/* up Facebook

Jul 14, 2010

ஆண்களை வென்றெடுக்க வேண்டும்!


நீங்கள் இந்த பூமியில் பிறந்திருப்பதால், உங்கள் அடையாளமாக எதையேனும் விட்டுச்செல்லுங்கள் என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார். அந்த முனைப்புதான் இவரைப் பல தளங்களில் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையையும் அதை வழிநடத்தும் பார்வையையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் தாமரை. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கோவை-தான். எளிமையான குடும்பம், தாத்தாவுக்கு நெசவுத் தொழில். அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள் என்பதால் படிப்பதற்கான வாய்ப்பு சிறு வயதிலேயே அமைந்தது. தனது பள்ளி நூலகத்தில் இருந்து வாரம் இரண்டு புத்தகங்கள் எடுத்துவருவார் அப்பா. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட்டு மீண்டும் புத்தகம் கேட்டு நிற்கிற என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டார் அவர். சித்திரக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்னு ஆரம்பிச்சு எல்லா புத்தகங்களையும் படித்தேன். இது சரி, இது தப்புன்னு யாரும் எங்களுக்கு சொல்லித்தரலை. நல்ல கல்வி, சிறந்த ஒழுக்கம் ரெண்டும்தான் எங்களுக்கு போதிக்கப்பட்டன. இவைதான் வாழ்க்கையோட ஆதாரம்னு வளர்ந்த பிறகு புரிஞ்சுது. நான் படித்த கல்விதான் என் இன்றைய திரைப்படத்துறை வெற்றிக்கு அடித்தளம்.

வானொலியில பாடல்கள் கேட்கறதும் திரைப்படத்துக்குப் போறதும்தான் எங்களோட பொழுதுபோக்கு. இள மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துற ஆற்றல் திரைப்படத்துக்கு இருக்கு.
படிக்கும் பழக்கம் என்னை ஐந்தாம் வகுப்பிலேயே கதை எழுத வைத்தது. அது நீதி போதனை வகுப்பு. ஏதாவது ஒரு நீதிக்கதையை எழுதச் சொன்னாங்க விஜயலஷ்மி ஆசிரியை. ‘தயிர்க்காரி கண்ணம்மா’ என்ற கதையை எழுதினேன். எல்லாரோட ஏட்டையும் திருப்பித் தந்தவங்க, என் பேரை மட்டும் கூப்பிடவே இல்லை. கடைசியா என்னைக் கூப்பிட்டாங்க. ‘இவ மட்டும்தான் சொந்தமா கதை எழுதியிருக்கா. ஒரு பிழைகூட இல்லை’ன்னு என்னைப் பாராட்டி கைத்தட்டச் சொன்னாங்க. என் எழுத்துக்குக் கிடைச்ச முதல் அங்கீகாரம் அது. அந்தக் கைத்தட்டல்தான் இன்னைக்கு நிறைய விருதுகளுக்குக் காரணமா இருந்திருக்கு.
பொறியியல் முடிச்சதும் பெரிய நிறுவனத்துல வேலை கிடைச்சுது. என்னைச் சுற்றியிருந்த ஆண்கள் மத்தியில் நான் மட்டும்தான் ஒரே பெண் பொறியாளர். எனக்குக் கீழே வேலைபார்த்த பெரும்பாலானவர்கள், ஒரு பெண்ணுக்குக் கீழே வேலை பார்ப்பதை சங்கடமாகக் கருதினார்கள். அலுவல் வாழ்க்கையில் பல இடையூறுகளை அது எனக்கு ஏற்படுத்தியது.

பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்று அவளது நடத்தையைக் குறிவைக்கும் குற்றச்சாட்டு. ஏற்றுக்கொள்ள முடியாத உயரங்களுக்கு அவள் வளர்ந்தால், இந்த ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி அவளைப் பாதாளத்துக்குள் புதைத்துவிடலாம் என்பது பலரின் நினைப்பு. இதில் இருந்து தப்பிப்பதற்காகவே எந்தச் செயலையும் ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துச் செய்வேன். அந்தப் பக்குவத்தைத் தந்ததும் பொறியாளர் பணிதான்.

நான் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருந்ததால் தவறுகள் மட்டும்தான் என் கண்களுக்குப் படும். எந்தெந்த இடத்தில் எல்லாம் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அனுமானிக்கும் திறமையை என் பணி எனக்குக் கற்றுத்தந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அந்த அனுபவம்தான் பின்னாளில் என் உயர்வுக்குத் துணை நின்றது. செய்வன திருந்தச் செய் என்ற என் இயல்பான குணம் அங்கே பட்டைதீட்டப்பட்டது. நேர்மையாக, உறுதியாக இருந்தால் எதற்கும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்பது நான் கற்றுக்கொண்ட பாடங்களுள் ஒன்று.

