/* up Facebook

Sep 18, 2010

*”விபச்சாரி”களைக் கொல்லுதல் - பெட்டை


நத்தார் விடுமுறை காலச் செய்திகளால் நிறைந்திருக்கிற ஊடகங்களுள், மாறுதலாயிருந்தது, கிழக்கு இங்கிலாந்தில் தொடர்ச்சியாய் ஐந்து ‘விபச்சாரிகள்’ கொல்லப்பட்டிருந்தது… எனினும், அமைதியாக ஆரம்பிக்கும் ஒரு ஹோலிவூட் திகில்ப் படத்தின் திரைகளில் கொட்டப்படுகிற கொலைக்குரியதான சிவப்பு நிறமாய் – இந்த செய்தி விடுமுறைக்கால விழாக் கோலங்களுள் திரைப் படங்களுக்குரிய ஒரு திறில்லையும் தராது போய் விட்டது. மேற்கு நாடுகளில், பதின்மர்கள் படிக்கிற திகில் கதைப் புத்தகங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், prostitutes-serial killers-murders இச் சங்கிலி வெகு சகஜம்! ஆகவே, இச் செய்திகள் இன்னபிற சொற்களால் காவிவருவன, பார்த்துப் பார்த்துப் பழகிப்போன திரைப் படங்களில் வந்த கொலைகளாகவும், கொலையாளி பற்றிய சித்திரிப்பாகவும் கடந்து போய்விடுகின்றன.

விபச்சாரிகளைக் கொல்லுதல் தொடர்பான அனுதாப/எதிர்ப்பு வரிகளை எழுத இப் பத்தியை எழுதுவில்லை. விபச்சாரிகளை அல்லது நடத்தை கெட்டவர்களைக் கொல்லுதல் என்பது எமக்கொன்றும் புதிய செய்தியுமல்ல. ஒவ்வொரு மதமும் கொன்றது. உங்களில் எவன் ஒருவன் தவறு செய்ய வில்லையோ அவன் முதற் கல்லை எறியுங்கள் என்றதான குரலொன்றின் இடையீட்டைத் தவிர சலனம் ஒன்றும் இல்லை. மேற்கத்தேய நாடுகளில் ஹொலிவூட் படம் போன்ற எஃபக்ற் உடன் என்றால், மத அடிப்படைவாத நாடுகளில் கடவுளின் பெயரில், எமது நாடுகளில் தெருநாய்களைச் சுடுவதுபோல, இலங்கையில் யுத்தம் ஆரம்பித்த, நிறுத்தப்பட்ட தொடக்கம் முடிவுகளில், கொல்லப்பட்ட பாலியல் தொழிலாளிகள் எமது தேசீய ஏடுகளில், தேசீய மனங்களில் எந்த தொந்தரவையும் தருவதில்லை. கலாச்சார இயக்கங்களால் கொல்லப்பட்டவர்கள் பற்றி தனியே ஒரே ஒரு குழுவை பொறுப்பாக்க ஏதுவாய் போராட்ட வரலாறுகளோ, அதில் துவக்கையும் தூக்கிக் கொண்டு திரிகிற ஆண்களின் செயல்பாடுகளோ இல்லை.

