகச் சிறந்த தலித்திய எழுச்சிக்குரல்கள் இதன்மூலமே வெளிவந்தன. யாத்ரிகர்கள் தங்கும் தர்மசாலையில் நிலவும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து வலன்கர் போராட்டம் நடத்தியதை உறுதி செய்கிறது பத்திரிகைச் செய்தி (Indu Prakash, Bombay, 5 may 1890). செத்த விலங்குகளின் இறைச்சியை உண்பதாலும் குடிப்பதாலும் உடல் தூய்மையின்மையாலும் பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்களை விலக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை மறுத்து தலைமுறை தலைமுறையாய் புலால் மறுத்து மதுவிலக்கி உடல் தூய்மையுடன் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்களை ஒருபோதும் பார்ப்பனர்களும் அவர்களின் வேதங்களும் சமத்துவத்துடன் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று முழக்கமிட்டவர் வலன்கர். "எரியட்டும் பார்ப்பனிய வேதங்கள் என்ற முத்தாய்ப்புடன் முடியும் கோண்டிராமின் கவிதையை அவர் தன் மனுவில் இணைத்திருந்தது கவனிக்கத்தக்கது. தீவிரமாக பார்ப்பனியத்தை எதிர்த்த வலன்கரின் கருத்துகள் ஒடுக்கப்பட்ட மக்களிடம் அச்சத்தைத்தான் முதலில் ஏற்படுத்தின. வலன்கருக்குப் பின் புனாவில் வாழ்ந்து வந்த சிவராம் ஜான்பா காம்ப்ளே எழுதிய மனு நேரடியாக இலண்டனிலிருக்கும் இந்திய செயலகத்திற்கு அனுப்பப்பட்டது (Earl of crewe. Secretary of state for Indian in London)

சிவராம் காம்ப்ளே பட்லராக- சமையல்காரராக வெள்ளைக்கார துரையிடம் வேலைப்பார்த்தவர். மகர்கள் ஷத்திரியர்கள் இல்லை என்று இராணுவத்திலிருந்து விலக்கப்பட்டதால் அவர்களின் ஷத்திரிய வரலாற்றை பல்வேறு சான்றுகளுடன் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தினார் சிவராம் காம்ப்ளே. சூரிய வம்சம், சந்திரவம்சம் என்ற புராணக்கருத்துகளையும் தன் கருத்துகளை நிலைநாட்ட பயன்படுத்திக் கொண்டார். ஆங்கிலேயருக்கும் பேஷ்வா அரசுக்கும் 1818ல் நடந்தச் சண்டையில் வீரமரணம் எய்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செய்யும்வகையில் புனே அருகில் நினைவு ஸ்தூபி எழுப்பப்பட்டது (Koregaon piller). அதில் 22 மகர்கள், 16 மராத்தாக்கள், 8 ராஜபுத்திர இந்துக்கள், 2 இசுலாமியர்கள், 1 இந்திய யூதர் (Indian jews) பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். வீரம் செறிந்த இம்மகர்களின் உண்மையான வரலாறை நினைவூட்டி செல்லும் இடமெல்லாம் தன் கருத்துகளுக்கு வலுச்சேர்த்தார் .

1908ல் "சோமவன்ஷிய மித்ர" (சோமவன்ஷி என்ற மகர் இனத்தின் நண்பன்) என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் இயக்கச் செயல்பாடுகளையும் நிகழ்வுகளையும் வெளியிட்டது டன் அன்றாட அரசியல் சமூக நிகழ்வுகளை ஒடுக்கப்பட்டோர் பார்வையில் விவாதிப்பதும் இடம்பெற்றன. மகர்களின் இராணுவச்சேர்க்கையைக் கோரும் போராட்டச் செய்திகளையும் அக்கோரிக்கைக்கான நியாயங்களையும் வரலாற்றுப்பார்வையில் இப்பத்திரிகை எழுதியது. ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கரீதியான கருத்துகளை அனைவருக்கும் எடுத்துச் சென்றதில் இதன் பங்கு மகத்தானது. 1910 நவம்பரில் நடந்த "தக்காண மகர்களின் கருத்தரங்கு குறித்த அனைத்துச் செய்திகளும் இப்பத்திரிகையில் இடம் பெற்றன. முற்பிறவி, கர்மா, கர்மவினை, கர்மாதான் இழிசாதி பிறப்புக்கு காரணம் என்று இந்துமதக் காவலர்களால் கட்டப்பட்டிருந்த அதிகாரவெளியைக் கட்டுடைத்ததில் இப்பத்திரிகையின் பங்கு மகத்தானது. இந்துமதத்திற்கும் தீண்டாமைக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றிய விவாதங்களைவிட தீண்டாமைக் குறித்த கருத்துகளை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிறருக்கும் விளக்குவதன் மூலமும் அனைவரும் கல்வி அறிவு பெறுவதன் மூலம் கிடைக்கும் பகுத்தறிவினாலும் தீண் டாமையை- சாதியத்தை முழுவதுமாக ஒழித்துவிடமுடியும் என்றே நம்பியது என்றுதான் சொல்லவேண்டும் (somavanshiya mitra:01 july 1909, jati bhed khandan).

