/* up Facebook

Jun 15, 2010

மதிப்பிற்குரிய ஆண்களே இதைப் படிப்பீராக - யமுனா ராகவன்


நான் பல வேலைகளில் யோசித்தது உண்டு, என்ன தான் செய்யவேண்டும் நான், மனம் புழுங்கி, வருந்தி சொல்லவரும் விஷயங்கள் உங்கள் காதில் விழ, அங்கீகரிக்கப்பட, மாற்றம் வரும்படியான மனநிலை உருவாக என்று. இதுவரை பிடிப்படவில்லை, இனியாவது பிடிபடுமா எனவும் தெரியாது எனக்கு.

என்னையோ, இல்லை என்னை போலவே தொலைந்த முகங்கள் கொண்ட பெண்களையோ நீங்கள் கட்டாயம் பார்த்திருக்கலாம், பார்த்திருப்பீர்கள், பார்க்க நேரலாம். கடக்கும் நிமிடங்களை இறுகப்பற்றி, நேற்றைகளையும் நாளைகளையும் மறந்த எங்களுக்கு இன்னும் பேர் வைக்கப்படவில்லை. எங்களை கண்டுப்பிடிப்பது அத்தனை கஷ்டமில்லை. நாங்கள் அசின்களோ, தமன்னாக்களோ, ஐஷ்வர்யா ராய்களோ நிச்சயம் இல்லை. Matrimonial column தாங்கி வரும் Tall, Fair and Pretty பெண்கள், ஒரு 85% நாங்களாக இருக்க வாய்ப்பில்லை. சுமார் அழகாய், சுமார் புத்தியோடு, சுமார் பணத்தோடு, சுமார் படிப்போடு, சுமார் வேலையோடு எங்கள் வாழ்க்கையை கடந்து, வந்த வழி திரும்பிப் பார்த்து வெதும்பி குமுற மட்டுமே தெரிந்த இந்த முதுகெலும்பில்லா கூட்டத்தில் நானும் ஒருத்தி. பேச்சு வழக்கிற்கு நாங்களை நான் என்றே வைத்துக்கொள்ளலாமா... புரிந்து கொள்வீர்கள் என்று நம்புவோமாக!

மூலக்கடையில் நீங்கள் விட்ட சிகரெட் புகையின் ஊடே, நான் உங்களை கடந்திருப்பேன். வெண்டைக்காய், தக்காளி பார்த்து வாங்குவதில் முனைப்பாய் இருந்தப்போது தெரிந்த என் இடுப்பை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். பஸ்ஸில் இடிபட்டு இடமின்றி நிற்க, என் பின்பகுதியை தேய்த்துக்கொண்டு உங்கள் உறுப்புகளின் வேட்கையை சிலநிமிடம் தீர்த்துக்கொள்ள, அறுவெறுப்பாக உணர்ந்தாலும், வீட்டில் நேற்று என்னை அடித்ததில் வலித்த கன்னத்தையும் உடைந்த தன்மானத்தையும் யோசித்து கொண்டு ஒன்றும் சொல்லாது வந்ததில், பஸ் விட்டு இறங்கி, உங்கள் நண்பர்களிடம், ``மாம்ஸ்! இன்னைக்கு பஸ்ல ஒரு Aunty செமயா company குடுத்தாடா!`` என்று பீற்றிக்கொள்ள வைத்தது நானாக இருக்கலாம். பல சமயங்களில் வெறும் மார்பகமாகவோ, பிட்டமாகவோ, இடுப்பாகவோ கூட நான் உங்களுக்கு தெரிந்திருப்பேன். ``காலைலயே என்னமோ புருஷன் செத்தாப்புல எப்புடி இருக்குது பாரு, விடியாமூஞ்சி!`` என்று வாய் விட்டோ, மனத்திற்குள்ளேயோ திட்டினாலும், ஒன்றுமே உறைக்காது காப்பி போட்டு, காலை சமையல் செய்து நீங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுப்பவள் நானாக இருக்கலாம். அலுவலகத்தில் நேரத்திற்கு வந்து வேலையை மட்டுமே கவனித்து, பாராட்டப்பட்டால், ``இதையும் அதையும் காட்டியே வேலை முடிச்சிக்கிறாளுங்க`` என்று சொன்னதும் என்னை பற்றி இருக்கும். ஆக மொத்தம் இப்படி நீங்கள் காணும் திசை, ஊர், நாடு முழுக்க இருப்பினும், அரூபமான என்னை நீங்கள் உற்றுத்தேடித்தான் கண்டுப்பிடிக்க முடியும்.

