/* up Facebook

Aug 16, 2010

பெருநிலத்தின் கதைகள் பிள்ளைகளை காணாதிருக்கும் அம்மாக்கள் - நவராஜ் பார்த்தீபன்


கஜானந்தின் அம்மா வந்த பிறகு மீண்டும் வீட்டிற்குப் போனேன். காக்கா கடைச் சந்தியில் விழுத்தப்பட்ட தண்ணீர் டாங்கி கிடக்கும் இடத்தில் இருந்த தற்காலிக சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து கூடாரத்திற்குள் கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தார். யாரம்மா வாரது? என்று பிள்ளைகளைப் பார்த்துக் கேட்டார். என்னைப் பார்த்ததும் முகத்தில் வலியின் பல்லாயிரம் கோடுகள் அசைந்தன. முகம் சுருங்கி கண்ணீர் பீறிட்டுக்கொண்டு வந்தது. பேசாமல் உடைந்து சிறிய துண்டாய் கரைந்து போன சுவரில் விழுந்து அமர்ந்து கொண்டார். நானும் அப்படிச் சிதைந்த மற்றறொரு சுவர்த் துண்டில் பேசாமல் இருந்தேன். ஒன்டுமாய்த் தெரியேல்ல தீபன் என்றபடி வார்த்தைகளை உதிர்க்கத் தொடங்கினார். நான் உயிருடன் இருப்பேனாக இருந்தால் வருவன் எண்டு சொன்னவன். இவ்வளவு நாளாகிட்டுது. எங்க தீபன் அவன் போயிருப்பான். விக்கி விக்கி குழந்தையைபோல அழத் தொடங்கினார்.

தாயுக்காக குழந்தைகள் அழும் காலம் போய் இங்கு குழந்தைகளுக்காக தாய்மார்கள் அழும் காலம் எங்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. அவனை எப்பிடி எல்லாம் வளத்தன். இந்தப் பிள்ளையள் அண்ணா அண்ணா என்டு தவிக்கும் பொழுது இதுகளுக்கு என்ன பதிலத் தம்பி சொல்லுறது? அழுதழுது கஜானந்தைப் பறற்pயே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். நானும் கஜானந் வருவான் என்ற நம்பிக்கையை அம்மாவுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது கஜானந்தின் அம்மாவை போன்ற தாய்மார்களை குழந்தைகளைப்போல கையாள வேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

உயிருடன் எனது பிள்ளை இருக்கிறது என்று நம்பும் ஆயிரம் ஆயிரம் பிள்ளைகளைப்போல யுத்தகளத்தில் கஜானந் காணாமால் போயிருக்கிறான். அவன் இறந்து கிடந்ததைப் பார்த்தார்களாம் என்று யாராவது சொல்லிக் கொண்டு வந்தால் அப்பிடிச் சொல்ல வேண்டாம் என்று கஜானந்தின் அப்பா மறிப்பார். அவன் இராணுவத்தினரிடம் சரணடைந்ததை பார்த்தார்களாம் என்றும் அவனின் அம்மாவுக்கு பல கதைகள் கிடைத்து விட்டன. கஜானந் இருக்கிறான்., வருவான் என்ற காத்திருப்பு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. சில பத்திரிகைப் பக்கங்களை எடுத்துக் கொண்டு வந்து எனக்குக் காட்டத் தொடங்கினார். தினக்குரலில் கல்லை கரைய வைக்கும் கதைகள் என்றும், சுடராளியில் உயிர் வலிக்கும் கணங்கள் என்றும் அந்தப் பக்கங்கள் காணாமல் போனவர்கள் பற்றிய உறவுகளின் கடிதங்களையும் குறிப்புக்களையும் இறுதிநாள் கதைகளையும் நிரப்பி வைத்திருந்தன. இப்பிடி கஜானந்தையும் போட்டு தேடிப் பாப்பம் என்டுதான் இந்தப் பக்கங்களை எடுத்து வைச்சிருக்கிறன். என்று என்னைப் பாத்து சொல்லிக் கொண்டிருந்தார்.

