/* up Facebook

Aug 9, 2010

மனம் என்னும் பெருவெளி - ஜெயந்தி


ஐம்புலன்களையும் அடக்கி ஆழத் தெரிந்தவனே வெற்றி பெறுவான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை. கோபத்தை அடக்கி ஆண்டு சரியான இடங்களில் சரியான நேரங்களில் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் கோபத்திற்கும் மதிப்பு இருக்கும்.

வரவே கூடாத உணர்ச்சிகள் பொறாமை, பேராசை, பழிவாங்கும் குணம், அடுத்தவரை கெடுக்கும் குணம், வன்மம் இவையெல்லாம் தோன்றும்போதே முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவைகள் நம்மை சாப்பிட்டுவிடும்.

சில உணர்வுகள் வந்தால் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். அதுதாங்க இந்த காதல். காதல் வயப்பட்டவர்கள் தங்கள் வசமிழந்திருப்பார்கள். அந்த உணர்வுக்குள்ளே மூழ்கிக்கிடப்பார்கள். அது அழகான உணர்வு யாரையும் துன்புறுத்தாத உணர்வு என்பதால் எல்லோராலும் அனுமதிக்கப்பட்ட உணர்வு. காதலர்களை காற்று வெளியில் மிதக்கச் செய்யும் உணர்வு.

இன்னும் சில உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்கும். அதன் கட்டுப்பாட்டிலிருந்து நாம் மீள்வது மிகவும் கடினமான செயல். நம்மை முழுமையாக ஆட்சி செய்யும்.

உதாரணத்திற்குச் சொல்வதென்றால் இரண்டு வருடத்திற்கு முன் எங்கள் அம்மாவிற்கு ஏற்பட்ட எலும்பு முறிவைச் சொல்லலாம். ஆஸ்பத்திரியில் காலில் வெயிட்கட்டித் தொங்கவிட்டு அசையாமல் படுக்க வைத்திருந்தார்கள். அங்கு வந்த ஹவுஸ் சர்ஜன்ஸ்களை அடுத்து என்ன செய்வார்கள் என்று கேட்டபோது அவர்கள் சொன்னது ஆப்பரேஷன் செய்து ஸ்குரூ போடுவார்கள் என்றனர். செலவு எவ்வளவு ஆகும் என்றதற்கு 50 ஆயிரம் வரை ஆகும் என்றனர். நமக்கு மனதிற்குள் இந்த ஆப்பரேஷனை வயதான காலத்தில் அவர்களால் தாங்க முடியமா? அப்புறம் பணத்திற்கு என்ன செய்வது? இதே பிரச்சனை மனதுக்குள் சூறாவளியாக சுழன்றடிக்கும். வேறு எந்த நினைவும் வராது. மற்ற நேரங்களில் பெரியதாக தெரியும் பிரச்சனைகள் எல்லாம் அப்போது ஒன்றுமே இல்லாததுபோல் தோன்றும்.

அப்புறம் ஒரு வாரம் கழித்து பெரிய டாக்டர் வந்து பார்த்துவிட்டு ஒன்றுமில்லை இது கிராக்தான் ஆறு வாரங்கள் அசையாமல் படுக்கையில் இருந்தால் எலும்பு கூடிவிடும் என்று சில மாத்திரைகள் எழுதிக்கொடுத்தபோது ஏற்படுமே ஒரு உணர்வு. அந்த நிம்மதியை எந்த வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.

சில பிரச்சனைகள் நம்மை ஆற்றாமலே போய்விடும். காலம்தான் ஆற்றவேண்டும். அப்போது கொதிக்கும் மனசை எதைக்கொண்டு ஆற்ற முடியும். எந்த மூடி போட்டு மூடி வைக்க முடியும்.

இப்படிப்பட்ட மனநிலையிலேயே பூவரசிக்கு வந்த பெருங்கோபம் கண்ணை மறைத்து அது பழிவாங்கும் செயல்வரை கொண்டுபோய் விட்டது. அவர் முதலிலேயே விழித்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் பழிவாங்கும் எண்ணம் தோன்றியபோதாவது இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்க வேண்டும். டிவியில் அவள் புத்திகெட்டுப்போய் செஞ்சிட்டேன் என்று அழுவதைப் பார்க்கும்போது தோன்றுகிறது இவள் எல்லாம் முடிந்தவுடன் அறிவுக்கண்ணைத் திறந்து பார்க்கிறாள். இதை அவள் முன்பே செய்திருந்தால் இதன் விளைவு என்னவாக இருக்கும்? நாம் உதாரணம் காட்டப்படுவோமே என்றெல்லாம் யோசித்திருப்பாள். இவருக்கு மனநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். சில நிமிடங்கள் உணர்ச்சியை அடக்கி ஆண்டு மூளைக்கு வேலை கொடுத்திருப்பாளேயானால் இந்த விளைவைத் தடுத்திருக்கலாம். (நூற்றுக்கணக்கில் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று அவர்கள் சதையையும் சமைத்துச் சாப்பிட்ட கயவன் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எல்லாம் என் வேலைக்காரன் செய்தது என்று சொல்லி வேலைக்காரனை தண்டனை பெற வைத்துவிட்டு வெளியிலே சுதந்திரமாக திரிகிறவன் காரணமில்லாமல் ஞாபகத்திற்கு வருகிறான்.)

சூறாவளியடிக்கும் மனநிலையின் போதுதான் மக்கள் பிற நம்பிக்கைகளை நாடுகிறார்கள். வேண்டுதல், பிரார்த்தனை, குறி கேட்பது, பரிகாரம் செய்வது போன்ற எதிலாவது தன் மனதை கட்டுப்படுத்த முடியுமா என்கிற ஆசைதான்.

நம்மை கட்டுப்படுத்தும் மனநிலையையும் வென்றெடுக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய புயலடிக்கும் மனநிலையாக இருந்தாலும். அப்படி ஒரு மனதை தன்னம்பிக்கையாலும் அறிவை வளர்த்துக்கொள்ளும் திறனாலும் வென்றெடுப்போம்.

டிஸ்கி: சூறாவளியடிக்கும் மனநிலையில் இரண்டு வாரங்களாக இருந்தேன். அதனால்தான் பதிவு எதுவும் போட முடியவில்லை. இப்போது அமைதியான மனநிலை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்