மேலும் சிவராம் காம்ப்ளே 1929ல் புனாவில் பார்வதி கோவிலில் தாழ்த்தப்பட்டவர்களின் "கோவில்நுழைவுப் போராட்டதை நடத்தினார். அது கடுமையாக ஒடுக்கப்பட்டது. புனாவில் தேநீர்க்கடைகளில் தாழ்த்தப்பட்டவர்க்கு அனுமதியில்லாததை எதிர்த்து காம்ப்ளே நடத்தியப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. பி.எஸ்.கதே (B.S. Hate’s yugavidhan) வின் வரலாற்றுப் புதினங்கள் கொங்கன் பகுதியில் 1880 முதல் 1927வரை நடந்த மகர் இயக்கங்களைப் பற்றியும் இயக்கச் செயல்வீரர்கள் பற்றியும் பதிவு செய்துள்ளது.

மகர் இயக்கங்கள்

அம்பேத்ருக்கு தளம் அமைத்துக் கொடுத்த அவருக்கு முந்திய மகர் இயக்கங்கள் மராத்திய மண்ணில் கொங்கன், விதர்பா ஆகிய இரு பகுதிகளில் காலூன்றின. கொங்கன் பகுதியினர் பெரும்பாலும் இராணுவத்தில் பணிபுரிந்தவர்களும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களும். விதர்பா பகுதியினர் பொருளாதாரரீதியாக கொங்கன்வாழ் தாழ்த்தப்பட்டவர்களைவிட பல்வேறு படிநிலைகளில் உயர்ந்திருந்தனர். கிராமத்தில் வரிவசூலிக்கும் வருவாயும் வாட்டனும் (காவல் பணம்) கணிசமான தொகையாக இருந்தது. நெசவு முதலான சிறுதொழில்களும் வணிகமும் வாட்டனுக்கு அப்பாற்பட்ட இன்னொரு வருவாயை அவர்களுக்கு கொடுத்தன. கல்வி அறிவு பெற்ற சமுதாயம் மலர்ந்தால் சாதித்தீண்டாமை தானாகவே மங்கி மறைந்துவிடும் என்று நம்பி 1885ல் அகோலா பகுதியில் மகர் ஒருவர் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதியைத் தன் சொந்தப்பணத்தில் கட்டியிருக்கிறார். 1910களில் கிஷன் ஃபகு பான்சோடெ (Kishan fagu bansode) தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி பயில தனிப்பட்ட கல்வி நிறுவனங்களை நிறுவியிருக்கிறார்.

உட்சாதிப்பூசல்கள்

அம்பேத்கருக்கு எதிராக காங்கிரசுக்காரர்கள், இந்துத்துவவாதிகள் மட்டுமல்ல,
ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்தும் அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரை மகர்களுக்காக மட்டுமே பாடுபடும் மகர் சாதித்தலைவர் என்று குற்றம் சாட்டினர். அம்பேத்கரை ஏற்றுக்கொண்டவர்களில் பெரும்பாலோர் மகர்களாகவே இருந்ததாலும் அம்பேத்கரும் ஒரு மகர் என்பதாலும் அக்குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிடுவது அம்பேத்கருக்கும் அவ்வளவு எளிதாக இல்லை.

