/* up Facebook

May 26, 2010

குருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த்திரையுலகம்!


குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் அய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்புவுக்கு மாற்றியுள்ளனர்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத்தையும் மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து புதிய ஆதாய வாசல்களைத் திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலைவீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப் போகும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘கான்ட்ராக்டுகள்’ மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மூன்று நாள் விழாவில் ஒரு நாள் படங்காட்டுவதற்காம்! ஒருநாள் வணிக ஒப்பந்தங்களுக்காம்! ஒருநாள் 20-20 கிரிக்கெட் கேளிக்கைக்காம்! எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் குறைவைக்காமல் இந்திய திரைப்படத் தாரகைகளின் ஆட்டம் பாட்டம் இருக்குமாம்!

ஐய்ஃபாவின் முதல் விருது விழா 2000-ல் லண்டனில் நடைபெற்றது. இது புகழையும், பணத்தையும் வற்றாமல் அள்ளிக்கொடுக்கும் அட்சய பாத்திரம் என்று அப்போதே தெரிந்துவிட்டது. அதிலிருந்தே, கனடா, தென்கொரியா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் ‘இந்நிகழ்ச்சியை எங்கள் நாட்டில் நடத்துங்கள்’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டன. இந்நிகழ்ச்சியின் மூலமாகத் தங்கள் சுற்றுலாத்துறை வளம்கொழிக்கும் என்பது இந்நாடுகளின் கணக்கு. நான்காண்டுகளுக்கு முன்பே ஐய்ஃபா விழாவைத் தொலைக்காட்சியில் கண்டுகளித்தவர்கள் 45 கோடிப்பேர். உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்த இடம் ஐய்ஃபாவுக்குதான்!

இந்த விழாவை நடத்தவிரும்பும் ஒவ்வொரு நாடும் அதற்காக ஐய்ஃபா அமைப்புக்கு 560 கோடி ரூபாய் தரத்தயாராயுள்ளன. அய்ஃபா-2010 விழாவை நடத்துவதற்கான போட்டியில் அயர்லாந்துதான் 2009 இறுதிவரை முன்னணியில் நின்றது. பிறகு தென்கொரியா மூக்கை நீட்டி முந்திக்கொண்டது. 2010 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தென்கொரிய அதிபர் லீமியூங்பாக் அவர்களிடம் இதற்கான அறிவிப்பை இந்திய தரப்பு அதிகாரப்பூர்வமாக வழங்கியது.

2010 பிப்ரவரி 27 வரை இந்தப் பட்டியலிலேயே கொழும்பு இல்லை. பிறகுதான் கொழும்பு பெயர் அடிபட்டது. உடனே அதற்குத்தான் என்று உறுதியும் செய்யப்பட்டு விட்டது. ‘இது இலங்கையின் மாபெரும் உலகசாதனை’ என்று சொல்லி மகிழ்கிறார் அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சாலா ஜகோடா.

கொழும்பு ஐய்ஃபா விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப்பச்சன். அவரும் ஷாருக்கானும், ஐஸ்வர்யாராயும் உலகப்புகழ் பெற்ற பாலிவுட் கலைஞர்களும் மேடையில் தோன்றி இலங்கையில் ‘அழகும் அமைதியும் குடி கொண்டிருப்பதை’ உலகமே பார்க்க உதவப்போகிறார்களாம். உலக மக்கள் தீர்ப்பாயம் (People's Tribunal) டப்ளினில் வைத்து இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி ‘அழகும் அமைதியும்’ அங்கு குடிகொண்டன என்று அவர்கள் விளக்க வேண்டும்.

தமிழர்களின் வேண்டுகோளை மதித்து அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! இது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்ய வேண்டும். (சல்மான்கான் தான் இப்போதைய தூதர் என்பது கடைசிச் செய்தி!)

சர்வதேச இந்திய திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இந்தித்திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை தமிழ்த் திரைக்கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றி ஒரு முயற்சி நடைபெறுகிறது. மணிரத்னத்தின் ‘ராவணன்’ கொழும்பு விழாவில் திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். ஃபிக்கியின் ஊடக / கேளிக்கை வணிகப்பிரிவின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் இவரையும் ரஜினியையும், ரஹ்மானையும் கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகி அழைத்ததாகவும் இவர்கள் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி. ‘தமிழன் ரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள்தானா கிடைத்தோம்’ என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ். இந்த செய்திகளெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.

ஆனால் இது போதாது. தமிழ்த்திரைப்பட அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்து கொள்ளவிடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப்பதையாவது தடுக்கலாம்தானே? இது நம் தமிழுறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல, கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா?

இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி தமிழ்த்திரையுலகம் போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ராமேசுவரத்துக்குச் சென்று சிங்களவனுக்குக் கேட்கட்டும் என்று குரல்கொடுத்தோம். நடிகர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் என்று அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். பாரதிராஜா, செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர் போன்றவர்கள் திரையுலகின் முழுவலிமையோடும், தமிழக மக்களைத் தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்து விடவோ, ஓய்ந்து விடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற விடாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது.

