/* up Facebook

May 4, 2010

பாலியல் பேச்சுகளும் மறுபேச்சுகளும்2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புத்தாண்டு மலராக வெளியாகியுள்ள ஆனந்த விகடன் பக்கத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். முதல் தாளைப் புரட்டி அடுத்த இரு பக்கங்களைப் பார்த்தவுடன் சின்ன அதிர்ச்சி. வண்ணத்தில் அழகிய இளம் பெண் மேலுடலில் துணி இன்றி சிரித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய முலைகளை, விரிந்திருக்கும் கூந்தல் ‘இலைமறை காயாக’ மறைத்துக் கொண்டிருக்கிறது. அவளது பரந்த முதுகு உயிர்த்துடிப்புடன் மின்னுகிறது. இந்த மாதிரி பெண்ணுடலை வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்கள் அடங்கிய பத்திரிகைகள் இன்று எல்லா வீடுகளிலும் காசு கொடுத்து வாங்கப்படுகின்றன. குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் கவர்ச்சிப் படங்களைப் பார்க்கும்போது, எனக்கு அறுபதுகளில் வெளிவந்த ‘வெண்திரை’, ‘வசந்தி’ போன்ற பத்திரிகைகள் நினைவுக்கு வந்தன. நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது, 1969 இல் என்னுடன் படித்த மாணவன் பள்ளிக் கூடப் பையில் வைத்திருந்த பத்திரிகையை தற்செயலாகப் பார்த்தேன். சாணித்தாளில் கறுப்பு மை தடவினாற்போல அச்சடிக்கப் பட்டிருந்த அப்பத்திரிகையில் நீச்சல் உடையில் இருந்த பெண்களின் படங்கள் இருந்தன. மார்பில் சேலை இல்லாமல், வெறுமன ஜாக்கெட் மட்டும் அணிந்த பெண் முறைத்துக் கொண்டிருந்தாள். திரைப்படச் செய்திகளுடன் சில சிறுகதைகளும் வெளியாகியிருந்தன. அது ஒரு மாதிரி பத்திரிகை என்று மாணவர்களாகிய எங்களுக்குப் புரிந்தது. ரகசியமாக மதிய நேரம் படித்துப் பார்த்தேன்.

மேலோட்டமான காதல் கதைகள் வெளியாகியிருந்தன. நீச்சல் உடை உடுத்திய பெண்ணின் படம் ‘செக்ஸ்’ என்று கருதிய சூழலுடன் இன்று ஆனந்த விகடனில் வெளியான படத்தை ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.


கிராமங்களில் சிறுவர்களை வைத்துக் கொண்டு பாலியல் பற்றிய பேச்சுகள் சாதாரணமாக நடைபெறும். பெரிசுகள் ஓம் பொண்டாட்டிய ஓக்க. . . வக்காலி, தாயோளி போன்ற பாலியல் சொற்களை முன்னிறுத்திப் பேசுவதை எல்லோரும் இயல்பானதாக எடுத்துக் கொள்வார்கள். அறுபதுகளில் ஊருக்கு ஏழெட்டுப் பேராவது ‘ரெண்டு பெண்டாட்டிக்காரர்’ இருப்பார்கள். ஒருத்தரை அடையாளம் சொல்லும்போது, அதான் அந்த ரெண்டு பொண்டாட்டிக்காரர் என்று சாதாரணமாகச் சொல்லுவார்கள். அப்புறம் ‘இன்னாருக்கு இந்தப் பொம்பளையுடன் தொடர்பு’ என்று ஊர் முழுக்கத் தெரியும். அவளோட புருஷனுக்கு மட்டும் அந்த விஷயம் தெரியாதது எப்படி என்று இப்பவும் எனக்கு விளங்கவில்லை. ஊரில் பிரதானமாக இருந்த என் தந்தையாரின் கடைக்கு முன்னால் இருந்த புளிய மரத்தடியில் அமர்ந்து பாலியல் சேதிகள் என் காதுக்கு எட்டும். அன்றைய காலத்தில் பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவியுடன் மட்டும் உறவு வைத்திருக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். பலருக்கும் வேறு பெண் தொடர்புகள் இருந்தன. போக்குவரத்து வசதியற்ற குக்கிராமம் என்றாலும் இந்த மாதிரி ‘சேவை’ செய்யும் பெண்கள் சிலர் இருந்தனர். வளையல், பவுடர், ரிப்பன், கண்மை, பூ, புரோட்டா சால்னா கொடுத்துப் பெண்ணைச் ‘செட்டப்’ செய்ததாகப் பேசிக் கொள்வார்கள். இத்தகைய பேச்சுகளில் பெண்ணின் மனம் பற்றிய விவரிப்பு இருக்காது. ஏதோ பொருளை நுகர்ந்தது போலப் பேச்சு விரியும்.

