/* up Facebook

Aug 31, 2010

என்ன 'வலி' அழகே! - சந்தனமுல்லை


இந்த போஸ்டை யாருக்கு சமர்ப்பிக்கலாம்?
எல்லா பெண்களுக்கும்..அல்லது அனைத்து பியூட்டி பார்லர்களுக்கும்...ம்ம்..அல்லது அனைத்து ஆண்களுக்கும்....?!

சமீபத்தில் அலுவலகத்தின் ஆண்டுவிழாவிற்காக(!) ஒரு ராம்ப் வாக் இருந்தது. அதில் நானும் பங்கு பெற்றிருந்தேன். பயிற்சிகள் எல்லாம் முடிந்து நிகழ்ச்சி நடைபெறும் நாள் நெருங்கும்போது பங்கு பெற்ற அனைத்து பெண்களுக்கும் ஒரு டிப்ஸ் வழங்கப்பட்டது.

புருவத்தை ஒழுங்கு (த்ரெட்டிங்) செய்தல்,
கைகளில் தெரியும் பூனைமுடிகளை அகற்ற (வாக்ஸிங்) மற்றும்
முகப்பொலிவுக்கான ஃபேஷியல்

ஃபேஷியலை மட்டும் செய்துக்கொள்ளலாமென்று நினைத்து கடைசியில் எதுவுமே செய்துக்கொள்ளாமலே பங்கேற்றேன். அது வேறு விஷயம்.

என்னைப் பொறுத்தவரை பியூட்டி பார்லர் என்பது எனது முடியின் நீளத்தை குறைக்க மட்டுமே. தலைமுடி வெட்டிக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. (அதற்குபின்னர் முற்றிலும் முற்றிலும் புதிய தோற்றம் கிடைப்பதால் அல்லது அப்படி நான் நம்புவதால் இருக்கலாம்.) மேலும், தலைமுடியைக் குறைப்பதால் உடலில் வலிகள் ஏதும் கிடையாது.

எனது ஒருசில நண்பர்களுக்கு, பியூட்டி பார்லர் என்பது அழகுபடுத்திக்கொள்ள - வலிகளை அனுபவித்து உடல்பாகங்களை அழகுபடுத்திக்கொள்வதற்கானது. சிலருக்கு, கால் மசாஜ் செய்து கால்விரல் நகங்களுக்கு நகப்பூச்சு (!) போடுவதற்கும். இன்னும் சிலருக்கு, தலைமுடிக்கு விதவிதமான வண்ணங்களை அடித்துக் கொள்வதும், ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதற்கும் அல்லது பாடி மசாஜ் செய்துக்கொள்வதற்கும் அல்லது விலையுயர்ந்த பேஷியல்கள் - கோல்ட் ஃபேஷியலிலிருந்து அரோமா மற்றும் ஹெர்பல் இன்னபிற.

மேற்கண்ட எதையும் நான் முயற்சி செய்திராததால் அதைப்பற்றி எதுவும் என்னால் சொல்ல இயலாது.

ஆனால், பியூட்டி பார்லர் என்பது நம்மைப் பற்றி, நமது உடலை பற்றி - நல்லபடியாக உணர்வதற்கு உதவி செய்யும் இடம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் - சிலவற்றை அறியும் வரை/உணரும் வரை.

கல்லூரி நண்பர்கள்தான் முதல்முதலில் எனது கால்கள் அழகானவை அல்ல என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. "அடர்த்தியாக முடி முளைத்த கால்கள் பெண்களுடையது அல்ல. பெண்களின் கால்கள் மொழுமொழு-வென்று முடியற்றவையாக இருத்தல் வேண்டும். அல்லாவிடில், அவை அசிங்கமானவை." பெண்களுக்கு முடி என்பது தலையில் மட்டுமே இருக்க வேண்டும்.

அடுத்த லீவுக்கு வீட்டுக்குச் சென்றபோது, கடைசாமான்கள் பட்டியலில் இடம்பெற்றது ஆனி ஃப்ரெஞ்ச். அரை மணிநேரம் அதை தடவிக் கொண்டு பாத்ரூமில் அடைந்து கிடந்தது மறக்க முடியாதது. அதைப் போலவே, முடி நீக்கிய கால்களை நானே தடவித் தடவிப் பார்த்ததும். எல்லாம் ஒரு வாரம்தான். அடுத்த பதினைந்தாவது நாளைக்குள் "என்ன முல்லை, ஆம்பளை கால் மாதிரி இருக்கு" கதைதான்!

"குளிக்கும்போது மஞ்சள் தேய்", "ப்யூமிக் ஸ்டோன் போடு" என்று நாமே கேட்காவிட்டாலும் 'ஆஸ்க் லைலா' மற்றும் 'ஆஸ்க் அகிலா'க்கள் விடவில்லை. இது எதுவுமே எனது அவசர கோலத்துக்கு உதவவில்லை. ஹாஸ்டலின் ஷானாஸ் ஹூசைன்களில் ஒருவர் "வேக்ஸிங் பண்ணாதான் க்ரோத் குறையும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதுவரை வுமன்ஸ் எராவில் அதைப்பற்றி
அறிந்திருந்ததோடு சரி, எப்படி இருக்குமென்று சுத்தமாக தெரியவில்லை.

"வீட்டுலேயே பண்ணலாம், சர்க்கரை, தேன் எல்லாம் போட்டு காய்ச்சணும், சூடா கால்லே அப்ளை பண்ணிட்டு வெள்ளைத் துணியை கால்லே ஒட்டிட்டு முடி வளர்ந்திருக்கிறதுக்கு எதிர்பக்கம் இழுக்கணும்" என்றபோது தண்டுவடம் சில்லிட்டது.

"ஏன் கால்லே முடி இருந்தா என்ன? என்னோட கால் எப்படி இருந்தா யாருக்கென்ன?" என்ற கேள்விகளுக்கு இடமுமில்லை. விடையுமில்லை. மிடிகளையும் கேப்ரிகளையும் தாண்டி நீளும் கால்களில் உரோமம் இருந்தால் அது வெட்கத்துக்குரியது. ஆண்களுக்கோ அது அழகு...கம்பீரம்!


எட்டாம் வகுப்பு படிக்கும்போது "காலேஜா" என்று என்னைப் பார்த்து கேட்கவைத்ததற்கு எனது உயர்ந்த கால்களும் ஒரு காரணம். பள்ளியின் பெருமைக்குரிய அதலெடிக்காக இருந்ததற்கு, முடி முளைத்த- ஆண்களுடையது போலிருக்கிறது என்று சொல்லப்பட்ட கால்களும் காரணம். மற்றவர்களிடமிருந்து உயரமானவளாக தனியாக என்னை தெரிய வைத்தது கருகரு முடி முளைத்த கால்களே!

"ஆச்சி என்னா ஹைட் டீச்சர்" என்பது வீட்டிற்கும் பெருமையாகவே இருந்தது - ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் எனது உயரத்தை பெரிம்மா கதவிற்கு அருகில் நிற்க வைத்து ஸ்கேலால் தலைக்கு மேல் அளந்து குறித்து முந்தைய வருடத்தைவிட அளவு பார்ப்பது - ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது - எனது கால்களில்லாமல் - முடி முளைத்த அக்கால்களில்லாமல் என்னால் என்னை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

திருமணம் நிச்சயமானபோது அலுவலகத் தோழி என்னை அழைத்துச் சென்ற இடம் - லேக்மே பியுட்டி பார்லர்.

கால்களில் கோந்தைப் போன்ற பிசுபிசுப்பான ஒன்றை சூடாக கத்தியால் தடவும் போது அது ஒன்றும் நிச்சயமாக சுகமானதொன்றாக இல்லை. உடனே ஒரு பேப்பர் கைக்குட்டையை வைத்து எதிர்ப்புறமாக டக்கென்று இழுத்தபோது தேனீ கொட்டியது போல...அல்லது 100 ஊசி முனைகளை வைத்து குத்தியது போல...அல்லது 1000 வோல்ட் ஷாக் அடித்தது போல இருந்தது.

இவ்வளவு கஷ்டப்பட்டு இதை ஏன் செய்துக்கொள்ள வேண்டுமென்றே தோன்றியது.

ஒரு அரைநாள் முழுக்க அங்கேயே - அங்கிருந்த எல்லா உபகரணங்களும் என் மேல் பயன்படுத்தப்பட்டு
தங்களது உபத்திரவத்தை கொடுத்தன. வேக்ஸிங்கைப் போல.. பத்து மடங்கு...இல்லையில்லை... ஐம்பது மடங்கு வலியைத் தரக்கூடியது புருவங்களை ஒழுங்குப்படுத்துதல். வாழ்க்கையில் இரு முறைகள் அக்கொடுமையை அனுபவித்திருக்கிறேன்.

அதுவும், ஒருவர் வாயில் நூலை வைத்து கையில் இழுத்தபடி உங்கள் நெற்றி முடிகளை பிடுங்கும் வலியை சொல்லி புரிய வைக்கமுடியாது. வெளியே வந்தபோது "இனிமே ஜென்மத்துக்கும் இதையெல்லாம் பண்ணிக்க மாட்டேம்ப்பா" என்றுதான் தோன்றியது.

இவ்வளவு வலியை அனுபவித்து எதற்காக இவர்கள் செய்துக்கொள்ள வேண்டுமென்று புரியவில்லை.

அம்மாக்களின் தொல்லையாலா அல்லது அவர்களது கணவர்களா..பாய் ஃப்ரெண்ட்களா...யாரை மகிழ்ச்சிப்படுத்த இந்த வேதனையை அனுபவிக்க வேண்டும்? ("உன் கால்லே இருக்கற முடியை எடு" என்று என்னிடம் சொல்லியிருந்தால் "உன் கால்லே இருக்கிற முடியை எடுத்துட்டு என்கிட்டே சொல்லு" என்றே சொல்லியிருப்பேன்!)

ஃபேஷியல் - இதை நினைத்தால் மசாலா தடவி கிரில் செய்யப்பட்ட கோழி உயிருடனிருந்தால் அனுபவிக்கும் வலிதான்.

