/* up Facebook

Jul 31, 2010

குருதியுறையும் தண்டகாரண்யா - பொன்னிலா


(இகட்டுரை எழுதி முடிக்கப்பட்ட பின் மேற்குவங்கத்தின் மிட்னாபூரில் இருந்தும் ஜார்கண்டில் கிகுந்தி மாவட்ட காடுகளில் இருந்தும் வருகிற செய்திகள் இந்தியா தன் சொந்த்க் குடிகள் மீதான் போரை துவங்கி விட்டதை முன்னறிவிக்கின்றன. வன்னி மக்கள் மீது வீசக் கொடுத்த பேரழிவு ஆயுதங்களை இப்போது தன் சொந்தக் குடிகள் மீதே பயன்படுத்தத் துவங்கியிருகிறது இந்தியா. இனி வரும் மாதங்களில் பெரும் ரத்தக்களரியை நடத்தி முடிப்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள் அவர்கள்)

சிதம்பரம் வாயில் தவழும் சைவத் தமிழைக் கேட்கக் கேட்க இனிக்கும். பிசகில்லாத மொழி நடையில் தூய தமிழாய் வந்து விழுகிற வார்த்தைகளும் அவர் தும்பைப் பூ நிறத்தில் உடுத்தியிருக்கும் கதர்ச் சட்டையின் வெண்மை போனறதுதான்.ஆனால் ஈழப் படுகொலைகளில் அவர் பேசிய வார்த்தைகளின் எச்சில் ஈரம் காய்வதற்குள் நடத்தி முடித்த கொலை பாதகம் நினைவிலிருந்து அகல்வதற்குள், காஷ்மீரிலும் மத்திய இந்தியாவிலும் ரத்த தாண்டவத்தைத் துவங்கும் வேட்டையை துவங்கி விட்டார்கள். ஒரு பக்கம் போரையும் இன்னொரு பக்கம் வெள்ளை முகத்தையும் காட்டும் இந்த மனிதர். இப்போது பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போவதாகப் பேசுகிறார். அச்சமாக இருக்கிறது.அவர்கள் எப்போதெல்லாம் முன்னேற்ற, என்ற சொல்லை பிரயோகிக்கிறார்களோ அப்போதெல்லாம் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படும் அனுபவத்தை நாம் காண்கிற நிலையில் மத்திய இந்தியாவின் லால்கர் முதல் சர்ஜாகர் வரை பழங்குடிகளை அமைதியான முறையில் கொன்றொழித்து விடுவார்களோ என்று நாம் அஞ்ச வேண்டியிருக்கிறது.மாவோயிஸ்டுகளின் சமாதான முன்னெடுப்புகளை இவர்கள் நடத்திய இரண்டு கொலைகள் சீர்குலைத்திருக்கிறது. இந்த மனிதரின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டினார் சுவாமியும் சமூக சேவகருமான அக்னிவேஷ். இந்திய புரட்சிகர இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சிக்குரி ராஜ்குமாரையும் பத்திரிகையாளர் ஹேமச் சந்திர பாண்டேயையும் போலி என்கவுண்டரில் கொன்றதன் மூலம் தண்டகாரண்யா போரில் உறுதியாக இருக்கிறோம் என்பதை இந்தியா மீண்டும் ஒரு முறை நீருபித்திருக்கிறது.

சுவாமி அக்னிவேஷின் வாக்குமூலம்.
சுவாமி அக்னிவேஷ் உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கேட்டுக் கொண்டதன் பேரில் மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய அரசுக்குமிடையில் நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டவர். சிக்குரி ராஜ்குமாரும், ஹேமச்சந்திர பாண்டேயும் கொல்லப்பட்ட பின்னர், அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான அவரின் நம்பிக்கைகள் பெருமளவு குலைந்து விட்டது. அவர் சிதம்பரத்தின் வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். சுவாமியின் நீண்ட நேர்காணலை zee news.com வெளியிட்டுள்ளது. தோழர்கள் கொல்லப்பட்டது, அமைதி முயர்ச்சி தொடர்பாக அவரது நேர்காணலின் சுருக்கம்.

சிக்குரி ராஜ்குமாரும், ஊடகவியளார் ஹேமச்சந்திர பாண்டேவும் கொல்லப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

இதில் என்னவிதமான கருத்தை நான் சொல்லி விட முடியும். மாவோயிஸ்டுகளுக்கும், அரசுக்குமிடையே சமாதானப் பேச்சுவார்த்தைக்கான மீடியேட்டராக நான் இருந்தேன். அமைதி முயர்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ராஜ்குமாரையும் பாண்டேயையும், கொன்று விட்டார்கள். மக்களும் சரி மாவோயிஸ்டுகளும் சரி இந்த இருவரும் ஆந்திர போலீசால் கொல்லப்பட்டதாகத்தான் சொல்கிறார்கள். இக்கொலைகள் போலி என்கவுண்டர் என்று மக்கள் திடமாக நம்புகிறார்கள். நானும் இதை கொலை என்றே நினைக்கிறேன். இது தொடர்பாக நான் சமீபத்தில் ப. சிதம்பரத்தைச் சந்தித்தேன். ஏன் இப்படிச் செய்து விட்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ”எனக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் ஆந்திர அரசைப் போய் கேட்டுக் கொள்ளுங்கள். எனக்கு எதுவுமே தெரியாது. என்றார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் முதல் நடவடிக்கையாகவும் முன்னணி நடவடிக்கையாகவும் உள்ள நகசல் ஒழிப்புப் போர் பற்றி கவனம் கொள்ளும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அந்த பதில் என்னை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.

சமாதானம் தொடர்பாக என்ன மாதிரியான உரையாடல் நடந்தது. மாவோயிஸ்டுகள் அமைதி முயர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்கள்?

இந்த வருடம் (2010) மே&11&ஆம் தியதி சிதம்பரம் ஒரு கடிதம் கொடுத்தார். அதை நான் மாவோயிஸ்டுகளுக்குக் கொடுத்தேன். மே மாதம் 31ஆம் தியதி மாவோயிஸ்டுகளிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அக்கடிதத்தில் நாங்களும் சமாதானத்தை விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொள்கிறோம். அதற்கு வசதியாக எங்கள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் நீடிக்க விரும்புகிறோம் என்று மாவோயிஸ்டுகள் கொடுத்தனுப்பிய இரண்டரை பக்க கடிதம் மிகுந்த நம்பிக்கையளிக்கும் படி இருந்தது. நான் அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு சிதம்பரத்தைப் பார்க்கச் சென்றேன். கடிதத்தைப் பார்த்து விட்டு இதில் பேச்சுவார்த்தைக்கான தேதியோ யுத்த நிறுத்தத்திற்கான தேதியோ குறிப்பிடப்பட வில்லையே, நான் உயரதிகாரிகளுடன் பேச தேதி இருந்தால்தான் வசதியாக இருக்கும் என்றார். அவரே மூன்று தியதிகளைக் குறித்துக் கொடுக்க தையும் நான் மாவோயிஸ்டுகளிடம் தெரிவித்தேன். அது தொடர்பாக ஆலோசித்து விட்டுச் சொல்வதாக அவர்கள் சொல்ல அதற்குள்தான் இருவரைக் கொன்று சூழலை மோசமாக்கி விட்டார்கள்.

ஜனநாயகத்தில் பங்கேற்போம் என்று மாவோயிஸ்டுகள் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு வர சம்மதித்து விட்டார்களா?

தேர்தல் அரசியலுக்கு வருவதாக அவர்கள் சொல்லவில்லை. அவர்களின் கஷ்டங்களையும், மக்களின் கஷ்டங்களையும் சமாதானமான வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்.

அவர்கள் இராணுவத்தினரையும் மக்களையும் கொன்றிருக்கிறார்களே?

அவர்கள் கடைசியாக எழுதியிருக்கும் கடிதத்திலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்படவில்லை. எங்களைத் தேடி வந்து எங்களுடைய பகுதிகளுக்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் போது மட்டுமே நாங்கள் பாதுகாப்பிற்காக சுடுகிறோம். ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என்றும் அந்த மக்களுக்காக நாங்கள் வருந்துகிறோம் அவர்களுக்கு முறையான நட்ட ஈட்டைக் கொடுங்கள் என்கிறார்கள். மேலும் சட்டீஸ்கர் தாக்குதலில் கொல்லபப்ட்ட சி.ஆர்.பி.எப்ஃ வீரர்கள் தொடர்பாக வருத்தம் தெரிவித்து தோழர் உசந்தி மத்திய அரசுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். என்னைப் பொறுத்தவரையில் வன்முறையை யார் செய்தாலும் நான் ஆதரிக்க மாட்டேன். துப்பாக்கி முனையில் மக்களின் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் மனப்பூர்வமாகவே இவைகளைப் பேசுகிறார்கள். நல்லெண்ண நடவடிக்கையாத்தான் இவைகளைப் பார்க்க வேண்டும்.

மாவோயிஸ்டுகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

பழங்குடி மக்களின் நில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்பாக்கிறார்கள்.
அரசு நிஜமாகவே பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது நாடகம் ஆடுகிறதா?
நீங்கள் சரியான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறீர்கள். எனக்கே அந்த சந்தேகம் இருக்கிறது. ராஜ்குமார் கொலை தொடர்பாக சிதம்பரத்திடம் நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலும் சரி சமாதானம் ஒன்றை உருவாக்கும் முயர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே ராஜ்குமார், பாண்டேவைக் கொன்றதும் சரி நான் குழம்பிப் போயிருக்கிறேன்.

மாவோயிஸ்டுகளையும் பழங்குடிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே அப்பகுதியில் வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என்பதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

ஒரு பகுதியில் முன்னேற்றத்தைக் கொண்டு வர அப்பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி விட்டுதான் அப்பகுதியில் வளர்ச்சியைக் கொண்டுவரவேண்டும் என்றில்லை. அப்படி மக்களை வெளியேற்றி வளர்ச்சியைக் கொண்டு வரவும் முடியாது. மாறாக மக்களின் வளர்ச்சிதான் அந்தப் பகுதியின் வளர்ச்சி. மக்களின் முன்னேற்றம்தான் அந்தப் பகுதியின் முன்னேற்றம். அவர்களின் பூர்வீக நிலங்களின் உரிமை அவர்களுக்கு வேண்டுமென்று நினைக்கிறார்கள் இதில் என்ன தவறு? அவர்களின் நிலங்களை அபகரித்து மக்களை அப்புறப்படுத்தி விட்டு எப்படி வளர்ச்சியைக் கொண்டு வரமுடியும் அந்த வளர்ச்சி யாருக்கானது? 1948 – ல் -பக்காரா அணையைக் கடிட்னார்கள். அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பல்லாயிரம் ப்ழங்குடி மக்களின் வாரிசுகளும் சந்ததிகளும் இன்னமும் நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது போல தெஹ்ரி டேம் , நர்மதா டேம் எல்லாம் வளர்ச்சிக்காக வந்தவைதான் அந்த மக்கள் என்ன ஆனார்கள்? ரூர்கேலா, பெக்காரோ, ஆகியவை எலலாமே வளர்ச்சியின் பெயரால் வந்தவைதான் இவைகள் மக்களை வஞ்சிக்கவில்லையா? ஆகவே மக்களை அப்புறப்படுத்தி விட்டு வளர்ச்சியைக் கொண்டு வருவது என்பதை நான் ஆதரிக்கவில்லை.

மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை வைத்திருக்கும் போது அரசும் ஆயுதம் கொண்டுதானே தாக்கும்?

நீங்கள் ஒரு பொதுப் புத்தியில் இருந்து கொண்டு பொது ஜன மன நிலையில் இருந்து பேசுகிறீர்கள். பாதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலையில் இருந்து இந்தப் பிரச்சனையைப் பார்க்க வேண்டும். மாவோயிஸ்டுகளை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். அது மக்களின் கோபத்தை அதிகரிக்கிறது. அதனால்தான் மக்கள் அதிகளவில் மாவோயிஸ்டுகளோடு சேர்கிறார்கள். மற்றபடி நான் காந்தியின் சீடன் அமைதி வழியில்தான் இதைத் தீர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உடையவன். பிரச்சனையில் வேரைக் கண்டு பிடித்து அமைதி வழியில் அதைச் சரிசெய்ய வேண்டுமே தவிற சுட்டுக் கொல்வதோ வன்முறை செய்வதோ பிரச்சனைக்குத் தீர்வாகாது.

மாவோயிஸ்ட் பிரச்சனைக்கு என்ன தீர்வு?

சமாதானம் வரவேண்டும். இருவருமே பேச வேண்டும். இதற்கு மேலும் உயிர்களை நாம் இழக்கக் கூடாது.

ஆஸாத் (ராஜ்குமார்) இறந்த பிறகு மாவோயிஸ்ட்டுகளுடனான உங்கள் பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது?

ஆசாத்தின் மரணம் சமாதான முயர்ச்சிகளைக் குழப்பி விட்டது. ஆசாத்தின் கொலையைக் கண்டித்து மாவோயிஸ்டுகள் பந்த் அறிவித்தார்கள். பந்தின் போது மிகக் குறைந்த அளவில்தான் வன்முறை நடந்தது. ஆக அவர்கள் இன்னும் பேச்சுவார்த்தைக்கு வர விரும்புவதைத்தான் இது காட்டுகிறது என்கிறார் சுவாமி அக்னிவேஷ்.

அமைதி என்பது புதை குழியா?

