/* up Facebook

Jun 30, 2010

பத்து ஈழ நூல்கள் வெளியீட்டு விழா

கவிதை நூல்கள் வெளியீடு
ஆதித் துயர் (ஃபஹீமாஜஹான் )
வீழ்தலின் நிழல் (எம். ரிஷான் ஷெரீப்)
ஈதேனின் பாம்புகள் (றஷ்மி)

3.7.2010 Book Release on


10 ஈழத்து நூல்கள் வெளியீடு
...மேலும்

இரோம் சர்மிளா சானு:ஒரு காந்திய போராளி - பிச்சுமணி


சமீபத்தில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நக்ஸலைட்டு பற்றிய கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது கூட்டத்திலிருந்து பிஹெச்.டி பட்ட மாணவி வில்கா என்பவர், தங்களுக்கு பேச்சு உரிமை வேண்டுமென கூச்சலிட்டார்.. காவலர்கள் அவரை அப்புறப்படுத்த முயல, சிதம்பரம் அவரைப் பேச அனுமதித்தார். அந்தப் பெண் "மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு அதிக அதிகாரம் கொடுத்து உள்ளது ஏன்?. சாதாரண மக்கள் அதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இரோம் சர்மிளா போன்ற காந்தியவாதிகள் மீதும் அடக்குமுறை ஏவப்பட்டது ஏன்?" என்ற கேள்விக்கு, "என்.டி.ஏ. அரசாங்கம் ஆயுதப்படைக்கு அதிக அதிகாரம் கொடுத்தார்கள், நாங்கள் அவ்வதிகாரத்தை தொடர்வதா இலலை திரும்பப் பெறுவதா என்று யோசித்து வருகிறோம்" என்றார்.

யார் இந்த இரோம் சர்மிளா என்பதை அறியும் முன்பு பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டால் நல்லது.

1949 –ல் வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த சிறு சிறு அரசர்கள் ஆண்ட தன்னாட்சி பகுதிகளை அப்பகுதி மக்களின் விருப்பு வெறுப்புகளை மதிக்காமல், இந்தியாவுடன் சேர்க்கும் பொழுது அந்தப் பகுதி மக்களிடையே மனக்கசப்பு. ஏற்பட்டது . அதுவே அப்பகுதிகளின் மக்களிடையே தனித்தனியே தனிநாடு கிளர்ச்சிக்கு வித்திட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், நாகா கிளர்ச்சி இந்தியாவின் விடுதலை காலத்திற்கும் முற்பட்டது என்றாலும் விடுதலைக்குப் பின் தனிநாடு கோரும் நாகா கிளர்ச்சி பிற வடகிழக்கு மாகாணங்களான மிசோரம், மணிப்பூர், திரிபுரா, அசாம், அருணாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகளில் தொற்றுநோய் போல் பரவியது. அது பெருவியாதியாக வளர்ந்து 1980 வாக்கில் வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனி கிளர்ச்சி அமைப்புகள் ஏற்பட்டன.

மணிபபூர் மாநிலத்தில் சுமார் 25 மில்லியன் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். மித்திஸ்,பன்கல்ஸ்,நாகா, குக்கீஸ் போன்ற பழங்குடி இனமக்கள் முக்கியமானவர்கள். பிரிட்டிஷ் காலனி ஆதிக்க முடிவில், நாடு விடுதலை அடைந்தபோது, மணிபபூர் மாநிலத்தில் புதிதாக வளர்ச்சி அடைந்த நடுத்தர, படித்த மக்கள் இந்தியாவுடன் இணையவே விரும்பினார்கள். நமது அரசியல்வாதிகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மையினால் அவர்களே மணிப்பூர் தனிநாடாகப் பிரிந்து செல்லும் கிளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தக் காரணமாக மாறிவிட்டார்கள்

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கிளர்ச்சி மற்றும் கிளர்ச்சி அமைப்புகளை அடக்க 1958 செப்டம்பர் 11-ல் இந்தியா, ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் ஒன்றை இயற்றியது . அதனை, தொந்தரவு பகுதிகள் என அறிவிக்கப்பட்ட அருணாச்சலப்பிரதேசம், அசாம், மேகாலயா,மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் நடைமுறைப்படுத்தியது. இந்த சட்டம் பின்வரும் சிறப்பு அதிகாரத்தினை ஆயுதப்படைக்கு வழங்குகிறது

1.சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுபவர்களுக்கு எதிராக, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உள்ள கூட்டத்திற்கு எதிராக, உயிரைப் பறிக்கும் ஆயுதம் வைத்திருப்பவர்களுக்கு எதிராகத் துப்பாக்கி சூடு நடத்தலாம். படையைப் பயன்படுத்தலாம். அந்த நடவடிக்கையில் உயிர்கள் பலி ஆகலாம்.

2.வாரண்ட் இல்லாமல் சந்தேகப்படுபவரை, ஆயுதம் வைத்திருப்போரைக் கைது செய்யலாம்.

3.எந்த இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தலாம்


இதைவிடக் கொடுமை, ராணுவ ஆத்துமீறலுக்காக ராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவியலாத வகையில் இந்த சட்டத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு ஷரத்து உள்ளது..இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள்.

இரோம் சர்மிளா சானு எனும் காந்தியவாதி மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இரோம் நந்த சிங் என்ற தந்தைக்கும் இரோம் சக்தி தேவி என்ற தாய்க்கும் ஒன்பதாவது கடைசிப் பிள்ளையாக 1972-ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி செல்ல வாய்ப்பு கிடைக்காததால் பத்திரிகை துறை, மனித உரிமை போன்ற பாடங்களைப் படித்து பட்டயம் பெற்றார்.

2000 ஆண்டு நவம்பர் 1 அன்று , மணிப்பூர் மாநிலத்தில் மலோம் எனுமிடத்தில் பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர் .இந்திய அரசின் பாரா மிலிட்டரியின் ஒரு படைப்பிரிவான அசாம் ரைபிள்ஸ், தங்களது வாகனத்தில் வந்து இறங்கி, பேருந்துக்காக காத்திருந்த மக்கள் மீது எந்த எச்சரிக்கையும் எந்தக் காரணமும் சொலலாமல் கண்மூடித்தனமாகச் சுட்டார்கள் .அந்த துப்பாக்கிச் சூட்டில் 10 நபர்கள் பலியானார்கள். அவர்களில் 62 வயதான மூதாட்டியும், 1988 –ஆம் ஆண்டு தேசிய வீரக்குழந்தை பட்டம் வாங்கிய 18 வயதான சீனம் சந்திரமணியும் அடங்குவார்கள். இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட மணிப்பூர் மக்கள் அன்றே தெருவுக்கு வந்து நடந்த நிகழ்வின் மீது நீதிவிசாரணை வேண்டுமென்று போராடினார்கள். ஆனால் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958 னைப் பயன்படுத்தி அரசாங்கமும் ராணுவமும் விசாரணை கமிஷன் அமைப்பதில் இருந்து தப்பித்துக் கொண்டன.

தனிச்சுற்றுக்கு விடப்பட்ட குறுந்தகடு ஒன்றில் குழந்தைகள், வேலைக்குப் போகும் பெண்கள், வயதானவர்கள் ஆகியோரைத் தெருவுக்கு இழுத்து வந்து, கண்ணீர்ப் புகை குண்டு வீசி, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், ஆண்களை மண்டியிட வைத்து, தலைக்கு மேல் துப்பாக்கியினை வைத்து சுட்டுக் கொல்லும் காட்சிகளும் இடம் பெற்றன.

மலோம் நிகழ்வால் மனம் புழுங்கிய இரோம் சர்மிளா தனது 28வது வயதில், 2000ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் தனது தாயினை வணங்கி அவரது வாழ்த்துடன் மணிப்பூர் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவத்தின் அடக்குமுறைக்கு மூலகாரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958னை மணிப்பூரில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை மகாத்மா காந்தி வழியில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார்.இவருடைய உண்ணாநிலையினை முதலில் சிலர் கிணடலும் கேலியும் செய்தனர். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் தனது உண்ணாநிலையினைத் தொடர்ந்தார் சர்மிளா. அவர் உண்ணாநிலை தொடங்கி மூன்று நாட்கள் கழித்து அதாவது நவம்பர் 6 ஆம் நாள், இந்திய தண்டனைச் சட்டம் IPC பிரிவு 309யின் படி சர்மிளா தற்கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு, பின்பு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அந்நிலையிலும் சர்மிளா உண்ணாநிலையினைத் தொடரவே, காவலில் இருக்கும்போது அவர் இறந்து விடக்கூடாதே எனும் பயத்தில் விட்டமின் போன்ற சத்துப் பொருட்களை கரைத்த நீரை அவரது மூக்கு வழியாக ஒரு குழாயைப் பயன்படுத்தி அவரது விருப்பததுக்கு மாறாக ஊற்றி அவரை உயிரைப் பிடித்து வைக்கிறார்கள். இந்திய தண்டனை சட்டத்தின்படி தற்கொலை முயற்சிக்கு ஓராண்டு சிறைத்தண்டனைதான வழங்கவியலும் என்பதால் அவரை அரசு விடுதலை செய்வதும் உடனே சர்மிளா தனது உண்ணாநிலையினைத் தொடர்வதும் மாறிமாறி நடந்துவருகின்றன.

அவ்வாறு சர்மிளா ஒரு தடவை மணிப்பூர் அரசால் விடுதலை செய்யப்பட்டபோது, அவர் சில அமைப்புகளின் உதவியுடன் மணிப்பூர் அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, புது தில்லிக்கு வந்தார். தில்லியை அடைந்தவுடன் முதல் வேலையாக தனது குருவான மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டை அடைந்து, அண்ணலுக்கு மலர் மாலை வைத்து தனது மரியாதையினைச் செலுத்தினார். அன்று மாலையே ஜந்தர்மந்தரிலிருந்து தனது அகிம்சா போராட்டத்தை தொடாந்தார். மெல்லிய குரலில் இந்தப் போராட்டம் ஆயதப் படை சட்டத்திற்கான தனது எதிர்ப்பை தெரிவிக்கவும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் நடத்துவதாக சர்மிளா கூறினார். அவர் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், செயல்வீரர்கள் ஆகியோர்கள் அவருக்கு ஆதரவாகத் திரண்டனர். தில்லி அரசு விழித்துக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றதாக அன்று நள்ளிரவில் சர்மிளாவைக் கைது செய்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது. எய்ம்ஸ் மருத்துவமணையில் சர்மிளா கிகிச்சை காவலில் இருக்கையில் அய்க்கிய நாட்டு சபையின் மனித உரிமை மன்ற அமைப்பைச் சார்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான மிஸஸ். இபடி (Ms.Ebadi)என்பவர் சர்மிளாவைச் சந்தித்தார். சர்மிளாவின் போராட்டத்திற்கு அவரது ஆதரவைத் தெரிவித்தார்.மேலும் சர்மிளா இறந்துவிட்டால் நாடாளுமன்றம், நீதிமன்றம், ராணுவம், நீதிமன்றம், குடியரசுத் தலைவர், ஒவ்வொரு பத்திரிகையாளரும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாததால் அவரது இறப்புக்கு காரணமானவர்களாகக் கூடும் எனவும் தெரிவித்தார்.

