/* up Facebook

Sep 8, 2010

சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!


கடந்த 26/07/2010 அன்று சௌதிகெஜட் நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி வந்திருந்தது, “கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது” என்று. வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணால் கடத்தப்பட்டு பின்னர் ஒரு பல்பொருள் அங்காடியில் விட்டுச் செல்லப்பட்டிருந்தது அந்த இரண்டரை வயதுக் குழந்தை. குழந்தையின் தந்தை குழந்தையை மீட்க பணம் தரவேண்டும் என்று தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் செய்தியிலேயே (அதே நகரில்) கடந்த ஆண்டும் இதே போல் குழந்தைக் கடத்தல் ஒன்று நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படி நடைபெறும் குழந்தைக் கடத்தல் நிகழ்வுகளை பணத்துக்காக நிகழ்த்தப்படுபவைகள் என்று பொதுமைப்படுத்திவிடவோ ஒதுக்கிவிடவோமுடியாது. ஏனென்றால் இவைகள் பணத்துக்காக நடைபெறுவதைப்போல் காட்டப்படுபவை. அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களை உற்றுநோக்கினாலே தெரியும் இவைகளில் பணம் வினையூக்கியாகச் செயல்பட்டிருக்கமுடியாது என்பது.

இந்தக் கடத்தலைச் செய்வது அந்தந்த வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள்.
இந்தக் கடத்தலில் அவர்கள் பணம் பெறுவதும் இல்லை, காவல்துறை கடத்தப்பட்டவர்களை மீட்பதும் இல்லை. ஏனென்றால் அதே நாளோ அல்லது மறுநாளோ எங்காவது பொது இடத்தில்
விட்டுச்செல்வதுதான் நடந்திருக்கிறது.
இக்கடத்தலை திட்டமிட்டோ சிலருடன் இணைந்தோ செய்வதில்லை
இது போன்ற காரணங்கள் அந்தக் கடத்தல்கள் பணத்துக்காக நடைபெறுவதில்லை என்பதை நிரூபிக்கின்றன. என்றால் அதன் உண்மையான காரணம் என்ன?

சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ஒரே வார்த்தையில் உச்சரிக்க வேண்டுமென்றால் ‘நரகம்’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அதிகாலையில் எழுந்து வீட்டை கழுவித் துடைத்து, காலை உணவுக்கான தயாரிப்புகளைச் செய்து, குழந்தைகளை எழுப்பி கவனித்துக் கொண்டு சற்று பெரிய குழந்தைகளென்றால் பள்ளிக்கூடத்திற்காக ஆயத்தப்படுத்தி, கடந்த நாளின் அழுக்கடைந்த ஆடைகளை துவைத்து உலர்த்தி தேய்த்து, மதிய உணவை தயாரித்து வழங்கி சுத்தப்படுத்தி, குழந்தைகள் பெற்றோரை தொந்தரவு செய்துவிடாமல் கவனித்துக்கொண்டு, இடையிடையே சௌதிகளின் தேவையறிந்து அவற்றில் உதவி, மாலையில் சௌதிப் பெண்களின் கடைவீதி உலாவுக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பின்சென்று அல்லது வேண்டிய பொருட்களை சுமந்து வருவதற்காக பின்சென்று பின் இரவுச் சாப்பாடு குழந்தைகளைத் தூங்கவைப்பது என்று பின்னிரவு வரை தன்னைத்தானே ஒரு இயந்திரமாய் மாற்றிக் கொள்ளவேண்டியதிருக்கும். வேலை நேரம் ஒழிவு நேரம் என்று தனித்தனியாக கொள்வதற்கு இடம்இருப்பதில்லை. இடையில் கிடைத்தால் சில நிமிடங்களை ஓய்வாக கொள்ளவேண்டியதுதான். இதில் நேர்ந்து விடும் தவறுகளுக்காக திட்டுக்கள் முதல் அடிஉதை வரை அனைத்தும் கிடைக்கும்.

வீடுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் சிரமங்கள் அவர்களை ஒரு இயந்திரத்தைப் போல் உணரவைக்கிறது என்றால், நிலவும் சூழல் அவர்களை இயந்திரமாகவே ஆக்கும். வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை, குப்பைகளை கொட்டுவதற்குச் சென்றால்கூட அனுமதியின்றி செல்லமுடியாது. தனியாக செல்லிடப்பேசி வைத்துக் கொள்வதற்கோ, யாருடனும் தொலைபேசியில் பேசுவதற்கோ முடியாது. நாட்டில் பெற்றோர்களிடமோ, உறவினர்களிடமோ பேசுவதற்கு மட்டும் அனுமதிப்பார்கள். சம்பளப் பணத்தை ஊருக்கு அனுப்புவதற்குக்கூட சௌதிதான் வங்கிக்கு சென்று அனுப்புவான். இப்படி ஒழிவின்றி வேலை செய்வதாலும், தங்களின் மனக் குறைகளை பகிர்ந்து கொள்ள வழியின்றி கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போன்ற சூழலாலும் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதில் சௌதியில் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களின் நிலை சொல்லும் தரமன்று. வேலை செய்யும் வீடு பெரிய பணக்கார வீடாக இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பணிப்பெண்கள் இருந்தால் வேலையில் ஆறுதலுக்கும், பாலியல் கொடுமைகளிலிருந்து சிறிது தப்பித்தலுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் தனியாக மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கோ சொல்வதற்கும் யாருமின்றி, செல்வதற்கும் வழியுமின்றி அந்த பாலியல் வதைகளை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு கதியில்லை.

அண்மையில் விமான நிலையத்தில் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவர் கூறியதைக் கேட்டால் பணிப்பெண்கள் எத்தகைய நிலையில் அங்கு பணிபுரிய வேண்டியதிருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மாரிலேயே கைவைக்கிறான்” என்று கூறி உடைந்த போது அவர் கண்களிலிருந்து வழிந்தது இரத்தமாக தெரிந்தது.

“பணிப்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்கிறது காவல்துறை. ஆனால் புகார் கொடுக்கும் அளவுக்கான சூழலை ஏற்படுத்தாமல், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்பது எந்த விதத்தில் சரியானது? ஒரு பணிப்பெண் தனக்கு நேரும் பாலியல்கொடுமைகளுக்கோ, வதைகளுக்கோ தொலைபேசி மூலம் காவல்துறைக்கு புகார் கொடுக்கிறாள் என்று கொள்வோம். என்ன நடக்கும்?

சௌதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. முதல் கட்டமாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை என வீட்டிலுள்ள அனைவரும் விசாரணைக்காக வரும் காவல்துறையினரிடம் கூறுவர். அப்படி ஒன்று நடந்தது என்று பாதிக்கப்பட்ட பெண்ணே நிரூபிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிரூபித்தாலும் குற்ற நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி ஏதாவது இழப்பீட்டுத் தொகை வாங்கி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதுதான் காவல்துறை செய்யும் அதிகபட்ச நடவடிக்கை. அன்றி கொடுமை நடைபெற்றதை நிரூபிக்க முடியாமல் போனால், இழப்பீடோ, பரிவுத் தொகையோ எதுவுமின்றி சொந்தநாடு திரும்ப வேண்டியதிருக்கும். ஏனென்றால், தொடர்ந்து அந்த வீட்டில் வேலை செய்தால் அது தற்கொலை முயற்சியாகத்தான் இருக்கும்.

முன்னிலும் அதிக சித்திரவதைகளுடனும், நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளுடனும் வேலை செய்ய முடியுமா? புகார் கொடுத்து நிரூபிக்க முடியாத நிலையிலுள்ள பணிப்பெண்களை வேறு இடத்திலிலோ, வேறு வேலையிலோ சேர்த்துவிட காவல்துறை முயலாது. ஏனென்றால் சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை. வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை வேலைக்காக தருவிக்கும் சௌதி அப்பெண்ணுக்கு வேலைவழங்குனர் மட்டுமல்ல, பாதுகாவலரும்தான்.

பாலியல் கொடுமைகளைச் செய்வது ஆண்கள்தான், வீட்டிலுள்ள பெண்களிடம் அவர்கள் முறையிடலாமே என நினைப்பதும் கொடுமையான அனுபவமாகவே அமையும். அதன்பிறகு பழிவாங்கும் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதோடு பொருளாதார ரீதியிலும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். ஏனென்றால் சம்பளம் கொடுப்பது அதை பணிப்பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றைச் செய்வது சௌதி ஆண்தான்.