1939ல் சாம்பர்களின் மாநாட்டில் இக்குற்றச்சாட்டு வெளிப்படையாக வைக்கப்பட்டது. பம்பாய் கிரானிக்கல் ஜூலை 4, 1939ல் அம்பேத்கர் இக்குற்றச்சாட்டுகளின் பின்னால் இருக்கும் காங்கிரசின் முகத்தை அடையாளம் காட்டி எழுதினார். நாசிக், போலீஸ் பயிற்சிப்பள்ளியில் சேர போராடியது மகர்களாக இருந்தாலும் அதில் சேர்க்கப்பட்ட அனைவரும் மகர்களல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள்தான் என்கிற உண்மையையும் பதிவு செய்தார். மராத்தி பத்திரிகை ஜனதா, ஜூன் 14, 1941ல் டி.என்.காம்ப்ளே (D.N.Kamble, the first educated mang from nizam’s state) எழுதிய கடிதத்தில் மகர்கள் மாங்க் மக்களை சமத்துவத்துடன் நடத்த வேண்டும் என்றும் அம்பேத்கர் மாங்க்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப் பிடுகிறார். அக்கடிதத்திற்கு பதில் எழுதிய அம்பேத்கர் மாணவர்கள் தங்கிப்படிக்கும் விடுதிகள் மகர்களுக்கு மட்டுமானவையல்ல, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதன் கதவுகள் திறந்தே இருக்கும் என்று உறுதி அளித்தார். மேலும் மாங்க்குகள் காங்கிரசின் இந்த பிரித்தாளும் சூழ்ச்சியில் விழக்கூடாது, காங்கிரசில் சேரக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். அடிக்கடி சாம்பர், மாங்க் அமைப்புகளின் கூட்டங்களில் அம்பேத்கர் தவறாமல் பங்கெடுத்துக் கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கத்தின் (Depressed Classes Association ) செயலாளராக இருந்தவர் சாம்பர் இனத்தவர் என்பதும் எஸ்.சி.கூட்டமைப்பின் (Scheduled caste federation) செயலாளராக இருந்தவர் பி.என்.ராஜ்பூஜ் சாம்பர் இனத்தவர் என்பதும் நினைவுகூரத்தக்கது.

மகத் சத்தியாகிரகம்

மகர் இயக்க வரலாற்றில் முக்கியமானது மகத் சத்தியாகிரகம். சௌதார் குளத்தை தீண்டப்படாதவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நகராட்சியின் தீர்மானம் நிறைவேற்றப்படவே இல்லை. எனினும் நிறைவேறாத இத்தீர்மானமே மகத் சத்தியாகிரகத்தின் தேவையாக மாறியது. 1927 மார்ச் 19, 20களில் தீண்டப்படாதவர்கள் தங்கள் மாநாட்டை மகத்தில் நடத்தினர். அம்பேத்கரும் அவரு டன் சுரேந்திர நாத், திப்னிஸ், சுபேதார் சவத்கர், ஆன்ந்த்ராவ் சித்ரே ஆகியோரும் 10,000 பொதுமக்களும் கலந்து கொண்டனர். முதல் சத்தியாகிரக வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சத்தியாகிரகம் அதேவருடம் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. அப்போதுதான் இந்துக்களின் சட்டமான மநுஸ்மிருதி கொளுத்தப் பட்டது. எரிக்கப்பட்ட மநுவின் சாம்பல் ஆதிக்க இந்துக்களைத் தூக்கமின்றி அலைக்கழித்தது என்றுதான் சொல்லவேண்டும். மநுவை எரித்ததன் மூலம் கற்பிக்கப்பட்டிருந்த புனிதமும் வருணாசிரம கோட்பாடும் உடைக்கப்பட்டன. 50 வருடங்கள் கழித்து இதே நிகழ்வை, தலித் பாந்தரும் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்ஷா (Jalsa)

மராத்திய தலித்திய வரலாற்றில் ஜல்சா என்ற நாட்டிய நாடகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. அறிவுப்பின்புலத்தில் வானுயர்ந்த பாபாசாகிப் அம்பேத்கரின் கருத்துகளை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் சிந்தனையும் கல்வி அறிவும் அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இருந்தது என்று சொல்வதற்கில்லை. எழுதப் படிக்கவும் தெரியாத ஊமைகளாய் வாழ்ந்தவர்களை ஒரேநாளில் பேச வைக்கும் வித்தையை யாராலும் செய்துவிடமுடியாதுதானே!