மாப்பிளாவில், பூம்கல்லில், தெபக்காவில், தெலுங்கானா கிளர்ச்சியில் என்று நூற்றாண்டுகால போராட்ட வரலாறுகளாலும் ஏராளமான விவசாயிகளின் உயிர்த்தியாகத்தாலும் வீரம் செறிந்த போராட்டங்களாலும் இந்தியச் சமூகங்கள் பெயரளவுக்கேனும் ஒரு சில உரிமைகளைப் பெற்றிருக்கின்றன. பெரிய ஆபத்துகளை எதிர்கொள்ளும் ஆளும் வர்க்கங்கள் இழப்புகளை கணக்கில் கொண்டும் தாங்கள் விரும்புகிற சமூக அமைப்பிற்கு பங்கம் வராமல் இருக்கவும் நிலப்பகிர்வு, ஆரம்பக் கல்வி, மானியங்கள், போன்றவற்றை மிக மிகக் குறைந்த அளவில் கொடுத்து வருகின்றன. தனியார் மூலதனங்களின் குவியல், தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள், இவர்களின் தேவைகளுக்காக வடிவமைக்கப்படும் இன்றைய இந்தியாவில் இந்த உரிமைகளை இந்தியச் சமூகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதை நாம் காண்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரேஷன் அட்டைகளைக் கூட பறித்து விடும் திட்டங்களை வித விதமான தந்திரங்களோடு அரசுகள் செய்து வருவதை நாம் பார்க்கிறோம். முப்போக விளைச்சலையும் இழந்த காவிரி டெல்டா விவசாயிகள் ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் நட்ட ஈடு கேட்கிறார்கள். பத்தாயிரம் கேட்டால் ஐந்தாயிரமாவது கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். ஒட்டு மொத்த இந்திய வளமும் ஏகாதிபத்திய கொள்ளை லாப வெறிக்கு பலியாக்கப்படுகிற சூழலில் அதற்கு எதிரான பரந்த மக்கள் திரள் எதிர்ப்பு வடிவமாகவே நாம் மத்திய இந்திய பழங்குடி மக்களின் போராட்டங்களைக் காண்கிறோம்.
சிகப்புத் தீவீரவாதம், அவர்கள் மக்களைக் கொல்கிறவர்கள், அப்பாவிகளை வேட்டையாடுகிறவர்கள் என்று தொடர்ந்து பல மாதங்களாக இந்திய ஊடகங்கள் கூச்சலிட்டு வந்தன. நாம் நமது தலைவர்கள் என்று பார்த்தவர்கள் எல்லாம் மாவோயிஸ்டுகளை ஒழித்துக் கட்டும் கடமையை தேசீய வெறியாக கட்டமைக்க முயன்றார்கள்.ஒரு வேளை கார்கில் போருக்கு நிதி திரட்டி தடித்தனமாக இந்திய,பாகிஸ்தான் மக்கள் மீது திணிக்கப்பட்ட போர் ஒன்றிர்கு நிதி திரட்டி மக்களை தேசிய வெறியில் திரட்டியது போல மாவோயிஸ்ட் அழிப்பு என்னும் பெயரில் மக்களை அணி திரட்டும் ஆபத்தும் அதனூடாக ஊடகங்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாயை அடைத்து பெரும் ரத்தக் களரியை தேசியப் பெருமிதமாக கட்டி எழுப்பி விடும் ஆபத்தும் இதில் இருக்கிறது. ஆக முழு அளவிலான விமானத் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த சுழலை பின்தளத்தில் உருவாக்கிக் கொண்டு சி.ஆர்.பி.எப்ஃ, ஸ்பெஷல் கமாண்டோ போர்ஸ், ஆந்திர சிறப்பு அதிரடிப்படை, இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, என பல படைகளையும் ஒருங்கிணைத்து இஸ்ரேலின் மொசாட்டிடம் பயிற்சி பெற வைத்து நவீன போர் முறைக்கு தயார் படுத்தி களமிரக்கி இருக்கிறது இந்திய அரசு. பழங்குடி மக்களின் வளர்ச்சிக்கான சமூக நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டே அடர்ந்த காடுகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படை முகாம்களை விலக்கிக் கொள்வதும் அவர்களை நகரங்களை நோக்கி பின் வாங்கச் செய்வதும் முழு அளவிலான போர் ஒத்திகை போலத் தெரிகிறது. இன்றைய தேதியில் பல பத்தாயிரம் போர் வீரர்களையோ, ஆளணிப்படைகளையோ களமிரக்கத் தேவையில்லை மக்களையும் மரங்களையும் சேர்த்து எரிய விடும் பாஸ்பரஸ் குண்டுகளும், ஆக்சிஜனைக் கொன்று விடும் க்ளஸ்டர் குண்டுகளுமே போதுமானது. ஆளில்லா உளவு விமானத்தின் துணையோடு மிக நவீன முறையிலான கொடூர உத்திகளைக் கொண்ட வன்னிப் போரின் முன்னுதாரணங்களோடு தண்டகாரண்யா மீது பாயக் காத்திருக்கிறது மன்மோகன், சோனியா, சிதம்பரம் படைகள், தண்டகாரண்யாவில் படர்ந்துள்ள சிகப்புத் தீவீரவாதத்தை ஒழித்துக் கட்ட மேக்சிமம் நான்கு ஆண்டுகள்…… என்கிறார்கள். நண்பர்களே நான்காண்டுகள் கூட பேரழிவு ஆயுதங்களுக்குத் தேவைப்படுமா? என்று தெரியவில்லை. வன்னியில் அழித்ததைப் போல தங்களின் வசிப்பிடத்தை விட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு முகாம்களுக்குள் வீசப்பட்டதைப் போல மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களும் வீசப்பட்டு விடுவார்கள் என்றே தோன்றுகிறது.லால்கர் இயக்கத்தை ஒட்டி அதன் பின்னர் உருவாக்கப்பட்ட முகாம்களே இன்னும் விலக்கிக் கொள்ளப்படாத நிலையில் ஒவ்வொரு பழங்குடி கிராமங்களையுமே ஒரு முகாமாக மாற்றி அதை சல்வார்ஜூடும் படைகளிடம் ஒப்படைக்கிறார் சிதம்பரம். புலிகளின் இராணுவத் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட மாவோயிஸ்டுகள் நிரந்தர மோதல் போக்கும் , முழு அளவிலான இராணுவ நடவடிக்கையும் பாரிய பின்னடைவுகளை உருவாக்கலாம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். தோழர் கோபால்ஜி ஊடகவியலாளர் ஜேன் மிர்தாலுக்கு வழங்கிய நேர்காணலில் ” பொதுவாக மக்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் யருடனும் ஆயுத மோதலோ வன்முறையோ தேவையில்லை. அவர்கள் எதிரிகளைத் தற்காத்துக் கொள்வதற்கும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே போராடுகிறோம். இன்றைய போராட்டத்தோடு ஒப்பிடும் போது குறைவான நிலப்பரப்பில் நடத்திய தெலுங்கானா கிளர்ச்சியில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தோடு இந்தப் போரை சந்திக்கிறோம். அனைத்து சாத்தியங்களையும் கொண்ட இந்த யுத்தத்தில் சிறிய இடை அமைதியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது கொஞ்சம் நீண்டகால அமைதியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லதுதான்” என்கிறார் கோபாஜி. ஆக வாசல் வரை வந்து ஏவக் காத்திருக்கும் வேட்டைக்காரர்களின் அனுபவங்களை அவர்கள் மக்கள் நலனில் இருந்து யோசிக்கிறார்கள். ஆனால் ஜிண்டாலுக்கும், எஸ்ஸாருக்கும் தேவையான கனிம வளங்கள் புதைந்திருக்கும் நிலங்களைக் காக்க சமாதானமாகவோ, வன்முறை வழியிலோ முயன்றால் அதை எப்படி சிதம்பரம் அனுமதிப்பார். ஆக அமைதியை புதை குழியாக்கும் எல்லா சாத்தியங்களையும் இவர்களே உருவாக்குகிறார்கள். அதன் முன்னுதாரணம்தான் தோழர் சிக்குரி ராஜ்குமார் கொலை.

தோழர் ஆசாத் என்னும் சிக்குரி ராஜ்குமார்.

தோழர் ஆசாத் என்றழைக்கப்படுகிற சிக்குரி ராஜேந்திரன் இந்திய மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழர். ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் மிக வசதியான குடும்பத்தில் பிறந்து கல்லூரி நாட்களில் புரட்சிகர இயக்கத்திற்கு வந்தவர். கெமிக்கல் என்ஜினியரிங் முடித்தவர். ஆந்திராவின் மாணவர் இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்த தோழர் ராஜ்குமார் பின்னர் மக்கள் யுத்தக் குழுவில் இணைந்தார். கட்சியின் விசாகப்பட்டின மாவட்ட கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்தியா முழுக்க பல்வேறு முக்கிய கருத்தரங்குகளில் பேசியிருக்கிறார். 1981& ல் சென்னையில் நடந்த தேசியம் குறித்த கருத்தரங்கில் தோழரின் பங்கு குறிப்பிடத் தக்கது. 1982&ல் கட்சியால் கர்நாடகாவிற்கு அனுப்பப் பட்டார். இந்திய புரட்சிகர இயக்கத்திற்காக தன் வாழ்வை அர்பணித்துக் கொண்ட தோழர் ஆசாத் கடின உழைப்பாளி. அறிவை மேன்மையான ஒன்றாகக் கருதாத தோழர் ராஜ்குமார் மக்களிடம் உறையாடுவதையும் மக்களுக்காக வாழ்வதையுமே பெருமையாகக் கருதியவர். ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தில் செயல்பட்டு இலக்கியம், எழுத்து தொடர்பாக ஆழமான விமர்சனங்களை முன் வைத்தவர். இப்போது அவர் இந்திய அரசுப்படைகளின் ஒரு அங்கமான ஆந்திரப் போலிசால் வீழ்த்தப்பட்டிருக்கிறார். இந்திய புரட்சிகர இயக்கத்தில் 35 ஆண்டுகளாக தன்னை இணைத்து இடைவிடாது மக்கள் பணி செய்த தோழரின் இழப்பு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் புரட்சிகர முற்போக்கு சக்திகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தோழர் ராஜ்குமார் கொல்லப்பட்டுள்ள நிலையில் தோழர் சீத்தாக்காவும் காணாமல் போயுள்ளதாகச் சொல்லப்படுகிறது.


தோழர் சிக்குரி ராஜ்குமாரின் தலைக்கு அரசு 12 லட்சம் விலை நிர்ணயம் செய்திருந்தது. தேடப்படும் பயங்கரவாதியாக அவர் அறிவிக்கப்பட்டிருந்தார். கட்சிப் பணி தொடர்பாக தண்டகாரண்யா நோக்கிச் சென்றவரை நாக்பூர் ரயில் நிலையத்தில் பிடித்து மகாராஷ்டிராவில் உள்ள அடிலாபாத் காட்டிற்குக் கொண்டு சென்று அவரோடு கூடவே கடத்தப்பட்ட பத்திரிகையாளர் ஹேமச்சந்திர பாண்டேயையும் சுட்டுக் கொன்று விட்டு துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது அரசு. தோழர் ஆசாத்( ராஜ்குமார்) கொல்லப்பட்டது தொடர்பாக மாவோயிஸ்ட் கட்சியின் தண்டகாரண்யா பேச்சாளர் தோழர் உசேந்தி பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். ” நான் ஏற்கனவே ஆசாத்தை ஆந்திரப் போலீசார் குறிவைத்து விட்டதை ஊடகங்களுக்குச் சொல்லியிருந்தேன். ஜூன் ஒன்றாம் தியதி ஆசாத் தண்டகாரண்யாவுக்கு வர வேண்டும் சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மாதம் இங்கே தங்கியிருந்து தோழர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க வேண்டும் என்பது கட்சி அவருக்கு வழங்கிய வேலை. ஹிந்தி மொழியில் ஒலிபரப்பாகும் பி.பி.சி ரேடியோவுக்கு ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்பது தோழர் ராஜ்குமாரின் எண்ணம். ஆனால் இது பி.பி.சி வானொலிக்குத் தெரியாது இந்த திட்டத்தின் படி தோழர் ஆசாத் முப்பதாம் தியதியே நாக்பூர் வந்து விடுகிறார். அவர் வந்து விட்ட செய்தி ஜூன் 30&ஆம் தியதி எனக்குக் கிடைத்தது. மறு நாள் ஜூலை ஒன்றாம் தியதி காலை சாதேவ் என்ற தோழரை நாக்பூரில் இருக்கும் சீதாப்ருதி என்ற இடத்தில் சந்தித்து விட்டு அன்றே காலை 11 மணியில் இருந்து ஒரு மணிக்குள் தண்டகாரண்யா வந்து விடுவேன் என்று எனக்கு தகவல் அனுப்பியிருந்தார் தோழர் ராஜ்குமார். ஆனால் அதுதான் அவரிடம் இருந்து வந்த கடைசிச் செய்தி. ஜுலை இரண்டாம் தியதி இரண்டு மாவோயிஸ்டுகளைக் கொன்றுவிட்டதாகச் சொன்னார்கள். அடிலாபாத் காட்டில் வைத்து இரண்டு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் ஏ.கே. 47 ரக துப்பாக்கியும், பிஸ்டலும் கிடந்ததாகவும் கதை சொல்கிறார்கள் அடிலாபாத்தில் எங்கள் கட்சியோ எங்களுக்கான வேலைத்திட்டங்களோ எதுவும் இல்லாத போது தோழர்கள் ஏன் அடிலாபாத்திற்கு செல்ல வேண்டும். முதலில் நாங்கள் அவர் சந்திக்கச் சென்ற தோழர் சாதேவையும் கொன்று விட்டார்கள் என்றுதான் நினைத்தோம். சாதேவ் என்று நம்பியதால்தான் அவர் பெயரை முதலில் சொன்னோம். ஆனால் தோழர் சாதேவ் எங்கள் பகுதிக்கு வந்து விட்டார். தோழர் ராஜ்குமாருடன் சென்ற தோழர் சீத்தாக்க்காவைக் காணவில்லை இப்போது வரை சீத்தாக்கா என்னவானார் என்கிற தகவல்கள் இல்லை.” என்கிறார் தோழர் உசேந்தி. தோழர் சீத்தாக்க குறித்து உசேந்தி சொன்னதாக வெளியாகியுள்ள இத்தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து உறுதிப்படுத்துவதற்குள் தோழர் ராஜ்குமாரை கான்பூரில் பிடித்துச் சென்றதாகச் சொல்கிறார்கள்.

ஊடகவியளார் ஹேமச்சந்திர பாண்டே

உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முற்போக்கு ஊடகவியளாரான ஹேமச்சந்திர பாண்டேவுக்கு வயது 30. உத்தர்காண்டின் பிட்டோகார் நகரில் பிறந்து நைனிடால் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு முடித்து ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக பதிவும் செய்து வைத்திருந்தவர். கல்லூரி நாட்களில் மாணவர் அமைப்பில் இருந்தாலும் அதன் புரட்சிகர நடைமுறையில் முரண்பட்டு விலகியவர் பின்னர் மாவோயிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக செயல்படுகிறார். மாவோயிஸ்டுகள் மீது மரியாதையும் அன்பும் கொண்டவர் ஹேமச்சந்திர பாண்டே. ஹைதராபாத்தில் பாண்டேயின் உடல் வைக்கப்பட்டிருந்த போது தோழர் கத்தார், வரவரராவ் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினார்கள் பெருந்திரளான ஊடகவியலாளர்கள் திரண்டு பாண்டேவுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட விரும்பவில்லை ஆந்திர மாநில அரசு. நெஹ்துனியா என்ற இந்தி பத்திரிகையின் ஆசிரியர் அலோக் மேத்தாவோ இவர் எங்கள் ஊடகத்தில் எதுவுமே எழுதியதில்லை என்று ஹேமச்சந்திர பாண்டேயின் அடையாளத்தை கைகழுவினார். ஆனால் பாண்டேயின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த ஊடகவியளார்களோ அவர் பத்திரிகைப் பணியில் தங்களுக்குச் செய்த உதவிகளை பட்டியலிட்டனர். இங்குதான் ஹேமச்சந்திர பாண்டேயின் மனைவி பாபிதாவின் மன உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் நினைக்கிறேன் ஹேமச்சந்திர பாண்டே மாவோயிஸ்டுகளோடு தனக்குள்ள தொடர்பை தன் மனைவி பாபிதாவிடம் மறைத்திருக்க வேண்டும். அவர் தனது புரட்சிகர செயல்பாடுகளுக்கு தடையாக இருப்பார் என்று ஹேமந்த் நினைத்திருக்கக் கூடும். பாபிதா இப்படிச் சொல்கிறார் ” பாண்டேவுக்கு மாவோயிஸ்டுகள் மீது கரிசனம் இருக்கலாம் ஆனால் அவர் எப்போதும் ஒரு மாவோயிஸ்டாக இருந்ததில்லை. பலர் அவரை மாவோயிஸ்டு என்கிறார்கள். சிலர் அவர் பத்திரிகையாளரே இல்லை என்கிறார்கள். பாண்டே ஒரு பத்திரிகையாளர் எங்களுக்கு போதிய வருவாய் இல்லாத காரணத்தால் அவர் சுதந்திர ஊடகவியலாளராக இருந்தார். அதற்கான சான்றுகள் என்னிடம் இருக்கிறது. ஜூன் ஒன்றாம் தியதி நாக்பூரில் ஒரு பத்திரிகைப் பணிக்காகச் ( Assignmend) செல்கிறேன் என்று சொல்லி விட்டுத்தான் சென்றார்” என்கிறார் பாபிதா. ஆனால் மாவோயிஸ்ட் கட்சியினரோ கட்சியின் வடக்கு மண்டலத்தில் ஹேமச்சந்திர பாண்டேவுக்கு நாங்களே சில வேலைகளைக் கொடுத்திருக்கிறோம். மண்டலப் பொறுப்பாளராகவும் அவரை சமீபத்தில் நியமித்திருந்தோம் என்கிறார்கள்.