சமூகத்தில் சிறு சலனமே ஏற்பட முடியாத இந்தக் கொலைகள் மதங்கள்/அரசியல்கள் வழிமொழிகிற ஒழுக்கத்தின் பெயரில் நடந்து முடிகின்றன. இந்த அற்ப நிகழ்வுகளைப் பற்றியன்றி, இதனுடன் தொடர்புடையதான “அற்ப” உணர்ச்சியொன்றைப் பற்றியே எழுத விழைகிறேன். ஒரு சமபாலுறவாளரான ஜேன் றூல் (Jane Rule) தனது கட்டுரையொன்றில் எழுதியிருந்தார்: “ஏன் சமபாலுறவை பெரும்பான்மை சமூகம் பயத்துடன் பார்க்கிறது? …இயல்பான நல்ல குணத்தை உடைய சிலரைக் கூட எமது பாலியல்பை ஏற்க சிரமப்படுத்துவது எது?
…அதற்கான பதிலாய் நான் அதிகம் நம்பவேண்டி வந்தது அவர்கள் அவர்களுடைய பாலியல்பையே இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்.
…திருமணம் என்பது அவர்களுக்கு பெருமையாய்க் காட்டிக்கொள்ளும் ஒன்றல்ல. அது அவர்களது பாலியல்பைச் சட்டபூர்வாக்கும் ஒரு நிகழ்வே. அவர்கள் குழந்தைகளை தமது பாலியல்பின் கொண்டாட்டமாகப் பார்க்கவில்லை; அதன் பதில் விளைவாகவே பார்க்கிறார்கள். St.Paul சொன்னார்: “எரிவதைவிட திருமணம் செய்வது பறவாயில்லை.” எனினும் பாலியல்பிற்கு எதிரான தேவாலயத்திலே, இன்னமும் பிரம்மச்சரியம் இலட்சியமாக இருக்கிறது. இங்கே பாலியல்பு பற்றி எல்லாரும் வெட்கப்பட்டே ஆகவேண்டும்…
…அந்த வகையில், தமதான பாலியல் இயல்புகள் குறித்து, தமக்குள் “வெட்கப்பட்டுக்”கொள்ளும் பண்பு உடையவர்களாய் பெரும்பான்மையினரான அவர்கள் இருக்கும்போது, சிறுபான்மையினரான சமபாலுறவாளர்கள் தமது பாலியல் இயல்புகள் குறித்து “பெருமைப்பட” என்ன இருக்கிறது?! அவர்களும் தமக்குள்ளாக காமம் குறித்து வெட்கியும் குற்றஉணர்வுகளுடனும் திரிவதுதானே நியாயமாய் இருக்கும்? சமபாலுறவாளர்கள், வெளிப்படையாய் தமது பாலியல்பை அங்கீகரிக்க வேண்டுதல், தங்களுடைய காமத்தை அங்கீகரிக்காத ஒரு கூட்டத்திற்கு பயம் தரக் கூடிய ஒன்றுதானே?”

ஜேன் றூல், சமபாலுறவாளர்கள் பற்றிய பயத்திற்கு மட்டுமல்ல, அதிகமான போர்னோகிராஃபியின் தண்டனைக்குரிய வன்முறையினதும் வேர் எமது சமூகத்தின் எதிர்மறை ஒழுக்கவாதமே என்றெழுதினார். /the negative morality which pervades our society is the root not only of homophobia but of the punishing violence of much pornography./

