/* up Facebook

Sep 28, 2010

மூடிக்கிடக்கும் கதவுகளுக்குப் பின்னால் (சல்மாவின் படைப்புலகு: இரண்டாம் ஜாமங்களின் கதை வழியாக)


-மு. புஷ்பராஜன்

வகுப்பறையிலிருந்து மழையின் பொழிவை லயிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் சிறுமி ராபியாவுடன் ஆரம்பமாகிறது இரண்டாம் ஜாமங்களின் கதை. இறுக மூடிக் கிடக்கும் கதவுகளுக்குப் பின்னால் நிறைந்திருக்கும் பெருமூச்சின் வெம்மை, ராபியாவின் சிறிய பாதங்கள் பதிந்துசெல்லும் இடமெல்லாம் வீசுகிறது. அச்சிறுமியின் சிறிய இதழ்களில் துளிர்த்திருக்கும் பனி போன்ற குழந்தைக் கனவுகள் சூழலின் வெப்பத்தில் கருக, கனவுகளின் மிச்சமான மரப்பாச்சிப் பொம்மையை அணைத்தபடி சுருண்டு படுத்துக்கொள்வதோடு நாவல் முடிவடைகிறது.

நவீனத்துவங்கள், பின்நவீனத்தின் கலைத்துப்போடல், எடுக்கவா அன்றிக் கோக்கவா என்ற பின்னங்களின்றி, வெண்மணல் படுகை நீரோடையின் தெளிவோடு வழிந்து செல்கின்றது நாவல். காரணம் சமூகம் அடைகாக்கும் மௌனத்தைப் பேசுதலே சல்மாவின் முதல் தெரிவு. பிரதிக்குள் வாசகர் நுழைவுக்கான எந்த வாசலோ வெளியோ இல்லை. கூட நடந்து செல்வதற்கான பாதை மட்டுமே உண்டு.

பெண்கள் தரையில் சிராய்த்தபடி நடக்க அனுமதியில்லை. படிப்பதன் மூலம் வாழ்க்கை பாழாகிறது என்ற நச்சரிப்பு. வெளியாட்கள் வந்தால் உள்ளே ஓடிக் கதவைப் பூட்டிக்கொள்ள வேண்டும். அவர்கள் தனித்திருந்தால் கதவு வெளியே பூட்டப்படும். திருமணத்திற்குப் பினனர், பெண்ணிற்குக் கணவனைத் தவிர வேறு எதுவுமே இல்லை. இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டால் அவளுக்கெனத் தனியான வாழ்க்கை எதுவுமே இல்லை. கணவனது வேறு பெண் உறவுகளையெல்லாம் அனுசரித்துப்போக வேண்டும். முஸ்லிம் பெண் ஒருத்தி முஸ்லிம் அல்லாத ஆணைக் காதலித்தால், குடும்பத்தினரே அவளுக்கு விஷம்வைத்துக் கொல்லும் முடிவை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சகல அசைவுகளும் மறைநூலின் பெயராலும் பள்ளிவாசல் நிர்வாக அறிவுறுத்தல்களாலும் திரட்சிபெற்ற சமூக மரபு இந்நாவலின் இறுக்கமான பின்னணியாக இறங்கியிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் ஒளியிழந்து நடமாடுபவர்களாக, கணவனோடு சேர்ந்து வாழப் பிடிக்காமல் பிரிந்து வந்தபின், சமூக ஒழுக்கத்திற்கு அஞ்சி, கர்ப்பத்தைக் கலைக்கையில் பரிதாபமாய் மரணமாகும் மைமூன், தலாக் கேட்டுவிட்டு எதிர்வீட்டு சிவாவுடன் கொண்ட காதல் உறவால் தன் தாயாரால் விஷம் அருந்த வற்புறுத்தப்படும் பிர்தவ்ஸ், பட்டணப் படிப்பின் தன் சொந்த விருப்பைப் புதைத்துப் பெற்றோருக்காக மணந்து, கணவனுடன் வாழ முடியாமலும் தாயுடன் சேர்ந்திருக்க முடியாமலும் மாமனாரின் பாலியல் வக்கிரங்களுக்கு மத்தியில் அவதியுறும் வஹிதா, வெளிநாட்டில் கணவன் இருப்பதால் மனத்துள் மண்டிக்கிடக்கும் ஆசைகளைப் பேச்சாகவே வழியவிட்டுக்கொண்டிருந்தும் கணவன் திரும்பி வந்தபின் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படாமல் இருப்பதற்காக, ஒரு குழந்தை பெற்று அக்குடும்பத்துடன் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முனைந்தும் ஏமாற்றத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவளான மும்தாஜ், வாழும் சூழலில் அதிருப்தியுடன் ஒத்துப்போகத் தயாராக இல்லாத நிலையில், தனக்குப் பிடித்தவனுடன் ஓடிப் போய்த் துயர முடிவைச் சந்திக்கும் ஏழை பாத்திமா, கணவன் வேறு பெண்ணுடன் இருப்பது தெரிந்தும் ஆரம்ப எதிர்ப்போடு அடங்கிப்போகும் சொஹ்ரா, ஆடாமல் அசையாமல் கனவாட்டி போல் வந்து அவ்வப்போது கோபத்தை வெளிப்படுத்தினாலும் கணவன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைந்துபோகும் றைமா, கரீமின் வைப்பாட்டியாக இருந்தும் அவனுடைய மனைவியாகத் தன்னைக் கற்பிதம் செய்து கொள்ளும் மரியாயி, தமிழ் சினிமாவில் வருவதுபோல் எல்லாத் தீய குணங்களின் மொத்த உருவமாக வரும் சபியா, இவர்கள் மத்தியிலிருந்து நோன்புக் கஞ்சி, திருமணத்திற்காக எண்ணெய்ச் சட்டிகளில் பொரியும் பலகாரங்களின் வாசனை, வெள்ளாட்டுக் குட்டிபோல் சுதந்தரமாக அங்குமிங்கும் துள்ளித் திரியும் ராபியா, மின்னல் கீற்றுப்போல் இருந்து சீரழிவால் ஒளியிழந்த ஆமினா ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