ஹேமச்சந்திர பாண்டே கட்சியோடும் மக்களோடும் நெருக்கமாக இருந்திருக்கிறார். ஒரு ஊடகவியளாராக இருந்து முழுப் பொழுதையும் மாத ஊதியக்காரனாக கழிக்காமல் மக்களோடு இணைந்த பத்திரிகையாளராக பணியாற்றியும் வந்திருக்கிறார். இதில் கட்சியோடு கொண்டிருந்த தொடர்புகளை அவர் பாபிதாவிடம் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். தனது கணவரின் கொலைக்காக பாபிதா ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியைச் சந்தித்து ஹேமந்தின் சம்பளப்பட்டுவாடா ரசீதுகளைக் காண்பித்து ஹேமச்சந்திர பாண்டே ஒரு ஊடகவியளர் அவரை ஏன் ஆந்திர சிறப்பு அதிரடிப்படைக் கொன்றது என்று விசாரணைக் கோரிக்கை வைக்க அவரோ, ‘ஹேமச்சந்திர பாண்டே கட்சியின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார் இது தொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார். ரெட்டியோ, சிதம்பரமோ அவர்களுக்கு பாபிதாக்களின் கண்ணீருக்கு என்ன முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாராளுமன்றத் தாக்குதலில், தாஜ் ஹோட்டல் தாக்குதலில், மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளின் கண்ணீருக்கே இந்த செல்வந்தவர்களிடம் ஒரு மதிப்பும் கிடையாது. மும்பை தாஜ் ஹோட்டலில் கொல்லப்பட்ட கோடீஸ்வரர்களின் கண்ணீருக்கு வேண்டு மென்றால் ஆளும் வர்க்கங்களிடம் மதிப்பிருக்கலாம். மாவோயிஸ்டுகள் கடத்திக் கொன்ற காவல்துறை இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவாரின் மனைவியின் கண்ணீருக்கோ, அல்லது தாந்தேவாடாவில் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எப்ஃ வீரர்களின் மனைவிகளின் கண்ணீருகோ என்ன மதிப்பிருக்கும்? காஷ்மீரில், மத்திய இந்தியாவில் போராடும் சக்திகளுக்கு எதிராக இந்திய கூட்டு மனச்சாட்சியில் ஒரு தேசிய வெறியை கட்டமைக்க மட்டுமே இந்தப் பிணங்களை பயன்படுத்துகிறார்கள். ராஜீவ்காந்தியைப் புதைக்காமல் இன்னமும் தமிழகத்தையே ஒரு எமர்ஜென்சிக் கோட்டையாக நடத்திக் கொண்டிருக்கிறார்களே அது போன்ற ஒரு நிரந்தர ஒடுக்குமுறைக்காக இந்தப் பிணங்கள் தேவைப்படுகின்றன. ஆக பாபிதா யாரிடம் போய் நியாயம் கேட்க முடியும்?

கூடவே அவர்கள் அமைதியையும் கொன்று விட்டார்கள்.

பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கைகள் இன்னமும் மீதமிருப்பதாக சுவாமி அக்னிவேஷ் சொல்லியிருக்கிறார். மாவோயிஸ்டுகளிடமிருந்து வந்த கடிதத்தில் தேதி குறிப்பிடாதிருந்த நிலையில் சிதம்பரம் மூன்று தேதிகளை அதாவது ஜூலை 10, ஜூலை 15, ஜூலை 20 இந்த மூன்று நாட்களும் அரசுப் படைகள் யுத்த நிறுத்தம் செய்யும். அதே நாட்களில் மாவோயிஸ்டுகளும் யுத்த நிறுத்தத்திற்கு தயாரா என்று சிதம்பரம் அகினிவேஷிடம் கடிதம் மூலம் கேட்க அரசின் கோரிக்கையை அக்னிவேஷ் மாவோயிஸ்டுகளிடம் தெரிவிக்கிறார். அந்த கோரிக்கை தொடர்பான ஆலோசனைக்குத்தான் தோழர்கள் சிக்குரி ராஜ்குமாரும், சீத்தாக்காவும், தோழர் ஹேமச்சந்திர பாண்டேவும், சாதேவும் நாக்பூரில் சந்திக்கும் திட்டத்தோடு சென்றிருக்கிறார்கள். இப்போது சாதேசைத் தவிற யாருமே இல்லை. ராஜேந்திரனும், பாண்டேவும் கொல்லப்பட்டு விட்டார்கள். சீத்தாக்கா என்னவானார் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட அமைதிக்கான நாட்களாக குறிக்கப்பட்ட ஜூலை முடியப் போகிறது ராஜ்குமாரின் ரத்தக் கறைகளோடு நிற்கும் அவர்களிடம் நாங்கள் பேச வெண்டுமா? என்று ஆவேசமாக மாவோயிஸ்டுகள் கேட்கிறார்கள். இக்கட்டுரை எழுதி முடிக்கப்பட்ட நிலையில் இன்று 26&07&2010 அன்று ஆறு மாவோயிஸ்டுகளைக் நேரடி மோதலில் கொன்று விட்டதாக செய்திகள் வருகின்றன. மாவோயிஸ்டுகளை இவர்கள் கொலைகளைச் செய்யத் தூண்டுகிறார்கள். இவர்கள் செய்யும் கொலைகளுக்கு பதிலடியாக அவர்கள் செய்யும் அரசியல் படுகொலைகளை பூதாகரப்படுத்திக் காட்டுகிற ஊடகங்கள் விலங்களைப் போல கொன்று கம்புகளின் காவிச்செல்லப்படும் மாவோயிஸ்டுகளின் உடல்கள் பற்றி குறைந்த பட்ச கவலையைக் கூட வெளிப்படுத்துவதில்லை. தண்டகாரண்யாவின் இன்றைய அமைதி இழந்த் நிலைக்கு சோனியா, மன்மோகன், சிதம்பரம்தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த பல வருடங்களாக அமைதி இழந்து விட்ட தண்டகாரண்யா மக்களுக்கு குறைந்த பட்சம் சிவில் வாழ்க்கை உறுதிப்படுத்தப்படும் என்றால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமானால் நமக்கும் சந்தோஷம் தான். ஆனால் இவர்கள் மாவோயிஸ்டுகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள். பழங்குடிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைதிக்கான சாத்தியங்கள் குறித்துப் பேச முடியும்.

இந்திய அரசோ மாவோயிஸ்டுகள் பாராளுமன்ற அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதாவது ஒரு சி,பி.எம் கட்சியைப் போல அவர்களும் தேர்தல் அரசியலில் பேரம் பேசும் சக்திகளாக வலுப்பெறுவதை இந்தியா விரும்புகிறது. ஆனால் மாவோயிஸ்டுகள் ஒரு போதும் தேர்தல் அரசியலுக்குள் வர விரும்பவில்லை. வரவிரும்பவில்லை என்பதை விட அரைக் காலனிய, அரை நிலபிரபுத்துவ அமைப்பை தூக்கி எரிந்து விட்டு புதிய ஜனநாயக புரட்சியை மாவோ சிந்தனையில் வன்முறை வழியில் நிறுவப் போராடும் அமைப்பு எப்படி தேர்தல் அரசியலுக்குள் வரும் என்பதே அடிப்படை முரண். அடுத்து மாவோயிஸ்டுகள் வைக்கும் அடுத்த கோரிக்கை, நிலத்தின் மீதான உரிமை பழங்குடி மக்களுக்கே என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை. ஆயுதப் போராட்டம் தேர்தல் அரசியல் என்பதை எல்லாம் விட சிதம்பரம் அன் கோவுக்கு உறுத்துகிற மிகப்பெரிய அச்சுறுத்தலே இதுதான். அவர்கள் எஸ்ஸார், ஜிண்டால் உள்ளிட்ட ஏராளமான சுரங்க, கனிம நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டு வைத்துக் கொண்டு நிலங்களை குறிவைத்து களமிறங்குகிறார்கள். மக்களை வெளியேற்றி விட்டு முழுமையாக வளங்களை கொள்ளையடிக்க சொந்தக் குடிகளின் மீதே போரை தொடுத்திருக்கிறது இந்தியா.

நன்றி - எதிர்
...மேலும்

Jul 30, 2010

சேகுவேராவின் சேற்று தேவதை - எம்.ரிஷான் ஷெரீப்,

(கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை - 2010)யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர் முழுதும் அலைந்தபடியிருந்தாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவள் குளித்து வந்த அழுக்குச் சேற்று வாய்க்கால் மூடப்பட்டுவிட்டது. மூடப்பட்ட காலம் தொட்டு அவள் அள்ளிக்குளிக்கப் பயன்படுத்தும் அகன்ற பெரும் அழுக்குச் சிரட்டையைப் போல, அவளும் தலையில் ஈரம் படாமலே வீதிகள் தோறும் சுற்றி வந்தாள். இத்தனைக்கும் ஊரின் மத்தியில் பெரிய ஆறு, நாணல்களைத் தொட்டபடி ஓடிக்கொண்டிருக்கிறது.

அவளுக்கென்று தனி இருப்பிடம் இல்லை. இருட்டிவிட்டால் போதும். எந்த இடத்தில் நிற்கிறாளோ அதற்கு அண்மையிலுள்ள வீட்டின் திண்ணையில், மாட்டுக்கொட்டகையில், கிணற்றடியிலெனத் தங்கிவிடுவாள். அவளால் யாருக்கும் எந்தத் தொந்தரவுமற்ற காரணத்தால் ஊரார் எதுவும் சொல்வதில்லை. இன்னுமொரு காரணம் இருக்கிறது. விடியலின் முதல் கிரணம் கண்டு அவள் விழித்தெழுந்து, எந்த இடத்தில் தங்கினாளோ அந்த இடம், முற்றம், கிணற்றடி என எல்லா இடத்தையும் மிகவும் நேர்த்தியாகக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நகர்வாள். சூழ இருக்கும் குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு போவாள். தான் அழுக்காக இருந்தாளே ஒழிய சூழ இருந்தவைகளை ஒரு போதும் அழுக்கடைய விட்டதில்லை அவள்.

வீடுகளில் கொடுக்கப்படும் எஞ்சிய பாண், ரொட்டி, சோற்றுக்கென அவளது நீண்ட பொலிதீன் பைக்குள் ஒரு சிறிய பொலிதீன் பையிருந்தது. ஓரங்களில் கிழிந்து அழுக்கேறிய இன்னுமொரு உடுப்போடு ஒரு போர்வையையும் சுருட்டி அவள் அந்த நீண்ட பொலிதீன் பைக்குள் பத்திரப்படுத்தியிருந்தாள். அவ்வப்போது பார்த்துத் தனது அழகிய இறந்த காலத்தை மீட்டவென அந்தப் போர்வைக்குள் அவளது குடும்பப் புகைப்படமொன்றையும் ஒளித்துப் பாதுகாத்து வந்தாள்.

அவளது தங்கையின் பிறந்தநாளொன்றில் தனது கணவரோடு சேர்த்து மூவருமாக ஜானகி ஸ்டுடியோவில் போய் எடுத்துச் சட்டமிட்ட புகைப்படமது. யாரும் அருகில் இல்லாப் பொழுதுகளில் மட்டும் வெளியே எடுத்து அவ்வப்போது பார்த்துக் கண்ணீர் உகுப்பவள், பூனை அசையும் சிறு சலனத்துக்கும் பதறியவளாகப் படத்தை ஒளிப்பாள். மூளை பிசகிவிட்டதெனப் பெரியவர்களாலும், பைத்தியம் எனச் சிறுவர்களாலும் அழைக்கப்படுபவள் முன்னர் அழகானவளாகவும், அன்பானவளாகவும், மிகத்தூய்மையானவளாகவும் இருந்தவள்தான்.

எண்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் வழங்கிய கல்லூரி குவார்ட்டஸில் அவனும் யோகராணியும் தங்கியிருந்த காலப்பகுதியில்தான் ஜே.வி.பி குழப்பமென எல்லோராலும் அழைக்கப்பட்ட ஜே.வி.பி கலவரம் அவ்வூரிலும் உச்சத்தை எட்டியது. வசந்தனுக்கு ஆசிரியர் வேலை. அவ்வூரின் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புக்களுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுத்துவந்தான். நல்லவன். அவர்களது சொந்த ஊர் இதுவல்லவெனினும் இங்கு மாற்றல் கிடைத்தவனுக்குத் துணையாகத் தனது வாசிகசாலை உதவியாளர் பணியையும் விட்டுவிட்டு வந்த யோகராணி தையற்தொழிலைச் செய்துகொண்டு வீட்டோடு இருந்து வந்தாள்.

இக் கலவரம் ஆண்டாண்டு காலமாக நீடித்தது. இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்திய அமைதிப் படையினரின் பயங்கரவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியது. ஏனைய திசைகளிலெல்லாம் ஜே.வி.பி. கலகக்காரர்களின் பயங்கரவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. தினமும் கலகக்காரர்களால் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தது. இரவுகளில் வீடுகளில் பெரும் வெளிச்சம் துப்பும் விளக்குகளை ஏற்றிவைப்பது கூடத் தடுக்கப்பட்டிருந்த காலமது. அதற்கும் மேலாக மின்மாற்றிகளும் மின்கம்பங்களும் கிளர்ச்சிக்காரர்களால் தகர்க்கப்பட தேசத்தின் ஊர்கள் தோறும் இருள்கள் சூழ்ந்தன. கம்யூனிசத்துக்கும், இடதுசாரிக் கொள்கைகளுக்கும் ஆதரவாகப் பெரும் படைகளாக பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் திரண்டனர். தபாலகங்கள், அரச நிறுவனங்கள், அரச கட்டடங்கள் பலவற்றையும் உடைத்தும் எரித்தும் அழிக்க முனைந்தனர். பஸ், ரயில் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன. மீறி நகர்ந்தவை எரிக்கப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல் வரை இழுத்து மூடப்பட்டன. வீதிகள் வெறிச்சோடின.

கலகக்காரர்கள் தாங்கள் சொல்வதைச் செய்ய மறுக்கும் அனைவரையும் கொன்றார்கள். தமது பணத்தேவைகளுக்காக வீடுகள் புகுந்து கொள்ளையடித்தார்கள். ஆட்களைக் கடத்திக் கப்பம் கேட்டார்கள். அவர்களை அழித்து ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் தினமும் தொடர்ந்தன. தினந்தோறும் இரவுகளில் எல்லா வீதிகளிலும் காவல்துறையினர் மற்றும் கருப்புப்பூனைப் படையினர் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை வேட்டையாடவென வலம் வந்தனர். சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீண்டு வரமாட்டார்கள்.

யோகராணிக்கு ஒரு தங்கையிருந்தாள். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவள் கம்யூனிசக் கொள்கைகளில் கவரப்பட்டாள். அதன் கூட்டங்களுக்குத் தவறாது சென்றுவந்தவள் படையினரால் தேடப்பட்டு வந்த பொழுது எப்படியோ தப்பித்து சகோதரியிடம் அடைக்கலம் தேடிவந்தாள். நள்ளிரவொன்றில் அவளுக்கான பதுங்குகுழி வீட்டின் அருகேயிருந்த காட்டுக்குள் வசந்தனாலும் யோகராணியாலும் தோண்டப்பட்டது. மேலால் குறுக்கே தடிகளிட்டு தென்னோலை, வாழை இலைச் சருகுகள் என மூடப்பட்ட குழியில் உமாவின் நாட்கள் கழிந்தன.