திமிர் பிடிச்ச பேச்சு, தெனாவட்டு பார்வை, எவன் கூடவேணும்னா போகலாம், குறைந்த பட்ச ஆடைகள் போடுவது, பிறப்புறுப்பை பற்றி பேசுவது ஆகியவைதான் பெண்ணியம் என்று நீங்கள் நினைத்திருப்பீரெனில் மேற்கொண்டு படிக்கவும். ``எதற்கு இத்தனை பேர் பெண்ணியம் பற்றி பேசுதுங்க, அவர்களுக்கு தான் எத்தனை சலுகைகள், இன்னும் என்னதான் வேணும் இந்த எழவெடுத்ததுங்களுக்கு!`` என்று சொல்வீரேயானாலும் மேலே படிக்கவும்.

வேதக்காலத்தில், ஆணும் பெண்ணும் சமமாக இருந்ததாகவும், எல்லாமே கற்றுத்தெரிந்துக் கொண்டார்கள் பெண்கள் என்று பல வேதங்கள் சொல்கிறது. எப்போது இருந்து மாறியது இந்த நிலை. 500 BCக்கு மேலே, ஆரியர்களும், இஸ்லாமியர்களும் வந்ததால் குடைசாய தொடங்கியதாம் பெண்களுக்கான மரியாதை. மிதிப்பட்டு, நசுங்கி, அடுப்பங்கரை நெருப்போடு கரிபடிந்து, இரவுகளில் பேசாது புணர்ந்து, பிள்ளை பெத்துப்போடும் இயந்திரங்களாகி, பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சுதந்திரம் செத்து நடைபிணங்களாக மாறிப்போனார்கள். அவர்களுக்கு எதிராக நடந்த எதுவுமே வரலாற்றில் பதியவில்லை. பதிக்கப்பட்டவைகளும் ஆண்களின் வக்கிரத்திற்கு மைல்கல்லாகி போன மேற்கூறிய விஷயங்கள் தான். படங்களில் பார்த்தோ, புத்தகங்களில் படித்தோ இருக்கலாம் நீங்கள்.

Early vedic period சமயத்தில், பெண்கள் 20 வயது மேலே தான் பெரும்பாலும் மணந்ததார்களாம், திருமணம் செய்யும் ஆணை தேர்ந்தெடுக்கும் உரிமைகூட இருந்ததாம், ஆனால் பெண்ணினம் அதன் பின் தாங்க நேர்ந்த துரதிர்ஷ்டங்கள் பல்வேறு. 70 வயது ஆணிற்கு கூட 10, 12 வயது பெண்ணைக்கூட திருமணம் செய்ய பால விவாக உரிமை, இன்னும் sathi ( உடன்கட்டை ஏறுதல் ), jauhar ( தோற்ற நாட்டின் பெண்கள் அத்தனை பேரும் அடுத்த நாட்டிற்கு உரிமை பொருள் ஆவது.. எவன் வேண்டுமானாலும் புணரும் குப்பைத்தொட்டி ஆவார்களாம். இது இன்னமும் நடந்துக்கொண்டே தானே இருக்கிறது ), தேவதாஸிகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று நீண்டுகொண்டே போகும் பட்டியல் முழுக்க கண்ணீர், ரத்தவாடை, திரும்ப பேசமுடியாது அடங்கி போன உறுப்புகள் தான், வரலாற்றின் பக்கங்கள் முழுக்க.

``இன்னும் எத்தனை நாட்கள் தான் பேசுவீர்கள் இதையே. ஆமாம் அந்த காலத்தில் இப்படி தான் இருந்தார்கள், இறந்தார்கள். அதற்கு இப்பொது என்ன செய்வது`` என்று ஒரு வேளை உங்களுக்கு தோணலாம். தோணும். பழைய கதையை விடுவோம். இப்போது நம் சமயத்திற்கு time travel செய்யலாம். பெண்கள் படிக்கிறார்கள், ஆண்களை காட்டிலும் பெரிதாய். பெண்கள் கால்வைக்காத துறையே இல்லை. இதனை கேட்கும்போது பெருமையாக இருக்கிறது, நிஜமாகவே. ஒடுக்கப்பட்டு இருந்த நிலையில் இருந்து எழுந்து நிற்க முயலும் கம்பீரம் தாங்கிய பெண்ணினம் பற்றி யோசிக்கும் போது. ஆனால் இத்தனைக்கு நடுவிலும், சமீபத்தில் பார்த்த ஒரு statistics சொல்வது உங்களோடு பகிரவா?