இரவில நித்திரையில்லை தீபன். சூரியன் வானொலியில எத்தின பேரைத் தேடுற கடிதங்கள வாசிக்கிறாங்கள். அவங்கள் அதை வாசிக்க எனக்கு உயிரே போகிற மாதிரி இருக்குது. என்ன மாதிரி எத்தின வீடுகளில பிள்ளையள, புருசன்மார, தாய்மார, உறவுகள இழந்து சனம் தவித்துக் கொண்டிருக்கிறது என்றபடி மீண்டும் கஜானந்தின் அம்மா அழத் தொடங்கினார். கஜானந்தை பிரிய எங்களாலேயே முடியாதிருக்கும் பொழுது அவனது அம்மா அதை எப்படி தாங்குவார்? அவன் வருவான் என்டபடியாலதான் நான் இன்னும் உயிரோட இருக்கிறன். கம்பஸ் கிடைச்சுது போய் படிக்க காத்துக் கொண்டிருந்தான். எப்படியாச்சும் வருவான் தீபன் என்று மிக உறுதியாக சொல்லிக் கொண்டு எனக்கு தேனீரை நீட்டினார். தீபனுக்கு போடுற தேத்தன்னியோட எனக்கும் ஒன்டு போடுங்க என்ற கஜானந்தின் வார்த்தைகள் வீடு சிதைந்துபோயிருக்கிற அவனது காணியிலிருந்து எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.

நானும் யசோதரனும் எங்களது காணியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். எங்கள் தெரு என்றதும் எனக்கு நிறைய ஞாபகங்கள் வந்தன. உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது கோபிநாத்தோடு சேர்ந்து படிக்கும் ஞாபகங்கள் வந்து கொண்டிருந்தன. நானும் கோபிநாத்தும் ரஜனியும் இன்னும் சில பெடியளும் நின்று கதைத்துக் கொண்டிருக்கும் மைதானம் சிதைவு மண்டிப் போயிருந்தது. ரஜனியையும் கோபிநாத்தையும் என்னையும் கூட அந்த மைதானத்தில் காணவில்லை. பக்கத்தில் ஒரு முன்பள்ளி இருந்தது. முன்பள்ளி இருந்த இடமே தெரியவில்லை. ஒரு சில வீடுகளில் மீள வந்து ஆட்கள் இருந்தார்கள். சத்ஜெய யுத்தம் முடிந்து வந்த பிறகு மீண்டிருந்த எங்கள் ஊர் தெரு மறுபடியும் பழைய நிலையைவிட மோசமாக சிதைந்திருந்தது.

கோபிநாத்தின் அம்மா பூவரச மர வேலியைப் பிடித்தடி யோசித்துக் கொண்டிருந்தார். யாரய்யா போறது? என்ற அவரது வார்த்தைகளில் எதிர்பார்ப்பும் பேராவலும் துயரும் படிந்திருந்தது. கோபிநாத்தின் அம்மாவை கண்டால் என்ன செய்யிறது என்ன கதைக்கிறது என்டு தெரியேல்லடா என்று ரஜனி சொன்னதைப்போல எனக்கும் என்ன செய்வது எப்படி கதைப்பது என்று தெரியவில்லை. அவரைப் பாத்து எப்படி இருக்கிறீங்கள் என்று கேட்க முடியுமா? ஆனால் அவர் முதலில் படிப்பு முடிஞ்சுதா? எப்பிடி இருக்கிறிங்க? எங்க இருக்கிறிங்க? என கேட்டுக் கொண்டு கோபியைப் பாத்திங்களா? தீபன்... என்று அழத் தொடங்கினார். கடைசி வரைக்கும் எங்களோடதான் இருந்தான். உயிரோட இருந்தா வருவன் என்று சொல்லிட்டு;ததான் போனான் என்று குழந்தை மாதிரி விம்மி விம்மி அழத் தொடங்கினார்.

சாப்பாடு இல்லை. சனங்கள் எல்லாம் செத்து விழுந்து கொண்டிருந்தது. எங்களோடயே இருந்தான் என்று அழுது கொண்டே என்னை கூடாரத்திற்கு அழைத்துக் கொண்டு போனார். சில தகரங்களால் தடிகளின்றி மூட்டப்பட்டிருக்கும் கூடாரமும் இறப்பர் தரப்பாலினால் அமைந்த ஒரு கூடாரமுமாக வீடு சுருங்கிப் போயிருந்தது. தகரக்கூடாதரத்திற்குள் கோபியின் கடைசித் தம்பி நுளம்பு வலைக்குள் படுத்திருந்தான். அவர்களின் பழைய வீடு இருந்த இடம் மண்திட்டாக இருந்தது. மண்ணால் கட்டப்பட்ட அழகான அந்தப் பழைய வீடு எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. 1996 சத்ஜெய யுத்தத்திற்கு முன்பு கட்டப்பட்ட அவர்களின் வீடும் எனக்கு தெரியும். மீண்டும் அவர்கள் வந்து இரண்டு கூடாரங்களை அமைத்திருந்ததார்கள்.