பகல் வேளைகளுக்கும் சேர்த்து இரவில் தயாரிக்கும் உணவினை யோகராணி எடுத்து வருவாள். பல இரவுகள் தங்கையுடனே பதுங்குகுழி இருளுக்குள் கழித்தாள். இடையிடையே தங்கையைத் தேடிப் படையினர் வீட்டுக்கு வரும் நாட்களில் நெஞ்சு பதறியபடி அவள் தம் வீட்டில் இல்லையெனப் பதிலளித்தார்கள் வசந்தனும் யோகராணியும். மழை நாட்களில் குழியினோரமாக நீரும், சேறுமாக ஒழுகி வழியும். தூங்க விடாமல் விஷப்பூச்சிகளும், தேளும், தவளையும் குழிக்குள் ஒதுங்கும். குளிருக்கும் சகதிக்கும் மத்தியில் உயிரற்ற பிணம் போல அச்சத்தில் உறைந்து கிடப்பாள் உமா.

இப்படியாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இருந்துவந்த வேளையில்தான் கல்லூரியில் வசந்தன் கற்பித்து வந்த வகுப்பறைக் கட்டிடம் ஒரு இரவில் கிளர்ச்சியாளர்களால் எரியூட்டப்பட்டது. தீப்பற்றியெரிவதைக் கண்ட கல்லூரி வளாக குவார்ட்டஸில் தங்கியிருந்த அவன் ஓடிவந்து வீதியில் நின்று நெருப்பு , நெருப்பெனக் கத்தினான். செய்வதறியாத அல்லது ஏதும் செய்யப் பயந்த ஊராட்கள் வேடிக்கை பார்த்தனர். இது குறித்து முதலில் காவல்துறைக்கும் அதிபருக்கும் அவன் தான் அறிவித்தான். கிளர்ச்சியாளர்களின் கோபம் அவனில் சூழ்ந்தது. கால வரைமுறையற்ற விடுமுறை கல்லூரியில் விடப்பட்டது.

இச் சம்பவத்திற்குப் பிறகு ஊருக்குள் தினந்தோறும் காவல்துறை விசாரணைகளும் கரும்பூனைப்படையின் கடத்தல்களும் அதிகரித்தன. கிளர்ச்சிக்காரர்களெனக் கண்டறியப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள் ஒவ்வொருவராகக் கரும்பூனைப் படையினரால் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்கள் வீதிகளினோரமும், மின்கம்பங்களிலும் சுடப்பட்டும் , எரிக்கப்பட்டும் ,வதைக்கப்பட்டும் பிணங்களாகக் கிடந்தனர். நதிகளில் பிணங்கள் மிதந்துவந்தன. ஊரிலிருந்த கிளர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காடுகளுக்குள் மரங்கள் மேலும், பதுங்குகுழிகளுக்குள்ளும் ஒளிந்து வாழ்ந்தனர்.

இவ்வாறான நாட்களின் ஒரு பிற்பகலில் ஊரார் அனைவருக்கும் அடையாள அட்டைகளோடு கல்லூரி மைதானத்துக்கு வரச் சொல்லிக் காவல்துறையினரால் அறிவிப்புச் செய்யப்பட்டது. ஊரார் அனைவரோடும் வசந்தனும் யோகராணியுமாக எல்லோரும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டார்கள். கரும்பூனைப் படையினரால் கண்களிரண்டும் இருக்குமிடத்தில் மட்டும் துளையிடப்பட்டு முழுவதுமாகக் கறுப்பங்கி அணிந்து சாக்கினால் தலை மூடப்பட்ட உருவம் ஒவ்வொரு வரிசையாக படையினரோடு பொதுமக்களைப் பார்த்தபடி நகர்த்தப்பட்டது. முன்னமே கைதுசெய்யப்பட்ட கிளர்ச்சியாளனாக இருக்கக்கூடுமான அது தலையசைத்துக் குறிப்பால் காட்டியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அடைக்கப்பட்டனர்.

அவ்வுருவம் வசந்தனையும் பார்த்துத் தலையசைத்த கணத்தில் யோகராணி அதிர்ந்தாள். பெருங்குரலெடுத்த அழுகை அவளையும் மீறி வெளிப்பட்டது. பாரிய வெளிச்சம் சுமந்த இடி அவள் தலையில் வீழ்ந்து வாழ்வினை இருளாக்கியது. மயங்கிவீழ்ந்தவளை வீட்டுக்குத் தூக்கிவந்து மயக்கம் தெளிவித்து அகன்றது கூட்டம். சித்திரவதை தாங்காமல் சொன்னானோ, அவர்களாகக் கண்டுபிடித்தார்களோ அன்றைய இரவிலேயே உமா ஒளிந்திருந்த காட்டுக்குள் கரும்பூனைகள் நுழைந்தன. அவள் கதறக்கதறத் தாக்கிக் கடத்தப்பட்டாள். காப்பாற்றவென மறித்த யோகராணிக்கும் பல அடிகள் விழுந்து இறுதியாகத் துப்பாக்கியின் பின்புறத்தால் பின்மண்டையில் அடிவாங்கி அவ்விடத்திலேயே மயங்கிவிழுந்தாள்.

அவ்விரவில் பலத்துக் கத்தியும் கதறியும் ஊராட்கள் எவரும் காப்பாற்றவென வரவில்லை. எல்லோரிடத்திலும் மிகுந்த அச்சம் சூழ்ந்த நாட்களவை. அடிபட்டுக்கிடந்தவள் முற்றத்தில் அப்படியே கிடந்தாள். மறுநாட்காலை கல்லூரி வாசலருகே டயர் போட்டுப் பாதி எரிந்த நிலையில் வசந்தனின் சடலம் கிடந்தது. உமா குறித்தான எந்தத்தகவலும் யாருக்கும் இன்றுவரைக்கும் தெரியவரவேயில்லை. காகங்களால் குதறப்பட்ட சடலத்தின் சதைத்துணுக்குகள் கல்லூரிக்கிணற்றில் மிதந்தன.

அப்பொழுதிலிருந்துதான் அவள் சித்தம் பேதலித்திருக்கக்கூடும். ஆட்சிகள் மாறின. கிளர்ச்சிக்காரர்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர். மீளப்பெற முடியாத்திசைகளில் அவளது வசந்தங்கள் தொலைந்தன. காலங்களுமாற்றாத் துயர்களைச் சுமந்து வாழத்திணிக்கப்பட்டாள். என்றோ உதித்து மறைந்த சேகுவேராவின் கருத்துக்களில் அவளது குடும்பம், வாழ்க்கை, சுயம் எல்லாம் அழிந்தது. நீண்ட அழகிய நதி நீரோட்டம், பழகிய வனங்கள், கடை வீதிகள், தெரியாத சனங்கள் அவளுக்கு அச்சமூட்டி அசைந்தன.

பகல் முழுதும் வயல்வெளிகளில் தங்கினாள். வயல்வரப்பினூடு ஓடும் சேற்றுநீரில் உடுத்த உடையோடு சிரட்டையால் அள்ளிக் குளிக்கப்பழகினாள். மழையென்றில்லை. வெயிலென்றில்லை. அவளுக்குக் குளிக்கவேண்டும். அதுவும் ஆனந்தமாகச் சிரித்துச் சிரித்து அவள் குளிப்பாள். வழியும் நீரின் சொட்டுக்களில் வசந்தனை, உமாவைக் காணுபவளாக இருக்கக்கூடும். குளித்துத் துடைத்து, உடை மாற்றி அதே வயல்வரப்பில் ஈர ஆடையைக் காயப்போட்டுவிட்டு அந்திநேரத்தில் ஊருக்குள் நடக்கத் துவங்குவாள்.

இப்பொழுது அவளுக்குப் பகலில் தங்கவும் குளிக்கவும் வாய்ப்பற்றுப் போனது. வயல்வெளிகள் மூடப்பட்டுப் பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குளிக்கச் சேற்றுநீர் தேடி ஊர் முழுதும் அலைந்தவள் ஓர் நாள் விடியலில் செண்பகமக்கா வீட்டுப் பாழடைந்த கிணற்றில் பிணமாக மிதந்தாள். குளிக்கவெனப் பாய்ந்திருக்கக் கூடுமென ஊருக்குள் பேசிக் கொண்டனர்.


இலங்கை

mrishanshareef@gmail.com
...மேலும்

Jul 29, 2010

முதல் பெண் இமாம் ரஹீல் ரசா - கீதா இளங்கோவன்


ரஹீல் ரசா (raheel raza) . பெண்களும், ஆண்களும் பங்கேற்ற இருபாலர் தொழுகையை தலைமையேற்று வழி நடத்திய உலகின் முதல் இஸ்லாமிய பெண்மணி. முதல் பெண் இமாம். (இஸ்லாம் சமயத்தில் ஆண்கள் மட்டுமே தொழுகையை வழி நடத்துவர். இவர்கள் இமாம் என்று அழைக்கப்படுவார்கள்.) அண்மையில் இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டில் உள்ள இஸ்லாமிய கல்வி மையத்தில் உலகெங்கிலும் உள்ள பழமைவாதிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இந்த தொழுகை கூட்டத்தை நடத்தி இருக்கிறார் ரசா.

ரஹீல் ரசா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அங்கிருந்து கனடாவிற்கு குடியேறியவர். கணவர், வளர்ந்த இரண்டு மகன்களுடன் தற்போது கனடாவில் வசிக்கிறார். இவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பே கனடாவில் இருபாலர் தொழுகையை நடத்தி இருக்கிறார். என்றாலும், இங்கிலாந்தில் நடைபெற்ற கூட்டம் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப் பட்டதால் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. ஓர் இஸ்லாமியப் பெண் மரபினை மீறி தொழுகையை நடத்தக் கூடாது என்று அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன.

அத்தனையும் புறந்தள்ளி விட்டு அழகாக தொழுகை கூட்டத்தை நடத்தியிருக்கிறார் ரஹீல். மட்டுமல்ல, பாலியல் சிறுபான்மை, புலம் பெயர்தல், மதத்தின் பெயரால் தமது குழந்தைகளை இழக்கக்கூடிய அபாயம் போன்ற பல `கடினமான' விசயங்களையும் கோடிட்டு காட்டியுள்ளார் .

ரஹீல் ரசா "அவர்களது ஜிஹாத்... என்னுடைய ஜிஹாத் அல்ல" என்ற நூலை எழுதியுள்ளார். இதில் அரசியல் நிலைப்பாடு, பெண்களின் உரிமைகள், இறையுணர்வு தேடல் என்ற மூன்று பகுதிகளின் கீழ், பல நாளிதழ்களில் வெளிவந்த இவரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.


பல்வேறு சமய நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை நிரப்ப ரஹீல் பாடுபடுகிறார். இத்துறையில் ஆலோசகராகவும் உள்ளார். பேச்சாளர், ஆவணப்பட இயக்குனர், பத்திரிகையாளர் என பல முகங்கள் கொண்டவர். மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, வடஅமெரிக்கா என்று உலகம் சுற்றியவர். பயண விரும்பி.

"பெண்கள் பார்க்கப்படத்தான் வேண்டும், கேட்கப் படக் கூடாது என்று சிறு வயதில் ரஹீலின் அம்மா சொல்வாராம். அது இவரை நிறையவே பாதித்துள்ளது. தனது நூலிலும், தன்னை பற்றிய அறிமுகத்திலும் இந்த சொற்றொடரைப் பயன்படுத்தி தான் வளர்ந்த சூழலை ரஹீல் சித்தரிக்கிறார். பெண்கள் உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

ரஹீலின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, அவரது மின்னஞ்சல் முகவரியை தேடிப் பிடித்தேன். அவருக்கு வாழ்த்துக்கள் கூறி, "ஆக்ஸ்போர்டில் தொழுகையை நடத்திய போது ஒரு பெண்ணாக எப்படி உணர்ந்தீர்கள்? எதிர்ப்புகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். (மின்னஞ்சல் முகவரி சரியானதா, போகுமா, போய்ச் சேர்ந்தாலும் அவர் அதைப் பார்ப்பாரா, பார்த்தாலும் பதில் எழுதுவரா என்றெல்லாம் சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும்)

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு ரஹீலிடமிருந்து பதில் வந்த போது மகிழ்ச்சியடைந்தேன். அவரின் தெளிவும், மனப்போக்கும், இயல்பும் அசர வைத்தன. ரஹீலின் மின்னஞ்சல் பதில் இதோ.

"கீதா, உங்களிடமிருந்து வந்த மின்னஞ்சலால் மிக்க மகிழ்வடைந்தேன். இறையுணர்வில் ஆணுக்கு பெண் சமமாக விளங்குவதை குரான் தடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டதால் அந்த தொழுகை கூட்டத்தை வழி நடத்தினேன். அப்போது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்ந்தேன். எதிர்ப்பு சாதாரணமாக வரக்கூடியது தான். எதிர்பார்த்த ஒன்றும் கூட. ஏனென்றால், நாம் வாழ்வது ஆண் வழிச் சமுதாயம் தானே. இங்கு மாற்றம் நிகழ்வது கடினம். ஏராளமான இஸ்லாமிய இளம் பெண்கள், மசூதிகளில் (தற்போது இவர்களுக்கு அங்கு வரவேற்பு இல்லை) தமக்குரிய இடத்தைப் பிடிப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன். குரானின் மையப் பொருளான மனித நீதியின் ஒரு அங்கம் தான் சமத்துவம் என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் வரும் காலங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.

பிரபலமாக வேண்டும் என்பதற்காக நான் இந்த தொழுகையை நடத்தவில்லை. ஏனென்றால், உண்மையானது நண்பர்களை தேடித் தராது. அல்லாவைத்தான் வழி காட்டச் சொல்லி பிரார்த்திக்கிறேன். சக ஆண்களை நான் சார்ந்திருப்பதில்லை. கணவரும், இரண்டு மகன்களும் ஆதரவாக இருப்பது என் அதிர்ஷ்டம். ஆசீர்வாதமும் கூட. உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி - ரஹீல் ".
சிந்தனை தெளிவும், தனக்கு சரி என்று பட்டதை செய்யும் துணிவும் கொண்ட ரஹீலுக்கு ஒரு பெரிய சல்யூட்!

ரஹீல் ரசா (raheel raza) வின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

பெண்ணியத்திற்காக கீதா இளங்கோவன்
...மேலும்

Jul 28, 2010

குட்டி ரேவதியும் பெண்ணியமும்


1.பெண்ணியம் என்றால் என்ன? அதன் உண்மையான அர்த்தம் எதை நோக்கியது?

‘ஒடுக்கப்பட்ட’ பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்கான முனைப்பும் முயற்சியும் வெளிப்பாடும் அதற்கான எழுச்சியும் தாம் பெண்ணியம் என்றாகிறது. ‘ஒடுக்கப்பட்ட’ என்று நான் குறிப்பிடுவதே கூட, இந்திய நாட்டைப் பொறுத்த வரை ‘தாழ்த்தப்பட்ட’ ஒரு பெண்ணுக்கு முழுமையும் உரிமை பெற்றுத் தருவதன் அர்த்தத்தையே நோக்கியதாக இருக்க வேண்டும்.

