/* up Facebook

Jul 29, 2010

முதல் பெண் இமாம் ரஹீல் ரசா - கீதா இளங்கோவன்


ரஹீல் ரசா (raheel raza) . பெண்களும், ஆண்களும் பங்கேற்ற இருபாலர் தொழுகையை தலைமையேற்று வழி நடத்திய உலகின் முதல் இஸ்லாமிய பெண்மணி. முதல் பெண் இமாம். (இஸ்லாம் சமயத்தில் ஆண்கள் மட்டுமே தொழுகையை வழி நடத்துவர். இவர்கள் இமாம் என்று அழைக்கப்படுவார்கள்.) அண்மையில் இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டில் உள்ள இஸ்லாமிய கல்வி மையத்தில் உலகெங்கிலும் உள்ள பழமைவாதிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இந்த தொழுகை கூட்டத்தை நடத்தி இருக்கிறார் ரசா.

ரஹீல் ரசா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அங்கிருந்து கனடாவிற்கு குடியேறியவர். கணவர், வளர்ந்த இரண்டு மகன்களுடன் தற்போது கனடாவில் வசிக்கிறார். இவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பே கனடாவில் இருபாலர் தொழுகையை நடத்தி இருக்கிறார். என்றாலும், இங்கிலாந்தில் நடைபெற்ற கூட்டம் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப் பட்டதால் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. ஓர் இஸ்லாமியப் பெண் மரபினை மீறி தொழுகையை நடத்தக் கூடாது என்று அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன.

அத்தனையும் புறந்தள்ளி விட்டு அழகாக தொழுகை கூட்டத்தை நடத்தியிருக்கிறார் ரஹீல். மட்டுமல்ல, பாலியல் சிறுபான்மை, புலம் பெயர்தல், மதத்தின் பெயரால் தமது குழந்தைகளை இழக்கக்கூடிய அபாயம் போன்ற பல `கடினமான' விசயங்களையும் கோடிட்டு காட்டியுள்ளார் .

ரஹீல் ரசா "அவர்களது ஜிஹாத்... என்னுடைய ஜிஹாத் அல்ல" என்ற நூலை எழுதியுள்ளார். இதில் அரசியல் நிலைப்பாடு, பெண்களின் உரிமைகள், இறையுணர்வு தேடல் என்ற மூன்று பகுதிகளின் கீழ், பல நாளிதழ்களில் வெளிவந்த இவரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.


பல்வேறு சமய நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை நிரப்ப ரஹீல் பாடுபடுகிறார். இத்துறையில் ஆலோசகராகவும் உள்ளார். பேச்சாளர், ஆவணப்பட இயக்குனர், பத்திரிகையாளர் என பல முகங்கள் கொண்டவர். மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, வடஅமெரிக்கா என்று உலகம் சுற்றியவர். பயண விரும்பி.

"பெண்கள் பார்க்கப்படத்தான் வேண்டும், கேட்கப் படக் கூடாது என்று சிறு வயதில் ரஹீலின் அம்மா சொல்வாராம். அது இவரை நிறையவே பாதித்துள்ளது. தனது நூலிலும், தன்னை பற்றிய அறிமுகத்திலும் இந்த சொற்றொடரைப் பயன்படுத்தி தான் வளர்ந்த சூழலை ரஹீல் சித்தரிக்கிறார். பெண்கள் உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

ரஹீலின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, அவரது மின்னஞ்சல் முகவரியை தேடிப் பிடித்தேன். அவருக்கு வாழ்த்துக்கள் கூறி, "ஆக்ஸ்போர்டில் தொழுகையை நடத்திய போது ஒரு பெண்ணாக எப்படி உணர்ந்தீர்கள்? எதிர்ப்புகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். (மின்னஞ்சல் முகவரி சரியானதா, போகுமா, போய்ச் சேர்ந்தாலும் அவர் அதைப் பார்ப்பாரா, பார்த்தாலும் பதில் எழுதுவரா என்றெல்லாம் சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும்)

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு ரஹீலிடமிருந்து பதில் வந்த போது மகிழ்ச்சியடைந்தேன். அவரின் தெளிவும், மனப்போக்கும், இயல்பும் அசர வைத்தன. ரஹீலின் மின்னஞ்சல் பதில் இதோ.