மூக்கிலிருக்கும் கருந்துளைகளை எடுக்கிறேனென்று பயங்கரமான கருவியுடன், இல்லாத பிளாக் ஹெட்சை எடுக்க ஒரு பெண் மூக்கை அழுத்தியதும் உடலின் அத்தனை செல்களும் அதிர்ந்து அடங்கியதுதான் நினைவுக்கு வருகிறது.

உண்மையில் இவை அனைத்தையும் மேற்கொண்டபோது ஒருவித அவமானமே மேலோங்கி இருந்தது. இயற்கையாக நானிருப்பதை விடவா இந்த கருவிகள் அழகைக் கூட்டப்போகின்றன...அவை அழகையல்ல..இம்சையையே கூட்டுகின்றன! அதற்கு மேல்....அழகுக்கலைப் பெண்களின் கமெண்ட்களும்...

உங்கள் முகத்தில் பூனை முடிகள் நிறைய இருக்கு மேடம்...
ஒரு தடவை ஃபேஸ் ப்ளீச் பண்ணா பளிச்சுன்னு இருப்பீங்க மேடம்...
உங்க ஐ ப்ரோ த்ரெட் பண்ணா அழகா இருக்கும் மேடம்....

கடந்த முறை முடி வெட்டிக்கொள்ள சென்றிருந்தபோது ஒரு பெண்ணின் வலி மிகுந்த குரலைக் கேட்க நேர்ந்தது. நெடுநேரத்திற்கு என்னவென்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை. வெளியே வந்தவரிடம் விசாரித்ததற்கு 'பிகினி கரெக்ஷன்' என்றார். இவ்ளோ கஷ்டப்பட்டு வலியை அனுபவித்து ஏன் அதைச் செய்துக் கொள்ள வேண்டுமென்றதற்கு அவர் சொன்ன பதில், "இதைச்
செய்துக் கொண்டால் எனது கணவர் மகிழ்ச்சியடைகிறார். அவரை சந்தோஷப்படுத்தவே இதை அனுபவிக்கிறேன்".

ஹூம்!

தனிப்பட்ட சுகாதாரத்திற்காக சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால், அடுத்தவர் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டுமென்று சிலவற்றை மேற்கொள்வதை புரிந்துக்கொள்ள முடிந்ததில்லை.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், பெண்ணாக பிறக்கும் ஆசையிருப்பின் உடலில் முடியேயில்லாமல் பிறக்க ஆசைப்படுங்கள்.

ஒருவேளை நீங்கள் பெண்ணாக இருந்தால், உடலில் முடிகளுடன் இருக்கும் நடுத்தர வர்க்க பெண்களின் வலிகளை வெளிச்சத்துக்கொண்டு வந்ததற்கு மகிழ்ச்சியடையுங்கள்! :-)

...மேலும்

Aug 30, 2010

அரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள் (மொழிபெயர்ப்பு -கலையரசன்)


மொரோக்கோவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த நதியா வீதிக்கு வந்த பொழுது அவளுக்கு 15 வயது. பிள்ளைகளை பராமரிக்க முடியாத, மதுவுக்கு அடிமையான தந்தை அவளை வீதிக்கு அனுப்பியிருந்தார். "எப்படியாவது பணம் சம்பாதித்து வாழ்" என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது, ராபாத் நகரின் தெருக்களில் நின்று 20 யூரோக்கு உடலை விலை பேசுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இப்போது நதியா பன்னிரண்டு வருட அனுபவமுள்ள பாலியல் தொழிலாளி. ரயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாலிமா ஹோட்டல், பிரெஞ்சு ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களில் தனது வாடிக்கையாளர்களை சந்திக்கிறார். நதியாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. மொரோக்கோவில் பொதுவாகவே கணவன் துணையின்றி குழந்தை வளர்க்கும் தாய்மாரை விபச்சாரிகளுக்கு சமமாகப் பார்ப்பார்கள். ஒவ்வொரு தடவையும் நதியா வேறு வேலை தேடிச் செல்லும் பொழுது, முதலாளி அவளுடன் படுக்கக் கேட்கிறார். மறுத்தால் வேலை கிடைக்காது.

செனிப்பின் கதை இன்னொரு வகையானது. செனிப் கருவுற்றவுடன் அவளைக் காதலித்தவன் கைவிட்டு விட்டான். கல்யாணமாகாமலே குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் குடும்பத்திற்கு வேண்டப்படாதவள். பெற்றார் அவளைக் குடிமுழுகி விட்டார்கள். வாழ வழியின்றி நிர்க்கதியாக தவித்த நேரம், ஒரு நண்பி விபச்சாரத் தொழிலை அறிமுகப் படுத்தினாள். செனிப்பை பொறுத்தவரை, மொரோக்கோவில் பாலியல் தொழில் செய்வது அப்படி ஒன்றும் கடினமான காரியமல்ல. "நீங்கள் கருதுவது போல அல்லாது, மொரோக்கோ சமூகம் திறந்த மனப்பான்மை கொண்டது. பகிரங்கமாக விளம்பரம் செய்யாத வரையில் இங்கே எல்லாமே சாத்தியம்." என்று கூறினாள். செனிப்புக்கு புதிய காதலன் ஒருவன் மூலம் இரண்டாவது குழந்தையும் பிறந்தது. புதிய காதலன் ஒரு வாடிக்கையாளனாக அறிமுகமானான். அன்பொழுகப் பேசினான். திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தான். ஆனால் மொரோக்கோவில் விபச்சாரிகளை காதலிக்கும் ஆண்கள் பலர் ஒன்றில் இலவச பாலுறவுக்காக, அல்லது பணத்திற்காக சுரண்ட நினைக்கின்றனர்.

மொரோக்கோவின் சமூகவியல் அறிஞர் Soumaya Naamane Guesous, பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார். அவரது நூலான "அனைத்து வெட்கங்களும் போய் விட்டன. மொரோக்கோவில் பெண்களின் பாலுறவு"(Au-dela de toute pudeur, la sexualite feminine au Maroc), இதுவரை பதினேழு பதிப்புகள் வந்து விட்டன. சுமயா கூறுகிறார்: "மறந்து விடாதீர்கள். மொரோக்கோ கடுமையான இஸ்லாமிய சட்டங்களைக் கொண்ட நாடாக பேரெடுத்திருக்கலாம். ஆனால் அதன் பின்னணியில் பல விடயங்கள் சகித்துக் கொள்ளப்படுகின்றன. அடித்தட்டு ஏழை மக்கள் மத்தியில், இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் சூழலை புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளது. இறைவன் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்றோ, அல்லது அவள் ஒருத்தி தானே குடும்பத்தை பார்க்கிறாள் என்றோ பரிதாபப் படுவார்கள்.

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வீட்டு வேலைக்கு வரும் பெண்களை எந்த வகையிலும் சேர்க்க முடியாது. ஏழைக் குடும்பங்களை சேர்ந்த சிறுமிகள், பணக்கார வீட்டு இளைஞர்களின் பாலியல் வெறிக்கு இரையாகின்றனர். அடங்கிப் போக வேண்டிய நிலையில், ஒரு தடவை கர்ப்பமானால் வாழ்க்கையே முடிந்து விடும். அதன் பிறகு, பாலியல் தொழில் செய்து பிழைப்பதை தவிர அந்த அபலைப் பெண்ணுக்கு வேறு வழி இல்லை.

முன்பெல்லாம் ஒரு விபச்சாரியை அடையாளம் கண்டுபிடிப்பது இலகு. கவர்ச்சியான தோற்றத்துடன் நகரங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் காத்திருப்பார்கள். மொரோக்கோவில் அட்லஸ் மலைப் பிரதேசக் கிராமங்கள் சில திறந்த வெளி விபச்சார விடுதிகளாக அறியப்பட்டன. இஸ்லாமிய மத அடிப்படைவாதமும், உலகமயமாக்கலும் மரபுவழி விபச்சாரத்திற்கு முடிவு கட்டின. இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு பெருகுவதால் அரசாங்கம் வெளிப்படையான பாலியல் தொழிலை அடக்கி விட்டது. அந்த இடத்தில் மேற்குலக மோகமும், உலகமயமாக்கலும் புதிய வகை விபச்சாரத்தை உருவாக்கியுள்ளது. நவீன விபச்சாரிகளை, மரபு வழி விபச்சாரிகளைப் போல இலகுவாக கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் ஆச்சாரமான குடும்பப் பெண் போல தோற்றமளிப்பார்கள். பாரிலும், டிஸ்கோதேக்கிலும் சந்திக்கும் பெண்ணுடன் சில நிமிட உரையாடலுக்கு பின்னர் தான், அவள் ஒரு விபச்சாரி என்று தெரிய வரும். செல்லிடத் தொலைபேசி, இணையங்களின் பாவனை, பாலியல் சந்தையை பலரறியா வண்ணம் பரப்பி வருகின்றது. தகவல் தொழில்நுட்ப வசதி காரணமாக, பாலியல் தொழில் முன்னரை விட பல்கிப் பெருகியுள்ளது.

உலகமயமாக்கலின் பின்னர் பாலியல் தொழிலாளிகளின் நோக்கமும் மாறியுள்ளது. முன்னரெல்லாம் இந்த தொழிலில் ஈடுபடும் பெண், வறுமை காரணமாக, தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இதை தேர்ந்தெடுத்தாள். நுகர்பொருள் கலாச்சாரம் சராசரி மொரோக்கர்களின் கனவுகளை மாற்றி விட்டது. சந்தையில் கடைசியாக வந்துள்ள செல்லிடத் தொலைபேசிக்காக, அழகான ஆடைக்காக, விலைமதிப்பற்ற நகைகளுக்காக இளம் பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இவற்றை அடைவதற்காக அவர்கள் தமது உடலை விலை பேச தயாராக இருக்கிறார்கள்.

காசாபிளாங்கா நகரில் நகைக்கடைகள் இருக்கும் தெருவுக்கு போய்ப் பார்த்தால் தெரியும். பணக்கார ஆண்கள் தமது "நண்பிகளுக்கு" நகைகளை பரிசாக வாங்கிக் கொடுக்கிறார்கள். பகுதி நேர பாலியல் தொழிலாளர்கள் பெருகி வருவதால், மொரோக்கோ பொருளாதாரமும் வளர்ச்சி அடைகின்றது. டிஸ்கோ நடன விடுதிகள் லாபம் சம்பாதிக்கின்றன. கூட்டிச் செல்லும் டாக்சி ஓட்டுனருக்கு, வழியில் மறிக்கும் போலீஸ்காரருக்கு, அடுக்குமாடி கட்டிட காவலாளிக்கு, ஹோட்டல் வரவேற்ப்பாளருக்கு என்று பலருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். இதைவிட கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகள், நகைக் கடைகள் என்பன பக்க விளைவாக லாபம் சம்பாதிக்கின்றன.