பெண்ணுரிமை என்பது நம் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் ‘தாழ்த்தப்பட்ட’ எந்த ஒரு பெண்ணுக்கும் அவளின் அடிப்படையான உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார விடுதலை, குடும்பம் மற்றும் சமூகத்தில் மரியாதை, பாலியல் விடுதலை, சொத்தில் சம உரிமை, மருத்துவ வசதிகள், பொது வாழ்வில் சமூக அதிகாரம் என எல்லா நிலைகளிலும் எல்லாவற்றையும் பெற்றுத் தருவதே அதன் உண்மையான அர்த்தத்தில் பெண்ணியம் எனப்படும்.

இதுவரை இந்தியாவில் பேசப்பட்டு வரும் பெண்ணியம் ஆதிக்க சாதிப் பெண்கள் தம்மை விட நிலைமையிலும் அதிகாரத்திலும் இருந்த ஆண்களின் அதே அதிகாரத்தைக் கோரிப் பெறுவதற்கான இச்சையாகவும் அதற்கான முறையீடாகவும் தாம் இருந்திருக்கின்றன.

2. அதன் இலக்கை அது அடைந்துள்ளதா?

மேற்குறிப்பிட்ட இப்பெண்ணியம் சாதி ஒழிப்புப் பெண்ணியம் அல்லது தலித் பெண்ணியம் அல்லது பாரதப் பெண்ணியம் என்று வரையறுக்கப்படலாம். இவ்வரையறை தாழ்த்தப்பட்ட பெண்ணின் நிலையிலிருந்து வழங்கப்படுவதாக இருக்கவேண்டும்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டக் காலத்தை ஒட்டியும் அதற்குப் பின்பும் பார்ப்பனீய பெண்கள் கேட்ட விடுதலை உரிமைகள் என்பவை குடும்பம் மதம் சாதி என்னும் சனாதன வடிவங்களுக்குள்ளும் ஆணாதிக்க வடிவங்களுக்குள்ளும் ஆண் பெற்று வந்த அதே அதிகாரத்தையும் குற்றங்கள் செய்வதற்கான வாய்ப்பையும் கோருவதாகவே இருந்தது. கருத்தியல் வடிவில் இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை.

அதற்குப் பின்பாக சமூக அங்கீகாரத்தை பொருளாதார வடிவிலும் அரசியல் வடிவிலும் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்ட இடைச்சாதி அதிகாரம் பெற்றிருந்த பெண்களும், தங்களுக்கு ஏற்கென்வே வழங்கப்பட்ட சாதி அதிகாரத்தையும் சுகித்துக் கொண்டே பாலியல் ஒடுக்குமுறையை சகித்துக் கொண்டே மேம்போக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றைப் பெறுவதற்கான வழிகள் நிலைத்தனவாக இல்லாத பட்சத்தில் அவை அடுத்த தலைமுறையினருக்குக் கூட பொருத்தம் உடையதாக இல்லாமல் போய்விட்டது.

ஆகவே தான் சாதி ஒழிப்புப் பெண்ணியம் என்பதைக் குறிப்பிடுகிறேன். சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் எந்த ஒரு தாழ்த்தப் பட்ட பெண்ணும் உய்வதற்கான வழிகளையும் நிலைத்த விடுதலை உணர்வையும் மானுடத்திற்கான அக்கறையையும் கொண்டிருக்கும்.

3. பெண்ணியத்தின் உச்சபட்ச இலக்கு என்ன?

பெண்ணியத்தின் உச்சபட்ச இலக்கு என்பது ஏற்கெனவே ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு பெண்ணை அவள் நிலையிலிருந்து எழுச்சியுறச் செய்வதும், ஏற்கெனவே அதிகாரத்தைக் குறைந்த அளவிலேனும் தன்னளவில் பெற்ற பெண்கள் தமது அதிகாரத்தை சமூகத்தில் இருக்கும் மற்ற பெண்களின் விடுதலைக்கும் பயன்படுத்துவதாக மாறுவதே உச்சபட்ச பெண்ணியமாக இருக்க முடியும்.

4. பெண்ணியத்திற்கு எதிரானதா ஆண்ணியம்?

ஆணியம் என்பது ஒருவேளை பெண்கள் அதிகாரத்தில் ஆண்களை விட மேல்நிலைக்குச் சென்றால் பேசப்படும் பொருளாக இருக்கலாம். அதற்கு இப்பொழுது சாத்தியமில்லை.

ஒரு தாழ்த்தப் பட்ட ஆணுக்கு மற்ற சாதி அதிகாரமுடைய ஆண்களுக்கு இருக்கும் அதே பிரச்சனைகள் இருப்பதில்லை. அதை விவாதப் பொருளாகக் கொண்டதாக இருக்கலாம் ஆணியம்.

ஆனால் அதற்குச் சாதகமான சூழ்நிலைகளே இங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆண்களின் வேலை சமூக நிறுவனங்களான குடும்பம் திருமணம் மதம் சாதி போன்றவற்றை இன்னும் இன்னும் ஆதிக்க வடிவங்களாக மாற்றுவதில் முடிந்துவிடவில்லை.

இந்நிலையில் ஆணியம் என்பது பெண்ணியத்துடன் மோதுவதற்கான வெற்றுப் போட்டி மனநிலையாகவே கொள்ளப்படும்.

5. இதற்கு எதிர்ப்பு வரக்காரணம்?

மேம்போக்கான பெண்ணியக் கருத்தியல் உள்வாங்கப்பட்ட நிலையில் நம் சமூகம் இருக்கிறது. இது என்னவோ பெண்கள் அத்துமீறிய சுதந்திரம் கொண்டிருப்பதாகவும் உரிமைகளையெல்லாம் பெற்றுவிட்டதாகவும் சுட்டுகிற ஒரு தோற்றமாயை. ஏற்கெனவே நான் குறிப்பிட்டது போல இது சமூகத்தில் ஆதிக்கம் அதிகமுடைய சமூகச்சூழலிருந்து வந்த பெண்கள் பெண்ணியத்தைக் கையிலெடுத்தது தான் இதற்குக் காரணம். பெண்ணியப்பாதையில் இன்னும் நெடுவழிப் போகவேண்டியிருக்கிறது.

6. சத்தியமாக பெண்ணியத்தால் பெண்ணினத்திற்கு தீர்வு உண்டா?

சத்தியமாக பெண்ணியத்தால் பெண்ணினத்திற்கு தீர்வு உண்டு. ஆனால் அது ஒட்டுமொத்த பெண்ணினத்தின் மீதான அக்கறையுடனும் எத்தகைய பெண்ணுரிமைகள் உண்மையிலேயே பெண்களுக்கு நிரந்தரமான உண்மையான விடுதலையைப் பெற்றுத் தரக்கூடும் என்ற புரிதலுடனும் பேசப்படவேண்டும். அப்பொழுது தான் அது பெண்ணின அடிமைத் தனத்திற்கான தீர்வாக இருக்கமுடியும்.

7. உடல்மொழி, பெண்மொழி என்கிறார்களே அப்படின்னா என்ன?

உடல் மொழி என்பது நாம் வாழும் சமூகத்தின் அரசியலுடன் நமது உடல் கொண்டிருக்கும் முரண்பாடுகளைப் பேசுதல். பெண்ணின் உடல் என்பது இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் ஒரு நுகர்வுப் பொருளாக மாறிவிட்டது. வெறும் பிளாஸ்டிக் தன்மையுடையதாக உயிரற்ற சடப்பொருளாக மாறிவிட்டது. அவ்வாறே பெண்ணின் உடல் என்னும் படிமம் வெவ்வேறு காலகட்டங்களில் வரலாற்றின் வெவ்வேறு படிநிலைகளில் வேறுவேறு பொருளாக மாறிக்கொண்டே இருக்கிறது. முழுமையான சமூக உரிமைக்கும் உட்பட்ட உயிரியாக என்றுமே கருதப்பட்டதில்லை. அதிகாரம் – நிலவுடைமை – போர் என்பதற்கான மறுப்பும் எதிர்ப்பும் தாம் உடல்மொழியும் பெண்மொழியும். பெண்ணின் உடல் மீதும் மனம் மீதும் சமூக நிறுவனங்களான மதம் சாதி திருமணம் குடும்பம் வழியாக செலுத்தப்படும் வன்முறை எழுப்பிய புழுதிகளும் இரத்தக் கறைகளும் வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கின்றன. மறக்கப்பட்டிருக்கின்றன. இதை எதிர்க்கும் விதமாக எழுந்துள்ள பெண்ணிலக்கிய வடிவமே உடல்மொழியும் பெண்மொழியும். பெண்ணின் உடலோ ஆணின் உடலோ உறும் சமூக ஒடுக்குமுறையை இலக்கியத்தின் வழியாக எதிர்ப்பதற்கான ஆயுதமாக இது இருக்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள் தீண்டாமையின் வழியாக அனுபவிக்கும் உடல் வன்முறையையும் ஒடுக்குமுறையையும் பேசவேண்டிய அரசியல் வடிவம் என்று நவீன இலக்கியம் தனது அடுத்தக் கட்டத்தை அடைந்துள்ளது சிறப்பான விஷயம்.

8. இது வெறும் பம்மாத்து வேலை?

ஒரு சில பெண் எழுத்தாளர்கள் தம் படைப்புக்கான சுதந்திரம் என்பதை சமூகத்தில் இன்னொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள பாலியல் சுதந்திரத்தை அளவிடாமலும் அதைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாமலும் தங்கள் படைப்புகளில் உடல்மொழியையும் பெண்மொழியையும் முன்வைக்கும் போது இது வெறும் பம்மாத்து வேலை என்று தோன்றலாம். ஏற்கெனவே சமூகத்தில் பெண்ணியம் என்று ஆதிக்க சாதிப் பெண்களால் முன்வைக்கப்பட்டிருந்த அதே அர்த்தத்தில் அதாவது கட்டற்ற பாலியல் நுகர்ச்சியை மட்டுமே முன்மொழியும் ஒரு பெண்ணியமே அறியப்பட்டிருப்பதாலும் பெண்ணிய எதிர்ப்பாளர்களுக்கும் ஆணாதிக்கவாதிகளுக்கும் இவ்வாறு தோன்றலாம். இது ஒருவகையில் பெண்ணியத்தைக் காயடிக்கும் நிலையே.

பாலியல் விடுதலையைப் பெறுவது மட்டுமே பெண்ணுக்கு வேண்டிய மற்ற உரிமைகளை பெற்றுவிட்டதாகாது. தான் பெற்றுவிட்ட பாலியல் விடுதலை கூட மற்ற பெண்களின் விடுதலையைக் குறிப்பதாகாது. இலக்கியங்கள் பொதுமையைப் பேசவேண்டும். சிறப்பான நிலைகளையும் பேசவேண்டும். அவ்வாறு பேசப்படுகையில் உடல்மொழி வெறுமனே பம்மாத்து வேலை தானே என்ற இது போன்ற கேள்விகளும் எழாது.

ஆணின் உடல் காலந்தோறும் அதிகாரம், வீரம், தந்திரம், சாகசத்தன்மை, வன்முறை, அச்சமின்மை ஊட்டம்பெற்ற உடலாக மரபணுவரை இவ்வுணர்வு பாய்ந்து வளர்ந்த உடலாக வளர்ந்துள்ளது. இனி சமூகவியலின் உச்சமான செயல்பாடு தனது அதிகார உணர்வை சிறுகச் சிறுகவோ ஒட்டுமொத்தமாகவோ அழிப்பதில் தான் வேரூன்றியிருக்கிறது. அவ்வாறே, ஒரு ‘பெண் உடலை’ பல ஆண்கள் பங்கிடுதலும் ஓர் ஆண் பல பெண்கள் உடல் மீது தனது அதிகாரத்தைச் செலுத்துவதும் ஆண்மையின் தகுதியாகவே கருதப்படுகிறது. பெண்ணின் உடல் உடமையாக்கப்பட வேண்டிய ஒரு நிலமாகவோ அருளாசி வழங்கவேண்டிய ஒரு போலியான தெய்வ நிலையாகவோ கற்பினால் பூட்டிவைத்துப் பேணப்பட வேண்டியதாகவோ கருதப்பட்ட அளவிற்கு சமூகச் சம உரிமை உடையவள் பெண் என்பது கிஞ்சித்தும் கருதப்படவில்லை. மேலும், நவீன உலகின் இயந்திரங்களும் பயன்பாட்டு வடிவங்களும் பெண்ணுடலின் சித்திரிப்பு உடையவையாகவே உருவாக்கப்படுகின்றன. இதன் உள்ளார்த்தம் பெண்ணும் காரைப்போன்று கழிவறைப் பேழைகளைப் போன்று குப்பிகளைப் போன்று நவீனம் பரவிய சடத்தன்மை உடையவர்கள் தாம் என்பதே. பெண்ணுடல் மெளனம் நிறைந்ததாகவும் அதைப் பேணுவதாகவும் ஆக்கப்பட்ட ஓர் வலிய ஏவுகணையைப் போன்ற ஆயுதம். தன்னைத் தானே இயக்கிக்கொள்ள முடியாத ஆயுதம். சமூகச் சிக்கல்கள் பதிந்து பதிந்து படிவமான உடலாகி இருக்கிறாள் பெண். இச்சிக்கல்கள் கவனமாகக் களையப்பட உடல்மொழி அவசியமானது.

9. ஒரு சாதாரண பெண்ணிற்கும் பெண்ணியம்பேசும் பெண்ணிற்கும் என்ன வேறுபாடு?

சாதாரண பெண் என்றும் பெண்ணியம் பேசும் பெண் என்றும் வகைப்படுத்துவது கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கிறது. இன்று தன்னுடைய நிலையிலிருந்து தன் உரிமைகளுக்காகப் போராடும் எந்தவொரு பெண்ணும் பெண்ணியம் பேசும் பெண்ணே. தன் மீது சுமத்தப்படும் வன்முறையை தனது விதியே என்றும் பொறுப்பு என்றும் ஏற்றுக்கொள்ளும் பெண்கள் வேண்டுமானால் சாதாரண பெண்ணாக அடையாளம் பெறலாம். ஆனால் இன்று பெண்கள் பொதுவாகவே அப்படி இருப்பதில்லை. தங்கள் இருப்புக்கு வந்த நெருக்கடியாலும் தாங்கள் இயல்பாகவே தமது உரிமைகள் குறித்த விடுதலை உணர்வைக் கொண்டிருப்பதாலும் எல்லா இடத்திலிருந்தும் பெண்கள் தம்தம் உரிமைகளை வென்றெடுப்பதில் தீவிரமாயிருக்கின்றனர்.

10. இதை எப்படி அணுகுவது?

பெண்ணியம் என்பது சமூகத்தின் கடைநிலைப் பெண்ணின் நிலையிலிருந்து அணுகப்படவேண்டும். அவளுக்கு அனுமதிக்கப்பட்ட உரிமைகளையே அளவுகோல்களாக கொள்ள வேண்டும். அவளுக்கு அளிக்கப்படும் உரிமைகளும் அதிகாரபலமுமே மற்ற பெண்களின் ஆண்களின் ஏன் ஒட்டுமொத்த மானுடத்திற்கானதாயும் இருக்கும். பெண்ணியம் என்பது ஏதோ பிஸ்கோத்துகள் போல இரு தரப்பாற்கும் சமமாகப் பிரிக்கப்படவேண்டியது அன்று. எங்கு உணவிற்கான வறுமை இருக்கிறதோ அங்கு அதிகமான பங்கு கொடுக்கப்படுவது தான் சமத்துவத்திற்கானதாய் இருக்கமுடியும். இத்தகைய பெண் சமத்துவம் பேசுவோராய் நாம் பரிணமிக்க வேண்டிய காலகட்டம் இது என்பதை உணரவேண்டும்.

