/* up Facebook

Jul 22, 2010

பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – மு.வி.நந்தினி


உதடுகளில் சாயத்தோடும், தோளில் பையோடும் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் உங்களைக் கடந்து போகும் போது நீங்கள் நினைக்கக்கூடும், ‘பாருங்கப்பா பெண்கள் எவ்வளவு முன்னேறிவிட்டார்கள்’ என்று. அப்படி நினைத்தீர்களானால் உங்களுக்கு பெண்களின் வாழ்நிலை குறித்தோ, அவளின் இருப்பு குறித்தோ எந்தவித அக்கறையும் இல்லை என்றே சொல்வேன். வார்த்தைகள் தடிப்பானவையாக இருக்கலாம். ஆனால் நண்பர்களே நான் சொல்வது உண்மையிலும் உண்மை. பெண் ஜனாதிபதியாகிவிட்டார், பெண் முதலமைச்சர் ஆகிவிட்டார், பெண் அதுவாகிட்டார், இதுவாகிவிட்டார்…எதுவானாலும் பெண் எப்போது பெண்ணாக இருந்திருக்கிறாள்?

___________________________________________________

பெண்? திருமணத்துக்கு முன்…

“ஆண் குழந்தைகளோடு விளையாடக்கூடாது. தனிமையில் ஆடினாலும் சொப்பு வைத்து சோறு வடி. வீட்டு வாசலைத் தாண்டி தெருவுக்கு போய்விடக்கூடாது. அப்படி போனால் அப்போதே அவளின் எதிர்காலம் பெற்றோருக்கும் உற்றோருக்கும் தெரிந்துவிடும். வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே இது இழுத்துக்கிட்டு போகப் போவுது பார்த்துக்க.

வீட்டை விட்டு வரக்கூடாது, ஆண்கள் வீட்டுக்குள் வந்தால் கக்கூஸுக்குள்ளோ கிச்சனுக்குள்ளோ அடைக்கலம் புகுந்து கொள். தலைவாரி-பொட்டு வைத்து-பூச்சூடு (பின்னாளில் கணவனை கவர்ந்து கைக்குள் போட்டுக் கொள்வதற்குத்தான்). பாத்திரம் கழுவு, வீட்டைக் கழுவு, அண்ணன்-தம்பி குண்டியைக் கழுவ (கணவன் வீட்டில் உள்ள அத்தனை பேரின் அத்தனையையும் கழுவ பயிற்சி) கற்றுக்கொள்.”

“வயசுக்கு வந்த பொண்ணுக்கு படிப்பெதுக்கு? சேர்த்து வைத்த தட்சணையை வரனுக்கு கொடுத்து தத்தளித்துக் கொண்டிருப்பவளை கரை சேர்த்துவிடலாமில்லையா? படிக்கப் போனவள் வீடு வந்து சேர்வதற்க்குள் மடியில் இருக்கும் நெருப்பு கனன்று கொண்டே இருக்கும், எப்போ அவள் பத்திக்குவாளோ என்று. வீட்டு பட்ஜெட்டில் மாசமாசம் பெரிய்ய சேலையோ வேட்டியோ விழுந்தாலும் கூட படித்தவள் வேலைக்குப் போகக்கூடாது. வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொடுத்து ஒண்ணும் ஆகப்போறதில்லை. சீவிச் சிங்காரித்து (கவனிக்க…வீட்டில் இருக்கும்போது பயிற்சிக்காக மட்டுமே இதை செய்ய வேண்டும்) அப்படியே வேலைக்குப் போனாலும் வரதட்சணைப் பணத்துக்குத்தான் ஆகப்போகுது. காலகாலத்துல கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துக்காம அப்படியே இருந்து புரட்சி செய்யப்போறீயா?”

______________________________________________

திருமணத்துக்குப் பின்…

“கணவன் + அவன் குடும்பத்தினர் அத்தனை பேரின் கால்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு வீட்டு வேலையைச் செய். வேலைக்குப் போனாலும் இந்த சாஷ்டாங்க சடங்கை செய்தாக வேண்டும். புர்காவைப் போல சுடிதார் இருக்க வேண்டும். புடவை கவர்ச்சியான உடை என்பதை ஆண்கள் தெரிந்து கொண்டுவிட்டார்கள். கழுத்தில் தாலியும் கால்களில் மெட்டியும் குளிக்கும் போதுகூட கழற்றப்படக்கூடாது & அப்படி கழற்றினால் நீ வேசையாவாய்! ஏனெனில் தாலியும் மெட்டியும் இல்லாமல் உன்னைப் பார்க்கும் ஆண்கள், உன்னை வசீகரித்து, உன்னிடம் கள்ளக்காதல் கொள்ள ஏதுவாகப் போய்விடும்.”