ஒரு சொட்டுத் தண்ணீர் குடிக்காமல், உணவு அருந்தாமல் பத்தாவது ஆண்டாக அவரது உண்ணாநிலை தொடர்கிறார். அவர் தனது கூந்தலைப் பின்னி முடிப்பதையும் விட்டு விட்டார். பற்களைப் பருத்தி துணியால் துடைத்து கொள்கிறார். உதட்டை ஸ்பிரிட் கொண்டு துடைத்துக் கொள்கிறார். தினமும் 4 லிருந்து 5 மணி நேரம் தானே கற்றுக் கொண்ட யோகாவை மேற்கொள்கிறார். யோகா மூலம் அவரது உடலையும் மனதையும் ஒரு சமநிலைக்குக் கொண்டு வருவதாகவும் சொல்கிறார். தொடர்ந்து உண்ணாமல் இருப்பதால் அவருக்கு மாதவிடாய் சுழற்சிகூட சீக்கிரமாக நின்றுவிட்டது. இவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் சர்மிளா பத்து ஆண்டாக உண்ணாநிலை மேற்கொண்டு உயிர் வாழ்வது மருத்துவ உலகில் பெரும் அதிசயம் என கூறுகிறார்கள். சர்மிளா தன்னை வந்து காண்பவர்களிடம் தான் சாதாரணமாக இருப்பதாகவும் தான் அவரது உடம்புக்கு எந்தவித தொந்தரவும் கொடுப்பதில்லை எனவும் .இது தண்டனையும் இல்லை, தனது கடமையைத்தான் செய்வதாகவும் நாளை என்ன நடக்கும் என்று தனக்குத் தெரியாது எனவும், நேரம் தவறாமை, ஒழுக்கம், பெரும் முயற்சி பெரும் வெற்றியைத் தரும் என தனது அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டதாக சர்மிளா கூறுகிறார்.

சிறுசிறு குற்றங்களைச் செய்த ஒரு குற்றவாளியைப் போல் இம்பால் மருத்துவமனையில் அழுக்கு குப்பைக்கூளமான ஒரு மருத்துவ வார்டில் சத்துநீர் அனுப்ப மூக்கில் குழாய் சொருகப்பட்ட நிலையில் அரைஉயிராய்க் கிடக்கிறார் இரோம் சர்மிளா சானு. சட்டத்தில் எந்த அதிகாரமும் நியாயமும் இல்லாவிட்டாலும் இவரைக் காண யாரையும் மணிப்பூர் அரசு அனுமதிப்பதில்லை.

சர்மிளாவை பற்றி திரைப்படம் எடுக்கும் கவிதா ஜோஷி என்பவர், சர்மிளாவின் தாயாரைப் பேட்டி கண்டபொழுது, அப்போது அவரது தாயார், சர்மிளாவை பார்த்தால் அவர் அழுதுவிடுவார் என்றும் . சர்மிளாவின் கோரிக்கை நிறைவேறும் வரை அவளது உண்ணாநிலையை அவள் கைவிடப்போவதில்லை என்றும், 5 நாட்களுக்கு மட்டுமாவது இந்தக் கொடுமையான ஆயுதப்படை சட்டம் விலக்கிக் கொண்டால்கூட அவரது மகள் சர்மிளாவுக்கு ஸ்பூன் மூலம் கொஞ்சம் அரிசி கஞ்சி கொடுப்பேன்.அதற்குப் பின் சர்மிளா இறந்து போனால் கூட அவளது ஆசை நிறைவேறியதே என்ற நிம்மதியாவது அடைவேன் என்று தெரிவித்து உள்ளார்.

2005 –ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு கெளஹாத்தியைச் சார்ந்த பெண்கள் அமைப்பு சர்மிளாவின் பெயரைப் பரிந்துரைத்தது. 2007ஆம் ஆண்டு, தென் கொரிய நாட்டு கெவஞ்சு மனித உரிமை பரிசினைப் பெற்றார். (Gwangju prize for Human Rights,). 4.10.2010 ல் சர்மிளா ஆயுதப் படை சட்டத்திற்கு எதிரான உணணாநிலை போராட்டம் தொடங்கி பத்தாவது ஆண்டு நிறைவுக்கு வருவதைச் சிறப்பிக்கும் வகையில், 2010ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு, சர்மிளாவின் பெயரை இந்திய அறிவியல், பகுத்தறிவு மற்றும் மனித உரிமை அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

தடைசெய்யபட்ட மக்கள் விடுதலை படை(People liberation Army) உறுப்பினர் என்று சொல்லப்பட்ட 32 வயதான மனோரமா தேவி என்ற பெண்ணை அசாம் ரைபிள்ஸ் படையினர் கைது சென்று அழைத்துச் சென்றார்கள். சில நாட்கள் கழிதது, மனோரமா தேவியின் உடல் இம்பால் நகரின் குப்பை கொட்டும் இடத்தில் கற்பழிக்கப்பட்டு ரத்தக்காயங்களுடன் கிடந்தது. இதனைக் கண்டு பெரும் கோபத்திற்கு உள்ளான 30க்கும் மேற்பட்ட சாதாரண குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் 2004 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் அசாம் ரைபிள்ஸ் அலுவலகம் அமைந்துள்ள கன்கலா கோட்டை எதிரே குழுமி தங்களது ஆடைகளைத் துறந்து அம்மண நிலையில் "இந்திய ராணுவமே, எங்களைக் கற்பழி " என்று கூச்சலிட்டவாறு போராடினார்கள். மணிப்பூர் அரசு உடனே அவர்களைக் கைது செய்து, மூன்றாண்டு சிறைத்தண்டனை வாங்கித் தந்தது. மனோரமா தேவி கொலையினை விசாரிக்க அமைக்கப்பட்ட உபேந்திரா விசாரனை கமிஷன் தனது விசாரணை அறிக்கையை இன்னும் மக்கள் அறிய வெளியிடவில்லை.

மனோரமா தேவியின் மரணம், சர்மிளா சானுவின் சாகும வரையிலான உண்ணாநிலை போன்றவை மத்திய அரசைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. மத்திய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஜீவன்ரெட்டி அவர்களின் தலைமையில் ஆயுதப்படை(சிறப்பு அதிகாரம்)சட்டம் 1958னை மறுஆய்வு செய்ய கமிஷன் ஒன்று அமைத்தது. சூன் 6, 2005-ல் அந்த கமிஷன் தனது அறிக்கையினை வெளியிட்டது. ஆனால் கமிஷனின் அறிக்கையின் மீது எந்த உறுதியான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. அவ்வமயம் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பிரணாப்முகர்ஜி ஆயுதப்படைக்கு இப்படிப்பட்ட சிறப்பு அதிகாரமில்லை என்றால் தொந்தரவான பகுதியில் உறுதியான நடவடிக்கை எடுக்கவியலாது என்று கூறினார். டிசம்பர் 2006-ல் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் மணிப்பூர் மக்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று ஜீவன் ரெட்டி கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமைகளை மதிக்கும் வகையில், ஆயுதப்படை சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

அய்க்கிய நாட்டு சபையின் மனித உரிமை ஆணையர் திரு நவநீதம் பிள்ளை ஆயுதப் படை (சிறப்பு அதிகார சட்டம்) 1958, காலனி ஆதிக்க கால சட்டம் போன்றது. சர்வதேச அளவில பேணப்படும் மனித உரிமை தரத்துக்கு இது முரண்பாடானது என தெரிவித்து உள்ளார்.

இன்று வரை உள்துறை அமைச்சர் இச்சட்டததை நீக்குவதா அல்லது திருத்தம் கொண்டு வருவதா என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார். ஒரே ஆறுதலான நிகழ்வு என்னவென்றால் மத்திய அரசின் எதிர்ப்பினையும் மீறி, மணிப்பூர் அரசு, மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்)சட்டம் 1958 யினை விலக்கிக் கொண்டது.

அண்ணலால் விடுதலை அடைந்த மக்களாட்சி நடக்கும் இந்தியத் திருநாட்டில், மகாத்மா காந்தி காட்டிய அகிம்சா வழியில் சர்மிளா போராடினாலும் அவர் இம்பால் மருத்துவமனை வார்டில் முடங்கிக் கிடக்கத்தான் வேண்டி உள்ளது. நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலிம் ( ஐசக் மற்றும் முய்வா) இயக்கத்தின் கோரிக்கையான "கிரேட்டர் நாகாலாந்து" கோரிக்கைக்கு தற்போது மத்திய அரசு செவி சாய்த்து உள்ளது போல், இரோம் சர்மிளாவின கோரிக்கையான மணிப்பூர் மாநிலத்தில் இருந்து ஆயுதப்படை சட்டம், இரோம் சர்மிளாவின் உண்ணாநிலை போராட்டம் 10 ஆண்டு நிறைவு செய்வதற்குள் விலக்கிக் கொள்ள வேண்டும் என வாழ்த்துவோம்.