கிராமங்களில் சிறுவர்கள் கூடப் பாலியல் அம்சங்களை முன்னிறுத்திய பாடல்களை ரகசியமாகத் தங்களுக்குள் பாடிக் கொள்வார்கள்.


“மஞ்சனத்தி மரத்தைப் பாரு
மதினி போற போக்கைப் பாரு
காலில தண்டையப் பாரு
கவுட்டுக்குள்ளே. . . . பாரு”
இது மாதிரி சில பாடல்கள்.
வேட்டிக்குள்ளே இருக்கிறது விராக் கூண்டு
பாவடைக்குள்ளே இருக்கிறது பணியாரம்


இதுபோல புனைவாக விடுகதைப் பாணியில் சொல்லாடல்கள் கிராமப் புறங்களில் சகஜம். பால் அடையாள உறுப்புகளுக்கான ‘சிறப்பு பெயர்கள்’, பாலியலை முன்னிறுத்திய வசைச் சொற்கள், பால் உறுப்புப் பெயரைச் சொல்லிக் கிழித்திடுவேன், நறுக்கிடுவேன் என்ற வீராவேசப் பேச்சுகள் அடங்கிய சூழலில் எதுவும் ரகசியமாக இருக்கவில்லை. ஏழெட்டு வயதான சிறுவர்களுக்குக் கூடத் தப்பும் தவறுமாகப் பாலியல் பற்றிய தகவல்கள் தெரியும். எல்லாவகையான பாலியல் பேச்சுகளிலும் பெண்ணை மட்டந்தட்டும் போக்கும் சாதாரணமாக இடம் பெறும்.

நாட்டுப்புறப் பாலியல் கதைகள் சொல்லுவதில் சிலர் வல்லுநராக இருப்பார்கள். கதை முடிவில் சிறிய திருப்பத்துடன் நகைச்சுவையுடன் முடியும் கதைகள் பிரபலமாக இருக்கும் கிராமத்து ஆண்களின் உலகில் பாலியல் பற்றிய பேச்சுகள் எல்லா மட்டங்களிலும் ஆழமாகப் பரவியிருந்தன. பெரும்பாலோனோர் கல்வியறிவு இல்லாத நிலையில் வாய் வழியாகப் பாலியல் பேச்சுகளைப் பரிமாறிக் கிளர்ச்சியடைந்தனர் என்று தோன்றுகின்றது.
பாலியல் அம்சங்களை உள்ளடக்கிய அல்லது முதன்மையிடம் தந்த ‘இந்து நேசன்’ பத்திரிகை தனித்துவமானது. எங்கள் ஊர் சலூனில் இருந்த அப்பத்திரிகையைப் பள்ளி மாணவனாக இருந்தபோது படித்திருக்கிறேன். ‘டாப்ளெஸ்’ வடிவில் மட்டமான தாளில் அச்சடிக்கப்பட்டிருக்கும் அப்பத்திரிகையில் பெங்களூர் முகவரி இருந்தது. ‘கிழட்டு நடிகர் விடிய விடிய ஜல்சா’, தொந்தி நடிகரின் தோல் பிசினஸ்’ என்ற தலைப்பில் திரைப்பட நடிகர்களின் பாலியல் விவகாரங்களைப் பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல, செய்திகள் வெளியாகியிருக்கும். திரைப்பட நடிகை என்றால் எல்லோருக்கும் ‘அனுசரித்துப் போகக் கூடியவர்’ என்று கருதப்பட்ட சூழலில் நடிக நடிகையர் பற்றிய பாலியல் தகவல்கள் வாசிப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்தப் பத்திரிகை எழுபதுகளின் முற்பகுதியில் கூட வெளியானது என நினைக்கிறேன்.

