/* up Facebook

Sep 27, 2010

பெண்ணின் ஆடையை உரித்துப் பார்க்கும் குறுகுறுப்பு! - சுகுமாரன்


ஸ்பிக்நியூ ஹெர்பர்ட் (Zbigniew Herbert) போலந்துக் கவிஞர். நோபல் பரிசு பெற்ற சக போலிஷ் கவிஞர்களான செஸ்லாவ் மிலோசுக்கும் விஸ்லவா சிம்போர்ஸ்காவுக்கும் ஒப்பானவர் என்றும் இல்லை, அவர்களை விட மேலானவர் என்றும் குறிப்பிடப்படுபவர். இரண்டாம் உலகப் போரின் அழிவுகளையும் பின்னர் சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பால் போலந்தில் விளைந்த நாசங்களையும் கவிதைகளில் சித்தரித்தவர்.

ஹெர்பர்ட்டின் முழுக் கவிதைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். பின்வரும் உரைநடைக் கவிதை யோசிக்கச் செய்தது. என் யோசனைக்கும் ஹெர்பர்ட்டின் கவிதைக்கும் நிகழ்காலச் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படித் தோன்றினால் அது பொய்யல்ல.

ஒரு ரஷ்யக் கதை

எங்கள் சின்ன தந்தையார் ஜார் வயதானவராகி விட்டார். மிகவும் வயதானவராகி விட்டார்.

சொந்தக் கைகளால் ஒரு புறாவை நெரிக்கக் கூட இப்போது அவரால் முடிவதில்லை. அரியாசனத்தில் உட்கார்ந்தே பொன்னாகியிருக்கிறார்; குளிர்ந்து உறைந்திருக்கிறார். அவருடைய தாடிமட்டும் ஊர்ந்து நிலத்தைத் தொடுகிறது.அப்புறமும் வளர்கிறது.
யாரென்று தெரியாத வேறு யாரோ ஆட்சி செய்தார்கள். குறுகுறுப்படைந்த மக்கள் ஜன்னல் வழியே அரண்மனைக்குள் எட்டிப் பார்த்தார்கள். கிரிவானசோவ் கழுமரங்களால் ஜன்னலுக்குத் திரையிட்டான். அப்படியாகக் கழுவேறியவர்களே எல்லாவற்றையும் பார்த்தவர்கள்.

நல்ல காலம், கடைசியில் ஜார், எங்கள் சின்ன தந்தையார் காலமானார். மணிகள் ஒலித்தன; மீண்டும் ஒலித்தன. எனினும் அவர் உடலை அவர்கள் வெளியே கொண்டுவரவில்லை. எங்கள் ஜார் அரியாசனமாகவே மாறியிருந்தார். அரியாசனத்தின் கால்கள் ஜாரின் கால்களுடன் பின்னியிருந்தன; அவருடைய கைகளும் அரியாசனத்தின் கைப்பிடிகளும் ஒன்றாகயிருந்தன. அவரைப் பிரித்தெடுப்பது அசாத்தியமாக இருந்தது. தங்க அரியாசனத்துடன் ஜாரையும் சேர்த்துப் புதைப்பது அவமானம்தான், இல்லையா? ( The Collected Poem 1956 - 1998 Zbigniew Herbert Atlantic Books London 2007)

“நாம் வாழ்வது தணிக்கை யுகத்திலல்ல; செய்திகள் உற்பத்தி செய்யப்படும் கால கட்டத்தில். நாமிருப்பது ஒரு பைத்தியக்கார விடுதியில் என்று தோன்றுகிறது. அங்குள்ள நோயாளிகளைப் போலத்தான் நாம் ஒவ்வொருவரும் நடத்தப்படுகிறோம்.” நெருக்கடி நிலை காலத்தின் நினைவு நாளையொட்டி தில்லியில் நடந்த ஜன நாயகப் பாதுகாப்புக் கூட்டத்தில் அருந்ததிராய் ஆற்றிய உரையில் கவனத்தில் தைத்த வரிகள் இவை. இந்தக் கூற்றின் பின்னாலிருக்கும் அரசியலை விட அதில் தொனிக்கும் ஊடகம் மீதான விமர்சனம் சிந்தனையைக் கிளறிவிட்டது. ஏறத்தாழ இதே தொனியிலான விமர்சனத்தை ஊடகப் பிரபலமான வீர் சங்வியும் அவருடைய பத்தியில் (Parallax View The New Indian Express 4 July 2010) முன்வைத்திருந்தார். விளம்பர மாடலும் நடிகையுமான விவேகா பாபாஜியின் தற்கொலை மரணச் செய்தியை ஊடகங்கள் கையாண்ட விதத்தை முன்னிருத்தி அதைச் சொல்லியிருந்தார். “வணிகத் தேவைகளுக்காக நாம் (ஊடகங்கள்) எந்தக் கீழ் நிலைக்கும் இறங்கத் தயாராகிறோம். செக்ஸ், கவர்ச்சி, மரணம் ஆகியவற்றின் கலவையான செய்திக் கதைகளுக்கே உடனடிச் சந்தை இருப்பது நமக்குத் தெரிகிறது.”