இத்தகைய நாகரீக போக்கு வசதியற்ற அடித்தட்டு வர்க்க பெண்களுக்கு மட்டும் பொதுவானதல்ல. படித்த நடுத்தர வர்க்கப் பெண்கள், தாம் விபச்சாரம் செய்வதாக கூறுவதில்லை. ஆனால் தமது ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான பணத்திற்காக பல ஆண்களுடன் உறவு கொள்கின்றனர். மனேஜர் மட்டத்தில் தொழில் புரியும் படித்த பெண் ஒருவர், பணத்திற்காக உடல் உறவு கொள்வதை ஏற்றுக் கொண்டார். அவர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். ஏனென்றால் மேல்தட்டு தோற்றப் பொலிவை பராமரிப்பதற்கு அதிக பணம் தேவைப்படுகின்றது. தனக்கென வாழ்க்கைத்துணையை வைத்திருக்கும் பெண்கள் கூட, மேலதிக பணத் தேவைக்காக வேறு ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர். மாதாந்த ஊதியத்தை விட அதிகம் சம்பாதிக்கலாம் என்றால் அதில் என்ன தவறு? என்று கேட்கின்றனர்.

எண்ணைவள வளைகுடா நாடுகளைச் சேர்ந்த, பணக்கார அரேபிய ஆண்களின் காம வேட்கையை பூர்த்தி செய்யும் இடமாக மொரோக்கோ மாறியுள்ளது. முன்பு லெபனான் அந்தப் பெருமையை பெற்றிருந்தது. தங்களது நாட்டில் தமது பெண்களை வீட்டிற்குள் பூட்டி வைக்கும் இந்த வளைகுடா அரேபியர்கள், சுதந்திரமாக திரியும் லெபனான், மொரோக்கோ அழகிகளை வேட்டையாடுகிறார்கள். 1975 ல் இருந்து தீராத உள்நாட்டு யுத்தத்திற்குள் லெபனான் விழுந்து விட்டதால், அவர்கள் தற்போது மொரோக்கொவை குறிவைத்துள்ளனர். இந்த திமிர் பிடித்த பணக்கார வளைகுடா அரேபியர்கள், மொரோக்கோவில் பலரது வெறுப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரு முறை இரவு விடுதி ஒன்றினுள் புகுந்த சவூதி பணக்காரன், அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் வெளியேற்ற விரும்பினான். அதற்காக எல்லா நுளைவுச்சீட்டுகளையும் வாங்கினான். நல்ல வேளையாக அங்கிருந்த மொரோக்கோ பணக்காரன் ஒருவன் நுளைவுச்சீட்டுகளுக்கு இரு மடங்கு விலை கொடுத்து சவூதிக்காரனை விரட்டி விட்டான். பாலியல் தொழிலில் ஈடுபடும் மொரோக்கோ பெண்கள் கூட வளைகுடா வாடிக்கையாளர்களை விரும்புவதில்லை. "ஐரோப்பியர்களும், ஐரோப்பாவில் வாழும் மொரோக்கோ ஆண்களும் கண்ணியமாக நடத்துவார்கள். பணக்கார வளைகுடா ஆண்கள் எங்களை விலங்குகளாக கருதுகிறார்கள். அவர்களிடம் நிறையப் பணம் இருக்கலாம். ஆனால் எங்களை பொம்மை போலத் தான் நடத்துவார்கள்."

(நன்றி : NRC Handelsblad, 24 aug. 2010)

(இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை.)

நன்றி - கலையகம்
...மேலும்

Aug 29, 2010

சூல்கொண்ட வன்மம் - கொற்றவைசதையின் நடுவே
சூல்கொண்ட பிளவு
இறங்கியது
சமவெளியின்
ஒரு பக்கம்

திரவங்கள் கூடிய மார்பை
அறுத்து வைப்பதோ
கவிகளின் நாவில்
சுழலும் கூந்தலை
பிடுங்கி வைப்பதோ
ஓலம்....

உரு பேதங்கள்
இரும்புச்சங்கிலிகளைத் தருகையில்
கண்ணீரின் நீர்மவாய்
ஆயுதத்தை முத்தமிட்டு மடியும்

பிணங்களின் கங்குகளில்
குளிர்காயும் மூதாதைய உடல்கள்
நட்டுச்செல்கிறது புன்னகையுடன் கூடிய
வன்ம மரங்களை
பூத்துக்குலுங்குகிறது வலி


உலா வருகிறாள்
அவள்
தன்னைத் தானே தொலைத்தபடி

கருப்பையில் விழுந்த
விதைகளை தாங்கிப் பிடிக்கும்
கைகளே..

புன்னகை சிந்தா உதடுகளே...
உங்கள் கருப்பையொத்த விழிகளை
காவு கொண்டதும்
எண்ணற்ற மலைகள் தாண்டி மறைத்து வைத்த்தும்
சொல்லக்கூசும் வார்த்தைகளோடு ஓடி ஒளிவதும்
எது
எவை
ஏன்....


நடையில் குறுகி
மெத்தையில் துணுக்கிட்டு விரியும்
அந்தகாரம் கூடிய அப்பிளவுகளில்
செவ்வுதிரம்

எண்ணற்ற வாய்களுக்கு வெண்ணமிழ்தம் பொழிந்த மார்புக் காம்புகளில்
ஊறுவதும்
வானம் நோக்கி விடைக்கும் குறிகளில்
மிதப்பதும்
செவ்வுதிரம்
உதிரம்
ஒரே
நிறம்

பிளவு
வாசல்
வருகை
ஜனனம்.


பெண்ணியத்திற்காக கொற்றவை
...மேலும்

Aug 28, 2010

23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா

(பெண்ணியத்திற்காக மூலக் கட்டுரையை சிங்களத்தில் அனுப்பியவர் வெறோனிக்கா - தமிழில் என்.சரவணன்.)


இந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது.

இயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார்.

உடலில் 23 ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண்.

தனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ சொந்தமாக ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொள்வதற்காக பிழைப்பு தேடி பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றவர் ஆரியவதி (வயது 49).

இவர் இலங்கையின் தெற்குப் பகுதியில் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர் ஒருவர் இலவசமாக அனுப்புகிறார் என்று கேள்வியுற்று அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 நாள் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டார்.

சவுதியில் ரியாத் நகரத்தில் இறங்கியதும் அவரை இருவர் காரொன்றில் அன்பாக வேலைக்காக அழைத்துச் சென்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடைகள் செய்வதும் வீட்டை சுத்தமாக பராமரிப்பதும் அவருக்கு வழங்கப்பட்ட பிரதான வேலைகள். இதனைத் தவிர உடுதுணி துவைத்தல், அவற்றை ஸ்திரிசெய்து மடித்து வைத்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற வேலைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.

ஒரே வாரத்தில் அந்த வீட்டினர் தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர். சிறு சிறு தற்செயல் பிழைகளுக்காக அவரை கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

தற்செயலாக ஒரு கிளாஸ்’ கைதவறி விழுந்து உடைந்த சம்பவத்திலிருந்தே இந்த வன்முறைகள் தொடங்கின.

உரிமையாளரின் மனைவி (எஜமானி அம்மா) ஆரியவதியின் கைகளை இறுக்கிப் பிடித்திருக்க கணவர் சூடாக்கிய ஆணிகளை உடலில் சுத்தியலால் அடித்திருக்கிறார். அதே நாள் இரண்டரை இஞ்ச் உயர ஆணிகள் ஐந்து இவ்வாறு ஆரியவதியின் உடலில் ஏற்றப்பட்டுள்ளன.

அன்றைய தினம் ஆரியவதியின் ஓவென்ற அவலக்குரல் எவர் காதுகளிலும் விழவுமில்லை. அந்த வீட்டில் ஆரியவதியின் அன்புப் பணிவிடைகளை அதுவரை பெற்றுக்கொண்ட அந்த வீட்டின் பிள்ளைகள் கூட காப்பாற்ற முன்வரவில்லை.

தொடர்ந்து கத்தினால் கழுத்தை வெட்டி எறிவோம் என்று மிரட்டப்பட்டுள்ளார். தனது அன்புக்குரிய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்துள்ளார்.

ஆரியவதி தாய்மண்ணுக்கு திரும்பியதும் அவர் கண்களில் நீர்பெருக பகிர்ந்துகொண்ட விபரங்கள் அனைவரது நெஞ்சையும் உலுக்கச் செய்யும் கதைகள்.

“ஒரு தடவை கோப்பை நழுவி விழுந்தது. இன்று தொலைந்தேன்.. என்று பதறிக்கெணடிருக்கையில் வீட்டு எஜமானி அம்மா “உன் கண்கள் என்ன குருடா.. இரு... குருடாக்கி விடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆணியை எடுத்து கண்களில் சொருகுவதற்காக கிட்ட கொண்டு வந்தார். என் கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தேன். எவ்வளவோ கதறியும் அந்த ஆணிகளை எனது புருவ இமைகளின் மேல் பகுதியில் இறுக்கிச் சொருகினார்.... “ என்று இன்னமும் நீக்கப்படாத நிலையில் உள்ள அந்த ஆணி சொருகப்பட்ட இடத்தைக் காண்பித்தார் ஆரியவதி..

அவரது கால் பாதங்களுக்குள் இரு ஆணிகளை ஏற்றியுள்ளனர். இவ்வாறு சிறுசிறு பிழைகளுக்கெல்லாம் உடலின் ஏதாவது ஒருபகுதியில் ஆணியை செருகினார்கள். வெளியில் இழுக்கக்கூடிய ஆணிகளை இழுத்துவிட்டேன். அகற்ற கடினமானவற்றை அப்படியே விட்டுவிட்டேன். காய்ச்சல் ஏற்ப்பட்டபோது என்னை சிகிச்சையளிக்க அனுமதிக்கவில்லை. இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று மன்றாடியபோது, அவர்கள் கிடைத்ததைக் கொண்டு என்னைத் தாக்கினர்.