“நாவலுக்குள் உலவும் பெண்கள் என் உலகில் என்னோடு சகபயணிகளாக இருந்துகொண்டிருப்பவர்கள்” என்னும் சல்மாவின் கூற்றைப்போல் பெண்களின் உலகமே நாவலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இரண்டாம் ஜாமங்களின் அரசிகள் பெண்களேதாம். எல்லா ஆசைகளையும் பெருமூச்சாக்கி அந்தப் புரங்களின் சுவர்களுக்கு உஷ்ணம் ஏற்றிய அரசிகள். கவலைகளால் வருந்தும் அரசிகள். தங்கப் புதையலுக்குக் காத்திருக்கும் நூரம்மாவானாலும் சரி, ஆமினாவானாலும் சரி அவ்வாறே இருக்கிறார்கள். சைரனுக்கோ வேறு கவலை. மூளை வளர்ச்சியற்ற பெண்கள் இருவர். இவர்களால் பரிதாவின் வாழ்க்கை கரைசேராமல் இருப்பதான கவலை. ஷெரிபாவிற்கு இன்னொரு நரகம். திருமணமாகி மூன்று வருடத்தில் எழுபது நாட்கள் வாழ்ந்திருந்த விதவை. இளமையே அவளுக்குச் சித்திரவதையாகியபோது மகள் யாஸ்மீனுக்காக இளமையை எரித்து உருக்கியவள்.

இந்தத் துயர்படிந்த ஓவியங்களுக்குள் ஓரளவு துணிச்சலும் மரபுகளை மீறும் துணிவும் பிர்தவ்ஸுக்கே இருக்கிறது. கணவனிடமிருந்து ‘விலக்கு’ வாங்கியவள் அவள் ஒருத்திதான். இந்நாவலில் வரும் அனைத்துப் பெண்களிலும் விலகிநிற்பவள் அவள்தான். அதனால்தான் சிவாவிடம் கொண்ட காதலை நியாயப்படுத்தும் துணிவுடன் வஹிதா முன் நிற்கிறாள். அந்தத் துணிவு ஆமினா மூலம் மழுங்கடிக்கப்படுவது பெரும் சோகம். ஆமீனா போன்றவர்கள் வாழ்ந்த உலகும் அதன்வழி பெற்ற அனுபவமும் அதனால் ஏற்படப்போகும் விளைவுகளும் பிர்தவ்ஸை அச்சப்படுத்தியபோ திலும், தனித்துவிடப்பட்ட தாய்மை யின் சுவாலை முன்னால், தன் புதிய சிந்தனைச் செடியின் துளிர்கள் வாடிப் போவதை அவள் சோகமுடன் நோக்க வேண்டியிருந்தது. இவளைப் போன்றவள்தான் பாத்திமா. “எனக்குப் புடிச்சுருக்குன்னா செய்வேன். அதோட நான் ஒன்றும் உன்னை மாதிரி பணக்காரி இல்லையம்மா. குடும்ப கௌரவத்திற்காக எல்லாத்தையும் இழந்து மூலையில இருக்கிறதுக்கு” என்று அவளால் துணிவுடன் சொல்ல முடிகிறது. ஆனால் சாகடிக்கப்பட்டுவிட்டாள்! அவளைக் கிளையாகக் கொண்ட உறவுகள் அந்த மண்ணில் வேரோடியிருந்ததனால் அவளது முடிவை ஏற்க பிர்தவ்ஸுடைய மனம் தயாராகலாம். பாத்திமாதான் எல்லாவற்றையும் உதறிவிடத் தயாராக இருந்தாளே அவளைக் கொஞ்சம் வாழவாவது விட்டிருக்கலாம். ஏன் அவ்வாறு ஆயின?

