/* up Facebook

Oct 31, 2010

நரகத்திற்குச் செல்லும் நான்... - கறுப்பி


சில மணிநேரங்கள் கண்களை மூடித் தியானநிலையில் இருக்கும் போது எல்லாமே வந்து விடுகின்றது. வந்தவற்றைக் கண்களைத் திறந்து மீண்டும் ஒரு முறை மீட்டுப் பார்க்க முயல்கையில் ஒன்று மற்ற நிலையே எஞ்சியிருக்கும்.

திட்டமிட்டுச் செயல்படுபவர்கைளப் பார்க்கையில் வெறுப்பாக வருகின்றது. முறுக்கிவிட்டது போல் ஒவ்வொருநாளையும் ஒரே மாதிரி, மூன்று நேரம் சாப்பிட்டு, அதற்கிடைப்பட்ட நேரத்தில் வேலையும், உதிரி வேலைகளையும் செய்து முடித்து கட்டிலில் “டாண்” என்று அதே நேரத்திற்குச் சரிந்து, இன்று உடலுறவு கொள்ளலாம் என்று முன் கூட்டியே குறித்து வைத்திருப்பார்களோ என்னவோ. இயக்கம் என்பது இவர்களை இயக்கிக்கொண்டேயிருக்கின்றது. இவர்களும் இயங்கியபடியேயிருக்கின்றார்கள்.

நான் இப்படித்தான், இப்படித்தான் இருக்கப்போகின்றேன் என்று முடிவெடுத்த பின்னர் யாராவது அடையாளப்படுத்தவோ, ஒரு கட்டத்துக்குள் அடைத்து விடவோ முயல்கையில் கோபம் வேகமாக வந்து போகின்றது. (போகின்றது என்றவரை சந்தோஷம்தான்) இன்று போல் நாளை வாழ மனம் ஒப்பா நிலையில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

“சுஷானி” என்ற போது இந்தியாவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தாலும், உருவம் அதற்குப்; பொருந்தாமல் இருந்தது. நிச்சயமாக ஐரோப்பா அதிலும் குறிப்பாக லண்டனிலிருந்து வந்திருப்பாள் என்று மனதுக்குள் பட்டது. இங்கிலாந்து மக்களுக்கென என் கணிப்பில் இருக்கும் அந்தக் கச்சிதமான உடை அலங்காரம் முழுமையாக அவளிடமிருந்தது. பொன்நிறத் தலைமயிரை கட்டையாக வெட்டியிருந்தாள். மிக நாகரீகமாக உடையணியும் பல்கலாச்சாரப் பெண்கள் மத்தியில், ஒரு அலுவலகத்திற்கேயான ஒழுங்கு முறையான உடையணிந்த அவள் கதைக்கும் போது ஆங்கிலத்தைச் சிரமப்பட்டுத் விழுங்கிய போதுதான் எனக்குள் சந்தேகம் எழுந்தது. எங்கிருந்து வந்திருக்கின்றாய் என்று கேட்டேன். ரஷ்யா, கனடா வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது என்றாள். நான் உடனேயே எழுந்து நின்று விட்டேன்.

விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த போது நாங்கள் சென்ற புகையிரதவண்டி கேரளாவைக் கடந்து செல்கையில் நான் யன்னலால் எட்டி எட்டி எதையோ தேட பொறுமை இழந்த என் கணவன் என்னத்தை அப்படி ஆவலோடு தேடுகிறீர் என்று கேட்டபோது மோகன்லால் அல்லது மம்முட்டி யாராவது கண்ணில் தட்டுப் படுகின்றார்களா என்று பார்க்கின்றேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இப்போது அந்தப் பட்டியலில் மீரா ஜாஸ்மீனும் சேர்ந்துகொண்டிடுள்ளார்.

நான் கலவரம் அடைந்து விட்டேன். “நீ பிறந்த ஊர் எது? யஸ்னயா போல்யனா விற்குச் சென்றிருக்கின்றாயா? “பிளேஸ் வித் த லிட்டில் கிறீன் ஸ்டிக்”; ஐப் பார்த்திருக்கின்றாயா? கேள்விகளை அடுக்கத் தொடங்கினேன். நான் எழுந்து நின்றதையும், என் விசித்திரமான கேள்விகளையும் கண்டு அவளும் கலவரம் அடைந்து என்னை வினோதமாகப் பார்த்தாள்.
நான் என்னை சுதாகரித்த படியே, இல்லை ட்ரோல்ஸ் ஸ்ரோய் என்றால் விசராகும் அளவிற்கு பிடிக்கும். அன்ட்ரூவையும், லெவினையும் உண்மையாக் காதலிப்பவள் நான் என்றால் நம்பவா போகிறாய்?. நான் நினைக்கிறேன் அன்ட்ரூவையும், லெவினையும் லியோ தன்னை வைச்சுத்தான் உருவகப் படுத்தியிருக்கின்றார் என்று. அப்பிடிப் பார்த்தால் உண்மையிலேயே நான் காதலிப்பது லியோவைத்தான் என்று நினைக்கின்றேன் என்றேன்.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே ஒரு லூசிடம் மாட்டிக்கொண்டு விட்டேனோ என்ற பாவனையில் முகத்தைத் திருப்பித் தனக்காக மேசை மேல் வைக்கப்பட்டிருந்த வேலைப் பத்திரங்களைக் கையில் எடுத்துப் புரட்டத் தொடங்கினாள் அவள். நான் அவமதிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். என் மேசையின் பக்கம் திரும்பி ஒரு தமிழ் பாடலை முணுமுணுத்த படியே அவள் என் கேள்விகுப் பதில் சொல்லாது திரும்பிக் கொண்டது பெரிய பாதிப்பு ஒன்றையும் எனக்குத் தரவில்லைப் போல் காட்டிக்கொண்டு எனது வேலையில் மிக மும்மரமாக ஈடுபடத் தொடங்கினேன். நான் அவளுக்கு வேலையில் மூத்தவள். வயதில் நிச்சயமாகச் சின்னவளாகத்தான் இருப்பேன் என்றொரு நம்பிக்கை. வேலையில் சந்தேகம் வந்தால் நிச்சயமாக என்னிடம் தான் கேட்க வேண்டும் அப்போது பார்த்துக் கொள்கின்றேன் என்று என் காயப்பட்ட மனதிற்கு ஆறுதல் சொன்னேன். நான் மின்கணனியின் மேல் பார்வையைச் செலுத்தும் போது அவள் என் கடைக்கண் பார்வையில் விழுந்தபடியே இருந்தாள். ஒரு பத்திரத்தை அப்படியும் இப்படியுமாகப் புரட்டிய படி என் பக்கம் திரும்புவதும் பின்னர் அதிகாரியின் அறை பக்கம் பார்வையை ஓட்டுவதுமாகத் தடுமாறிக் கொண்டிருந்தாள். ஒரு கிழமை வேலைப் பயிற்சியை முடித்துக் கொண்டு மிக ஆர்வமாக முதல் நாள் வேலையைத் தொடங்கியவளுக்கு முதல் பத்திரமே சந்தேகத்தை எழுப்பி விட்டிருந்தது. நான் மனதுக்குள் குதூகலித்துக் கொண்டிருந்தேன். வழமையாக மற்றவர்களின் துக்கத்திலோ, சிரமத்திலோ குதூகலிக்கும் வன்மமான மனம் கொண்டவளல்ல நான். இன்று அப்படி உணர்வதில் எனக்குள் சங்கடமான ஒரு சந்தோஷம்.

சில நிமிடங்களின் பின்னர் என் மனச்சாட்சி என்னைத் தொல்லை செய்தது. நான் மிகவும் மும்மரமாக வேலையில் ஈடுபடுவதுபோல் பாசாங்கு செய்வதால் அவள் என்னைத் தொந்தரவு செய்யத் தயங்குகின்றாள். இல்லாவிட்டால் என்னிடம் ஏதாவது கேட்கப் போய் நான் பதில் சொல்லப்படாத கேள்விகளை மீண்டும் தொடரலாம் என்ற தயக்கம் கூட அவளுக்கு இருக்கலாம். நான் என் முதல்நாள் வேலை அனுபவத்தை மனதுக்குள் ஒருமுறை மீட்டுப் பார்த்தேன். எப்போதுமே என்மேல் அபரிமிதமான நம்பிக்கை கொண்டவள் நான். அதனால் சிலவேளைகளில் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொண்டு மூக்கை உடைத்துக்கொள்வதும் உண்டு. ஒருகிழமை வேலைப் பயிற்சியின் பின்னர் இந்த மேசைக்கு நான் அனுப்பப்பட்டு முதல்பத்திரம் என் கைகளுக்கு வந்தபோது நானும் தடுமாறித்தான் போனேன். முதல் பத்திரமே என்னை முழுசிப் பார்த்தது. முதல்கோணல் முற்றும் கோணலாய் போய்விடுமோ என்ற அச்சத்தில் நான் முழித்திருக்கையில் நான் கேட்காமலே தானாய் வந்து கைகொடுத்தவர்கள் பலர். இப்போது நான் அனுபவசாலி. பலருக்கு உதவியிருக்கின்றேன். நீ என் பக்கத்து மேசைக்காறி. உனக்கு நான் உதவுவேன் என்ற நம்பிக்கையில் உன்னை ஒருவரும் நாடிவரப் போவதில்லை. என் உதவி உனக்கு நிச்சயம் தேவை என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் நீயாகக் கேட்க வேண்டும் என்று என் குரூரமனம் ஏனோ என்னை உனக்கு நானான உதவுவதை இழுத்துப் பிடிக்கின்றது.

ஏதாவது ஒரு உரையாடலுடன் அவளுக்கு உதவி வேண்டுமா என்றரிந்து உதவு என்று என் நல்ல மனம் உத்தரவிட்டது. நான் ஒரு சுவிங்கத்தை எடுத்து ஒன்றை வாயிற்குள் போட்ட படியே இயல்பாக அவளின் பக்கம் ஒன்றை நீட்டினேன். இப்போதாவது அவள் இறங்கி வந்து என்னிடம் தானாக உதவி கேட்கின்றாளா என்று பார்க்கும் எண்ணத்தோடுதான் நான் அதைச் செய்தேன். அவள் சிநேகிதமாய் சிரித்த படியே ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னாள். எல்லாம் சரியாக இருக்கிறதா? சந்தேகம் ஒன்றும் இல்லையே என்று கேட்டேன். தடுமாறிய படியே பத்திரத்தை என்னிடம் காட்டித் தனக்கான சந்தேகத்தைக் கேட்டாள். நான் சந்தோஷத்துடன் அவளுக்கு விளக்கிக் கூறினேன். அவள் நட்போடு சிரித்த படியே நன்றி சொல்லி விட்டு வேலையை ஆரம்பித்தாள்.

உதவி பெற்றுவிட்டாள். இப்போது அவள் எனக்கு அடிமை. தேத்தண்ணி இடைவேளையில் போது அவளையும் அழைத்துக் கொண்டு ஓய்வு அறையின் பக்கம் சென்றேன். அவள் கண்களில் என்னுடன் உரையாடல் தொடங்குவதற்கான மிரட்சி தெரிந்தது. முதல் முதலில் ஒருவர் அறிமுகமாகும் போது இரண்டு நல்ல வார்த்தை பேச வேண்டும் என்பதை மறந்து நான் கேட்ட கேள்விகளுக்காக இப்போது வருந்தி, “உனக்கு எத்தனை பிள்ளைகள்?, என்ன பிள்ளைகள்?, எத்தனை வயது? என்ற உப்புச்சப்பில்லாத வழமையான கேள்விகளைக் கேட்டு அவளை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தேன். இருந்தாலும் என் முந்தைய கேள்விகளைச் சுற்றியே என் மனம் சுழன்றுகொண்டிருந்தது. தேனீரோடு ஒரு பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டுத் திரும்பவும் எமது இருக்கைக்கு வந்தோம். இப்போது அவள் என்னோடு ஒட்டிக்கொண்டு விட்டாள். கைப்பைக்குள் இருந்து தனது குடும்பப் படத்தை எனக்கு எடுத்துக் காட்டினாள். இரண்டு பெண்பிள்ளைகள். மூத்தவள் அண்மையில்தான் திருமணம் செய்ததாகச் சொன்னாள். மருமகனைத் தனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றாள். விட்டால் வேலை எதையும் செய்யாமல் குடும்பக் கச்சேரி நடத்தத் தொடங்கிவிடுவாளோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்க, எனது “சீனியோரிட்டியை” இப்போது காட்டி அவளைச் சிறிது நோகப்பண்ணலாம் என்று என் சாத்தான் மனது சொன்னது. “வேலை நேரத்தில இப்பிடி அளவுக்கு அதிகமாக் கதைக்கக் கூடாது, அதிகாரி கவனித்தால் உனக்குத்தான் பிரச்சனை” என்றேன். அவள் முகம் சுருங்கிக் கொண்டது. உடனே மன்னிப்புக் கேட்டு விட்டு தன்வேலையைத் தொடங்கினாள். எனக்குத் திருப்தியாக இருந்தது. யாரையாவது அதிகாரம் பண்ணும்போது கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான். என் கணவர் எதற்கு வேண்டாததற்கெல்லாம் என்னை அதிகாரம் பண்ணுகின்றார் என்பது இப்போது புரிந்தது.


தொடர்ந்து வந்து நாட்களில் அவள் தனக்கான வேலைத்தள நண்பியாக என்னை வரிந்து கொண்டாள். அவளை நான் வெறும் “தொல்லை” என்பதாய்க் காட்ட முயன்றாலும் அவள் என்னைச் சுற்றிசுற்றி வருவது எனக்கும் பிடித்திருந்தது. எங்கள் ஆங்கில அறிவு ஒருவருக்கொருவர் ஒத்துப் போவதாய் இருந்தது. அவளுடைய உச்சரிப்பு எனக்கு விளங்கவில்லை என்று நக்கலாக நான் சொல்வதுண்டு. புலிக்கு (நாலுகால் மிருகம்) வாலாய் இருப்பதை விடப் பூனைக்குத் தலையாய் இருக்கலாம் என்று மனம் சொன்னது. என் உச்சரிப்பு அவளுக்கும் நகைப்பாய் இருக்கின்றது என்று தெரிந்த போது எனக்குள் கோபம் எழுந்தது. எத்தனை வருடங்கள் கனடாவில் வாழ்ந்தாலும் று க்கும் ஏ க்குமான உச்சரிப்பு வித்தியாசம் விளங்கமாட்டேன் என்கிறது. கனேடியர்கள் முன்நிலையில் சரியாக உச்சரிக்கின்றோமா என்ற தயக்கத்தோடு கதைப்பதை விட அவளோடு கதைப்பது சுலபமாகவிருந்தது. இருந்தும் ஏதாவதொரு காரணம் கண்டுபிடித்து அவளை மட்டம் தட்டி அவள் முகம் சுருங்கிப் போவதைக் கண்டு வக்கிரமாகத் திருப்திப்படுவதுமுண்டு. சிலவேளைகளில் அவள் முகம் சுண்டிப்போவதைக் கண்டு என் மனமும் நொந்து போகும். எதற்காக நான் இப்படி நடக்கின்றேன் என்று என்னை நானே கேட்பதுமுண்டு. அவள் ஒரு பிற்போக்குவாதி முட்டாள்தனமாக எதையாவது புசத்துவாள். நான் ரோல்ஸ் ரோய், தவ்தஸ்வாக்கி, சிமோன்தி பூவா. பிரேட்ய் அது இதுவென்று வாசித்துத் தள்ளும் ஒருமுற்போக்குவாதியாக இருந்துகொண்டு எதற்காக இந்தச் சின்னத்தனம். அவள் பிற்போக்குவாதி குறை உடையவள். நான் முற்போக்குவாதி அனைத்தையும் அறிந்தவள். எனவே குறை உள்ள ஒரு உயிரினத்தை நிறைவான ஒரு மனிதன் காயப்படுத்த மாட்டான் என்று நான் கண்டுபிடித்த தத்துவத்தின் மூலம் எனக்குள்ளேயே “அவளை மனம் நோகப்பண்ண மாட்டேன்” என்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன்.

