/* up Facebook

Oct 3, 2010

ஓமானில் வதை செய்யப்பட்டு நாடுதிரும்பிய பெண்ணின் கதை - வெறோனிக்கா


தேனீரில் சீனி அதிகமாகிவிட்டது எனக்கூறி தேனீர் கோப்பையினால் என்னை தாக்கினார்கள். அதன் பின்னர் இரும்பு சப்பாத்தினாலும், பொல்லினாலும் எனது உடல் முழுவதும் தாக்கினார்கள். ஐயோ... என்னை இலங்கைக்கு அனுப்பிவிடுங்கள் என கதறியபோது கத்தியைக் காட்டி பயமுறுத்தியதுடன், கிணற்றில் தள்ளிவிட முயற்சித்தார்கள்...அதன் பின்னர் நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி உயிர்தப்பித்தேன்...

வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இந்திராணி என்கிற பெண்ணே, சித்திரவதைகளின் பின் நாடு திரும்பி இந்த கதையை  கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார். இப்போது மாத்தறை 6ஆம் வார்ட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் இலங்கையிலிருந்து பணிப்பெண் வேலைக்காக ஓமானுக்கு சென்றவர் அவர். முதல் 3 மாதங்கள் தனக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என்றும், அதன் பின்னர் தான் கொடுமையாக என்னுடன் நடந்துகொண்டனர் என்கிறார் அவர்.

"...எனது கணவர் மீன்பிடி தொழில் செய்துவருபவர் திருமணத்தின் பின்னர் அவரது பெற்றோருடன் தான் தங்கிவாழ்ந்து வந்தோம். பின்னர் எங்களுக்கென்று ஒரு வழியை ஏற்படுத்தத்தான் விட்டுவேலைக்காக வெளிநாடு செல்ல தீர்மானித்தேன். ஓமானில் வீட்டு உரிமையாளர்களான தம்பதிகளையும், பாடசாலை செல்லும் வயதில் 4 பிள்ளைகளின் பணிவிடைகளையும் செய்வது எனது பொறுப்பு. அனைத்து வீ்ட்டு வேலைகளும் எனக்கு சுமத்தப்பட்டது. பின்னர் அவர்களின் சுற்றத்து அயலவர்களாக இருந்த அவர்களின் உறவுக்காரர்களின் ஐந்து வீடுகளுக்கும் சென்று பணிவிடைகளை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டேன். கடந்த ஓகஸ்ட் 07 அன்று வழமைபோல சுப்பர் மார்கட்டுக்கு சென்று பொருட்கள் வாங்கிவந்தேன். வந்ததன் பின்னர் மீண்டும் போய்வரச்சொன்னார்கள். நேரம் காணாது என்பதை எடுத்துரைத்தேன். உடனே எனது மெடம் என்மீது பாய்ந்து கத்தியால் எனது விரலின் துண்டொன்றினை வெட்டினார்.
ரத்தம் சிந்திக்கொண்டிருந்தது. பாபா (வீட்டுஉரிமையாளர்) வந்ததும் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு என்னை அழைத்துச்சொன்றார். உண்மையைக் கூறினால் நீ சிறைசெல்ல நேரிடும் என என்னை மிரட்டினார்கள்.எனவே நான் உண்மையை மறைத்து சிகைச்சை பெற்று திரும்பினேன்.

இது போல தொடர்ச்சியாக என்னை ஏதோ காரணங்களை வைத்து என்னை தாக்கி வந்தார்கள். வேதனை தாங்ங இயலாமல் என்னை நாட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று கெஞ்சினால் என்னை மேலும் தாக்கினார்கள். சில சமயங்களில் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறேன், பல சமயங்களில் எனக்கு ரத்தம் கலந்த வாந்தியெடுத்திருக்கிறேன்.

மாதாந்தம் இருபத்திஐந்தாயிரம் சம்பளம் என்றுதான் ஒப்பந்தமிருந்தது. ஆனால் இருபதினாயிரம் மட்டுமே எனக்கு கொடுத்தார்கள். முதல் 4 மாத சம்பளத்தை எனது கணவருக்கு அனுப்பி வைத்தேன். இறுதி 2 மாத சம்பளத்தை அவர்கள் எனக்கு வழங்கவில்லை.

கடந்த 23ஆம் திகதி கத்தியால் குத்தி ஒரு பள்ளத்தில் தள்ள முயற்சித்த போது தான், நான் அங்கிருந்து தப்பியோடி வந்து இலங்கை தூதரகத்தில் நிலைமையை எடுத்துக்கூறினேன்.

அவர்கள் என்னை சீப்ரா எனும் பொலிஸ் பிரிவில் என்னை ஒப்படைத்தார்கள். நான் வேலை செய்த இடத்து எஜமானர்களுக்கு சாதகமாக பொலிஸார் நடந்துகொண்டார்கள். பொலிஸார் என்னை தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் தங்கி சிகிச்சைபெற ஏற்பாடு செய்தார்கள். அந்த ஆஸ்பத்திரி எனது எஜமானர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமானது. எனக்கு அங்கு நியாயம்கிடைக்க வாய்ப்பு கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை. எனக்கு அங்கு எதுவும் நேரக்கூடும் என அஞ்சினேன்.

4 நாட்கள் சிகிச்சையின் பின் நான் கட்டார் வந்து பின் இலங்கை வந்து சேர்ந்தேன். வீடுபோய் சேர்வதற்கு கூட என்னிடம் எந்தப் பணமும் இருக்கவில்லை. கட்டுநாயக்க விமான நிலையக் காரியாலயத்தினர் எனது போக்குவரத்திற்காக 750 ரூபா தந்தனர். உடல் வலி தொடர்ந்ததனால் நான் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறேன்...." என்றார்.

மாத்தறை பெரிய ஆஸ்பத்திரி சிரேஸ்ட வைத்தியர் சமந்தி சமரக்கோன் பத்திரியொன்றிற்கு வழங்கிய தகவலின்படி இந்திரானியின் உடலில் தாக்கப்பட்டதற்கான தழும்புகள இன்னமும் காணக்கூடியதாக இருப்பதாக தெரிவித்தார்.

வழமைபோல அவளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது குறித்து தமது விசாரணைகளை நடத்திவருவதாக அறிக்கை மட்டும் விட்டது தான் மிச்சம். வெளிவரும் சய்திகளில் சில மட்டும் தான் இவை. பெரும்பாலான சோகக்கதைகள் வெளித்தெரியாதவை. நடந்தது, நடந்துக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடக்கப்போகிறது. அத்தனையும் தெரிந்தும் மாதாந்தம் ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் தமது கஸ்டங்கள் நிமித்தம் மத்தியகிழக்கு போவது தொடர்கிறது. அவர்களின் மிதான வன்முறைகள், தயரங்கள் தொடர்கிறது, அதற்கெதிரான அறிக்கைகளும் தொடர்கிறது... ஆனால் தீர்வு மட்டும்...?

சிங்களத்திலிருந்து தமிழுக்கு- என் சரவணன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்