நன்றி - உயிர்மை
...மேலும்

Jun 29, 2010

காலுடைந்த ஆட்டுக் குட்டியும் சிறுமியும் - ஃபஹீமாஜஹான்


நொந்து போன நாட்களைத் தனது
சின்னஞ்சிறு தோள்களில்
சுமந்தலைந்த சிறுமி
காலுடைந்த ஆட்டுக்குட்டியைக்
கீழிறக்கி வைத்துவிட்டு
மண்தெருவில் சிந்திக் கிடக்கும்
நெல் மணிகளைக்
குடிசைக்குள்
காவிச் சென்றிட நினைக்கிறாள்

முன்பெனில்
வயல் வரப்பொன்றில் குந்தியிருந்து
அவளது பிஞ்சுக் குரலெட்டாத்
தொலைவு வரை திரிந்து
உதிரி நெற்கதிர் பொறுக்கி வரும்
அம்மாவுக்காகக் காத்திருப்பாள்.
அம்மா திரும்பி வரும் வேளை
ஒரு முயல் குட்டியை
ஒரு செம்மறியாட்டு மந்தையை
ஒரு அபூர்வப் பறவையை
விழிகளால் துரத்தியவாறு
மாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே
அலைந்து கொண்டிருப்பாள்
அல்லது
நாரைக் கூட்டங்களுக்குக்
கையசைத்து விடைகொடுத்தவாறு
அவை சென்று மறையும்
மலைத்தொடர்களின் மறுபுறத்தே
என்ன இருக்குமென்ற
புதிரொன்றால் அலைக்கழிவாள்


சிறுமியின் நினைவுகளிலிருந்து
மெதுவாக நழுவுகின்றன
அந்த நாட்டுப் புறப் பாடல்களும்
பெண்கள் கூடி அறுத்தெடுக்கும் கதிர்களை
பிணையல் மாடுகள் சுற்றிச் சுழன்று
சூடடித்துக் கொடுக்கும் இரவுகளும்


இன்று
வயல்வெளிதனில் இறக்கிவிடப்பட்ட
இயந்திரப் பூதம்
வைக்கோலைத் துகள்களாக்கி
வரிசையாய்ப் பரப்பிய பின்
விதைத்தோர் கைகளில்
நெல் மூடைகளைக்
கொடுத்துப் போன கணப்பொழுதில்
சிறுமியின் அம்மாவிடம்
ஒரு பானை நிரம்பிவழிந்தது
ஏமாற்றம்


பச்சை அலைகளெனப்
பறந்து வந்த கிளிக்கூட்டங்கள்
வான் பரப்பில்
தாளமுடியா ஏமாற்றத்தைத் தீட்டித்
தொலைதூரச் சோலைகளுக்கே
திரும்பலாயின.
பூதத்தின்
பல்வரிசைக்குள்
அரைபட்டுச் சிதைந்தது
நெற் குருவியொன்றின்
கடைசி அலறல்.

உறையொன்றிலிருந்து
சிந்திவிட்டுச் சென்ற
நெல்மணிகளைக் கண்டதும்
சர்க்கரைத் துண்டு கிடைத்த
எறும்பொன்றைப் போல
எப்பாடுபட்டேனும்
எடுத்துச் சென்றிட
மொய்த்துவிட்டாள் சிறுமி.
புது அரிசிச் சோற்றின்
ஆவிபறந்திடும் கனவு
அவளது சின்னப் பீங்கானிலும்.

அள்ளிடும் தருணமெலாம்
மண்ணையும்
குறுணிக்கற்களையும்
அவள் கரங்களில்
எஞ்சவைத்து விட்டு
நெல் மணிகளோடு
நிலத்தில் ஒழுகிக் கொண்டிருந்தது காலம்

வீதி வழியேபோன
முதிய பெண்ணின்
ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவளாக
குடிசைக்குள் ஓடிப்போய்
சிறிய கரங்களில் நம்பிக்கை அசைந்தாடிடச்
சிரட்டையும் பையுமாக
வந்தாள் சிறுமி


தப்பிக்கமுடியாத நெல்மணிகளெல்லாம்
அவளுடன் போகலாயின
எளிய குடிசை நோக்கி

அவள் பின்னே
நொண்டிய படி செல்கிறது
காலுடைந்த ஆட்டுக்குட்டி.

ஃபஹீமாஜஹான்
2010.03.31

(நன்றி:காலச்சுவடு இதழ் 126)
...மேலும்

Jun 28, 2010

பெண்களின் உடல்கள் யாருக்குச் சொந்தம்? - சேது


கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற விவாதங்களும் போராட்டங்களும் முடிவுக்கு வந்து இப்போது பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒரு வழியாக இயற்றப்பட்டு விட்டது.இனி மக்களவையில் இயற்றப்பட்டு எப்போது சட்டமாக அமலுக்கு வருமோ தெரியாது .அதற்கு எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ தெரியாது.பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள் இட ஒதுக்கீடு வாதப் பிரதிவாதங்களிடையே அமுங்கிப் போனதும் அமுக்கப்பட்டதும் எப்போதுமே கவனம் செலுத்தப்படாத பெண்களின் உடல் நலம் சார்ந்த அரசின் கொள்கைகளும் திட்டங்களும்தான்.

பல ஆண்டுகளாகவே பெண்கள் உடல் நலம் என்றாலே அவளுடைய கருத்தரிப்பைத் தடுத்து குடும்பக் கட்டுபாடு செய்வதையும் அதன்மூலம் மக்கள் தொகை கட்டுபடுத்துவதையும்தான் இதுவரை தொடர்ந்து வந்த ஆட்சிகளும் நிபுணர்களும் செய்து வந்துள்ளனர்.பெண்களின் உடல்நலத்தையே கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதாகத்தான் சுருக்கியே புரிந்து கொள்ளப்பட்டு வந்தது.இந்தப் பார்வைக் கோளாறின் விளைவாக அன்னையர் இறப்பு விகிதம் (maternity ratio) பெண் சிசுக் கொலைகளும் மற்றும் கருக்கொலைகளும் குறைந்த பாடில்லை.இதே கதைதான் பெண் குழந்தை இறப்பு விகிதத்திலும் தொடர்கிறது.அன்னையர் விகிதம் குறித்த ஆய்வு உத்திரபிரதேசம்,கர்நாடகம் ,உத்திரகாண்ட் ,மஹாராஷ்ரா மற்றும் டில்லியில் மேற்கொள்ளப்பட்டது.இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்ட ஆய்வில் மரணமடைபவர்களில் மிக அதிகமாகமானவர்கள் கழிப்பறை வசதி இல்லாமல் திறந்த வெளியை பயன்படுத்துவர்கள் தான்,மரணமடைபவர்களில் 50 விழுக்காட்டினர் போதுமான அடிப்படை வசதிகளின்றி வாழும் பெண்கள்,குடிசைகளில் வாழும் பெண்கள் 21 விழுக்காட்டினர் .இவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு வீடுகளில் மின்வசதி இல்லை.குடிநீர் என்பது அடிகுழாய்களில் பெறப்படும் பாதுகாப்பற்ற குடிநீர்தான்.இதில் நான்கில் ஒரு பகுதியினர் தலித் மக்கள் ,12 விழுக்காட்டினர் பழங்குடியினர்.இந்த ஆய்வானது இந்த பெண்களின் மரணங்களுக்கு காரணமாக வறுமை ,சத்துணவின்மை,கல்வியறிவின்மை,மோசமான சுகாதாரமற்ற வாழ்விடங்கள் ,தொற்றுநோய்கள் மற்றும் முறைப்படுத்தப்படாத திட்டமிடாத கருத்தரிப்புகள் ஆகியவைதான் என ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களில் 50 விழுக்காட்டினர் அவசர சிகிச்சை தேவைப்படும் காலங்களில் மருத்துவமனைக்கு 5 லிருந்து 10 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டும் ,போக்குவரத்து வசதியும் கிடையாது என கருத்து தெரிவித்திருந்தனர்.போக்குவரத்து வசதி இல்லாததால் நோயாளிகள் து£க்கிச் செல்லும் வழியிலேயே இரத்தப்போக்கினால் இறந்த பெண்கள்அதிகம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.குழந்தை பிரசவித்த பின்னர் இறந்த அன்னைமாரில்20 விழுக்காட்டினர் தலித் மக்கள் 11,7 விழுககாட்டினர் பழங்குடியினர் மற்ற பிற்படுத்தப்பட்டவர்கள் 24.47 விழுக்காட்டினர் பிற சாதியினர் 37 விழுக்காட்டினர் .இதில் அதிர்ச்சிகரமான விடயம் என்னவெனில் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 25 வயதிற்கும் குறைவானவர்கள் இந்த மரண விகிதங்களை எப்போது குறையப்போகின்றன.?

,இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருகிறது.ஆண் குழந்தை அரசாள்வான் பெண் குழந்தை என்றாலே இன்னொரு வீட்டுக்கு போகக் கூடியவள் அவள் சுமைதான் அவள் செலவுக் கணக்கு என்று சமூகத்தில் புரையோடியுள்ள கண்ணோட்டம்தான் சிசுக்கொலைக்கும் கருக்கொலைக்கும் பெற்றோர்களை தள்ளி விடுகிறது.படித்தவர்கள் மத்தியில் கூட பெண் குழந்தை வேண்டாம் என்ற மனப்பான்மையினால்தான் கருக்கலைப்பு மையங்கள் காசு பார்த்து வருகின்றன.சட்ட விரோதம் என்றாலும் இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பெண் குழந்தை பிறப்பது குறைந்து வருவது அபாயகரமானது.இது மேலும் பெண்களின் மீதான வன்முறைக்கே இட்டுச் செல்லும் .சமூகம் பாசிசமயமாவதற்கே வழிவகுக்கும்
மேலே உள்ள ஆய்வுகளின் விபரங்கள் இங்கே விரிவாக குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணம் பெண்களுக்கு உயிர் வாழ்வதற்கான உரிமையே இல்லை என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.

பெண்களைப் பொறுத்தவரை இங்கே அடிப்படையான சில விடயங்களே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.முதலாவதாக ஒரு பெண் பிறந்து உயிர் வாழவே வழி இல்லை.அவளது வாழும் உரிமையானது கருவிலேயே நசுக்கப்படுகிறது.அப்படியே பிறந்து வளர்ந்தாலும் அவள் செலவழிக்கப்பட வேண்டிய சரக்காகவே(expendable commodity) நடத்தப்படுகிறாள்.அவள் வளர்க்கப்படுவதில்லை எப்போது ?எவ்வளவு உண்ண வேண்டும் ?எப்போது? எப்படி சிரிக்கவேண்டும் ?என்பதில் துவங்கி என்ன உடை அணிய வேண்டும்? எப்படி படுத்து உறங்க வேண்டும்? என்று எல்லா வகைகளிலும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விடயங்களின் படி அல்லது எழுதப்படாத சமூக கட்டளைகளின்படி படி அவள் வார்க்கப்படுகிறாள்(moulding)இவையெல்லாம் பெண்களுக்கு தெரிந்த விடயங்கள் ஆண்களுக்கோ வெறும் ஆணாய் பிறந்த காரணத்திற்காகவே அனைத்து விதமான சலுகைகளையும் அனுவவிப்பதால் அவர்களுக்கு இவை இயல்பான விடயங்கள் ஆகி விடுகின்றன! . பெண்ணுக்கு அவள் உடல் மீதான எந்தவித உரிமையும் கிடையாது.பிறப்பிலிருந்தே அவள் எப்படி இருக்கவேண்டும் ,தாய்மைப்பேற்றின் துவக்க பூப்படைதல் துவங்கி ,கருத்தரிப்பு மற்றும குழந்தை பிரசவிப்பது முதல் தீர்மானிப்பது அவளுக்கு எந்த உரிமையும் கிடையாது.எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவளது கணவனோ அவரது குடும்பத்தினரோ அதையும் தாண்டி அரசும் தான் தீர்மானிக்கின்றன. 