அவளுக்கும் எனக்கும் சின்னச்சின்ன விஷயங்களிலெல்லாம் போட்டி இருந்தது. சின்னச்சின்ன விஷயங்கள் என்று சொல்வதைவிட உப்புச்சப்பில்லாத விஷயங்கள் என்று சொல்வதுதான் சரி. எப்படிப்பட்ட விஷயங்களுக்குப் போட்டி போடுவது என்று விவஸ்தையே இல்லாமலே போட்டிபோட்டுக்கொண்டிருந்தோம். அவளிலும் பார்க்க எனக்கு சிறிது ஐ.கியூ கூடுதலாக இருக்கிறது என்றே நம்புகின்றேன். எங்கு எப்படி அவளை அடிக்கலாம் என்று புரிந்து வைத்திருந்தேன். எனது சத்யபிரமாணம் அவ்வப்போது மறந்து போகும். ஐம்பதை எட்டிக்கொண்டிருக்கும் இருவருக்கிடையிலும் யாருக்குக் குறைவாக நோய் என்பதில் போட்டி. “நாரி சரியாக நோகுது” என்று அவள் சொன்னால், “நான் நல்ல ஃபிட்” என்று நான் சொல்வேன். “எனக்கு இண்டைக்கு டொக்டரிடம் அப்பொன்ட்மென்ட்” என்று நான் சொன்னால் அவள் கண்கள் மின்ன முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு “உடம்புக்கு என்ன என்பாள்”, அவள் உள்ளம் வேண்டுவது ஏதாவது ஒரு கொடிய நோயைத்தான் என்று எனக்குப் படும், நான் மிக இயல்பாக முகத்தை வைத்து, மார்பகத்தில் தட்டுப்படும் கட்டியால் ஒருகிழமையாகத் தொலைத்த நித்திரையையும் மறைத்து “சும்மா ஒரு செக்கப்” என்பேன். மதியநேரம் சாப்பாட்டு வேளையில் யார் என்ன சாப்பாடு என்பதிலும் போட்டி. மிளகாய்த்தூள் உடம்புக்குக் கூடாது என்பாள் அவள். எங்கள் மசாலாப் பொருட்கள் மேல் மோகம் கொண்டுதான் ஐரோப்பியர்கள் எமது நாட்டைக் கைப்பற்றி ஆண்டார்கள் அது தெரியுமா உனக்கு என்று அவளை நான் மடக்குவேன். உங்கள் உணவு எந்தவிதமான உப்புச்சப்பும் இல்லாமல் இருக்கிறதே எப்படித்தான் சாப்பிடுகின்றீர்களோ என்று அலுத்துக் கொள்ளுவேன். என் அதிரடிகள் தாங்காது அவள் மௌனமாவாள். எனக்கும் கவலையாக இருக்கும். வாழ்க்கையில் என் கணவன், குழந்தைகளோடு செலவிடும் நேரத்தைவிட அவளோடு நான் செலவிடும் நேரமே அதிகம். அவளோடு சுமூகமான உறவு ஒன்றை மேற்கொள்வதை விடுத்து எதற்காக இத்தனை காழ்ப்புணர்வு.

எங்கள் கணவர்கள் பற்றியும் எங்களுக்குள் போட்டி. இந்த விடையத்தில் நான் கொஞ்சம் “வீக்”. என் முற்போக்குப் பெண்ணியச்சிந்தனை என்பனவற்றில் உணர்ச்சிவசப்பட்டு என் கணவனின் அதிகார குணம் பற்றிப் போட்டு உடைத்து விட்டேன். அவள் நிதானமாக ஒரு சம்மனசுபோல் புன்னகைத்தபடியே “என் கணவன் மிகவும் நல்லவர். அவரைப் போல ஒரு நல்ல கணவன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கின்றேன். நான் வாழ்வில் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். நான் மிகவும் அதிஷ்டசாலி, அதிஷ்டசாலி” என்றாள் கண்களை மயங்குவது போல் மூடி மூடித் திறந்து. எனக்கு யாரோ அம்மிக்குளவியைத் தலையில் தூக்கிப் போட்டதுபோல் இருந்தது.
எந்த ஒரு சூழ்நிலையிலும் உனது குடும்ப அங்கத்தவரைப் பற்றிக் குறைகூறாதே. எல்லா வீட்டின் அலுமாரியிலும் எலும்புக்கூடுகளே உள்ளன, ஆனால் ஒருவரும் கதவைத் திறந்து காட்டப் போவதில்லை. உண்மை பேசுகின்றோம், நேர்மையாக இருக்கின்றோம் என்று முட்டாள் தனமாக உன் அலுமாரியின் எலும்புக் கூடுகளை வெளியே எடுத்துப் போடாதே. எனது சகோதரியின் கூற்று என் மண்டையில் தட்டியது.

சில கிழமைகளுக்கு முன்புதான் ஒரு வெள்ளிக்கிழமை நான் தொலைபேசி மூலம் ஆங்கில நாடகம் ஒன்றிற்கான பற்றுச்சீட்டுப் பதிவு செய்த போது ஒட்டுக் கேட்டவள் போல், நான் தொலைபேசியை வைத்தவுடன் என் அருகில், மிக அருகில் வந்து “எங்கே போகின்றாய்?” என்றாள். “வேலை முடிய நாடகம் ஒன்றிற்குப் போகப் போகின்றேன் வெள்ளிக்கிழமைகளில் பத்து டொலருக்கு டிக்கெட் கிடைக்கும் நீயும் வருகின்றாயா?” என்று கேட்டேன். அதிர்ந்தவள், “தனியாகவா போகின்றாய்?” என்றாள். “ஓம்” என்ற எனது பதில் அவளுக்கு மேலும் அதிர்சியைத் தந்திருக்க வேண்டும், “உன் கணவன் இதற்கெல்லாம் சம்மதிப்பாரா?” என்றாள்.

“அனுமதி கேட்டால் சம்மதம் கிடைக்காது, அறிவித்து விட்டுப் போகப் போகின்றேன்” என்றேன். அவள் முகம்; சுருங்கிக் கொண்டது. “என் வீட்டில் ஒரு கொலையே விழும் என்றாள்”. அங்கொங்கும் இங்கொங்றுமாக அவளுடனான உரையாடல்களில் இருந்து சேகரித்ததகவல்களின் படி “இப்பிடி ஒரு அருiமாயன(நல்ல) கணவனை அடைய நான் கொடு;த்து வைத்திருக்க வேண்டும்” என்ற “டயலாக்” இற்குச் சிறிதும் பொருந்தாதவர் அவள் கணவன் என்பது என் அனுமானம். இன்று அனைத்தையும் மறந்து தன் கணவனை உயரே உயர்த்திச் சுழற்றுகின்றாள்.

தான் அதிஷ்டசாலி, அதிஷ்டசாலி என்று அவள் கூறியதைத் தொடர்ந்து என் முகம் போன போக்கில் நான் பெரியதொரு தாக்குதலுக்கான வார்த்தைகளைச் சேகரிக்கின்றேன் என்று அவள் ஊகித்துக் கொண்டவளாய் உடனேயே அந்த இடத்திலிருந்து விலகிக் கொண்டாள். என் மனம் பாம்புபோல் சீறிக்கொண்டிருந்தது.

“ப்பிச்” வாயுக்குள் முணுமுணுத்துக் கொண்டு இனிமேல் இவளோடு நான் சேரப்போவதில்லை என்று அருவரிப்பிள்ளைகளைப் போல் முடிவெடுத்துக் கொண்டேன். அன்று மீதியிருந்த நாட்களில் வேலையில் என் மனம் ஓடவில்லை. இவளை ஏதாவதொரு வழியில் தாக்கிவிடவேண்டும் என்று என் மனம் திட்டம் போட்டது. அவ்வப்போது என்ன ஆச்சு உன் சத்தியபிரமாணம்? என்று என் சாத்தான் மனம் அடித்துக்கொள்ள, அவளைத் தாக்குவதென்று முடிவெடுத்த பின்னர் அதனைச் சரியென்று சரிப்படுத்துவதற்கான காரணத்தை என் மனம் தேடித் தேடிக் களைத்துப் போனது. கோவத்தால் கனைத்துக் கொண்டிருந்த மனதோடு அன்றைய நாள் முழுக்க அநியாயமாகிப் போக இதன் மிகுதியை வீட்டிற்கும் இழுத்துச் சென்று கணவர், குழந்தைகளிடமும் சீறப் போகின்றேன்.

அதன் பின்னர் அவளைத் தவிர்த்து ஆனால் அவளின் காதுகளில் படும்படி, என் கணவர் எனக்காகச் சாப்பாடு கட்டித்தந்திருக்கின்றார், இன்று நான் போட்டிருக்கும் உடை என் கணவர் எனக்காக வாங்கி வந்தது, நேற்று வேலையிலிருந்து வீட்டிற்குச் சென்ற போது இரவு உணவு மேசையில் மெழுகுதிரி சகிதம் இருந்தது, அருகில் பூக்கொத்து வேறு என்று இல்லாத கற்பனையில் எனது ஒண்டுக்கும் உதவாத கணவனை மற்றவர்களுக்குப் புழுகித் தள்ளிக்கொண்டிருந்தேன். அவர்களும் ஆ.. ஓ.. என்று என் சந்தோஷத்தில் பங்கெடுத்துகொண்டார்கள். “அப்படி என்ன அற்புதம் அவருக்கு நீ செய்து விட்டாய்?” என்ற கேள்வி வேறு, நான் பொய்யாக வெட்கப்பட்டுக் கொண்டேன். சுஷானிக் வாயுக்குள் சிரித்துக் கொள்கின்றாளோ என்ற சந்தேகம் அடிக்கடி எனக்குள் வந்து போகாமலில்லை. என் சின்னத் தனம் என்னைக் கேலி செய்தது. உன் பெண்ணியம் இதுதானா என்ற கேள்வி அடிக்கடி என் மனதுக்குள் எழாமலில்லை.

தொடர்ந்து வந்த நாட்களில் அவளோடு வழமைபோல் நேரத்தைச் செலவிட்டாலும் இருவருக்குமிடையில் ஒரு மௌனப்போர் நிகழ்ந்துகொண்டிருப்பது உணரமுடிந்தது. தாக்குதல் எதிர்த்தாக்குதல் என்று அகோரமாகப் போய்க்கொண்டிருந்தன நாட்கள். அவள் ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்குத் தவறாமல் கோயிலுக்குப் போய் வருவாள் என்பதை அறிந்து கொண்டு “நீ எதற்காகக் கோயிலுக்குத் தவறாமல் போகின்றாய்?” என்று கேட்டு வேண்டுமென்றே அவளை வம்புக்கிழுத்தேன். “என்ன நீ தெரியாத மாதிரிக் கேட்கின்றாய்? நீ எதற்காக உங்கள் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்கின்றாயோ அதே போல்த்தான் நானும் எங்கள் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்” என்றாள். “நான் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்வதாக யார் உனக்குச் சொன்னார்கள்?” என்றேன். மௌனமானாள். குழம்பியநிலையில் என்னைப் பார்த்தாள். ஒரு பெண், ஒரு மனைவி, ஒருதாய், கோயிலுக்குப் போகாமலிருப்பது எவ்வளவு சாத்தியம் என்பது அவளது கற்பனைக்கு எட்டாவிடையம். கண்கள் கொஞ்சம் பனித்திருக்க (என் கற்பனையோ என்னவோ) “நீ உங்கள் கோயிலுக்குப் போய்ப் பிரார்தனை செய்வதில்லையா?” என்றாள். இல்லை என்பதாய் நான் தலையசைத்தேன். “அப்ப வீட்டிலா பிராத்திக்கின்றாய்? கோயிலுக்குப் போய்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லைத்தான்” என்றாள் மிகவும் புரிந்துணர்வு கொண்டவள் போல். “நான் பிரார்த்திப்பதே இல்லை, எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, நான் ஒரு நாஸ்த்திகை” என்றேன். அதிர்ந்து போய் நம்பிக்கையின்மையோடு என்னைப் பார்த்தாள். நான் பெருமையாய்ச் சிரித்தேன். அவள் கண்கள் சாந்தமாக மிளிர்ந்தது. மீண்டும் ஒரு சம்மனசு போல்க் காட்சியளித்தாள். பாவப்பட்ட என்னை கடவுள் மன்னிப்பார் என்பது போல் அவள் பார்வை இருந்தது. “ஆண்டவன் அனைவரையும் மன்னிக்கும் அற்புதம் கொண்டவர், சொர்க்கம், நரகம் இரண்டில் எதற்குப் போகப் போகின்றோம் என்பதை நாங்கள் இப்போது பூமியில் வாழும் போதே தீர்மானித்து அதற்கேற்ப எமது வாழ்வை ஒழுங்குபடு;த்திக் கொள்ளுதல் வேண்டும், செய்யும் தவறு...” அவள் முடிக்கு முன்பே குறுக்கிட்டு “தற்போதைய வாழ்க்கையை நரகமாக்கி நான் இறந்த பின்னர் சொர்க்கம் போக வேண்டிய அவசியம் எனக்கில்லை, அதிலும் பார்க்க இப்போது சொர்க்கத்தை அனுபவித்து விட்டு, இறந்த பின்னர் நான் நரகத்திற்கே போய்க் கொள்கின்றேனே, இருந்தாலும் எனக்கு சொர்க்கம், நரகம், அதிலும் நம்பிக்கை இல்லை” என்றேன். தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.

அதன் பின்னர் அவள் என்னை முற்றாகத் தவிர்த்து மற்றய பெண்களோடு நெருங்கிச் செல்வது புரிந்தது. என் ஐ.கியூ மேல் எனக்கே சந்தேகம் எழுந்தது. அவள் என்னைத் தவிர்த்து, மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு எனது நாஸ்திகம் பற்றி வம்பு பண்ணுகின்றாள் என்று வேண்டாத கற்பனை எனக்குள் விஸ்வரூபம் எடுத்தது. நானறிந்து எனது அலுவலகத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஒருவருமில்லை. அந்தப் பேச்சுக்கே அங்கே இடமிருக்கவில்லை. வேண்டுமானால் உன்னுடைய கடவுளிலும் விட என்னுடைய கடவுள் மேல் என்ற விவாதத்திற்கு இடமிருக்கலாம்.

தொடர்ந்த நாட்களில் வெறும் காலை வணக்கத்தோடு எமது நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

2009ம் ஆண்டு பங்குனி மாதத்தில் ஒருநாள், குளிரோடு, சிறிது பனியும் வடிந்து கொண்ருந்தது. தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள் அனைத்திலும் ஈழப்பிரச்சனை முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருந்த நாட்கள் அவை. வேலை நேரத்தில் முடிந்தவரை மின்கணனியில் எமது நாட்டு நிலவரம் பற்றி அறிந்து கொண்டிருந்தேன். ஈழ மக்களின் நேரடிப்பாதிப்புக்கள் ஒளிநாடாக்களில் பார்க்க நேரிடுகையில் எழும் உணர்வைப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் வேண்டா வெறுப்பாக அலுவலக வேலைளை அளைந்து கொண்டிருக்கும் கண்களும், கைகளும். எனது அலுவலகத்தில் இலங்கையர்கள் ஒருவரும் இல்லாததால், மனம் சோர்ந்து போகும் பொழுதுகளின் நண்பர்களுடன் தொலைபேசியில் மட்டுமே உரையாட முடிந்தது.

