/* up Facebook

Jul 3, 2010

‘நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை?’*: குட்டி ரேவதி


சில பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் மொழித்தளத்தில் நான் வாசித்து அனுபவித்த மிக முக்கியமான பெண்ணிய விவாதமாகவும் உரையாடலாகவும் மறுகா இதழில் இடம்பெற்றுள்ள த. மலர்ச்செல்வன் எடுத்திருந்த, ‘நான்கு பெண்களுடனான உரையாடலைக்’ கருதுகிறேன். இத்தனை காத்திரமாகவும் நுட்பமாகவும் பெண் மொழியை விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட ஆரோக்கியமான உரையாடல் தமிழ் மொழியில் நடவாமலேயே போனது. ஆனால் அத்தகைய தேவைக்கான ஏக்கம் இந்த உரையாடலை படித்ததும் என்னுடைய மன ஆழத்தில் பொங்கிக் கிடந்ததை உணர்ந்தேன். அதற்குக் காரணம், தமிழகத்தில் நிலவும் குழு மனப்பான்மை அல்லது பெண்கள் தேர்ந்தெடுத்து இயங்கும் தனித்த கருத்தியல் தளம் அல்லது இங்கு ஏற்பட்ட பதிப்புப் புரட்சி மற்றும் அது எழுத்தாளர்கள் மீது செலுத்தும் தனித்த அதிகாரம் அல்லது எழுத்தாளர்கள் பதிப்பகங்களின் உடைமைகளாய் ஆகிப்போனது.

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட பெண் மொழிக்கான இலக்கிய இயக்கம் என்ன ஆயிற்று, அதன் விளைவுகள் என்னென்ன என்பது இந்த விவாதத்தில் கருப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டதும் கூட இந்த விவாதத்தை என் பார்வையில் திறனாய்வு செய்யும் ஆவலையும் எழுச்சியையும் எனக்கு ஏற்படுத்தியதால் இதை எழுதுகிறேன். ஈழத்தமிழ்க் கவிஞர்கள் உருத்திரா, அனார், விஜயலெட்சுமி, சித்திரலேகா மெளனகுரு மற்றும் த. மலர்ச்செல்வன் ஆகியோர் இந்த உரையாடலில் பங்கு கொண்டிருந்திருக்கின்றனர். மலர்ச்செல்வன், உரையாடலை ஒருங்கிணைக்கவும் வழிநடத்தவும் செய்திருக்கிறார். அவ்வப்பொழுது அவர் ஒட்டு மொத்த ஆண் எழுத்தாளர்களின் சார்பாகவும், ஆண் எழுத்தாளர்களின் ஆதரவை நல்குபவராகவும் இருந்திருப்பதும் ஆரோக்கியமான விஷயமாகும்.

உருத்திரா, அனார் மற்றும் விஜயலெட்சுமி ஆகியோர் தமது பெண் எழுத்து, பெண் மொழி குறித்த நவீனப் பார்வையை முன்வைப்பதுடன் அவ்வப்பொழுது இடம் தேர்ந்து தமிழ்ப்பெண் எழுத்தையும் ஈழத் தமிழ் எழுத்தையும் ஒப்பிட்டு இவ்வுரையாடல் வழியாக ஒரு கூட்டு அசைவியக்கத்தைச் செயல்படுத்தியுள்ளனர். சித்திரலேகா, நானறிந்து அவரும் ஒரு கவிஞர். தமிழகத்துக்கு முதன்முதலாக ஈழத்தமிழ்க் கவிதையை ‘சொல்லாத சேதிகள்’ தொகுப்பின் மூலம் அறிமுகப்படுத்தியவர். இவர் இவ்வுரையாடலில் தனது விமர்சனப் பார்வையை தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதுடன் ஒரு பழமையான பார்வையை மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. இதைப் பற்றி இக்கட்டுரையின் இறுதியில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

உருத்திரா எழுப்பும் பெண் மொழியின் முக்கியமான பிரச்சனைகளைக் கீழே தொகுத்தளித்துள்ளேன்:

‘புரியாத படைப்பு என்பதால் மிகச்சிறந்ததென்றோ அடிமட்டமான வாசகனைச் சென்றடையாமல் உள்ளதால் சிறந்த படைப்பு அல்ல என்று நான் கருதலாமா?’

‘எழுதுவது, எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது இவையும் கூட பெண்மொழியின் முக்கியமான பிரச்சனைகள்.’