பேட்டி கண்டவர்: நட்சத்திரன்

நன்றி: ‘கோகுலம் கதிர்’ இதழ் ஜுலை 2010 
...மேலும்

Jul 27, 2010

தொல் மரபி - இன்பா சுப்ரமணியன்வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது .
துயரம் ...
அவைகளின் வாய்க்கு
பொருந்தாத மார்பெனக்கு.
கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
நான், என் அம்மா
என் அம்மா அவளின் அம்மா
அவளின் அம்மா அவளின் அம்மா
......ளின் அம் ....மா....அவ ......
பதினேழாயிரமாண்டு
பாரம்பரியம் இருக்கிறதெனக்கு.
என் கருவறையிலிருந்தே
பிரசவிக்கிறேன் என்னை
என் முலையிலிருந்தே
ஊட்டுகிறேன் எனக்கு.

இப்போது மரணப்படுக்கயிளிருப்பவலும்,
பூமிப்பந்தை போன்ற
வயிற்றோடு
பிரசவிக்க இருப்பவளும்
நானே..
நச்சுக்கொடியை உந்தித்தள்ளி
வெளி வரும்
பெண் சிசுவும்
நானே

உலகமெங்கும்
ஒரு கருப்புநிற பெண்ணாக
அவமானப்படுதபடுபவளும்
நானே..

யுத்த தேசங்களில்
சிதைககபடுபவளும்
நானே ...

அதிகார மையத்தின்
தோட்டாக்களால்
சல்லடயாக்கபடுகிறேன்..

இவர்களையெல்லாம்
கடவுள் தொற்றுநோய் கிருமியை
இப்பேரண்டத்தின் மீது
ஏவிகொல்வதைப்போல
என்னிலிருந்து நான்
பிரசவிதுக்கொண்டே இருக்கிறேன்
எண்ணற்ற
புரட்சிக்காரிகளையும்
புரட்சிகாரர்களையும்.

உலகமுழுவதும் வியாபித்திருக்கும்
அதிகார வர்க்கமே
இதோ எனது உயிர்
இதோ எனது உடல்
இதை உணவாக உட்கொள்ளுங்கள்
இத்திறு விருந்திற்கு அழைக்கப்பெற்ற
நீங்கள்
பேறு பெற்றவர்கள்

இவுயிரை
இவ்வுடலை
உங்களால் தின்று செரிக்க இயலாது
ஏனெனில்
இது பதினேழாயிரமாண்டு
முது உடல்
வலுவேறிய தசை
உப்பேரிய குருதி
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்

இன்பா சுப்ரமணியன்
...மேலும்

Jul 26, 2010

பிரமிளா பிரதீபனின் "பாக்குப்பட்டை" நூல் வெளியீடு

பிரமிளா பிரதீபனின் "பாக்குப்பட்டை" நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் யூலை 31 மாலை 4.30க்கு நடைபெறுகிறது.


தகவல் - மேமன்கவி
...மேலும்

ஈவ்டீசிங் - பெண்கள் பிரச்னை மட்டும் தானா - பா.ரஞ்சனி


1998- ஜுலை 25 சென்னையில் ஓர் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்களும; பொதுமக்களும, சமூக ஆர்வலர்களும், முற்போக்கு இயக்கங்கள் மற்றும் மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அதில் கலந்து கொண்டனர். தேசமே இறுதிஅஞ்சலி செலுத்திய அந்த நிகழ்வு - ஈவ்டீசிங் கொடுமையால் உயிழந்த கல்லுரி மாணவி சரிகாஷிவின் மரணம். ஜுலை 18ம் தேதி கல்லுரி முடிந்து வீடு திரும்பும் போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகி தலையில் அடிபட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் பலனளிக்காமல் தனது பிறந்தநாளான 24ம் தேதி உயிரிழந்தார் சரிகாஷா. . தமிழகமெங்கும் இந்த சம்பவம் குறித்து கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதோடு நில்லாமல் தமிழக அரசு ஈவ்டீசிங் தடுப்புச் சட்டம் 1998 ஐ இயற்றியது. வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து 9 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையை சென்ற ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. நீதிபதி தனது தீர்ப்பில் “சரிகாஷா ஒரு பெண் என்பதாலேயே அவர் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் தற்காப்பையும் அளிப்பதற்கு கல்வி நிறுவனங்கள் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். சட்ட உரிமைகள் குறித்த வாராந்திர வகுப்புகளை நடத்த வேண்டும்”; என்றும் கூறியுள்ளார். தண்டனையை உறுதிப்படுத்தியதில் நமக்கு மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது. ஆனால் ஈவ்டீசிங் சம்பவங்கள் நடைபெறும் பொழுது அறிவுரைகளும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து பேசுவதும் பெண்களை விளித்தே இருப்பது நம் மனதில் சில கேள்விகளை ஏற்படுத்துகிறது.

எங்கெங்கு காணினும்
ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவள் சீண்டலுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்கள் கணக்கிலடங்காதவையேஸ தெருவில் நடந்து செல்லும் போது- பேருந்தில் பயணிக்கும் போது- பணிபுரியும் போது என்று எப்பொழுது வேண்டுமானாலும் முகமறியாத ஆண்களின் செய்கைகளினாலோ வார்த்தைகளினாலோ பெண் தாக்குதலுக்கு ஆளாகிறாள். வீட்டில் இருந்தாலும் கூட தொலைபேசி அழைப்புகளின் மூலம் ஈவ்டீசிங் க்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன. இன்று செல்போன் ஈவ்டீசிங்கிற்கான கருவியாக பயன்படுவதை நாம் பார்க்கிறோம். பெண்கள் அறியாத வண்ணம் அவர்களுடைய நடவடிக்கைகளைஇ உடலை ஆபாசமான கோணங்களில் செல்போன் மூலம் படமெடுத்து ரசிப்பது என்பது பல விதங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவிகள் படும் பாடு வார்த்தைகளில் வடிக்க முடியாதவையாக இருக்கிறது.

அப்பாவிப் பெண்களை மிரட்டி செல்போனில் ஆபாசமாகப் புகைப்படம் எடுப்பதுஇ பின்பு அதை வைத்து அந்தப் பெண்ணை மிரட்டி தங்களது ஆசைக்கு இணங்க வைப்பது என்பதும் ஏதோ திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள் அல்ல. மாறாக பத்திரிகைச் செய்திகளில் இடம் பெற்றவையே.

கல்வி நிறுவனங்களில்
இது கல்லுரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கும் நேரம்.. பேருந்துகளிலும் பொதுஇ;டங்களிலும் தன்னுடைய சக மாணவர்களாலும் மற்றவர்களாலும் கேலி கிண்டலுக்கும் ஆபாச செய்கைகளுக்கும் ஆளாகும் சம்பவங்கள் எண்ணிலடங்காதவையே. ஆனால் இது பெண்களுடைய பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. பெண்ணை எப்படி பாதுகாப்பது என்கிற பல்வேறு விதமான விவாதங்களுக்கு வழிவகுக்கிறது.

கல்லுரிகளோடு இந்த சம்பவம் நின்றுவிடுவதில்லை. இன்றைக்கு இருபாலர் பயிலும் பள்ளிகளிலே ஆசிரியைகளுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது இந்த ஈவ்டீசிங் பிரச்சினை தான். இரண்டாம் வகுப்பு மாணவன் தன் சக மாணவிக்கு லவ் லெட்டர் குடுப்பது- மூன்றாம் வகுப்பு மாணவன் சக மாணவியை வகுப்பறையில் முத்தமிட்டது என்று பல பள்ளிகளின் ஆசிரியைகள் நம்முடைய கற்பனைக்கு கூட எட்டாத நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சின்னஞ்சிறு மாணவர்களின் மனதிலே கூட மாணவிகளை தன்னுடைய சீண்டலுக்கு இரையாக பார்க்கும் மனோபாவத்தை நாம் வளர்த்திருக்கிறோம். என்பது தான் கசப்பான உண்மை. பத்திரிகைகளைப் புரட்டினால் தன் விருப்பத்துக்கு இணங்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. புகார்களாகப் பதிவான சம்பவங்கள் தவிர பதிவாகாத சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நடைபெறுகிறது என்பது தான் நிதர்சனம்.

ஊடகங்களின் பங்கு
பெண்ணாய்ப் பிறந்ததனால் மட்டுமே அவள் தன்னுடைய சீண்டலுக்கும் வக்கிர உணர்வுகளுக்கு வடிகாலாக இருப்பாள் என்பதை ஆணின் மனதில் ஆழமாகப் பதிய வைத்ததில் ஊடகங்களுக்கு இருக்கும் பங்கை யாரும் மறுத்து விட முடியாது. குறிப்பாக திரைப்படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வடிவங்களில் நாயகி நாயகனின் சீண்டலுக்கு இலக்காவதும் அதன் பின் அதில் மயங்கி அவனைக் காதலிப்பதாகவுமே சித்தரிக்கப்படுகிறது. இதைப் பார்க்கும் இளையதலைமுறையினர் நாயகனின் செய்கைகளை தாங்களும் செய்ய முற்படுகினர்.

கல்வி நிறுவனங்கள் இதை பிரச்னையாக அணுகும் போது பெண்கள் மீது உடைக்கட்டுப்பாடு விதிப்பது ஆண்களும் பெண்களும் கல்லுரி வளாகத்தில் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது போன்ற விதிகளை உருவாக்கி பிரச்னையின் ஆணிவேரை அணுகாமல் திசைதிருப்பி விடுகின்றனர். பெண்ணுடைய உடை ஆணின் கவனத்தை திசை திருப்பும்- அதனால் அவன் ஈவ்டீசிங் செய்ய முற்படுகிறான் என்ற கூற்று ஆணாதிக்க சிந்தனையில் ஊறித்திளைத்த சிந்தனையேயன்றி வேறென்ன.

மனமாற்றம் தேவை
மாணவர்களிடம் பெண்ணை சக மனுஷியாக பார்க்கும் மனோபாவத்தை வளர்த்தெடுப்பதைப் பற்றிய சிந்தனைகளே இன்றைய சமூக அமைப்பில் இல்லை. அறிவுரைகளை பெண்களை நோக்கி அள்ளி வீசியபடியே இருக்கும் இந்த சமூகம் ஆணை நோக்கி “பெண் உன்னுடைய தோழமைக்கு உரியவள்.இந்த சமுதாயம் ஆணும் பெண்ணும் இணைந்து அன்பால் உருவாக்கியது. உன்னுடைய அத்துமீறிய செய்கைகள் பெண்ணின் உணர்வுகளை காயப்படுத்தும்” என்பதை எப்பொழுதாவது எந்த வடிவத்திலாவது சொன்னதுண்டா சின்னஞ்சிறு வயதில் சிறுவர் சிறுமியராக கலந்து விளையாடியதைத் தவிர பெண்ணின் தோழமையை ஒரு ஆண் உணர்வதற்கான வாய்ப்பே கிடைப்பதில்லை. பெண்ணை ஒரு நுகர்ச்சிப் பொருளாக காட்டுவதிலும் திருமண உறவுகள் குறித்த கேலிப் பேச்சுகளை உருவாக்குவதிலும் குடும்பங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஆண் பெண் நட்பு என்பது இயல்பானதாக அமைவதற்கு நம்முடைய சமூக அமைப்பு இடம் கொடுப்பதில்லை.

பெண்ணை உடைமைப் பொருளாக பார்க்கும் மனோபாவம் குடும்பம் சமூகம் மற்றும் ஊடகங்களினால் ஆணின் மனதில் ஏற்பட்டு விடுகிறது. அலுவலகங்களிலோ கல்வி நிறுவனங்களிலோ பெண் தன்னுடைய திறமையின் காரணமாக ஆணை முந்துகின்ற சந்தர்ப்பங்களிலும் கூட “என்ன தான் இருந்தாலும் பொம்பள பொம்பள தான் “ என்று தமிழ்த்திரைப்பட நாயகர்களின் வசனம் பலருடைய மனதில் ஒலிக்க ஆரம்பிக்கிறது. பெண்ணாய் அவளை எப்படி காயப்படுத்தலாம் என்கிற திட்டமிடலை நோக்கி அவனுடைய மனம் நகர்ந்து விடுகிறது. அப்படி அவளை சீண்டும் போது பல பெண்கள் அதை எதிர்த்து நிற்காமல் முடங்கி விடுகிற சந்தர்ப்பங்கள் அனேகம். இதை எப்படி தவிர்ப்பது

சமூகப் பிரச்னையே
ஈவ்டீசிங் ஒரு சமூகப் பிரச்னை என்பது உணரப்பட வேண்டும். பாடத்திட்டங்களில் மனித மாண்புகளையும் சமூக ஒழுக்கங்களையும் பற்றிய பாடங்களை இணைக்க வேண்டும். பெண்ணிய சிந்தனையுடன் கூடிய பாடங்களை வடிவமைக்க வேண்டும். இந்த சமூகத்தில் எல்லா உரிமைகளும் உணர்வுகளும் உள்ள பிரiஜ தான் பெண் என்கிற எண்ணத்தை அனைவரின் மனதிலும் ஏற்படுத்த இது வழிவகுக்கும். சரிகாஷா வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து தான் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பு வெளியாகியுள்ளது. தேசத்தின் கவனத்தையே ஈர்த்த வழக்கிலே கூட இது தான் நிலை எனும் போது வழக்காக பதிவு செய்யப்படாத சம்பவங்களின் நிலை என்னவாக இருக்க முடியும். தனிப்பட்ட ஆணின் வக்கிர உணர்வுகள் இத்தகைய சம்பவங்களுக்கு காரணமாக இருந்தாலும் ஒட்டு மொத்த சமூகத்தின் மனோபாவத்தை மாற்ற வேண்டிய கடமையும் நம்முன் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். சில அமைப்புகளின் சார்பில் ஜுலை 25 பெண் சீண்டல் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு கருத்தரங்கள் நடத்துவது உறுதிமொழிகளை ஏற்பது பேரணிகளை நடத்துவது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். இத்தகைய இயக்கங்கள் பரவலாக்கப்பட வேண்டும். ஈவ்டீசிங் இல்லாத தோழமை உணர்வுடன் கூடிய சமுதாயம் உருவாக வேண்டும் என்பவே அனைவரின் விருப்பம்.

பெண்ணியத்திற்காக றஞ்சனி
...மேலும்

Jul 25, 2010

சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அது எமது பிறப்புரிமை


சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அது எமது பிறப்புரிமை என்று குரல் எழுப்பும் பாறிபா முஹஜெர் என்ற பத்திரிகையாளர் பட்ட கஷ்டங்கள் தான் இன்று ஈரானிய பெண்களின் பிரச்சனைகளை உலகுக்கு கொண்டுவந்துள்ளது.