அன்று எனது அலுவலகம் அமைந்திருக்கும் பெருஞ்சாலையில் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது கை கோர்த்து, பாதாகைகள் தூக்கி “எமது தலைவர் பிரபாகரன், எமக்கு வேண்டும் தமிழீழம்” என்று கோஷம் போட்டபடியிருந்தார்கள். நான் தலையைக் குனிந்த படியே அலுவலகத்திற்குள் நுழைந்து எனது இருக்கையில் இருந்த பின்பும் பல மணிநேரமாக எனது பதட்டம் குறையவில்லை. பதட்டத்திற்கான காரணம் புரியவில்லை. நான் என்றும் உணராத நெஞ்சின் நெருடல் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. வெட்கமா? கவலையா? இயலாமையா? அவமானமா?.

மின்கணனியை அழுத்;திவிட்டு வெறுமனே இருந்தேன். சுஷானிக் வேகமாக வந்தாள். எனது தோளைத் தொட்டாள். “உனது நாட்டில் என்ன பிரச்சனை?, ஏன் உன் நாட்டு மக்கள் கோஷம் போடுகின்றார்கள்?, நீ இது பற்றி ஒருநாளும் கதைத்ததில்லையே..” அவள் கேள்வி தொடர்ந்து கொண்டேயிருந்தது. நான் அப்போதிருந்த மனநிலையில் உரையாடலைத் தவிர்க்க எண்ணி, “நீ தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்து அறிந்து கொண்டிருப்பாய் என்று நினைத்தேன்” என்று கூறிவிட்டு எனது வேலையில் கவனம் செலுத்துவது போல் பாவனை செய்தேன். “நீ ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை?, மேலதிகாரியிடம் சொல்லி விட்டு ஒரு மணித்தியாலம் ஆவது போய் வரலாம் தானே” என்றாள். எனக்குள் சினம் எழுந்தது. என் அப்போதான மனநிலை அவளோடு போட்டி போடவோ, விவாதம் பண்ணவோ சுமூமாக இயங்கவில்லை. இல்லை என்பது போல் வெறுமனே தலையை அசைத்தேன். அவளும் விடுவதாயில்லை “ஏன்?” என்றாள். கண்களில் சினம் பொங்க “ உனக்கு எங்கள் நாட்டு அரசியல் பற்றி என்ன தெரியும்? என்றேன். அவள் மீண்டும் சாந்தமாகக் “கோவிக்காதே ஏதோ கொஞ்சம் விளங்குகின்றது, உன்னில் இருக்கும் அக்கறையில்தான் கேட்கின்றேன், அங்கே வெளியில் அந்தக் குளிருக்குள் நிற்பவர்கள் உன் மக்கள் தானே?, உன் இனம் தானே?, அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை உனக்கும் உள்ளதுதானே? கதவைத் திறந்து கொண்டு வெளியில் இறங்கினால் நீயும் அவர்களில் ஒருத்தி, பின்னர் ஏன் கலந்து கொள்ளாமல் இங்கே நிற்கின்றாய்? என்றாள். நான் என்னைச் சாந்தப்படுத்திக்கொண்டு “எனக்கு அவர்கள் அரசியலோடு ஒத்துப் போவதில்லை, அவர்கள் செய்யும் போராட்ட முறை எனக்குப் பிடிக்கவில்லை, எமது மக்களுக்கான தலைவர் என்று குறிப்பிடும் அவரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றேன். அவள் மௌனமானாள். காலம் நேரம் பார்க்காமல் ஒரு பெரும்தாக்குதலுக்கு அவள் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தாள். கண்களைச் சுருக்கி என்னைச் சிறிது நேரம் பார்த்தாள். பின்னர் குரலைச் செருமிச் சரிப்படுத்திவிட்டு, நிதானமாக “நீ உனது கணவருக்குத் தெரியாமல் சிலவற்றைச் செய்யும் போது எனக்குள் சந்தேகம் இருந்தது, பின்னர் கடவுள் நம்பிக்கையில்லை என்றாய் அதையும் ஒருமாதிரித் தாங்கிக்கொண்டேன், ஆனால் இப்போது உனது மக்களுக்காக முதியவர்கள், சிறுவர்கள் என்று குளிருக்குள் நின்று வாடுகின்றார்கள் இப்போதும் உன் விதண்டாவாதத்தை நீ விடவில்லை. உனது மக்களுக்காகச் சிறிது நேரம் குளிருக்குள் நிற்க உன்னால் முடியவில்லை, உனது மக்களின் பாதுகாப்பிற்காக உன்னால் கடவுளிடம் இரங்கி வேண்ட முடியில்லை. நீயெல்லாம் ச்சீ.. நீ நரகத்திற்குப் போவது நிச்சயம்” பொரிந்து விட்டு தனது இருக்கையை இழுத்து என்னிலிருந்து மிகத் தூரத்தில் முடிந்தவரை தன்னை இருத்திக் கொண்டாள். ஒரு முழுமையான அதிர்வோடு, உடல்விறைக்க நான் அசையாது இருந்தேன்.

நன்றி “காலம்”
கறுப்பி.
...மேலும்

Oct 30, 2010

புதுமைப்பித்தன் முன்மொழியும் ‘கற்பு’
’’கண்ணகி உருவில் வீர வணக்கம் செய்யப்பட்ட கற்பை மணிக்கொடி எழுத்தாளர்கள் கேள்விக்கு உட்படுத்தினர்’’
என்று மார்க்சீய விமரிசகரான திரு கேசவன் குறிப்பிடும் கருத்து , அக் காலகட்ட எழுத்தாளர்கள் வேறெவரையும் விட - தமிழ்ச் சிறுகதையின் பிதாமகராகப் போற்றப்பட்ட புதுமைப்பித்தனுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.

‘அமுக்கப்பட்ட மக்களின் குர’லாகவே சிறுகதை என்ற இலக்கிய ஊடகத்தைக் கையாண்ட புதுமைப் பித்தன் , கற்பு என்ற வாழ்க்கை மதிப்பால் பலவகை அழுத்தங்களுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் குரலைத் தன் படைப்புக்கள் பலவற்றிலும் ஒலிக்க விட்டிருப்பதோடு அக் கருத்தாக்கத்தின் அனைத்துப் பரிமாணங்களையும், அது சிக்கலாக்கும் வாழ்க்கைக் களங்கள் பலவற்றையும் தன் படைப்புக்களில் விரிவும்,ஆழமுமாக விமரிசித்திருக்கும் போக்கு , தனித்துவம் மிக்கது. இவ் வகையில் அவரது சமகாலப் படைப்பாளிகளிடம் மட்டுமன்றி அவருக்குப் பின்வந்த படைப்பாளிகளிடம் கூடக் காண இயலாத வேறுபட்ட நோக்குநிலை கொண்டவராகவே புதுமைப் பித்தனைக் காண முடிகிறது.

’’என்னமோ கற்பு,கற்பு என்று கதைக்கிறீர்களே !
இதுதான் ஐயா பொன்னகரம் !’’
என்று உரத்த பிரகடனம் செய்யும் ‘பொன்னகரம்’,
 இதிகாச மீட்டுருவாக்கம் செய்து அகலிகையை மீண்டும் கல்லாக்கும் ‘சாப விமோசனம்’ முதலிய - பரவலாக அறியப்பட்ட புதுமைப்பித்தனின் கதைகளில் மட்டுமன்றிப் பொதுவான வாசிப்புக் கவனத்தை அதிகம் பெற்றிராத அவரது பல சிறுகதைகளிலும் கூடக் ’கற்பு கற்பு என்று கதைப்பவர்’களின் கதையை ..அவ்வாறு அவர்கள் கதைப்பதிலுள்ள முரண்பாடுகளை எவ்வித சமரசமுமின்றி வெளிச்சத்துக்குக் கொணர்ந்திருக்கிறார் புதுமைப் பித்தன்.

’இந்தக் கற்பு , காதல் என்று பேத்திக் கொண்டு இருக்கிறார்களே ...அதெல்லாம் சுத்த ஹம்பக்...சுத்தப் பொய். மனிதன் எல்லாவற்றையும் தனது என்று ஆக்கிக் கொள்ள ஆசைப்படுகிறானே அதில் பிறந்தவை. தன் சொத்து,தான் சம்பாதித்தது,கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது தனக்கேஇருக்க வேண்டுமென்ற ஆசை........தனக்கில்லாவிட்டால் , தனது என்று தெரிந்த , தனது இரத்தத்தில் உதித்த குழந்தைகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறான்.பெண்கள் தங்கள் இஷ்டப்படி இருந்தால் அது எப்படி முடியும் ? அதற்குத்தான் கல்யாணம் என்ற ஒன்றை வைத்தான்.பிறகு தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்துவிடக் கூடாது என்பதற்குக் கற்பு என்பது பெருமை என்று சொல்லி வேலி கட்டினான்’’
-கற்புக் கோட்பாட்டின் தோற்றுவாயைப் பற்றித் தான் உள்வாங்கிக் கொண்டிருக்கும் சமூகவியல் கருத்தைத் தனது ‘இரண்டு உலகங்கள் ‘என்ற  சிறுகதையில் இவ்வாறு மிக எளிமையாகவும் ,அங்கதப் போக்குடனும் முன்வைக்கிறார் புதுமைப் பித்தன்.

ஆண்மை’ என்ற அவரது படைப்பில் நான்கு வயது சீமாச்சுவுக்கும், இரண்டு வயது ருக்மணிக்கும் பொம்மைக் கல்யாணம் நிகழ்கிறது.மணமக்கள் சேர்ந்து வாழ்வதற்குரிய வயது வரும் முன்பே இரு குடும்பத்துக்கும் பகை ஏற்பட்டுவிட, ’வயதுக்கு வந்து விடும்’ ருக்மணி , சீமாச்சுவுடன் இணைய முடியாத நிலை ஏற்படுகிறது.பெற்றோர் அறியாமல் ஒருநாள் இருவர் சந்திப்பும் நிகழ்ந்துவிட , ருக்மணி கருவுறுகிறாள்.அதுநாள் வரை வாழாவெட்டியாகத் தூற்றப்பட்ட அவள் இப்போது கற்புத் தவறியவளாகப் பழிக்கப்படுகிறாள்.கணவன் அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளத் துணியாத நிலையில் அந்தப் பெண் சித்தப் பிரமை பிடித்தவளாகிறாள்.
கருவுக்குக் கணவனே காரணமான நிலையிலும் கற்புத் தவறியவளாய்ப் பெண் சித்தரிக்கப்படும் விசித்திரப் போக்கை இதன் வழி காட்சிப்படுத்துகிறார் புதுமைப் பித்தன்.

இளமை மணமும்,அதன் உடனிகழ்வான விதவைக் கொடுமையும் பல்கிப் பெருகியிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் புதுமைப் பித்தன்.இளம் விதவையின் இயல்பான உணர்ச்சிகளும்,தேவைகளும் கற்பின் பெயரால் மறுக்கப்பட்டு அவள் கழுவேற்றப்படும் கொடுமைகளை ‘வாடா மல்லிகை’ , ‘வழி’ ஆகிய அவரது சிறுகதைகள் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன.
‘’சதிக்கொடுமை பெண்ணுடலை ஒரேயடியாக எரிக்கிறது; விதவைக் கொடுமையோ நாளும் நாளும் அவளைச் சித்திரவதைக்கு ஆளாக்குகிறது’’ என்று குறிப்பிடும் மார்கரெட் கோர்மெக் என்ற சமூகவியலறிஞரின் கருத்தையே அலமி என்னும் தனது பாத்திரத்தின் நினைவோட்டமாகப் பின்வருமாறு வெளியிடுகிறார் புதுமைப் பித்தன்.
‘’இந்த வெள்ளைக்காரன் ஒரு முட்டாள். சதியை நிறுத்திவிட்டதாகப் பெருமையடித்துக் கொள்கிறான்.அதை இந்த முட்டாள் ஜனங்கள் படித்துவிட்டுப் பேத்துகிறார்கள்.முதலில் கொஞ்சம் துடிக்க வேண்டியிருக்கும்.பிறகு...?ஆனால் வெள்ளைக்காரன் புண்ணியத்தால் வாழ்க்கை முழுவதும் சதியை ...நெருப்பின் தகிப்பை அநுபவிக்க வேண்டியிருக்கிறதே! வைதவ்யம் என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியுமா ?ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பாகத் தகிக்கும் சதியல்லவா வைதவ்யம்..?’’

சாத்திர சம்பிரதாயங்களின் பெயரால் விதவைப் பெண்ணின் இயல்பான பாலியல் விருப்பங்கள் பலியிடப்படுவதையும்,அவளுக்குத் தியாகி என்ற பட்டம் சூட்டுவதற்கே அவை பயன்படுவதையும் தனது சிறுகதைகளில் கடுமையான விமரிசனத்துக்கு உட்படுத்துகிறார் புதுமைப்பித்தன்.

 விதவையான தன்னை மறுமணம் புரிந்துகொள்ள ஓர் ஆடவன் முன்வந்தபோதும் அவனோடு தன்னைப் பிணைத்துக் கொள்ள மறுத்துவிட்டு ‘இயற்கையின் தேவை’க்காக மட்டுமே அவனது உறவை நாடுகிறாள் ’வாடாமல்லிகை’சிறுகதையின் சரசு.
பொருந்தா மணச் சிறையில் அகப்பட்டுக் கொண்டு ஒரு கிழவனிடம் தன் இளமையைப் பறி கொடுத்த கலியாணி(’கலியாணி’),தன்னை ஏற்க முன் வரும் ஒருவனோடு பிறரறியாமல் பழகுவதில் ஆர்வம் காட்டுகிறாளேயன்றி மரபுகளை மீறி அவனுடன் ஓடிப் போவதில் தயக்கம் காட்டி மறுத்து விடுகிறாள்.
‘மூடுண்ட ஒரு சமூக அமைப்பில் இத்தகைய பெண்கள் தம் பாலியல் தேவைகளை வெளிப்படையான - அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூக உறவின் மூலம் நிறைவேற்றுகின்ற உரிமையைக் கோரிப் பெறுகின்ற அளவுக்கு பலமாக இல்லை’என்பதால் ‘இயற்கையின் தேவையைக் கூட மறுக்கும் இலட்சியவாதத்தை இவர் பெண்கள் முன் வைக்கவில்லை’என்று புதுமைப்பித்தனைப் பற்றித் திறனாய்வாளர்கள் குறிப்பிடுவது பொருத்தமானதே.

‘கற்பு’ , ‘தியாகம்’ என்ற மதிப்பீடுகளை எச் சூழலிலும் கைவிடாதவர்களாக இல்லாமல்..உயிரும்,உணர்ச்சிகளும்,பலவீனங்களும் கொண்ட இயல்பான மனிதர்களாக மட்டுமே பெண்களைக் காட்டும் யதார்த்த வாதப் போக்கே புதுமைப்பித்தனுடையது.
‘’இந்த இரத்ததை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ’’என்று கூறியபடி உயிர் துறக்கும் விதவை அலமியும்(’வழி’),
‘’நான் பரத்தையன்று பெண்! இயற்கையின் தேவையை நாடுகிறேன்’’ என்று கூறிக் கிணற்றில் விழுந்து உயிரை மாய்க்கும் சரசுவும்(’வாடாமல்லிகை’)
கற்பின் பெயரால் பெண்ணின் வாழ்வுரிமையை மறுக்கும் சமூகப் பொதுப் புத்தியின் மீது சாட்டையடிகளை வீசியெறிந்திருப்பதை எவராலும் மறுக்க இயலாது.

கற்புக் குறித்த சமூக அளவுகோல் பால்பேதமுடையதாக இருப்பதையும் அவர் எடுத்துக் காட்டத் தவறவில்லை.
ஒப்பந்தம்’என்னும் அவரது சிறுகதை ஒன்றில் நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்துவிட்ட பார்வதிநாதனுக்குப் பெருந்தொகையுடனும்,நகையுடனும் கூடிய வரதட்சிணையுடன் திருமணம் முடிவாகிறது.திருமணம் நிச்சயமான களிப்பில் - புதுவகை உணர்வும்,’இயற்கையின் தேவை’யும் தூண்ட ‘இரண்டு மணி நேரத்துக்கு ஐந்து ரூபாய்’ என்ற பேரத்துடன் ஒரு பெண்ணிடம் தன் பொழுதைச் செலவிடுகிறான் அவன்.
இயல்பான மண உறவுக்கு வரதட்சிணை பெறும் ஆடவன்,முறையற்ற உறவுக்குத் தன் கைப் பொருளைச் செலவிடும் முரண்பாட்டை..
‘’அந்த சிங்கி குளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும்பொழுது,ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் சரிதானே’’(’ஒப்பந்தம்’)என்று தனது வழக்கமான அங்கதப்போக்கில் எள்ளலாக்குகிறார் புதுமைப்பித்தன்.