‘பெண் சார்ந்த பெண் குறியீடு சார்ந்த உணர்வுகளை வெளியிடத் தகுந்ததான வேறு சொற்கள் எதனையும் நாம் வைத்திருக்காத நிலையில் தான் இப்பொழுது பெண் மொழி என்று இயம்பப்படுவது பிரச்சனையாகிறது.’

‘சொற்களை தீர்மானிப்பதும் வடிவமைப்பதும் சொற்கள் யாருடையவை என்பதும் தான் பிரச்சனை.’

‘கூர்மையான அனுபவ வெளிப்பாடு தான் மொழியைப் பிரச்சனையாக்குகிறது.’

‘ஆண் பார்வையில், பெண் எழுத வரும் போதே மொழி பிரிக்கப்பட்டுவிடுகிறது.’

‘மொழி சார்ந்த பிரச்சனைக்கான எதிர்ப்புக் குரல்கள் ஒரு போதும் பெண்களிடம் இருந்து வரவில்லை. எனில் நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை?’

‘நாம் எழுதுவதற்கு தொடங்குவது என்பதே ஓர் பிரச்சனையாகவே உள்ளது.’

இந்நிலையில், ‘எழுதுவதற்கான எத்தனையோ தூண்டல்கள் உள்ளுக்குள்ளேயே அடங்கிப் போகுமே தவிர வெளியில் வராது.’ மேற்கண்டவற்றையெல்லாம் தமிழ் மொழித்தளத்தில் பெண் மொழி பற்றிய உருத்திராவின் கண்டுபிடிப்புகள் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு பொருள் பற்றி எழுதுவது, எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது என்பதில் கூட இலங்கும் அரசியலும் பின்னணியும் பெண்ணியம் குறித்தவை. ஏனெனில், உடல் உறுப்பைக் குறிக்கும் சொற்கள் குறித்த அரசியல் அவ்வாறு தான் தமிழகத்தில் திரிந்து போனது. தீவிரமான பெண்ணிய வாதிகளே கூட அத்தகைய சொற்கள் இடம்பெற்ற கவிதைகளை, ‘பாலியல் சார்ந்ததாகத்’, தான் அடையாளப் படுத்தினர். அச்சொற்களுக்குச் சமூகப் பயன்பாட்டில் வேறு வேறு அர்த்தங்கள் இருந்தும் கூட அவை பாலிமை சுமையேந்தி நின்றன. இவ்விடம் உருத்திரா குறிப்பிடும் எழுதுவது, எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது மூன்றுமே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியவை.

மேலும் அவர் கேட்பது போலவே நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை? என்பதும் மிக முக்கியமான கேள்வி. எங்கள் உடலைப் பற்றிய சொற்களை நாங்கள் பயன்படுத்தத் தடையெனில் அவையும் ஆண்களின் சொற்கள் தாம். முதலில் அத்தகைய சொற்களை அவர்களிடமிருந்து கபளீகரம் செய்வோம். அல்லது, ‘பெண் உணர்வு, குறியீடு சார்ந்த உணர்வுகளை வெளியிடத் தகுந்த வேறு சொற்களை’ நாம் கண்டடையத் தான் வேண்டும்.
அனார் எழுப்பும் கருத்துக்களாவன:

‘பெண் எழுத்தினை படைப்போரின் நியாயங்களும் அதை வாசிப்போரின் நியாயங்களும் வேறு வேறாக இருக்கின்றன.’

‘பெண் தன் உடலைக் கொண்டாடுதலும் தன் உணர்வுகளை மதிப்பதும் அவளுக்கு ஒரே சமயம் நிகழ்பவை. இது இரண்டாம் தளத்திலிருந்து பெண்ணை உயர்த்துகிறது.’

‘மொழியின் போதாமைகளிலிருந்தும் பெண்ணானவள் தன் மொழியை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றது.’

‘பெண் உறுப்புகளை ஆண்கள் குறிப்பிடலாம். ஆனால் பெண்கள் குறிப்பிடக் கூடாது’’
‘என்னுடைய உணர்வுகளை நான் வெளியிடும்போது அது வேறுபட்ட ஆயிரம் பெண்களின் உணர்வுகளாகத் தான் இருக்கும்’

எழுத்தைத் தனது ஊடகமாகப் பயன்படுத்தும் ஒரு பெண் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது அது எழுத்தையும் வார்த்தைகளையும் கண்டடையாத ஆயிரமாயிரம் பெண்களின் உணர்வு அழுத்தத்தையும் பிரதிபலிப்பானது. அதே மாதிரி, மொழியின் போதாமையை உணர்ந்து தனது உணர்வு வெளிப்பாட்டுக்கு ஒத்த சொற்களை உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் இந்த பெண் மொழிப் பயணம் அமையக்கூடும், என்று ஒன்றோடொன்று, நடப்பியலில் பெண்மொழிக்கான வாதங்களை முன்வைக்கும் அனார், படைப்பாளியின் உள்ளத்தில் எழுத்து எழுச்சியுறும் நிலையிலிருந்து படைப்பாக மாறிய பின்னர் அதன் மீது ஏற்றப்படும் நியாயங்களையும் கூறுகிறார்.