இறுதியில் எனது உடலில் ஆணிகள் உள்ள பகுதிகளில் இருந்து புண் முற்றி சீழ் வடிய ஆரம்பித்தது. இருக்கின்ற உடு துணிகளைக் கொண்டு சுத்தப்படுத்தி கட்டு போட்டுக்கொண்டே இருந்தேன். கடந்த மாதம் அவர்கள் என்னைப் பார்த்து அசிங்கப்பட்டனர். ஆணி உள்ள இடங்களில் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் சித்திரவதை செய்வார்கள் என்று பயந்து வேலைகளை செய்து வந்தேன்..." எனறார்.

இதற்கிடையில் தொடர்பு இல்லாத நிலையில் ஆரியவதியின் குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆரியவதியுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரியவதியால் சுதந்திரமாக விபரமாக நிலைமைகளை எடுத்துரைக்க முடியவில்லை. “...எனக்கு இங்கு பிரச்சினை என்னை உடனடியாக இலங்கை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்..” எனக்கூறி வைத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆரியவதியின் கணவர் மீண்டும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவர் திருப்பி அழைக்கப்பட்டார். இது குறித்து ஆரியவதி தெரிவிக்கையில்

"..கடந்த 20ஆம் திகதி வீட்டு எஜமானி அம்மா ஒரு பையைக் கொண்டுவந்து தந்து ஒரு காரில் என்னை ஏற்றிக்கொண்டுவந்து விமான நிலையத்தில் ஏஜென்சியிடம் ஒப்படைத்தார். அந்த ஏஜென்சி, நாடு திரும்புவதற்கு டிக்கெட் செலவுக்காக 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு எஞ்சிய இரு மாத சம்பளத்தை என் கைகளில் வைத்தார். ஏன் நடப்பதற்கு கஸ்டப்படுகிறாய் என்று அவர் என்னிடம் கேடடார். காலில் வருத்தமுள்ளது என்று மட்டும் கூறினேன். இருந்த பண்த்தில் எனது கணவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் நாடு திரும்புவதை அறிவித்தேன். 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல எனது கணவர் வந்திருந்தார்." என்றார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் நடந்து வந்த விதத்தை வைத்து ஒரு துன்புறுத்தப்பட்ட நிலையில் திரும்புகிற ஒரு பெண் என்பதை யாரும் புரிந்து கொள்வர். அது குறித்து விமான நிலைய அதிகாரிகள் பலர் ஆரியவதியிடம் விசாரித்த போதும், தனக்கு காலில் நோ உள்ளதாக மட்டுமே கூறியுள்ளார். தனத பாதங்களில் ஆணிகள் ஏற்றப்பட்டுள்ளன என்கிற உண்மையை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை. ஒரு அதிகாரி 700 ரூபாவை வைத்தியச் செலவுக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.

நான் நாடு திரும்பிய மகழ்ச்சி எனக்கு போதும். உடலில் உள்ள வலிகூட தெரியவில்லை. உண்மையை எங்காவது சொன்னால் என்னை பிடித்து வைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் நான் எங்கும் உண்மை கூறவில்லை..” என்று அப்பாவித்தனமாக பின்னர் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விமான நிலையங்களின் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எதுவுமே இவரது உடலின் ஆணிகளைக் கண்டு பிடிக்காதது பலருக்கும் வியப்பைத் தந்திருக்கிறது.

வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கூட அவர் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ தான் பட்ட வேதனைகளை அவர் கூறவில்லை. சிறு ஊசியொன்று ஏறியிருப்பதால் தனக்கு கால் வலிப்பதாகக் கூறியியிருக்கிறார். அவரது 25 மகன் சமில் பிரியதர்சன தனது தாயை அழைத்துக்கொண்டு கும்புறுபிட்டி நகர வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதுதான் முதற்தடவையாக வைத்தியரிடம் உண்மைகளைக் கூறியிருக்கிறார்.
வைத்தியர் நிமல் ஜயசிங்க உடனடியாகவே அவருக்கு ஏற்பு ஊசி ஏற்றியிருக்கிறார். பின்னர் அவரது உடலை முழுவதும் எக்ஸ்ரே எடுத்து மேலதிக அறிக்கைகளை சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை அங்குள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மொத்தம் 23 ஆணிகள் உடல் முழுவதும் ஆங்காங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது போன்றதொரு சம்பவம் இதற்கு முதல் இடம்பெற்றதில்லை என ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி தெரிவித்தார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆரியவதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய அனைத்தையும் மேறகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது குடிசையை சரிசெய்து குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக வாழவென புறப்பட்டுச் சென்று 5 மாதங்களின் பின் தனது கிராமத்துக்குத் திரும்பியபோது ஆரியவதிக்கு எஞ்சியிருந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இருந்த குடிசையும் கடும் மழையினால் உடைந்து உருக்குலைந்து இருந்தது. ஆணிகள் ஏற்றப்பட்ட போது கிடைத்த வலியை விட அது வேதனைமிக்கது என அவர் கண்ணீர்மல்க பலர் முன்னிலையில் தேம்பினார்.

மேலதிக புகைப்படங்கள் (Slide show)


27அன்று நடந்த ஒப்பரேசனில் 5 ஆணிகளை நீக்க முடியவில்லை.
ஆரியவதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அந்த 23 ஆணிகளில் முக்கிய 18 ஆணிகளை இன்று (ஓகஸ்ட் 27) நீக்கப்பட்டுள்ளது. ஏழு சிரேஸ்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேரைக் கொண்ட குழு இரண்டரை மணித்தியாலங்களாக செய்த ஓப்பரேசனில் 13 இடங்களை வெட்டி ஆணிகளை நீக்கியுள்ளனர். எஞ்சிய 5இல் குண்டு ஊசிகளும் உண்டு என்றும் அவற்றை நீக்குவது ஆபத்து மிகுந்ததென்றும். அவற்றை நீக்கும் போது நரம்புகளுக்கு பாதிப்பை கொண்டுவரக்கூடும் என்றும். அதை விட அவற்றை நீக்காமல் விடுவது பாதுகாப்பானது எனது வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

நீக்கப்பட்ட ஆணிகள்
கண் இமை நெற்றிக்கருகில் - 1 கம்பி
வலது கையில் - 5 ஆணிகள், 1 கம்பி
இடது கையில் - 3 ஆணிகள், 2 கம்பிகள்
வலது காலில் - 4 ஆணிகள்
இடது காலில் - 2 ஆணிகள்

ஆகக் கூடிய நீளமுள்ள ஆணி 6.6 சென்றிமீற்றர் கொண்டது என வைத்தியர்கள் அறிவித்தனர்.

குறிப்பு
  • மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் சராசரி 20 சடலங்கள் மாதாந்தம் இலங்கை கொண்டுவரப்படுகின்றன. இயற்கை மரணங்கள், ஏனைய விபத்துக்களினால் மரணித்தவர்கள் அதில் அடக்கம்.
  • வெளிநாடுகளில் நாடுகளில் 1.8 மில்லியன் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
  • இவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர்.
  • சவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர்.
  • இதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள்.
  • இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
  • மாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.
  • இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர்.
இதற்கு நிகராக பெண்ணியத்தில் வெளியான கட்டுரைகள்

...மேலும்

Aug 27, 2010

ஆம்! இப்போதிருக்கும் நானாக... நான் செதுக்கப்பட்டேன்.. - கவின் மலர்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்பால் நான் கொண்ட ஈடுபாடு என்னை சமூக அக்கறை உள்ள நபராக மாற்றியது. தமுஎகச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். என்னை செதுக்கிய உளிகள் அவை. ஒரு சிற்பத்தை மேலும் அழகுபடுத்தும் மற்றோர் உளியாக வந்தது ’காலக்கனவு’ நாடகம். கடந்த டிசம்பர் மாதம் புத்தகச் சந்தை சமயத்தில் “காலக்கனவு” நாடகம் நூலாக வெளிவந்தது. அதில் நாடகத்தோடு தொடர்புடைய ஒவ்வொருவரும் நாடகம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டோம். அந்நூலில் இடம்பெற்ற என்னுடைய கட்டுரை இது. இக்கட்டுரை கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்டது.


குஜராத்தில் ஓவியர் சந்திரமோகனை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் தாக்கி, அவருடைய ஓவியங்களை சிதைத்த அராஜகத்தைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு கண்டனக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலைத்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அதில் அ. மங்கையும் ஒருவர். நான் அங்கே ஒரு பாடல் பாடினேன். நிகழ்ச்சி முடிந்தபின் மங்கை என்னிடம் “ஒரு நாடகம் போடப்போகிறேன். அதற்கான வேலைகள் துவங்கும்போது நாடகத்தில் பங்கு கொள்ள அழைக்கிறேன்” என்று கூறி என் கைபேசி எண்ணை வாங்கினார். அதன்பின் மங்கை காணாமல் போனார் நெடுநாளைக்கு. நானும் சரி அவ்வளவுதான் போலிருக்கிறது என்று இருந்துவிட்டேன்

திடீரென்று ஒரு நாள் மங்கையிடமிருந்து அழைப்பு. ஒரு நாளில் நாங்கள் கூடினோம். மங்கை, ரேவதி தவிர குழுவில் யாரையும் எனக்கு அறிமுகமில்லை. பொன்னியையும் கல்பனாவையும் அன்றுதான் சந்தித்தேன். எனக்கு உள்ளுக்குள் ஒரு நினைவு. “எனக்கு நடிப்பு நாடகம் இதெல்லாம் வருமா? எதை வைத்து மங்கை நான் நடிப்பேன் என்று முடிவு செய்தார்?” என்று குழப்பம். பள்ளி கல்லூரியில் நடித்தது தவிர நாடகத்தில் நடித்ததில்லை. முதல் நாள் பரஸ்பர அறிமுகங்கள். வ.கீதாவின் எழுத்து, அவரது மேடைப்பேச்சு எனக்கு பரிச்சயம். ஆனால் அவருடன் பேசியதில்லை. பெரியாரியலுக்கு அவர் புரிந்த அளப்பரிய சேவை குறித்து அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தேன். அன்றுதான் அவருடனும் அறிமுகமாகிறேன். எங்கள் கையில் காகிதங்கள் திணிக்கப்பட்டன. “இதுதான் முதல் அத்தியாயம். இதை ஒவ்வொருத்தர் ஒரு பாரா படிங்க!” என்று மங்கை சொல்ல எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாடகம் என்றால் ஸ்கிரிப்ட் இல்லையே. இங்கே கீதா எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்ட் நாடக வடிவத்தில் இல்லையே என்று புதிதாய் குழப்பம். அடுத்த முறை வரும்போது இதை நன்றாகப் படித்துப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. “உனக்கு ஏதாவது புரியுதா?” என்று கண்களால் கேட்டுக்கொண்டு “இல்லையே” என்று பதிலும் சொல்லிக்கொண்டு கலைந்தோம்.