சரிதான். போர்னோகிராஃபியை ஊடறு (ஐரோப்பா பெண்கள் சந்திப்பு) இதழில் யசோதா என்பவர் இழிகாம இலக்கியம் என்பதாய் மொழிபெயர்த்திருப்பார். ஜேனின் கூற்றைத் தொடரின் -எம்மைப் பொறுத்தவரையில்- காமமே இழிவுதான்.
நாங்கள் சமபாலுறவை (விபச்சாரத்தை) வெறுக்கவில்லை; நாங்கள் காமத்தையே வெறுக்கிறோம்.
எங்களது உட்பட யாரினது பாலியல்பையும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது; அந்த வகையில், காமத்துடன் தொடர்பாடும் சகலருமே ஆண்களதும் பெண்களதும் வெறுப்புக்குரியவர்கள்தான். 2003-இல் அமெரிக்காவில் [சிறு பெண் பிள்ளைகளிற்கு -peer pressure-களிற்கு வழிகோலும்- ஒரு தவறான வழிகாட்டியாக இருக்கும்] பிரிட்னி ஸ்பியர்ஸை சுடும் சந்தர்ப்பம் கிடைத்தால், தான் சுடுவேன் என்று ஒரு அரசியல்வாதியின் துணைவியார் சொன்னது சர்ச்சையானது. அந்தப் பெண்மணி “சர்ச்சைக்காக” ஏதாவது சொல்லுபவர் என்று பேர் போனவராக இருந்தாலுங்கூட, இந்த வெறுப்பு மிக இயல்பானது. தாம் இன்பம் நுகருகிற உடல் குறித்து வெறுப்பையும் வசைகளையும் (அது குறித்த) கீழ்மையெண்ணத்தையும் உடையவர்களாக ஆண்களே இருக்கிறபோது பெண்களால் எப்படி சில்க் ஸ்மிதாவையும் பிரிட்னியையும் நேசிக்க முடியும், அவர்கள் பெண்ணிலைவாதிகளாக இருந்தாலுங் கூட? இலகுவாய், சில்க் சுமிதாவை, விபச்சாரிகளை பெண்ணிலைவாதிகள்கூட ஏன் வெறுக்கிறார்கள் என்று கேட்கிற யாராலும் அத்தகைய ஆழமான வெறுப்பின் மூலம் எங்கிருக்கிறதென யோசிக்க முடிவதில்லை.

புரட்சிகரமான கோட்பாடுகளை பின்தொடருபவர்களான (குறைந்தபட்சம் அப்படிச் சொல்லிக் கொள்கிற), “பெண்ணியவாதி”களுமான (குறைந்தபட்சம் அப்படிச் சொல்லிக் கொள்கிற) எழுதுகிற ஆண்கள், தமது சமூக அக்கறையை காட்டிக்கொண்டிருக்கும்போது, பெண்கள் குறித்த -ஆள ஊன்றிய – மரபான எண்ணங்களையும் வெளிக்காட்டுகின்றார்கள்.

ஒரு அடிப்படைவாத தமிழ் தேசீய ஏடான “முழக்கம்” பத்திரிக்கையில், (ரொறன்ரோ) கனடாவில் பரவி வருகிற இந்துக் கோயில்கள், சாதியம், என நல்ல ஒரு பேட்டி தருகிறார் எழுத்தாளர் சக்கரவர்த்தி (2000). என்னென்னத்திற்கு பூசை என்றெல்லாம் இல்லாது, பனி கொட்டாவிட்டால் அதற்கு “ஸ்னோ பகவானுக்கு யாகம் செய்வம்” என்பதான புலம்பெயர்ம மகாஜனங்களின் நடப்புகள் பற்றி விமர்சித்துக்கொண்டு போனவர், “இவற்றை தொடர்ந்து அனுமதித்தீர்களேயானால் வெல்ஃபெயார் (welfare) பகவான், வருமானவரி பகவான், கிறெச்சியான் (அப்போதைய கனடிய பிரதமர்) பகவான், பமீலா ஆண்டர்சன் அம்மன் (play boy model) என்று போய்க்கொண்டே இருப்பார்கள் மக்கள்” என்றரீதியில் எழுதியிருப்பார். இதில் சக்கரவர்த்தி சொல்ல வந்தது -மக்கள் வாழ்வில் பங்களிக்கிற எல்லாத் துறை சார்ந்தவர்களையும் உள்ளடக்கிய- ஒரு விமர்சனம். ஆனால் யோசித்துப் பார்த்தால், சக மனிதர்களைச் சிறுமைப்படுத்துகிற, அவமதிக்கிற மதங்களும் சாதியமும் போல அதை ஆதரிக்கிற மோசமான கடவுள்களையும் விட, புலம்பெயர் வாழ்வில், பமீலா ஆண்டர்சன் அம்மனுக்கான பூசை செய்யக் கூடிய “தீமை” என்ன, முக்கியவமாக அதை சொல்ல விழைகிற ஆண்களுக்கு?!