‘நிர்ப்பந்தமாக சேர்க்கப்படுகின்ற சொற்கள் காலப்போக்கில் பழமையடைந்து விடுகின்றது. சொற்கள் தேவைப்பாடுகள் கருதித்தான் பயன்படுத்தப்படுகின்றன.’ மற்றும், ’இது ஒட்டு மொத்தமான மொழி சார்ந்த பிரச்சனையன்று. ஒரு வட்டத்தினரின் பார்வைப் போதாமையே முழு தொகுதியினரின் மீதும் ஏற்றிக் கூறப்படுகிறது. இது பார்வை சார்ந்த பிரச்சனையே அன்றி மொழி சார்ந்த பிரச்சனையன்று.’ என்ற விஜயலெட்சுமியின் கூற்று, உண்மையில் இந்த உடல் உறுப்பு பற்றிய சொற்கள் எந்தச் சிந்தனையின் அடிப்படையில் மொழிப் பிரச்சனையானது என்பதற்கான ஓர் அறிவார்ந்த விவாதமாகும்.

சித்திரலேகாவின் விமர்சனங்களுக்கு வருவோம். கலாவின் கோணேஸ்வரிகள் கவிதையில் இடம்பெற்றுள்ள, ‘எமது சிங்களச் சகோதரிகளே உங்கள் யோனிகளைத் திறந்து வையுங்கள்!’ என்னும் விளிப்பு இனவாதத்தன்மை மிகுந்த வரி என்று இவரால் மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நிகழ்ந்துள்ள சொல்லுக்கான கோபத்தையும் ஈழத்தில் நிகழ்ந்துள்ள பொருளுக்கான கோபத்தையும் ஒப்புமைப்படுத்த முடியாது என்றும் கூறுகிறார்.

மேலும், மேற்குறிப்பிட்டுள்ள விஷயத்தை அவர் கூறியுள்ளது மாதிரி பெண்ணிய அரசியல் என்றோ பெண்ணிய நிலைப்பாடு தொடர்பான பிரச்சனை என்றோ தனிமைப்படுத்த முடியாது என்று தோன்றுகிறது. இம்மாதிரியான முடிவுகள் பெண் என்ற ஒற்றை அரசியல் அடையாளம் என்பதே நடுநிலையான பெண்ணிய தீர்வுகளுக்குப் போதுமானவை என்ற எண்ணத்தினால் எழுபவை. இன்று பெண்கள் வேறு வேறு சூழல் பின்னணியிலிருந்து எழுத வருகின்றனர். பல அரசியல் நிலைமைகளில் பெண்களே ஆணாதிக்க அரசியலை மற்ற ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது செலுத்தி வருகின்றனர். இதனால் பெண் என்ற ஒற்றை அடையாள அரசியல் நிலை மட்டுமே பெண்ணியம் முன்னெடுக்கப் போதுமானது அன்று.

‘கலாவின் கவிதைத் தொடர்பான பிரச்சனை மொழி தொடர்பான பிரச்சனையன்று.’

இவ்வாறு தான் தமிழகத்திலும் பெண்ணியவாதிகள் எனப்பட்டோர், கவிதையுடன் தமக்கான தனித்த உறவை ஏற்படுத்திக் கொண்ட, அதன் சமூக, இலக்கிய அரசியல் பின்னணியை உணர்ந்த ஒரு சிலரைத் தவிர, இம்மாதிரியான கவிதைகளுக்கும் பெண்ணியத்திற்கும் சம்பந்தமில்லை என்கிற ரீதியாய் இதை ஒதுக்கி வைத்து விட்டு வாளாயிருந்தனர்.