ஐக்கிய நாடுகள் சபை (UN) சொல்கிறது, ஒரு நிமிடத்திற்குள் 3 பெண்களுக்கு அநீதி நிகழ்கிறதாம், 7 நிமிடத்திற்குள் ஒரு பெண் கணவனாலோ அவன் குடும்பத்தினராலோ கொடுமைப் படுத்தப்படுகிறாளாம், 30 நிமிடத்திற்குள் ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் படுகிறாளாம். இந்த எண்கள் உங்களுக்கு ஏதாவது சொல்கிறதா.. சர்வ நிச்சயமாக ஒன்றும் சொல்லியிருக்காது. இப்படி வைத்துக்கொள்ளுங்களேன். இந்த கடிதம் நீங்கள் படித்து முடிக்கும் போது உங்கள் அறையின் உள்ளேயோ, நீங்கள் இருக்கும் அலுவலக அறையின் தரையிலோ, இந்த பெண்களை உங்கள் அருகிலோ, எதிரிலோ, நிற்கவோ அமரவோ கிடத்தியோ பாருங்கள். அரைமணி நேரத்தில் உங்களை சுற்றி 90 பெண்கள் அழுதுக் கொண்டிருக்கலாம். ஒரு நான்கு பெண்கள் அடிவாங்கி வெவ்வேறு உடல் மனக்காயத்தோடு அமர்ந்து கொண்டிருக்கலாம். ஒரு பெண் நிச்சயம் துணிகிழிந்து, ரத்தம் ஒழுக, ஒருவனாலோ அல்லது பலராலோ பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவோடோ, இன்றியோ கிடக்கலாம்.

அட போகட்டும் ஐய்யா... ஒரு மணிநேரத்தில் குவியும் உடல்களை கணக்கு போட உங்களுக்கெல்லாம் நேரம் இல்லை. உங்க நேரம் IPL, நித்தியானந்தா, Airtel, மத்திய சாப்பாடு, Hero Honda, மட்ட வெயில், car, ரோட்டின் traffic, சிகரெட், காலை முதல் மாலை வரை உங்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் வேலை, உங்களை தாண்டி போகும் Figure, sms இன்னும் இது போல extra விஷயங்களை பார்க்கவே நேரம் போதாது. இதில் நீங்கள் தாண்டி போகும் 2 பெண்களில் நிச்சயம் ஒருவர் அவர் வீட்டிற்குள்ளேயே எதாவது ஒரு விதத்தில் domestic violence அனுபவிப்பவர் மற்றும் திருமணமான மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கட்டாயம் இக்கொடுமை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் தன் வாழ்க்கையில் எல்லா பெண்களும் ஒரு முறையேனும் இப்படி கட்டாயம் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார் என்னும் விஷயம், உங்களுக்கு தேவை இல்லாதது தான்.

பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும், எப்படி உடுத்த வேண்டும், எப்படி அடக்க ஒடுக்கமாக நடக்கவேண்டும் என்று நம் 25 வயது முதல் 60 வயது வரை உள்ள கதாநாயகர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக் கேட்டு கைத்தட்டவும், ``சரியா சொன்னாருடா`` என்று சீட்டி அடிப்பது தானே உங்களுக்கு பிடிக்கும். நான் புடவையிலோ, சல்வாரிலோ, ஜீன்ஸிலோ, நைட்டியிலோ எந்த உடையில் இருந்தாலும் என்னை சந்தித்த 90% ஆண்கள் பேசும்போதோ, பேச்சின் ஊடேயோ என் மார்பையோ உடலையோ பார்த்தார்கள், மேய்ந்தார்கள். மீதமுள்ளவர்கள் பார்த்ததை நான் பார்க்கவில்லை, அதனால் அவர்களை இதில் இருந்து விட்டுவிடுவோம். ஆக நான் என்ன உடுத்தினாலும் பார்க்க தானே போகிறீர்கள். நான் ஒன்றும் பேச்சின் ஊடே உங்கள் கால்சராயின் zipper, பார்த்துக்கொண்டு பேசவில்லையே. நீங்கள் மட்டும் ஏன் இப்படி?