சல்மா தன் கவிதைகளில் வெளிப்படுத்திய, பறக்க விருப்பிருந்தும் பறந்துபோகாமல் முடங்கிப்போன மனநிலைதான் இங்கும் வெளிப்பட்டிருக்கின்றதா? எண்ணற்ற ஜடப்பொருட்களுடனும் ஒரு மனிதரோடும் தொடரும் வாழ்க்கையில், யாரோ ஒருவர் கொலையாளியாகும் சாத்தியங்களுடன் உறங்கும் வாழ்க்கையின் மன நெருக்கடிகளை வெளிப்படுத்திய ஒரு மாலையும் இன்னொரு மாலையும் தொகுதியில் ‘நீங்குதல்’ என்னும் இறுதிக் கவிதையைப் படிக்கையில் அவர் இனித் திரும்புவதில்லை என்ற வைராக்கியத்தோடு பறந்துவிடுவார் என நாம் தீர்மானித்தால் அது தவறான முடிவாகும். பறந்துவிடுதல் சுலபமாக இருக்கவில்லை. புதிதாய்ச் சிறகு முளைத்த குருவி, கூட்டின் வாசல்முன் வந்து தன் சிறகுகளை அடித்துப் பறக்க முயன்று, பின் நடுங்கிக் கூட்டினுள் ஒடுங்கும் மன நிலைதான் அக்குருவிக்கு வாய்த்திருக்கின்றது. எல்லாச் சமரசங்களுடனும் - கலங்கலான அன்பைப் பெற, தாய்மையை நழுவவிடாதிருக்க போன்ற சமரசங்கள் - கூட்டினுள் வாழத்தான் விரும்புகின்றது அது. இந்தச் சமரசங்களின் நீட்சி பச்சைத் தேவதையிலும் தொடர்கிறது. இதை சுயத்தை அழுத்தும் பெண்ணின் வீழ்ச்சியெனக் கருதலாமா? அப்படிக் கருத முடியாதென்றே நினைக்கிறேன். பறக்க முனைதலும் பறக்க முடியாமையும் சில மனங்களில் இயல்புதான். புறச் சூழல் ஏற்படுத்தும் நெருங்குவாரங்களிலிருந்து இந்த இரண்டக நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். தண்ணீரோடு இழுபட்டுவரும் எண்ணெய்ப் படர்போல் படராக அது தொடர்ந்து நாவலில் பிர்தவ்ஸிடமும் பாத்திமாவிடமும் படர்ந்திருக்கிறது என்றுதான் கருத வேண்டியுள்ளது. சிலவேளை இவர்கள் சல்மா கூறுவதுபோல் அவரது சகபயணிகளாக இருந்தாலும் படைப்பாளி சிறிய சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளவுமா தடைசெய்யப்பட்டிருக்கிறது? எப்படியிருந்த போதிலும் படைப்பாளியின் சுதந்தர வெளிக்குள் அத்துமீற நான் விரும்பவில்லை.