பின் வந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. இது நாடகம்தான். ஆனால் நாடகமில்லை என்பது புரிந்தது. இதில் கையாளப்பட்ட உத்தி மிகவும் புதிதாக இருந்தது. பார்வையாளர்களோடு ஒருவராய் நாடக மாந்தர்களும் அமர்ந்துகொண்டு அவரவர் இடத்திலிருந்து பேசத்துவங்குவோம்.

நான் அப்போது கணினித்துறையில் மென்பொருள் வல்லுனராக பணியாற்றி வந்தேன். அதிகமாக என்னால் விடுமுறை எடுக்க முடியாது என்பதற்காக வார இறுதி நாட்களில் மட்டுமே ஒத்திகை வைத்துக்கொள்வோம். அதிலும் நான் வார இறுதி நாட்களில் எங்காவது வெளியூரில் ஒரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டிருப்பேன். அது போலவே ரேவதியும். பொன்னி ஒவ்வொரு முறையும் பெங்களூரிலிருந்து வரவேண்டும். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் இருந்துகொண்டு ஒன்றுகூடுவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். எல்லோரும் சென்னையில் இருக்கும் தேதியைக் கண்டுபிடிப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து எங்கள் ஒத்திகை வாரமொரு மேனியும் நாளொரு வண்ணமுமாக வளர்ந்தது. இந்த நாட்களில் நாங்கள் மிக அன்னியோன்யமாகிப் போனோம். எல்லோரும் சேர்ந்து மங்கைக்கும் கீதாவுக்கும் பட்டப்பெயர் வைப்பது, கேலி செய்வது என மகிழ்ச்சியும் குதூகலமுமாகக் கழிந்தது. எங்கள் ஒத்திகை நடைபெற்ற தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கதவுகள் எங்களுக்காக ஒவ்வொரு வார இறுதியிலும் திறக்கப்பட்டன.


ஒத்திகையின்போது எனக்குள் இருந்த குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நான் தெளிவடையத்தொடங்கினேன். “நமக்கும் நடிப்பு வருமோ?” என்று முதன்முறையாக நினைத்தேன். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பெண்ணியம் தொடர்பான புரிதலை அறிந்துகொள்வதற்காகவும், மேம்படுத்தவும் அவ்வபோது எங்களுக்குள் உரையாடல் நிகழும். வட்டமாக அமர்ந்து எங்கள் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். இவையெல்லாம் நாடக ஒத்திகையின் ஒரு பகுதியாகவே நடந்து கொண்டிருந்தது. பிரதியைக்கொடுத்து ஒவ்வொருவருக்குமான வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது என்ற பேச்சே இல்லை. அதோடு மட்டுமல்லாமல் நாங்கள் ஒருமுறை பேசிய வசனத்தையே அடுத்த முறை பேசும்போது வேறு மாதிரி கூடப் பேசினோம். அந்த சுதந்திரம் எங்களுக்கு இருந்தது. ஏனெனில் கீதாவின் அந்தப் பிரதி எங்களோடு இரண்டற கலந்துவிட்டிருந்தது.

முத்துலட்சுமியும், மூவலூர் ராமாமிர்தமும் என்னோடு உரையாடினார்கள். சுப்புலட்சுமியும், கிரேஸும் கனவில் வந்தார்கள். தேவதாசிப்பெண்களின் கண்ணீர் என் விழிகள் வழியே வந்தது. கிறிஸ்துவ மிஷினரி பெண்கள் எங்கள் வடிவில் கைகளின் பைபிளோடு காடு, மலை, சமவெளி, வயல்வெளி எங்கும் சுற்றித் திரிந்து சனாதன இந்து மதத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்து கிறிஸ்துவத்தை வளர்க்கத் தொடங்கினார்கள். கே.பி.சுந்தராம்பாள் எங்கள் அபிநயங்களில் வாழ்ந்தார். சித்தி ஜுனைதாபேகம் பொன்னியின் பாங்கு ஒலியின் பின்னணியில் என் குரல் வழியே பெண்ணியம் பேசினார். மார்சீலை அணிய பெண்கள் கண்ட போராட்டத்தின் வெற்றி எங்களின் முகங்களில் பிரதிபலித்தது. வேட்டி கட்டி தலையை கிராப் வைத்த மணலூர் மணியம்மா, கே.பி.ஜானகியம்மா போன்றவர்கள் எங்களுக்கு வழிகாட்டினார்கள். மணியம்மாவின் அந்த வேட்டியை நாங்கள் சுற்றிக்கொண்டு கையில் செங்கொடியோடு நிற்கும் காட்சியில் உடல் சிலிர்த்துப்போகும். பெரியார் வளர்த்த பெண்களாக குஞ்சிதம், நீலாவதி, இந்திராணி, கண்ணம்மாள், அன்னபூரணி, ராமமிர்தம்மாள், மரகதவல்லி, ரெங்கநாயகி, விசாலாட்சி, பொன்னம்மாள், சுந்தரி, அஞ்சுகம், சிவகாமி, மேரி, மகாலட்சுமி, மஞ்சுளா பாய், வள்ளியம்மை, சுலோசனா, சிதம்பரம்மாள், மீனாட்சி, கிரிஜாதேவி, பினாங்கு ஜானகி, ஜெயசேகரி, ஆண்டாள் அம்மாள் ஆகியோர் எங்கள் நால்வரிலும் கூடு விட்டு பாய்ந்து வாழ்ந்தார்கள்.

‘தோளோடு தோள் இணைந்து சிறை வரைக்கும்’ என்று வில்லுப்பாட்டு மெட்டில் தோழர் இன்குலாப் இடதுசாரிப் பெண்களைப் பற்றி எழுதிய பாடல் எங்கள் தேசிய கீதமானது. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட சில மனசஞ்சலங்களின்போது இந்தப் பாடல் வரிகளை ஒரு முறை பாடினால் ஏற்படும் நெஞ்சுறுதியும் மனவலிமையையும் வேறு எதுவும் எனக்குத் தரவில்லை. இதையே ஒருமுறை ரேவதியும் கூறியபோது வியப்பு மேலிட்டது. இந்தப்பாடலை ஒரு தொலைபேசி அழைப்பில் எழுதி தொலைபேசியிலேயே வாசித்துக் காண்பிக்க, அதை எழுதிக்கொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தேவதாசிப்பெண்ணாக மாறி நான் நடிக்க வேண்டிய காட்சி ஒன்று உண்டு. அந்த வலியையும் துயரத்தையும் “நான் இழந்த வாழ்க்கையை நாணம் விட்டு சொல்லவா..? என்ற பாடல் காத்திரமாக சித்தரித்தது. அதைப் பாடும்போது நான் காண்பிக்க வேண்டிய முகபாவங்களுக்காக எனக்கு மங்கை அளித்த பயிற்சி மறக்க முடியாதது. ஒரு பெண் எத்தனையோ முறை ஆண்களால் பேருந்து போன்ற இடங்களிலும், தனியான இடங்களிலும் பாலியல் தொல்லைகள் எதிர்கொண்டிருப்பாள். ”அதுபோன்ற அனுபவங்களை மீண்டும் நினைத்துப் பார். கண்களை மூடிக்கொள்” என்று எனக்குக் கூறிய அவர் மற்றவர்களைக் கொண்டு என்னை பாதிக்காத வகையில் மிக மென்மையாக லேசாக கைகள் பட்டும் படாமலும் என்னை தொடச்சொன்னார். எனக்கு அந்தக் காட்சியில் நான் என்ன செய்ய வேண்டும் எனப் புரிந்தது. அந்தக் காட்சிக்காக பார்த்தவர்கள் என்னைப் பாராட்டும் ஒவ்வொரு முறையும் இந்த ஒத்திகைக் காட்சி என் கண் முன் நிழலாடும். ஒவ்வொருவருக்கு உள்ளும் இருக்கக்கூடிய திறமையை வெளிக்கொணருவதற்கு சில சமயம் அன்பாகவும் சில சமயம் கோபமாகவும் மங்கை நிறைய முயற்சிகள் எடுத்தார்.

என்னால் மறக்க முடியாத நாடகத்தின் முதல் அரங்கேற்றம் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஏற்பாடானது. நாடகத்தின் முதல் குரலாக பேராசிரியை சரஸ்வதியின் குரலைக் கேட்டபோது இதயம் படபடவென அடித்துக்கொண்டது. நாடகம் முடிகையில் ஏதோ உன்மத்த நிலையை அடைந்ததுபோலிருந்தது. ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும்போது, “இவள் பெரியாரால் சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட தம்பதியரின் மகள்” என்று மங்கை என்னை அணைத்துக்கொண்டு கூறியபோது என் பெற்றோர் சபையை வணங்க, அத்தனை கூட்டத்தின் முன் கண்ணீர் பெருக்கடுக்க, சொல்லவொண்ணாத உணர்வுகளின் குவியலாய் நின்றிருந்தேன்.