என் உடை என்னை, என்னுடைய ஒழுக்கத்தை பறைசாற்றும் என்பது தானே உங்கள் நியாயம். நான் அணியும் உடுப்புகளின் வழியே மறைந்தும் மறையாது தெரியும் என்னுடைய உடல் தானே உங்கள் காமத்தை தூண்டுகிறதாய் உங்கள் பக்கத்து தர்க்கம். என்னுடைய நடை உடை பாவனை பேச்சுதானே உங்களுக்கு சொல்கிறது நான் பத்தினியா, பரத்தையா என்று. நீங்களே சொல்லுங்கள், உங்கள் உலகில் யார் நல்ல பெண்கள்? யார் ஒரு மாதிரி பெண்கள்? உங்கள் தாய் உங்கள் தகப்பனை பார்த்ததில் ஒன்றும் நீங்கள் பிறக்கவில்லையே, ஆதிகால செயல் செய்து தானே நீங்கள் உருவாகியிருப்பீர்கள். உங்கள் தாயாரிடம் இருக்கும் மார்பகமோ, உங்கள் தங்கைகளின் இடுப்போ, உங்கள் அக்காக்களின் தொடையோ, உங்கள் அத்தையின் பிட்டமோ, உங்கள் சித்தியின் உதடோ, உங்களுக்கு உடல் பசியை தூண்டி விட்டிருக்கிறதா, அல்லது உங்கள் உறுப்புகளுக்கு இரத்தவோட்டம் அதிகரிக்க காரணமாக இருந்திருக்கிறதா, அல்லது நீங்கள் உங்கள் இருட்டுகளின் தனிமையில் மேலே சொன்ன எதையாவது யோசித்துக்கொண்டே சுய இன்பம் அடைந்திருக்கிறீர்களா?...

சரி விடுங்க. விஷயத்திற்கு திரும்ப வருவோம். உங்களில் எத்தனை பேருக்கு Domestic violence definition மற்றும் அதன் வகைகள் தெரியும். உங்களின் அலுவலின் மத்தியில் இதை பற்றி தெரிந்திருந்தால் சந்தோஷம், ஒன்றும் செய்யாது போனாலும், அதாவது தெரிந்திருக்கிறதே என்று. தெரியாதவர்களுக்கு சொல்கிறேன். Domestic violence ஏகப்பட்ட கிளைகளின் கீழே இருப்பினும், நடப்பிற்காக 5 முக்கிய வகையாக்கி இருக்கிறார்கள். Physical and sexual abuse, Emotional or Psychological abuse, Verbal abuse, Financial abuse, Neglect இது தான் அவை என்கிறார்கள்.

உடலால் அத்துமீறல்... உங்கள் வடிகாலுக்காக... உங்களின் சுயவிருப்பு வெறுப்புகள், கோபங்கள், எரிச்சல்கள், கையாலாகாதத்தனங்கள் ஒட்டுமொத்தமாக வந்து கழித்துவிட்டு போகும் கழிவறைதான் நான். உங்கள் செயலிற்கு நீங்கள் கொடுக்கும் காரணம் என்னவாக இருந்தாலும், என் மேல் ஒரு விரல் கூட என் சம்மதமின்றி வைக்க,உங்களுக்கு உரிமை இல்லை, அது தெரியுமா உங்களுக்கு? பேச்சின் உச்சக்கட்டத்தில் என் கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் தீர்ந்து போனாலோ, அல்லது இல்லாது போனாலோ என்னை அடக்க உங்கள் விரல்களுக்கு தோதாக இருக்கும் என் கன்னமும், உங்கள் கைக்குள் சிக்கும் என் தலைமயிரும், முதுகில் விழுந்த இடிகளும், உங்கள் கால்கள் உதைத்ததில் ஒரு ஓரமாக சென்று சுருண்ட என் உடலும், அங்கங்கே கன்னிப்போய் வீங்கியோ, நடக்கமுடியாது நடந்ததோ, உதடு கிழிந்து வாயில் வைக்கும் உணவுப்பொருள் கிளப்பும் எரிச்சலும், நீங்கள் அடிக்கையில் உங்கள் காலை கட்டிக்கொண்டு அழுத என் பிள்ளைகளோ இன்னும் சில நாட்களில் மறக்கக்கூடும். ``குடும்பம்னா அப்படி இப்படி தான் இருக்கும், adjust பண்ணிக்கிட்டு போம்மா. பாரு அவன் இன்னும் சாப்பிடாம இருக்கான், போய் சாப்பாடு போடு என்றும், அடிக்கிற பரதேசியின் கைதான் அணைக்கும்`` என்று சொல்வதும் என்னைப் போலவே ஒரு பெண்ணாக இருக்கலாம். கனன்று எரிந்து நீர்த்து அடங்கிப்போகும் என் கோபங்கள், நாளை நீங்கள் வந்து சொல்லும்,`` ஏதோ யோசனைல அடிச்சிட்டேன்`` என்பதில். நீங்கள் மன்னிப்பு என்ற ஏதோ கேட்டுவிட்டதால் மகாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். உங்கள் மனதில் நடந்த இந்த சம்பவத்தின் தழும்புகள் நிற்காது, ஏனென்றால் இதை பற்றி சொன்ன ஒற்றை வார்த்தையில் கால் கழுவியது போல உங்கள் அழுக்குகள் அடித்துக்கொண்டு போய்விட்டது. எனக்கும் நினைவிருக்காது, நாளை வேறு ஒரு காரணத்திற்காக அடித்து வலிக்கும் வரை. நான் தான் அப்போதே சொன்னேனே, எனக்கு இன்னும் பெயர்வைக்கவில்லை என்று.