இந்த நிலைமை பல ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கின்றன.இவை முதலாளித்துவ சமூக அமைப்பின் உருவாக்கம் வரை இருந்த இந்த நிலையில் .முதலாளித்துவம் வளர்ந்து ஏகபோகங்களாக ஏகாதிபத்தியங்களாக மாறிய பின்னர்வெகு வேகமாக வேறு சில மாற்றங்களும் நடைபெற்றன. ஒரு பெண்ணின் உடல் அமைப்பை பன்னாட்டு நிறுவனங்களும் தேசங்கடநத தொழில்கழகங்களும் தீர்மானிக்கத் துவங்கி விட்டன.முக அழகு சாதனங்களின் உற்பத்தி எப்போது துவங்கப்பட்டதோ அப்போதே பெண்ணின் உடலை சர்வதேச சந்தையுடன் இணைத்து விட்டனர்.ஆணாதிக்கமும் உலக முதலாளிய சந்தையும் இணைந்து புனிதக் கூட்டணி அமைத்து செயல்படுகின்றன.

முன்பெல்லாம் இந்த சதை சந்தையில் பெண்களின் சதைப்பிடிப்பான உடல்களுக்கு மவுசு இருந்தது.இப்போது உலக அழகிப்போட்டிகளின் மூலம் ஸ்லிம் உடல்களை சர்வதேச சந்தை சரக்காக மாற்றி விட்டன.இன்று இநதியாவின் மூலை முடுக்கெல்லாம் அழகிப்போட்டிகளை நடத்தி ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய உடல் வரையறைக்கேற்ப உடல்களை காட்சிப் பொருட்களாக மாற்றி விட்டனர்.இதன் விளைவு நம் நாட்டு பெண்கள் பட்டினி கிடந்து உடலை ஸ்லிம்மாக வைக்கத் துடித்துக் கொண்டிருப்பதால் அனரெக்சியா நெர்வசா (anorexia nervosa) என்ற புதிய உடல் மற்றும் மனநோய்க்கு ஆளாகின்றன என்பது வேறு தனியே விவாதிக்க வேண்டிய விடயம்.இவை கடந்த சில பத்தாண்டுகளாக நடைபெறும் விடயங்களாக இருக்கின்றன.ஆனால் முதலாளியம் துவங்கியதிலிருந்தே பெண்களின் உடல்கள் குறிவைக்கப்பட்டன. எப்படிப்பட்ட இனத்தை உருவாக்க வேண்டும் அதற்காக எப்படிப்பட்ட கருவை பெண்களின் உடல்களில் உருவாக்க வேண்டும் என்று பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.ஜெர்மனியில் நாஜிகள் ஜெர்மனிய ஆரிய இனத்தை உருவாக்குவதற்காக பல கோடிகள் செலவழித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.யூஜெனிக் (eugenic) என்ற இயக்கமும் உருவாக்கப்பட்டது.இட்லரின் தோல்விக்கு பிறகு அந்த இயக்கம் கலைக்கப்பட்டது.அந்த இயக்கத்திலிருந்த விஞ்ஞானிகள் சேர்ந்த இடம் எது தெரியுமா? உலக சுகாதார நிறுவனம்தான் .

உலக சுகாதார நிறுவனம் தான் உலகம் முழுவதும் மக்கள் தொகை கட்டுபாட்டிற்கான குடும்பக் கட்டுபாட்டுச் சாதனங்களை உருவாக்கியது. இந்த சாதனங்களில் 99 விழுக்காடு பெண்களின் மீது பயன்படுத்துவதற்காகத்தான் அதே விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டன.இன்று அந்த விஞ்ஞானிகள் இல்லை,ஆனால் அதே பாரம்பரியம் தொடர்கிறது.இன்று எத்தனையோ தடை செய்யப்பட்ட கருத்தடை சாதனங்கள் பரிசோதித்து பார்ப்பதற்கான களமாக பெண்களின் உடல்கள் திகழ்கின்றன.இன்னும் காப்பர் பிளான்ட்டினால்தான் நமது சகோதரிகளும் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர்.தடை செய்யப்பட்ட நார்பிளான்ட் துவங்கி பல சாதனங்கள் பெண்களின் உடல்களில் அவர்களை நிரந்தர நோயாளிகளாக்கி வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கூட பெண்களிடம் அனுமதி கேட்காமல் அவர்களின் உடலில் பொருத்தப்படுகின்றன.தனியார் மருத்துவமனையே இப்படி என்றால் அரசு மருத்துவமனைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்.இன்று நம் நாடு என்ன முன்னேறி விட்டதாக பீற்றிக் கொண்டாலும் இன்னும் கருக்கலைப்பிற்காக கணவன்தான் கையெழுத்து போட வேண்டும்.கணவன்தான் எப்போது குழந்தை வேண்டும் என்பதை தீர்மானிக்கிறான்.இது குடும்ப அமைப்பிற்குள் இருக்கும்போது உலகளாவிய அளவில் பெண்களின் உடல்களின் மீது உரிமை கொண்டாடுவது ஏகாதிபத்தியங்கள்தான் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அடிப்படையில் ஒரு தனிநபருக்கு தனது உடல் மீது முழு உரிமை உண்டு .இந்த அடிப்படை ஜனநாயக உரிமை கூட பெண்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்ததில்லை.உண்மையில் பெண்களின் உடல்கள் யாருக்குச் சொந்தம்? தனது உடலின் மீதான உரிமையை அவள் எப்போது மீட்கப் போகிறாள்?

பெண்ணியத்திற்காக சேது
...மேலும்

Jun 27, 2010

பெண்ணியத்தை "ஊடறு"த்து சாதிக்கப்போவதென்ன?


நேற்று ஊடறுவில் வெளிவந்த ஒரு செய்தியை "பெண்ணியம்" வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார். அந்த குறிப்பிட்ட குறிப்பு "பெண்ணியம்" இணையத்தளத்தின் மீதான சீண்டல் என்பதை வாசகர்கள் அறிய வாய்ப்பில்லை என்பதாலும், எமது மீது அவதூறு பரப்பும் வகையில் நேர்மை குறித்து எழுப்பியிருப்பதாலும் பகிரங்கமாகவே இதற்கான பதிலினை வாசகர்களுக்கு அளிக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஊடறுவில் வெளிவந்த குறிப்பு இது தான்

ஊடறுவில் வரும் ஆக்கங்களை எடுத்து பிரசுரிப்பதில் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை. அதே போல் ஒரு ஆக்கம் பல இடங்களில் பிரசுரிப்பதிலும் எமக்கு எந்த பிரச்சினையுமில்லை இல்லை. ஆனால் ஊடறுவில் இருந்து ஆக்கங்களை எடுத்து பிரசுரித்து விட்டு (பெண்ணியம் இணையத்தளம்) நன்றி ஊடறு, அல்லது ஊடறுவிலிருந்து எடுக்கபட்டது என்று போட மறுப்பது எமக்கு விசனத்தை ஏற்படுத்துகிறது. இது அவர்களின் நேர்மையீனத்தைக் காட்டுகின்றது. அப்படி நன்றி ஊடறு என்று போட விரும்பாதவர்கள் தயவு செய்து ஊடறுவில் இருந்து ஆக்கங்களை எடுத்து பிரசுரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
----0---

ருவந்தி எழுதிய තාත්තා ගැන මගේ මතකය (அப்பாவைப் பற்றிய எனது நினைவுகள்) எனும் கட்டுரை சிங்களத்தில் சில மாதங்களுக்கு முன் "பூந்தி" எனும் இணையத்தளத்தில் பிரசுமானபோது அதனை மொழிபெயர்க்க நண்பர் ஒருவரிடம் நாம் கொடுத்திருந்தோம். அதற்குள் தற்செயலாக தந்தையர் தினத்தையொட்டி ருவந்தி Facebook இல் யூன் 18 அன்று சிங்கள மூலத்தையும், அதனை தமிழாக்கத்தையும் வெளியிட்டிருந்தார். அதனை மொழியாக்கம் செய்தவர் ஃபஹீமாஜஹான் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அக்கட்டுரை வேறோரிடத்திலிருந்து பெறப்பட்டதாக அவர் அதில் எங்கும் குறிப்பிடவில்லை. வேறெங்கும் வெளியிடப்பட்டதாக நாமும் அறிந்திருக்கவில்லை.அதனை பெண்ணியம் வெளியிட்டதற்காக ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் ஊடறு றஞ்சி.

இவ்வாறு "கொப்பிரைட்" பிரச்சினை குறித்து ஊடறு எம்மிடம் நேரடியாக நட்புடன் சரிசெய்திருக்க முடியும். ஆனால் அவர் நேரடியாக வாசகர்களிடன் புனைவதால் இது குறித்து பெண்ணியம் வாசகர்களுக்கும், ஊடறு வாசகர்களுக்கும் நேரடியாக எமது நிலையை எடுத்துரைக்க கடமைபட்டுள்ளோம்.

சிங்களத்தில் வெளிவரும் பெண்களின் சிறந்த படைப்புகள் தமிழில் மொழிபெயர்த்தலின் அவசியத்தை நிறையவே உணர்ந்தோம். ரிஷான் ஷெரீப் போன்றோர் சமீபகாலமாக இது விடயத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

வேறு இடங்களிலிருந்து பிரசுரிக்கப்படுகின்ற கட்டுரைகள் அனைத்திற்கும் அதன் மூலத்தை வாசகர்களுக்கு அறியத்தந்திருக்கிறோம். பெண்ணியத்திற்கு நேரடியாக எழுதப்படுகின்ற படைப்புகள் தவிர ஏனைய அனைத்திற்கும் மூலம் குறிப்பிடத் தவறியதில்லை. அப்படி தற்செயலாக தவறிய ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டவுடன் உடனேயே கண்ணியமாக திருத்திக்கொண்டோம்.

பெண்ணியம் தளம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊடறு றஞ்சியால் ஏற்பட்ட நெருக்கடிகளால் மனம்நொந்து போனோம். அந்த சர்ச்சையினை வாசகர்களிடம் கொண்டுசெல்லவில்லை. அதனை தோழமைபூர்வமாக சரிசெய்யலாம் என்று நம்பினோம். அதற்கான வாய்ப்பினையும் ஊடறுவுக்கு அளித்தோம். ஆனால் அதற்கான நேர்மையான, உளச்சுத்தி ஊடறுவுக்கு இருக்கவில்லை. "பெண்ணியம்" மீதான அவதூறுக்கு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தது போல இப்போது இறங்கியிருக்கிறார்.