மகத் சத்தியாகிரகம், கோவில் நுழைவுப் போராட்டங்கள், அம்பேத்கரின் தலைமையும் ஆளுமையும் ஓரளவு கல்வி கற்ற ஒடுக்கப்பட்ட இளைய தலைமுறைக்கு போராட்ட உணர்வையும் சமூக விழிப்புணர் வையும் ஏற்படுத்தின. தங்களைப் போலவே அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் விழிப்புணர்வடைய வேண்டும் என்ற உத்வேகத்தால் நாசிக் ஜில்லா யுவசங்கம் போல அந்தந்த இடத்தில் வாழ்ந்த இளைஞர்கள் பல்வேறு சங்கங்கள் அமைத்தனர். மராத்திய நாட்டுப்புறக் கலையான "தமாஷாவை வெறும் நகைச்சுவைக்கும் அப்பால் தமது கருத்துகளைப் பரப்பும் மேடையாக பயன்படுத்த முன்வந்தனர். அவர்களின் முயற்சியில் பிறந்ததுதான் ஜல்ஷா(1930). நகைச்சுவையுடன் கலந்த நாட்டிய நாடகம் ஜல்ஷா.

ஜல்ஷா நாட்டிய நாடகத்தில் சில முக்கியமான கதாபாத்திரங்கள் இருப்பார்கள். குறிப்பாக, ஒரு பண்ணையார் இருப்பார். சாதியத்தின் குறியீடாக. அவரை எதிர்க்கும் ஒரு அம்பேத்கர்வாதி இளைஞர். இவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதம். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் முதியவர்களான ஆணும் பெண்ணும். மதமாற்றம், அதன் தேவை, அதனால் மீட்டெடுக்கப்படும் சுயமரியாதை... இப்படியாக ஜல்ஷா களைகட்டும். இறுதியில் முதியவர்களும் - அதிலும் குறிப்பாக- வயதான பெண், அம்பேத்கர்வாதியாக மாறிவிடுவார். ஜல்ஷாவின் எல்லா நிகழ்வுகளும் இந்த ஒரே கருத்துத்தளத்தில் பயணம் செய்தது என்றுதான் சொல்லவேண்டும். ஜல்ஷா பெரும்பாலும் மகர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அரங்கேறின.

மகர்களும் பவுத்தமும்

மகர்களை இராணுவத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற வலன்கரின் கோரிக்கையை அம்பேத்கர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அதற்காக மகர்கள் ஷத்திரியர்கள் என்று சொல்லப்பட்டதை அவர் ஏற்கவில்லை. ஷத்திரிய அடையாளம் ஆரியர்கள் ஏற்படுத்திய நால் வருணப் பாகுபாட்டை ஏற்றுக்கொண்டதன் சம்ஸ்கிருத தாக்கம் என்றார். ஏனெனில் அக்காலத்தில் சூத்திரர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் தாங்கள் ஷத்திரியர்கள் என்று அடையாளப்படுத்தப்படுவதன் மூலம் உயர்சாதி அந்தஸ்தைப் பெற்றுவிட முடியும் என்று நம்பினர். 1901ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தபோது பல்வேறு சாதியினர் தம்மை ஷத்திரியப்பிரிவில் சேர்க்கும் படி விண்ணப்பித்தார்களாம்!. 1911ல் 16 சாதிகளும், 1921ல் 20 சாதிகளும் ஷத்திரியப் பிரிவில் தம் சாதிகளைச் சேர்க்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். மகர்கள் புத்தர் காலத்திலேயே பவுத்தம் தழுவியவர்கள் என்றார் பாபாசாகிப். பவுத்தக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்ட நாகர்கள் வாழ்ந்த பூமி நாக்பூர். அம்பேத்கர் தன் மதமாற்றத் தளமாக பவுத்தம் தழுவிய இடம் நாக்பூர் என்பதற்கான காரணமும் இதுவே! எனவே பவுத்தம் தழுவுவது என்பது தன் பழைய மதத்திற்கு திரும்புதல்/ மூதாதையர் நம்பிக்கையை மீட்டெடுத்தல் என்று சொல்லப்பட்டது. 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மராத்திய மண்ணில் வாழ்ந்த பவுத்தர்கள் 2487தான். 1956 அம்பேத்கரின் மதமாற்றத்திற்குப் பின் 1961ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப் பில் மராத்திய மண்ணில் வாழ்ந்த பவுத்தர்கள் 2,789.501. பட்டியல் சாதியினரில் 55% பேர் பவுத்தம் தழுவியிருந்தனர். இவர்களில் உட்சாதி பிரிவுவாரியாக கணக்கு எடுக்கப்படவில்லை எனினும் தனிப்பட்ட சிறிய அமைப்புகள் 1959ல் செய்த கள ஆய்வின்படி மத மாற்றத்தை ஏற்றுக்கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் மகர் இனத்தவர் என்று தெரியவருகிறது.

