/* up Facebook

Aug 10, 2010

நாடுகாண் காதை – கண்ணகியின் கதைளைத் தேடிச்செல்லும் பயண ஆவணப்படம் - குட்டி ரேவதி


கண்ணகி எனும் சிலப்பதிகார நாயகியின் மீதான எனது தனிப்பட்ட நாட்டத்தை அடுத்த கட்டச் செயல்பாடாக மாற்றுவது என்று முடிவு செய்திருந்த பொழுது தான், அமெரிக்க ஆய்வாளரான எரிக் மில்லர், ‘கண்ணகி வாழ்ந்த இடங்களின் கதை சொல்லும் சுற்றுலா’, ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் சுற்றுலாவின் அடிப்படையான வடிவமைப்பும் பயண நோக்கமும் என்னை ஆர்வமூட்டக்கூடியதாக இருந்தன. சென்னைக் கடற்கரையிலிருந்து தொடங்கி பூம்புகார், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை வழியாக வால்பாறையில் நிறைவு பெறும் என்றும் அவ்வாறான பயணம் கடல், காடு, மலை, வயல், வெட்டவெளி என ஐந்து நிலவெளிகளையும் உள்ளடக்கக் கூடியதாக இருக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச் சுற்றுலாவை பயண ஆவணப்படமாக எடுப்பது என்ற என் விருப்பத்தை எரிக் மில்லரிடம் தெரிவித்ததும் படத்தை ஒரு கூட்டுத்தயாரிப்பாக எடுப்போம் என்று உற்சாகமானார்.

இந்தச் சுற்றுலா ஓர் ஒப்பிலாத பயண அனுபவத்தைத் தந்தது. வெவ்வேறு பொருள் கருதி தமிழகத்தை வெவ்வேறு காலகட்டங்களில் கடக்கவேண்டி இருந்திருக்கிறது. தமிழகத்தின் பன்பரிமாணத்தை அறியும் வாய்ப்புகளாகவே அப்பயணங்கள் நிறைவேறி இருக்கின்றன. சிலப்பதிகாரத்துக்குள் சொல்லப்படும் நிகழ்வுகளின் வரைபடம் வழியாகப் பயணிப்பது அன்று நம் நோக்கம். மாறாக கண்ணகி பற்றிய கதைகள் எங்கெங்கெல்லாம் ஊடுருவி இருக்கின்றனவோ அந்தந்த நிலப்பரப்புகள் வழியாகப் பயணிப்பதும் அங்கங்கு வாழும் மாந்தர்களிடமிருந்து கண்ணகி பற்றிய காலங்காலமான நாட்டுப்புறக் கதைகளையும் ஐதீகங்களையும் நினைவுகளையும் சேகரிப்பதும் தாம் இப்பயணத்தின் நோக்கங்கள்.

சிலப்பதிகாரம் செவ்விலக்கிய வடிவம் பெற்ற கண்ணகியின் கதை. அதில் திரிபுகளுக்கும் மயக்கங்களுக்கும் சாத்தியமில்லை. மாறாக, இப்பயணத்தில் நாங்கள் சேகரித்த கதைகள் நாட்டுப்புற வடிவிலானவை. வாய்மொழி மரபுடையவை. கதாபாத்திரங்களைப் பற்றிய நாட்டுப்புற அங்கதங்கள் அடிவயிற்றில் சிரிப்பு மூட்டுபவை. கண்ணகி என்பவள் தெய்வப் பெண் என்பதாலேயே அவளுக்கும் கோவலனுக்கும் இடையே உடலுறவு நிகழச் சாத்தியமில்லை, கடைசியாக கோவலனைக் கொன்றவள் கண்ணகியே, மாதவியின் மாமன் என்ற கதாபாத்திரத்திலிருந்து தான் ‘மாமா வேலை பார்ப்பவன்’ என்ற சொலவடை எழுந்தது, கண்ணகி மதுரையை எரித்தபோது அறம் பயின்றவர்களைத் தன்னுடன் பாதுகாப்பாகக் கூட்டிச் சென்ற மக்களே இன்றைய முதுவர்கள், கண்ணகி எரித்த மதுரையை குளிரச்செய்ய அனுப்பப்பட்ட பெண்ணே இன்றைய மீனாட்சி தெய்வம், கோவலன் கொலையுண்டதும் தன் உக்கிரம் தீராமல் வெவ்வேறு திசைகளுக்குப் பயணித்த கண்ணகி என பலதரப்பட்ட கண்ணகிகள் பிறந்து வாழ்ந்துள்ளனரோ என்று எண்ணும் பட்சத்தில் அவளின் முடிவு வேறுவேறு எல்லைகளில் உச்சக்காட்சி அடைந்துள்ளது.

எங்களுடன் இப்பயணத்தில் முதல் நபராக இணைந்த தர்மபுரியைச் சேர்ந்த வரலாற்றாசிரியை தில்லையம்மாள் எங்கள் பயணத்தை இன்னும் சுவையூட்டினார் என்று சொல்லவேண்டும். ஐம்பது வயதான இவர் இப்பயண அனுபவத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததும், பயணத்தின் பதினைந்து நாட்களும் முதல் நபராய் எழுந்து நிலவெளியோடு சங்கமிக்கும் உற்சாகமும் எங்கள் அனைவர் மீதும் அவர் காட்டிய அக்கறையும் அன்பும் கொள்ளை அழகுமிக்கது.

மேற்சென்ற பயணத்தை ஒருமணி நேரப்படமாகத் தொகுத்திருக்கிறோம். அதே பயண அனுபவமும் நாட்டுப் புற வெளிகளில் உருப்பெற்ற கண்ணகியின் சித்திரமும் உருப்பெறும் வகையிலும் ‘நாடுகாண் காதை’ என்ற பொருளில் படமாக்கியுள்ளோம். ஆங்காங்கே திரிதிரியாக சொல்லப்பட்ட கதைகளை இணைத்து ஒரே கதையாக இழைத்துள்ளோம். இன்று எங்களுடைய மனோ வெளியில் உலவும் கண்ணகி என்பவள் கற்பின் வேறுவேறு நிலைகளை ஆள்பவள். இந்தச் சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்த எரிக் மில்லரின் ‘கதை சொல்லும் நிலையம்’, பாட்டிகள் காலத்தில் நிலவிய கதை சொல்லும் மரபைப் புணரமைக்கும் பணியை முதன்மையானதாகக் கொண்டுள்ளது. கதை சொல்லும் கலையே, மானுட படைப்பூக்கம் முழுமையுறும் படைப்புக் கலை என்பதை இப்பயண நிறைவில் உணரமுடிந்தது. இத்தகைய புனைவுக் கலைவடிவம் வழியாகத் தான் ‘கண்ணகி’ எனும் பெண் இன்னும் இன்றும் கடற்கரையோரமாயும் காடுகளூடேயும் மலைத்தொடர்கள் வழியாகவும் வயல்வெளியிலும் வெட்டவெளிகளிலும் நடந்தேகிக் கொண்டே இருக்கிறாள். அவளைத் தொடரும் பயணமோ ஒருபொழுதும் முடிவுறாது.

இப்பயணம் பற்றிய புகைப்படங்களுக்கு:
0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்