பெண்ணின் வாழ்வில் கற்புக் கோட்பாடு ஒரு சுமையாக..சிலுவையாக மாறிவிடுவதைத்தான் புதுமைப் பித்தன் எதிர்க்கிறாரேயன்றி அது ஒரு தனி மனித ஒழுக்க நெறி என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்தில்லை.
‘’கற்பு நிலை என்னவென்பது எனக்குத் தெரியும்.பிறர் புகுத்திக் கற்புநிலை ஓங்குவது அனுபவ சாத்தியமான காரியமன்று’’
என்று கற்புநிலை குறித்த தனது உறுதியான சிந்தனையைச்’சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்’எனப் பதிவு செய்கிறாள் சாவித்திரி என்னும் அவரது ஒரு பாத்திரம்(’இந்தப்பாவி’)

ஆண் - பெண் ஆகிய இரு பாலார்க்கும் ‘கற்பு’ என்பது மனம் சார்ந்த ஓர் அறம் மட்டுமே என்பதிலும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதென்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதிலும் புதுமைப்பித்தன் கொண்டிருந்த தெளிவே மேற்காணும் வரிகளில் வெளிப்படுகிறது.

பெண்ணின் தனிமனித வாழ்வுரிமையை மறுக்கும் மரபுவழிச் சிந்தனைகளை மறு விவாதத்துக்கு உட்படுத்திய புதுமைப்பித்தன் அவற்றுக்கு இதுதான் மாற்று என்பதை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வாசகர்களின் சிந்தனையைப் புதுமையான முற்போக்குத் தளத்தின்பால் நகர்த்துவது மட்டுமே அவரது நோக்கமாக இருந்திருக்கிறது.இதுவே புதுமைப் பித்தன் என்ற கலைஞனின் வெற்றியுமாகிறது.

...மேலும்

Oct 29, 2010

கொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக்குமார்


பெண் ஒருவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லிக்கொள்ள முடியாதபடி உலக அரங்கில் இப்போது இந்தியா தலை குனிந்து நிற்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரிசாவில் நயாகார் என்ற ஊரில் ஒரு பாழுங்கிணற்றிலிருந்து நாற்பது பெண் குழந்தைகளின் சடலங்கள் மற்றும் எலும்புகளைப் போலீசார் கண்டெடுத்திருக்கிறார்கள். ஒரிசாவின் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து தொண்ணூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த ஊர் இப்போது ‘உலகப் புகழ்’ பெற்றுவிட்டது. அந்தப் பகுதியில் சுமார் முப்பது தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில்தான் அந்த பெண் குழந்தைகள் கொல்லப்பட்டு அந்தப் பிணங்கள் கிணற்றில் வீசப்பட்டிருக்க வேண்டுமெனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஐந்து மருத்துவமனைகளின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறியும் கருவிகளை அந்த மருத்துவமனைகளில் எவ்வித அனுமதியும் பெறாமலேயே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் பெண் சிசுக் கொலையில் முன்னணியில் நிற்கும் மாநிலங்களின் வரிசையில் ஒரிசா ஐந்தாவது இடம் வகிக்கிறது. அங்கே நகர்ப்புறத்தில் ஆயிரம் ஆண்களுக்கு எண்ணூற்று அறுபது பெண்கள்தான் உள்ளனர் என 2001 சென்சஸில் கண்டறிந்துள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வை கிராமப்பகுதிகளுக்கும் பரப்புவதற்கு ‘மொபைல் கிளினிக்’ என்கிற புதிய யுக்தியை அங்கே இப்போது கையாண்டு வருகின்றனர். கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சோதனைக்குப் பயன்படுத்தப்படும் ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ கருவியை மாருதி வேனில் வைத்து கிராமங்களுக்குக் கொண்டு செல்கின்றனர். வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்து பெண் குழந்தை எனத் தெரியவந்தால் உடனே கருக்கலைப்பு செய்யவும் அந்த வேனில் வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரிசாவின் கஜபதி மாவட்டத்தில் இந்த ‘மொபைல் கிளினிக்’ மிகவும் பிரசித்தம்.

2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண்களுக்கு தொள்ளாயிரத்து முப்பத்து மூன்று பெண்கள்தான் இந்தியாவில் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் அதிகரித்து வரும் பெண் சிசுக் கொலைகளே இதற்குக் காரணம். கருவில் உள்ள குழந்தை பெண்ணா ஆணா என்பதைக் கண்டறியும் கருவிகள் புழக்கத்துக்கு வந்ததனால்தான் பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து விடும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதன் பொருட்டே 1994ஆம் ஆண்டில் இத்தகைய பரிசோதனைகளை இந்திய அரசு தடை செய்து சட்டம் இயற்றியது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் ஒருகோடி பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டு விட்டதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் மருத்துவ இதழான ‘லான்செட்’ தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஏழாயிரம் பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவதாக யுனிசெஃப் அறிக்கை கூறியுள்ளது. 2011ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பெண் சிசுக்கள் கொல்லப்படலாம் என்றும் அந்த ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

பெண் சிசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இப்போது புதியதொரு திட்டத்தை இந்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. கருவுற்ற தாய்மார்கள் கட்டாயம் அரசாங்கத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதே அந்தத் திட்டம். கருவுறுகிறவர்கள் அனைவரும் குழந்தை பெறுகிறார்களா? அல்லது இடையில் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்களா? என்பதைக் கண்டறியவே இந்த முறையை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. முதலில் பத்து வட்டாரங்களைத் தெரிவு செய்து அங்கே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் அந்த வட்டாரங்களில் பிறக்கும் பெண் குழந்தை ஒவ்வொன்றுக்கும் ஏழாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுவதோடு ஒரு லட்ச ரூபாய்க்கு இன்ஷ்யூரன்சும் செய்யப்படும். அந்தப் பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அவற்றின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். அந்தக் குழந்தைகளுக்கு பதினெட்டு வயதாகும்போது மேலும் ஒரு சிறு தொகை வழங்கப்படும். நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 15 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக பெண்கள் மற்றும குழந்தைகள் நல அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறியிருக்கிறார். இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைப் பொருத்து இது நாடு முழுவதற்கும் விரிவு படுத்தப்படுமெனவும் அவர் கூறியிருக்கிறார்.

‘பெண்ணைத் தெய்வமாகப் போற்றுவதே நமது மரபு’ என்று கூறப்பட்டாலும் உண்மையில், பெண்ணை சுமையாக கருதுவதே நமது வழக்கம். இதற்கு வரதட்சணையே மிகவும் முக்கியமான காரணம் என்று சொல்லலாம். பெற்றோர்களோடு ஆண் பிள்ளைகளே கடைசிவரை இருப்பார்களென்பதால் வயதான காலத்தில் தம்மை கவனித்துக்கொள்ளப் போகிறவர்களென்ற நம்பிக்கையில் ஆண் பிள்ளைகளையே பெரும்பாலும் பெற்றோர்கள் விரும்புகின்றனர். பெண் குழந்தைகளுக்கு எதிராக ஊறிப்போயுள்ள இந்த மனோபாவத்தை மருத்துவர்கள் என்ற பெயரில் செயல்படும் சில கொள்ளையர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உயிரைக் காப்பதற்காகப் படித்த படிப்பை ‘கருக்கொலை’ செய்வதற்காக அவர்கள் உபயோகிக்கிறார்கள்.

பெண் சிசுக்கொலை என்ற வழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசிய நாடுகள் அனைத்திலும் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு 1979ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை திட்டம் பெண் சிசுக் கொலையை அதிகப்படுத்துவதில் சென்று முடிந்துள்ளதாக அந்த நாடே ஒப்புக்கொண்டிருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் திருமணத்துக்குப் பெண் கிடைக்காத பத்து லட்சம் இளைஞர்கள் சீனாவில் இருப்பார்களென செய்திகள் தெரிவிக்கின்றனஇ தற்போது சீனாவில் ஆண்களைவிடப் பெண்கள் பதினேழு சதவீதம் குறைவாக உள்ளனர். சில பிரதேசங்களில் இந்த இடைவெளி முப்பது சதவீதம் அளவுக்கு கூட இருக்கிறது.

பெண் சிசுக் கொலையில் சீனாவும், இந்தியாவும்தான் முன்னணியில் இருப்பதாகப் ‘‘பெண் குழந்தைகளுக்கான செயல்பாட்டு குழு’’ என்ற அமைப்பு குறை கூறியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அது வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது உலகில் நூறு மில்லியன் பெண்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அதில் எண்பது சதவீதம் பெண்கள் இந்தியாவிலும், சீனாவிலும் குறைவாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில், குழந்தை பிறப்பில் 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் என்ற நிலை காணப்படுகிறது எனக் குறிப்பிடும் அந்த அறிக்கை சீனாவில் 100 பெண் குழந்தைகளுக்கு 117 ஆண் குழந்தைகள்; இந்தியாவில் 100 பெண் குழந்தைகளுக்கு 120 ஆண் குழந்தைகள் என்ற நிலை இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவற்றோடு பாகிஸ்தான், பங்களாதேஷ், தைவான், தென்கொரியா, இந்தோனேஷியா, வியட்நாம் முதலான நாடுகளிலும் கூட பெண் சிசுக் கொலை வழக்கத்தில் இருக்கிறது. உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதி அளவு இந்த நாடுகளில்தான் உள்ளது. இவற்றில் ஏற்படும் பாலின ஏற்றத்தாழ்வு உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் எச்சரித்திருக்கிறார்கள்.

கருச்சிதைவு மட்டுமின்றி பெண் சிசுக் கொலைக்கு மேலும் பல வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. விஷம் கொடுப்பது, கழுத்தை முறிப்பது, பட்டினி போட்டுக் கொல்வது, கிணற்றில் வீசுவது போன்ற முறைகளைக் கையாண்டும் பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றன. மருத்துவமனைகளில் பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு இயற்கை மரணம் அல்லது இறந்து பிறந்ததாகச் சான்றிதழ் பெறும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது. உரிய பணத்தைக் கொடுத்தால் இப்படியான சான்றிதழ்களைத் தருவதற்கு மருத்துவர்கள் சிலர் தயாராக இருப்பதாகப் பெண் குழந்தைக்கான செயல்பாட்டுக் குழுவின் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா? என்பதைக் கண்டறிவதைத் தடை செய்யும் 1994 ஆம் ஆண்டு சட்டத்தில் 2003 ஆம் வருடத்தில் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். ஆண் குழந்தை பிறப்பதற்கு உத்தரவாதமளிக்கும் விளம்பரங்கள் அதன் மூலம் தடை செய்யப்பட்டன. இந்த சட்டத்தின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்வதற்கென 2005 ஆம் ஆண்டு தேசிய அளவில் கூட்டப்பட்ட கூட்டத்தில் எட்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. பெண் சிசுக்கொலையைத் தடுப்பதற்காக தேசிய அளவில் கண்காணிப்புப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துதல், பெண் குழந்தைகளின் பெருமையைப் பரப்பும் நபர்களுக்கு விருது வழங்குவது, மதத் தலைவர்களோடு கலந்தாலோசித்து பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் பிரச்சாரத்தில் அவர்களை ஈடுபடுத்துவது, 2010 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் ஆண் பெண் எண்ணிக்கை சமமாக இருப்பதற்காகப் பாடுபடுவது உள்ளிட்ட பரிந்துரைகள் அந்தக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன.

மாநில அளவில் ஆலோசனைக் குழுக்களை உருவாக்கவும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்களில் செய்யப்படும் பாலின நிர்ணய சோதனைகள் பற்றிய விவரங்களை இரண்டு ஆண்டுகள் வரை அழிக்காமல் வைத்திருக்க ஆணையிடவும், அப்போது தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவை சரிவர நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய அரசு இயற்றிய சட்டம் அமுலுக்கு வந்து ஒன்பது ஆண்டுகளான பிறகும் அந்த சட்டத்தின் கீழ் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என தெரிவித்தார். அந்த சட்டத்தின்கீழ் மார்ச் 2005 வரை நாடெங்கும் 303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும் எவரும் தண்டிக்கப்படவில்லை.

2006 மார்ச் மாதத்தில்தான் ஹரியானா மாநிலத்தில் நாட்டிலேயே முதன்முறையாக ஒரு டாக்டரும் அவரது உதவியாளரும் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டனர். இரண்டு வருட சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்பட்டன.

மத்திய சுகாதாரத்துறையில் இந்த சட்டத்துக்கான கண்காணிப்புப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ரட்டன் சந்த் பல மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டபோது மாநில அளவில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுக்கள் சரிவர செயல்படாதது தெரியவந்தது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட மாநில அளவிலான அமைப்புகள் போதுமான பணியாளர்கள் இன்றி செயலிழந்து கிடக்கின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார். ஆனால் இந்த நிலைமை மாற்றப்படவில்லைல.

நடைமுறை ரீதியான இத்தகைய சிக்கல்கள் ஒருபுறமென்றால், அறிவியல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் இன்னொரு புறம் பெரிய சவாலாக இருக்கிறது. கரு நன்கு வளர்ச்சியடைந்த பிறகே அது பெண்ணா, ஆணா என்று பார்க்க முடியும் என்ற நிலை இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. ஆனால் இப்போதோ மிக ஆரம்ப கட்டத்திலேயே கூட அதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். பாலினத்தை நிர்ணயிக்கும் இந்தப் பரிசோதனை முறையில் இப்போது மேலும் ஒரு ‘முன்னேற்றம்’ ஏற்பட்டிருக்கிறது. கருவுற்ற பெண்ணின் ரத்தத்திலிருந்து கருவின் அணுவைப் பிரித்தெடுத்து அதைக் கொண்டு அந்தக் கருவில் இருப்பது பெண்ணா ஆணா என்று கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த முறை புழக்கத்துக்கு வந்தால் பெண் சிசுக் கொலையை தடுப்பது மேலும் சிக்கலானதாகி விடும்.

