/* up Facebook

Jun 22, 2010

சாதியின் சுமையும் செக்ஸ் கவிதைகளும் - கவிதா


ஜனவரி 3ந்தேதி உயிரெழுத்து பதிப்பகம் நடத்திய நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு நானும் முரளியும் சென்றிருந்தோம். நண்பர்களைப் பார்ப்பதற்காக நாங்கள் இந்த விழாக்களுக்கு போவதுண்டு. குறிப்பிட்ட அந்த விழாவில் பல ஹைலைட்டுகள்.

எனக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாகப் பட்டன. ஒன்று, விழாவுக்கு தலைமை தாங்கிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் அப்துல் ரகுமானைப் புகழ்ந்து சொன்ன சில வார்த்தைகள். பல வருடங்களுக்கு முன்பு தனது மகளுக்கு எழுத்தாளர் கோட்டாவில் எம்.பி.பிஎஸ் சீட் பெறுவதற்கு அப்துல் ரகுமான் காரணமாக இருந்தார் என்று குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். தனது மகள் 600க்கு 596 மார்க்குகள் எடுத்ததாக சொன்னார் அவர். “அதற்கு மேல் அவளால் எடுத்திருக்க முடியாது. ஆனால் நான் பிறந்து வளர்ந்த சாதியின் சுமை காரணமாக அவளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை” என்று சொன்னார். பிறகு பேசிய யாரோ ஒருவர் அவர் பிள்ளைமார் இனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார்.

2006ல் International Dalit Solidarity Network என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வகுப்பறைகளில் கடைசி பெஞ்சுகளில் உட்கார கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களுடன் சேர்ந்து மற்ற சாதியினர் உணவருந்துவதில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. இந்திய அரசின் ஒரு அறிக்கைப்படி கிட்டத்தட்ட 73 சதவிகிதம் தலித் மாணவர்கள் பள்ளியிறுதி முடிவதற்குள் பள்ளியிலிருந்து விலகி படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். காரணம், பள்ளிக்கூடங்களில் அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலேயே பல பள்ளிகளில் கழிவறைகளை கழுவவும் வகுப்பறைகளை கூட்டவும் தலித் குழந்தைகள்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.

இதில் எதுவும் நாஞ்சில் நாடனின் மகளுக்கு நிகழ்ந்திருக்காது. அவருடைய பள்ளிக்கூட படிப்பு மிகவும் உயர்தரமான ஒன்றாக இருந்திருக்கும். தலித் மாணவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

நாஞ்சில் நாடன் சாதியின் சுமை என்று எதைச் சொல்கிறார்?

அப்துல் ரகுமானை பாராட்டும் அவசரத்தில் அவரை ‘ஆண்மையுள்ள கவிஞர்’ என்றும் குறிப்பிட்டார். ஆண்மை என்பதற்கு சமூகம் வைத்திருக்கும் போலியான வரைமுறைகளுக்கு நாஞ்சில் நாடன் என்னும் மகா எழுத்தாளனும் தப்பவில்லை.

ஆனால் சும்மா சொல்லக்கூடாது. பிறகு பேச வந்த அப்துல் ரகுமான் ‘ஆண்மையுள்ள’ ஒரு கவிஞராகவே நடந்துகொண்டார். அவரது பேச்சில் ஆணாதிக்கம் மிளிர்ந்தது. சக்தி ஜோதியின் கவிதை தொகுப்பை வெளியிட்டு பேசியவர், ‘செக்ஸ் கவிதைகள்’ எழுதுவதாக இன்றைய பெண் கவிஞர்களை கடுமையாக சாடினார். “நீங்களெல்லாம் ஏன் எழுதறீங்கனு இருக்கு. பின் பக்கம் எழுத போக வேண்டியதுதான். ஏன் இலக்கியம் பக்கம் வர்ற?” என்று மிகக் தரக்குறைவாக பேசினார். உச்சபட்சமாக, சக்தி ஜோதியின் கவிதை ஒன்றை வாசித்துக்காட்டி, ‘”இதுவும் செக்ஸ் கவிததான். ஆனா எப்படி இருக்கு பாரு. நாகரீகமா பண்பாடு மீறாம இருக்கு, நீயும் எழுதறியே?” என்று ஏக வசனம்.