இதற்கிடையில், நடந்த திருமணம் வெறும் கசப்பைத்தான் தந்தது. என் உணர்வுகளை மதிக்காமல் உழைப்பைச் சுரண்டியவர்களுடன் தொடர்ந்து வாழ்வதில் எனக்குச் சம்மதமில்லை. பிரச்சினைகள் பூதாகரமாகி என்னை சோர்வுறச் செய்தபோது ஒரு முடிவெடுத்து வேலையை உதறினேன். அடுத்தது மணமுறிவுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. பிறந்த வீட்டுக்குத் திரும்பிச்செல்ல விரும்பாமல் எழுத்துத் துறையில் இருக்கும் முடிவோடு சென்னைக்கு வந்தேன்.

நிறைய திரைப்பிரபலங்களைச் சந்தித்தேன். எனினும் வாய்ப்பு கிடைப்பது எளிதாக இல்லை. திரைப்படத்துறையில் வாய்ப்புக் கிடைக்க ஏதேனும் அடையாளம் அவசியம் என்பது புரிந்தது. மீண்டும் கோவைக்கே திரும்பினேன். பத்திரிகைகளுக்குக் கதை, கவிதைகள் எழுதிக் குவித்தேன். இலக்கிய வட்டத்தில் பெயர் அடிபடுமளவுக்கு வளர்ந்தேன். இந்த அடையாளத்துடன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பினேன்.

வெறும் தாமரையாக வந்தபோது தயங்கியவர்கள், கவிஞர் தாமரை என்றபோது வாய்ப்புத் தரலாமே என யோசித்தார்கள். தொடர்ச்சியான தேடுதலுக்குப் பிறகு 97இல் இயக்குனர் சீமான் படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக நிறைய அலைய வேண்டியிருந்தது. 2000இல் இயக்குனர் கௌதம் படத்தில் ‘வசீகரா’ பாடல் எனக்கான முகவரியாக அமைந்தது. வாழ்வில் நான் சந்தித்த துன்பம், கேள்வி, தேடல், விரக்தி இவற்றையெல்லாம் என் பாடல்களில் வார்த்தைகளாக வடித்தேன். என் சமூகப் பார்வைக்கு ஏற்ற பாடல்களைவிட காதலும் காதல் சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இருந்தாலும் தொடர்ந்து எழுதினேன்.
கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழில் மட்டுமே எழுதுவேன், இரட்டை அர்த்தப் பாடல்கள், ஆபாச பாடல்களுக்கெல்லாம் என் பேனா வளையாது என்பதில் இந்த நிமிடம் வரை உறுதியாக இருக்கிறேன். இதனால் பொருளாதார ரீதியாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்றாலும், என் நோக்கத்தில் நான் வென்றிருக்கிறேன். பாடலுக்கேற்ற சூழ்நிலை எதுவாக இருந்தாலும் கண்ணியமான வார்த்தைகளால் அதைக் கையாளலாம். ‘பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது, பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது’ & இதைவிடச் சிறந்த முதலிரவுப் பாடல் இருக்க முடியுமா?
மணமுறிவுக்குப் பிறகு நான் தியாகுவை மணந்துகொண்டேன். அவர் ஒரு சமூகப் போராளி. தன் கொள்கைக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாத அவரது உறுதிதான் எங்கள் திருமணத்துக்கு அடித்தளம். அவரது ‘சுவருக்குள் சித்திரங்கள்’ பத்திரிகைத் தொடர் மூலம்தான் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டேன். திரைப்படத்தில் கதாநாயகன் கொடியவனை அழித்தொழித்தால் கைதட்டிப் பாராட்டுவார்கள். நிஜ வாழ்வில் தூக்கு தண்டனை தருவார்கள் என்பதற்கு சாட்சியாக சிறையில் இருந்தார் அவர். அந்த அனுபவங்கள் பற்றிய தொடர்தான் அது. அவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைந்து அவர் சிறையில் இருந்து விடுதலை அடைந்திருந்தார். அது தெரியாமல் தொடர்ந்து அவர் சிறையில் இருப்பதாகவே நினைத்து அவருக்குக் கடிதங்கள் எழுதினேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, ‘நான் தற்போது சிறையில் இல்லை’ என்று அவரிடம் இருந்து ஒற்றை வரியில் பதில் வந்தது. விடாப்பிடியாக இருந்து அவரைச் சந்தித்தேன்.