இந்த இரண்டு கட்டுரைகளையும் அடுத்தடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். ஊடகப் பணியாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அதிகப் புராதனமாகி விடாத கடந்த கால நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன.

காமமும் கவர்ச்சியும் கலந்த ஒரு ஸ்டோரியை ஒருமுறை மட்டும் ஒளிபரப்பு செய்துவிட்டு பின்வந்த நாட்களில் அதைப் பின்தொடர விருப்பம் காட்டாததும். இந்த விருப்பமின்மைக்காக நிர்வாகத்திடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டதும் ஞாபகத்துக்கு வந்தன.

அமெரிக்கா வாழ் மலையாளிப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை அவளுடைய புகுந்த வீட்டார் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்தக் குழந்தை தங்களுடைய மகனுக்குப் பிறந்ததல்ல என்று கணவன் வீட்டார் குற்றம் சாட்டினர். வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் குழந்தையின் மரபணுவைப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. சோதனையில் குழந்தையின் பிறப்பு நியாயம் தெளிவாக்கப்பட்டது. பெண்ணின் ‘களங்க மின்மை’ ருசுப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கு ஊடகங்களுக்குப் பஞ்சமில்லாத பரபரப்புச் செய்தி கிடைத்தது. தோற்றத்தில் அழகியும் மேனாட்டு உடையில் இன்னும் கவர்ச்சியானவளாகவும் தென்பட்ட ஷிரீன் புகைப்பட, வீடியோ காமிராக்களுக்கு நல்ல தீனியாக இருந்தார்/ இருந்தாள். ஷிரீன் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட செய்தியை மட்டுமே என்னால் ஒளி பரப்ப முடிந்தது.அதை முகாந்திரமாக வைத்து ஷிரீனின் முன், பின் கதைகளை ஒளிபரப்ப விரும்பவில்லை. சகல தொலைக்காட்சிகளும் பார்க்கச் சுவா ரசியமான செய்தியை மாய்ந்து மாய்ந்து ஒளிபரப்பியபோது நான் மட்டும் விலகி நின்றது நிர்வாகத்துக்கு எரிச்சலூட்டியது. விசாரித்தபோது அமெரிக்காவிலிருந்து வீடியோப் பதிவுகளை உடனடியாகப் பெறும் வசதியில்லையே என்று காரணம் சொல்லித் தப்பினேன். ஆனால் அந்தக் கதையை மோப்பம் பிடித்துப் பின்தொடராமல் விட்டதற்குக் காரணம், ஷிரீனின் நிஷ் களங்க முகம்.2001 ஆம் ஆண்டு பதினெட்டாம் வயதில் ஷிரீனுக்குத் திருமணமானது. கீழ் மட்ட விவசாயக் குடும்பம் அவளுடையது. மேல்நிலைப் பள்ளிவரை படித்திருந்தாள். பொருளாதார நிர்ப்பந்தங்கள் காரணமாக அமெரிக்க மாப்பிள்ளைக்கு அவளை மணம் பேசினார்கள் பெற்றோர். பையனுக்கு மூளை வளர்ச்சி குறைவு. தன்னை மணந்து கொள்ளப் போகிறவனை ஷிரீன் முதல் முதலாகப் பார்த்ததே திரு மணத்துக்கு முந்தைய நாள்தான். திரு மணம் முடிந்த ஓராண்டுக்குப் பிறகு அவளும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். மாமனார், மாமியார், கணவனுடன் ஐந்து ஆண்டுகளை அங்கே கழித்தாள்.

கேரளத்து நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்ந்த அவளுக்கு அந்நிய நாட்டு வாழ்க்கை முறைகளுடன் இசைந்து போவதில் சிக்கல்கள் இருந்தன. ஒருவாறு அவற்றைச் சமாளித்து ஒரு சின்ன வேலையையும் தேடிக் கொண்டாள். ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள். ஆனால் கணவன் வீட்டாருக்கு அவள் தன்னியல்பாக வாழ முயன்றது பொறுக்கவில்லை. வேலை பார்க்கும் இடத்தில் எதையோ திருடினாள் என்று இட்டுக் கட்டி அங்கிருந்து வெளியேற்றச் செய்தார்கள். அதன் பின்னர் அவளுடைய நடத்தை சரியில்லை என்று தூற்றினார்கள். அதன் முத்தாய்ப்பாகவே மேற்சொன்ன வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது கணவனுடனும் மகளுடனும் கேரளத்துக்குத் திரும்ப உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தாள். தீர்ப்பும் அப் படித்தான் அமைந்தது. கணவன், மகளுடன் ஊர் திரும்பினாள் ஷிரீன்.