பெண் சிசுக்கொலையைத் தடுப்பதற்கென தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தை பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியாவெங்கும் நடைமுறைப்படுத்தப்போவதாக அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறியுள்ளார். ஆனால், ‘‘பெண் சிசுக்கள் பெரும்பாலும் கருவிலேயே அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே தொட்டில் குழந்தை திட்டம் அதைத் தடுப்பதற்கு பெரிய அளவில் உதவிடாது’’ என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

பெண்களே உயிரைக் காப்பவர்கள், உயிரைச் சேர்ப்பவர்கள் என்று போற்றிய பாரதி ‘‘உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா’’ என்று பாடி மகிழ்ந்தார்இ ஆனால் அந்தப் பெண் குழந்தைகளைத் தான் நாம் கருவிலேயே அழித்துக் கொண்டிருக்கிறோம். ஒரிசாவில் நிகழ்ந்துள்ள பெண் சிசுக் கொலைகள் தேசிய அளவில் தினந்தோறும் நடக்கும் ‘இனப் படுகொலையின்’ அங்கம்தான். இதை ஒரு தேசிய அவமானமாக நாம் கருதவேண்டும். பெண் சிசுக் கொலையைத் தடுத்து நிறுத்தும் பிரச்சாரம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி : ஜூனியர் விகடன்
...மேலும்

Oct 28, 2010

கீப் என்பதை வைத்துக்கொள்ளலாமா ? - ரவிக்குமார்


திருமண பந்தத்துக்கு உட்படாமல், சேர்ந்து வாழும் ஆணும் பெண்ணும் பிரியும்போது, அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டுமா என்ற வழக்கை இந்திய உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது.அப்போது, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் டி.எஸ். தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டது.அதில், திருமணம் செய்துகொள்ளாமல், ஆண் ஒருவர் பெண் ஒருவருடன் உறவு வைத்திருக்கும் நிலையில், அந்த பெண்ணை '" கீப் " என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தி நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந் நிலையில், வெள்ளிக்கிழமை அதே நீதிபதிகள் முன்பு வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக, மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் ஆஜரானார். அப்போது, வியாழக்கிழமை தீர்ப்பின்போது, திருமணமாகாமல், ஓர் ஆணுடன் உறவு வைத்திருக்கும் பெண்ணை, வைப்பாட்டி என்று பொருள்படக்கூடிய, 'கீப்' என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியது கடும் ஆட்சேபத்துக்குரியது என்று இந்திரா ஜெய்சிங் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்தியாவின் உச்சநீதிமன்றம், 21-வது நூற்றாண்டில், பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு வார்த்தையை எப்படிப் பயன்படுத்த முடியும்? தான் ஒரு ஆணை வைத்திருப்பதாக ஒரு பெண் கூற முடியுமா என்று கேட்டார் இந்திரா ஜெய்சிங்.அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புவதாகக் கூறிய அவர், அந்த நீதிமன்றத்தின் முன் தான் ஆஜராக விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.ஆனால், தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்குத் தொடர்பாக மட்டும் பேசுமாறு கூடுதல் சொலிடர் ஜெனரலை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அறிவுறுத்தினார்.

அப்போது நீதிபதி தாகூர் குறுக்கிட்டு, 'கீப்' என்ற வார்த்தைக்குப் பதிலாக, ஆசைநாயகி என்ற பொருள்படும் கான்குபைன் என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தலாமா என்று இந்திரா ஜெய்சிங்கிடம் கேட்டார்.தனது ஆட்சேபம், வியாழக்கிழமை தீர்ப்பில் 'கீப்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு மட்டும்தான் என்று தெரிவித்த இந்திரா ஜெய்சிங் ஆசைநாயகி என்ற வார்த்தை கீப் என்பதைக்காட்டிலும் மோசமானது என்று பின்னர் தெரிவித்தார்.

பள்ளி ஆசிரியர் ஒருவர் குடும்ப நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட் செய்திருந்தார். அதை விசாரித்தபோதே உச்சநீதிமன்றம் இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டது. அந்த ஆசிரியர் தன்னைத் திருமணம் செய்துகொண்டார் எனவும் இப்போது தன்னைக் கைவிட்டுவிட்டார் எனவும் பெண் ஒருவர் குடும்ப நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அதை விசாரித்த குடும்ப நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு மாதம் ஐநூறு ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தது. தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது எனவும் எனவே தன்னால அந்த ஜீவனாம்சத் தொகையைக் கொடுக்க முடியாது என்றும் அந்த ஆசிரியர் கூறிவிட்டார்.

திருமண பந்தத்துக்கு உட்படாத ஆணும் பெண்ணும் பிரியும்போது, அவர்கள் இருவரும் குறிப்பிட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்திருந்தால்தான், அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. '" ஒரு ஆண் ஒரு பெண்ணை '"கீப் " ஆக வைத்துக்கொண்டு பாலியல் தேவைகளுக்காகவோ அல்லது வேலைக்காரியாகவோ அவரை பொருளாதார ரீதியில் பராமரித்துவந்தால் அதைத் திருமண உறவுக்கு இணையாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது " என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த ஆண்டுத் துவக்கத்தில் வேறொரு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறொன்றுமில்லை எனக் கூறியிருந்தது. திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை உச்ச நீதிமன்றம் பரிவோடு அணுகத் தொடங்கியிருப்பது இந்திய நீதித்துறையின் மனப்பாங்கில் ஏற்பட்டுவரும் மாற்றத்தையே வெளிப்படுத்துகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அணுகுமுறையை விமர்சித்திருக்கும் இந்திரா ஜெய்சிங் வழக்கறிஞர் மட்டுமின்றி புகழ்பெற்ற பெண்ணியவாதியும் ஆவார். சிரியன் கிறித்தவ பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பை புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் அம்மா மேரி ராயின் வழக்கில் வாங்கித் தந்தவர் இவரே. குடும்ப வன்முறைச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.

...மேலும்

Oct 27, 2010

அருந்ததி ராய் மீது மத்திய அரசு வழக்கு! கைது செய்யப்படலாம்!?


தேச விரோதமாகப் பேசியதாகக் கூறி பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி போலீஸுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

'கஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசுக்கும் இது தெரியும்' என தில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அருந்ததிராய் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே தேச விரோதமாகப் பேசியதாக கஷ்மீர் மாநில ஹுரியத் மாநாட்டு தீவிரப் பிரிவுத் தலைவர் சையத் அலி ஷா கிலானி மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி போலீஸாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தில்லியில் அண்மையில் நடந்த கருத்தரங்கில் கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய், மாவோயிஸ்டு ஆதரவு தலைவர் வரவர ராவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

காஷ்மீர் ஒருபோதும் ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்றும் இதுவே வரலாற்று உண்மை என்றும், இதனை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பிரிட்டிசாரின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா காலணியாதிக்க சக்தியாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

முன்னதாக, காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது குறித்து அருந்ததி ராய் ஆற்றிய உரை சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்


அங்கு தேச விரோதமாகவும் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் கருத்தரங்கில் பேசப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கான எத்தனிப்புகளை அரசு மேற்கொண்டவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருந்ததி ராய்க்கு இதுபோன்று சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக புத்தகம் மற்றும் ஆய்வு கட்டுரைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகவும் மேடைகளில் பேசியிருந்தார்.

அதேநேரத்தில் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்து தில்லி போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.

அருந்ததி ராய் மீது மேற்கொள்ளப்படும் அரசின் எந்த எதிர் நடவடிக்கைக்கும் எதிராக குரல் கொடுக்க நாம் தயாராக இருப்போம் தோழர்களே.
...மேலும்

Oct 26, 2010

வினோதினி கவிதைகள்


1.
சந்தித்தல்

சந்திப்பதற்கென
ஒரு நாளின் மாலையைத் தேர்ந்தேன்
கொஞ்சம் கவிதைகள்
கனிவூட்டும் இன்னிசை
காதலின் சுவை கலந்த தேநீர்
வாசனை தந்து வரவேற்க மலர்கள்
எல்லாம் ஆயத்தமாக.
அழகிய மாலைகளும்
கடிகாரமும் யாருக்காயுங் காத்திருப்பதில்லை
மஞ்சள் மாலை மெதுவாய்க் கறுக்க
மணலிற் பரவும் நீரெனப் பரந்தது இரவு
நிகழாது போன வருகையும்
பகிரப்படாத கவிதைகளும்
சொல்லப்படாத காதலும்
பருகப்படாத தேநீரும் வாடும் பூக்களோடு
ஒவ்வொரு அழகிய மாலையிலும்
எங்கோ ஒரு வீட்டின் தோட்டத்தில் கைவிடப்படுகின்றன.

2.

காலம் எதற்குங் காத்திராது நழுவுகிறது
நீண்ட பாதைகளில்
எதிர்ப்படும் மாந்தரில் எவரும்
அறிந்தவராயில்லை.
பயணங்களில்
கடக்கின்ற பிரதேசங்களின் தேசப் படங்களில்
முகவரி பற்றிய சந்தேகங்களுந் தீர்வதாயில்லை.
விரையும் வாகனத்தினூடு தென்படும்
ஊரோரக் குடில்
கையசைக்கும் சிறுமி
யாரோ கைவிட்ட ஒரு வீடு
வெளேரென்ற செம்மறியாட்டுக் கூட்டம்
சூரியகாந்திப் பூக்கள்
சிறு பழக் கடை என எல்லாமே
எப்போதோ விட்டுப் பிரிந்தவைகளையும்
அழிக்கப்படுகின்ற ஒரு வரலாற்றையும்
ஞாபகமூட்டுவதைத் தவிர்க்க முடிவதில்லை

3.

இலையுதிர் காலத்தில்
எதைப்பற்றி நீ கேட்கிறாய்?
யாராலும் எழுதி விட முடியாக் கவிதை போல்
இந்தக் காதலும் நிகழ முடியாதது.
இராமனின் சந்தேகங்கள் தின்ற சீதையின்
வழி நெடுகிலும் பூக்களா உதிர்ந்து கிடந்தன?
சற்றேனுந் தயக்கமின்றி
நீண்ட தனிமைக்குத் தயாராகின்றன
முற்றத்து மரங்கள்.
எதிர்ப்பின்றி இலைகள் விழுதலை விட
அழகாய் வேறென்ன இருக்கிறது?
இப்போதைக்கு
காதல் பற்றிய கலந்துரையாடலைத் தள்ளி வைப்போம்.

4.

முன்பு பச்சை
இடையில் மஞ்சள்
இப்போது செந்தழல் நிறமாகின்ற இலைகள்
மரத்தின் பொறுமை நம்மிடத்திலில்லையென்கிறாய்.
ஆனால்
நிறங்களை எப்போதாகினும் இரசித்ததுண்டா நீ

5.

அறை
மழை மாலை
மெல்லெனப் பரவுமிருள்.
வளரத் தொடங்கிய நிலவுத்துண்டு
ஓரிரு தாரகைகள்.
வானுயர்ந்த கட்டடங்கள்
ஒன்றிரண்டு நத்தார் விளக்குகள்.
மூங்கில் திரை கீழிறங்க
யாவும் மறைந்து போகன்றன
வெள்ளைச்சுவர்களின் மத்தியில்
அலமந்த கண்களுக்குக் காட்சிகள் பல.
களிமண் பிள்ளையார்
ஒர்கிட் தொட்டிகள்
புத்தக அலுமாரி
மழைக் காலணிகள்
ஆங்கிலம் மட்டுமே பேசும் வானொலி
வீட்டுக் கடிதங்கள்
பாட்டியின் முகச் சாயலோடு
ஆபிரிக்கப் பெண்ணின் புகைப்படம்
எனது துணைவனின் உடமைகள்
நமது கணனிகளென நிறைந்த அறையினுள்
நான் தனியே பேசுகிற
பைத்தியமென நினைப்பின்
எப்போதாயினும்
சந்திக்கும் வேளை
என் கண்களைப் பாருங்கள்.

நன்றி - மணற்கேணி
...மேலும்

Oct 25, 2010

நோர்வே படைப்புலகின் முதன் மூன்று பெண்கள் - பானுபாரதி


கமில்லா கொல்லற், அமாலியா ஸ்கிறம், சிக்றிட் உன்செத் நோர்வேயின் பிரதான பெண் படைப்பாளிகளான கமில்லா கொல்லற், அமாலியா ஸ்கிறம், சிக்றிட் உன்செத் ஆகிய மூவரும் வெவ்வேறு விதமான இலக்கிய சகாப்தத்திலிருந்து வருகிறார்கள். அவர்களது காலப்பகுதியில் மிகவும் பிரபல்யமானவர்களாக இருந்ததோடு அன்றைய சமூகத்தில் பெண்களது நிலை பற்றி மிகவும் ஈடுபாடுள்ளவர்களாக இருந்தார்கள்.

கமில்லா கொல்லற்
காலப்பகுதி: 1813 - 1895

இவர் அன்றைய நோர்வேஜிய பெண்களமைப்பின் முதற் பெண்ணாகத் திகழ்ந்தவர். நடைமுறை அரசியல் விடையங்களில் ஈடுபாடற்றவராக இருந்த கமில்லா ஆண்களைப் போன்றே பெண்களும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் கோரிக்கையை முன்வைத்ததோடு, பெண்கள் தமது வாழ்க்கையைத் தாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் கோரி நின்றார். கமில்லாவினால் முன்வைக்கப்பட்ட பெண்கள் பிரச்சனை, அவர் தான் சார்ந்த மத்தியதர வர்க்கப் பெண்களின் பிரச்சனைகளாகவே இருந்தன. அத்தோடு, கவிஞரும், எழுத்தாளருமான யொகான் செபஸ்ரியனுடனான மகிழ்ச்சியற்ற, நிறைவேறாத அவரது காதலும் பெண்கள் பிரச்சனை பற்றியகருத்துக்களில் அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மத்தியதர வர்க்கத்துப் பெண்களே முதலில் சமஉரிமைக்காகக் குரல் கொடுத்தவர்கள். ஆனால் சமூக ரீதியிலான, பொருளாதார ரீதியான சமத்துவம்பற்றி இவர்கள் அக்கறை கொள்ளவில்லை. இவர்களால் பேசப்பட்ட பெண்கள் சமஉரிமை என்பது அவர்களது வர்க்கம் சார்ந்த ஆண்களுக்குச் சமதையான உரிமையாகவே இருந்தது.

மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் தொழிலாள வர்க்கப் பெண்களினதும், அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் பற்றியதுமான விடையங்களில் ஈடுபாடற்றவர்களாகவே இருந்தனர். கமில்லா ஒரு படைப்பாளியாக உருவாவதற்கு அன்றைய சமூகத்திலிருந்த பெண்களுக்கெதிரான மிகப்பெரிய தடையை உடைக்கவேண்டியிருந்தது. அவருடைய இந்த எழுச்சிதான் இலக்கியப் பரப்பில் ஏனைய பெண்களும் காலடியெடுத்து வைக்க வழி வகுத்ததெனலாம்.

கமில்லாவினது குழந்தைப்பருவம் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைந்தது. மதகுருவான அவரது தந்தை நிக்கொலாயினது விருப்புக்குரிய குழந்தையாக இருந்தார். அவரோடு அவரது ஏனைய நான்கு சகோதரர்களும் அன்றைய கால சம்பிரதாயங்களுக்கு முரணாக சுதந்திரமாக வளர்க்கப் பட்டனர். இள வயதில் தந்தையோடு வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரயாணம் செய்த கமில்லா டென்மார்க்கில் கல்வி பயின்றார். யொகான் செபஸ்ரியனுடனான காதல் முறிவுக்குப் பின்னர் 1841இல் பேடர் ஜோனாஸ் கொல்லற்றை திருமணம் செய்து கொண்டார். கமில்லாவை எழுதத் தூண்டியதும் அவரது கணவர்தான்.

185இல் "நகரபிதாவின் புதல்விகள்" என்ற நாவல் வெளிவந்தது. இந்த நாவல் அனாமதேய பெயரிலேயே வெளிவந்தது. இந்த நாவலை எழுதியது ஒரு பெண்தானென ஒருவரும் அறிந்திருக்கவில்லை. இந்த நாவல் நான்கு சகோதரிகள் பற்றியது. இந்த நாவலில் வரும் நான்கு சகோதரிகளுள் கடைசிப் பெண்ணான சோபியா என்பவள்தான் பிரதான பாத்திரமாக வருகின்றாள். சோபியாவின் மூன்று சகோதரிகளும் பெற்றோர்களால் தெரிவு செய்யப்பட்ட ஆண்களைத் திருமணம் செய்கின்றார்கள். அவர்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இருப்பதை காணுகின்ற சோபியா தனது சகோதரிகள் போன்று தானும் பெற்றோர்களால் தெரிவு செய்யப்படும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று தீர்மானிக்கிறாள். சோபியாவின் குடும்ப ஆசிரியரும் சோபியாவும் ஒருவரையொருவர் நேசம் கொள்கின்றனர். தற்செயலாக அவள் ஒரு உரையாடலைக் கேட்க நேர்ந்த சந்தர்ப்பத்தில் தனது காதலனான ஆசிரியருக்கு வேறொரு பெண்ணுடன் காதல் உறவிருப்பதாக தவறாகப் புரிந்து கொள்கின்றாள். இதை அவரிடமே நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாத சூழலில் (அன்றைய சூழலில் பெண்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படையாகக் கூற அனுமதிக்கப் படவில்லை) அவர்களது உறவு முறிவடைந்து போகிறது. ஆசிரியரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றார். திருமணமே செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வதைப்பற்றி சோபியா சிந்திக்கின்றாள். ஆனால் போதிய கல்வியறிவோ, வேலையோ அற்ற சூழ்நிலையில் அந்த முடிவு மிகவும் கடினமான ஒன்றாகின்றது. அதனால் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுள்ள ஒரு வயதானவரைத் (மனைவியை இழந்தவரை) திருமணம் செய்து கொள்கின்றாள். தனது சகோதரிகள் போலவே தன்னால் நேசிக்கப்படாத ஒருவருடன் அவள் வாழ நேரிடுகின்றது.