ஓரளவு வாசிக்கத் தெரிந்த பெரியவர்களில் பலர் அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம்(64 படங்களுடன்) புத்தகத்தை ரகசியமாக வைத்திருந்தனர். அதில்‘பெரிய எழுத்தில் வெளியான கொக்கோகம், புத்தகமும் இருந்தது. கையினால் வரையப்பட்ட ஆண், பெண் படங்களில் சில நிர்வாணமாக இருக்கும். அப்புறம் பத்தினிப் பெண், சித்தினிப் பெண், முத்தம், ஆலிங்கம். . . என விரிந்திருக்கும் அப்புத்தகம் பலரையும் கவர்ந்தது ஏன் எனப் புலப்படவில்லை. 64 கலைகள் என்பதை 64 வகையான உடலுறவு நிலைகள் என்று சொல்கிறவர்களும் எங்கள் ஊரில் இருந்தனர். ஏதோ ஒருவகையில் உடலில் பால் வேட்கையைத் தூண்டிவிட இத்தகைய புத்தகங்கள் உதவின. வாத்சாயானரின் ‘காமசாஸ்திரம்’ புத்தகத்தையும் சிலர் வைத்திருந்தனர்.
அறுபதுகளில் வெளியான பல தமிழ்ப் பத்திரிகைகளில் சிட்டுக்குருவி லேகியம், இரவுக் குளிகைகள்(நைட் பில்ஸ்), தாதுபுஷ்டி லேகியம் போன்றனவற்றின் விளம்பரங்கள் வெளியாகின. தமிழ்ச் சிறுபத்திரிகையில் மூலமாகப் பலரால் போற்றப்படும் ‘மணிக்கொடி’ பத்திரிகையில் கூட ஆண்மை விருத்திக்கான தாது புஷ்டி லேகிய விளம்பரம் வெளியாகியுள்ளது. அப்புறம் பில்லி, சூனியம், ஏவல், வசியம், குட்டிச்சாத்தான் வசியம், மந்திரக்கல், மந்திர மோதிரம், மந்திர தாயத்து விளம்பரங்கள் நிரம்ப இடம் பெற்றிருந்தன. தமிழர்களின் பிரச்சனையே ‘குறி’ ஒழுங்காக இயங்குகிறதா என்பது போல அன்றைய பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியாகின. யோனியின் வேட்கை பற்றி எதுவும் பேச்சு இல்லை. மாதவிடாய் தாமதமா? வெள்ளைபடுதல் தான் பெண்ணுக்கான விஷயங்களாக இருந்தன.

எழுபதுகளின் தொடக்கத்தில் ‘செக்ஸ் லைப்’, என்ற பத்திரிகை மாணவர் விடுதிகளில் பிரபலமாக இருந்தது. ஆண்-பெண் உறவு பற்றிய அறிவியல் கட்டுரைகள், பிறப்புகளின் வரைபடங்களுடன் அவற்றின் செயற்பாடுகள் பற்றிய கட்டுரைகள்; டூ பீஸ்’ உடையணிந்த மேலைநாட்டுப் பெண்களின் கவர்ச்சிப் படங்கள், பாலியல் வேட்கையைத் தூண்டும் சிறுகதைகள் போன்றவற்றுடன் அந்தப் பத்திரிகை வெளியானது. இன்று +2 பயிலும் மாணவ மாணவியர் பாடத்தில் இடம் பெற்றுள்ள பிறப்புறுப்புகளின் படங்கள் அன்று செக்ஸ் பத்திரிகையில் வெளியாகின என்பது விநோதம் தான். இன்று ‘என் கணவருக்கு குறி சரியாக இயங்கவில்லை என்ன செய்வது? என்று வெகுஜனப் பத்திரிகைக்கு கேள்வியை எழுதிவிட்டு, பெயரும் ஊரும் வெளியிட விரும்பாமல், பதிலுக்காக காத்திருக்கும் பெண்ணின் பிரச்சினையைத் தீர்க்கும் ‘டாக்டர் ரெட்டி’ ஒரு வகையில் னீமீssவீணீலீ தான். ‘செக்ஸ் லைப்’ பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்திய ராஜு அற்புதமான மனிதர் என்றும் அறுபதுகளின் பிற்பகுதியில் வேலைத் தேடி சென்னைக்கு போற எழுத்தாளர்களுக்கு பண உதவி செய்வார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்குப் பிரதியுபகரமாகச் சிலர் பாலியல் கதைகள் எழுதிக் கொடுத்ததாகவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிகை உலகில் பேச்சு நிலவியது.