நடக்கும் இவைகளுக்கு எதிராக முறித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் இங்கு வரும் பணிப்பெண்களில் பெரும்பாலானோர் இருப்பதில்லை. வாங்கி வந்த கடனும், வீட்டுச்செலவுகளும், தேவைகளும் அவர்களின் முன் பூதாகரமாக அச்சுறுத்துகின்றன. வறுமைக்குப் பயந்து, குடும்பத்தையும் குழந்தைகளையும் பிரியச் சம்மதிக்கும் பெண்கள் வந்த இடத்தில் எதிர்கொள்ளும் கொடுமைகளால், அதற்கு வடிகாலில்லாத நிர்ப்பந்தங்களால் நொறுங்கிப் போகிறார்கள். வேறுவழி தெரியாததால் பலபெண்கள் சம்மதித்து சகித்துப் போகிறார்கள். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக குழந்தைகளை துன்புறுத்துவதையும், கடத்திச் செல்வதையும், ஏதாவது வழியில் பழிவாங்க முடியாதா? எனும் எண்ணங்களுக்கு ஆளாகிப் போகிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே சௌதி அரசு உள்ளே வரும் அனைத்து வெளிநாட்டவர்களையும், புகைப்படமும், கைரேகையையும் விமான நிலையத்திலேயே எடுத்து பதிவு செய்து ஆவணமாக்கி வருகிறது. விடுப்பில் செல்லும், இகாமா (இருப்பிடஅனுமதி) புதுப்பிக்கும் யாரும் கைரேகையை பதிவு செய்யாமல் முடியாது எனும் அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஒரு குழந்தையை கடத்திச் சென்று அதன் மூலம் பொருளாதார பலன்களை அடைந்துவிட முடியும் என்பது நடக்க முடியாத ஒன்று. பெண்கள் வெளியேறிச் சென்று தனியாக எங்கும் வேலை செய்து விடவோ, ஊர் சென்று விடவோ முடியாத சூழலை ஏற்படுத்தி வரும் இந்நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண் தன்னுடைய பொறுப்பில் இருக்கும் குழந்தையை கடத்தி பணம் கேட்கிறாள் என்று கூறுவது அதன் பின்னணியில் தொழிற்படும் காரணங்களை மறைப்பதற்காகத்தானேயன்றி வேறொன்றுமில்லை.

இத்தகைய கொடுமைகள், பாலியல் வதைகள் குறித்து ஒரு சௌதி என்ன விதமான கருத்துகொண்டிருக்கிறான் என்பது இதில் இன்றியமையாத ஒன்றாகிறது. ஒரு சௌதிப் பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்படும்போது ஒரு சௌதி ஆணுக்கு ஏற்படும் அதிர்வலைகள், ஒரு வெளிநாட்டு பணிப்பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டாள் எனும் போது ஏற்படுவதில்லை, அது ஒரு சாதாரண செய்தியாகவேபடுகிறது. இதை சொந்த நாட்டுப் பெண்ணுக்கும் அந்நிய நாட்டுப் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என எடுத்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் இல்லை. சௌதியின் உளவியலிலே இத்தகைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் குரானிலிருந்து தொடங்கவேண்டும்.

சௌதி ஆணின் பாலியல் தேவைகளை பொருத்தவரை மதகலாச்சாரரீதியாக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கு சில வரம்புகளை மட்டுமே நிர்ணயம் செய்திருப்பதன் மூலம் ஆணின் பாலியல் சுதந்திரத்தை பேணப்படுகிறது.

அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3

சட்டபூர்வமாக நான்கு மனைவிகள் அல்லாது எத்தனை அடிமைப் பெண்களையும் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள ஆணுக்கு அது அனுமதியளிக்கிறது. பரிகாரம் எனும் அடிப்படையில் அடிமைகளின் விடுதலை குறித்து குரான் பேசினாலும், அடிமையை வைத்திருப்பதும், அவர்களை பாலியல் ரீதியில் பயன்படுத்துவதும் மத அடிப்படையில் குற்றச் செயலல்ல. இந்த அடிப்படையிலிருந்து எழுந்து வருவதுதான் இப்போதைய சௌதிகளின் மனோபாவம். 1962ல் சட்டபூர்வமாக சௌதியில் அடிமையை வைத்திருப்பது தடை செய்யப்பட்ட பிறகும் இந்த மனோபாவம் தொடர்கிறது.வெளிநாட்டிலிருந்து வீட்டு வேலைக்கு வரும் பெண்களை பாலியல் அடிமைகளாய் வைத்திருப்பது குற்றமல்ல எனும் உளவியல்தான் அவர்களின் செயல்களில் பிரதிபலிக்கிறது.