நாவல் பிள்ளைகளைக் கட்டாயமாக திருமணம் செய்து வைக்கின்ற நிலமையை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றது. அன்று மிகுந்த சர்ச்சையை உருவாக்கிய இந் நாவல் அன்றைய உயர்தர வர்க்கத்துப் பெற்றோர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. காதல் பற்றியதும், குடும்ப உறவு பற்றியதுமான இந்த நாவலையிட்டு பலரும் மிகவும் கோபம் கொண்டிருந்தனர். ஆனால் நாவல் பெண்கள் மத்தியில் அவர்களது பிரச்சனைகளை உணர்வுகளை அடையாளப்படுத்திக் காட்டியதுடன் அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. குறிப்பிட்ட காலத்தின் பின்னரே நாவலாசிரியர் யாரென்று தெரிய வருகின்றது. பல படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமான நோர்வேயின் முதலாவது குடும்பநாவலும் இதுவேயாகும். இத்தகைய நிலமைகளைத்தான் கமில்லா தனது நாவலிலே வெளிக்கொணர முற்பட்டார். இந்த நிலமைகள்தான் மாற்றமடைய வேண்டுமென்று விரும்பினார். ஏனெனில் தனது விடுதலையின் பொருட்டு பெருமைப்படும் ஒரு இனம், பெண்களை இத்தகைய கீழான நிலையில் வைத்திருப்பது அனுமதிக்க முடியாதது என்பதே அவருடைய வாதமாக இருந்தது. அத்தோடு இளம் பெண்கள் சமூகத்தின்பால் எத்தகைய ஈடுபாடும் அறிவுமற்ற நிலையில் வளர்க்கப்படுவதையிட்டு தனது விமர்சனத்தை கடுமையாக முன் வைக்கின்றார். பெண்களினது பெறுமதிமிக்க வாழ்வுக்கான போராட்டமே அவரது எழுத்துக்களில் முக்கியத்துவம் பெற்றது.

ஒரு இடத்தில் அவர் இவ்வாறுஎழுதுகிறார்:-
"விபத்து என்னவெனில் எல்லா இடங்களிலும் பெண்களது பிரச்சனைகள் அவர்களின் கரங்களில்த்தான் திணிக்கப் பட்டுள்ளது. ஸ்கன்டிநேவிய நாடுகளைப் பொறுத்தவரை பெண்களது உரிமைக்காகக் குரல் கொடுத்த ஒரு ஆண் மகனையாவது நான் அறியவில்லை. பிரச்சனைகள் யாருக்குள்ளதோ அவர்கள்தான் அதற்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் ஆகின்றார்கள்." .

திருமணமாகி பத்து வருடங்களில் கமில்லாவின் கணவர் இறந்து போகிறார். தொடாந்த அவரது வாழ்வு அவர் இறக்கும் வரை பெண்களது நலன்களுக்காக எழுதுவதிலேயே கழிந்தது.

நோர்வே அரசு இவரது உருவம் பொறித்த தபால்தலை
வெளியிட்டுக் கௌரவித்ததோடு நூறு குரோணர்
தாளிலும் இவரது உருவத்தை வெளியிடடுள்ளது.
*************அமாலியா ஸ்கிறம்
காலப்பகுதி:- 1846 - 1905

இவர் பிறந்தது 1846இல். பேர்கன் நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு நான்கு சகோதரர்கள். அமாலியாவின் தந்தை சிறிய வியாபார நிலையமொன்றை நடாத்தி வந்தபோதும் அவர்களது குடும்பத் தேவைக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. அமாலியாவின் இளமைப்பருவம் வறுமையினாலும், அக்கறையின்மையாலும் சூழப்பட்டிருந்தது. அவருக்குப் பதினேழு வயதாக இருந்தபோது அவரது தந்தை மீதமிருந்த சிறு வியாபாரத்தையும் இழந்து அமெரிக்காவுக்குத் தலைமறைவானார். தாயார் ஐந்து பிள்ளைகளுடனும் தனித்து விடப்பட்டார். அமாலியா, அவரைவிட ஒன்பது வயது அதிகமான ஒரு பணக்கார கப்பல் தளபதிக்கு திருமணம் செய்து வைக்க தாயினால் நிர்ப்பந்திக்கப்பட்டார். தனது குடும்பத்தை இந்தத் திருமணத்தின் மூலம் பாதுகாக்க வேண்டிய தேவை அமாலியாவின் தாயாருக்கு இருந்தது. அமாலியா இந்தத் திருமணத்தை விரும்பாதபோதும் தனது குடும்பத்தினருக்காகச் சம்மதித்தார். அவரது திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாக இருந்தது. அதைவிட்டு வெளியேறிவிட விரும்பினார். ஆனால் அன்றைய சூழலில் விவாகரத்து என்பது மிகவும் நாசகாரியம் என்றே அறியப்பட்டிருந்தது. அதிகமான மன அழுத்தத்தின் விளைவாக அவர் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார். 13வருட மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வுக்குப்பிறகு தனது கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொள்கின்றார். கிறிஸ்ரியானியாவில் (இன்றைய ஒஸ்லோ) "விவாகரத்துப் பெற்ற தாயாக" தனது இரு மகன்களுடனும் வாழ்க்கையைத் தொடர்கின்றார். அமாலியா விவாகரத்துக்குப் பின்னரே எழுத்துலகில் காலடி வைக்கின்றார். அவருக்குப் பல இலக்கிய நண்பர்கள் அறிமுகமாகின்றனர். ஒரு விருந்தின்போது டென்மார்க் எழுத்தாளரான எரிக் ஸ்கிரம் என்பவரை சந்திக்கின்றார். நீண்டகாலக் கடிதப் பரிமாற்றங்களின் பின்னர் 1884இல் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அமாலியா அதிகளவான நேரம் உழைத்ததோடு அதே நேரத்தில் தாயாகவும் மனைவியாகவும் வீட்டிலும் அதிகளவாக உழைத்தார். அத்தோடு அவரது எழுத்துக்களுக்கெதிரான கடுமையான விமர்சனங்களும் அவரை மிகவும் பாதித்தன. மீண்டும் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட அமாலியா 1894இல் டென்மார்க் உளவியல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1900ம் ஆண்டு எரிக் ஸ்கிரம்மிடமிருந்து பிரிவினை பெற்றுக் கொண்டார். 1905இல் கொப்பன் ஹேகனில் நோய்வாய்ப்பட்ட, மகிழ்ச்சியற்ற கடுமையான விமர்சனங்களுக்குள்ளான நிலையில் இறந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அவரால் எதிர்பார்க்கப்பட்ட அவரது எழுத்துக்களுக்கான வரவேற்பும், ஆதரவும், புகழும் அவரது இறப்பிற்குப் பின்னரே கிடைத்தது.
பேர்கன் நகரில் அமாலியாவுக்கு வைக்கப்பட்டுள்ள சிலைபத்திரிகைகள் அவரது எழுத்துக்களையிட்டு சாதகமாக எழுதத் தொடங்கின.
ஆரம்பத்தில் இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதிவந்த இவர் கொப்பன் ஹேகனில் குடியேறிய பின்னர் தனது முதலாவது நாவலை எழுதினார். 1885இல் Constance Ring என்ற அவரது முதலாவது நாவல் வெளி வந்தது. இது மகிழ்ச்சியற்ற, விருப்பமில்லாத திருமண வாழ்வைப்பற்றிப் பேசியது. அத்தோடு ஆண்களினது நம்பிக்கைத் துரோகத்தனத்திற்கும், பல பெண்களுடன் அவர்கள் உறவு கொள்வதற்குமான தாக்குதலாகவும் அமைந்தது. இது சமுகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை, எதிர்ப்பை உருவாக்கியது. ஏனெனில் அன்றைய நாட்களில் இவைகள் வெளிப்படையாகப் பேசப்படும் விடையமாக இருக்கவில்லை. அதிலும் ஒரு பெண்ணால் எழுதப்பட்டதென்பதானது அதிகளவான எதிர்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் இந் நாவலை வெளிப்படையாக ஆதரித்தவர் அமாலியாவின் இலக்கிய நண்பரும், எழுத்தாளருமான ஆர்னெ கர்போர்க்.

1892இல் அமாலியா எழுதிய இன்னொரு நாவலான "நம்பிக்கைத் துரோகம்" வெளிவந்தது. சமூகத்தில் பாலியல் பற்றிய கருத்தாக்கம் எவ்வாறு மொத்தமான பெண்கள் சமூகத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது என்பதைப் பற்றியதாக இந்நாவல் அமைந்தது. குறிப்பாகச் சொல்வதானால் இது அவரது முதல் திருமண வாழ்க்கையைப் பற்றியதாக அமைந்தது எனலாம். நாவலில் 17வயதான ழுசல என்ற அப்பாவியான இளம்பெண், ஆண் பெண் உறவு பற்றி எதுவும் அறிந்திராத நிலையில் 30வயதுடைய கப்பல் தலைவனுக்குத் திருமணம் செய்து வைக்கப் படுகின்றாள். பாலியல் பற்றி அவள் அறிந்ததெல்லாம் ஆண் பெண் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக ஒரே படுக்கையில் படுத்திருந்தால்போதும் என்பதுதான். திருமணத்தின்போது குழப்பமுற்ற அவளுக்கு "மற்றைய பெண்களைவிட உனக்கு எதுவும் மோசமாக நடந்து விடவில்லை" என்று அவளது தாயால் அறிவுரை கூறப்படுகின்றது. தனக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாக வருந்தும் Ory திருமண இரவில் வெளியேறிவிட முயற்சிக்கின்றாள். அவளது முயற்சி தடுக்கப்பட்டு திருமணவாழ்க்கைக்குள் பலவந்தமாக ஈடுபடுத்தப் படுகின்றாள்.
அன்றைய காலகட்டத்தில் பெண்கள் மிகத் தூய்மை பேண வேண்டியவர்களாகவும், திருமணத்துக்குமுன் எந்த ஆணுடனும் உறவு வைத்துக்கொள்ளாது கன்னித் தன்மை பேண வேண்டியவர்களாகவும் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதேவேளையில் ஆண்கள் சுதந்திரமாகவும், எவ்வித கட்டுப்பாடுகள் அற்றவர்களாகவும் எப்படியும் வாழலாம் என்ற நிலை, ஒரு சாதாரணமான, நேர்மையான, இயல்பான குடும்ப உறவை எவ்விதமாகவெல்லாம் பாதிக்கும் என்பது பற்றியும் நாவல் பேசியது. 1800களில் இவ்வாறாக மந்தமான, சகிப்புத்தன்மை கொண்டதான திருமணவாழ்வுதான் சமூகத்தின் எல்லாத் தரப்புப் பெண்களினதும் வாழ்வாக இருந்தது.பெரியவர்களால் தகுந்த கவனிப்புக்கு உட்படாமல் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் குழந்தைகளினது நிலமையை அமாலியா புரிந்து கொண்டதுபோல் வேறெந்தப் படைப்பாளிகளும் ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை. 1890இல் வந்த குழந்தைகளுக்கான படைப்பில் இந்தப் புரிந்துணர்வு இழையோடுவதைக் காணலாம். அமாலியா ஒரு கலைஞர் அல்ல. ஆனால் அவருக்கு இருந்த ஆழமான மனிதத் தன்மை அவரது படைப்புகளில் பிரதிபலிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனித வாழ்விலும், குறிப்பாகப் பெண்கள் வாழ்விலும் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனைகளை அதே யதார்த்தத்தோடு வெளிக் கொணர்ந்தார். அதனாலேயே அவருடைய படைப்புக்கள் என்றும் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனலாம்.
*****


சிக்றிட் உன்செத்
காலப்பகுதி:- 1882 - 1949

டென்மார்க்கில் பிறந்தவர். புதைபொருள் ஆய்வாளரான இவரது தந்தை நோர்வேயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது தாயாரின் பிறப்பிடமான டென்மார்க்கில் இரண்டு வருடங்கள் வாழ்ந்தபின் நோர்வேக்கு குடி பெயர்ந்தனர். சிக்றிட் அவரது தந்தையார் நோயுற்றிருந்த வேளைகளில் தனது அதிகமான நேரத்தை தந்தையுடனே செலவிட்டார். தந்தைக்காக வரலாற்று நூல்களையும், நோர்வேயின் பழைய மதமாகிய நொரொன் (Norrøn) இலக்கியங்களையும், வைக்கிங்காலத்து வரலாற்று நூல்களையும் உரத்து வாசித்தார். அவருக்கு பதினோரு வயதாக இருந்தபோது தந்தையார் இறந்துபோனார். தாயார் அவருக்கு தொடர்ந்து கல்வி பயிற்றுவிக்கத் தயாராக இருந்தபோதும் தந்தை இறந்தபின், அவர்களது குடும்ப பொருளாதார நிலமை மோசமாக இருந்ததால் வர்த்தகக் கல்லூரியில் சேர்ந்து பதினேழு வயதிலேயே ஒரு அலுவலக நிர்வாக வேலையைத் தேடிக் கொண்டார். அலுவலக நிர்வாகத்தில் பத்து வருடங்கள் பணி புரிந்த சிக்றிட்டுக்கு அந்த வேலை மிகவும் சலிப்பூட்டியது. தனது வேலை நேரம் தவிர்ந்த ஓய்வு நேரங்களில் எழுதுவதில் ஈடுபட்டார்.

1907இல் அவரது முதலாவது படைப்பான "திருமதி மார்த்தா ஒலியா" வெளிவந்தது. சிக்றிட் அமாலியாவின் தீவிர வாசகியும் ரசிகையுமாக இருந்தார். கமில்லா, அமாலியா, ஆகியோரது படைப்புக்களின் பாதிப்பு இவரது முதலாவது நாவலான "திருமதி மார்த்தா ஒலிவியா"வில் காணப்படுகின்றது. முதலாவது நாவல் வெளிவந்ததைத் தொடர்ந்து சிக்றிட் முழுநேரப் படைப்பாளியாகிறார். புலமைப்பரிசில் பெற்று இத்தாலியாவுக்குச் சென்றவர் ஓவியர்கள், கலைஞர்கள் போன்றோரது சூழலில் வாழ்கிறார். 27வயதான சிக்றிட் தன்னைவிட 13வயது அதிகமான அன்டர்ஸ் சிவஸ்தாட் என்பவரைச் சந்திக்கின்றார். இருவரும் ஒருவரையொருவர் நேசங் கொள்கின்றனர். அன்டர்ஸ் ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானவர். இருவரும் 1912இல் திமணம் செய்து லண்டனில் குடியேறுகின்றனர். இவர்களது மகன் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த காலப் பகுதியில் சிக்றிட் மகனுடன் தனது தாயாரிடம் வருகின்றார். அவர்களது திருமண வாழ்வு அடிக்கடி ஏற்பட்ட நீண்ட பிரிவுகளினால் பாதிக்கப் பட்டிருந்தது. இவர்களுடைய இரண்டாவது மகளும் வலிப்பு நோயினால் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தாள். தாயெனும் பாத்திரம் சிக்றிட்டினது வாழ்வில் நடைமுறையிலும் எழுத்திலும் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஒரு இலட்சியத்தாயாக அவரால் விளங்க முடியவில்லை. 1919இல் வீட்டு ஒப்பந்தத்தை இழந்த நிலையில் சிக்றிட்டினது கணவர் தனியாகக் குடியேறுகிறார். கணவனும் மனைவியும் வேறு வேறு இடத்தில் வாழ நேர்ந்தமையை குடும்ப வாழ்வின் வீழ்ச்சி என்றே சிக்றிட் கருதினார். இந்த இடைவெளி அவர்களை விவாகரத்து வரையும் கொண்டு சென்றது. 1924இல் "டொமினிக்கன்" கத்தோலிக்க சபையில் சேர்ந்து சகோதரிஒலிவியா எனப் பெயர் மாற்றம் செய்கின்றார். நம்பிக்கை நிறைந்த ஒரு கத்தோலிக்கராக இருந்தபோதிலும் சிக்றிட் விவாகரத்துப் பெற்ற காரணத்தினால் முழுமையாக மத நடவடிக்கைகளில் பங்கெடுக்க முடியவில்லை. ஏனெனில் விவாகரத் செய்வதென்பது கடுமையான பாவமாக அன்றைய கத்தோலிக்க திருச்சபையினால் கருதப் பட்டது.