இது ஒருபுறம் இருக்க, உங்களின் உடல் வேட்கைக்கு இரையாகும் என் உடல் அடிக்கடி, எனக்கு பிடித்தோ, பிடிக்காமலோ. எனக்கு உச்சம் வந்ததா வரவில்லையா என்று நீங்கள் எண்ணும் அளவிற்கு இன்னும் எனக்கு படுக்கையில் உரிமை இல்லை. ``பாதிநேரம் எப்போது முடித்து என் மேல் இருந்து எழுவாய், நான் தூங்க!`` என்று தான் தோணும். இதில் உனக்கு நான் எனக்கு பிடித்ததை செய்யச்சொல்லி கேட்டாலோ, நான் இங்கு உடல் வேட்கையால் உந்தப்பட்டவளாக, ஒரு ஒழுக்கம் நிறைந்த குடும்பப்பெண் அல்லாது scarlet woman ஆகி போவேன். எதுவும் சொல்லாமல் இருந்தால் ``இப்ப எல்லாம் இதை செய்றியா, அதை செய்றியான்னு கேட்கிறது இல்லையே! வேற எவனாவது இருக்கானாடி!`` என்று சிரித்துக்கொண்டே என்மேல் இயங்கும் போது, நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலாய் நான் என்ன யோசிக்கவேண்டும் என்று நீங்களே சொல்லுங்களேன்.

Verbal abuse and Psychological abuse and Emotional abuse... They go hand in hand. ``என்னடி எதிர்த்து எதிர்த்து பேசுற?`` என்றோ `` உங்க குடும்பத்தில எவனக்கும் மானரோஷமே இல்லை. என் தலை எழுத்து இப்படி ஒரு கேடுகெட்ட குடும்பத்தில் பொண்ணெடுத்திருக்கேன்`` என்றோ அடைமொழியாக சேரும் நாய், பேய், சனியன் பிடிச்சதே, போன்றவைகளோ, தவறு என்று ஒரு நாளும் உங்களுக்கு தோன்றியிருக்காது. வீட்டின் நான்கு சுவத்துக்குள் நடக்கிற விஷயத்தை யாரோடும் பேசி குடும்பமானத்தை நடுதெருவிற்கு கொண்டு வரக்கூடாது என்பது உங்கள் புரட்டுகள் வெளியேறாமல் இருக்க நீங்களே சொல்லிக்கொள்ளும் சட்டம். ’’வீட்டை விட்டு போடி மயிரு! எனக்கு ஆயிரம் பொண்ணு கிடைக்கும். உன்னைய எந்த நாயி சீந்துதுன்னு பார்ப்போம்`` என்று காறிதுப்புவதை வாங்கி கொள்வது தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. தனித்து சமூகத்தில் நிற்பின், இது போலவே மேயும் மிருகங்கள் பலவற்றை தனித்து சந்திக்க எனக்கு தெம்பு இல்லாது போயிருக்கலாம்.