கோபிநாத் என்னுடன் முதலாம் வகுப்பிலிருந்து படித்துக் கொண்டிருந்தவன். காலையில் பாடசாலை செல்லும் பொழுது என்னுடன்தான் வருவான். அவன் பாடசாலை போகும் பொழுது அவனது உருவம் மறைந்து கொண்டிருக்கும்வரை மறைந்து முடியும்வரை கோபியின் அம்மா பார்த்துக் கொண்டிருப்பார். வகுப்பில் கோபிக்கும் எனக்கும் சண்டைகள் வரும். இருவரும் அடிபட்டிருக்கிறோம். ஓடிப்பிடித்து ஒளிந்து விளையாடியிருக்கிறோம். பிரத்தியேக வகுப்புக்களுக்கும் போயிருக்கிறோம். குண்டு மாமா என்று எங்கள் தெருவில் இருந்தவரின் மகளான சுமதி ரீச்சரிடம் மாலையில் போய் படிப்போம். கோபிநாத்தின் அம்மாவும் அப்பாவும் உடுப்பு தைப்பார்கள். கோபி வித்தியாசமான பல வடிவங்களில் காற்சட்டைகள் தைத்து போட்டிருப்பான். எனக்கும் அவர்கள்தான் சிறிய வளதில் கற்சட்டை தருவார்கள். தையல்கார வீடு என்றும் கோபியின் வீட்டை அழைப்பார்கள்.

ஏழாம் வகுப்பு வரை படித்த பிறகு சத்தெஜய போரால் கோபி அவனின் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து ஒட்டிசுட்டானுக்கு போனார்கள். நாங்கள் ஸ்கந்தபுரம், மணியங்குளத்திற்கு போனோம். ஒட்டிசுட்டானையும் இராணுவம் பிடித்த பிறகு அவர்கள் மாத்தளைக்கு போனார்கள். மீண்டும் நாங்கள் ஊர் திரும்பும் பொழுது இருவரும் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தோம். கோபி மாதத்தளை மாவட்ட பாசாலையில்தான் பரீட்சை எழுதினான். மாதத்தளைக்கு போன பிறகு அங்கு அவனுக்கு பல நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். நகைச்சுவையாக எப்பொழுதும் பேசும் கோபியை அங்கிருந்த நிறையப்பேருக்கு பிடித்து விட்டது. மீண்டும் கோபிநாத் ஊருக்கு வந்த பிறகு மாத்தளையில் படித்த அவனது நண்பர்கள் தொடர்ந்து கடிதம் எழுதுவார்கள். கடிதம் வந்தவுடன் என்னிடம் வந்து வாசித்து காட்டுவான். இங்கிருந்து பாடக்குறிப்புக்களையும் கேள்விகளையும் அனுப்புவான்.

மாத்தளையில் தமிழ், இந்துநாகரிகம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து சிலர் போய் கற்பித்து வந்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருப்பான். நாங்கள் விடையளிக்கும் முறை, இங்கத்தைய பாடக்குறிப்புக்கள் என்றால் மாத்தளை தமிழ் மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லுவான். லோகேஷ் வாத்தியின் தமிழ் பாடக்குறிப்புக்கள் சிவஞானம் வாத்தியின் இந்துசமய பாடக்குறிப்புக்கள், கனைக்ஸ் வாத்தியின் இந்துநாகரிக படக்குறிப்புக்கள் எல்லாம் வாங்கி தானே சின்ன சின்ன எழுத்தாக எழுதி தபாலில் அனுப்பி விட்டு சந்தோசப்படுவான். நமது காலத்தில் நடந்த எல்லா துயரங்களையும் வலிகளையும் தனது பாடக்கொப்பிகளில் எழுதி வைத்திருப்பான்.

நானும் கோபியும் ஒன்றாகத்தான் படிப்போம். எங்கள் வீட்டில் நின்ற மாமரத்தின் கீழாக அல்லது என்ஈசி டீசனில் சிலவேளை பகலில் என்றால் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நாங்கள் சிறிய வயதில் படித்த வகுப்பறைகளில் இப்படி இருந்து இருவரும் விவாதித்து படித்துக் கொண்டிருப்போம். பாடங்கள் குறித்த எங்கள் விவாதங்கள் சிலவேளை பாடத்தைத் தாண்டி அரசியல் சினிமா என்றும் சென்றுவிடும். சிலவேளை இருவருக்கும் இடையில் முரண்பாடே வந்துவிடும். சண்டைக்குப் பிறகும் டேய் தீபன்... என்று என்னைக் கூப்பிட்டபடி கோபி வருவான். அல்லது கோபி நிக்கிறானா அம்மா என்றபடி அவனது வீட்டுக்கு போவேன். திரும்பவும் படிப்பதற்காக போவோம்.

