/* up Facebook

May 5, 2010

பெரியார் தூய்மைப்படுத்த நினைத்த சாக்கடையில் திளைக்கும் திராவிட அரசியல் வழித்தோன்றல்களும் குஷ்புவுக்குக் கிடைத்திருக்கும் நீதியும் - மாயா (வீடியோவுடன்)


இந்த வீடியோ www.indiaglitz.com இலிருந்து எடுக்கப்பட்டது.


ஆண்களின் பாலியல் மீறல்களைவிட பெண்களின் மீறல்களுக்கே பெரும்பாலான கலாச்சாரங்களில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் பாலியல் குறித்துப் பேசினாலே பெண்களைத் தண்டிப்பார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்திய குஷ்பு விவகாரம் நான்கரை வருடங்களுக்குப் பிறகு ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. ஒரு வன்னிய குலக் கொழுந்தை மன்னிப்புக் கேட்க வைத்த "திமிர் பிடித்த பெண்" என்பதால் ஒரு வன்னிய டாக்டர் உருவாக்கி வைத்த பிரச்சினை பல்வேறு காரணங்களால் நாட்டின் மிகப் பெரிய சமூக-அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது. பெண்களுக்குக் கற்பை அத்தியாவசிய 'பண்டமாக்கிய' ராமனைத் தேச நாயகனாக முன்னிறுத்தியவரை தேசப் பிதா என கருதும் நாட்டில் கற்பை வைத்து வழக்கமாக நடத்தப்படும் ரகசியமான சித்ரவதைகள் குஷ்பு விவகாரத்தில் பொதுத் தளத்தில் நடத்தப்பட்டன. பெண்ணின் கற்புக்குள்ள அச்சுறுத்தல் ஒட்டுமொத்த சமூகத்தின் இருப்பிற்கே விடப்படும் அச்சுறுத்தல் என கருதும் இந்துத்துவ சக்திகள், பெண்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்க அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றன. தமிழகத்தில் இந்துத்துவாவிற்குப் பெரிய வேர்கள் கிடையாது. என்றாலும் காவி தரிக்காத இந்துத்துவாவாதிகள் ராமதாஸ் ரூபத்திலும் ஏராளமான வக்கீல்கள் ரூபத்திலும் அவர்களின் முயற்சிகளைத் தோற்கடிக்க முயலாத இரு திராவிட ஆட்சியாளர்கள் ரூபத்திலும் ஒன்றுமில்லாத ஒரு வழக்கை 23 நீதிமன்றங்கள் சுமார் ஐந்து ஆண்டுகள் விசாரிக்க வைத்திருக்கிறார்கள். குஷ்பு மீது வழக்குப் போடவோ, விசாரிக்கவோ என்ற அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று இப்போது உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இது மகிழ்ச்சியை அல்லாமல், இவ்வளவு எளிமையான உண்மையை அடைய இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கிறதே என்ற வெறுப்பையே உண்டாக்குகிறது.

தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கற்பு என்ற வார்த்தை இல்லறம் என்பதைக் குறிப்பதாகவே உள்ளது. இன்று இருக்கும் அர்த்தத்தில் கற்பு பழங்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று பெரியாரும்கூட அதற்கான ஆதாரங்களுடன் வாதிட்டிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் பெரும்பான்மையினர் வாய்மூடி நிற்பதால், கற்பு குறித்துப் பாடமெடுக்கும் ஒரு சிறு கும்பல் சுமார் ஐந்து வருடமாக ஒரு நாட்டின் நேரத்தை ஒரு தேவையற்ற சர்ச்சையில் வீணடித்திருக்கிறது. கிருஷ்ணன்-ராதையைத் திருமணத்திற்கு முந்தைய உறவுக்கான மிகப் பழமையான சாட்சியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டிய பிறகு, சங்க காலத்தின் களவொழுக்கம் பற்றி எடுத்துரைக்கிறார் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி. ஆனால் பிரச்சினை உச்சத்திலிருந்தபோது அவரும்கூட ராமதாஸ் அண்ட் கோவிற்கு ஆதரவாகத்தான் குரல் கொடுத்தார். ஒரு பிரச்சினை எந்தப் பக்கம் சாய்கிறது என்று பார்த்து அந்தத் தரப்பில் நின்றுகொள்ளும் தந்திரத்தை சொல்லித் தரும் ஸ்கூலுக்கு அவர்தான் ஹெட் மாஸ்டர். செக்ஸ் குறித்த அந்த சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னவர் ஒரு நடிகை, தமிழர் அல்லாதவர் போன்ற அடையாளங்கள் இல்லாதிருந்தால் இந்தப் பிரச்சினை உருவாகாமலேகூட போயிருக்கும். வட இந்தியர் என்று முத்திரை குத்தக்கூடிய, குஜராத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமை இவ்வாறு ஓரங்கட்டுவது எளியதுதான்.

