/* up Facebook

Aug 21, 2010

மேடையில் எரிந்த பெண்


The returel
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ‘த ரிச்சுவல்’ என்னும் ஆங்கில மொழியில் அமைந்த சுதேச நாடகம் 29, மே 2004, மாலை 4.30 மணிக்கு மேடையேற்றப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் துறையினர் நாடக மேடையேற்றத்திற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்கள். ‘த ரிச்சுவல்’ நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்திருப்பவர் கொழும்பு பல்கலைக்கழக மொழியியல் துறை விரிவுரையாளர் ஜெகான் அலோசியஸ் (Jehan Aloysius)

மிக நீண்ட நாட்களுக்குப் பின் நாடகம் பார்ப்பதற்காக கைலாசபதி கலையரங்கு நிறைந்திருந்தது. “நாடகம் பார்ப்பதற்கு அரங்கிற்கு மக்கள் வருவதில்லை” என்ற ஆய்வு முடிவுகளுக்கு மத்தியில் கைலாசபதி கலையரங்கு நிறைந்திருந்தது மனநிறைவைத் தந்தது. மக்களிடம் நாடக மேடையேற்றங்கள் பற்றிய சரியான தகவல்கள் சென்றடைகின்ற போது மக்கள் அரங்கை நோக்கி வருவார்கள். இங்கு ஒழுங்குபடுத்தியவர்கள் விளம்பரப்படுத்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டிருந்தார்கள்.

‘த ரிச்சுவல்’ நாடகத்தின் ஆற்றுகை நேரம் இரண்டு மணித்தியாலங்கள். நாடகம் முடியும்வரை அனைத்துப் பார்வையாளர்களும் ஆர்வத்துடன் பார்த்திருந்தார்கள். நாடகம் இரண்டு பெருங்காட்சிகளாக நடைபெற்றது. ஒரு காட்சி முடிவில் பதினைந்து நிமிடங்கள் இடைவேளை விடப்பட்டது. தமிழ் அரங்கப் பாரம்பரியத்திலும் இவ்வாறான பண்பை இனங்காணலாம். முன்பு நாடகம் பார்ப்பதற்காக மக்கள் காத்திருந்தார்கள். இன்று சின்னத்திரைக்கு முன்னால் எமது அதிகமான நேரங்கள் செலவழிந்து போவதால் மேடை நாடகங்களை பார்க்க நேரமில்லாது போகிறது. இதனால் எம்மத்தியில் ஆற்றுகை செய்யப்படும் நாடகங்களின் நேரங்களும் சுருங்கிக் கொண்டன. இந்நிலையில் ‘த ரிச்சுவல்’ நாடகத்திற்கு பார்வையாளர்கள் அதிகமாகக் கூடியதும் பொறுமையுடன் இருந்து பார்த்ததும் முக்கியமாகின்றன.

மேடையில் ஒரு சிறிய வீட்டின் சமையலறை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சமையல் செய்வதற்கான மண்ணெண்ணைக் குக்கர் மேடையின் முன் இடதிலும் சாப்பாட்டு மேசை, கதிரைகள் முன் வலதிலும் காணப்பட்டன. நடு மேடையில் அம்மி, குளவியுடன் சில தட்டு முட்டுச் சாமான்களும் காணப்பட்டன.

உள்வருவதற்கும் வெளியேறுவதற்கும் மேடையின் பின் இடதிலும் வலதிலும் இரண்டு கதவுகள் காணப்பட்டன. குறைந்தளவு ஒளிக்கருவிகளுடன் ஒளியமைப்பு செய்யப்பட்டிருந்தது. நாடகத்தின் சூழல் சிருஷ்டிப்புக்கு ஏற்றதான நுட்பத்தை ஒளியமைப்பு கொண்டிருக்கவில்லை. ஆனாலும் சில கணங்களில் ஒளியும் மேடைக் காண்பியங்களும் இணைந்து காண்பிய ஆழத்தைக் (Visual Depth) கொடுத்தன.

ஒரு சமயலறையை பின்னணி காட்சியாகக் கொண்டு சிங்களக் கிராமியக் குடும்பமொன்றின் கதையை நெறியாளர் ‘பச்சையாக’ மேடையில் கொட்டியிருந்தார். ஒரு படைப்புக்கு வாழ்வில் இருந்தான தெரிவும், தெரிவு செய்தவற்றை செதுக்கி செழுமைப்படுத்துவதும் அவசியம். இந்த நாடகத்தில் அதனை நேர்த்தியாகச் செய்யவில்லையோ? என்று எண்ணத் தோன்றியது.