இது ஒரு சிறிய உதாரணம் (அதிலும் சிறுகதைத் தொகுதி முதலாய சக்கரவர்த்தியின் எழுத்துக்களில் விரவி உள்ள ஆணீய கருத்தாடல்களுடன் ஒப்பிடுகையில் இதுவொரு அற்ப விடயம்). இதென்று இல்லை. அனேகமாக, தமது “சமூக அக்கறை”யை வெளிப்படுத்தும்போது, அதற்கு “வலு”ச்சேர்க்கு முகமாக இப்படி ஏதும் சொல்லப்படும். “கவிஞர்கள் பெண்களின் தொடைகளைப் பற்றி எழுதாமல் சமூகத்தில் நடக்கிற விடயங்களைப் பற்றி எழுத வேண்டும்” என்பார்கள். இந்த வேண்டுதல் விடப்படுவது கூட யாரிடம் என்றால் (கேவலம்?!) பெண்களின் தொடையைப் பற்றிக் கூட உருப்படியாய்/ஒழுங்காய் ஒன்றும் எழுதிவிடத் தெரியாத கவிஞர்ப் பெருந்ததொகைகளிடம்! இது ஒரு புறமிருக்க, இத்தகைய கூற்றுக்கள் கூறுவதும் “அற்ப” விடயங்களான, உடல்/உடற்கவர்ச்சி/காமத்தின்-எச்-சிறு – துண்டு பற்றியும் பேசுவதாய் இல்லாமல் “உயர்வான/உன்னதமான” விடயங்களைப் பற்றி பேச வேண்டும் என்பதையே.

ஆண்களால் எழுதுப்படுகிற பிரதிகளுள் -எந்த நிபந்தனையுமின்றி- “விபச்சாரிகள்” “நீலப் பட நடிகைகள்” “நடிகைகள்” கொண்டாடப் படுவதே நியாயமாக இருக்க முடியும்; ஆனால், பெண்கள் (அவர்கள் எந்த-ஈய-வாதிகளாய் இருந்தாலும்) அவர்களைக் கொண்டாடவேண்டும் என்பதற்கு ஒரு நியாயமும் இல்லை! பெண்களைப் பொறுத்தவரை அவர்களது வாழ்வின் பெரும் பகுதியே குடும்பம்-சமூகம்-ஊடகங்கள் என சகல தரப்பிடமிருந்து வரும் ஒப்பிடல்களாலும் அதை திருப்திப் படுத்துவதிலுமே கழிந்துவிடுகிறது. தெருக்களில் கூட சக பாலர் மீதான ஈர்ப்பை விட -தங்களுடன் ஒப்பிடப்படும்- பெண்களையே, ஆண்களின் கண்களூடாக பார்க்கிறார்கள். இந்த தலையிடிகள் கடந்த நிறைய முதிய பெண்மணிகள் கடைசிக் காலத்தில் கணவனைத் தனையர்களை விட்டு விட்டு முதியோர் இல்லங்களில் தப்பிப் போய் நிம்மதியாய் இருப்பதற்கான மகா காரணம் மூளையைக் கசக்கி யோசித்தும் உங்களிற்கு புலப்படாதது – ஒரு ஆச்சரியமல்ல! தமக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு பெண் உடலை, தனக்குப் “பதிலாக” ஊரின் மூலைகளிலோ ஏதோ ஒரு கூப்பிடு தூரத்தில் இருக்கிற ஒரு வேசியை – பெண்கள் “வெறுப்பது,” அவர்களது நலன்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிற, அப் பெண்களை ஆண்கள் வெறுப்பதைப் போல எள்ளளவும் நியாயமற்றது அல்ல!