"கீதா, உங்களிடமிருந்து வந்த மின்னஞ்சலால் மிக்க மகிழ்வடைந்தேன். இறையுணர்வில் ஆணுக்கு பெண் சமமாக விளங்குவதை குரான் தடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டதால் அந்த தொழுகை கூட்டத்தை வழி நடத்தினேன். அப்போது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்ந்தேன். எதிர்ப்பு சாதாரணமாக வரக்கூடியது தான். எதிர்பார்த்த ஒன்றும் கூட. ஏனென்றால், நாம் வாழ்வது ஆண் வழிச் சமுதாயம் தானே. இங்கு மாற்றம் நிகழ்வது கடினம். ஏராளமான இஸ்லாமிய இளம் பெண்கள், மசூதிகளில் (தற்போது இவர்களுக்கு அங்கு வரவேற்பு இல்லை) தமக்குரிய இடத்தைப் பிடிப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன். குரானின் மையப் பொருளான மனித நீதியின் ஒரு அங்கம் தான் சமத்துவம் என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் வரும் காலங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.

பிரபலமாக வேண்டும் என்பதற்காக நான் இந்த தொழுகையை நடத்தவில்லை. ஏனென்றால், உண்மையானது நண்பர்களை தேடித் தராது. அல்லாவைத்தான் வழி காட்டச் சொல்லி பிரார்த்திக்கிறேன். சக ஆண்களை நான் சார்ந்திருப்பதில்லை. கணவரும், இரண்டு மகன்களும் ஆதரவாக இருப்பது என் அதிர்ஷ்டம். ஆசீர்வாதமும் கூட. உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி - ரஹீல் ".
சிந்தனை தெளிவும், தனக்கு சரி என்று பட்டதை செய்யும் துணிவும் கொண்ட ரஹீலுக்கு ஒரு பெரிய சல்யூட்!

ரஹீல் ரசா (raheel raza) வின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

பெண்ணியத்திற்காக கீதா இளங்கோவன்

9 comments:

virutcham said...

நல்ல பகிர்வு

இது ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தால் நலம். தஸ்லீமா மாதிரி நாடு நாடாக ஓட வேண்டிய நிரபந்ததுக்கு ஆளாக மாட்டேர் என்றே நம்புவோம்.

கீதா இளங்கோவன் said...

நன்றி விருட்சம். ரஹீலின் முன்னோடிப் பணி பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புவோம்.

Anonymous said...

அன்பு கீதா,

ரஹீல் ரசாவின் செயல்பாடு ,மதத்தின் பெயரால்
பல்லாயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட பெண்களுடைய
மன உணர்வுகளுக்கும், போராட்டங்களுக்கும் கிடைத்த
அங்கீகாரமாக உணர்கிறேன். இ மெயில் வழி அவர்களை
தொடர்பு கொண்டது நல்ல முயற்சி... கடல்கடந்து சென்ற
வாழ்த்து ரஹீல் ரசாவிற்கு மிகவும் மகிழ்ச்சியளித்திருக்கும்.
நிறைவான பதிவு..
ரஞ்சனி

சைக்கிள் said...

This is a post that kindles the spirit of courage in us. Wishes!

கீதா இளங்கோவன் said...

நன்றி ரஞ்சனி. ஏதோ ஒரு நம்பிக்கையில் ரஹீலுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர் பதில் அனுப்பியது, இனி இவர் போன்ற சாதனை பெண்களை தொடர்பு கொள்ளவும், எழுதவும் ஊக்கம் அளிக்கிறது.

கீதா இளங்கோவன் said...

@சைக்கிள். நிச்சயமாக தோழி. ரஹீல் ரசா ஏதோ ஒரு விதத்தில் நமது துணிவினை தட்டி எழுப்புகிறார்.

Anonymous said...

Hi mam,
This article reveals how she suffered by mala dominating society.But her confidence take her to this position.She proved that there is no alternative instead of confidence.she has become a rolemodel for us.And i appreciate you for given such a fantastic article.Step up in progress.Congrats.
-Hema

Anonymous said...

Hi mam,
This article reveals how she suffered by male dominating society.But her confidence take her to this position.She proved that there is no alternative instead of confidence.she has become a rolemodel for us.And i appreciate you for given such a fantastic article.Step up in progress.Congrats.
-Hema

கீதா இளங்கோவன் said...

Dear Hema,
You are right. Raheel becomes a role model for us with her self-confidence. Thank you for your compliments and comments.
affly
Geeta

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்