மனைவி காலமானதைத் தொடர்ந்து 2007ல் மாமனார் பாஸ்கர காரணவரும் கேரளம் திரும்பினார்.மகனுடனும் மருமகளுடனும் வசிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவிலிருந்து வரும் கணிசமான ஓய்வூதியத் தொகையில் சுக ஜீவிதம். அவருக்கு ஷிரீனின் நண்பர்கள் மோசக்காரர்களாகவும் அவர்களுடன் அவள் அதிக நேரத்தைச் செலவழிப்பது ஒழுக்கக் கேடாகவும் தோன்றின. அப்பிராணியான மகன் சார்பில் மாமனார் அதிகாரம் செலுத்தினார். இவை பின்னணிச் செய்திகள்.

இணையம் மூலம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான ஓர் இளைஞரைக் கடந்த (2009) ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதி,தன் வீட்டில் சந்தித்திருக்கிறாள் ஷிரீன். அவர்கள் போட்ட திட்டப்படி மறுநாள் இரவு, முன்பே திறந்து வைத்திருந்த புழக்கடைக் கதவு வழியாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள் இணைய அறிமுக இளைஞனும் அவனுடைய மற்ற இரு நண்பர்களும். நான்கு பேரும் சேர்ந்து மாமனாரைக் கொலை செய்ததாகச் சொல்லப்பட்டது. ஊடகங்கள் உற்சாகத்தில் துள்ளின. காமம். காசு.

கூடாவொழுக்கம், வன்முறை எல்லாம் கலந்த திரைக்கதையின் நாயகியாக ஷிரீனைப் பிரதிஷ்டை செய்தன. அவள் முகம் செய்திகளில் அலை பாய்ந்தது. எந்த வழக்குக்கும் இல்லாத வகையில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் அதிவேகமாக விசாரித்தது. தீர்ப்பும் வழங்கியது. கொலைக்குத் திட்டமிட்ட ஷிரீனுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் கொலையைச் செய்த மற்ற நண்பர்களுக்கு இரண்டு ஆயுள் தண்டனையும் வழங்கியது.இது சாதாரணமான குற்றவியல் நட வடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் ஊடகங்கள் காட்டிய மிதமிஞ்சிய உற்சாகமும் எந்த வழக்கிலும் கடைப்பிடிக்காத துரித விசாரணையை நீதிமன்றம் மேற்கொண்ட விதமும் மனோபாவமும் யோசிக்க வைத்தன. ஊடகங்களின் பார்வையில் ஷிரீன் பொதுப் பண்பாட்டுக்கு ஏற்புடையதல்லாத செயலைச் செய்தவள். தண்டிக்கப்பட வேண்டியவள். நீதியின் பார்வையும் அதை அங்கீகரிக்கும் வகையிலானது. விரைவு நீதிமன்றத்துக்கு வரும் பெரும்பாலான வழக்குகள் நிலுவையிலிருக்க, ஏழே மாதத்தில் ஷிரீனின் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்படுகிறது. ஒரு பெண்ணை ஆடை உரித்துப் பார்க்கும் குறுகுறுப்பும் அப்படிப் பார்த்து எச்சிலை இறக்கிக் கொண்டே அவள் அப்படி நின்றது ஒழுக்கக்கேடு என்று குற்றம்சாட்டும் தந்திரமும் இந்த விவகாரத்தில் மறைந்து கிடப்பதாகத் தோன்றியது. வழக்கைச் சார்ந்து காவல்துறை முன்வைத்த குற்றவியல் அணுகுமுறையும் ஊடகங்களின் வணிக முனைப்பும்தான் இதில் புலப்பட்டன.ஷிரீன் தரப்பிலிருந்து ஒரு விளக்கமும் கேட்கப்படவில்லை. அப்பாவி செங்ஙன்னூர் மலையாளிப் பெண்ணைக் கொடூரமானவளாக மாற்றியது எது என்று விசாரிக்கப்படவில்லை. நீதிமன்றத்துக்கு அந்த விசாரணை தேவையற்றது.

ஆனால், ஊடகத்துக்கு அது தவிர்க்க முடியாததாக இருந்திருக்க வேண்டும்.

மலையாள ஊடகங்கள் கொண்டாடிய இந்தக் கொலைக் கதையின் அறியப்படாத பக்கத்தை யோசித்தவர் எழுத்தாளர் சக்கரியா மட்டுமே.