காமம் அருவருப்பான ஒரு உணர்வு. அது குறித்த குற்றஉணர்ச்சிகள் சிறு பராயம் முதலாக ஊட்டப்பட்டிருக்கிறது. தமது உறுப்புகளை தொட்டபடி இருக்கும் சிறுவர்கள் பெரியவர்களின் கர்ணகொடூரமான குரலுடன் கூடிய தொடுகைக்கான தடையூடாக அக் கேவலமான பாகத்தின் கேவலமான அனைத்து உணர்ச்சிகள் குறித்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள். மதப் புத்தகங்கள், நெறிப்படுத்தல்கள் எதற்கும் செவிசாய்க்காமல் (செவிசாய்க்க விடாமல்) பாலியல்பை தூண்டியபடி இந்த உடல்கள், திரைப்படங்களில், குடியிருப்பின் ஓரங்களில், தெருவில் அவர்களிற்கு சவாலாய் அழைப்பாய் நின்றுகொண்டிருக்கின்றன. மஞ்சள் பத்திரிகைகளில் நீலப் படங்களில் வண்ணங்களான உலகில் இணைய வெளியில் இந்த வெறுப்பைத் தாண்டி, வாழவும் முடியவில்லை. இங்கே, பாலியல் தொழிலாளர்கள் எனது “பலவீனத்தின்” அடையாளம்; நினைவு படுத்தல். நீலப்பட நடிகைகள் எனது அற்ப எண்ணங்களின் உருவம். விபச்சாரிகள்: அவமரியாதைக்கு உரியவர்கள்; சித்திரவதைக்கு உரியவர்கள்; கீழ்மைப்படுத்த வேண்டியவர்கள்.

“றேப் பண்ணப்பட்ட ஒரு பெண்ணைத் திருமணம் (செய்தாலும்) செய்வேன்; நடிகையைக் கட்ட மாட்டன்” மிகுந்த விறைப்புடன் சொன்னான் ஒருவன். அதேபோல, நீலப்படங்களிற்கு ஒப்பாக, இளைஞர்களிற்கு காமத்தை தூண்டுற பிரிட்னி, யேஸிக்கா சிம்சன் போன்ற இளம் பாடகிகள் பற்றி, அவர்களுக்குப் பிடித்த பாடகர்கள் அவர்களா என்று கேட்டால், பதின்மப் பையன்கள் அனேகமாய் “இயோ நாஸ்ரி” என்றே சொல்லுவார்கள். அவர்களை அவர்களது திறமையின்மையை உடலை முன்னிறுத்துதலை சொல்லி BITCHES என்று முடிப்பார்கள். Once again, மாணவர்கள் இப்படி இருக்கிறபோது பெண்கள் வேறு எப்படி இருப்பார்கள்?
பாடகி கிறிஸ்-ரீனா அகிலறா ஒருமுறை சொன்னாள். றிக்கி மார்ட்டின் போன்ற ஆண்கள் முன்னிறுத்துகிற பாலியல்பை, உடல் அசைவுகளை, நிறையப் பெண்கள் கவர்ச்சியாய் அவர்களுடன் ஆடுவதை யாரும் விமர்சிப்பதில்லை; ஆனால் இவற்றைப் பாடகிகள் செய்கிறபோது (குறைய ஆடை, நிறைய ஆண்களுடன், பாலியல் உள்ளடக்கத்தில்) அது விமர்சிக்கப்படுதலின் வெகுசன இரட்டை-மதிப்பீட்டுப் பார்வை (double standard) பற்றி.