ஊடறுவின் இந்த போக்குக்கு ஊடறுவின் ஏனைய தோழிகள் எந்தளவு பொறுப்பேற்கிறார்கள் என்பது எமக்கு தெரியவில்லை. ஆனால் அவர்களது பார்வைக்கும் சேர்த்து கீழே றஞ்சியுடன் நிகழ்ந்த மின்னஞ்சல் பரிமாறலை வாசகர்களுடன் பகிர்ந்துகொக்றோம்.

2009/11/24 அன்று ஊடறுவிடமிருந்து வந்த கடிதம்.
நட்புடன் பெண்ணியம் தோழர்களுக்கு ஊடறுவிலிருந்து ஆக்கங்களை எடுத்து பிரசுரிப்பது பிரச்சினையில்லை ஆனால் ஊடறுவுக்கு நன்றி போட வேண்டும் சாதாரண கருத்தும் நேர்மையும் உங்களிடம் இல்லை ஸ்ரெலா விக்டரின் இக்கட்டுரை ஊடறுவில் நவம்பர் 27 2008 வெளிவந்தது.
ஊடறு ஆசிரியர் குழு


அதற்கு பதிலளித்து பெண்ணியம் அனுப்பிய பதில்.

from Editor Penniyam 

to oodaru 

date 25 November 2009 01:55


subject "நேர்மையின் தார்மீகம்..."
mailed-by penniyam.com

நட்புடன் றஞ்சிக்கு!
எந்த ஆக்கங்களை பிரசுரிப்பதாக இருந்தாலும் அதன் "மூலத்தை" தெரிவிக்கும் ஊடகப் பண்பை "பெண்ணியம்" பேணி வருகிறது. ஆனால் இக்கட்டுரை அவ்வாறு தவறவிடப்பட்டதற்காக வருந்துகிறோம். அதனை உடனேயே திருத்திக்கொள்கிறோம். அதனை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ஆனால் நீங்கள் நேர்மை குறித்து சுட்டியது வருத்தம் தருகிறது.

நட்புடன் நீங்கள் இதனை சுட்டிக்காட்டியதாகத் தெரியவில்லை. இது குறித்து பொறுப்புடன் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக குற்றஞ்சுமத்துவதையே நோக்கமாக கொண்டு ("ஊடறுவுக்கு நன்றி போட வேண்டும். சாதாரண கருத்தும் நேர்மையும் உங்களிடம் இல்லை") எழுதப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதிலிருந்து உங்கள் உள்நோக்கத்தை விளங்கிக்கொள்வது ஒன்றும் கடினமாக இல்லை.

மேலும் தோழி அறிவது, இந்த கட்டுரை எந்த ஊடறுவிலும் இருந்தும் நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இக்கட்டுரை ஏற்கெனவே நான் பணிபுரிந்த மட்டக்களப்பு - சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் வெளியீடான "பெண்" இதழில் முதலில் வெளிவந்தது.

அதன் பின்னர் அதனை பல்வேறு சஞ்சிகைகளும், இணையத்தளங்களும் மறுபதிப்பித்தன. அவர்களில் ஒன்று ஊடறு. அதனை பிரசுரித்த வேறும் இணையத்தளங்கள் கீழேஉள்ளன. இக்கட்டுரையை நாங்கள் உயிர் இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொண்டாலும். அதன் "மூலமான" "பெண்" சஞ்சிகைக்கே எமது நன்றி உரித்தாகும். இதில் ஊடறு எங்கிருந்து வந்தது...?

இக்கட்டுரை வெளியான இணையத்தளங்கள் இவை. 

* உயிர்

* இனியொரு

* நியுஸ் பானை

இதில் 'இனியொரு" இணையத்தளம் மட்டுமே -நன்றி: ‘பெண்” (இலங்கை)- என நன்றி தெரிவித்திருந்தது.

குற்றஞ்சுமத்துவதில் உங்களுக்கு இருந்த ஆர்வத்தாலும், அவசரத்தாலும் நீங்கள் நிதானம் இழந்து அவதிப்படுவது எங்களுக்கு புரிகிறது. உங்கள் நேர்மையை சுயவிமர்சனத்துக்குள்ளாக்கிவிட்டு மற்றவரில் நியாயம் தேடியிருக்கலாம்.

நீங்கள் தொடர்ச்சியாக இந்த சில நாட்களில், தொலைபேசியில் அழைத்து ஊடறுவில் வந்தவற்றை மறுபிரசுரம் செய்ய வேண்டாம் என எச்சரித்ததையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். அந்த எச்சரிக்கைக்கு முன்னரும் சரி பின்னரும் சரி இன்றுவரை ஊடறுவில் இருந்து எந்தவொரு படைப்பையும் மறுபிரசுரம் செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இத்தனைக்கும் பல கட்டுரைகள் ஊடறுவில் வெளிவருவதற்கு முன்னர் வேறு பல தளங்களில் அவை ஏற்கெனவே பிரசுரிக்கப்பட்டிருந்தது என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம். அப்படைப்புகளை எங்கிருந்து நீங்கள் பிரதிசெய்தீர்கள் என்பதை உங்களிடம் எவரும் முறைப்பாடு செய்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம்.

இந்த குற்றச்சாட்டை சுமத்துவதற்கான தார்மீகம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது...? ஊடறுவில் வெளிவந்த கட்டுரைகளின் மூலங்களை பட்டியலிட்டு காட்ட வேண்டுமா? படைப்பின் "மூலம்" குறிப்பிடாமல் பல்வேறு படைப்புகள் ஊடறுவில் வெளியாகியிருப்பதை நாங்கள் அறிந்திருப்பதைப் போல பலரும் அறிவர். ஆனாலும் அவ்விடயம் எமக்கு ஒரு பொருட்டில்லை. கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதே எமது தலையாய நோக்கமாக உள்ளது. இதில் மூலம் குறித்த விடயத்தில் அதிக சிரத்தை கொள்ளத்தேவையில்லை என்கிற கருத்தை நாம் கொண்டிருந்தாலும் கூட, நாங்கள் வெளியிட்ட படைப்புகளின் "மூலத்தை" பதிவு செய்தே வந்திருக்கிறோம்.

ஊடறு வலைப்பதிவினை தொடுப்பு கொடுக்கும் போது அதற்கு முதன்நிலை கொடுத்து வரிசையில் ஆரம்பத்தில் இருக்கவேண்டும் என வற்புறுத்தினீர்கள். அந்த பட்டியலில் முக்கியத்துவம் கொடுத்து எந்த தளமும் வரிசைப்படுத்தவில்லை என்பதால் தொடர்ந்தும் அதனையே பேண விரும்புகிறோம் என்பதை உங்களுக்கு அறியத்தந்தேன். ஆனால் ஓரு நாளும் ஏன் "பெண்ணியம்" தளத்திற்கு இன்னமும் நீங்கள் தொடுப்பு கொடுக்கவில்லை என இன்று வரை நாங்கள் உங்களிடம் கேட்டதில்லை.

ஆரம்பத்திலிருந்து "பெண்ணியத்திற்கு" உற்சாகமும் ஊக்குவிப்பும் தருவதற்குப் பதிலாக சோர்வையும், சலிப்பையும் தரத்தக்கவகையில் உங்கள் தொலைபேசி அழைப்பு இருந்து வருகிறது. அதற்காகவே உங்கள் தொலைபேசி அழைப்பை தவிர்ப்பதன் மூலம், இருக்கின்ற மனவலிமையைப் பேணிக்கொள்ளலாம் என்றுணர்ந்த சந்தர்ப்பங்களே அதிகம்.

பெண்ணியம் தளத்திலிருந்து எவருமே எமது படைப்பை அனுமதியின்றியோ, மூலத்தை குறிப்பிடாமலோ பிரசுரிக்கலாம். அதற்கு நாங்கள் வரையறை விதிக்கவில்லை. படைப்பினை மக்களிடம் கொண்டு செல்வதே எமது பணி. எமது அந்த லட்சியத்தினை எவர் நிறைவேற்றினாலும் அது எமக்கு வெற்றியே. இதில் எந்தவித உடமை பிரச்சினையையும் நாங்கள் எழுப்பப்போவதில்லை.

எமது நேர்மை குறித்து கேள்வி எழுப்பிய நீங்கள் "பெண்ணியம்" தளத்தில் இருந்து சமீபத்தில் வெளியான "மரணம் படர்ந்த முற்றங்கள்" கவிதையை மீளவும் பிரசுரித்தபோது "மூலம்" குறித்த உங்கள் "அக்கறை" எங்கே போனது. அது குறித்து எந்தவித உரிமைகோரலையோ, உங்கள் மீதான குற்றச்சாட்டையோ நாங்கள் சுமத்தவில்லை. மக்களுக்கு சொந்தமான படைப்பினை உடமையாகக்கொள்ளும் பூர்ஷ்வா குணத்துக்கு நாங்கள் பலியாகவில்லை. அந்தளவு பலவீனமான இடத்தில் "பெண்ணியம்" இல்லை என்பதை உங்களுக்கு அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஊடறுவின் நன்மை கருதி உங்கள் கடிதத்தையும், எங்கள் பதிலையும் "பெண்ணியத்தில்" பதிவு செய்வதை தவிர்த்துக்கொள்கிறோம்.

பொதுவிடயங்களில் நம்மைப்போன்றோர் நேச சக்திகளாக அணிதிரண்டு பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவதே இன்றைய தேவை. நேச உறவை பாதிக்கக்கூடிய வகையிலான இந்த அணுகுமுறைகள் தொடர்வது நமது இலட்சியங்களை வீணாக பாதிக்கும். எதிர்காலத்திலும் பரஸ்பர தோழமை சக்திகளாகவே நாம் இருக்கவேண்டுமென விரும்புகிறோம்.

ஊடறுவின் பணிகள் தொடர எமது மனமார்ந்த வாழத்துக்கள்

"பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான வாரம் அனுட்டிப்போம்."

தில்லை
தொகுப்பாசிரியர்
பெண்ணியம்
25.11.2009

மேற்படி கடிதத்திற்கு எந்தவித தார்மீக பதிலையும் அதற்குப் பின் ஊடறு அளிக்கவில்லை. தொடர்பும் முழுமையாக அற்றுப்போனது.

