/* up Facebook

Jul 17, 2010

ஆண்கள் அழலாமா? - ஜெயந்தி


எங்க அம்மா இருக்காங்களே அவங்களால வேலை செய்யாம இருக்கவே முடியாது. வேலை செய்வது ஒன்றே அவர்கள் வாழ்க்கை லட்சியம் என்பதுபோல் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வீட்டில் நாங்கள் எல்லோரும் இருந்தாலும் காலிங்பெல் அடித்தால் அவர்கள்தான் ஓடுவார்கள் கதவைத் திறக்க. வயது 65 ஆகிறது.

ஒரு நாள் என்னாச்சு வெளியே மழை பெய்யத் தொடங்கிய சத்தம் கேட்டவுடன் காயப்போட்ட துணிகளை எடுக்க அவசரமாக கட்டிலில் இருந்து இறங்கும்போது கால் இடறி அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள். அவ்வளவுதான். எந்திரிக்கவே முடியவில்லை. எனக்கு அலுவலகத்திற்கு போன் வந்தது. அப்போதே முடிவு செய்துவிட்டேன். அது ஃப்ராக்சராகத்தான் இருக்கும். வீட்டிற்குச் சென்று அம்மாவைத் தூக்கி ஆட்டோவில் திணித்துக்கொண்டு ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே டாக்டரிடம் அம்மா வலிக்கிறதாகச் சொன்ன இடத்தில் எக்ஸ்-ரே எடுத்தார்கள். அதில் ஒன்றும் அவர்களுக்கு தெரியவில்லை. திரும்பவும் எங்க வலிக்குதுன்னு கேட்டாங்க. அம்மாவும் கால் உடம்போடு சேரும் (முன் பக்கம்) இடத்தைக் காட்டினார்கள். திரும்பவும் ஒரு எக்ஸ்-ரே அப்பவும் அவங்களுக்கு ஒன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் எழுதிக்கொடுத்தார்கள். அதை எடுக்கச் சென்ற இடத்தில் மெசின் ரிப்பேர் ஆகியிருந்தது. நாங்கள் ஒரு முக்கால் மணி நேரம் காத்திருந்து பிறகு ஸ்கேன் எடுத்துச் சென்றோம். அந்த ஸ்கேனில் பார்த்தால் எங்கம்மா சொன்ன இடத்திற்கும் எலும்பு உடைந்திருந்த இடத்திற்கும் சம்பந்தமே இல்லை. அம்மா முன் பக்கத்தைக் காட்டினார்கள். ஆனால் பின் பக்கம் முதுகெலும்பு முடியும் இடத்திற்கு சற்று கீழே தள்ளி இருந்தது. நல்ல வேளை அது ஃப்ராக்சர் இல்லை. கிராக்தானாம். 6 வாரம் பெட் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

அந்த எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கச் சென்றபோது நடந்த நிகழ்ச்சிதான் என் மனதிலேயே நிற்கிறது. ஸ்கேன் மிசின் ரிப்பேர் என்று முக்கால் மணி நேரம் நிற்க வைத்தார்கள் அல்லவா? காத்திருந்தபோது ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. யாரதுன்னு பார்த்தபோது நாங்கள் நின்ற இடத்திற்கு எதிர்புறத்தில் எங்களைப்போலவே எம்ஆர்ஐ ஸ்கேனிற்காக காத்திருந்த ஒரு ஸ்ரெட்சரின் அருகிலிருந்துதான் அந்த அழுகைச் சத்தம். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண். வாய்விட்ட அழுகை. ரொம்ப சத்தமாக இல்லை. பத்தடியில் இருந்த எனக்கு தெளிவாகக் கேட்கும் அளவிற்கான அழுகை. விம்மி விம்மி அழுகிறார். அந்த அழுகைச் சத்தம் என் மனதை என்னவோ செய்தது. ஸ்டெச்சரில் இருப்பவரைப் பார்த்தேன். சற்று வயதான பெரியவர். அழுபவரின் தந்தையாக இருக்கலாம். ஸ்ரெச்சரிலேயே பலவித கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. மார்பருகே லேப்டாப் மாதிரி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. சற்று மேலே பலூன் மாதிரி நாம் மூச்சுவிட்டால் ஏறி இறங்குவதைப் போல் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. அவர் முகத்தைப்பார்த்தால் அவருக்கு நினைவின்றிக் கிடந்தார். அதற்கு மேல் அவரை என்னால் பார்க்க முடியவில்லை. மகன் கொஞ்சம் நேரம்கூட விடாமல் அழுதுகொண்டே இருந்தார்.

ஆண்கள் அழுவதைப் பார்த்ததில்லை ஆதலால் அவர் அழுதது எனக்கு வித்தியாசமாக இருந்தது. நம் ஊரில் ஆண் அழுதால் எத்தனை விதமான கிண்டல்கள் 'ஏண்டா பொம்பள மாதிரி அழற', அந்தக் கேள்வியிலேயே அசிங்கப்பட்டு அடுத்தமுறை அழுகை வந்தால் அவன் அதை அடக்கிக்கொள்ளப் பழகிக்கொள்கிறான். தன் துக்கத்தை தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்கிறான். அப்படி அடக்கி வைப்பதால் ஹார்ட் அட்டாக், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது ஒரு உணர்ச்சி அத ஏன் அடக்கி வைக்க வேண்டும். சின்னப்பிள்ளைத்தனமாக எதற்கெடுத்தாலும் அழுகச் சொல்லவில்லை. தாங்க முடியாத துயர நேரங்களில் வாய்விட்ட அழுகைதான் துயரத்தின் வடிகாலாக இருக்க முடியும். அழுகையை அடக்குவதில் என்ன கவுரவம் இருக்கிறது என்று தெரியவில்லை.

ஸ்கேன் மிசின் சரியானவுடன் அழுது கொண்டிருந்த அந்த நபரின் தந்தைக்கு முதலில் ஸ்கேன் எடுத்து அனுப்பினார்கள். அங்கிருந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரமும் விடாமல் அழுதுகொண்டிருந்தார். அவ்வளவு அழுகை அழுவதென்றால் அந்தத் தந்தை எப்பேர்ப்பட்ட தந்தையாக இருக்கு வேண்டும். அல்லது அந்த மகன் எப்பேர்ப்பட்ட மகனாக இருக்க வேண்டும். அல்லது இருவருமா?


1 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நம் ஊரில் ஆண் அழுதால் எத்தனை விதமான கிண்டல்கள் 'ஏண்டா பொம்பள மாதிரி அழற', அந்தக் கேள்வியிலேயே அசிங்கப்பட்டு அடுத்தமுறை அழுகை வந்தால் அவன் அதை அடக்கிக்கொள்ளப் பழகிக்கொள்கிறான்..


முற்றிலும் உண்மை..

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்