கலாச்சாரம், மதம் குறித்த அவ்வப்போதைய பார்வைகளின் அடிப்படையில் கிளப்பப்படும் உணர்ச்சிகரமான பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளியெறிவதற்கு வழி கண்டுபிடிக்காமல் இந்த சமூகம் ஆரோக்கியமான திசையில் வளர முடியாது. தங்களுக்கு அசெளகரியமாக இருக்கும் உண்மைகளை வன்முறை மூலம் எதிர்க்கும் போக்கினை பெரும்பான்மையானோர் வேடிக்கை பார்ப்பதுதான் இந்தப் பிரச்சினையின் ஆதாரம். விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள் இந்தியாவின் ஒரு அம்சமாக நீண்ட காலமாக இருந்திருக்கிறது என்கிறார் அமர்த்தியா சென். ஆனால் அனைவரும் வாய்மூடி தங்கள் வாதத்தை வழிமொழிய வேண்டும் என்ற ராமதாஸ்களின் மமதையை இந்தப் பாரம்பரியத்தில் வந்த மக்கள் தட்டிக் கேட்கவில்லை. மாறாக, குஷ்பு தனது நீண்ட போராட்டம் மூலம் ராமதாசுக்கும் திருமாவளவனுக்கும் பாடம் கற்பிக்க வேண்டியிருந்தது. காசு கொடுத்து, உணர்ச்சியைத் தூண்டி எத்தனை நாள் போராட்டத்திற்கு ஆள் சேர்க்க முடியும்? வழக்குப் போடுவது மூலமாக எதிராளியைத் துவளச் செய்யலாம் என்ற வியூகம் எவ்வளவு நாள் பலிக்கும்? ஊடகங்கள் செயற்கையாக உருவாக்கும் இதுபோன்ற தேவையற்ற பொதுப் பிரச்சினைகள் பொது அமைப்புக்களின், தனி நபர்களின் நேரத்தை எவ்வளவு வீணடிக்கின்றன என்பதைப் பார்க்கும்போது சமூகத்திற்கும் இதழியலுக்கும் சன் டிவி.யின் தமிழ் முரசுவின் எதிர்மறை தாக்கத்தை உணர முடிகிறது.

ஒரு பெரியார் இந்த சமூகத்திற்காக உருவாக்கிய தொலைநோக்குள்ள சமூகத் தத்துவங்களை அவரின் வழித்தோன்றல்களே அழித்து, இன்று இந்த வினோதமான சூழலில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். மொழியின் பெயராலும் வரலாற்றுப் பெருமையின் பெயராலும் நடத்தும் உணர்ச்சிகர அரசியலைப் பெரியார் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தவர். ஆனால் அரசியல் ஆதாயத்தைத் தேடி அவரை விட்டுப் பிரிந்தவர்கள் உண்டாக்கிய தமிழ் மானம் என்ற சிந்தனை திருமாவளவன், ராமதாஸ் உள்ளிட்டோர் ஒரு மோசமான அரசியல் சர்ச்சையை உண்டாக்க உதவியிருக்கிறது. மைய நீரோட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையை உள்ளே இறங்கித் தூய்மைப்படுத்த நினைத்த பெரியாருக்கு மாறாக, இந்த சாக்கடையில் இறங்கித் திளைத்தார்கள் திராவிட அரசியல்வாதிகள். அதை அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்க நினைத்து தமிழ் என்ற அடையாளத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தார் ராமதாஸ். நல்ல காலமாக ஒரே ஒரு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழ் மானத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, அவர் வன்னிய மானத்தைக் காக்கப் புறப்பட்டுவிட்டார்.