Financial abuse... உங்கள் வீட்டு தேவைக்கோ, உங்கள் படிப்பு செலவிற்கோ, உங்கள் வாழ்கை நிலையை உயர்த்திக்கொள்ளவோ, ஈடுக்கட்டவோ, உங்கள் தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடன் அடைக்கவோ, உங்களால் வாங்க இயலாது நிற்கும் கனவான நிலம், வீடு, கார், போன்றவைகளை சட்டென நீங்கள் வரதட்சணையாய் சம்பாதித்ததில் உடைந்து உட்கார்ந்த என் குடும்பம் இன்னும் எழவே இல்லை. அது எப்படி இத்தனை நாள் உங்கள் அப்பா போலவே கஷ்டப்பட்டு, எனக்கு படிப்பிற்கு வழி செய்து, உண்ண உடுத்த உடைக்கொடுத்து, தங்க நிழல் கொடுத்து, இப்போது என்னை திருமணமும் செய்து கொடுத்த வீட்டாருக்கு, மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்க கூட உங்களோடு நான் தினம் வழக்காட வேண்டியிருக்கிறது. நான் மாதம் பூராவும் சம்பாத்தித்த காசு எப்படி செலவழிக்கவேண்டும் என்று நீங்கள் போட்டு கொடுக்கும் மாதாந்திர பட்ஜெட்டில், எனக்கு தேவையானவற்றை உங்களிடம் ஒருமுறைக்கு 10 முறை சொன்னால் தான், ``சே.. போய் தொலை... அடுத்த மாசம் இப்படி எல்லாம் என்னை கேட்காம செலவு வைக்காதே!`` என்று சொல்லும் உங்களை நான் தினம் தினம் சகித்து, மேலும் உங்கள் வீட்டாரின் மீதும் பாசம் பரிவு பொழிந்து, என் தாய் தந்தையரை புறக்கணித்து, என்னுடைய சுயத்தை சுட்டுக்கொண்டே என் நாட்களை போக்கவேண்டும். உங்களை போலவே வேலைக்கு சென்று வரினும், என் அன்றாடைய அல்லல்களை விட என் சம்பளக்கவர் முழுக்க வாங்குவதில் நீங்கள் காட்டும் அக்கறைதான் அதிகம். உங்களின் வேலை நேரம் போலவே இருப்பினும், வீட்டிற்கு வந்ததும் அடுக்களையில் என் வேலை தொடங்கும். உங்கள் சாயந்திரங்கள் சுலபமானது. ``அப்படி என்னதான் புடுங்கினியோ எப்ப பாரு அசதியா இருக்குன்னு அலுத்துக்கறே`` என்று சலித்துக்கொள்ளும் உங்களை நான் பொறுத்துக்கொள்வேன். என் முதுகெலும்பில் பாதி ஒடித்து உங்களுக்கும், மீதியை இந்த சமூகத்திற்கும் கொடுத்துவிட்ட கர்ணபரம்பரை நான்.

இப்போது புதிதாக கேட்க தொடங்கி இருக்கும் வார்த்தை ALPHA FEMALE... குடும்ப தலைவன் Alpha male என்ற நிலை மாறிப்போய் கொண்டே இருக்கிறது. இதுவரை மேலே சொன்ன எல்லாமே ஏதோ படிக்காத அப்பிராணிகளுக்கு மட்டும் நடப்பதாய் கொள்ளவேண்டாம். படித்த வேலைக்கு செல்லும் நடுத்தர மக்களை பற்றி தான் சொல்கிறேன். இதில் தொழிற்கல்வி படித்தவர்களும் உண்டு, மருத்துவம், எஞ்சினியரிங் படித்த பெண்களும் இது போன்ற வாழ்க்கையில் சிக்கி சின்னாபின்னப் படுவதாய் கேள்வி. பெண் தலையெடுத்து வேலைக்கு சென்று சம்பாதிக்க எல்லா பொறுப்புகளையும் அவள் தலையில் கட்டிவிட்டு, ஹாயாக சுற்றி வரும் ஆண்கள் பெருகி வருவதாய் சொல்கிறார்கள். அது புதிதாய் மாறிவரும் கலாச்சாரத்தின் படிக்கட்டாய் இருக்கிறதாம். இதில் என்ன கொடுமைகள் நிகழுமோ.