வேலை செய்ய வரும் வெளிநாட்டு ஆண்களையும் சௌதிகள் இந்த மனோபாவத்துடனே அணுகுகிறார்கள் என்பதற்கு அனேக எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். ஆனால், ஆண்களுக்கு இருக்கும் வாய்ப்பும், வேறு வேலை தேடிக்கொள்வதற்கான வசதிகளும், பணம் செலுத்தி தன் பாதுகாவலரை மாற்றிக் கொள்ள முடிகிற நிலையும் அவர்களை அடிமையாக நடத்துவதினின்றும் ஓரளவு பாதுகாக்கிறது. இதேபோல் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் கூட இத்தகைய கொடுமைகளை சந்திப்பதில்லை. வீட்டு பணிப்பெண்களுக்கு அதில் அழுந்திக் கிடப்பதைத் தவிர வேறுவழியில்லை எனும் சூழல் இருப்பதால் ஆணாதிக்கத் திமிரில் அடிமையாக நடத்துவதும் தொடர்கிறது.

அடுத்து பெரும் சொத்தாய் குவிந்திருக்கும் எண்ணெய் பணத்தின் மூலம் சௌதிகள் சாதாரண வேலைகள் எதனையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் வேலையாட்களை வைத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் வீட்டு வேலைகளுக்கான பெண்களும் அழைத்து வரப்படுகிறார்கள். வர்க்க ரீதியில் இருக்கும் இந்த மேட்டிமைத்தனமான மனோபாவமும் வீட்டு பணிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் நாகரீகமாகப் பழகும் சௌதிகள் ஆசிய நாட்டவரைக் கண்டால் ஆண்டைகள் போலத்தான் நடத்துவார்கள். இதன்படி பணிப்பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது குறித்து அவர்கள் குற்ற உணர்வு ஏதும் கொள்வதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பன்ஸ் நாட்டைச் சேர்ந்த சாரா எனும் இளம் பெண் தன்னை பாலியல் வன்முறை செய்ய வந்த ஒரு கிழட்டு ஷேக்கை குத்திக் கொன்றாள். அதற்காக அவளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து முழு உலகும் போராட வேண்டியிருந்தது. காதல், கள்ளக் காதல், விபச்சாரம் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்தும் சௌதியில் இருக்கும் ஆசிய நாடுகளின் பெண்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. இத்துடன் ஒப்பிடும் போது சௌதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மிகவும் குறைவு.

சௌதிகளின் இருப்பை மதம் ஆளுமை செய்து கொண்டிருப்பது வரை அவர்களை இந்த மனோநிலையிலிருந்து மாற்றுவது கடினம். அதேநேரம் வெளியிலிருந்து வருபவர்களும் இவை குற்றம் எனும் நிலையை உணராது மத அடிப்படியில் ஆதரித்து நிற்பது வேதனை. காயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட பிறகுதான் மருந்திடுவது குறித்து சிந்திக்க முடியும். அந்த வகையில் இதுபோன்ற நிகழ்வுகளை வெளியில் கொண்டு வருவதும், வெளிப்படையாக விவாதிப்பதும் அந்த அடிமைத்தனத்தைக் களைவதற்கான முதற்படியாகும்.

அரசியல், பொருளாதார ரீதியில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சௌதி ஷேக்குகள் உள்நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு மட்டும் இசுலாத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மதச் சட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது, சவுக்கால் அடிப்பது முதலான கொடூரமான தண்டனைகளை அமல்படுத்தி வரும் ஷேக்குகள் அவர்களது சொந்த வாழ்வில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துதான் வருகிறார்கள். இவர்களை எதிர்த்து ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் எழாத வரைக்கும் இந்த வீட்டுப் பணிப்பெண்களுக்கு விடுதலை இல்லை.

உங்கள் பார்வைக்கு சிலஆதாரச் செய்திகள்


_____________________________________________
வினவு செய்தியாளர், வளைகுடாவிலிருந்து.

நன்றி - வினவு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்