அதன்பின் முக்கிய நகரங்களான மதுரை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், புதுச்சேரி, புதுடில்லி போன்ற இடங்களில் எங்கள் நாடகம் நடந்தேறியது. மதுரையில் மட்டும் நான்கு முறை நிகழ்த்தியிருக்கிறோம். நிறைய பத்திரிகைகளில் நாடக விமர்சனங்கள் வெளிவந்தன. தெரிந்தவர்கள், தமிழ்ச்சூழலில் இயங்கும் அறிவுஜீவிகள் என பலரும் வெவ்வேறு ஊர்களில் வந்து நாடகத்தைப் பார்த்தனர். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அனுபவம். சேலத்தில் நாடகம் பார்த்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா “எனக்குள் குற்றவுணர்வை உண்டாக்குகிறீர்கள்!” என்றார். இதுபோல ஆண்களின் மனதிற்குள் மாற்றத்தை அல்லது சலசலப்பையாவது காலக்கனவு ஏற்படுத்தியதை கண்கூடாக என்னால் அனுமானிக்க முடிந்தது. ஆண்களின் நிலை இது என்றால் மதுரையில் பாத்திமா கல்லூரியில் ஒரு மாணவி நாடகம் குறித்து கருத்து சொல்ல ஒலிவாங்கிமுன் வந்தபோது கண்ணீர் விட்டு “இத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே எப்படிப்பட்ட பெண்களெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்” என நெகிழ்ந்து நின்றாள்.

காலக்கனவுக்கு விமர்சனங்களும் வந்தன. எங்கள் முதல் அரங்கேற்றம் முடிந்தவுடனேயே, குறிப்பாக இடதுசாரி இயக்கப் பெண்கள் குறித்த அதிக அளவிலான தகவல்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவள் என்ற முறையில் எனக்கு இது பெரிய மனநெருக்கடியைக் கொடுத்தது. இனம்புரியாத அழுத்தமாக உணர்ந்தேன். இடதுசாரி இயக்கப் பெண்கள் குறித்த பதிவுகள் இருந்தாலும் அவர்களின் குரல்களில் ஒலித்த உரையோ கட்டுரையோ அதிகம் கிடைக்கப்பெறவில்லை. நான் தேட ஆரம்பித்தேன். எங்காவது ஒரு குரல் கிடைக்காதா என ஏக்கத்தோடு தேடினேன். கிடைக்கவில்லை. இறுதியில் தோழர் எஸ்.ஏ.பெருமாள் கைகொடுத்தார். அவர் செய்தது காலக்கனவைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான உதவி என்று நினைக்கிறேன். ருக்மிணி அம்மாவின் ஒரு உரையை அவர் எடுத்துக்கொடுத்தார். ஆனால் நாங்கள் நாடகத்திற்கு எடுத்துக்கொண்ட காலகட்டத்துக்குள் இல்லாமல் மிகப் பிந்தைய காலத்தில் அவர் பேசியது அது. அதனால் அதை நாடகத்தில் இணைக்க முடியவில்லை. கே.பி.ஜானகியம்மாவின் நாட்குறிப்பில் இருந்து மணலூர் மணியம்மா மன்னார்குடியில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை எடுத்துக் கொடுத்தார். மிக முக்கியமான பேச்சு அது. எங்கள் இரண்டாவது மேடையில் அதை இணைத்துக் கொண்டோம். காலக்கனவின் சிறப்பே இப்படி எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம். அதன் வடிவம் அப்படி.

ஒவ்வொரு மேடைக்கு முன்னும் மங்கை அடையும் டென்ஷனைப் பார்த்து நாங்கள் அவருக்கு Hyper No. 1 என்று பெயர் வைத்தோம். முழுதும் பெண்கள் மட்டுமே இருந்த எங்கள் குழுவில் ஒரே ஆணாக இருந்தது ஸ்ரீஜித். எங்கள் நாடகத்தின் மேடை வடிவமைப்பாளர். அதை மேடை என்று சொல்ல முடியாது. நடிப்பிட வடிவமைப்பாளர் எனலாம். கொஞ்சகாலத்திலேயே ஸ்ரீஜித் ஒரு ஆண் என்பது மறந்துபோனது. அந்த அளவுக்கு காலக்கனவோடு ஸ்ரீஜித்துக்கு ஈடுபாடு உண்டு.

ஒவ்வொரு நிகழ்வுக்கு முன்பும் ஒருமுறையாவது ஒத்திகை பார்க்கவேண்டும். சில சமயங்களில் எங்களுக்கு அதற்குக்கூட நேரமில்லாமல் ஓடும் ரயிலில் ஒத்திகை பார்த்திருக்கிறோம். அதன்பின் தெரிந்த சினிமா பாட்டு, இயக்கப் பாட்டு எல்லாம் பாடி தூங்க நள்ளிரவாகிவிடும். ஒவ்வொரு முறையும் நாடகம் முடிந்தபின் நாங்கள் எப்படி செய்தோம் என பட்டியலிடுவார் மங்கை. அதில் குறைகள் நிறைகள் எல்லாம் இருக்கும். அநேகமாக ஒவ்வொரு நிகழ்வுக்கு முன்னும் எனக்கு சோதனையாக சளி பிடித்து தைலத்தோடு அலைந்து கொண்டிருப்பேன். ”எப்படி பாடுவது?” என்ற பதைபதைப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் எப்படியோ சமாளித்து வந்திருக்கிறேன். சாதாரண நாட்களில் எனக்கு உடல்நலமில்லாமல் போனால் “நாடகம் போடலையே! ஏன் உனக்கு உடம்பு சரியில்லாமல் போகுது?” என்று பிறர் கேட்கும் அளவுக்குப் போனது.

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும். என்னை காலக்கனவுக்கு முன், காலக்கனவுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு நாடகப்பிரதி பார்வையாளனை சென்றடைவதற்கு முன்னால் முதலில் நடிப்பவரைச் சென்றடைய வேண்டும். நடிப்பவரை நாடகம் முதலில் அரசியல்படுத்தவேண்டும். காலக்கனவு அந்த வேலையைச் செய்தது. கீதாவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் அந்தப் பிரதி படிக்கும்போது இதில் நடிப்பதற்கு நமக்கு தகுதியிருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டபோது “இருக்கிறது” என்று என்னால் முழுமனதோடு எனக்கு நானே கூட சொல்லிக்கொள்ள முடியவில்லை. பெண்ணியம் குறித்த புரிதல்கள் இருந்தாலும், அதைக் கடைபிடிக்க ஆசைப்பட்டாலும், அதுவே எனது விருப்பமாக இருந்தாலும் கூட, சில புற–அக சூழல்களுக்குள் அடைபட்டு நான் கிடப்பதை உணர்ந்தேன். வீட்டில் என்ன சொல்வார்களோ, பெற்றோர் என்ன சொல்வார்களோ, இந்தச் சமூகம் என்ன சொல்லுமோ என்று நினைத்து நினைத்தே எத்தனையோ விஷயங்களில் நான் மௌனம் சாத்தித்திருப்பதும் சமரசம் செய்து கொண்டிருப்பதும் எனக்குப் புரிந்த்து.

திருமணத்தின்போது தாலி வேண்டாம் என்ற என் பிடிவாதம் எடுபடவில்லை. என் விருப்பத்திற்கு மாறாக தாலி அணியும் சடங்கு நடந்தது. என் பெற்றோருக்கு பெரியார் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் அவர்களின் திருமணத்திலும் தாலி இருந்தது. ஆகவே என் கோரிக்கை மணமகனைத் தவிர மற்றவர்களால் புறந்தள்ளப்பட்டது. எனக்கும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்ற உணர்வு இருந்ததால் கசப்போடு போராட்டத்தைக் கைவிட்டேன். நான் தேர்ந்தெடுத்தவரை திருமணம் செய்துகொள்வதற்காக என் பெற்றோருடனும் மணமகன் வீட்டாருடனும் நான் செய்துகொண்ட சமரசம் அது எனச் சொல்லலாம்.

ஒவ்வொரு முறை ஒத்திகையிலும் பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் குறித்த காட்சியில் நடிக்கும்போதும் குற்றவுணர்வு என்னை ஆட்கொண்டது. என் குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றியது. ஒருநாளில் தாலியை கழற்றி வைத்தேன். இது ஏதோ ஒரே நாளில் நடந்தது என்றும் நான் சொல்ல மாட்டேன். இந்த மாற்றம். குற்றவுணர்வுக்கு ஆளாகி அதன் விளைவாக மன உளைச்சலுக்குட்பட்டு ஒரு கட்டத்தில் நடந்தது அது. ஆனால் அதன்பின் மனநிறைவாய் உணர்ந்தேன். இப்போது யோசித்துப் பார்த்தால் எப்படி நாம் அப்படி இருந்தோம் என்று நினைத்தால் வியப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது.

இது ஒரு உதாரணம்தான். இதுபோல எத்தனையோ உண்டு. இன்று இருக்கும் ‘நான்’ ஆகிய என்னை செதுக்கியது காலக்கனவு. ஆனால் இதற்கு நான் நிறைய விலை கொடுக்க வேண்டியிருந்தது. பல கேள்விகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. போராட வேண்டியிருக்கிறது. போராட்டத்தில் நிறைய இழக்க வேண்டியிருக்கிறது. இழப்புகளுக்காக சில சமயம் வருந்தவேண்டியும் உள்ளது. ஆனால் நேர்மையும், உண்மையும், திருப்தியும் தரும் மனநிறைவுக்கு முன் அது தரும் கலக மனப்பான்மைக்கு முன் எதுவும் சாதாரணம்தான்!


நன்றி - கவின்மலர்
...மேலும்

Aug 26, 2010

அனியற்கைப் பூக்கள்..! -மயூ மனோ


நிர்தாட்சண்ய பார்வைகளால்
குமிக்கப்படுகின்றன
என் நாட்கள்
ஒரே விதமாக
அவை
அனியற்கையின் பூக்களை
என்னுடலில் பூக்கச் செய்கின்றன

தாலி நூல் இற்றுப் போயிருந்ததை
அவர்கள் தான் முதலில் கண்டார்கள்
நேற்று கழட்டும் போது
நானும்
என் குங்குமம்
அவன் உடலுள்
உறைந்திருந்தது

வெள்ளை நிறம் எனக்கு பிடித்திருக்கவில்லை
பொட்டில்லா நெற்றியும் தான்
இது குறித்து பிள்ளை தான் அதிகம் கேள்வி கேட்டான்
அவற்றைத் துறந்த போது
பின் தெருவும்

உனக்கான என் கற்பு எதனால் எழுதப்பட்டிருந்தது
என்பது எனக்கு நினைவிலில்லை
அவர்களால் அதை மீள எழுத முடிந்தது
துரோகமற்றதாதல் கற்பென்றால்
நான் மீளக் கற்பிருத்தல்
சாத்தியமில்லை என்கிறாயா?