மரியாவிற்கும் இந்த மரபு சார்ந்த கவலைகள் இல்லை. இவள் வேறு ரகம். தனது சுயத்தை விரும்பியவனின் அன்பில் கரைத்துக்கொள்வதில் திருப்தியடைகின்றாள். வஹிதாவின் திருமணத் தகவல் தனக்குச் சொல்லப்படவில்லை என்ற கவலை. சொல்லப்பட்டிருக்க வேண்டுமென நினைக்கிறாள். அதற்கு உறவுசார்ந்த உரிமை இருப்பதாகவும் கருதுகிறாள். இந்த மீறல் அந்த இஸ்லாமியச் சமூகத்திற்கு வெளியில் இருந்து வந்ததால் அதன் தர்க்கம் கண்டுகொள்ளப்படாமல் போகும் வாய்ப்பே அதிகம் உள்ளது.

இந்நாவலில் வரும் குழந்தைகளின் உலகுதான் வர்ணக் கலவைகளால் உயிர்ப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ராபியா, மதினா, அஹமது, இலியாய் இவர்களின் உலகம் மனிதக் காலடி படாத புற்களின் செழுமையோடு இருக்கிறது. பிஞ்சுச் சிறகுகளைத் தமது விருப்பம்போல் விரும்பிய இடமெல்லாம் விரித்துக்கொள்கிறார்கள். அதனால்தான் இந்நாவலில் வரும் வளர்ந்த பெண்கள் அனைவரும் அந்தக் குழந்தைகளின் உலகுக்குள் மீண்டும் போகவே ஆசைப்படுகிறார்கள்.

மொட்டை மாடியில் நின்று குழந்தைகளின் விளையாட்டைப் பார்த்த சொஹ்ரா குழந்தையாக மாறினால் இந்த மனச்சுமை இருக்காது என எண்ணுகிறாள். பிர்தவ்ஸ் சிறுவர்களுக்குப் படம் காட்டும் ஆசீர்வாதத்தை நினைக்கையில் சிறுமியாகவே இருக்க ஆசைப்படுகின்றாள். ஆடையற்ற சிறுவர்கள் காரைச் சுற்றிக் கூக்குரல் இடுகையில் றைமாவும் சொஹ்ராவும் திருமணத்தின் முன்னிரவில் தனக்கு அருகில் தூங்கும் ராபியாவைப் பார்த்து வஹிதாவும் கிட்டி விளையாடும் சிறுமியைப் பார்த்து ஷெரிபாவும் இவ்வாறே ஏங்குகிறார்கள். சல்மாவின் ‘இந்தக் கனவுகளிடம்’ என்னும் கவிதையில் “முந்திய காலத்தின் கனவுகளையேனும்/ அப்படியே திருப்பித்தர முடியுமென்ற/ உத்தரவாதத்தை” எனக் குறிப்பிடுவதை இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்

குடும்ப வாழ்வில் சந்தோசமும் நிறைவும் அடைந்த பெண் ஒருவரை இந்நாவலில் கண்டுகொள்வது சிரமமாகவே இருக்கிறது. பருவம் அடைந்த பின்னர்தான் அவர்களது உலகம் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. விதிக்கப்பட்ட வாழ்வின் பங்காளியாவதற்குத் தங்கள் மனம் விரும்பும் தேவைகள் அனைத்தையும் இழந்து முகமறியாத குகைக்குள் நுழைவதற்குத் தயாராக்கப்படுகிறார்கள். இதை ஆதிகாலக் குகை எனச் சல்மா ‘இடம்’ என்னும் கவிதையில் குறிப்பிடுகின்றார். இவர்கள் பெற்றோரின் வற்புறுத்தல்களுக்குப் பலியாடாகிப் போனவர்களாகவே இருக்கிறார்கள். பருவம் அடைந்தபின் திருமணமாகாமல் இருப்பது சாபம்போல் கருதப்படுகிறது. திருமணம் சார்ந்த சமூக வழக்கு பி. ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை நாவலில் வேறுவிதமாக வருகின்றது. தென்கலை ஐயங்கார் குடும்பத்தில் பெண்கள் பூப்பெய்துவதற்கு முன்பு திருமணம் முடித்தாக வேண்டியிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் குருநகர் கிராமத்தில் உரிய வயதில் திருமணமாகாத பெண்ணை ‘மண்ணரையவா விட்டிருக்கு’ எனக் கேலியாகக் குறிப்பிடும் வழக்கம் உள்ளது. எல்லா வகையிலும் முடிவில் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தாம். “பெண்களாகிய எமக்குக் கிடைக்கும் வாழ்க்கை ரொம்பவே அநீதியானது” என்ற சல்மாவின் ஆதங்கம் புரிந்துகொள்ளக்கூடியதே.