அவ்வாறே சித்திரலேகா முழுவிவாதத்திலும் இரு முறைகள் குட்டி ரேவதி வகையறா தவிர வேறு கவிஞர்களும் இருக்கிறார்கள் என்கிற ரீதியில் அழுத்தம் கொடுத்து பெண் மொழியை விமர்சிக்கிறார். நாங்களும் பிற கவிஞர்களே தமிழகத்தில் இல்லை என்றோ அவர்கள் எழுதுவது கவிதையே இல்லை என்றோ எங்குமே கூறவில்லை. ஒரு குறிப்பிட்ட வகைக் கவிதைகளாய் இவை அடையாளப்படுத்தப் படும் போது அதன் அரசியலை விளக்கப்படுத்திப் பேசாதவர்களும் ஒதுங்கி நின்ற பெண் கவிஞர்களும் உண்டு.

மேலும் குறிப்பிட்ட இக்கவிதைகளின் அரசியல் பிரச்சனைப் பற்றிப் பேசும் சூழ்நிலையில் அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படுவதை அவர்களே விரும்பாமல் இருக்கலாம். ‘எழுதுவது, எழுதாமல் விடுவது, ஈடுகொடுக்க முடியாமல் போவது இவையும் கூட பெண்மொழியின் முக்கியமான பிரச்சனைகள்’, என்ற விஜயலெட்சுமியின் கூற்றை இங்கு நினைவுப்படுத்தவும் பொருத்திப்பார்க்கவும் வேண்டுகிறேன். தமிழ்ப் பொதுக்கவிதை என்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ள படிக்கக்கூடியதாகவும் இருக்கின்ற கவிதைகளை எழுதும் இளம்பிறை, பெருந்தேவி, ரிஷி போன்ற கவிஞர்களுக்கு முதன்மையான இடம் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் என்னிடமில்லை.

மேலும், இவ்வாறு சொற்களைப் பயன்படுத்தும் கருத்து நிலை என்பதே ஆண் மனோபாவத்தை ‘அகப்படுத்திய’ பார்வை என்று சித்திரலேகா குறிப்பிட்டிருப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். அது முதலில் ஆண்களுக்கே மட்டுமேயான மொழி என்று நீங்களும் ஏன் கருதுகிறீர்கள்? ‘ஆண் மனோபாவம் தான் இத்தகைய சொற்களைக் கூறுகிறது’ என்ற உங்கள் சிந்தனையே மரபார்ந்த வழி வந்ததாகிறது. அதை ஆண்களுக்கான சொல்லாகவும் மொழியாகவும் மட்டுமே கருதப் போய்த் தான் அச்சொல் பயன்படுத்துவதில் பிரச்சனையாகிறது. அவ்வாறே அது ஆண்வயப்பட்ட ஆண் மனோபாவம் மிக்க சொல் என்று நாம் கருதினால், அந்தச் சொல்லை வலிந்து பயன்படுத்துவதன் வழி அந்தச் சொல்லுக்கான ஒட்டுமொத்த உரிமையையும், அதிகாரத்தையும் நாம் பறித்துக் கொள்வோம். அந்தச் சொல்லை நாம் பயன்படுத்தும் பொருள் நியதி கருதி அதன் அர்த்தப் பயன்பாடுகளை மாற்றிப் மொழிப் பண்பாட்டையும் மாற்றலாம்.

உதாரணத்திற்கு, ‘முலைகள்’ ‘யோனி’ என்பது வசைப் பயன்பாடாக இருந்த நிலை இன்று மாறி அது எம் எழுத்தின் வழியாக உடலின் கொண்டாட்டத்துடன் உணர்வுடன் வினையுடன் அர்த்தமாக்கிப் பயன்படுத்தப்படும் கருத்தியல் நிலை ஏற்பட்டிருப்பதைக் குறிப்பிடலாம்.