பெண்ணியம் தளம் வெறும் பெண் எழுத்துக்களை பதிவு செய்வதோடு இல்லாமல் சிறிது சிறிதாக சமூகப் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. சமூகமாற்றத்துக்கான எந்தவொரு பங்களிப்பையும் யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கப்படவில்லை. பெண்ணியம் சார்ந்த விடயங்களில் கூட புகலிடத்திலும், தளத்திலும் பல சக்திகள் அவரவர்க்கு ஏற்ற பங்களிப்பை செய்துவருகின்றனர். "பெண்ணியம்" தளம் அதில் ஒன்று மட்டுமே.

றஞ்சியின் தொலைபேசி எச்சரிக்கையின் பின்னர் எந்தவொரு ஆக்கமும் ஊடறுவிலிருந்து மறுபிரசுரிக்கப்பட்டதில்லை. ருவந்தியின் இந்த ஆக்கம் கூட சர்ச்சையினை தவிர்ப்பதற்காக பிரசுரிப்பதை எம்மால் தவிர்த்திருந்திருக்க முடியும். ஆனால் ஊடறுவில் குற்றஞ்சாட்டும் வரைக்கும் அப்படி ஒரு விடயத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை. 

செய்ய பணிகள் எத்தனையோ இருக்கிறது. இவ்வகை சர்ச்சைகளில் சிக்குவதை தவிர்த்தே வருகிறோம். ஆனால் இவ்வகை அவதூறுகள் வீண் குற்றச்சாட்டுக்கள் தொடருமாயின் "பெண்ணியம்" தளத்தின் நலன் கருதி மேலதிகமாக வாசகர்களுடன் விரிவாக பகிர்ந்து கொள்கிறோம். இப்போதைக்கு இது போதும்.

தோழமையுடன்
பெண்ணியம் குழு
22. 06. 2010
...மேலும்

மாபலி விருந்து அழைப்பு! - மாலதி மைத்ரி


ஆன்றோரே சான்றோரே
பேரரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்ததும் ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்கப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்
மனிதகுலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விருந்தை வழங்குபவர்கள்
ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,
ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.

குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!

(நன்றி-ஆனந்த விகடன்)
...மேலும்

Jun 26, 2010

விடுதலை பேசி நாசமாய்ப்போவோம் - சாந்தி ரமேஷ்


மரணம் !
அது உனது முகம் முழுவதும்
வியாபித்திருக்கிறது....
சொல்ல எழுகிற சொற்களைக்
குற்றித் துளைக்கும்
கூர்முனைக் கத்தியிலிருந்து
உயிர்க்காற்று மூர்ச்சையுறுகிறது.

உதிரும் குருதித் துளிகள்
உனக்குள்ளிருந்த பலம் முழுவதையும்
உறிஞ்சிக் கொண்டு போகிறது.....
கத்தியின் இடுக்கிலிருந்து
ஒழுகுகிறது உனது
கடைசிக் கனவுகள்.....

ஓர் உயிரின் பெறுமதி பற்றிய
எந்தவித கவலையுமின்றி
உன்னைக் குற்றிக் குருதியில்
குளிப்பாட்டி மகிழ்கிறது
காடேறிகளின் கர்வம்.....

இன்றைய முகப்புச் செய்திகளிலும்
தலைப்புச் செய்திகளிலும்
நீ நிறைந்து வழிகிறாய்.....
வியாபாரிகள் வயிறு முட்ட நீ
வலியில் துளித்துளியாய்
செத்துப் போகிறாய்.

எத்தனையோ கொடுமைகள்
படங்களாய் வந்து போயிற்று
அதுபோல நீயும்
நாலுநாள் செய்தி - பின்
நாவுகளில் மட்டுமல்ல
நமது வீரங்களின்
நினைவுகளிலிருந்தும்
நிரந்தரமாய்
மறந்து போய்விடுவாய்.....

உன்போல் பல கதைகள்
அவ்வப்போது வந்து
ஆயுளை அழித்துச் செல்லும்
ஆயினும் வீரமாய் விடுதலை பேசி
நாசமாய்ப்போவோம்....

நீங்கள் சாவது
குருதியில் மிதந்து போவது
நமக்கெல்லாம் இது வீரத்தின் குறியீடு
விடுதலையின் அடையாளம்....

`மனிதம் மனிதவுரிமை`
மேற்படி சொற்களின் பெறுமதி
உனக்கானதும் உன்போன்ற
ஆயிரமாயிரம் பேருக்கான முடிவுகள்
இதுதான் என்பதை மீள்பதிவாக்குகிறது.

தோழனே !
தூ....எனக்காறித் துப்புகிறது மனச்சாட்சி
இந்தத் துப்புக்கெட்ட சாதிக்காகவா
நீங்கள் சாகத்துணிந்ததும்....?
சயனைட் அணிந்ததும்.....?

22.05.2010 (இன்று வெளியான ஒரு போராளியின் கொலை தந்த துயரிலிருந்து....)
நன்றி - சாந்தி ரமேஷ்
...மேலும்

Jun 25, 2010

மகளிர் இடஒதுக்கீடு : மாற்றங்கள் - மாயைகள் - மௌனங்கள் - மாயா


கடந்த 14 வருடங்களாகக் கோப்புகளில் முடங்கியிருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பெரும் களேபரங்களுக்கு நடுவில் மாநிலங்களவையில் உயிர் பெற்றிருக்கிறது. சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடத்தைப் பெண்களுக்கு ஒதுக்கும் மசோதாவை வரவேற்பதாக ஆரம்பம் முதல் அத்தனை கட்சிகளும் வாய் மொழியாகக் கூறி வந்தன. ஆனாலும் அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் முதல் பக்கத்தைப் புரட்டுவதற்கே இவ்வளவு காலமெடுத்திருப்பது, இந்திய அரசியல்வாதிகளின் பேச்சிற்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தையும் இந்திய சமூகத்தின் பிரதிபலிப்பாக அவர்களிடம் உள்ள ஆணாதிக்க மனோபாவத்தையும் காட்டுகிறது. ராஜீவ் கண்ட கனவுத் திட்டத்தை தான் நிறைவேற்றுவதாகக் கூறி பெண்கள் ஓட்டை ஈர்க்க நினைக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திகூட தனது கட்சிக்குள் பலரது எதிர்ப்பைத் தாண்டித்தான் இந்த மசோதாவை முன்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது என்று என்.டி.டி.வி. பேட்டியில் கூறியுள்ளார்.

பெண்களுக்கு 33 சதவீத இடங்களை விட்டுக் கொடுப்பதால் தங்களின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியிலிருந்து வெளியேற நேரலாம் அல்லது அதைத் தனது மனைவி, மகள் போன்ற குடும்பத்தாருக்குத் தர நேரலாம் என்ற பயம் இந்த மசோதாவை ஆதரித்த கட்சிகளின் ஆண் எம்.பி.க்களுக்கும் இருக்கத் தான் செய்கிறது. சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயமும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலூவும் அதை உள் ஒதுக்கீடு என்ற போர்வையில் வெளிப்படுத்துகிறார்கள். மற்றவர்களுக்கு அப்படி மறைந்துகொண்டு தங்கள் உண்மைக் கருத்தை வெளிப்படுத்த எந்த போர்வையும் கிடைக்கவில்லை. ஐ.மு.கூ.வின் முதல் ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் காங்கிரசின் சாதனைகளாக முன்வைக்கப்பட்டு 2004ஐவிட 2009ல் அதிக மக்களவைத் தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இனி, 2014 தேர்தலில் மகளிர் இடஒதுக்கீட்டை வைத்துப் பெண்கள் வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்பி தனிப் பெரும்பான்மை பெறலாம் என்று கணக்குப் போடுகிறது காங்கிரஸ். அதனால் முலாயம், லாலுவைப் பகைத்துக்கொண்டால் மயிரிழை பெரும்பான்மை கொண்ட ஆட்சியை சிரமங்களுக்கு நடுவில் நடத்த வேண்டியிருக்கும் என்று தெரிந்தாலும் துணிந்து களமிறங்குகிறார்கள். அணு பேர ஒப்பந்தத்திற்கு அடுத்து மீண்டும் பெரும்பான்மை சிக்கலுடன் நடக்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு. ஆனால் மகளிருக்கு ஆதரவான காரியங்களைச் செய்கிற பிம்பத்தைப் பெற்றுவிட்ட அரசாங்கத்தைக் கலைப்பது தங்களுக்கு சாதகமானதாக இருக்காது என்பதாலும் அரசியல் குதிரை பேரங்களுக்கும் ஆட்சி அதிகாரத்தை எப்படி வேண்டுமானாலும் வளைப்பதற்கும் பேர்போன காங்கிரஸ் ஆட்சியை எளிதாகக் கலைக்க முடியாது என்ற பழைய அணு பேர உதாரணத்தை அறிந்ததாலும் யாதவ்கள் குடைச்சலை மட்டுமே கொடுப்பார்கள் என கணிக்கலாம்.

சில இந்து சாமியார்களும் முஸ்லிம் மத குருக்களும் மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் ஓரணியில் நிற்கிறார்கள். மதம் வேறாக இருந்தாலும் தங்களின் பார்வையும் நோக்கமும் ஒன்றுதான் என்பதை மதவாதிகள் நிரூபிக்கிறார்கள். பி.ஜே.பி.யே மகளிர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது என்று இந்து சாமியார்களுக்கும் முஸ்லிம் தேசமான பாகிஸ்தானில் ஏற்கனவே 22 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதை உலமாக்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது அரசியல்ரீதியாக தற் கொலைக்குச் சமம் என்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்திருப்பதால் மதவாதிகளின் கூச்சலுக்கு அவர்கள் செவி சாய்க்கப் போவதில்லை. 1990களில் நடந்த மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலின்போது பெண்களை இழிவாகப் பேசினார் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே. அதற்குப் பிறகு அவரது கட்சிக்கு ஏற்பட்டு வரும் தொடர் சரிவிற்கு, அதனால் பறிபோன பெண்கள் வாக்கும் ஒரு காரணம் என நம்பப்படுகிறது. லாலூவும் முலாயமும் மகளிர் இட ஒதுக்கீட்டை நேரடியாக எதிர்க்க முடியாமல் தந்திரமாக ஜாதியைச் சொல்லி எதிர்ப்பதிலிருந்தே இது நிச்சயமாக அரசியல்ரீதியாக சக்தி வாய்ந்த மாற்றம் என்பதை உணர முடிகிறது. கல்வி, சொத்துரிமை, சம்பாதிக்கும் உரிமை, மனித உரிமை போன்ற பல தளங்களில் ஒடுக்கப்பட்ட பிரிவினரான பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தில் இடம் உருவாக்கிக் கொடுப்பது மகளிர் விடுதலையில் பெரிய புரட்சியைப் படைக்கும் என்று பெண்ணியவாதிகள்கூட நம்புகிறார்கள். முக்கியமான முடிவெடுக்கும் பொறுப்புக்களில் பெண்களை வைப்பதன் மூலம் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் நலன் அரசு செயல்பாடுகளில் முக்கியத்துவம் பெறும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் தலித் இட ஒதுக்கீடு போல பெண்கள் இட ஒதுக்கீடு நேரடியான மாற்றங்களைக் கொண்டு வருமா என்பது தீவிரமான விவாதத்திற்குரியது.