மனம் ஒப்பாத அத்திருமணங்கள், எந்தச் சமூக மரபைக் கட்டிக்காக்க விரும்பினவோ அந்த மரபின் ஒழுக்கங்களை ரகசியமாக, தாராளமாகவே மீறுகின்றன. அதேபோல் அந்த இறுகப் பூட்டிய கதவுகளின் பின்னால் அப்பெண்களின் அகவுலகின் கொந்தளிப்பு சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் வெடித்து அனலாய்ப் பறக்கிறது. பாலுறவு சார்ந்த உரையாடல்கள், புறவயமாக இறுகியிருக்கும் சமய மரபுகளை முட்டி மோதி உடைத்துக்கொள்ளாமல், உலைபோல் அதற்குள்ளேயே கொதிக்கும் குமிழ்களை உருவாக்கிக்கொள்கின்றன. ஆயிசம்மாவின் மரணவீட்டில், வஹிதாவின் திருமண நிகழ்ச்சியிலும் அவள் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இல்லை என்றபோதும் ஏன் உடலுறவு பற்றிய வெளிநாட்டு வீடியோ பார்ப்பதுவரை உரையாடல் கொதித்துப் பறக்கிறது. வெளிப்படையான பேச்சும் வீரியமும் குறையாமல் மூடுண்ட கதவின் பின்னால் வாழ விதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களது கொதிநிலை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னைய தமிழ் நாவல் மரபில் பெண்கள் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படையாக எழுத்தில் முன்வைப்பது அரிதாகவே இருந்துள்ளது. இந்திரா பார்த்தசாரதியின் மழை நாடகம் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டபோது, அந்நாடகத்தின் முக்கியப் பெண்பாத்திரமான நிர்மலா “need a man” என்று கூறியபோது அரங்கத்தில் எழுந்த சிரிப்பொலியையும் இதே ஆசிரியரின் குருதிப்புனல் நாவலை விமர்சித்த அம்பை, ‘இ. பா இந்நாவலை ஒரு சாமான் விவகாரமாகவே நோக்கியுள்ளார்’ என்ற விதமாகக் குறிப்பிட்டபோதும் எழுந்த சில அதிர்வுகளையும் நினைத்துப் பார்க்கிறேன். இதேபோல் ஈழத்தில் 60களில் பவானியின் சில சிறுகதைகள் அதிர்வுகளை ஏற்படுத்தின. இங்கே பெண்கள் கூறியதால்தாம் இந்த வியப்பும் அதிர்ச்சியும். ஆனால் இன்றைய பின்நவீனத்துவம் இவற்றையெல்லாம் ஊதித் தள்ளிவிட்டது. இவர்கள் படித்த மத்தியதரவர்க்கப் பெண்களாக இருக்கிறார்கள் அல்லது அவர்கள் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நாவலில் வரும் ஆண்கள் மிகவும் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள். புதை நடுவில் தோன்றும் மங்கல் முகங்கள். ஓரளவு தெளிந்த முகம் கரீம், சுலைமான் ஆகியோரதுதாம். இன்னும் தெளிவானது சிறுவன் அஹமதுவினதே. கரீமின் முகம் அவரது அவ்வப்போதைய தேவைக்குரியது. மரியாயினது அளவிற்குக்கூடத் தெளிவாக இல்லை. சுலைமானின் தெளிவான முகம் நியாயங்களின் பால் அல்ல. இஸ்லாமிய வழக்கிற்கு உடைவு ஏற்படும்போதுதான் அவர் முகம் இன்னும் தெளிவாகத் தெரியவருகிறது.

திடீர் திடீரென்று பெண்கள் சிலர் தங்கள் சோகக் கதைகளுடன் தோன்றுகிறார்கள். பொதுவானது கணவனை இழந்த சோகம்தான். ஷெரிபா ஆரம்பத்தில் சாதாரணமாக நடமாடினாலும் பின்னர் தனது ரகசிய உறவுடன் வெளிவருகிறாள். நஸாவும் அவ்வாறே. இன்னும் சிலர் மர்மங்கள் சூழ அறிமுகப்படுத்தப்பட்டு, புகை கலைந்ததுபோல் மறைந்துவிடுகிறார்கள். இதேபோல் ரமேசின் அம்மா என்று வீமாவால் மர்மப் புகைசூழ அறிமுகப்படுத்தப்படுபவர் விளக்கமற்று மறைந்துவிடுகிறார்.