புது தில்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெஹ்ரன் விமான நிலையத்திற்கு வந்த தளத் தகினியா , மந்ஸௌரெஹ் ஷோஜாயி, ப்ஹர்நாஸ்,என்ற மூன்று பெண் பத்திரிகையாளர்கள்,விமான
நிலையத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

பெண் சுதந்திரம், சட்ட பாதுகாப்பு,விவாகரத்து கோர உரிமை கோரல்,குழந்தையின் பாதுகாப்பு கோரல், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்த படவேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக பல பெண்கள் கைது செயபடுவது சர்வ சாதாரண விடயாமகிபோனது இரானில். கைது செயப்படும் பெண்கள் காணமல் போவதும்,தூக்கில் போடபடுவதும் அதிகரித்துவிட்டது.ஒரு குற்றம் நடந்தால் அந்த குற்றத்திற்கு சாட்சியாக ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால்,ஆணின் சாட்சி மட்டுமே நீதி மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஷேக்ஹோலேச்லம் என்ற பெண் "அசர் மேகார் ' என்ற பெண்கள் அமைப்பை நடதியதர்க்காய் கைது செய்பட்டு மூன்று வருடம் கடுங்காவலில் வைக்கப்பட்டார். பலர் வெளிநாடுகல்லுக்கு தப்பி அடைக்கலம் அடைந்துள்ளனர்.

ஷேக்ஹோலேச்லம்,ஜெல்வெஹ் ஜாவேரி, மரியம் ஆகிய மூன்று பெண்களும், விசாரயின்றி சிறையில் வாடும் பெண்களை விடுதலை செய்யக்கோரி ஒரு கோடி கையெழுத்து பெரும் முயற்சியில் உள்ளனர்.

நடத்தை தவறியதாக குற்றம் சாட்டப்படும் பெண்கள் பொது மக்கள் முனிலையில் கல் எரிந்து கொலை செய்யபடுவதையை கண்டித்து பலர் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டத்தை கலைக்க மிளகு பொடி கரைசல் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சிவப்பு நிற பெயின்ட்டை அடித்தும் கலைக்கப்பட்டனர்.அமைப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு கண்கள் கட்டப்பட்டு,எந்த இடத்தில இருகிறார்கள் என்பதே தெரியாத நிலையில் வைக்கப்பட்டனர்.

இப்படி விசாரணையின்றி வாடும் பெண்கள் சோகம் ஒரு வகையென்றால் ,தூக்கில் போடப்படும் பெண்களின் நிலை மிக கொடுமையாக ,எவரையும் கலங்கடிக்கும் விதமாக உள்ளது..

ஒரு தந்தை தன மகளை எழுபது வயது நிரம்பிய கிழவனுக்கு மணமுடிக்க உரிமை உள்ளது. அதை அந்த பெண் குழந்தையின் தாய் தடுத்தால் அவளுக்கு தண்டனை உண்டு. மனைவியாக நாலு பெண்களையும்,வைப்பாட்டியாக பல பெண்களையும் வைத்துகொள்ள சட்டம் உதவுகிறது.

ஒரு விபத்தில் கணவனும் மனைவியும் அடிபட்டால் கணவனுக்கு கிடைக்கும் நஷ்ட ஈட்டு தொகையில் பாதி தான் அந்த பெண்ணுக்கு தரபடுகிறது.

இஸ்லாமிய பீனல் கோட் அறுநூத்தி பத்து சட்டம் மிக கடுமையாக பெண்களை பாதிக்கிறது. இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் இன்னும் நாலு வருட தண்டனை முடிந்து வெளியே வரவில்லை.பரீபா எழுதிய நூல்கள் தடை செய்யப்பட்டுவிட்டன.

சூசன் என்ற பெண்மணி, மிக பெரிய பதவியில் அமெரிக்க நிறுவனித்தில் வேலை பார்த்தார். இவர் இரானிய நாட்டின் நடப்புகள் மற்றும் கொடுமையான சட்டங்களை வெளிஉலகுக்கு சொல்லும் விதமாக ஒரு வலைப்பூ தொடகினார். அதற்காக கைது செய்யப்பட்டு, அவர் வீட்டில் அவர் பிள்ளைகள் முன்பாக கடுமையாக அடிக்கப்பட்டார். அவரது கணினி,மற்று அவரது உடமைகளையும் எடுத்து சென்றது காவல் துறை.
முன்னணி பத்திரிகையாளரும் பெண் விடுதலைக்காக பாடுபட்டவருமான பாரீபா இன்றும் நாடு திரும்ப அஞ்சி வெளி நாட்டிலேயே தஞ்சமடைந்துள்ளார்.நாடு திரும்பினால் கைது செயபடுவது நிச்சயம் என்ற அச்சத்தில் உள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்..

இரானிய சட்டத்தில், பெண் ஒன்பது வயதானாலே தவறு செய்தால் தண்டிக்க படுவாள்.வீட்டில் நடக்கும் தவறுகளுக்கு அதிக பட்சமாக பத்து வருட தண்டனை வழங்கப்படும்.நாட்டின் சட்டத்தை மதிக்காவிட்டலோ,அல்லது அரசாங்கத்திற்கு எதிராக செயல் பட்டாலோ, உச்ச பட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்படும்.

சிறுமிகள் காதலித்தாலோ,திருமணதிற்கு முன் உடலுறவு கொண்டாலோ,கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.இஸ்லாமிய சட்டத்தை மீற முயல்வதாக கூறி தூக்கிலிடப்பட்டால் சிறுமி அட்டேபா.

"அவளுக்கு நாளை மரண தண்டனை “
“அதற்கென்ன …நிறைவேற்று”
“இல்லை. வந்து…. அவள் ஒரு கன்னிப் பெண்”
“ஓ… அப்படியா… அப்போ வழக்கம் போல், இன்று இரவு அவளைக் கெடுத்து விடு. அவள் சாகும்போது கன்னியாய் இருக்கக் கூடாது. அது முக்கியம் “
இது உரையாடல் உண்மை என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும். இதற்குச் சாட்சியாய் இருப்பவை ஈரானின் சிறைகளின் சுவர்களும், அங்கே எதிரொலிக்கும் கன்னிப் பெண்களின் அலறல்களும்.

ஈரான் நாட்டு பாசிஜ் ராணுவத்தினரின் வேலைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் ஒரு பாசிஜ் வீரர். ருகோல்லா கோமினி கண்டுபிடித்த இயக்கம் தான் இந்த பாசிஜ் மிலிட்டரி. அதாவது நாட்டிலுள்ள பதினைந்து வயதுக்கும் நாற்பந்தைந்து வயதுக்கும் இடைப்பட்டவர்களைக் கொண்டு கட்டி எழுப்பப்படும் ஒரு மக்கள் படை. 1979ம் ஆண்டு இது துவங்கப்பட்டது. “இரண்டு கோடி இளைஞர்களைக் கொண்ட ஒரு நாடு, இரண்டு கோடி போர் வீரர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்” எனும் அறைகூவலுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த இயக்கம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். அல்லது வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய முக்கியமான பணி நாட்டில் மத நம்பிக்கைகளைப் பரப்புவது. மத மீறல்களைத் தடுப்பது, வழிபாட்டு இடங்களைப் பாதுகாப்பது, போர்களில் ஈடுபடுவது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தலைவன் என்ன கட்டளையிடுகிறானோ அதை மறுப்புச் சொல்லாமல் நிறைவேற்றுவது.
கடந்த ஜூன் மாதம் ஈரானின் பிரதமாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மஹ்மத் அஹ்மதின்ஜா. இவருடைய தேர்தலே ஒரு பித்தலாட்டம் என அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பெரும்பாலான நாடுகள் பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டன. இந்தியா வழக்கம் போல வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு நமக்கெதுக்கு வீண்வம்பு என சைலண்டாகி விட்டது. ஈரானிலோ இவருக்கு எதிராய் பலத்த பலத்த போராட்டங்கள்.

இந்தப் போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 13 வயதான ஒரு சிறுவனும், 15 வயதான ஒரு சிறுமியும் அடக்கம். பார்க்கவே ரொம்ப சின்னப் பசங்களாக இருக்கிறார்களே என அவர்களை விடுவித்துவிட்டார் ஒரு பாசிஜ் வீரர். அவ்வளவுதான் அவரைத் தூக்கி ஜெயிலில் போட்டுவிட்டார்கள். காரணம் ஈரானின் பார்வையில் 9 வயதான சிறுமிகளும், 13 வயதான சிறுவர்களும் பெரியவர்கள்!

இவர் சமீபத்தில் “ஜெருசலேம் போஸ்ட்” பத்திரிகைக்கு அளித்த பேட்டி தான் உலகையே உலுக்கி எடுக்கிறது.
எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என் பெயரை சொல்ல மாட்டேன் என அச்சத்துடன் ஆரம்பிக்கிறார் அவர். நான் பாசிஜ் வீரன். பதினாறு வயதில் நான் பாசிஜ் குழுவில் சேர்ந்தேன். சேர்ந்தேன் என்று சொல்வது தவறு. எனக்கு சாப்பாடு போட வழியில்லாத அம்மா, எனக்கு சாப்பாடாவது கிடைக்கட்டும் என பாசிஜ் குழுவில் சேர்த்து விட்டார். இல்லாவிட்டால் பட்டினியில் செத்துவிடுவேனோ, அல்லது போதைக்கு அடிமையாகி விடுவேனோ எனும் பயம் அம்மாவுக்கு.

பாசிஜ் குழு வில் எக்கச்சக்க சிறுவர்கள் உண்டு. அவர்களுக்கு நிறைய அதிகாரங்கள் உண்டு. சிறு வயதிலேயே ரவுடிகளைப் போல அவர்கள் சுற்றித் திரிவார்கள். கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்வார்கள். இளம் பெண்களைப் பார்த்தால் “தொட்டு”த் தொட்டு சில்மிஷம் செய்வார்கள். இளம் பெண்கள் மறுப்புச் சொல்லாமல் ஒத்துழைக்க வேண்டும். இதெல்லாம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. ஒரு விதத்தில் இதெல்லாமே சிறுவர்கள் மீதான வன்முறைதான். என்றவர் தொடர்கிறார்.எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. தலைவன் அலி ஹமினீ இடும் செயலை நாங்கள் செய்கிறோம். கொல்வதோ, அழிப்பதோ, தடுப்பதோ எதுவானாலும் சொல்வதைச் செய்வேன்.பொதுவாக அரசுக்கு எதிரான கலவரங்களைத் தடுப்பதில் எங்களுடைய பணி கடுமையாகவே இருக்கும். ஆனால்…. என நிறுத்தியவர் பிறகு சொன்னவை தான் உலுக்கி எடுக்கும் சம்பவங்கள்.

கொஞ்ச நாட்கள் ஜெயிலில் பணியாற்றினேன். ஜெயிலில் ஏராளம் சிறுமிகளும், இளம் பெண்களும் இருப்பார்கள். ஒன்பது வயதாகிவிட்டாலே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்பது ஈரானியச் சட்டம்.

கன்னிப் பெண்களைக் கொல்ல சட்டம் இடம் தராது. அதனால் அதற்கு முந்தின நாள் இரவில் அந்தப் பெண்ணை ஒரு வீரன் முறைப்படி “கல்யாணம்” செய்து கொண்டு உறவு கொள்ள வேண்டும். அப்போது தான் மறுநாள் “சட்டப்படி” அவர்கள் கொல்லப்பட முடியும். கன்னித்தன்மையுடன் செத்துப் போனால் அவர்கள் சொர்க்கத்துக்குப் போய் விடுவார்கள் என்பது மதநம்பிக்கை.

இந்த காலகட்டம் தான் எனக்கு மிகவும் கடினமான காலம். 18 வயதிலேயே பெண்களைக் “கல்யாணம் செய்து கெடுக்கும்” பணியைக் கொடுத்தார்கள். எனது பணிக்காக எனது மேலதிகாரிகளெல்லாம் என்னைப் பாராட்டுவார்கள். என் மனது மிகவும் வேதனைப்படும். சின்னச் சின்னப் பெண்களெல்லாம் என் காலைப் பிடித்துக் கெஞ்சுவார்கள். அவர்களுக்கு மரணம் பயமில்லை, இந்த பாலியல் உறவு தான் பயம். எங்கே நரகத்துக்குப் போய்விடுவோமோ என பயந்து அலறுவார்கள்.

சில பெண்கள் நகங்களினால் தங்கள் முகம், கழுத்து உடல் என எல்லா இடங்களையும் கீறிக் கொள்வார்கள். கதறுவார்கள், தடுப்பார்கள். பலவேளைகளில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து தான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும். என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் சொல்கிறார் அவர்.

அந்த திருமணங்களெல்லாம் சட்ட பூர்வமானவை. எனவே சட்ட ரீதியாகவோ, மத ரீதியாகவோ நான் எதுவும் தவறு செய்யவில்லை. ஆனால் நான் செய்வது கொடுமை என்பது என் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும். எனக்கும் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உண்டு என கவலையுடன் முடிக்கிறார் அவர்.

மனித உரிமை மீறல் நடக்கும் இந்த விடயங்களை பார்த்து சேகரித்து நடவடிக்கை எடுக்க போவதாக கூறும் மனித உரிமை கழகம் (?) எப்போது நடவடிக்கை எடுக்கும்?? பத்திரிக்கை சுதந்திரம் வேண்டாம்..சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அது எமது பிறப்புரிமை ,என்ற இவர்களது குரல் எங்கும் ஒலித்து கேட்டக்க வேண்டியவர்கள் காதுக்கு போகுமா?

...மேலும்

Jul 24, 2010

லிவிங் ஸ்மைல் வித்யா கவிதைகள்


1.

நினைவில் பால்யம் அழுத்தும்
பொழுதுகளில்
தொலைபேசியில் அழைக்கிறாள் சகோதரி
உறவுக்கூடத்தில் சூன்யமாகிவிட்ட
என் பகுதியின் இருளை
தடவிக் கொடுத்தபடியே நலம் விசாரிக்கிறாள்
அலுவல், இருப்பிடம், போக்குவரத்து,
அனைத்தும் விசாரித்து முடித்தவள்
நடக்காது என்றாலும் நப்பாசையோடு
கேட்கிறாள் ஒருமுறை வீட்டுக்கு வந்துட்டு போயேன் என்று
அவதாரத்தை சகிக்க முடியாதவளுக்கு
ஆன்மாவையாவது சந்தித்துவிடும் பிரயாசை போலும் !!

2.

தத்தி தத்தி நடைபயிலும் உன் கடவுளும்,
அலுவல் நோக்கி விரையும் என் இயந்திரமும்
கடக்கும் அன்றாடக் குறுகிய பொழுதில்
பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் புன்னகையில்
ஆசிர்வதிக்கிறாள் ஒரு தாய்
அசந்தர்ப்பமான ஒரு நாளில் என்
நிர்வாணத்தை தலைகீழாய் குலுக்கிப் பார்த்த
உன் தகப்பனையும்
அவன் உலகத்திற்குள்ளாக
நீ நுழையவிருக்கும் குறுகிய தினத்தையும்
நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்
அதே தாய்,
எக்காரணம் கொண்டும் கபடற்ற உன் புன்னகை
மாறிடக் கூடாதென்ற பரிதவிப்புடன் நானும்

3.

தனிமையின் கண்ணீர் துளி போல
உறவுகளை துடைத்து விட்டோம்
நிர்வாண பொழுதின் ரத்தம் போல
அடையாளங்கள் மெல்ல மறைந்து போனது
நீண்ட நேரம் அடக்கிய மலம் போல
வெளியேறின சில புறச்சிக்கல்கள்
ஏதேதோ இழந்தும், பெற்றும்
கம்பீரமாய் நிற்கிறாள்
நான்
எனும் பெண்.