1928இல் ”கிறிஸ்ரின் லவறன்ஸ் டத்தர்” நாவலுக்காக இவருக்கு இலக்கியத்துக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது. இந்நாவல் மூன்று தொடர் பகுதிகளைக் கொண்டது. வரலாற்று ஆதாரங்களுடன் வெளிவந்த முதல் யதார்த்தவாத நாவலும் இதுவாகும். (இந்த நாவல் நோர்வேயில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது) இதற்குக் கிடைத்த நிதியில் அரைப்பகுதியை மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிதியத்திற்கு சிக்றிட் வழங்கினார். மிகுதியை ஏழை கத்தோலிக்கர்களுக்கும், எழுத்தாளர் சங்கத்திற்கும் வழங்கினார்.

இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது சுதந்திரமான நோர்வேக்காக பல கட்டுரைகளை எழுதினார். தனது எழுத்துக்களினூடாக நாஸிசத்துக்கெதிரான மிகவும் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டார். நோர்வேயின் அன்றைய காலகட்டத்திலிருந்த படைப்பாளிகளுள் நாஸிகளினால் மிகவும் வெறுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. 1949 யூன் 10ம் திகதி சிக்றிட் மரணமடைந்தார். சிக்றிட் உன்செத் தனது எழுத்துக்களினூடாக நவீன யதார்த்தவாதியாக அறியப் பட்டவர். தான் வளர்ந்துவந்த சூழலோடு மாறுபட்டு அதிலிருந்து வெளியேறியவர். மத்தியதர வர்க்கத்தினுடைய எழுச்சியினால்த்தான் எல்லா சமூகப்பிரிவினது பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். தனது முதலாவது நாவலான "திருமதி மார்த்தா ஒலியா" வில், மார்த்தா தனது கணவனுக்கு நம்பிக்கையற்ற விதமாக நடந்து கொள்கிறாள். ஆனால் சமூகத்தினது தீர்ப்புக்கு அவள் ஆளாகவில்லை. மாறாக, தன்னைத் தானே தீர்ப்பிடுகின்றாள். தனது நம்பிக்கைத் துரோகத்தைத் தானே நொந்து கொள்கின்றாள். சிக்றிட்டினது கவிதைகளில் பெண்கள் தாமாகவே தவறிழைத்தல் என்பது மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப் படுகின்றது. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம் என்பது ஒவ்வொருவருக்குள்ளேயும் நடைபெறுவது. பெண்கள் தங்களது வாழ்க்கைக்குத் தாமே பொறுப்பாவார்கள். அதே நேரம் அவர்கள் தவறுகள் செய்வார்களேயானால் மற்றவர்களை அவர்கள் குற்றம் சுமத்த முடியாது என்பதே அவரது கருத்தாக இருந்தது. குறிப்பிட்டுச் சொல்வதானால் பெண்களது பிரச்சனைகள் ஒரு சமூகப் பிரச்சனையாக இவரால் நோக்கப்படவில்லை. அன்றைய பெண்கள் அமைப்பினராலும், பெண்ணியவாதிகளாலும் இவரது பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகின.

1880களில் இருந்த படைப்பாளிகளான கமில்லா, அமாலியா போன்றவர்கள் சமூகத்தின்மீது வைத்த கடும் விமர்சனம் போன்று இவர் முன் வைக்கவில்லை. இதனால் சிக்றிட் உன்செத்தை பெண்நிலைவாதிகளின் வரிசையில் சேர்ப்பதென்பது சரியானதா என்ற கேள்வியும் நிலவுகின்றது. எனினும், பெண்ணெதிர்ப்பு வாதிகளின் முகாமுக்குள் அவரைச் சேர்ப்பதென்பதுவும் சரியானதல்ல. கருத்துரீதியான வேற்றுமைகள் இருப்பினும் அன்றைய பெண்களது நிலமைகளைத் தனது படைப்புக்களில் உள்ளதை உள்ளபடியே வெளிக் கொணர்ந்தவர் என்ற வகையில் சிக்றிட் உன்செத் முக்கியத்துவம் பெறுகின்றார். இவரது உருவப்படத்தைத் தாங்கிய தபால்லத் தலையை நோர்வே அரசு வெளியிட்டதோடு, 500குரோணர் தாளிலும் பொறித்து கெவுரவித்துள்ளது.

உயிர்மெய்-2 (2006)
...மேலும்

Oct 24, 2010

ஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்


துயர நதியில் பாய்ந்த மனமொன்று குழந்தையின் களங்கமற்ற ஒரு சிரிப்பை தெப்பமாக்கிக்கொண்டு கரை சேர்வதுபோல நல்ல படைப்பு நம்மைக் காப்பாற்றுகிறது. வாழ்வைப் புரிந்துகொள்ள வைக்கும் தத்துவத்துக்கும் வாழ்வின் கணந்தோறும் நம்மைப் பற்றியெரியச் செய்யும் இலக்கியத்துக்கும் இடையே பரந்துகிடக்கும் சமவெளியைப்பற்றி நமக்கு நிறைய சொல்லப்பட்டதுண்டு. ஆனால் அதுவொரு கற்பித வெளிதான். ஆற்றல் மிக்க படைப்பு இலக்கியத்துக்கும் தத்துவத்துக்குமான இடைவெளியை அழித்துவிடும், வாழ்வின் நொய்ந்த தருணம் ஒன்றைப் பேசும்போதும்கூட அதன் உள் ரகசியங்களை நமக்குப் பரிச்சயப்படுத்தி வைக்கும். அத்தகைய படைப்புகளை உருவாக்கும் ஆளுமைகள் எல்லா மொழிகளிலுமே குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள்.அவர்களால் மதிப்புபெறும் மொழி அவர்களை எந்தவொரு அடையாளத்துக்குள்ளும் அடைப்பதற்கு ஒப்புவதில்லை. தமிழ் இலக்கியப் பரப்பில் அத்தகைய படைப்பாளிகள் மிகவும் அரிதாகவே தென்படுகிறார்கள்.

நல்ல படைப்பு என்பது எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்தை நோக்கி எரிகல்லாய்ப் பாய்கிறது. அதைப் பார்ப்பவர்கள் தர்க்கத்தை மறந்து விடுகிறார்கள். தர்க்கம் மறந்த மனம்தான் இலக்கியத்தின் வாசஸ்தலம். இக்கதைகளை வாஞ்சையோடு உள்வாங்கிக்கொள்ள அத்தகைய மனநிலை வேண்டும். இந்தப் படைப்புகளை வாசிக்கும்போது, சமூக நிர்ப்பந்தங்களுக்குப் பயந்து நம் மனம் அணிந்துகொண்டிருக்கும் உடைகள் ஒவ்வொன்றாய்க் கரிந்து சாம்பலாவதை நாம் நமது நாசியில் உணர்கிறோம்.கலாச்சாரத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் நம்மைத் தீய்த்து கருக்குகிறது அந்த நெருப்பு. அந்த ஜுவாலையிலிருந்து மீண்டும் புதிதாய் நாம் பிறக்கிறோம்.

படைப்பு என்பது பாய்ந்து கொண்டிருக்கும் நதியைப் போன்று எப்போதும் நகர்ந்து கொண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. அது ஒருபோதும் முழுமை பெறுவதில்லை. சூழலின் நிர்ப்பந்தத்தால் வரையறுக்கப்பட்ட வெளிக்குள் நிறுத்தப்படும் படைப்பை படைப்பாளி இன்னொரு இடத்திலிருந்து தொடர்ந்து எழுதிச் செல்கிறார். ஒரு பிரதிக்குள் சந்தித்த மனிதர்கள் பிறிதொரு பிரதியில் வேறு பெயர்களோடு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப் புழங்கும் பாத்திரங்களுள் நாமும் நம்மைக் கண்டுபிடிக்கிறோம். இப்படியாக, இப்பட்டைப்புகள் யாவும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பது மட்டுமின்றி இவற்றுள் இருக்கும் மனிதர்கள் பிரதிகளுக்கு அப்பாலும் இயங்குவதைக் காணமுடிகிறது.

புறத்தை நிராகரித்து எழுகிறது படைப்பு. அதற்குள் உருவாக்கப்படும் வெளி என்பது வெளியற்ற வெளி ஆகும். அது யதார்த்த வெளியும் அல்ல, கற்பித வெளியும் அல்ல. ஒரு கண்ணாடிக்குள் பிரதிபலிக்கப்படும் பிம்பத்தினுள் தெரியும் இடத்தைப் போல இடமற்ற இடமாக இருக்கிறது அது. கண்ணாடிக்குள் நாம் இல்லாத நம்மைப் பார்க்கிறோம். நாமும், கண்ணாடியும் யதார்த்தம். ஆனால் கண்ணாடிக்குள் தெரியும் பிம்பமோ இல்லாது இருக்கிறது. வெளியற்ற வெளிக்குள் தெரியும் பிம்பத்திலிருந்து யதார்த்தத்தில் நிற்கும் நம்மை நாம் நோக்கும்போது வெளியற்ற வெளியில் பட்டுத் தெறிக்கும் பார்வை நம்மை வடிவமைக்கிறது. நிர்ணயிக்க முடியாத, இந்தத் தொடர்நிலை மனத்தின் இயக்கத்தோடு தொடர்பு கொண்டதாகும். அதில் உற்பவம் கொள்கிறது படைப்பு. மற்ற எதுவொன்றாலும் மாற்றீடு செய்ய முடியாத அதன் தனித்துவம் மரணத்தைப்போல நம்மை வசீகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்குள் இறங்கும் நாம் அப்படியே அதன் சுழிப்பில் உள்ளமிழ்ந்து போய்விடுகிறோம். படைப்பாளியைப் போலவே நாமும் அந்தப் படைப்பிடம் நம்மை ஒப்படைத்து விடுகிறோம்.

படைப்பாளி தான் விரும்புவதுபோல் தனது படைப்பை உருவாக்க நினைக்கிறார்.ஆனால் அவருக்குக் கிடைப்பதோ வார்த்தைகளின் கூட்டம் மட்டும்தான். இன்னொரு படைப்பில் தனது எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளலாம் என அவர் நினைக்க, படைப்போ அவரை உதாசீனப்படுத்திவிட்டு தன்போக்கில் தன்னை எழுதிச் செல்கிறது. ஒரு படைப்பாளி பூரணத்துவமடைந்த தன்படைப்பை ஒரு போதும் வாசிக்க முடிந்ததில்லை. அது அவர் வாழ முடியாத இடமாக இடமற்ற ஒரு இடமாக இருக்கிறது. தனது படைப்பை தான் வாசிக்கவே முடியாத நிலைதான் படைப்பாக்கம் உருவாக்கித்தரும் வினோத விதி. தான் வாழமுடியாத, இடமற்ற இடத்தை எழுத்தின் மூலமாக எட்ட முயற்சிக்கும் படைப்பாளிக்கு மீண்டும் மீண்டும் எழுதுவது தவிர வேறு வழி கிடையாது. ஆனால் எழுதப்படும்போதே விலகிச் செல்லத் துவங்கிவிடும் படைப்பு தனிமையில் கிடக்கும்படி படைப்பாளியை சபிக்கிறது. அவர் படைப்பைப் பின்தொடரவும் புரிந்து கொள்ளவும் முயற்சித்தபடி இருக்கிறார். தனது படைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியாத ஒரு துர்பாக்கிய நிலைதான் படைப்பாளியை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது. அதுவேதான் வாசகரின் கதியும்கூட.

"படைப்பாளியின் நோக்கம் அவரது வாழ்க்கையோடுதான் முடிகிறது என்று சொல்வது படைப்பாளியின் நோக்கத்தினூடாக நித்தியத்துவம் என்னும் பேரழிவை நோக்கி அவரது வாழ்க்கை பாய்ந்து செல்கிறது என்ற உண்மையை மறைத்து விடுகிறது" என்றார் மாரீஸ் ப்ளான்ஷொ. நித்தியத்துவம் என்பதும் பேரழிவாக இருக்கும்போது யார்தான் என்ன செய்யமுடியும்?

படைப்புச் செயல்பாடு படைப்பாளியின் "தான்" என்ற சுயத்துக்கும் வார்த்தைக்கும் இடையிலான பிணைப்பைத் துண்டித்துவிடும் ஒன்றாகும். அதனால் அவர் மற்றவர்கள் பேசாத ஒரு மொழியைப் பேச வேண்டியவராகிறார். அந்த மொழி எவரையும் நோக்கியதல்ல. அது படைப்பாளியானவர் தன்னை, தனது அடையாளத்தைத் தொடர்ந்து அழித்துக் கொள்ளும் செயல்பாட்டின் விளைபொருளாகத் தோற்றம் கொள்கிறது. அதைத்தான் தேன்மொழியும் தனது முன்குறிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். "நிராகரிக்கப்பட முடியாத வலிகளையும் மாற்றத்தை உள்ளடக்காமல் காலத்தை விழுங்கி நிற்கும் அனுபவங்களையும் படைப்பாக்கும் முயற்சி வலிகளையே திரும்ப அளிக்கிறது" என்ற அவரது வார்த்தைகள் படைப்பு குறித்த அவரது பிரக்ஞைக்கு சாட்சியங்களாய் நிற்கின்றன.

முதலில் கவிஞராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தேன்மொழி இந்தக் கதைகளை கவிதையால் கூரேற்றப்பட்ட சொற்களைக் கொண்டே நெய்திருக்கிறார்.இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் உரைநடை வடிவில் அச்சிடப்பட்ட கவிதைகளாகவே எனக்குத் தோன்றுகின்றன. "சிறுமி ஒருத்தி பொறுமையாய் சேகரித்துப் பின்பு அலட்சியமாய் இறைத்துவிட்டுப்போன பூக்களைப்போல என் இரவுக் கனவுகள் இறைந்து கிடந்தன"(கடல்கோள்) என்று அவர் எழுதும்போதும், "சுழலும் காற்றில் உதிர்ந்த இறகுகள் இரண்டு நடுவானில் சந்திப்பது போல்"(நாகாபரணம்) சந்தித்துக் கொண்டதாகச் சொல்லும்போதும் கவிதையின் அடர்த்தியில் மனம் குதூகலிக்கிறது.