பாரம்பரிய சமூகம் தனது விதிகளின், கட்டுப்பாடுகளின் மையமாக பெண்களைத்தான் வைத்திருந்தது. அதனால் தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலைமையை மாற்றுவது மூலம்தான் இந்த சமூகத்தின் பல்வேறு இழிவுகளை மாற்ற முடியும் என பெரியார் கருதினார். தாலியே கட்டாத சுயமரியாதைத் திருமணம் முதல் பெண்கள் எத்தனை வைப்பாட்டன்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும் என்ற வாதம் வரை பெரியார் பயன்படுத்தியது, குடும்ப அமைப்பின் இந்தப் பலவீனமான பகுதியில் தாக்குவது மூலம்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்ததால்தான். ஆனால் அவரின் முயற்சிகளுக்கு உதவுவதற்குப் பதில் திராவிட அரசியல்வாதிகளும் அவர்களின் 21ஆம் நூற்றாண்டு வழித்தோன்றல்களும் குடும்ப அமைப்பின் இழிவுகளுக்குப் பாதுகாவலர்களாக திகழத் துடிக்கிறார்கள். கற்பு, ஆண்மை ஆகிய வார்த்தைகளையே தமிழ் அகராதியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறிய பெரியாரின் வார்த்தைகளை அவர்களுக்கு நினைவூட்டுவது அவசியம்: "பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல் சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும். அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள். ஆனால், ஆண்களோ பெண்களைப் பிறவி முதல் சாவு வரை அடிமையாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள்."

maya.flowerpower@gmail.com

நன்றி - உயிர்மை

4 comments:

ஜெகதீஸ்வரன். said...

//பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல் சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட//.

இந்த இன்று எங்கிருந்து வந்தது. மகாபலிபுரத்தின் கரையில் உருண்டு கொண்டிருக்கும் காதலர்களையும், கணவன் குழந்தைகளை கொன்றுவிட்டு வாழும் கள்ளக் காதர்களையும் நீங்கள் ஆதரிப்பதாக தெரிகிறது.

சமூகம் விவரித்திருப்பது பெண்ணுக்கு எதிரான அனுகுமுறையல்ல, ஆணுக்கும் தான். ஆனால் சட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கானது, ஒரு ஆணுடன் பல மாதங்கள் ஒன்றாய் கூடி விட்டு மற்றவர்களுக்கு தெரிந்தவுடன் அந்த ஆணின் மேல் பழி போடும் பெண்கள் ஏறாளம். கணவன் கை நீட்டி அடித்தால் இங்கு சட்டங்கள் அவளுக்கு துணை நிற்கும், ஆனால் ஒரு பெண் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குற்றம் செய்வதை சட்டம் தடுக்காது.

அதை கணவன் தடுத்தால், இருக்கவே இருக்கிறது வரதட்சனை கொடுமை புகார்.

முறையாக செய்யப்பட்ட சட்டங்களை எத்தனை பெண்கள் தவறாக பயண்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என கவணித்துப் பாருங்கள். உங்கள் மகனுக்கும் இந்த நிலை ஏற்படலாம் என்பதை உணருங்கள்.

செந்தழல் ரவி said...

ஜெகதீஸ்வரன். இங்கே வந்து நீங்கள் செய்திருக்கும் காமெடிக்கு என்ன பதில் கிடைக்கப்போகிறது என்று நினைத்தேன். சிப்பு வந்திருச்சு சிப்பு.

Anonymous said...

http://pattapatti.blogspot.com/2010/05/blog-post.html

Hi. I request one of you can respond to this post in penniyam site

தனபால் said...

பேச்சுரிமையின் காரணமாகவே குஷ்பூ மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதே அன்றி அவர் கூறியது சரி என்று எந்த கோர்ட்டும் கூறவில்லை.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்