1920களிலேயே பெண்கள் இட ஒதுக்கீடு இந்தியாவில் விவாதிக்கப்படுகிறது. ஆனால் இது ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று அதைக் கருதிய காங்கிரஸ், அப் போது வாக்குரிமை பெற்றிராத பெண்களுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்தால் போதும் என்று தீர்மானித்து விட்டது. முற்போக்கான சமூக இயக்கங்களின் முன்னோடியாக தமிழகத்தில் இருந்த பெரியார் ஈ.வெ.ராமசாமி அதையும் தாண்டி பெண்களின் வாழ்வின் நிஜமான மாற்றத்தைக் கொண்டு வரும் சக்தி படைத்த சொத்துரிமைக் கோரிக்கையை 1929ஆம் ஆண்டிலேயே முன்வைத்தார். 1927ல் இந்தியாவின் முதல் பெண் எம்.எல்.ஏ.வையும் தமிழகம் உருவாக்குகிறது (தாசி முறையை ஒழிப்பதற்காகப் பாடுபட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி). ஆனால் மக்கள் பிரதிநிதிகளில் பெண்களின் இடம் அதிகரிப்பதற்குப் பதில் 1990களுக்குப் பிறகு குறையத் தொடங்கியது. 1996ல் ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 11 சதவீதம் மட்டுமே பெண்கள். வெற்றி பெற்ற 545 பேரில் 36 பேர் மட்டுமே மகளிர். தற்போதைய இந்திய நாடாளுமன்றத்தில் பெண்கள் வெறும் 10 சதவீதம் மட்டுமே. உலகெங்குமிருக்கும் நாடாளுமன்றங்களில் 13.8 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். 1957ஆம் ஆண்டிலேயே தங்கள் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளில் 15 சதவீத இடம் பெண்களுக்குக் கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் தன்னிச்சையாக அறிவித்தது. ஆனால் இன்று வரை அதை அவர்களால் அமலுக்குக் கொண்டு வர முடியவில்லை. அதனால், இந்திய அரசியல் சாசனத்தின் 9ஆவது பிரிவின்கீழ் (9th schedule) சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரைக் கைதூக்கிவிட இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தலாம் என்ற சட்டப் பிரிவை, சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏற்றம் கிடைக்காத பெண்கள் விஷயத்தில் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

ஆனால் பெண்கள் என்பவர்கள் ஒரு இனக் குழுவோ, சமூகப் பிரிவோ அல்ல. தலித்துகளைத் துல்லியமாக இலக்கு வைத்து இட ஒதுக்கீடு மூலம் உயர்த்தி வருவது போல பெண்களை ஒரு சீராக உயர்த்த முடியாது. பெண்களின் பிரச்சினைகள் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் வேறுபட்டதாக இருக்கிறது. அந்த வேறுபட்ட பிரச்சினைகள் அத்தனைக்கும் அரசியல் அதிகாரத்தைக் கொடுப்பதே சர்வரோக நிவாரணியாக முடியாது. 1991ல் ராஜீவ்காந்தியின் முன்முயற்சியால் பஞ் சாயத்துக்களில் கொண்டு வரப்பட்ட 33 சதவீத இட ஒதுக்கீட்டை ஆராயும் போது நமக்குப் பல பதில்கள் கிடைக்கின்றன. லாலு, முலாயமின் அண்டப்புளுகு அப்போதே அம் பலமாகிவிட்டது. இவர்கள் இன்றுகேட்பது போல அன்று உள் ஒதுக்கீடு தரப்படவில்லை. ஆனால் அவர்கள் சொல்வது போல கிராப் வெட்டிய பெண்மணிகள் உள்ளாட்சி அமைப்புக்களை ஆக்கிரமிக்கவில்லை. மாறாக, 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 21.1 சதவீதம் அதே தொகுதிகளை அதற்கு முன்பு கட்டுப்படுத்திய ஆண்களின் உறவினர்களால் நிரப்பப்பட்டது. அதனால் எம்.பி. எம்.எல்.ஏ. பதவிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரும்போது, இருக்கவே இருக்கிறார்கள் மனைவிகளும் மகள்களும். “ஏழு மகள்களைக் கொண்டிருக்கும் லாலு இந்த மசோதாவை எதிர்ப்பதில் நியாயமில்லை” என்ற சோனியாவின் கிண்டல் வெகுவாக ரசிக்கப்பட்டது இதே காரணத்தினால்தான். ஆனால் சுழற்சி முறையில் இட ஒதுக்கீட்டிற்கான தொகுதிகள் மாற்றப்படும் என்பதால் மறு தேர்தலில் அது பொது வேட்பாளருக்குரியதாக மாறும்போது புதிதாக உருவான பெண் அரசியல்வாதிகள் மீண்டும் சமையலறைக்கு கடாசப்படுவார்களா? அனைவரும் அவ்வாறு காணாமல் போவதில்லை என்று காட்டுகின்றன உள்ளாட்சி இட ஒதுக்கீடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2008ல் நடத்திய ஆய்வின்படி 33 சதவீத இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொண்ட பெண்களில் 15 சதவீதம் பேர் மீண்டும் போட்டியிட்டதாகத் தெரிய வந்தது. இது ஒன்றும் மோசமான சூழல் அல்ல. ஆனால் பெண்கள் இட ஒதுக்கீட்டால் அடிமட்டத்தில் அதிகார சமநிலை மாற்றப்படுவதில்லை என்பதையும் சேர்த்தே தான் இது உணர்த்துகிறது.

அந்தந்த பகுதிகளை ஏற்கனவே கட்டுப்படுத்தி வரும், அதிகார மையமாக இருக்கும் ஆண்களின் உறவுப் பெண்கள்தான் இந்த இட ஒதுக்கீட்டின் ஆரம்ப பயனாளிகளாக இருப்பார்கள் என்பது தவிர்க்கவியலாத உண்மை. ஆனால் குறைந்தபட்சம் ஒரு ஆணின் கட்டுப்பாட்டிலிருந்து ஒரு பெண்ணுக்கு அதிகாரம் போகிறது. அதன் மூலம் அரசியல் முடிவுகளின்போது பெரிதும் புறக்கணிக்கப்படும் பெண்கள், குழந்தைகளின் நலன்கள் முக்கியத்துவம் பெறுகிறது. மேற்கு வங்கத்திலும் ராஜஸ்தானிலும் உள்ளாட்சி இட ஒதுக்கீட்டால் பலன் பெற்ற பெண்களின் ஆட்சியில் என்னவிதமான மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை கொல்கத்தா ஐ.ஐ.எம்.மைச் சேர்ந்த ராகவேந்திர சட்டோபாத்யாயாவும் அமெரிக்கா விலுள்ள மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் (எம்.ஐ.டி.) எஸ்தர் டஃப்ளோவும் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. பெண் உள்ளாட்சித் தலைவர்கள் வந்த பிறகு வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவமும் சாலைகள் போடுவதற்கு குறைவான முக்கியத்துவமும் (கவனிக்கவும், கமிஷன் அடிக்க முடிகிற சாலைத் திட்டங்களுக்குக் குறைவான முக்கியத்துவம், வாழ்வாதாரமான, பெண்களுக்கு சுமை தருகிற தண்ணீர் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம்) தரப்பட்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் விஷயத்தில் தற்போது காட்டப்படும் மரத்துப்போன அணுகுமுறை மாறுவதற்கு மகளிர் இட ஒதுக்கீடு உதவலாம் என்பதையே இது உணர்த்துகிறது. ஆனால் பெண்கள் நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்ற முத்திரையுடன் அவர்களுக்குப் பொது அமைப்புக்களில் இடம் தர வேண்டும் என்று கோரிக்கை வைப்பது அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட.

தென்னமெரிக்க நாடுகளிலும் ஆப்ரிக்காவிலுள்ள பல தேசங்களிலும் புதிய ஃபேஷன் இது. ஊழல் புரையோடிவிட்ட தேசங்களில் காவல்துறை போன்ற அமைப்புக்களில் ஏராளமான பெண்கள் நிய மிக்கப்படுகிறார்கள். உகாண்டாவிலும் தென்னாப்ரிக்காவிலும் பெண்களுக்கு அரசியலிலும் பொது அமைப்புக்களிலும் கணிசமான இடம் கொடுக்கப்படுகிறது. மெக்சிகோவில் ஒட்டுமொத்த போக்குவரத்துக் காவல்துறையும் பெண்கள் மயமாக்கப்படுகிறது. ஒரு பெண்ணாக இருந்துகொண்டு லஞ்சம் பெறும் போது அவரின் ஒழுக்கம் கேள்விக்குள்ளாகும் என்பதால் பெண் போலீஸ் லஞ்சம் வாங்குவதில்லை என்று அதைப் பற்றி ‘பெருமையாகச்’ சொல்கிறார்கள். பெண்ணிவாதிகள்கூட இந்த வாதத்திற்குப் பலியாகிவிடுகிறார்கள். அரசியலுக்குப் புது விதமான அணுகுமுறையைப் பெண்கள் கொண்டு வருவார்கள் என்று பெண்ணியவாதிகள் கூறி வருகிறார்கள். ஆனால் பொது அமைப்புகளுக்குள் பெண்கள் இப்போதுதான் சிறிய அளவில் வரத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த அமைப்பிற்கே உரிய எதிர்மறை குணங்கள் காலப் போக்கில் இவர்களையும் பற்றிக்கொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தற்போதைய சூழலில் அரசியல் கட்சிகளின் மகளிர் அணியில் இருப்பவர்களிடம் பெண்கள் குறித்துச் சொல்லப்படும் உயர்வான மதிப்பீடுகளைப் பார்க்க முடிவதில்லை. ஆண் அரசியல்வாதிகளால் தொடர்ந்து சுரண்டப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்படும் மகளிர் பிரிவைச் சேர்ந்தவர்கள் கூடிய விரைவிலேயே, ஆண்களின் குணம் என்று வகைப்படுத்தப்படும் அத்தனை அம்சங்களையும் தனதாக்கிக் கொள்கிறார்கள். தெற்காசியாவில் அதிகம் காணப்படும் பெண் அரசியல் தலைவர்களை அவர்களுடன் ஒப்பிட முடியாது. கணவர் அல்லது தந்தையின் மரணத்தால் எழும் அதிகார வெற்றிடத்தை நிரப்ப நேரடியாக உயர் பதவிக்கு வருபவர்கள் அவர்கள். அத்தகைய பெண் தலைவர்களை தாய், தெய்வம், அன்னை என்று கொண்டாடும் கட்சிக்காரர்கள் கட்சியின் மகளிர் பிரிவினரை அஃறிணையாகத்தான் நடத்துகிறார்கள்; காவல்துறையில் பெண் கான்ஸ் டபிள்கள் நடத்தப்படுவது போல. அதனால் பெண்களின் ‘உயர்ந்த பண்புகள்’ என்று கூறப்படுகின்ற விஷயங்களைப் பொது அமைப்புக்களில் இடம் கோரும்போது, காலப்போக்கில் அவர்களும் கறைபடத் தொடங்கினால் அதையே பெண்களுக்கு எதிராகவும் பயன்படுத்துவார்கள்.

