/* up Facebook

Aug 20, 2010

தண்ணீரைச் சேர்ந்த மலர்கள் - குட்டி ரேவதி


என்னுடைய படம் முதலில் தலைக்குள் பிறக்கிறது. பின் காகிதத்தில் இறக்கிறது. நான் பயன்படுத்தும் உண்மையான பொருள்களாலும் கதாபாத்திரமாக வாழும் மனிதர்களாலும் புத்துயிர்ப்பு பெறும் அது படமாக ஆக்கப்படும்போது கொல்லப்படுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட வரிசையில் கோர்க்கப்பட்டுத் திரையிடப்படுவதால் தண்ணீரைச் சேர்ந்த மலர்களைப் போல உயிர் பெறுகின்றது.

- ராபர்ட் பிரெஸ்ஸோன்

பிரெஸ்ஸோனின் இரு திரைப்படங்களை அடுத்தடுத்து பார்க்க நேர்ந்தது. Au hasard Balthazar and Mouchette. இந்த இரண்டு படங்களிலுமே அவரது திரை உலகம் பல துயரமான தருணங்களால் அலைக்கழிக்கப்படும் ஒரு பெண் கதாபாத்திரத்தையே மையமாக வைத்து விரிகிறது. முதல் படத்தின் பெயர் ஒரு கழுதையினுடையது. கழுதையும் அதில் மையக்கதாபாத்திரமாக வரும் பெண்ணும் ஒரே கதாபாத்திரத்தின் வேறு வேறு முகங்களோ என்று எண்ணும் அளவுக்கு நேரடியான ஒற்றுமைகளையும் துயரங்களையும் அலைக்கழிப்புகளையும் தாங்குகின்றனர். காட்சிகளால் விவரிக்க முடியாத இடங்களில் தான் வார்த்தைகள் தேவைப்படுகின்றன என்று கூறும் பிரெஸ்ஸோனின் அடுத்தடுத்த காட்சி நகர்வு மிகவும் வேகமாகவும் அவற்றின் துல்லியமான வேகத்திற்கு உதவும் சக்கரங்களாகவே வார்த்தைகள் பயன்பட்டிருப்பதையும் உணரமுடியும். Au Hasard Balthazar திரைப்படம் தான் ஜான் ஆபிரஹாம் தமிழில் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ எடுக்கத் தூண்டுதலாக இருந்தது என்ற செய்தியும் உண்டு. கிறித்துவ மதத்தின் புனிதத்துவத்தை அங்கதமாக்கும் முயற்சி தான் பிரெஸ்ஸோனுடையது. அவ்வாறே இந்துமதத்தின் சாதிய உள்ளீட்டை நேரடியாக அங்கதம் செய்திருப்பார் ஆபிரஹாம். மேலும் கதை ஒரே நேர்க்கோட்டில் ஒற்றை இழையாய் முடிந்துவிடுவதில்லை. பல அடுக்குப்பிரிகளுடன் கதை கிளைக்கிறது.

Mouchette திரைப்படத்தில் வரும் மையக்கதாபாத்திரமான பெண் மூசெவும் ஏழ்மையில் உழன்று தன் சூழலில் வாழும் ஆதிக்கக் கதாபாத்திரங்களிடையே நொறுங்கிப் போகும் ஒரு கதாபாத்திரம் தான். இரு படங்களும் அடுத்தடுத்த வருடங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. Au Hasard Balthazar படத்தில் கழுதையின் மீது பிரியம் கொண்ட பெண்ணாயும் அதன் பொருட்டு வேறு வேறு உறவுகளுக்குள் நுழைந்து தன்னைத் தானே சிதிலமாக்கிக் கொள்ளும் பெண்ணாயும் வரும் மேரியின் கதாபத்திரமும் மூசெவின் கதாபாத்திரமும் ஒரே மாதிரியானவை தாம். வாழ்க்கையின் போக்கிற்குத் தம்மை ஒப்புக்கொடுத்துத் துயரத்தைத் தம் உடலால் தாங்கும் இப்பெண்கள் இன்றும் நம்மிடையே திரிகின்றனர். அவர்கள் துயரங்களை உச்சரிப்பதில்லை. தாங்கிக்கொள்வதன் வழியாக எதிர்த்து நிற்கின்றனர். அக்கதாபாத்திரங்கள் உரத்துப் பேசுவதுமில்லை. துயர இருளின் வழியாகத் திடமாக நடந்து செல்ல தீர்மானித்ததின் வழியாக மெளனமான புரட்சியைச் சாதித்துக் கொள்ளும் சாமார்த்தியங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

பிரெஸ்ஸோன் இம்மாதிரியான மறைபொருளை பார்வையாளர்களின் யூகங்களுக்கு விட்டுக் கதையைச் சொல்லி முடிக்கிறார். இவர் திரைப்படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் பாலியல் விஷயங்களின் ஆழத்திற்கு எவ்வளவு தான் பயணப்பட்டாலும் விரசமாகாத பாலியல் எழுச்சியுடனும் புலனாற்றல் வழி இன்பத்தைக் கண்டறியும் வேட்கையுடனும் மிளிர்கின்றன. அதே சமயம் பதின்பருவத்துப் பெண்களின் மன ஊடாட்டம் துல்லியமாகச் சித்திரிக்கப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட இரவில் மேரி அந்த ஆணுடன் இருந்தாளே அவர்களுக்கிடையே என்ன நடந்தது என்று பிரெஸ்ஸோனிடம் கேட்கையில், ‘எனக்கும் தெரியாது. அக்கதாபாத்திரங்களின் அந்தரங்கத்திற்குள் நான் நுழைவதில்லை’, என்று கூறுகிறார் பிரெஸ்ஸோன். இவ்வாறான பூடகத்தன்மை அவரது பெண்கதாபாத்திரங்களுக்கு ஆளுமையையும் அழகையும் கூட்டுகிறது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்