கோயிலைப் பற்றி இதுவரை எவரும் சிந்தித்திராத கோணத்தில் அற்புதமான சித்திரமொன்றை தேன்மொழி வரைந்திருக்கிறார். "கோயில்களை இயங்கவைக்க மனிதர்கள் வேண்டும், தெய்வங்கள் உறவாட இயங்க மனிதர்கள் வேண்டும். கோயிலுக்கு வராமல் மனிதர்கள் இருந்துவிடலாம். மனிதர்கள் இல்லாமல் தெய்வங்களால் வாழமுடிவதில்லை. அவை பாழடைந்துவிடும். தெய்வம் சக்தியை இழந்துவிடும். அதன் புனிதம் கலைக்கப்படும். கோயில்கள் சபிக்கப்பட்ட இடங்களாகும். கோவிலுக்கு மனிதர்கள் தேவை. மனிதர்கள் மறக்கும்பொழுது தெய்வங்கள் மனிதரைத் தேடி புறப்பட்டுவிடுகின்றன" என்கிறார் தேன்மொழி(நாகாபரணம்). கோயிலின் புனிதமும், தெய்வத்தின் சக்தியும் மனிதர்களால் வழங்கப்பட்டவைதான். எனினும் அவற்றை வழங்கிய மனிதர்களே அந்தப் புனிதத்துக்கும், சக்திக்கும் கட்டுப்படுபவர்களாக மாறிவிடுவதுதான் விந்தை. தங்கள் காதலைப் பகிர்ந்து கொள்ளாத இருவர் வெவ்வேறு நபர்களை மணந்துகொண்டு அதன்பின் ஒரு தருணத்தில் சந்திப்பதையும், வறளாத நேசத்தைப் பகிர்வதையும், மரபுகளை மீற விரும்பினாலும் தம்மைப் பிணைத்திருக்கும் உறவுச் சங்கிலிகளைத் துண்டித்துக் கொள்ள வலுவின்றி மீண்டும் கூண்டுகளை நோக்கி நகர்வதையும் பேசுகிற (நாகாபரணம்) அந்தக் கதையின் பகைப்புலமாக கோயில் இருக்கிறது. அச்சத்தையும், பாதுகாப்பையும் ஒருசேர வழங்கியபடி இருக்கும் கோயில் குடும்பத்தின் குறியீடாக அங்கே நிற்கிறது.குடும்பம் என்ற அமைப்பைப் பற்றி அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் கோயிலைப் பற்றிப் பேசுவதன்வழியாக அவர் குடும்பத்தைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். குடும்பம் என்ற அமைப்பும் கோயிலைப் போலத்தான். நாம் தான் அதற்கு புனிதத்தையும், சக்தியையும் கொடுக்கிறோம். துணிந்தால் தாண்டிவிடக்கூடிய எல்லைகள்தான் அதற்கு. எனினும் நம் கால்கள் அதற்குள்ளாகவே துவண்டு கிடக்கின்றன. சூர்ப்பனகையின் நிறைவுறாக் காமம் போல நம் ஒவ்வொருவரிடத்திலும் மண்டிக் கிடக்கின்றன கனவுகள். ஆனால் அவற்றைக் கனவுகளாகவே நாம் பூட்டிவைக்கப் பழகிக்கொண்டுவிட்டோம். கோயில் என்ற படிமம் இந்தக் கதையைத் தாண்டி வளர்ந்துகொண்டே போகிறது. அதிகாரத்தின் இயக்கத்தையும், நுணுக்கத்தையும் குடும்ப உறவுகளினூடே திறந்து காட்டிய காஃப்காவைப் போல இந்தக் கதையின்வழியே மரபின் வன்முறை முழுவதையும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார் தேன்மொழி.

"இரவு கறைகள் அற்றது. திசைகள் அற்றது, எல்லைகள் அற்றது, களங்கம் அற்றது, இரவுக்கு பகை நிலவு. இரவை அழித்து நிலவு தன்னை ஏற்றுகிறது. அமாவாசை நாளில் இரவு நிலவைத் தோற்கடித்து தன் விஸ்வரூபத்துடன் பிரபஞ்ச ஆளுகை சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்கிறது" என்று இரவை விவரித்துச் செல்கிறார் தேன்மொழி (நாகதாளி).இதுவரை நமக்கு சொல்லப்பட்டிருந்ததற்கு மாறாக இருக்கிறது இந்த சித்திரிப்பு. நமது மூளை புலன்களை நம்பியிருக்கிறது. விழிகள் தோற்கும்போது மூளை திகைக்கிறது. இரவு& விழிகளின் இயலாமையை உணர்த்தும் காலம். அது மூளையை ஐயம் கொள்ள வைக்கிறது. அறியாததைப் பற்றிய அச்சம் நம்முள் இரவு குறித்த எதிர்மறை எண்ணங்களை ஏற்றியிருந்தது. அதை தீமையோடு பிணைத்தே நாம் அடையாளப்படுத்தி வந்தோம். ஆனால் விஞ்ஞானத்தால் மெருகேறிய மனம் கொண்ட தேன்மொழி இரவை மிகவும் பிரியத்தோடு பார்க்கிறார்.ஒளிச்சேர்க்கையால் உயிர்க்கும் தாவரங்கள் பகலை எதிர்கொள்வதற்கான தயாரிப்புக் காலமாக இரவைப் பயன்படுத்திக்கொள்கின்றன. அவற்றுக்கு ஜீவனை வளர்ப்பதாக இருக்கிறது இரவு. ’ இரவு களங்கமற்றது’ என்று தேன்மொழி எழுதியிருந்ததைப் படித்தபோது மனிதர்கள் வாழத்தக்க ஒரு புதிய கிரகத்தைக் கண்டுபிடித்ததுபோல சந்தோஷம் கொண்டேன். இரவின் மதிப்பை உணரும்போது நம் ஆயுட்காலம் இரு மடங்காக மாறிவிடுகிறது. இரவு& சுதந்திரத்தின் குறியீடு. நாம் அங்கே கண்காணிக்கப்படுவதில்லை.நமது பாவனைகளைக் களைந்துகொள்ள இரவுதான் வாய்ப்பளிக்கிறது. விடுதலையை அவாவும் மனங்களுக்கு இரவைவிடவும் பெரிய கொடுப்பினை வேறென்ன இருக்க முடியும்? இரவு தனது களங்கத்தை ஒளித்துக்கொண்டிருப்பதில்லை. அது களங்கமற்றதாயிருக்கிறது. ஒரு பெண்ணைப்போல. அதனால்தானோ என்னவோ பெண்கள் மிகவும் பாதுகாப்பானதாய் இரவைக் கருதுகிறார்கள். உறக்கம் கொண்டுவரும் இரவை அவர்கள் எப்படி வெறுக்க முடியும்? "ஒளி & ஆபத்துக்களாலும், குற்றங்களாலும் பளபளப்பூட்டப்பட்டது" என்று தேன்மொழி சொல்கிறார். உயிரின் ஊற்றாய் கருதப்பட்ட ஒளியின் உண்மையான சொரூபம் இதுதான். நாம் பகலின் வெளிச்சத்தில் பாவனைகளுக்குள் பதுங்குகிறோம். அது நம் சுதந்திர உணர்வை குறுக்குகிறது. சுதந்திரம் குறுகும்போது உயிர் எப்படி செழிக்க முடியும்? இதுவரை நாம் பார்த்திராத முறையில் உலகத்தைப் பார்ப்பதற்கு உதவுகிறார் தேன்மொழி. மரபால் பழக்கப்படுத்தப்பட்ட நமது மனம் அதிரும்போது அதன்மீது நாம் கட்டிவைத்த பண்பாட்டுக் கோபுரங்கள் தரை மட்டமாகின்றன. அந்தச் சிதைவுகளினூடே சுதந்திர விருட்சங்கள் செடிகளாய் முளைத்துச் சிரிக்கின்றன.

தேன்மொழியின் விவரணைகள் கூட சாணை தீட்டப்பட்ட கத்தி போன்ற சொற்களால் எழுதப்பட்டுள்ளன. "வீதியெங்கும் காலடித் தடங்களில் மரணத்தின் ரேகைகள் வரிவரியாய் ஓடிக்கொண்டிருந்தன. சிலர் வந்து கொண்டிருந்தார்கள். சிலர் போய்க் கொண்டிருந்தார்கள். வருவோரும் போவோரும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். பிறன் மரணம் குறித்த செய்திகளை ஏந்தி வந்தவர்கள், தன் மரணம் குறித்த குறிப்புகளைத் தாங்கிப் போனார்கள். மரணம் அனைவரையும் உற்று கவனித்துக் கொண்டிருந்தது. இவர்கள் அனைவரும் ஒருநாள் தன் வாசல் வரப்போகும் உறவு என்ற வாஞ்சை அதனிடம் பொங்கி வழிந்தது"(நாகதாளி) என்று விரிகிறது ஒரு காட்சி. தெரு என்ற புவியியல் வெளியும் அங்கு நடமாடும் மனிதர்களின் உணர்வு வெளியும் இழைந்து ஒரு புதிய அனுபவத்தை இங்கே நெய்கின்றன. ’யாரையும் தேடிச் செல்லாத யாராலும் தேடப்படாத’ ஆரோக்கியம் என்பவனைப் பற்றி பேசுகிறது ஒரு கதை( நாவாய் பறவை). அவனுடைய நிலையை ஒரே வரியில் மிக அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறார் தேன்மொழி ‘ பாலைவனப் புழுதிப்புயல் மணல்போல் வெறுமையாய் வாழ்வில் இடம்பெயர்ந்து கொண்டிருந்தான்’. நம்மில் பலருக்கு அனுபவப்படாத ஒரு காட்சிதான் அது. எனினும் சுழல் காற்றில் இடம்பெயர்ந்து படியும் மணலின் வெறுமை நம்மால் உணரக்கூடிய ஒன்றுதான்.

பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதன் வரலாற்றையும் அவர்கள் ’ காய்ந்த ஊற்றுபோல்’ வாழப் பழகிக் கொண்டுவிட்ட கொடுமையையும் ஒரு மரப்பாச்சியின் மொழியில் பேசிச் செல்லும் தேன்மொழி ஆயிரம் பக்கங்களில் சொல்ல முடியாததை ஐந்து பக்க சிறுகதையில் சொல்லிவிடுகிறார்( மரப்பாச்சி மொழி) .அதுபோலவே சுனாமிப் பேரழிவை ஒரு கதையில் பேசுகிறார்( தாழி) .அங்கே நாம் பார்க்கும் முதியவர், சாதத் ஹசன் மாண்டோவின் படைப்பு ஒன்றில் தனது மகளைத் தேடி அலையும் தந்தையை நினைவுபடுத்துகிறார். ஆனால் இக்கதையின் முடிவு மாண்டோவின் படைப்பைவிடவும் உக்கிரமானதாய், அதிரவைப்பதாய் இருக்கிறது. சடலங்களை உயிரற்றவையாக மட்டுமே பார்க்கும் மரத்துப்போன நமது மனங்களைக் கீறி அவற்றுக்குள்ளிருந்தும் கண்ணீரைப் பெருகச் செய்கிறது இந்தக் கதை.

கிராம வாழ்க்கையையும், அங்கே நிலத்தின் மீதான உரிமையை அடிப்படையாகக் கொண்டு உடலகள் பகிரப்படும் அதிகார சமன்பாடுகளையும் எத்தனையோ கதைகள் பேசியிருக்கின்றன. அதிலும் நமது ’முற்போக்கு எழுத்தாளர்கள்’ அதன் சூக்குமத்தை நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். புரட்சியாளனாய் மாறுவதற்கான எளிய வழி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எங்கிருந்தாவது ஒரு பண்ணையாரைக் கூட்டிவரவேண்டும். அந்தப் பண்ணையாரின் கொடுமைகளால் வாசகரின் ரத்தத்தை சூடாக்கிவிட்டால் போதும். அதற்கு சாகித்ய அகாடமி விருதுகூடக் கிடைத்துவிடும். இத் தொகுப்பில் உள்ள ’ நிலக்குடை’ என்ற கதை அந்த ரகத்தில் சேர்ந்திருக்கவேண்டியதுதான். ஆனால் அக்கதையின் நுட்பமான வர்ணனைகளும் கிளியம்மா என்ற பாத்திரத்தின் ஆளுமையும் அப்படி நேராமல் அதைக் காப்பாற்றிவிடுகின்றன.

அமானுஷ்யத்தை எழுதிய மகத்தான கலைஞன் புதுமைப்பித்தன். அவனைப்போல் தத்துவப் பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்றபோதிலும் இத்தொகுப்பில் உள்ள ‘ பேச்சிமரம் ’ என்ற கதை புதுமைப்பித்தனின் மரபில்வைத்துப் பேசத்தக்க ஒரு கதைதான் என்பதில் சந்தேகமே இல்லை. தலை கிள்ளியெறியப்பட்ட பனைமரம் ஒன்று ஒரு மனிதனின் வாழ்க்கைத் துணையாக மாறிவிடுவதையும், அதை அந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொள்வதையும் மிகவும் லாவகமான மொழியில் சொல்லிச் செல்கிறார் தேன்மொழி. கனவும் நனவும் குழம்பும் மொழியில் அவர் எழுதியிருக்கும் இந்தக் கதை தமிழின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாகக் கருதத்தக்கது.

தமிழில் சிறுகதை வடிவத்தை அற்புதமாகக் கையாண்ட படைப்பாளிகள் இருக்கிறார்கள். சிறுகதைகளில் உலகத்தரம் என்பதை நாம் ஜெர்மானிய, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை வைத்து நிர்ணயித்தால் அவற்றுக்குக் கொஞ்சமும் தரம் குறையாத படைப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் முடியப்போகும் கடந்த பத்து ஆண்டுகளில் நம்மைப் பிடித்து உலுக்கும்படியான கதை எதுவும் தமிழில் எழுதப்படவில்லையென்பது மறுக்க முடியாததொரு கூற்றாகும். இப்படித்தான் முடிந்துவிடுமா இந்த தசாப்தம் என்று துயருற்றிருந்போதுதான் தேன்மொழியின் கதைகளைப் படிக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது. பெண்களின் கதைகளை மொழி பெயர்த்தும், அவர்களின் தத்துவப் பிரதிகளை வாசித்தும் அவர்களது அக உலகோடு கொஞ்சம் பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவன் நான். ஆண்மை என்பது அழிக்கப்படவேண்டிய கற்பிதம் என்பதை ஒப்புக் கொள்பவன். ஆனால் ஒரு படைப்பை அதை எழுதிய படைப்பாளியின் பாலின அடையாளத்தோடு சேர்த்தேதான் நானும்கூட பார்த்துவந்திருக்கிறேன். இந்தக் கதைகள் ஆண்கள் எண்ணியே பார்க்க முடியாத படிமங்களையும், கோணங்களையும் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான் எனினும் பெண் எழுத்தாளர்களில் ஒருவராக தேன்மொழியை வைத்துப் பேசுவது அவரது ஆளுமையைச் சிறுமைப்படுத்துகிற காரியமாகவே இருக்கும்.

கதைசொல்லும் யுக்திகள், கதையின் மொழி, அவற்றுக்குள் ததும்பி நிற்கும் அனுபவம், இவற்றால் பேசப்படும் மனிதர்கள் எல்லாமே இது ஒரு படைப்பாளியின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பதை நம்பமுடியாமல் ஆக்குகின்றன. தமிழ்ச் சிறுகதை உலகில் நிராகரிக்கமுடியாத ஆளுமைகள் எனப் பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எந்தவொரு படைப்பாளியின் முதல் தொகுப்போடும் இணையாக வைத்துப் பேசத்தக்கதாக இருக்கிறது இந்தத் தொகுப்பு.

இந்த முன்னுரையை வாசிப்பவர்கள் மிகையான சொற்களைக் கொண்டு இது எழுதப்பட்டிருப்பதாக சிலவேளை கருதக்கூடும். ஆனால் இந்தக் கதைகளை அவர்கள் படித்து முடிக்கும்போது இந்த முன்னுரையை எழுதிய நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதையெண்ணிப் பொறாமை கொள்ளப்போவது நிச்சயம்.


(தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பான நெற்குஞ்சம் நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை )
நெற்குஞ்சம்
- தேன்மொழி
வெளியீடு : மணற்கேணி பதிப்பகம்
விலை : 90/-
பிரதிகளுக்கு manarkeni@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்