நன்றி - லும்பினி
...மேலும்

Jul 23, 2010

ஆமென்...மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் - கொற்றவை


பாவிகளின் வீதியில்
தனக்கான வெளித்தேடி
குதம் சிறுத்தைலைகிறது மன்னிப்பெனுமொரு சொல்

பாலைவனத்தில் நீர் கண்ட பறவையின்
வேட்கையுடன்
என்
மென்னிதயமதைப் பற்றியே தீருவேன் என நெருங்க
தன்னலமெனும் தோலை அதனுடலில்
தேமலெனக் காண்பித்தேன்

கண் பார்த்து காதலுடன் முத்தம் ஈனும்
கணவனை
பேரதிர்ச்சியுடன் வியக்கும்
மனைவி போல்
விழிகள் விரித்தது அச்சொல்

அதனர்த்தங்களில் மறைந்துள்ள
பெருந்தன்மையெனும் திரவத்தை பீய்ச்சி
குற்றவுணர்வுகளை சமைத்ததனை
நுகரச்செய்தேன்

பற்றியிருக்கும் நாற்காலியையும்
கிரீடத்தையும் விட்டெறியுமாறு
கட்டளை வீச

பிச்சையென
சொற்கள் வாங்கி
சுற்றிக்கொண்ட வார்த்தைகளின் துர்நாற்றம்
காற்றை விஷமாக்கிக் கிழிக்கிறது

யூதாசின் முத்தம்
பிலாத்தின் கைகள்
உங்கள் மன்னிப்பு

நன்றி - லும்பினி
...மேலும்

Jul 22, 2010

பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – மு.வி.நந்தினி


உதடுகளில் சாயத்தோடும், தோளில் பையோடும் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் உங்களைக் கடந்து போகும் போது நீங்கள் நினைக்கக்கூடும், ‘பாருங்கப்பா பெண்கள் எவ்வளவு முன்னேறிவிட்டார்கள்’ என்று. அப்படி நினைத்தீர்களானால் உங்களுக்கு பெண்களின் வாழ்நிலை குறித்தோ, அவளின் இருப்பு குறித்தோ எந்தவித அக்கறையும் இல்லை என்றே சொல்வேன். வார்த்தைகள் தடிப்பானவையாக இருக்கலாம். ஆனால் நண்பர்களே நான் சொல்வது உண்மையிலும் உண்மை. பெண் ஜனாதிபதியாகிவிட்டார், பெண் முதலமைச்சர் ஆகிவிட்டார், பெண் அதுவாகிட்டார், இதுவாகிவிட்டார்…எதுவானாலும் பெண் எப்போது பெண்ணாக இருந்திருக்கிறாள்?

___________________________________________________

பெண்? திருமணத்துக்கு முன்…

“ஆண் குழந்தைகளோடு விளையாடக்கூடாது. தனிமையில் ஆடினாலும் சொப்பு வைத்து சோறு வடி. வீட்டு வாசலைத் தாண்டி தெருவுக்கு போய்விடக்கூடாது. அப்படி போனால் அப்போதே அவளின் எதிர்காலம் பெற்றோருக்கும் உற்றோருக்கும் தெரிந்துவிடும். வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே இது இழுத்துக்கிட்டு போகப் போவுது பார்த்துக்க.

வீட்டை விட்டு வரக்கூடாது, ஆண்கள் வீட்டுக்குள் வந்தால் கக்கூஸுக்குள்ளோ கிச்சனுக்குள்ளோ அடைக்கலம் புகுந்து கொள். தலைவாரி-பொட்டு வைத்து-பூச்சூடு (பின்னாளில் கணவனை கவர்ந்து கைக்குள் போட்டுக் கொள்வதற்குத்தான்). பாத்திரம் கழுவு, வீட்டைக் கழுவு, அண்ணன்-தம்பி குண்டியைக் கழுவ (கணவன் வீட்டில் உள்ள அத்தனை பேரின் அத்தனையையும் கழுவ பயிற்சி) கற்றுக்கொள்.”

“வயசுக்கு வந்த பொண்ணுக்கு படிப்பெதுக்கு? சேர்த்து வைத்த தட்சணையை வரனுக்கு கொடுத்து தத்தளித்துக் கொண்டிருப்பவளை கரை சேர்த்துவிடலாமில்லையா? படிக்கப் போனவள் வீடு வந்து சேர்வதற்க்குள் மடியில் இருக்கும் நெருப்பு கனன்று கொண்டே இருக்கும், எப்போ அவள் பத்திக்குவாளோ என்று. வீட்டு பட்ஜெட்டில் மாசமாசம் பெரிய்ய சேலையோ வேட்டியோ விழுந்தாலும் கூட படித்தவள் வேலைக்குப் போகக்கூடாது. வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொடுத்து ஒண்ணும் ஆகப்போறதில்லை. சீவிச் சிங்காரித்து (கவனிக்க…வீட்டில் இருக்கும்போது பயிற்சிக்காக மட்டுமே இதை செய்ய வேண்டும்) அப்படியே வேலைக்குப் போனாலும் வரதட்சணைப் பணத்துக்குத்தான் ஆகப்போகுது. காலகாலத்துல கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துக்காம அப்படியே இருந்து புரட்சி செய்யப்போறீயா?”

______________________________________________

திருமணத்துக்குப் பின்…

“கணவன் + அவன் குடும்பத்தினர் அத்தனை பேரின் கால்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு வீட்டு வேலையைச் செய். வேலைக்குப் போனாலும் இந்த சாஷ்டாங்க சடங்கை செய்தாக வேண்டும். புர்காவைப் போல சுடிதார் இருக்க வேண்டும். புடவை கவர்ச்சியான உடை என்பதை ஆண்கள் தெரிந்து கொண்டுவிட்டார்கள். கழுத்தில் தாலியும் கால்களில் மெட்டியும் குளிக்கும் போதுகூட கழற்றப்படக்கூடாது & அப்படி கழற்றினால் நீ வேசையாவாய்! ஏனெனில் தாலியும் மெட்டியும் இல்லாமல் உன்னைப் பார்க்கும் ஆண்கள், உன்னை வசீகரித்து, உன்னிடம் கள்ளக்காதல் கொள்ள ஏதுவாகப் போய்விடும்.”

“புத்தகம் படிக்கக்கூடாது, பேப்பர் படிக்கக்கூடாது. சிறந்த குடும்பப் பெண் ஆவது எப்படி என கற்றுத்தரும் சீரியல்களையும் கணவனை முந்தானையில் முடிந்து கொள்ளும் ரகசியத்தைச் சொல்லும் பெண்கள் பத்திரிகைகளையும் பார்க்கலாம், படிக்கலாம். திருமணம் ஆன அடுத்த நாளே வாந்தி எடுக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அதற்கு அடுத்த நாள் வாழைப்பழத்தோடு புள்ளைப்பூச்சியை விழுங்க வைத்து (டெஸ்ட் டியுப் பேபி போன்ற நவீன சிகிச்சை முறையெல்லாம் வந்துடுச்சே என்கிறவர்களுக்கு பாரம்பரியத்தை போதிக்க ஆட்டோவில் ஆள் அனுப்பப்படும்) பிள்ளை பிறக்க வழி செய்யப்படும். அப்படியும் எந்த பூச்சியும் பிறக்கவில்லை என்றால் காத்துக்கிடக்கும் மலடி பட்டம். மலடன் என்கிற வார்த்தை தமிழில் இல்லையாம்! பிள்ளை பிறந்துவிட்டால் கழுவும் வேலையை செய். வேலைக்குப் போவதற்கு பெரிய முற்றுப்புள்ளி வை. பிறகு வாழ்க்கை முழுவதும் ஏராளமான முற்றுப்புள்ளிகளை வைக்கக் கற்றுக் கொள்.”

___________________________________________________

தினக் கூலியாக இருந்தாலும் கார்ப்பரேட் கூலியாக இருந்தாலும் பெண் என்பவள் மேலே சொல்லப்பட்டிருக்கும் வரையறைகளுக்குள் வளர்க்கப்பட்டவளாகத்தான் இருப்பாள். வரையறைகளை மீறுவதற்கும் அப்படியே மீறி வந்தால் ஏற்றுக்கொள்வதற்கும் இந்த சமூகம் ஒருபோதும் இடம் தராது. ஆணின் சுகிப்புக்கும் அவனது வாரிசை உருவாக்குவது உள்ளிட்ட தேவைகளுக்குமே பெண் வளர்க்கப்படுகிறாள். இந்த வரையறைகளை வகுத்தவர் யார் ?

இதற்கு இந்த சமூகத்தின் ஒவ்வொரு துரும்பையும் குற்றம் சொல்ல வேண்டியிருக்கும். குற்றம் சொல்வது இருக்கட்டும், இந்த வரையறைகள் எல்லாம் அப்பட்டமான பெண்ணடிமைத்தனம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்-? அழுக்கு மூட்டைகளுக்கு கலாச்சாரம், பாரம்பரியம் என்று பெயர் கொடுத்திருக்கும் இந்திய சமூகத்தின் அவலம் இது.

என்னைப் பொறுத்தவரை ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்கள்! நம்பகத்தன்மை இல்லாதவர்கள். தன்னைப் பற்றிக்கூட அவர்கள் எப்போதும் சந்தேகித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பலவீனத்தை மறைக்கத்தான் மதம், கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், இத்யாதி…இத்யாதி சமாச்சாரங்கள் எல்லாம் தேவைப்படுகின்றன.

ஆண்களின் தேவைக்காக, ஆண்களால் உருவாக்கப்பட்ட இத்யாதி வகையறாக்கள் பெண்களுக்கு கண்ணும் கருத்துமாக போதிக்கப்படுகின்றன. ஞானம் பெற்ற பெண்கள் அவற்றை, தலைமுறை தலைமுறையாக தாங்கள் பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள். இந்த சங்கிலித் தொடர் செயல்பாட்டில் ஏதேனும் மாறுதல் வரும்போது ஆண் இனம் சீறிப் பாய்கிறது.

______________________________________________


இறுதியாக இறைஞ்சுதல்…

பெண் உயர்ந்தவள்-ஆண் தாழ்ந்தவன் என்கிற தர்க்கம் இப்போது தேவையே இல்லை. பெண்ணை சக உயிராகக் கூட மதிக்காத சமூகத்தில் பெண்ணின் மேன்மை குறித்து பேச என்ன இருக்கிறது? என்னைச் சுற்றியுள்ள பெண்களின் நிலைமையை கூர்ந்து பார்க்கும்போது, மிகுந்த மனஉளைச்சலும் வெறுப்புணர்வும் ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒருவகையில் பிரச்சினை என்றால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இரண்டு வகையிலும் பிரச்சினைதான். நான் பணியாற்றும் ஊடகத்துறையில் இரண்டையும் சமாளிக்க முடியாமல் எத்தனை பெண்கள் ஓடி மறைந்துவிட்டார்கள் தெரியுமா?

சக பணியாளர்களான ஆண்களின் கிசுகிசுக்களும் தன் குடும்பத்தாரின் நிர்பந்தமும் பெண்களை சமையலறைக்குள் துரத்திக் கொண்டிருக்கின்றன. ஊருக்கே கலெக்டராக இருந்தாலும் வீட்டு வேலை செய்யாத பொம்பளை பொம்பளையே இல்லை! என்பது போன்ற சினிமா வசனங்களை உச்சரித்து, பெண்களுக்கு பாடம் நடத்தாத ஆணைப் பார்ப்பது அரிதாகத்தான் இருக்கிறது.

இங்கே இன்னொரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெண்ணடிமைத்தனத்தை சிதைக்காமல் காப்பாற்றும் வேலையை இந்திய சினிமாக்கள் கச்சிதமாகச் செய்கின்றன. சினிமாவைப் பார்த்து பால் குடித்து, சினிமாவைப் பார்த்து உடையணிந்து, சினிமாவைப் பார்த்து மோகம் கொள்ளும் ஆண்களிடம் எப்படி மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?

சினிமாவில் பேண்ட் அணிந்த கதாநாயகியைப் பார்த்து காமுறும் கதாநாயகனை சுவீகரித்துக் கொண்ட ஆணுக்கு, தன் வீட்டுப் பெண் வசதிக்காக பேண்ட் அணியும் போது மற்ற ஆண்கள் அவளைப் பார்த்து காமுறக்கூடுமே என்கிற எண்ணம் மேலோங்குகிறது. அறியாமையில் இருக்கும் ஆண்களைவிட ‘புரட்சி’ பேசுகிற ஆண்கள் ஆபத்தானவர்களாகப் படுகிறார்கள். இவர்களுடைய புரட்சி என்பது ஏட்டு சுரைக்காய் போல, வாழ்க்கைக்கு உதவாது. நீண்ட கூந்தலில் பூச்சூடி, வட்ட பொட்டு வைத்து தாவணிப் போட்ட கிராமத்துப் பெண் வேண்டும் என்று தேடிப்பிடித்த புரட்சிகர ஆண்களை கண்டு புன்முறுவலடைந்திருக்கிறேன்.

திருமணம்தான் பெண்களை முடக்குவதில் முக்கிய நிறுவனமாகச் செயல்படுகிறது என்கிற காரணத்தால்தான் பெண்ணைப் பற்றி சொல்வதற்கு திருமணத்துக்குப் பின், முன் என்று பிரித்துக் கொண்டேன். திருமண அமைப்பே வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு நாம் இன்னும் செல்லவில்லை. அதுவரைக்கும் இப்போதிருக்கிற அமைப்பில் இயங்குவது சமூகத்தை பின்நோக்கித்தான் செலுத்தும்.. நாம் வேண்டுவதெல்லாம் அமைப்பில் மாற்றம் வேண்டும் என்பதே. திராவிட பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கிற கட்சிகளும், இயக்கங்களும் இந்த விஷயத்தில் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்கிற கேள்வியும் இந்நேரத்தில் எழுகிறது. இப்போதிருக்கும் ஊடக வளர்ச்சியை ஏன் இந்த இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்ள மறுக்கின்றன?

திரும்ப திரும்ப பெண்ணை குடும்பம்-திருமணம் என்கிற வட்டத்துக்குள் வைத்து மட்டுமே விவாதத்திற்கு உட்படுத்துவது (சிறப்பு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் எங்கள் எல்லோருடைய கருத்தும் இந்த புள்ளியில் இணைவது எதிர்பாராதது அல்ல) பலருக்கு எரிச்சலூட்டலாம். முதலில் மாற்றம் ஏற்பட வேண்டியது இந்த அமைப்புகளில்தான். அதுதான் எங்கள் எல்லோருடைய இறைஞ்சுதலும். கணவன், தகப்பனாக இருக்கிற ஆண்கள்தான் வேலையிடங்களிலும் சக பணியாளர்களாக இருக்கிறார்கள். குடும்பத்தில் மாற்றம் பிறந்தால் அது வேலையிடத்திலும் பிரதிபலிக்கும்.

மற்றொரு புறம் அமைப்புகளை தூக்கி எறிந்து புரட்சி செய்கிற பெண்களின் மீது படும் முதல் கல், ஓர் ஆணுடையதாகத்தான் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் புரட்சி, தொடர் இயக்கமாக நீடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமே ஆண்களின் அறியாமையை அவர்களுக்கு உணர்த்தாமல் விட்டதுதான். பெண்ணின் நிலையை உணர்ந்து பார்க்கும் ஆணால்தான் மாற்றத்தை துவக்கி வைக்க முடியும். பெண்ணிய இயக்கங்கள் இனி செயல்பட வேண்டியது ஆண்களிடத்தில்தான்!

இத்தகையதொரு உரையாடலை துவக்கி வைத்திருப்பதற்கும், பங்கேற்க அழைத்தமைக்கும் வினவுக்கு நன்றி…

_________________________________________________

- மு.வி.நந்தினி

(ஊடகவியலாளர், சென்னையில் வாழ்கிறார். நந்தினியின் வலைப்பூ: mvnandhini
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்