மத்திய காலத்திலும் அதற்குப் பிறகும் எவற்றையெல்லாம் சுட்டிக் காட்டிப் பெண்களை வீட்டுக்குள் அடைத்தார்களோ, அதையெல்லாம் சொல்லித்தான் இப்போது அவர்களை வீட்டிலிருந்து வெளியேயும் அழைத்து வருகிறார்கள் என்பதுதான் வினோதமானது. ஸ்தூலமான சிந்தனா சக்தி இல்லாதவர்கள் என்பதால் ஆட்சி நிர்வாகத்திற்குப் பெண்கள் ஏற்றவர்கள் அல்ல என்பது பிளேட்டோவின் பார்வை. இல்லத்தரசிகளாக உணர்வுகள், ஆசைகள், உடல் ஆகியவற்றின் காப்பாளர்களாக இருப்பது பெண்களின் ‘இயல்பான’ கடமையாக இருப்பதால் அவர்கள் நிர்வாகத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று கருதினார் ரூசோ. ஆண்களைவிட பலவீனமான ஈகோ கொண்டவர்கள் பெண்கள் என்பது ஃப்ராய்டின் பார்வை. இன்று, பெண்களின் உணர்வுபூர்வமான அணுகுமுறை, ஆண்களின் ஆதிக்கம் கொண்ட தற்போதைய அதிகார வர்க்கத்தின் மரத்துப்போன அணுகுமுறையை மாற்ற உதவும் என்கிறார்கள். பலவீனமான ஈகோ கொண்டவர்கள் என்ற நிலையில் தேவையற்ற போர் போன்ற அழிவுக்காரியங்களில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்கிறார்கள் (குறிப்பாக, ஜக்கி வாசுதேவ் அப்படிப்பட்ட கருத்தை முன்வைக்கிறார்). இதே குணாம்சங்களைக் காட்டி ஒரு காலத்தில் பெண்களை வீட்டுக்குள் பூட்டியவர்கள் இப்போது அதே காரணங்களுக்காகப் பொது அமைப்புக்களில் பெண்களின் வரவை ஆதரிக்கிறார்கள். நாளை காலம் மாறும் போது, இதே வாதத்தை மீண்டும் அவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம். அதனால் பொது அமைப்புக்களில் இடம் பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை என்பதன் அடிப்படையில் வைக்கப்படும் கோரிக்கையே நீடித்த மாற்றத்திற்கானது என்கிறார் பிரிட்டனிலுள்ள சசெக்ஸ் பல்கலைக்கழக டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆன் மேரி கோயட்ஸ். பெண்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி பொது அமைப்புகளில் அவர்களுக்கு இடம் தருவது குறித்து ஆய்வு செய்திருக்கிறார் அவர்.

இந்தியாவின் 60 சதவீதப் பெண்கள் படிப்பறிவற்றவர்கள். 1989ல் தமிழகத்தில் பெண்களுக்கும் சொத் துரிமைக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் இதன் அமலாக்கம் பெயரளவிலேயே உள்ளது. கல்வி, சொத்துரிமை, சம்பாதிக்கும் உரிமை, பெண்கள் குறித்த பார்வை போன்ற பெண்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்காமல், அரசியல் அதிகாரத்தை மட்டுமே கொடுப்பதன் மூலம் அவர்கள் வாழ்வில் நிஜமான மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. ஜாதி ரீதியான ஒடுக்குமுறையையும் பாலினரீதியான ஒடுக்குமுறையையும் ஒப்பிட முடியாதுதான். எனினும் தலித்துகளுக்கு கல்வி, சொத்து (பஞ்சமி நிலம் முதலிய திட்டங்கள்), வேலைவாய்ப்பு உரிமையோடு எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகளிலும் இட ஒதுக்கீடு தரப்பட்டது என்பதை வைத்து முழுமையான மாற்றத்திற்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்துகொள்ளலாம். தலித்துகள், பழங்குடியினரின் வாழ்வை உயர்த்துவதற்காக முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் 9ஆவது பிரிவு இன்று பெண்களின் சமூக உயர்வுக்காகவும் பிரயோகிக்கப்படுகிறது. 62 வருட சுதந்திர இந்தியாவில் தலித்துகள், பழங்குடியினர் நிலையை இட ஒதுக்கீடு ஓரளவுக்கு உயர்த்தியிருக்கிறது. ஆனால் பெண்கள் ஒரு தனி இனக் குழுவோ, சாதியோ அல்ல என்பதால் அவர்களின் ஏற்றத்தை முழுமை அல்லாத ஒரு இட ஒதுக்கீட்டின் மூலமாக மட்டும் சாத்தியமாக்க முடியாது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களின் பங்கேற்பு ஏற்கனவே உயரத் தொடங்கிவிட்டது. பெண்கள் குறித்த ஆண்களின் பார்வை எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அதுவும்கூட மாறலாம். ஆனால் அரசியலில் ஊழலும் நேர்மையின்மையும் மலிந்திருப்பதற்கான அடிப்படைக் காரணங்களைச் சரி செய்யாமல் பெண்கள் இட ஒதுக்கீடு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பச் சொல்வதும் அரசியல் பிரதிநிதித்துவம் கொடுத்து விட்டதாலேயே பெண்களின் நிலை உயர்ந்துவிடும் என்று வாதிடுவதும் நமது சிந்தனையின் வறட்சியையே காட்டுகிறது.

நன்றி - உயிர்மை
...மேலும்

Jun 24, 2010

மகளிர்க்கு “இடம்’ கொடுப்போம் - பி. சக்திவேல்


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரமும் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குவது, அவர்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

நாடு சுதந்திரம் பெற்று இதுவரை 14 பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 1952-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்கள் வாக்குரிமை பெற்றுத் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

ஆனால் பிரிட்டன், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமையானது அந் நாடுகள் சுதந்திரம் பெற்றுப் பல ஆண்டுகள் ஆன பிறகு, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தான் கொடுக்கப்பட்டது.

உதாரணமாக, பிரிட்டனில் 1918 மற்றும் 1928-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் மூலம் தான் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் 1922-ம் ஆண்டும், சுவிட்சர்லாந்தில் 1971-ம் ஆண்டும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஒரு சில வளைகுடா நாடுகளில் 21-ம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் ஜனவரி 26, 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு, அரசியல் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.

நமது நாடாளுமன்றத்துக்கு இதுவரை நடைபெற்றுள்ள 14 பொதுத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 355 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 45 பேர் (8.3 சதவீதம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜெனீவாவிலிருந்து செயல்படும் நாடாளுமன்றங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு “”உலக அரசியல் வரைபடத்தில் பெண்கள் – 2005” என்ற தலைப்பில், 186 நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றி ஆராய்ந்து ஓர் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அதிக அளவு பிரதிநிதித்துவம் அளித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 104-வது இடத்தில்தான் உள்ளது. பாகிஸ்தான் 21.3 சதவீதம் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்ததன் மூலமாக 42-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ருவாண்டா 48.8 சதவீதமும், சுவீடன் 47.3 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஏற்கெனவே பெண்களுக்கு 33.3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மகளிர் பிரதிநிதித்துவம் இவ்வாறு இருக்கையில், தமிழக சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்த்தோமேயானால் நிலைமை திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை. அதிகபட்சமாக 1991-ம் ஆண்டு 31 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 22 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை (2,32,35,167) விட பெண் வாக்காளர்கள் (2,39,72,873) அதிகம் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அதேபோல் பல தேர்தல்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், பெண்களின் வாக்கு சதவீதம் அதிக அளவில் பதிவானது நிதர்சனமான உண்மையாகும்.

பெண்கள் அதிக அளவில் சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படாமைக்கு முக்கியக் காரணம் உள்ளது. கட்சியில் பெரும் அளவில் பெண் உறுப்பினர்கள் இருந்தபோதிலும் கட்சியின் பல்வேறு பதவிகளுக்குப் பெண்கள் நியமனம் செய்யப்படாததும், பெரும் அளவில் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அளிக்கப்படாததுமே காரணம் ஆகும். ஒரு சில கட்சிகள் ஒரு பெண் வேட்பாளரைக்கூட தேர்தலில் போட்டியிட வைக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படாமைக்கு முக்கியக் காரணம்: 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது. 10-லிருந்து 15 சதவீதம் மட்டும் அளிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு இந்த 33 சதவீதத்தில் உள் ஒதுக்கீடு வழங்கலாமா அல்லது வழங்கக் கூடாதா. நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதா அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திய பிறகு இட ஒதுக்கீடு வழங்குவதா?

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்று கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட பிறகு மேற்கூறிய பிரச்சினைகளை விவாதித்து ஒருமனதான கருத்து எட்டப்படலாம்.

மகளிர் இட ஒதுக்கீடு விஷயமானது 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தீர்வு காணப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இன்றைய சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களின் விருப்பம் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதை வலியுறுத்திதான் பல மகளிர் அமைப்புகள் போராடி வருகின்றன. பெண்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்தவும், அவர்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிக்கப்படவும் வேண்டுமென்றால் மகளிர் இட ஒதுக்கீடு மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் மக்களாட்சித் தத்துவம் முழுமை பெறுவதோடு மட்டுமல்லாமல் ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும்.

மகளிர் பெரும் அளவில் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு ஒன்றே தீர்வாகும். சர்வதேச அளவில் மகளிருக்குப் பிரதிநிதித்துவம் அளித்த பட்டியலில் 104-வது இடத்தைத்தான் இந்தியா பெற முடிந்தது. இந்த நிலை மாற வேண்டும்.

(கட்டுரையாளர்: துணை பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்