நீ சாத்தியம் என்பாய்
எனக்குத் தெரியும்
நீ என்னைப் புரிந்தவன்
என்னை நானாக ஏற்றவன்
வாழ்ந்தவன்
தனிமையில் தான்
நான் மரணிப்பேன் என்பதும் அறிவாய்

ஆனால் நீ அறியாத ஒன்றும் இருக்கிறது
இன்னொன்றில் மீளக் காதலுறுதல்
அவர்களாலே வாசிக்கப்படுகிறது
கற்பின் அளவுகோல் நீளமாக நீளமாக

நிர்தாட்சண்யப் பார்வைகளால்
குமிக்கப்படுகின்றன
என் நாட்கள்
ஒரே விதமாக

அவை
ஒரு முத்தமிடலின்
ஒரு அணைப்பின்
ஒரு இயற்கையானதின் மீது
அனியற்கைப் பூக்களை
என்னுடலில் பூக்கச் செய்கின்றன..!

-மயூ மனோ-
...மேலும்

Aug 25, 2010

பெண்கள் மீதான அழுத்தங்களுக்கு எதிரான உணர்வெழுச்சியே ‘கல்லின் கசிவு’ - - இலக்கியா


நாடகம் பற்றிய கருத்தியல் பார்வை

அரங்கின் பல்பரிமாணப் பிரயோகப்போக்கின்படி அது சாதிக்க விளைவன பற்பல. புரையோடிக் கிடக்கின்ற சமூக நியமங்களுள் (Social nomes) அரங்கு தன்னகத்தே எல்லைப்படுத்தப்பட்ட, புலனாகா நியமங்களைத் தாங்கி வந்திருக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தமட்டில் கூத்துப் பாரம்பரியம், பின்வந்த இசை நாடகப் பாரம்பரியம் என்பனவெல்லாம் அரங்கப் பாரம்பரியங்களாகக் கொள்ளப்பட்ட வேளைகளில் இவ்வளிக்கைகளில் பெண்கள் பங்கு பற்றுதல் என்பது இயலாத அல்லது விரும்பப்படாத ஒன்றாகவே இருந்திருக்கின்றது. இவை மீறப்பட்ட சந்தர்ப்பங்களிலும் அவை புறநடைகளாகவே (Exception) கருதப்பட்டிருக்கின்றன. எனினும் மேற்குலக அரங்கின் தாக்கங்கள் இங்கு எட்டப்பட்ட வேளைகளில், குறிப்பாக ‘நவீன நாடகங்கள்’ என மக்களால் குறிப்பிடப்பட்டு வந்த அரங்க அளிக்கைகள் ஈழத்தில் தலைகாட்டத் தொடங்கிய வேளைகளில் பெண்களும் பாத்திரமேற்றல் எனும் நிலைமை மெல்ல அங்கீகாரம் பெறத்தொடங்கியது எனலாம். ஏழுபதுகளின் பின்பகுதி, எண்பதுகள் என்பவற்றில் இந்நிலைமையைப் பெரும்பாலும் அவதானித்திருக்கலாம். யதார்த்தவாத நாடக வடிவம் (Realistic style) அதன் கட்டமைப்பு வடிவம் என்பன இதற்கான சந்தர்ப்பத்தை அளித்திருக்கலாம். உண்மையில் ஒரு மத்தியதர வர்க்கத்தின் அரங்கியல் ஈடுபாடு என்பது இதுவரை இருந்து வந்த அரங்க மரபுகளைத் தாண்டி முன்னேற வழிவகுத்தது என்றே கருதவேண்டும்.

இவ்வாறு பெண்கள் அரங்க அளிக்கையில் ஈடுபட விளைந்த வேளையிலும் அந்நாடகங்களின் கருப்பொருள் பெரும்பாலும் பெண்ணை, அவளது பிரச்சினையை மையப்படுத்தியதாகப் பின்னப்பட்டிருந்ததில்லை. ஆயினும் பெண்நிலை வாதக் கோட்பாடுகள் எம்மத்தியில் பரவத் தொடங்கிய வேளையில் அரங்கும் தன் போக்கில் நெகிழ்வைக் கொண்டுவர முயற்சித்துள்ளது. இங்கே முற்போக்குச் சிந்தனாவாதங்கள் உறுதுணை அளித்து நின்றிருக்கின்றன. அதன்படி, எண்பதுகளின் பின் பெண்கள் பற்றியும் அவர்கள் சார்ந்த பிரச்சனைகள் பற்றியும் ‘அரங்கேறிப் பேசுதல்’ சாத்தியமானதாகவும், சகஜமானதாகவும் அமைந்துள்ளன. ஆயினும் தனிமனித நிலையிலும், குடும்ப, சமூக அழுத்த நிலையிலும் அரங்கில் பெண்கள் ஈடுபடுதலும் அதனால் ஏற்படுகின்ற எதிர் விளைவுகளும் (Reaction) நீண்டு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதனால் உறவுகள் – சனசமூக நிலைய மட்டத்திலும், பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும் நின்று அதாவது தமக்கான ஒரு, ‘வரன்முறை பாதுகாப்புத் தளத்தில்’ நின்றே பெண்கள் அரங்க ஆற்றுகைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது கண்கூடு. இவ்வாறான அரங்கில் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் அதன் அரங்கப் பிரிவுடன் இணைந்து மேடையேற்றி வருகின்ற ‘கல்லின் கசிவு’ எனும் நாடகம் தன்னை இனங்காட்டிக் கொள்ள விளைகிறது.

பெண்கள் மேம்பாட்டுத்திட்டம் அல்லது கிராமமட்ட பெண்கள் அமைப்புக்களை வலுப்படுத்தும் திட்டம் எனும் செயற்பாட்டின் கீழ் அறியப்பட்ட, அரங்கு தொடர்பான ஈடுபாடு கொண்ட யுவதிகள் ‘கல்லின் கசிவு’ எனும் நாடக ஆற்றுகையாளராகச் செயற்பட்டு வருகிறார்கள். அறிவுசார் நிலையில் நின்று சிந்திக்கின்ற யுவதிகள் (படித்தமட்டம்) அரங்கில் ஏறி நடிக்கத் தயங்கும் அல்லது அச்சப்படும் நிலைமையின் வீதம் குறைந்தளவேனும் இருக்கும் இக்காலகட்டத்தில், ‘கல்லின் கசிவு’ ஆற்றுகையாளர்களான யுவதிகள் கிராமங்கள் தோறும் சென்று, மக்களின் முன் நெற்றிக்கு நேரே தமது பிரச்சனைகளைப் புடம்போட்டுக் காட்டும் திறன் படைத்தவர்களாக விளங்குவது குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.

மேடையேறி நடிப்பதையே பிரச்சினையாக எண்ணும் பெண்கள் மத்தியில் (இங்கே மேடையேறுதல், நாடகம் நடித்தல் என்பது பல்கலைக்கழக அரங்கு, கற்றவர்கள் கண்டுகளிக்கும் அரங்கு என்பன பெரும்பாலான பெண்களுக்கு பிரச்சினையாக இருப்பதில்லை. இவ் அரங்குகளுக்கு ஓர் அங்கீகாரம் அல்லது சமூகப் பெறுமானம் இருப்பதனால் ஆகும்.) கிராமமட்டத்தில் உள்ள பெண்கள் ‘கல்லின் கசிவு’ மூலமாக தங்கள் பிரச்சினையை – பெண்கள் பிரச்சினையைப் பேசிவருதல் வியக்கப்பட வேண்டியதே.

பெண்கள் பிரச்சினைபற்றி பல நாடகங்கள் பல்வேறு காலங்களில் மேடையேற்றப்பட்டிருக்கலாம். எனினும், நான் அறிந்த மட்டில் பெண்கள் பிரச்சனையை நேரடியாகப் பேசியது ‘கூர்’ என்ற நாடகமாகும். இது திருமதி ஞா.ஜெயரஞ்சினி அவர்களால் பல்கலைக்கழக பட்டப்படிப்புத் தேவைக்காக 1995ல் அளிக்கை செய்யப்பட்டது. ‘கல்லின் கசிவு’ இந்நாடக ஆற்றுகைச் சாயலைக் கொண்டிருப்பதும், அதன் கருத்தியல் சித்தாந்தத்தைப் போன்றே இருப்பதும் தவிர்க்க முடியாததாகவே காணப்படுகின்றது. ஏனெனில் பேசப்படும் விடயம், அதனைப் பேசும் உள்ளங்கள்-உணர்வுகள் ஒன்றாகவே இருக்கின்றன. உண்மையில் இதனைச் செழுமை மிகுந்த நாடக வடிவமாக ஆராய வேண்டிய நோக்கமே தேவையற்றதாக அமைகிறது. அது அவ்வாறு அமைய வேண்டிய தேவையுமில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. பெண்கள் ஓர் அரங்க நடவடிக்கை மூலமாகத் தங்களது பிரச்சினையைப் பேசிப் பறைகிறார்கள் என்பதே யதார்த்தம். அதற்கு அரங்கின் நெகிழ்ச்சித்தன்மை இடங்கொடுத்துள்ளது. அரங்க மூலகங்கள் அவர்களிற்குத் துணை நிற்கின்றன.