இப்படி ஒரு ஆசையோ பாசமோ இல்லாத தாம்பத்தியத்தில் சிக்கி, இப்படி்யே உழன்று எங்கேயாவது கொஞ்சம் பாசம் கிடைக்காதா என்று vulnerable state of mind உடன் இருக்கும் நான் தான் நீங்கள் தெருவிலும், பஸ்ஸிலும், ஆட்டோவிலும், கடையிலும், பார்க்கும் அரூபமான 85%. நான் என் வீட்டிலேயும் சிக்கி, வேலையிலேயும் கஷ்டப்பட்டு, புருஷனால் exploit செய்யப்பட்டு, ignore செய்யப்பட்டு, மிதியடி ஆகிப்போகிறேன். உடல் தேவைகள், companionship, அன்பு, இப்படி கடையில் கிடைக்காதவைகளுக்காக ஏங்கியவள் நான். என் கணவன் என்னை தொட்டு பல மாதங்கள் ஆனது என்றும் நான் புலம்பலாம். இல்லை என்னை தினம் தொடுகிறான் மூர்க்கமாய் என்றும் சொல்லலாம்.
ஒரு balance இல்லாத வாழ்க்கையில் திரியும் என்னை வெகு சுலபமாய் சில பாசவார்த்தைகள் கொண்டு மயக்கமுடியும். கணவனிடம் கிடைக்காத ஆசையும், அங்கீகாரமும், கொடுக்கும் கணவன் அல்லாத உங்களுக்கு என் உடலையும் தருவேனாயிருக்கும். என் நம்பிக்கையையும் உடலையும் சேர்த்து, நீங்கள் எனக்கு தெரிந்தோ தெரியாமல் ஒளித்து எடுக்கும் படங்களும், வீடியோக்களும் உங்களுக்கும் உங்களை போலவே உள்ளவர்களுக்கும் வெகு கிறக்கமான விஷயங்கள். அப்படி உங்கள் படங்களில் மனதில் ஒட்டியது முதல் பெருத்த மார்பகங்கள், குடுவை முதல் மடிப்பு விழும் இடுப்புகள், அழகான கனத்த பிட்டம், வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு முகங்கள், வெவ்வேறு சிரிப்புகள் ஆகியவற்றை தாங்கிவரும் நான் நிஜத்தில் வெகுவாய் மனம் நொந்து நொடிந்து போன ஒரு அம்மா, ஒரு அக்கா, ஒரு தங்கை, ஒரு மகள், ஒரு குடும்பதலைவி.

ஆக மொத்தம் உங்கள் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் என்னால் ஏதோ ஒரு ஆதாயம் ஏதோ ஒரு விதத்தில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய பாதுகாப்பு, தேவைகள், விருப்பங்கள், பிடிக்காதவைகள் அனைத்தும் என்னோடேயே அடங்கி போகும். அதை பற்றி யோசிக்கவோ பேசவோ செயல்படவோ உங்களுக்கு நேரம் இல்லை தான். ஒரு கட்டத்திற்கு மேல் உங்கள் வன்மத்தை நியாயம் என்று சொல்லி எனக்குள் நானே அடங்குவேன். மனைவி என்றால் என் உரிமைகளை, என் சொந்தங்களை, என் நட்புக்களை மறக்கவேண்டும். ஆமாம் என்னை அடிப்பது நியாயம், என் பணத்தை பிடுங்குவது நியாயம், என்னை வார்த்தையால் அவமானப்படுத்தி குத்துவது நியாயம், என் உடல் தேவைகளை நிராகரிப்பது நியாயம் இப்படி அடுக்கிக்கொண்டே போகிறேன் என் கல்லறைவரை.

இதுவரை மேற்கூறிய எல்லாமும் உங்களால் வெகு சுலபமாய் ஒதுக்கித்தள்ளப்படலாம். ஏனென்றால் நீங்கள் சொல்லும் பதில், எங்க வீட்டு பொண்ணுங்க இந்த மாதிரி இல்லை. எங்க வீட்டுல நாங்க இது மாதிரி எல்லாம் வளரல. நாங்க நல்ல குடும்பம். இது தானே உங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. நம் வீடு சுத்தமாக இருப்பின் போதும், பக்கத்து வீட்டு சுவற்றில் எவன் சிறுநீர் கழித்தால் நமக்கென்ன.

இந்த அழகிய உலகில், வாழ்க்கையை நீங்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் பார்த்து ரசித்து, அலசி ஆராய்ந்து அனுபவியுங்கள். நான் அதற்கு தடையாக நின்றதே இல்லை. நான் உங்கள் எதிரி அல்ல. உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை நீங்கள் எத்தனை அழகாக ஏற்கிறீர்களோ அத்தனைக்கு சுலபமாய் என்னை உங்களாலும் உங்களை போன்ற மற்றவர்கள் செதுக்கும் எல்லைக்குள், எந்த ஒரு குறுகுறுப்பும் இன்றி உங்களால் எதிர்பார்க்கப்படுவது போல வாழவேண்டும் என்று சொல்கிறீர்கள், அதை தான் ஏற்க முடியவில்லை. சுயம் தொலைக்கும் எங்களுக்கு வாழ்க்கை தினம் சமையலில் இடும் உப்பு புளி மிளகாய் தான்.

எப்படி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் என் சுதந்திரத்தை முழுக்க எடுத்துக்கொண்டு, உங்களால் கட்டப்பட்ட எல்லைக்குள், சுற்றி வரும் தூரம் மட்டும் நடக்க தோதாய் கழுத்தில் கயிறும் கட்டி, ``என் மனைவிக்கு எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு`` என்று வாய் கூசாது சொல்கிறீர். உங்களின் ``எல்லாவிதத்திற்கு`` எது எல்லை கோடு.

