/* up Facebook

Jul 16, 2010

சிங்கள தலித் பௌத்தம் இருக்கிறதா?


இந்த வலைத்தளத்தில் என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையோ எதாவது ஒரு சம்பவம் பற்றி எனது சொந்த கருத்துக்களையோ பதிவு செய்யகூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சுகன் என்ற கவிஞர் சென்னையில் தமிழ் கவிஞர்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் சிங்கள் தேசிய கீதம் பாடி தன் உரையை தொடங்கினார் என்று கேள்விப்பட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் குறிப்பிட்ட கூட்டத்துக்கு அதன் ஏற்பாட்டாளர்கள் எனக்கும் என்னைப் போல பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்கள். இப்படிதான் தொடங்குகிறது அந்த அழைப்பிதழ்.
முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.

தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் தொடக்கப் புள்ளியே சிங்கள அரசின் அராஜங்களுக்கு எதிரான, ஈழத் தமிழர்களின் இன்னல்களை எடுத்துரைத்த கண்டன கவிதை போராட்டம்தான். அது டிசம்பரில் மெரினாவில் நடந்தது. பேசிய பலரும் மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட நிலையில் பேசினார்கள். சிங்கள பேரினவாதத்தை குறித்த வளர்மதியின் நாடக நிகழ்வு ஒன்றும் அன்று இருந்தது. அந்த கண்டன கவிதைப் போராட்டத்தின் நீட்சியாக பல தரப்பினரையும் ஒருங்கிணைத்து தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் தில்லியில் நாடாளுமன்றம் முன்பும் இலங்கைத் தூதரகம் முன்பும் ஒரு பெரிய போராட்டத்தை நிகழ்த்தினார்கள். சிங்கள பேரினவாததற்கு எதிராக அவர்கள் எழுப்பிய கோஷங்கள் மிகத் தீவிரமானவை என்று பின்னர் அதில் பங்கேற்ற சில நண்பர்கள் சொன்னார்கள். அந்த தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் நடத்திய ஈழத்தமிழ் கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலில்தான் சுகன் இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடியிருக்கிறார். தேசிய கீதத்தை தமிழில் பாடிய சுகன், தான் சிங்களத்தில் தலித் பௌத்த மரபில் வந்தவர் என்றும் பிரகடனப்படுத்தியிருக்கிறார். இலங்கையில் தலித் பௌத்த மரபு என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இந்தியாவில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கருவியாக செயல்படும் பௌத்தத்தையும் இலங்கையில்

தமிழர்களின் ஒடுக்குமுறைக்கு பயன்படும் பௌத்தத்தையும் ஒரே தளத்தில் வைப்பதன் மூலம் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலித் சாயம் பூசி ஒரு தவறான புரிதலை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கமாக இருக்கக்கூடும். இந்த உத்தி நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சோமிதரனும், ஜெயபாலனும் தவிர வேறு யாரு்ம சுகன் இலங்கையின் தேசிய கீதம் பாடியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையாம்.


குறிப்பு: சுகன் போன்ற புலி எதிர்ப்பாளர்கள் அவர்களது வாதங்களை மிக மோசமாக முன்வைத்தாலும், அதிலுள்ள விமர்சனங்களை புறந்தள்ளிவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது. புலிகளுக்கு நிபந்தனையற்ற அல்லது விமர்சனங்களற்ற ஆதரவை வழங்குவது நடுநிலையான யாருக்கும் சாத்தியமில்லை. ஆனால் இலங்கையெங்கும் நிலவிக்கொண்டிருக்கும் ஒரு பேரினவாத எழுச்சி சூழலில், விடுதலைப்புலிகளை தங்களது வாழ்வுக்கான அரணாக இலங்கைத் தமிழர்கள் பார்த்தார்கள் என்பதை மறுக்க முடியாது. வன்னியிலுள்ள தமிழர்களை புலிகள் கவசமாக வைத்திருந்தார்களா அல்லது மக்களே அவர்களுடன் விரும்பித் தங்கியிருந்தார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் நவம்பரில் நான் பணி நிமித்தம் கொழும்புவுக்கு சென்றிருந்த போது அங்கு ஒரு தமிழர் நடத்திய கடைக்கு எதோ பொருள் வாங்க போனேன். போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அந்த கடையை நடத்திக்கொண்டிருந்த தமிழரிடம் பேச்சுக் கொடுத்த போது வெளிநாடு போவது பற்றி போர் முடிந்த பிறகு முடிவு செய்ய வேண்டும் என்றார். “எங்களுக்கும் போருக்கும் சம்பந்தமில்லை என்று நீங்கள் சொல்லலாம். எங்களுக்கும் புலிகளுக்கும் நிச்சயமாக சம்பந்தமில்லை. ஆனால் அங்கு போர் புலிகளுக்கு பாதகமாக முடிந்துவிட்டால் இங்கே எங்களால் தொடர்ந்து தங்கியிருக்க முடியாது. சூழல் அப்படியிருக்கிறது, சொத்து இங்கு இருக்கிறது என்பதற்காகதான் புலிகளுக்கு பின்னடவு ஏற்பட்ட பிறகும் எதோ நப்பாசையில் இங்கே இருக்கிறோம்” என்றார்.

போர் முடிந்த பிறகு இலங்கைக்கு மீண்டும் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. வெள்ளவத்தையில் இருந்த அந்த தமிழரின் கடைக்கு சென்றேன். பூட்டியிருந்தது.

1 comments:

Visvan said...

சுகனுக்குத் தெரியாத இன்னொரு உண்மை இலங்கையின் தேசிய கீதத்தை இலங்கையில் வாழும் எந்தநச் சிறுபான்மையினரும் அவர்கள் தமிழர்களாலஸ்ரீனாலென்ன முஸ்லிம்களானாலென்ன, மலையகத் தமிழரானாலென்ன அவர்களது தாய் மொழியில் அதாவது தமிழில் பாட முடியாது என்பது.

சுகனுக்கு புலிகள் மேல் உள்ள கோபம் அவரை சிங்கள மக்கள் மத்தியில் சாதி இல்லையென்றெ சொல்ல வைக்கிறது.
இப்படி அவரது அறியாமைகள் ஏராளம். அவரது அறியாமைக்காகப் பரிதாபப் படலாம். அதற்கு மேல் வேறென்ன செய்வது?

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்