அன்றாடம் பெண்கள் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு பிரச்சினையையும் வீட்டிலோ, அல்லது தெரிந்தவர்களிடமோ கூறத்தயங்குபவர்கள், மேடையில் ஏறிப் பல்வேறு தரப்பினர் மத்தியில் அளிக்கை மூலம் கூறிவிடுகிறார்கள். இங்கே ஊர் வார்த்தைகள் பெரும்பாலும் அப்படியே பயன்படுத்தப்படுகின்றன. செயலியக்கம் சிக்கன வீரியத்தோடு நகர்ந்து செல்கிறது. இவற்றிற்கு மேலே பாத்திரங்களாகப் பாவனை செய்வோரின் உணர்வுகள் இங்கே முக்கியம் பெறுகின்றன. அது அவர்கள் அனுபவிக்கும் அழுத்தங்களிற்கு எதிரான உணர்வெழுச்சியென்றே எண்ணத் தோன்றுகின்றது. ‘பெண்ணியம்’ பற்றிப் பெரிய பெரிய கருத்துக்களை அறியாத, அல்லது சிந்திக்காத கிராமமட்டத்திலுள்ள இளம் பெண்கள், பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் உள்மன உணர்வுகளை வெளிப்படுத்தி வருதல் என்பது பெண்கள் தம் உரிமைகளை அடைவதற்கான படிநிலை வளர்ச்சி என்றே கொள்ளவேண்டும்.

பெண்களிற்கான அரங்கக் களப்பயிற்சிகளின் போது அரங்க விளையாட்டுக்கள், பாடல்கள், ஆடல்கள் என்பவற்றில் அவர்கள் ஈடுபடுதல் இக்கால நடைமுறையாக இருந்து வருகிறது. ஆயினும் அது ஓர் மூடிய – தனிமைப்படுத்தப்பட்ட – புறத்தடங்கல்கள் அற்ற சூழ்நிலையிலேயே சாத்தியமானதாக அமைந்து கொள்கின்றது. இந்நிலைமைகளினுள் ‘கல்லின் கசிவு’ ஆற்றுகையாளர்கள் பெண்கள் கைதட்டி ஆடுதல் என்பதனைப் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்த்து, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அந்நோக்கு எய்தப்படுகையில் அல்லது முயற்சிக்கப்படுகையில் பலவீனமான ஒன்றாகவே அமைந்து கொள்கிறது.

கைதட்டிப் பாடி ஆடுதல் என்பது உடல், உள விடுதலைக்கான செயற்பாடு என்பதும், ஆற்றுகையின் கருத்துடன் ஒத்திசைவு கொள்வதற்கான சுட்டி என்பதும் உண்மையே. ஆயினும், இவைதான் பார்வையாளர்களான பெண்கள் ஆற்றுகையின் கருத்தை அங்கீகரித்தார்கள் அல்லது உணர்ந்து கொண்டார்கள் என நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக கருதிப் பார்வை
யாளரை ஆடவைக்க எடுக்கும் பகீரதப் பிரயத்தனங்கள் ஏனைய அனைத்து முயற்சிகளையுமே பலவீனப்படுத்துவதாகவே அமைந்து விடுகின்றன. நல்லூரில் நாவலர் கலாசார மண்டபத்தில் மகளீர் தினத்திற்காக ‘கல்லின் கசிவு’ ஆற்றுகை செய்யப்ட்டபோதும் அது சாத்தியமாகவில்லை. கிராமமட்டத்தில் ஒன்று திரட்டிய பெண்கள் மத்தியில் (சரசாலை – மட்டுவில் வடக்கு) ஆற்றுகை செய்யப்பட்ட போதும் அது சாத்தியமாகவில்லை. இதற்காக, எந்தத் தரப்புப் பெண்களும் தமது தளைகளை விடுவித்து அரங்க ஆடலில் ஈடுபட மாட்டார்கள் என்றும் பொருள் கொள்ள முடியாது. இங்கே அதற்கான சூழ்நிலையை, அதற்கான உணர் வெழுச்சியை சமூகப் பரிமாணங்களின் பெறுமதியை உணர்ந்து உருவாக்கும் பட்சத்தில் அது கைகூடும். இவ் விடயம் பற்றி நாடகத்தின் இணை நெறியாளர்களாகப் பணியாற்றும் துறைசார் பட்டதாரிகளான பெண்கள் அனுபவத்தின் ஊடாகக் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என எண்ணத் தோன்றுகின்றது.

‘சமூகம்’ நிதானமானது. அது எதையும் ஏற்கும், எதையும் நிராகரிக்கும். அது சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களையும் தேவைகளையும் பொறுத்தே தீர்மானிக்கப்படும். எனவே, ‘கல்லின் கசிவு’ பெண்ணியக் கோட்பாடுகளின் ‘பெரும்சமாக்களுக்கு’ மத்தியில் தன்னை நிலை நிறுத்தி நிதானமாக அடியெடுத்து வைத்து நகர வேண்டும். அதுவே ஆரோக்கியமான பெண்கள் வேலைத்திட்டமாகவும் அமைந்து கொள்ளும்.


நன்றி - கூத்தரங்கம்
...மேலும்

Aug 24, 2010

அழைப்பு - பெண்கள் சந்திப்பு - கருத்தாடல்


இந்த கருத்தாடல் நிகழ்வில் பெண்ணிய வரலாற்று ஆசிரியர் உமா சக்கரவர்த்தி கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார். பெண்ணிய வரலாற்றினை மறுவாசிப்பு செய்யும் போது ஏனைய வரலாற்றுக் கூறுகளின் உள்ளடக்கங்களை எவ்வாறு புரிந்து கொள்வது, குறிப்பாக சிவில் உரிமை அமைப்புகளை இனங்கண்டுகொள்தல் குறித்து உரையாடப்படுகிறது.

அனைவரும் அழைக்கப்படுகின்றனர். ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளச்செய்யுங்கள்...

இந்த உரையாடலின் உள்ளடக்கம் குறித்த மேலதிக விபரங்களை ஆங்கிலத்தில் கீழே காணலாம்.

Penngal Santhippu welcomes you to a lecture and discussion on

Feminist Memoirs

5. 30 pm, August 25, 2010

Spaces, 1, Elliots Beach Road, Besant Nagar, Chennai 600090.

Historian and civil rights activist Uma Chakravarti will speak on re-thinking the history of feminist politics in post-independence India. Her talk will focus on the civil liberties tradition of the 1970s and how that became a context for feminist practice.

Inspired by campus activism, Jayaprakash Narayan’s movement against corruption, left militancy and dismayed by anti-Muslim and later anti-Sikh violence in northern India in the 1980s, a generation of teachers, lawyers, writers and students took to civil rights work across the country. This experience in everyday democracy unraveled for them several levels of injustice and oppression. Some amongst them went on to become part of women’s groups in Delhi and elsewhere, and others came to play important roles in the emergent Women’s Studies debates of that time. Yet others did this and more, aligning themselves with left groups, various campaigns for social justice …Uma Chakravarti was part of these various feminist and other progressive political spaces and her recalling of that time, of people and events is at once heartfelt and detached. Irony and whimsical hope sit cheek by jowl in her understanding of those days. All of us who were part of those decades or have inherited their radical political legacy are bound to relate to her account, personally and politically.

From ‘Feminist Memoirs’ by Uma Chakavarti

‘After some months of intense campaigning on dowry murders several women’s groups began to feel the need for a more direct method of communication with people when raising the issue of dowry. Discusssions gave rise to the idea of having a street which was titled Om Swaha and was based on the lives of two real women who had been killed in Delhi by their in-laws for not bringing enough dowry. …Performed in mohallas, colleges, parks and genteel residential areas with a rotating team of ‘actors’ and ‘actresses’ enabling the ‘show’ to move rapidly to a new site and occasion of performance, whether its designated actors were free to perform or not. High drama, crudity—to capture the gross behaviour of the in-laws—and even humour were blended to hit hard at the in-laws, who first made outrageous demands for goods and cash, and then killed young wives; parents who closed doors to daughters returning home, and a ‘society’ that just looked on passively as women burnt to death. I can recall even policemen with tears in their eyes—the play struck a chord in almost everyone watching it, even diehard policemen—

…the most powerful long term consequence of the women’s movement in the universities across India, including Delhi, was the birth of the women’s studies movement as the need to understand and analyse indigenous and home grown patriarchy and its embeddedness in culture hit us like a thunderbolt: …As I stood alongside a group of women for the nth time in a crowded mohalla in old Delhi an anguished young woman turned to me and said, ‘You are a historian of ancient India. Tell us what there is in our culture that says a woman who is being tortured for dowry cannot leave her husband’s home to exit from an oppressive and life-threatening relationship?’ A few months later I wrote a paper on the Sita myth based on various versions of the Ramayana. Its last lines are suitably cynical: while Sita could ‘choose’ a dignified end to her life she could not wrest for herself a life with dignity. ‘

"What is the problem of women’s freedom? It seems to me to be this: how to arrange the world so that women can be human beings, with a chance to exercise their infinitely varied gifts in infinitely varied ways, instead of being destined by the accident of their sex to one field of activity—housework and child-raising. And second, if and when they choose housework and child-raising to have that occupation recognized by the world as work, requiring a definite economic reward and not merely entitling the performer to be dependent on some man."


- Crystal Eastman


...மேலும்

Aug 23, 2010

பெண்களின் மீதான பாலியல் இம்சைகள் (உரையாடல்)- வீடியோ தொகுப்பு


குடும்பங்களிலும், வெளி இடங்களிலும், அலுவலகங்களிலும் பெண்களின் மீது இடம் பெறும் பாலியல் இம்சைகள், பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல்கள் எனபன குறித்த விளக்கங்களும் அவை சார்ந்த விவாதமும் இங்கு இடம்பெறுகிறது. பல வடிவங்களில் இடம்பெறும இத்தகைய பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் இன்று பகிரங்க தளத்தில் பேசுபொருளாகிறது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்களின் மீது இடம்பெறும் பாலியல் ரீதியான சிக்கல்கள் பெரும்பாலும் மூடிமறைக்கப்பட ஏதுவான காரணிகள் குறித்து தொடர்ச்சியான உரையாடல் இலங்கையின் பெண்ணியச் செயற்பாட்டாளர்களால் பல உரையாடல்கள் முன்னெடுத்துச் செல்லப்படகின்றன.

YounAsia Television தயாரித்து தொலைக்காட்சியில் வெளியான இந்த வீடியோ பதிவினை நன்றியுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

பெண்ணியம் குழு

GBV 5 Rape - Tamil from Young Asia Television on Vimeo.

GBV 6 Incest - Tamil from Young Asia Television on Vimeo.

GBV 7 - GBV and Conflict - Tamil from Young Asia Television on Vimeo.

GBV 8 Sexual Harrasment - Tamil from Young Asia Television on Vimeo.


...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்