பெண் கவிஞர்கள் எழுதும் கவிதைகள் பாலியலை அரசியலாக்குகிறது. பாலியல் அடிப்படையில் பெண்ணுடல் மீது ஆதிக்கம் செலுத்த விழையும் ஆணாதிக்கப்போக்கை கேள்விக்குட்படுத்துகிறது. இது எதையும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க மனதின் வெளிப்பாடே அப்துல் ரகுமான் போன்றவர்களின் விமர்சனங்கள், ‘செக்ஸ் கவிதைகள்’ என்று கொச்சைப்படுத்துதல்கள்.

விழாவுக்குப் போகாமல் இருந்திருந்தால், நாஞ்சில் நாடன் மீதிருந்த மரியாதை எஞ்சியிருக்கும்.

நன்றி - நீரோட்டம்

5 comments:

Anonymous said...

வரிக்குவரி வழிமொழிகிறேன். மிகச் சிறப்பான கட்டுரை.
- ஷோபாசக்தி

vasan said...

மேடை கிடைத்த‌வுட‌ன், மைக் பிடித்த‌வுட‌ன்,
பொன்னாடை விழுந்த‌வுட‌ன், அறிய‌ப்ப‌டுகிறோம்
என்ற ம‌ம‌தை வ‌ந்த‌வுட‌ன், சில‌ருக்கு சிலிர்ப்பு
வ‌ந்து அதுவ‌ரை அணிந்திருந்த‌ முக‌மூடி நழுவி
நிஜ‌ முக‌ம் வ‌ந்து விடும். ம‌ய‌க்க‌த்தில் த‌ன் சுய‌த‌ரிச‌ன‌ம்.

Anonymous said...

கவுன்சிலிங் போய் உக்காந்த,அந்த கஷ்டம் தெரியும்.
நாஞ்சில் நாடனை முற்றிலுமாக வழிமொழிகிறேன்.

Anonymous said...

கவுன்சிலிங்கிற்குப் போய் உட்கார்ந்தா என்ன கஷ்டம் தெரியும்? எழுதும் பொருளுக்கு சம்பந்தமில்லாமல் ஒரு கருத்து. நாஞ்சில் நாடன் மகளுக்குக் கிடைக்காத அந்த எம்பிபிஎஸ் இடம் அவரைவிட கூடுதல் மதிப்பெண் எடுத்த பிள்ளைமார் பெண்ணுக்கோ, ஒன்றிரண்டு மதிப்பெண் குறைவாகப் பெற்ற பிற்படுத்தப்பட்ட பெண்ணுக்கோ, பையனுக்கோ கிடைத்திருக்கும். ஜாதி வெறி அவ்வளவு சீக்கிரம் போய்விடாது போலிருக்கிறது.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

600க்கு 596 மார்க்குகள் எடுத்த பெண்ணுக்கு மருத்துவராக தகுதியில்லையா. இது மிகவும் வேதனையானது. இதற்கு சாதி சாயம் பூசும் அன்பர்களே, அந்தப் பெண்ணின் கனவு சின்னாபின்னமானது பற்றிய கவலை இன்றி, எதை பேசிக் கொண்டு இருக்கின்றீா்கள்.

அவளை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு அந்த இடம் போனதென்றால் பராவியில்லை. அவளை விட குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு செல்வது ஞாயமா.

தகுதியிருந்தும், அதற்கான உழைப்பு இருந்தும் இங்கு நடக்கின்ற மோசடிகளை மௌனமாக்கிவிட்டு, பள்ளி பிள்ளைகளுக்கு நடைபெறுகின்ற கொடுமைக்கு சொல்வதில் திசை திருப்பும் வேலையே நடந்திருக்கிறது இந்த கட்டுரையில்,.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்