நான் உங்களிடம் இவற்றை எல்லாம் பற்றி சொல்லியது, தனித்து இயங்க இல்லை. என் உலகம் இயல்பாய் நடக்க நீங்கள் வேண்டும். பகிர்தலும், புரிதலும் கொண்டு உங்களை போலவே என்னையும் நடத்த வேண்டும் என்பதே நான் இறுதியில் முன்வைக்கும் ஒன்று. எனக்கான சுதந்திரத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம். என்னிடம் இருந்து பிடுங்காது இருந்தால் போதும்.

நன்றி - காட்சி

8 comments:

venky said...

Realy I am going to change

KULIR NILA said...

Pengalai Aangal Paarpathu Thavirka Iyalatha ondragathan irukirathu. Edhir Paalina Kavarchi Pengalai Vida Aangalukku Adhigamaaga Irukirathu.

Aangal Paarvai Iyalpana ondru than.

Aangalin Nadavadikkaikal Suya Kattupaadu Illatha Aanvargathin Seyalgal than. Ungal Kutrachaatu Yetrukollakoodiya ondru than.

Yar Yar Yen Yenge Pirakirarkal Piranthu kondu irukirarkal Ellam 337 Karma Vinaikalukku Kattupattu than. Nambuna Nambunga.

Anaithu pengalum Kastapadukirarkal endru eduthukolla iyalathu. Sila Kurippitta Samoogam mattume Pathipadaikirathu endrum Koora iyalathu.

Ellam Avaravar Vaangi Vandha Varam.

Idhai Thadukkavo Thavirkavo Muyarchi seythaalum Payan kittathu. Enna Nadakkanumnu Irukko Adhu Nadakkum.

Vidhi Meeral Nadakkalam. Vidhiyai Meeri Edhuvum Nadakkathu.

arivu said...

neathiyadi....ninkal soalum aan maganthan nanum...ippadiyaa nan eanru ninikum poadhu manasu valikiradu......eapadi eanai matri koala eanpadharkana padhil kidaikavillai

kamar said...

anaithum marukka padatha unmai oru sriya vendukol pengalai pattri islam anna solluthu anbathai keattu ariththukollavum

498ஏ அப்பாவி said...

இப்​பொழுது காலம் மாறி வருகின்றது ச​கோதரி​யே!
உங்க​ளை ​போல் குடும்ப சு​மை சுமக்கும் ச​கோதரிகள் அதிகம் அ​​தே​வே​லையில்.. குடும்பத்தில் நடக்கும் அற்ப பிரச்ச​ணைகளுக்​​கெல்லாம் ​பொய்வரதட்ச​ணை வழக்கு ​போடுவது,.. வரதட்ச​​ணை ​​​​கேட்டு என்​னை ​கொடு​மை​செய்தார் என்று 80 வயது படுக்​கையில் கிடக்கும் வயதான தாய்தந்​தையர்க​ளை சி​றையில் அ​டைப்பது... ​வெளிநாடுகளில் உள்ள கணவரின் ச​கோதரிக​ளை ​பொய்வழக்கில் ​சேர்த்துவிட்டு அவர்க​ளையும் அ​லையவிடுவது... ​கொஞ்சம ​வெயிட்டான (வசதியான) ​​​பெண்ணாக இருந்தால் அவர்க​ளை சி​றையில் அ​டைப்பது... இது​போல் கால நி​லைகள் மாறிவருகின்றது. இது​போல் ​பெண்களுக்கு தாங்கள் பதில் என்ன?

இதுவ​ரைக்கும் சுமார் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ​பெண்கள் ​பொய்வரதட்ச​ணை வழக்கில் விசார​னை ​கைதிகளாக ​கைது ​செய்யப்பட்டுள்ளனர்... இது​போல் "​​​பெண்களால் பாதிக்ப்படும் ​பெண்களுக்கு தங்கள் பதில் என்ன?"

Zen the Boss said...

matter super i try to change myself friend yamuna - senthil KL,Malaysia

m.sethu ramalingam said...

DEAR COMRADE ok what you have said fully agreeable.no doubt being a male is shameful make one feel guilty.But i request u to comeout to struggle with counterparts to democratise your dear and nearones and change the situation and for liberation.comradely sethu

Ganesh said...

A thought provoking article.But I still feel it was written by a male and am happy about that.
Only 5% or less males don't understand the pains of the opposite sex.Rest all have a good understanding.But still miles to go regarding women's liberation.Even in the U.S a section of women are snubbed still;so don't have to ask the plight in India.Lets hope that things will improve.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்