'எந்தப் பெண் அமைப்பும், மத அமைப்பும், அரசியல் பிரிவும், எந்த அறிவுஜீவியும் எந்த ஊடகப் பண்டிதனும் ஏன் அந்த இளம் பெண்ணின் தர்மசங்கடமான நிலைமையைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. திருமணம் என்ற பெயரால் பதினெட்டு வயதில் அடிமைப்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டவளின் தனிமையைப் பற்றியோ அந்நியமான ஒரு பிரதேசத்தில் அவள்பட்ட துன்பங்கள் பற்றியோ எந்த விவாதமும் எழவில்லை. இனி அப்படி எழவும் வாய்ப்பில்லை. அவள் தான் கொலைகாரியாக அடையாளப்படுத்தப்பட்டு விட்டாளே! ஊடகமும் சட்ட அமைப்பும் கபடமானவை. அவை உண்மையில் ஷிரீனை வெறுக்கின்றன. ஏன்? அவலமாக முடிந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ ஷிரீன் தன்னுடைய அடிமைத் தனத்துக்கும் தனிமைக்கும் எதிராகக் கலகம் செய்திருக்கிறாள். அதனால் அவளை நசுக்கியே ஆக வேண்டும். ஆனால் நீதி கருணையும் கொண்டது, நீதியரசர்கள் சமயங்களில் தயை மிகுந்தவர்கள். அதனால்தான் ஷிரீனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கவில்லை. காரணம், அவளுக்குக் கணவனும் சிறு குழந்தையும் இருக்கிறார்கள். அற்பக் கருணைகளுக்காக கடவுளே, உமக்கு நன்றி'

இவை சக்கரியாவின் வரிகள்.

தனது சிநேகிதன் ஏற்றுக்கொள்ள மறுத்தான் என்பதால் உயிரை மாய்த்துக் கொண்டார் விவேகா பாபாஜி. அது தொடர்பான செய்திகளும் செக்ஸும் கவர்ச்சியும் குற்றமும் கலந்த திரைக்கதையாகத்தான் ஊடகங்களில் கையாளப்பட்டன. ‘பத்திரிகை ஆசிரியர்களோ பத்திரிகையாளர்களோ தாம் பிழையான ஒன்றைச் செய்கிறோம் என்பதைப் பற்றி யோசிப்பது கூட இல்லை’ என்கிறார் வீர் சங்வி. யோசிக்கா மலிருக்க ஒரே காரணம் இந்தச் சரக்கு விற்கிறது. அதையே தொடர்வோம் என்ற சூத்திரம். அப்படியானால் செய்திகள் நிகழ்வதில்ல. உற்பத்தி செய்யப்படுகின்றன. உண்மைதானா?

உயிர்மை 81 ஆவது இதழில் இந்தப் பத்தியில் எழுதிய ஒரு குறிப்புக்குப் பிற்சேர்க்கை இது.

இரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹி கைது செய்து ரகசியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புகளும் உலகின் பிரபலமான திரைத் துறைக் கலைஞர்களின் வற்புறுத்தலும் இரானிய அரசைக் கொஞ்சம் அசைத்திருக்கிறது. விளைவு, பனாஹி பிணையத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பிணையத் தொகை இரண்டு லட்சம் டாலர். பனாஹியின் விடுதலைக்கான போராட்டத்தில் முன்னிலை வகித்தவர் பிரெஞ்சு நடிகை ஜூலியட் பினோஷே. இரானிய இயக்குநர் அப்பாஸ் கியரோஸ் தமியின் சர்டிஃபைட் காப்பி படத்தில் நடித்தவர். அந்த நடிப்புக்காக கான் திரைப்பட விழாவில் விருதும் பெற்றவர்.

இரானிய அரசின் எரிச்சல் இப்போது பனாஹியிடமிருந்து பினோஷே மீது திரும்பியிருக்கிறது. இரானிய திரையரங்குகளிலோ இரானிய தொலைக்காட்சியிலோ அவர் நடித்த படங்களுக்குத் தடை விதித்திருக்கிறது. அதிகாரங்களுக்குக் கலை, தீய நிமித்தமாக இருக்கலாம்.

நன்றி - உயிர்மெய்

1 comments:

பயணமும் எண்ணங்களும் said...

‘பத்திரிகை ஆசிரியர்களோ பத்திரிகையாளர்களோ தாம் பிழையான ஒன்றைச் செய்கிறோம் என்பதைப் பற்றி யோசிப்பது கூட இல்லை’ என்கிறார் வீர் சங்வி. யோசிக்கா மலிருக்க ஒரே காரணம் இந்தச் சரக்கு விற்கிறது. அதையே தொடர்வோம் என்ற சூத்திரம். அப்படியானால் செய்திகள் நிகழ்வதில்ல. உற்பத்தி செய்யப்படுகின்றன. உண்மைதானா?

---------------------------

எத்தனை நிஜம்..

புரளிகள் பற்றி இங்கே இன்னமும் நடக்குதே..


http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்