கல்வி நிறுவனங்கள்

மதமாற்றத்தின் தாக்கத்தால் தலித் சமுதாயத்தில் கல்வி நிறுவனங்களும் சமயம் சார்ந்த நிறுவனங்களும் உருவாயின. 1941ல் ஆரம்பித்த மகர் ஜாதி பஞ்சாயத்து சமிதிதான் புத்த ஜன பஞ்சாயத்து சமிதியாக பெயர் மாற்றம் பெற்றது. கடல் கடந்து தூரதேசங்களுக்கும் புத்தமதக் கருத்துகளைப் பரப்புவது, மத வழிபாட்டு முறைகளையும் சடங்குகளையும் அச்சிட்டு புதிதாக மதம் மாறியவர்களை சரியாக வழி நடத்துவது, புத்தரின் தம்மங்களை அச்சிட்டு பரப்புவது, புத்தமத துறவிகளுக்கு மதவழிபாட்டு முறைகளை முறையாக கற்பித்து பயிற்சியளிப்பது, ஆங்காங்கே புத்தர் வழிபாட்டுத்தலங்களை- புத்த விகார்களை கட்டுவது, பால்வாடி என்றழைக்கப்படும் குழந்தைகள் காப்பகம் அமைப்பது ஆகிய புபணிகளை புத்த ஜன பஞ்சாயத்து சமிதி கவனித்துக் கொண்டது.

1945ல் அம்பேத்கரால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் கல்வி நிறுவனம் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை, தங்கிப் படிக்கும் விடுதி வசதி ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டது. மேலும் இக்கல்வி நிறுவனங்களில் இயன்றவரை ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவைச் சார்ந்த பேராசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டனர். எனினும் 1971ல் 84 பேராசிரியர்களில் 22பேர் தான் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். சித்தார்த்தா கல்லூரியில் பவுத்தத் தத்துவங்கள் கற்பிக்கும் துறையில் அம்பேத்கரால் நிய மிக்கப்பட்ட பேராசிரியர் பி.ஜி.கோகலே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அல்லர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளைய தலைமுறை கண்மூடித்தனமாக எதையும் நம்புவதையும் பின்பற்றுவதையும் விட்டுவிட்டு எதையும் காரண காரியங்களுடன் அறிய முயலும் அறிவியல் வழியில் பயணிக்கவும் சமத்துவத்தையும் நீதியையும் நம்புகின்ற இளைஞர்களை உருவாக்குவதும் தங்கள் நோக்கம் என்று மக்கள் கல்வி அமைப்பு தன்னுடைய கால் நூற்றாண்டு மலரில் நிறுவனத்தின் நோக்கத்தைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. இதுவரை கல்வி மறுக்கப்பட்ட தலித்துகள் குடும்பங்களில் கல்வி கற்ற ஒரு தலைமுறை உருவாகியது என்றால் இக்கல்வி நிறுவனமே அந்தப் புரட்சியைச் சாத்தியப்படுத்தியது என்று சொல்லவேண்டும். இதன் விளைவுதான் தலித்தியத்தில் வர்க்கரீதி யாக எழுந்த மத்தியதர, நடுத்தர குடும்பங்கள். இந்தக் கல்வியின் பின்புலமே பின்னர் எழுந்த தலித் பேந்தர் அமைப்புக்கும் தலித் சாகித்திய அமைப்புக்குமான காரணியாகும்.
நன்றி - புதுவிசை 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்