நிறவெறி தாண்டவமாடிய தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசைத் தனிமைப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில் தனிமைப்பட்டு விடாமல் பாதுகாத்து வருகிறது. இந்தியா செய்வது பச்சை அயோக்கியத்தனம் என்று உணர்த்த இது சரியான தருணம், சரியான வாய்ப்பு! விழிப்புடன் செயல்படவேண்டிய தருணத்தில் தூங்கிவிட்டுப் பிறகு சீனாவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்துக்கான சுடர் இந்தியா வந்தபோது அதை ஏந்தி ஓடிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பெயரெல்லாம் மறந்துவிட்டது. திபெத்தில் சீன அரசு நடத்திவரும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுடர் ஏந்த மறுத்த இந்தியக் கால்பந்து வீரர் பெய்ச்சுதங் பாட்டியாவின் பெயர் எல்லாருக்கும் நினைவிருக்கிறது.

பாட்டியாவால் சீன ஒலிம்பிக்கைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்த்திரைப்படக் கலைஞர்கள் மனம் வைத்தால் ஐய்ஃபா 2010 கொழும்பில் நடைபெறாமல் தடுக்க முடியும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் - செய்தக்க

செய்யாமை யானும் கெடும்

என்ற குறளை நினைவுபடுத்தி, என் சக திரைப்படக் கலைஞர்களை ஆதரவு தருமாறு அழைக்கிறேன்.

- தாமரை

நன்றி - கீற்று 

3 comments:

buruhaniibrahim said...

வணக்கம் தாங்களின் பதிவை படித்தேன்.குத்து சண்டை பார்த்து இருப்பீர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டு எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் ஒருவருக்கு ஒருவர் எப்படி எல்லாம் அடித்து கொள்கிறார்கள் அதை ஆயிரக்கணக்கான மக்கள் எப்படி எல்லாம் பார்த்து சந்தோச படுகிறார்கள் யாருக்காவது அப்போது இரக்கம் என்பது தோன்றுகிறாதா?இவர்கள் யாரும் விலயாட்டு வீரர்கள் இவர்களுக்கு இதெல்லாம் பெரிய விசயமா?
{எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் }காசுக்காக இவர்கள்
இவர்களின் காலடியில் இவர்களின் காலடியில் அவர்கள் பென்களின் சுதந்திரத்தில் ஆண்களுக்கு எவ்வளவு பெரிய பிறயோஜனம் பாவம் இந்த பெண்கள் விளக்கு முன் விட்டில் பூச்ச்சிகளாகிவிட்ட்டார்கள்.விசயத்துக்கு வருகிறேன்
ஈழபோரை எல்லோரும் சாதாரணமாக பார்ப்பதுக்கு மணிதர்களுக்கு மணித நேயம் இல்லாமல் போனது தான் காரணம்,அதிலே பிரபாகரன் சார் கூட இதர்க்கு விதி விள்க்கு அல்ல.அவருக்கு மனிதனேயம் ஒன்று என்று இருந்து இருந்தால் இரு தறப்பிலும் இவ்வளுவு குருதிகளை உலகம் பார்த்து இருக்குமா?தாங்களின் பதிவை படித்து விட்டு எனக்கு பரிவு தோன்றவில்லை தாமரை அக்கா.

Kousalya said...

//"செய்தக்க அல்ல செயக்கெடும் - செய்தக்க

செய்யாமை யானும் கெடும்"//

இந்த குறளை மட்டும் கிரகித்து கொண்டு நாம் துணிந்து எழுந்தாலே போதும், தமிழனை உலகம் வியர்ந்து பார்க்கும்! செய்வார்களா ?! சிறப்பான பதிவு

chakravarthy said...

சிறந்த பதிவு.ஊடகங்களில் மறைக்கப்படும் இது போன்ற செய்திகளை இது மாதிரியான பதிவுகளில் இருந்துதான் தெரிந்துகொள்ள முடிகிறது.தொடரட்டும் தங்கள் பனி.
இப்பதிவில் தங்கள் கருத்தை ஏற்கிறேன்.இருப்பினும் நம் நாட்டில்(தமிழ்நாடு) தினமும் நடந்தேறும் சமூக அவலங்களுக்கிடையில் தொலைகாட்சிகளின் கூத்துகளை ரசிக்க பழகிவிட்ட நம்மால் ஈழத்தில் நடப்பதை நினைத்து பார்க்க நேரமின்றி உணர்வற்று உள்ளோம்.ஆக நாம் அடிப்படையிலே மாற வேண்டும் என்பது என் கருத்து.இது போன்ற எதிர்ப்புகளை தங்களை போன்றோர் தெரிவிப்பதின் விளைவு மிகப் பெரிய அளவில் இருக்கும் என நம்புகிறேன்.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்