“புத்தகம் படிக்கக்கூடாது, பேப்பர் படிக்கக்கூடாது. சிறந்த குடும்பப் பெண் ஆவது எப்படி என கற்றுத்தரும் சீரியல்களையும் கணவனை முந்தானையில் முடிந்து கொள்ளும் ரகசியத்தைச் சொல்லும் பெண்கள் பத்திரிகைகளையும் பார்க்கலாம், படிக்கலாம். திருமணம் ஆன அடுத்த நாளே வாந்தி எடுக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அதற்கு அடுத்த நாள் வாழைப்பழத்தோடு புள்ளைப்பூச்சியை விழுங்க வைத்து (டெஸ்ட் டியுப் பேபி போன்ற நவீன சிகிச்சை முறையெல்லாம் வந்துடுச்சே என்கிறவர்களுக்கு பாரம்பரியத்தை போதிக்க ஆட்டோவில் ஆள் அனுப்பப்படும்) பிள்ளை பிறக்க வழி செய்யப்படும். அப்படியும் எந்த பூச்சியும் பிறக்கவில்லை என்றால் காத்துக்கிடக்கும் மலடி பட்டம். மலடன் என்கிற வார்த்தை தமிழில் இல்லையாம்! பிள்ளை பிறந்துவிட்டால் கழுவும் வேலையை செய். வேலைக்குப் போவதற்கு பெரிய முற்றுப்புள்ளி வை. பிறகு வாழ்க்கை முழுவதும் ஏராளமான முற்றுப்புள்ளிகளை வைக்கக் கற்றுக் கொள்.”

___________________________________________________

தினக் கூலியாக இருந்தாலும் கார்ப்பரேட் கூலியாக இருந்தாலும் பெண் என்பவள் மேலே சொல்லப்பட்டிருக்கும் வரையறைகளுக்குள் வளர்க்கப்பட்டவளாகத்தான் இருப்பாள். வரையறைகளை மீறுவதற்கும் அப்படியே மீறி வந்தால் ஏற்றுக்கொள்வதற்கும் இந்த சமூகம் ஒருபோதும் இடம் தராது. ஆணின் சுகிப்புக்கும் அவனது வாரிசை உருவாக்குவது உள்ளிட்ட தேவைகளுக்குமே பெண் வளர்க்கப்படுகிறாள். இந்த வரையறைகளை வகுத்தவர் யார் ?

இதற்கு இந்த சமூகத்தின் ஒவ்வொரு துரும்பையும் குற்றம் சொல்ல வேண்டியிருக்கும். குற்றம் சொல்வது இருக்கட்டும், இந்த வரையறைகள் எல்லாம் அப்பட்டமான பெண்ணடிமைத்தனம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்-? அழுக்கு மூட்டைகளுக்கு கலாச்சாரம், பாரம்பரியம் என்று பெயர் கொடுத்திருக்கும் இந்திய சமூகத்தின் அவலம் இது.

என்னைப் பொறுத்தவரை ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்கள்! நம்பகத்தன்மை இல்லாதவர்கள். தன்னைப் பற்றிக்கூட அவர்கள் எப்போதும் சந்தேகித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பலவீனத்தை மறைக்கத்தான் மதம், கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், இத்யாதி…இத்யாதி சமாச்சாரங்கள் எல்லாம் தேவைப்படுகின்றன.

ஆண்களின் தேவைக்காக, ஆண்களால் உருவாக்கப்பட்ட இத்யாதி வகையறாக்கள் பெண்களுக்கு கண்ணும் கருத்துமாக போதிக்கப்படுகின்றன. ஞானம் பெற்ற பெண்கள் அவற்றை, தலைமுறை தலைமுறையாக தாங்கள் பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள். இந்த சங்கிலித் தொடர் செயல்பாட்டில் ஏதேனும் மாறுதல் வரும்போது ஆண் இனம் சீறிப் பாய்கிறது.

______________________________________________


இறுதியாக இறைஞ்சுதல்…

பெண் உயர்ந்தவள்-ஆண் தாழ்ந்தவன் என்கிற தர்க்கம் இப்போது தேவையே இல்லை. பெண்ணை சக உயிராகக் கூட மதிக்காத சமூகத்தில் பெண்ணின் மேன்மை குறித்து பேச என்ன இருக்கிறது? என்னைச் சுற்றியுள்ள பெண்களின் நிலைமையை கூர்ந்து பார்க்கும்போது, மிகுந்த மனஉளைச்சலும் வெறுப்புணர்வும் ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒருவகையில் பிரச்சினை என்றால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இரண்டு வகையிலும் பிரச்சினைதான். நான் பணியாற்றும் ஊடகத்துறையில் இரண்டையும் சமாளிக்க முடியாமல் எத்தனை பெண்கள் ஓடி மறைந்துவிட்டார்கள் தெரியுமா?

சக பணியாளர்களான ஆண்களின் கிசுகிசுக்களும் தன் குடும்பத்தாரின் நிர்பந்தமும் பெண்களை சமையலறைக்குள் துரத்திக் கொண்டிருக்கின்றன. ஊருக்கே கலெக்டராக இருந்தாலும் வீட்டு வேலை செய்யாத பொம்பளை பொம்பளையே இல்லை! என்பது போன்ற சினிமா வசனங்களை உச்சரித்து, பெண்களுக்கு பாடம் நடத்தாத ஆணைப் பார்ப்பது அரிதாகத்தான் இருக்கிறது.