அந்த அமெரிக்க கவர்னரின் பாரியார் போல எந்த பெண்ணின் கணவனும் ரிக்கி மார்ட்டினினையோ வேறை யாரும் மோகமூட்டும் பாடகனையோ {இளைஞர்களுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இருப்பதாய், அல்லது சிறு பையன்கிற்கு பள்ளியில் நிறைய peer pressure தருவதாய்} “சுட” வேண்டும் என்று சொல்வதில்லை. சர்ச்சைக்குள்ளான மேரீலான்ட் கவர்னரின் மனைவி Kendel S. Ehrlich (சொன்னதே “நல்ல காலம் நான் மகனை வளர்க்கிறேன். …இல்லாவிட்டால் இந்த [பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற] உடல் பிம்பங்களை கண்டு, peer pressure-களுடன் வளர்கிற மகளிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?” என்பதுதான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆண் குழந்தைகள் இதால் பாதிக்கப்படுவதில்லை என்பதே, அவற்றை பார்ப்பதிருந்து அவனுள் பதிவாகிற பாலியல் குறித்த எண்ணங்கள் அவனது ஆண்மை சார்ந்த, அதனது பாதிப்பு அவனது ஆண்மையை மெருகேற்றுவதாக, பதிந்து போன வழிவழியான எண்ணங்களேயன்றி வேறென்ன.
எப்பொழுதும், ஆணாக இருத்தல் பற்றி இந்த ஊடகங்கள் கற்பிக்கின்றன. காமத்தின் மீதான வெறுப்பை மதங்கள் விதைக்கின்றன. இதிலிருந்து வருகிற ஆணின், பெண் உடல் மீதான வெறுப்பு அவனது குற்ற உணர்ச்சியிலிருந்து உருவாகிறது. அவனால் ஒழுங்கை நிலைநாட்டவோ, ஒழுக்கக் கேட்டிற்கான தண்டனையாகவோ பலியிடப்படும் இந்த உடல்கள் – ஆண்களின் (அவர்களே அதை கையப்படுத்தி வைத்திருப்பதால்) காமத்தின் மேலான வெறுப்பையே வலியுறுத்துகின்றன. அத்தகைய ஒரு வெறுப்புடன் ஒரு பிள்ளையை வளர்ப்பதும் பிரச்சினையானதே. ஜேன் கூறுவதே போல: எல்லா மனிதர்களும் தங்களது பாலியல் இயல்புகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளும்வரையில்,
இந்த உலகத்தில் நாம் சுதந்திரமாக இயங்க முடியாது. அப்படி எதிர்கொள்ளுவதூடாக அவற்றை விளங்கிக்கொள்ளவும், பொறுப்பெடுத்துக் கொள்ளவும், அதனைக் கொண்டாடவும் முடியும். ஏனெனில், தனது பாலியல்புகள் குறித்து ஏமாற்றம்/வெட்கம்/அச்சம் உடைய ஒருவன்/ஒருவள் மற்றவர்களுடைய பாலியல்புகள் குறித்த சகிப்புணர்வு உடையவராய் இருக்க முடியாது. /…we wont’ move freely in the world until all ppl are required to confront their sexual natures in order to understand, take responsibility for and celebrate them, as we have had to. For no one who is disapointed or ashamed or frightened of his/her own sexuality is going to be easily toleratant of anyone else’s./

இணையத்தின் மூலைகளிலும், அந்தரங்க உரையாடல்களிலும் நாம் இரகசியமாயும் பொதுப்பேச்சிற்கு இடமற்றதாயும் வைத்திருக்கிற காமம் பொதுக் கழிப்பறைகளில் யாரும் பார்க்காத நேரத்து சுவர்க் கிறுக்கல்கள்போல வக்கிரங்களூடாகவே தன்னை விடுவிக்கிறது. ஆழமான வெறுப்பிலிருந்து பிரித்து அதைப் புரிந்து கொள்வது மத/ஆணீய/அரசியல் தளத்தில் மிக சவாலானது. ஆனால் குற்ற உணர்ச்சிகளற்று, சுரண்டல்களற்று அதனால் மட்டுமே ஆன “துரோகங்கள்” அற்று, பாலியல்புகள் கொண்டாடப்படுகிற ஒரு சூழலிலேயே எல்லா ஆண்களாலும் பெண்களாலும் நிகழ்த்தப்படுகிற இந்த இழிவுகள் நிறுத்தப்படலாம்.

ஜேன் றூலின் குறிப்பிட்ட கட்டுரையுள்ள நூல்:Hot-Eyed Moderate (1985)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்