நாடகத்தின் கதை ஒரு கிராமியக் குடும்பத்தைச் சேர்ந்த கருணாவதி அவளது இரு புதல்வர்களான சந்திரசேகர, சஜீவ், மருமகள் கலனி, புறம் சொல்லி வாழும் அடங்காத பெண் ஆரியவதி ஆகியோரை பாத்திரங்களாகக் கொண்டு அசைகிறது. இவர்களுக்கிடையில் காணப்படும் ‘உறவு முரண்’ நாடக முரணாகிறது. இதுவே நாடகத்தை வளர்த்துச் செல்கிறது. ஒரு சீரான சிக்கலின்றிய கதை காமமும் சண்டையும் சச்சரவுமாக நகர்கிறது. சமயலறையில் தேனீர் வைக்கும் போது, சாப்பிடும் போது, சமையல் செய்யும்போது நடக்கின்ற உரையாடல்களினதும், சம்பவங்களினதும் தொகுப்பே நாடகம். கிராமத்தின் எளிமையான இளம் பெண்ணின் அவலம் நாடகத்தினூடாக வெளிப்படுகிறது. ஒரு பெண்ணின் உணர்ச்சிக் கொந்தளிப்பு, ஏக்கம், மனவேதனை, அமுக்கிக் கிடந்து குமுறும் நிலை, வீட்டு வேலைச்சுமை, சீதனக் கொடுமை, குழந்தைப்பேறு போன்ற பல்வேறு பிரச்சினைகள் சமையல் அறைக்குள் அலசப்படுகின்றன. கிராமப் பெண்ணின் வாழ்வு சமயலறையே என்றவாறான நெறியாளரின் காட்சிப் படிமங்கள் அற்புதமானவை. இங்கு கலனியின் பாலியல் உணர்வெழுச்சிக்கு வடிகால் தேடும் இடமாகவும் சமையலறை காட்டப்படுகிறது.

கலனி பாத்திரமேற்று நடித்தவர். மிக அற்புதமாக நடித்திருந்தார். சின்னச் சின்னனாக அவரது ஒவ்வொரு துலங்கல்களும் தெளிவாக இருந்தன. இயல்பாக நடித்திருந்தார். இரண்டு ஆண் பிள்ளைகளின் தாயான கருணாவதி பாத்திரத்திற்கு நடித்தவரும் சிறப்பாகத் தன் பணியாற்றியிருந்தார். இவரே நாடகத்தின் பிற்பகுதியில் ஆரியவதியாகவும் நடித்திருந்தார். அதில் கருணாவதி பாத்திரத்தின் சாயலே அதிகம் காணப்பட்டது. (ஆரியவதிக்கு நடித்தவர் திடீர் சுகயீனம் காரணமாக ஆற்றுகையில் பங்குபற்றவில்லை. இதனால் ஒருவர் இரண்டு பாத்திரங்களை தாங்க வேண்டி இருந்தது.)

சந்திரசேகர பாத்திரம் மௌனமும் வெடித்துக் கிளம்பும் உணர்ச்சியுமாக காணப்படுகிறது. சுஜீவ் பாத்திரம் கட்டிளமைப் பருவ இளைஞனின் துடிப்புடன் காணப்படுகிறது. இந்த இரண்டு பாத்திரங்களினதும் இயல்புத்தன்மை மேலும் துலக்கமாக வெளிப்பட்டிருக்கலாம்.

