/* up Facebook

May 12, 2010

உலக பெண் விஞ்ஞானிகள் - என்.சிவகுரு


உலக பெண் விஞ்ஞானிகள், இரா. நடராசன், பாரதி புத்தகாலயம், பக்: 112, ரூ.50

தஞ்சையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயத்தின் அரங்கில் பணியாற்றிய போது இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. வாங்கலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டிருந்த போது, புத்தகத்தின் அட்டைப்படத்தில் இருந்தவர் களில் இரண்டு பேரை மட்டும் தான் அடையாளம் தெரிந்தது. எனது ஆர்வம் இப்புத்தகத்தை வாங்க வேண்டும் என்று தூண்டியது. வாங்கினேன்.

32 பெண் விஞ்ஞானிகளின் சாதனைகளை, சோதனைகளை, வெற்றிக்காகப் பயணித்த போது ஏற்பட்ட சறுக்கல்களை, அதையும் தாண்டி சாதித்தார்கள் என்பதை தகவலாக மட்டும் சொல்லாமல் ஒவ்வொரு விஞ்ஞானியின் வாழ்க்கையையும் நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.

விஞ்ஞான உலகின் முடிசூடாராணி மேரி கியூரி துவங்கி கல்பனா சாவ்லா வரை எழுதப்பட்டிருக்கும் இந்நூலை தயாரிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், தகவல்களை சேகரிக்கபட்ட கஷ்டங்கள் அனைத்து அத்தியாயங்களிலும் தெரிகின்றது.

பெண் விஞ்ஞானிகளைப் பற்றி எழுதும் போது நுணுக்கமாக அவர்கள் செய்த சாதனைகள், இன்று எந்த அளவுக்கு அவை போற்றப்படுகின்றன என்னும் தகவல் - யாரும் செய்யத் துணியாத அல்லது இதனால் என்ன கிடைத்துவிடப் போகின்றது என்று சலித்துக் கொண்ட விஷயங்களில் பெண்கள் புரிந்திருக்கும் விஞ்ஞான முயற்சிகள் இன்று மானுடத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை அறியும் போது உண்மையிலேயே மெய்சிலிர்க்கின்றோம்.

இன்று விஞ்ஞான உலகில் விவாதிக்கப்படும் கிளோனிங், விவசாயம், கார்பன், அணு துளைத்தல் என அனைத்திற்கும் வித்திட்டவர்கள் பெண்கள் தான் என தகவலறியும் போது உள்ளம் பிரமிப்படைகின்றது.

இந்த முப்பத்தி இரண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் வெளிவராமல் இருந்திருந்தால் உலகம் எவ்வளவு பின் தங்கி இருந்திருக்கும் என்பதைப் போல் இவர்களைப் பற்றிய தகவல்கள் நமக்குத் தெரியாமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும் நமது நிலை என்ற கேள்விக் குறியை நம் மனம் முன் நிறுத்துகின்றது.பாரதி புத்தகாலயம் இப்புத்தகத்தை குழந்தைகளுக்கான புத்தகமாக வெளியிட்டுள்ளனர். ஆனால் இது எல்லோருக்குமான புத்தகம் (ஙிளிளிரி திளிஸி கிலிலி) என்று தான் சொல்ல வேண்டும்.

ஆணுக்கும் - பெண்ணுக்கும் சம நீதி என்பதெல்லாம் ஏட்டளவில்தான், நடை முறையில் இல்லை. சாதனைகள் செய்தால் கூட திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை பல அரிய தகவல்களோடு தந்துள்ளது இந்நூல்.

குழந்தைகளுக்குப் புராணக் கதைகளை மட்டுமே சொல்லாமல் இந்தப் புத்தகத்தின் காவிய நாயகிகளைப் பற்றியும் நாம் சொல்லித்தர வேண்டும்.

எளிய நடை, நேர்த்தியான வாசிப்புக்கான எழுத்து வடிவம் என அழகுற வந்துள்ளது இந்நூல். பெரும்பாலும் கல்விக் கூடங்களில் கற்கும் நமது பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பெயர்களை தமிழில் உச்சரிக்க கஷ்டப்படுவதை நாம் பார்க்கின்றோம். அதை தவிர்த்திட மறு பதிப்பில் விஞ்ஞானியின் பெயரை ஆங்கிலத்திலும் அச்சிட்டால் பெயர்களை உள்வாங்கிக் கொள்வது எளிதாகும் என்பது என் கருத்து

இப்புத்தகத்தை உருவாக்கிய நூலாசிரியர் இரா. நடராசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தொடர்ந்து அவர்கள் செய்யப்போகும் பணி பலரின் பார்வையை விசாலமாக்கும். அம்முயற்சியும் இணைந்து நல்ல தொரு சமூகம் உருவாக்கிட இப்புத்தகத்தை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் மனமார்ந்த நன்றி.

கற்றது கை மண் அளவு - கல்லாதது உலகளவு எனும் பழமொழியை உண்மையாக்கும் இந்நூல். எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணப் பெட்டகம் “உலக பெண் விஞ்ஞானிகள்’’.

கடவுளின் அவதாரங்களைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளும் தமிழ் மக்கள் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட இந்த அவதாரங்களையும் தெரிந்து கொள்வோம்.

நன்றி - கீற்று

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்