ஆகவே இவர்கள் யாருமே சித்திரலேகா கூறியிருப்பதைப் போல முலைகளை மட்டுமே கவிதைகளாக எழுதிக் கொண்டிருக்கவில்லை. எங்களின் முதன்மையான வேலையும் அது மட்டுமேயன்று. எங்கள் பணிகளில் பெண்ணுடல் உறுப்புகள் பற்றிய வார்த்தைகளைச் சிதைப்பதும் ஆக்குவதும் புதுப்பிப்பதும் முக்கியமானவையே. இவர் இந்தக் கவிஞர்களின் எந்த ஒரு கவிதைத் தொகுப்பையுமே முழுமையாக வாசிக்காது விட்டிருக்கலாம் என்று சந்தேகமெழும்புகிறது. அதுமட்டுமன்றி, சித்திரலேகா தனது பதிலின் போது, பாலுணர்வு சார்ந்த விஷயங்களை மட்டுமே குட்டி ரேவதியும் மாலதி மைத்ரியும் எழுதிவருவது பெண்மொழியாகாது என்றும் குறிப்பிடுகின்றார். அது உண்மையன்று என்பதை இவ்விருவரின் கவிதைகளைப் படித்தவர்கள் அறிவர். மேலும், வேறு வேறு காலங்களில் வேறு வேறு பெண்களின் பிரச்சனைகள் மேலோங்கி விவாத முன்னிலைக்கு வருகின்றன. அப்போது அவை பரந்த அளவில் உரையாடலாகித் தீர்வோ தெளிவோ பெறுகின்றன. தமிழ்ச்சூழலில் ஏற்கெனவே பெண்கள் எழுதிக் கொண்டு தாம் இருந்தனர், சித்திர லேகா குறிப்பிடும்படியான ‘வேறு பெண் அனுபவங்களை’. ஒவ்வொரு வகையான பெண்ணிய எழுச்சியும் வெவ்வேறு கால கட்டங்களில் தலையெடுக்கும் என்பது அவர் அறியாததா என்ன?

தற்போதைய நிலையில் பாலியல் அரசியலின் நிறைய விடயங்கள் பரவலாக ஊக்கம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அரவாணிகள் பெற்றிருக்கும் சமூக, அரசியல் அங்கீகாரம் பெரிய அளவிலானது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. வரலாற்றிலிருந்து காந்தி போன்ற மானுடர்கள் பேசிய உடலரசியலும் இன்றைய அரசியல் நிலைப்பாடுகளுடன் பொருத்திப் பார்த்து விவாதிக்கப்படுகின்றன. அதற்கு இலக்கியத்தில் நடைபெற்ற கருத்தியல் பரிணாமங்களும் சில பல சொற்பிரயோகங்களை பெண் கவிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கியதும் அவை சமூகத்தில் மூடி வைக்கப்பட்டிருந்த வேறு விஷயங்களைத் தட்டியெழுப்பியதும் மிக முக்கியக் காரணங்கள். அவர் போன்று பெண்ணிய வாதிகளும் தமிழ்த் தளத்தில் கருத்தைத் தவறாகவோ தமக்குத் தோன்றிய விதமாகவோ எழுப்பப் போய்த்தான் அது ஒரு முழுபடித்தான விவாதமாக விரிய முடியாமல் போயிற்று என்று எண்ணுகிறேன்.

இறுதியாக, தமிழகத்திலும் ஈழத்திலும் பெண்களிடையே நிலவும் ஒற்றுமை என்பது மீண்டும் மீண்டும் ஒப்பிட்டுப் பார்த்துப் பேசப்படுகிறது. இதைப் பற்றிய எனது கருத்து என்னவெனில் இதைப் பெரிதும் தீர்மானிப்பது நாம் எடுத்துக் கொள்ளும் அரசியல் பொருள் தான். அப்படிப் பார்க்கும் போது இப்படிக் குழுவாக வேறுபட்டு நின்று இயங்குவதை நான் பெரிதும் ஆமோதிக்கிறேன். பெண்களுக்கிடையே பெண் என்ற ஒற்றுமையைத் தவிர வேறொன்றும் இல்லை. மற்ற படி, சாதி, இனம், பண்பாடு, அரசியல் என எல்லாவற்றாலும் பிரிக்கப்பட்டு பிளவுபடுத்தப்பட்டுத் தான் இருக்கிறாள். இந்த வேறுபாடுகளை, அவற்றின் அரசியலை எல்லாம் பேசாமல் பெண் ஒற்றுமை என்பது சாத்தியமுமில்லை. அதற்கான அவசியமுமில்லை. வெறுமனே பெண் என்று பேசிப் பேசிச் செய்த காரியங்கள் தமிழகத்தில் மிகக் குறைவு. வேறுபட்ட சமூகத்தட்டுகளில் இருக்கும் பெண்களின் பிரச்சனைகள் வேறு வேறாக இருக்கும் போது அவற்றிற்குப் பணியாற்றும் முறையும் மாறுபட்டு தான் இருக்கும். இது தான் இன்றைய பெண்ணிய அரசியலைச் சரியாகப் புரிந்து கொள்வதன் தொடக்கமாக இருக்கும்.

*தலைப்பு: கவிஞர் உருத்திரா உரையாடலில் பயன்படுத்திய வரி.

நன்றி - இனியொரு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்