அவரிடம் பேசப்பேசதான் முதலாளிகளுக்காகத் தன் உடம்புத் தோலையே செருப்பாகத் தைத்துப் போடும் வர்க்கம், பரம்பரை பரம்பரையாக கொத்தடிமைகளாக வேலை செய்யும் கொடுமை என சமூகத்தின் இன்னொரு பக்கம் என் கண்முன் விரிந்தது. தமிழ்த் தேசிய இயக்கம் மற்றும் சிறைப்பட்டோர் நலனுக்கான இவரது இயக்கச் செயல்பாடுகள் என்னை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றன.
எதற்காகவும் இன்னொரு உயிரை வதைக்கக் கூடாது என்பதனால் நான் அசைவமே சாப்பிட்டதில்லை. ஆனால் மனித உயிர்களைப் புழுவைவிடக் கேவலமாக நினைக்கிறது சமூகத்தின் ஆதிக்கப் போக்கு. அதற்கு எதிராகப் போராடும் என் கணவரது பணிகளில் உடனிருக்கிறேன். அவரது தாய்த் தமிழ்ப் பள்ளியின் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்கிறேன். அகதிகள் முகாமில் இருக்கும் குழந்தைகளின் கல்விக்காக உதவுகிறோம். எந்த வேலையையும் நாங்கள் வெளியே சொல்வதில்லை. சொன்னால் விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடுகிறார்கள் என்ற பெயர்தான் மிஞ்சும். சமீபத்தில் கொழும்பில் நடந்த திரைப்பட விழாவிற்கு இங்கிருக்கும் கலைஞர்கள் போகாமல் தடுத்தது எங்கள் பணிக்குக் கிடைத்த வெற்றி!

இடையில் வீட்டுப் பொறுப்பையும் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். என் மகன் சமரன் மூன்றாம் வகுப்புப் படிக்கிறான். முடிந்தவரையில் அவனுக்கானதை கவனித்துக் கொள்கிறேன். என் கணவர் தன் சமூகப் பணிகளை குறைத்துக்கொண்டு வீட்டைப் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் நான் என் பாடல் பணிகளில் சமரசம் செய்துகொள்கிறேன்.

பெண்ணியம் பேசுவதில் தவறில்லை. அதற்காக ஆண்களைத் துச்சமாக மதித்து பெண்களே உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆண்களை நாம் மதித்தால்தான் நம்மை அவர்கள் மதிப்பார்கள். ஆண்களோடு சரியான முறையில் பழகி அவர்களை வென்றெடுக்க வேண்டும். அதுதான் உண்மையான பெண்ணியத்தின் வெற்றி!

வண்டுகளின் குடைச்சலையும் வெயிலின் உக்கிரத்தையும் தாங்கி நிற்கிற மூங்கில்தான் புல்லாங்குழலாகிறது. என்னைத் துரத்தி வந்த துன்பங்களுக்கு எதிராக நான் ‘எதிர்த்துப் போராடுதல்’ என்னும் வாளைச் சுழற்றி நின்றேன். அது வெற்றிக்கான வாசல்களைத் திறந்துவிட்டது. அதில் திரும்பிப் பார்க்காமல் நடந்துகொண்டிருக்கிறேன், எழுத வேண்டிய பாடல்களோடு!’’

-பிருந்தா கோபாலன்
படங்கள்: கமல்

நன்றி - நம்தோழி

3 comments:

கண்ணகி said...

பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்று அவளது நடத்தையைக் குறிவைக்கும் குற்றச்சாட்டு. ஏற்றுக்கொள்ள முடியாத உயரங்களுக்கு அவள் வளர்ந்தால், இந்த ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி அவளைப் பாதாளத்துக்குள் புதைத்துவிடலாம் என்பது பலரின் நினைப்பு.


நேர்மையாக, உறுதியாக இருந்தால் எதற்கும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்பது நான் கற்றுக்கொண்ட பாடங்களுள் ஒன்று.

திரைப்படத்தில் கதாநாயகன் கொடியவனை அழித்தொழித்தால் கைதட்டிப் பாராட்டுவார்கள். நிஜ வாழ்வில் தூக்கு தண்டனை தருவார்கள் என்பதற்கு சாட்சியாக சிறையில் இருந்தார்

பெண்ணியம் பேசுவதில் தவறில்லை. அதற்காக ஆண்களைத் துச்சமாக மதித்து பெண்களே உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆண்களை நாம் மதித்தால்தான் நம்மை அவர்கள் மதிப்பார்கள். ஆண்களோடு சரியான முறையில் பழகி அவர்களை வென்றெடுக்க வேண்டும். அதுதான் உண்மையான பெண்ணியத்தின் வெற்றி!

வண்டுகளின் குடைச்சலையும் வெயிலின் உக்கிரத்தையும் தாங்கி நிற்கிற மூங்கில்தான் புல்லாங்குழலாகிறது. என்னைத் துரத்தி வந்த துன்பங்களுக்கு எதிராக நான் ‘எதிர்த்துப் போராடுதல்’ என்னும் வாளைச் சுழற்றி நின்றேன். அது வெற்றிக்கான வாசல்களைத் திறந்துவிட்டது. அதில் திரும்பிப் பார்க்காமல் நடந்துகொண்டிருக்கிறேன், எழுத வேண்டிய பாடல்களோடு!’’

தாமரை....உங்கள் கவிதைகள் போலவே உங்கள் கொள்கைகளும் அழகு...உங்கள் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உரம்..

வடுவூர் குமார் said...

மென்மேலும் வ‌ள‌ர‌ வாழ்த்துக்க‌ள்....தாம‌ரை.

singam said...

மென்மேலும் வ‌ள‌ர‌ வாழ்த்துக்க‌ள்.nanri

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்