கலனி சீதனமின்றிக் கருணாவதி வீட்டுக்கு வந்தவள். சீதனம் கொடுக்காதவர்களை நெருப்பு மூட்டிக் கொளுத்தும் அயல்க் கிராம வாடிக்கை பற்றி கேள்வியுற்று அடிக்கடி தன் மனத்திரையில் அவற்றை காட்சியாகக் காண்பவள். சந்திரசேகரவை காதலிப்பவள் அதேவேளை சுஜீவ்வுடன் உடலுறவு கொண்டு கர்பமடைந்தவள். நாடகம் முழுவதும் சந்திரசேகரவுடன் ஈடுபாடு அற்றவளாகவே காணப்படுகிறாள். மாமியாருடன் அடிக்கடி முரண்படுபவள், தினமும் அதிகமான நேரம் குக்கருக்கு முன்னால் இருந்து நெருப்பு மூட்டுபவள் நாடக முடிவில் அதே குக்கர் மண்ணெண்ணையைத் தன் தலையில் ஊற்றித் தன்னைத் தானே நெருப்பு மூட்ட முயல்பவள். அவ்வேளை சந்திரசேகரவின் வரவு கண்டு திகைத்து நிற்கிறாள். இனி என்ன? என்றவாறாக நாடகம் முடிவடைகிறது.

பார்வையாளர்கள் தத்தமக்குள் ஒரு முடிவை வகுத்துக் கொண்டு வீடு நோக்கி செல்வார்கள். பெண்ணுக்கும் நெருப்புக்கும் இடையில் காணப்படும் சிக்கலான தொடர்பை நுட்பமாகப் பின்னி வெளிப்படையாகவும் உள்ளுறை பொருளாகவும் பல அர்த்தப்பாடுகளை நெறியாளர் வெளிப்படுத்தியுள்ளார். நெறியாளரின் நெறிப்படுத்தல் சிறப்பாக இருந்தது.

நாடகத்தில் பிரதான பாத்திரங்களின் நடிப்பு யதார்த்தப் பாணியில் (Realistic Acting) அமைந்திருந்தது. ஆரியவதி பாத்திரத்தில் நெறியாளரின் அபிப்பிராயமும் காணப்பட்டதால் அப்பாத்திரம் யதார்த்தப் பாணி நடிப்பில் இருந்து சற்று விலகிக் காணப்பட்டது எனலாம். இடைஇடையே கலனியின் மனப்பிரமை, காட்சியாகிறது. இது யதார்த்த விரோதப் பண்பு கொண்ட மோடிமைப் பண்புடைய காட்சிப் படிமங்களாகக் காட்டப்படுகின்றன.


கலனி, தான் கேள்வியுற்ற வரதட்சணை கொடுக்காத பெண்களை தீயிட்டுக் கொழுத்தும் வாடிக்கையை எண்ணிப் பயப்பிடும் போது அவளது நினைவில் முகமூடி உருவங்கள் தோன்றி தொல்லை கொடுக்கின்றன. இக்காட்சிகள் மோடிமை நடிப்பில் காட்டப்படுகின்றன. இதிலும் ஆசிரியரின் அபிப்பிராயங்கள் (Comments) உள்ளடங்கியுள்ளன. சிங்களப் பாரம்பரிய நாடக வடிவங்களில் ஒன்றான கோலம் நாடக வடிவத்தில் இருந்து முகமூடி அணிந்த பாத்திரங்களும் நடனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.முகமூடி அணிந்த பாத்திரங்களின் கைத்தேர்ச்சியான அசைவுகள் ஊடாக நளினம், எள்ளல், கோரம், விகாரம், வேகம் போன்ற பல்பண்புகள் வெளிப்பட்டன. இரசிப்புக்குரியதான நாடகப் பாங்கான அசைவுகளை (Dramatic Movements) இத்துண்டுக் காட்சிகளில் காணமுடிந்தது. இக்காட்சிகள் நடைபெறும் போது பின்னனியாக ஒலித்த பதிவு செய்யப்பட்ட இசை அசைவியக்கத்தை வளர்த்துச் செல்ல உதவியது. இருப்பினும் துண்டுக்காட்சி முடிவில் உரக்க ஒலித்த குரல் பொருத்தமின்றி அலறியதாகவே இருந்தது. கலனியின் நிஜ வாழ்வுப் போராட்டம் யதார்த்த விரோத பாணியில் காட்சியாகியிருந்தது. கொங்கைகள் தொங்கியபடி, விகாரமான முகத்தோற்றத்துடன் காணப்பட்ட ஆரியவதி பாத்திரத்தை உதாரணமாக குறிப்பிடலாம். நாடகத்திற்கான கதை உண்மைக் கதைகளின் தொகுப்பாகும். நாடகக் களப்பயிற்சியில் பங்குபற்றியோர் இக்கதையை கோர்த்தெடுத்தார்கள் என நெறியாளர் குறிப்பிட்டார்.