நபீஸாவிற்கும் அசீஸுக்கும் உள்ள உறவில் பிரிவு ஏற்படுவதற்குரிய காரணம் தெளிவாகவே இல்லை. அவர்கள் இருவருக்குமான அந்தரங்க உரையாடல்கள் அவரவர்களுக்கு மட்டுமானவையே. நகங்களால் கீறித் தன் எதிர்ப்பை வலுப்படுத்த முனையும் நபீஸாவிடம் “ச்சீ நீயெல்லாம் ஒரு பொம்பளையா? என் நிலைமையைக் கொஞ்சமாச்சும் புரிய வேணாம்?” எனக் கூறுவது அவ்வளவு பெரிய தப்பா? அவனது வார்த்தைகள் அவளை மட்டுமின்றி அனைவரையுமே அதிரச் செய்திருக்க வேண்டுமெனத் தொடர்ந்து வருகிறது. சரி அவளை அதிரச் செய்திருக்கலாம். அனைவரையும் ஏன் அதிரச் செய்ய வேண்டும் இந்த அந்தரங்க உறவில் அனைவரும் ஏன் இடையில் புகுந்தார்கள்? தெளிவற்ற அவர்கள் உறவில் அசீஸ் என்ன முடிவுதான் எடுக்க முடியும்? நபீஸாவின் சூழலில் அவளால்தான் என்ன தீர்மானத்தை எடுத்துவிட முடியும். சிவாவின் திருமண உறவு உடையக் கூடாது என பிர்தவ்ஸ் மூலம் நியாயம் வழங்குதல் இங்கு ஏன் இல்லாமல் போனது? அசீஸைக் குற்றவாளியாக ஆக்குவதும் தன்மீது கணவன் அன்பாக இல்லையே எனச் சதா துயருறும் வஹீதா ஒரு தடவையாவது கணவன்மீது அன்பாக இருந்திருக்கிறாளா? குற்றத்திற்குரிய மூலைக்குள் சிக்கந்தரைத் தள்ளிவிடும் விவரிப்புகள் ஏன்? இது தஸ்லிமா நஸ்ரினின் French Lover நாவலை நினைவூட்டுகிறது. நபீசா, அசீஸை வெறுக்கும் தெளிவற்ற காரணம்போலவே தஸ்லிமா நஸ்ரினின் நாவலிலும் தெளிவற்ற காரணங்களுக்காக நிலாஞ்சனா தன் காதலன் Benoir Dupontஇடமிருந்து பிரிந்துபோகிறாள். இவை பெண்ணியல் கருத்துக்கான வலிந்த உருவாக்கங்களா? நான் தஸ்லிமா நஸ்ரின் அல்ல. என் விடயம் முற்றிலும் வேறுபாடானது எனச் சல்மா Front Line Literary Reviewக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்ட கருத்துகளை ஏற்றுக்கொண்டுதான் இக்கேள்வியை முன்வைக்கிறேன்.

சோஹ்ரா தன் தங்கை பிர்தவ்ஸைத் தன் தாய் வீட்டில் பார்க்கும்போது, அவள் முகத்தில் அதுவரை இல்லாத மாற்றத்தைப் பார்த்துவிட்டு இப்படி நினைக்கிறாள் “அதற்குள்ளாகவா மனதைத் தேற்றிக்கொண்டாள் . . . எத்தனைமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்றாள்.” இது அர்த்தமற்ற, பொருத்த மற்ற நினைப்பு. பிர்தவ்ஸ் தனக்குத்தானே திருமணவிலக்கு வாங்கிக்கொண்டவள். அவளுக்கும் சிவாவுக்குமிடையிலான உறவு வஹீதாவால் கண்டுகொள்ளப்படும்வரை, அவள் தற்கொலை செய்ய முயன்றாள் என்ற எந்த விவரிப்பும் நாவலில் இல்லை. இதே போன்று வஹிதா தன் திருமணத்திற்குப் பின்பு அம்மா, அக்கா, தங்கை அனைவரையும் விட்டுப் பிரியப்போவதாக நினைத்து வருந்துகிறாள். நாவலில் அவளுக்கு அக்காவே இல்லை.