இங்கே இன்னொரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெண்ணடிமைத்தனத்தை சிதைக்காமல் காப்பாற்றும் வேலையை இந்திய சினிமாக்கள் கச்சிதமாகச் செய்கின்றன. சினிமாவைப் பார்த்து பால் குடித்து, சினிமாவைப் பார்த்து உடையணிந்து, சினிமாவைப் பார்த்து மோகம் கொள்ளும் ஆண்களிடம் எப்படி மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?

சினிமாவில் பேண்ட் அணிந்த கதாநாயகியைப் பார்த்து காமுறும் கதாநாயகனை சுவீகரித்துக் கொண்ட ஆணுக்கு, தன் வீட்டுப் பெண் வசதிக்காக பேண்ட் அணியும் போது மற்ற ஆண்கள் அவளைப் பார்த்து காமுறக்கூடுமே என்கிற எண்ணம் மேலோங்குகிறது. அறியாமையில் இருக்கும் ஆண்களைவிட ‘புரட்சி’ பேசுகிற ஆண்கள் ஆபத்தானவர்களாகப் படுகிறார்கள். இவர்களுடைய புரட்சி என்பது ஏட்டு சுரைக்காய் போல, வாழ்க்கைக்கு உதவாது. நீண்ட கூந்தலில் பூச்சூடி, வட்ட பொட்டு வைத்து தாவணிப் போட்ட கிராமத்துப் பெண் வேண்டும் என்று தேடிப்பிடித்த புரட்சிகர ஆண்களை கண்டு புன்முறுவலடைந்திருக்கிறேன்.

திருமணம்தான் பெண்களை முடக்குவதில் முக்கிய நிறுவனமாகச் செயல்படுகிறது என்கிற காரணத்தால்தான் பெண்ணைப் பற்றி சொல்வதற்கு திருமணத்துக்குப் பின், முன் என்று பிரித்துக் கொண்டேன். திருமண அமைப்பே வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு நாம் இன்னும் செல்லவில்லை. அதுவரைக்கும் இப்போதிருக்கிற அமைப்பில் இயங்குவது சமூகத்தை பின்நோக்கித்தான் செலுத்தும்.. நாம் வேண்டுவதெல்லாம் அமைப்பில் மாற்றம் வேண்டும் என்பதே. திராவிட பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கிற கட்சிகளும், இயக்கங்களும் இந்த விஷயத்தில் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்கிற கேள்வியும் இந்நேரத்தில் எழுகிறது. இப்போதிருக்கும் ஊடக வளர்ச்சியை ஏன் இந்த இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்ள மறுக்கின்றன?

திரும்ப திரும்ப பெண்ணை குடும்பம்-திருமணம் என்கிற வட்டத்துக்குள் வைத்து மட்டுமே விவாதத்திற்கு உட்படுத்துவது (சிறப்பு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் எங்கள் எல்லோருடைய கருத்தும் இந்த புள்ளியில் இணைவது எதிர்பாராதது அல்ல) பலருக்கு எரிச்சலூட்டலாம். முதலில் மாற்றம் ஏற்பட வேண்டியது இந்த அமைப்புகளில்தான். அதுதான் எங்கள் எல்லோருடைய இறைஞ்சுதலும். கணவன், தகப்பனாக இருக்கிற ஆண்கள்தான் வேலையிடங்களிலும் சக பணியாளர்களாக இருக்கிறார்கள். குடும்பத்தில் மாற்றம் பிறந்தால் அது வேலையிடத்திலும் பிரதிபலிக்கும்.

மற்றொரு புறம் அமைப்புகளை தூக்கி எறிந்து புரட்சி செய்கிற பெண்களின் மீது படும் முதல் கல், ஓர் ஆணுடையதாகத்தான் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் புரட்சி, தொடர் இயக்கமாக நீடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமே ஆண்களின் அறியாமையை அவர்களுக்கு உணர்த்தாமல் விட்டதுதான். பெண்ணின் நிலையை உணர்ந்து பார்க்கும் ஆணால்தான் மாற்றத்தை துவக்கி வைக்க முடியும். பெண்ணிய இயக்கங்கள் இனி செயல்பட வேண்டியது ஆண்களிடத்தில்தான்!

இத்தகையதொரு உரையாடலை துவக்கி வைத்திருப்பதற்கும், பங்கேற்க அழைத்தமைக்கும் வினவுக்கு நன்றி…

_________________________________________________

- மு.வி.நந்தினி

(ஊடகவியலாளர், சென்னையில் வாழ்கிறார். நந்தினியின் வலைப்பூ: mvnandhini

1 comments:

Anonymous said...

Okay!! It seems like the author of this article has visited many foreign countries and wants to be like one among them. But she refused to see how Westerners are admiring at our culture, family bond & relationship values. She also wants to do a detailed study on the current trend in American families i.e., deep bond within family which we had in past. Life & Culture goes in a cycle. Eastern wants to become Western and Western follows Eastern.
Finally I would say, it is a senseless, biased, illogical and ruthless article. God Bless & Save India!!!

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்