அரங்கத்துறையில் பகுதிநேரமாக ஈடுபடுபவர்களே நாடகத்தில் நடித்திருந்தார்கள். நாங்கள் தொழில்முறை நடிகர்கள் அல்லர். நாடகங்கள் தயாரிக்கின்ற போது நிறைய போதாமைகளை எதிர்கொள்கிறோம் என்று நெறியாளர் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது போன்று நாடகத்தில் தொழில்முறை தேர்ச்சியைக் காணமுடியவில்லைதான். இருப்பினும் நாடகம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதற்கு அளிக்கை முறைமையும், சீரான அசைவியக்கத்தோடு கூடிய கதை, காமம் சார்ந்த துலங்கல்கள் காரணமாக அமைந்திருந்தன.

சிங்கள அரங்கப் பண்பாட்டின் வெளிப்படுத்தல் முறைமை கைலாசபதி கலையரங்கில் கூடியிருந்தவர்களை சங்கடப்படுத்தியதையும் அவதானிக்க முடிந்தது. சிங்கள அரங்கப் பண்பாட்டில் காணப்படும் ‘அரங்க வெளிப்பாட்டுச் சுதந்திரம்’ தமிழ் அரங்கில் இல்லாதது இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம்.

சிங்கள அரங்கப் பண்பாட்டில் பேசும் பொருள் மனிதனது அகம் (காதல், காமம்) சார்ந்ததாகவே பிரதானமாக உள்ளது. இதற்கு அவர்களின் ‘பேரிடரற்ற வாழ்வும்’ ஒரு காரணம். பேரிடறற்று வாழும் போது மனிதப் பிரச்சினையாகக் காதலும் காமமும் மேற்கிளம்புவது வழமை. இவ்வாறான பேசு பொருட்களை வெளிப்படுத்துவதற்கான ஆற்றுகை முறைமையை சிங்கள அரங்கு கொண்டுள்ளது. நடிகர்களிடம் காணப்படும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் பார்வையாளர்களிடம் இலகுவாக உணர்ச்சித் தொற்றை ஏற்படுத்தி விடுகிறது. ஆணும் பெண்ணும் மிக நெருங்கி ஒருவரை ஒருவர் தொட்டு அணைத்து நடிப்பது, உடலுறவு போன்ற செயல்களை தமிழ் சினிமா போன்று காட்சியாக்க முயல்வது, தூசனை வார்த்தைகளை அரங்கில் அப்பட்டமாகப் பேசுவது, பாலியல் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் கொட்டுவது போன்ற வெளிப்பாட்டு முறைமைகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

‘த ரிச்சுவல்’ நாடகத்தைப் பார்த்த போது பல கேள்விகள் மேற்கிளம்பின. ஏன் ‘த ரிச்சுவல்’ நாடகத்தை யாழ்ப்பாணத்தில் போட்டார்கள்? யாழ்ப்பாணத்தில் போட்டதனூடாக அவர்கள் அடைய நினைப்பது என்ன? இதனூடாகக் கூறும் இலட்சியம் என்ன? சொல்ல வரும் நல்ல செய்தி/கருத்து என்ன? இதை சிங்கள தேசத்தின் பொதுப் பிரச்சினையாகக் கருதலாமா? போன்ற கேள்விகள் முந்திரிக்கொட்டை போல் முன் நின்று பலரையும் உறுத்தியதையும் அவதானிக்க முடிந்தது. ஒரு படைப்பை எந்த முற்கற்பிதங்களும் இல்லாது பார்ப்பது தானே சிறந்தது??!!

சிங்கள தமிழ் அரங்குகளுக்கிடையில் பேசும் பொருள், ஆற்றுகை முறைமை என்பவற்றில் பெரும் வேறுபாடுகள் உண்டு என்பதை ‘த ரிச்சுவல்’ நாடகம் சுட்டி நின்றது.

அண்மைக் காலமாக தெற்கு நாடகங்களை யாழ்ப்பாணத்தில் மேடையேற்ற உதவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ மொழியியல் துறை விரிவுரையாளர் சுவாமி நாதன் விமல் பாராட்டுக்குரியவர். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட நாடகத்துறை சார்ந்தோர் ஆதரவளித்தல் அவசியம்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்