அரசியல் நிகழ்வுகளால் அதிர்வுகளையோ பாதிப்புகளையோ உள் வாங்காத மாந்தர்கள் நடமாடும் இந்நாவலில் மகாத்மா காந்தியின் படுகொலையும் 1983ஆம் ஆண்டின் இலங்கை இன அழிப்புகளும் செய்தியாகச் சொல்லப்பட்டபோதும் அவை செய்திகளாகவே கடந்துபோகின்றன. காந்தியின் கொலைக்கும் ஒரு கருச்சிதைவிற்கும் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டாலும் பின்னயவை அவ்வாறு இல்லை. அவரவர்களுக்கு அவரவர் சோகங்களே முதன்மையானவை.

நாவலில் ஆசிரியரே கதைசொல்லியாக இருந்தபோதும் நம் கவனத்துள் புலப்படாத வகையில் பாத்திரங்களும் கதைசொல்லிகளாக்கப்பட்டுள்ளன. இன்னும் நாவலின் பல பாத்திரங்களுள் சல்மாவின் சிந்தனைகளே வெளிப்படுகின்றன. பாத்திரங்களின் முரண்பட்ட குணநலன்களுக்கு ஏற்பச் சிந்தனைகள் மாறுபடவில்லை.

சல்மா தனது இரண்டாவது நாவல் பற்றியும் Front Line Literary Reviewஇல் குறிப்பிடுகின்றார். தமிழ்ப் படைப்புலகில் பலரது வழுக்கல் பாறை இரண்டாவது வெளியீடுதான். கவிதைத் தொகுப்பில் சல்மாவிற்கும் அது நிகழ்ந்திருக்கிறது. தனது மன அவசங்களை நிதானமாக வெளிப்படுத்திப் பலரது கவனத்தையும் கவர்ந்த அவரது ஒரு மாலையும் இன்னொரு மாலையும் தொகுப்புடன் ஒப்பிடுகையில் பச்சைத் தேவதை முன்னதற்குச் சமமானதாக இல்லை. முதலாவது படைப்புக் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தைக் காப்பதற்கான முயற்சியின் விளைவாகவும் இருக்கலாம். மனத்தில் உறைந்திருந்த உறவின் நெருக்கடிகளை வெளிப்படுத்தும் தேவை முதல் தொகுதிக்குப் பின்னணியாக இருந்திருக்கிறது. இரண்டாவதற்கு, வெளியிலிருந்து உள்வாங்கும் தேவை இருந்திருக்கலாம். காரணம் முதல் தொகுப்பில் வலிந்த கவிதைகளைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இரண்டாவதில் உறவுகள் ஏற்படுத்திய புரிதலின்மையின் நீட்சியும் உணர்வுகளைக் கூர்மையாக வெளிப்படுத்த முடியாத படிமங்களுமாகத் தொடர்கிறது. உதாரணமாக ‘மெழுகுச் சுடர்’ கவிதையில் “கூச்சமின்றி வளர்த் தெடுக்கிறோம்/பிரியங்களால் மெழுகி ஒரு சுடரை” என்னும் வரியுடன் ‘எனதிந்தச் சொல்’ என்னும் கவிதையில் “மின்சாரம் நீங்கிய இரவில்/ சிம்னிச் சுடரில்/ நிரம்பித் ததும்புகிறது மௌனம்” என்னும் வரிகளை ஒப்பிடும்போது பின்னயதன் போதாத்தன்மை புரியும். “தெருவை நனைக்கிறது காற்று”, “மிதந்து மிதந்து கொத்தும்” போன்றவையும் இவ்வாறே. இதில் ‘இந்த இரவில்’ கவிதை ஒரு சரிவுதான். ‘எல்லா அறிதல்களுடனும் விரிகிறதென் யோனி’ என்னும் வரி ஏற்படுத்திய வீரியம் இங்கு இல்லாமல் போயிற்று. இதுதான் நான் முன்னர் குறிப்பிட்ட வெளியிலிருந்து உள்வாங்கும் தேவை. இவ்வாறு பொருந்தா ஒப்பீடுகளற்ற தன் இயல்பான வெளிப்பாட்டுத் திறனை அவர் கொலைசெய்ய முயலக் கூடாது.