என்ஈசி டீசனில் நானும் கோபியும் ஒன்றாகவே லோகேஷ் வாத்தியிடம் தமிழ் படித்தோம். ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஆழமான பதில் அளிப்பதில் எங்களுக்குள் போட்டி ஏற்படும். இருவரும் தேடிய புதிய விடயங்களை பறிமாறுவோம். என்ஈசியில் இரவில் அரிக்கன் லாம்மை கொண்டுபோய் வைத்து படித்துக் கொண்டிருக்கும் பொழுது மேசையில எங்கட பெயர எழுதி வைப்பமடா.. அதோட திகதியளையும் எழுதி வைப்பம். ஒரு காலத்தில பாக்கலாம். அப்பிடி பாக்கேக்க எப்பிடியிருக்கும் தெரியுமாடா? என்று சொல்லிக் கொண்டிருப்பான்.

அடுத்த நாள் வந்து என்ஈசி இயக்குனர் வந்து மேசையை வாசித்து விட்டு புது மேசை வாங்கித் தரச் சொல்லப் போகிறார் என்று நான் சொல்லிக் கொண்டிருப்பான். என்ஈசி இயக்குனர் நகுலன் படிக்கும் மாணவர்கள் அதை உடைச்சிட்டான்கள். இதை உடைச்சிட்டான்கள். என்று கத்திக் கொண்டிருப்பார். பியரை குடிச்சிட்டு வந்து பெடியள் கரும்பலகைகளிலயும் மேசைகளிலயும் வெளிப்பாடுகளை காட்டி உடைத்து வைத்திருப்பான்கள். சிலவேளை விளக்கங்களும் விசாரணைகளும் நடக்கும். சிலவேளை நம்மட பெடியள் தகரங்களையும் கழட்டிக் கொண்டு போயிருவாங்கள். திவா, நிரஞ்சன், கஜானந் இப்பிடி கொஞ்சப்பேர் இரவில தங்கிறதே அங்கதான். இது பழைய என்ஈசி பற்றிய கதையள். புதிதாய் மத்திய கல்லூரிக்கு முன்னால் கட்டிய டீசன் எனக்கும் நிறைய நாள் தங்கிறதுக்கு உதவியிருக்கிறது. என்னைப்போல இடமற்றலைந்த ஜெனிற், நவராஜ், அமலன், சேனா இப்படி நிறையப்பேர் தஞ்சமடைந்திருக்கிறோம். அங்கும் இப்பிடித்தான் உடைப்பாங்கள்.

இந்த ஆள் வகுப்பில வைச்சு காசு கட்டீட்டியா என்டு வதைக்குது... இப்பிடி செய்தாதான் சரி என்டுற சத்தங்கள் மட்டும் எனக்கு கேட்கிறதுண்டு. ஆனால் என்னைப் போன்ற வறுமையான மாணவர்களுக்கு இலவசமாக படிக்க விடுற நல்ல மனுசன் என்னும் அப்பிராயம் எனக்கு வகுப்பறைகளில் சேதங்களை உண்டு பண்ணும் விளையாட்டு எண்ணங்களை தருவதில்லை. கோபிநாத்தும் நகுலன்சேர் பாவமடா ஏன்டா நம்மட பெடியள் இதுகள உடைக்கிறாங்கள் என்டு கேட்பான். சிலவேளை நானும் கோபியும் படிச்சுக் கொண்டிருக்கும் பொழுது நகுலன் சேர் வந்து நல்லா படியுங்கட கம்பஸ் போகவேணும் என்று சொல்லிக் கொண்டிருப்பார். இப்ப நகுலன் இயக்குனரின் என்ஈசி இருந்த இடத்தில எந்த தடயங்களும் இல்லை. நாங்கள் எழுதி வைத்த குறிப்புக்களும் பெடியள் உடைச்ச மிச்சங்களையும் காணவில்லை.