தனித்துவமான கனமற்ற சிறகின் மென்மைகொண்ட கவிதை மொழி சல்மாவினுடையது. அது அர்த்தமும் ஆழமும் குறியீட்டு வீரியமும் கொண்ட கவிதைகளில் வெளிப்படும்போது பறப்பதற்கான வெளியை உருவாக்குகின்றன. அதேவேளை தெளிவற்ற கருத்துகளையும் பொருத்த மற்ற குறியீடுகளையும் கொண்டுள்ளபோது நடப்பதற்கு வழியற்ற முட்டுச் சந்துகளையும் உருவாக்கிவிடுகின்றன.

நனைந்த சிறகுகளுடன் அல்லது வெட்டப்பட்ட சிறகுகளுடன் எந்நேரமும் மறுகிக்கொண்டிருக்கும் கவிதைகள்மூலம் வெளிவந்த சல்மாவை, சீருடையுடன் பெண்கள் படையணிக்குத் தலைவியாக முன்னிறுத்தி, “சமகாலப் பெண்களுக்குத் தவறான வழிகாட்டியாக, தனக்கெதிரான சூழல் நிலவும்போது அதனை எதிர்த்துப் போராடும் திறனற்று ஓடி ஒளியும் பெண்ணியத்திற்குப் புறம்பான எதிர்ப் பெண்ணியக் குரல்” என விமர்சிப்பது (மீறும் பெண்மையின் சித்திரம்-சரவணன். திண்ணை 25 ஜூன் 2009) பெஞ்சிலுள்ள நீதிபதி யால்தான் முடியும். இலக்கிய மனம் கொண்டவர்களால் முடியாது என நினைக்கிறேன். தீர்ப்பைவிட உடன் நடந்து துயரங்களை வலிகளைப் புரிந்துகொள்வதே மேலானது. ஒரு படைப்பு அதைத்தான் கோர முடியும். இங்கு ஈழத்தின் முக்கியக் கவிஞர்களில் ஒருவரான சண்முகம் சிவலிங்கத்தின், ‘ஒரு வாசிப்பும் அதன் நேசிப்பும் இந்த வரிகள்’ என ஆரம்பமாகும் ‘சல்மாவுக்கு’ என்ற கவிதையின் முக்கியப் பகுதிகள்.

துயர்களை
தோசைக் கல்லில்
தெறித்துவிட்டு
நீராடப்போ

உன்னோடு
பகல் முழுதும் திரியும்
சூரியனை
தோளில் தட்டி முத்தம்
கொடுத்து
மாலையில் வீடு திரும்பு

நிலவில்
ஏறி நில்
மலையில்
குதி மண்ணில் நட

யார் எமக்கரசர்
இங்கு
யாரிடல் நியமம்?

நீயே
உனக்கு அரசி
என
நிமிர்.

சல்மாவின் கவிதைகள் இவ்வுணர்வுகளைத்தான் எழுப்பக்கூடியவை எனக் கருதுகிறேன். இதைவிடுத்து அவருக்குச் சீருடை அணிவித்துப் பார்ப்பது படைப்புலகிற்குப் புறம்பானதே.

சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உறவு ஏற்படுத்திய அதிகாரத்தை ஒப்புக்கொள்ள மறுக்கும் பெண் மனநிலையை, கனமற்ற, மெலிந்த, கவித்துவமான மொழியால் தன் கவிதைகளை வெளிப்படுத்திய சல்மா, அதே அங்கீகரிக்கப்பட்ட உறவின் அதிகாரச் சில்லுள் சிதைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி, மூடிக்கிடக்கும் கதவுகளின் பின்னால் வாழும் பெண்களின் மனத்தைக் கவித்துவம் களைந்த கடும் மொழியினூடாய் இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். சுதந்திரமாகச் சிந்திக்கும், வாழ முனையும் பெண்கள், சமூக அநீதிகள் நிறைந்த சூழலில், பல்வேறு முனைகளிலிருந்து மரபின் காப்பாளர்களால் வரும் எதிர்ப்புகள், கேலிகள், அவமரியாதைகள் எதிர்கொள்வது என்பது யுத்த களத்திற்குச் சமமானதே. எப்படியிருந்தபோதிலும், தமிழ்ப் படைப்புலகில் சல்மாவின் கவிதைகள்போல், இந்நாவலும் அதன் சாதக பாதகங்களை மீறி வாழ்ந்துகொண்டிருக்கும்.

1 comments:

Lareena said...

காய்தல் உவத்தலற்ற நடுநிலைமையான, அருமையான விமர்சனமொன்றை வாசித்த நிறைவு. நன்றி.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்