கோபிநாத்திடம் ஞாபகங்களை சேமிக்கும் பழக்கம் நிறைய இருக்கிறது. படிக்கும் காலத்து கதைகளை சொல்லுவான். உனக்கு ஞாபகமிருக்காடா? என்று நினைவுக்கு வருவதையெல்லாம் என்னிடம் கேட்பான். அவனது உடுப்புப் பாட்டியிலும் புத்தகப் பட்டியிலும் அவன் நிறைய ஞாபகப் பொருட்களை சேகரித்து வைத்திருந்தான். மாத்தளை பாடசாலையில் படித்து பிரியாவிடை பெறும் பொழுது தனது வெள்ளைச் சேட்டில் மாணவர்களின் கையயொப்பங்களை வாங்கி வைத்திருந்தான். சிறிய வயது முதல் படித்த புத்தகங்கள், பாவித்த உடுப்புக்கள் எல்லாம் வைத்திருந்தான். நண்பர்களின் பெயர்ககள் என்று தன்னோடு அவன் நிறைய ஞாபகங்களை வைத்திருந்தான். இருவரும் பரீட்சை எழுதினோம். எனக்கு பல்கலைக்கழகம் கிடைத்தது. அவனுக்கு கிடைக்கவில்லை.

இருவரும் ஒன்றாகவே பெறுபேற்றை இணையத்தில் பாக்கப் போயிருந்தோம். எனக்கு பெறுபெறு பார்த்த இடத்திலேயே பகிடிவதைகள் தொடங்கின. என்னை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு: வந்தான். அடுத்த முறை பரீட்சை எழுதுடா என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். இல்லடா இனி படிக்க ஏலாது.. ஆங்கிலத்தை படிச்சிட்டு எதாவது வேலையில இறங்குவம் என்று சொன்னான். அவனின் முகம் வாடிப் போயிருந்தது. அம்மாவுக்கு என்னடா சொல்லப்போறாய் என்று கேட்டதற்கு தெரியேல்லடா பாப்பம், சமாளிப்பம் என்று வாடிய முகத்தால் சிரித்தபடி சொல்லிக் கொண்டிருந்தான். எங்கள் வீட்டுக்கு வந்து அம்மா உங்கட மகனுக்கு கம்பஸ் கிடைச்சிட்டு. இனி ஒரு கவலையும் இல்ல உங்கட கஷ்டம் தீரப்போகுது என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

எனக்கு கோபிநாத்தின் குடும்பம்பத்தின் நிலையை நினைக்க கவலையாக இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அவின் அம்மா தைத்துக் கொண்டிருக்கிறார். அந்த தெருவால் செல்லும் பொழுது அவனது அம்மா தைக்கும் தையல் மெசினின் சத்தம்தான் பெரிதாக கேட்டுக் கொண்டிருக்கும். தையல் தவிர காலையிலும் மாலையிலும் கடைகளுக்கு கோபியின் அப்பா பாண் போடுவார். அதனால் அவரை பேக்கரி அண்ணன் என்றும் அழைப்பார்கள். இரவு பகலாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் அவரை பாக்கும் பொழுதெல்லாம் கழுத்தில் உடுப்பு அளக்கும் நாடாதான் தொங்கிக் கொண்டிருக்கும். வானொலிக்கான உறைகளை தைத்துக் கொண்டிருந்தார். கோபிநாத்தின் குடும்பம் ஓரளவு ஓடிக் கொண்டிருப்பதற்கு அந்த வேலைதான் கை கொடுத்தது. பிறகு ஆட்டோ கார் போன்ற வாகனங்களுக்கு சீட் தைத்துக் கொடுத்தார். அந்த சீட்டுக்களை இறுதியாக இழுத்துக் கட்டும் கடுமையான வேலையில் கோபிநாத்தும் அப்பாவுடன் இணைந்து செய்து கொண்டிருப்பான்.

நான் பல்ககைலக்கழகம் போகும் பொழுது என்னை வழியனுப்பி வைக்க வந்தான். கோபி ஆறு மாத ஆங்கில வகுப்பை நிலாந்தனிடம் படித்து முடித்திருந்தான். இப்ப நல்லா ஆங்கிலம் கதைக்கிறான் எழுதுறான் என்று நான் ஒரு முறை விடுமுறையில் போகும் போது நவபிரசாத் சொன்னான். இப்பொழுது படலையடியில் மழிக்கப்படாத முகத்துடன் கோபிநாத்தின் அப்பா பெருந்துயரம் பீறிட வந்து கொண்டிருந்தார்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்