தமிழ்ப் பாலியல் பேச்சுகளில் முக்கியமானவை, ‘சரோஜாதேவி’ புத்தகங்கள். ‘கர்னாடகா பதிப்பகம், பெங்களூர் என்று வெளியான சரோஜா தேவி புத்தகம், வறட்சியான மொழியில் பிறப்புறுப்புகளின் நடைமுறைப் பெயர்களைக் குறிப்பிட்டு, உடலுறவு நிகழ்வைப் புனைவாக விவரித்திருக்கும் சில புத்தகங்களில் உடலுறவுச் செயற்பாடுகள் நிழற்படங்களாக இடம் பெற்றிருக்கும். இருபது வயதாகியும் எந்தப் பெண்ணுடனும் பாலியல் உறவு, அல்லது முத்தம் கூட கொடுத்திருக்காத/ பெற்றிருக்காத ஆணின் உலகம் புனைவுகளால் நிரம்பி வழியும். பாலியல் பற்றிய பேச்சுகளால் பகிர்ந்து கொள்ளப்படும் மனக்கிளர்ச்சிகள் மேலும் வலுப்பட இத்தகைய பாலியல் கதைகளடங்கிய புத்தகங்கள் உதவின. இந்தப் புத்தகங்கள் எங்குக் கிடைக்கும் என்பது மர்மமானது. எப்படியோ எல்லா நகரங்களிலும் ஏதோ ஒரு வலைப் பின்னல்களின் மூலம் பாலியல் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. இத்தகைய புத்தகங்களில் கறுப்பாகப் பதிவாகியுள்ள எழுத்துகளின் வழியாக ஆண்களின் காமம் உருகி வழிந்தது. காமவயப்பட்ட நிலையில் உடல் விளர்ந்த ஆண்களின் வேட்கையைத் தணிக்கும் வடிகால்களாகவும் விளங்கின. சிலரைப் பொறுத்தவரையில் பாலியல் புத்தகங்கள் வேதப் புத்தகங்களாக விளங்கின.

நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, எனக்குத் தெரிந்த சில இளவயதுப் பெண்களிடம் பாலியல் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கதைப் புத்தகத்தைப் படிக்கத் தருமாறு கேட்டபோது, ‘சின்னப் பையனுக எல்லாம் படிக்கக் கூடாது’ என்று தர மறுத்திருக்கின்றனர். ஆண்களின் வழியாகப் பாலியல் புத்தகங்கள் பெண்கள் உலகிலும் சிறிய அளவில் ஊடுருவியிருக்க வாய்ப்புண்டு. ஆண் 15 வயதிலும் பெண் 13 வயதிலும் பாலியல் உணர்வுக்கு உட்படுவது இயற்கையானது. இந்நிலையில் உடலில் பொங்கும் காம எண்ணங்களை எப்படி பொறுத்துக் கொள்வது? பெண்ணைப் பொறுத்தவரையில் மாதவிலக்கு முடிந்த இரு வாரங்களுக்கு ‘உடல்’ கிளர்ச்சியடைந்து ஏக்கம் கொள்கிறது. ஏதோ ஒன்றைத் தேடித் தவிக்கும் மனவுணர்வினால் பரபரப்படையும் இளம் பெண்ணின் ஏக்கத்தினை நமது சமூகம் எப்படி புரிந்து கொள்கின்றது என்பது முக்கியமான கேள்வி?
பாலியல் பேச்சுகளைத் தூண்டும் புத்தகங்களை அச்சுக் கோர்க்கும் பணியில் நிறைய பெண்கள் வேலை செய்வதாக நண்பர் ஒருவர் சொன்னபோது எனக்கு வியப்பாக இருந்தது. எழுபதுகளின் இறுதியில் தமிழில் வெளியான மாயா, மூக்குத்தி, விருந்து போன்ற பாலியல் பத்திரிகைகள் வெகுஜன ரீதியில் எல்லாக் கடைகளிலும் கிடைத்தன. அ. தி. மு. க. கட்சியில் முக்கியப் பொறுப்பிலிருந்தவரினால் இத்தகைய பத்திரிகைகள் நடத்தப் பெற்றன. குமுதம் சுமார் ஆறு லட்சம் பிரதிகள் வெளியாகிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் மாயா போன்ற பத்திரிகைகள் பத்தாயிரம் பிரதிகள் கூட விற்கவில்லை என்பதுதான் உண்மை. மாணவர் விடுதிகள், மேன்சன்கள், சலூன்கள் போன்ற ஆண்கள் புழங்கும் இடங்களில் ரகசியமாக வாசிக்கப் பெற்ற புத்தகங்கள்/ பிரதிகள் குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகள்தான் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஓரளவு தமிழ்ப் படித்தவர்களிடையே குற்றாலக் குறவஞ்சியில் இடம் பெற்றுள்ள சிங்கன்- சிங்கிக்ருமிடையிலான உரையாடல், விறலி விடு தூது போன்ற நூல்கள் பாலியல் ஈர்ப்புடையதாகப் பிரபல்ய மடைந்திருந்தன. சிருங்கார ரசம் என்று படித்தவர்களிடையே கௌரவமாகச் சொல்லப்பட்டது பாலியல் விழைவு தான்.

எழுபதுகளின் தொடக்கத்தில் கூட தாசிகள் பற்றிய பேச்சுகள் தமிழகக் கிராமங்களில் நிலவின. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி என்ற ஊரிலிருந்த, வைகை அணைக்குப் போகும் வழியிலுள்ள ‘ஜம்புலிங்கப் புதூர்’ என்ற ஊரில் பெரும்பாலும் பாலியல் தொழில் மும்மரமாக நடைபெறுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த ஊரின் வழியாகச் செல்லும் பேருந்து, அங்கு நின்று செல்லும்போது, பேருந்திலிருந்து யார் இறங்கினாலும், எல்லோரும் வெறிச்சிட்டுப் பார்ப்பதை நானும் பார்த்திருக்கிறேன். பிரான்மலை, விராலிமலை (இன்று அந்த ஊர்களில் அப்படிபட்ட தொழில் எதுவும் நடக்கவில்லை. முழுக்கக் குடும்பத்தினர் வசிக்கும் ஊர்களாக மாறிவிட்டன) போன்ற ஊர்களில் எல்லாம் ‘தாசி’ தொழிலின் எச்சமாக பாலியல் விவகாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. காவல்துறையின் கடுமையான செயற்பாடுகளினால், ‘விபச்சார அழகிகளாகத் தினத்தந்தியில் கோரமான முகமுடைய பெண்களும் பதிவானது வேறு தனி விஷயம்.

எழுபதுகளில் நகர்ப்புறத்து சராசரியான விடுதிகளில் பாலியல் தொழில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரீகல் திரையரங்கு அருகில் அல்லது கிரைம் பிராஞ்சு ரோட்டில் இரவு வேளையில் வாலிபர்கள் தணித்துச் சென்றால் ‘சார்’ என்ற குரல் கேட்கும். நின்று திரும்பிப் பார்த்தால், ‘சார் நல்ல லாட்ஜ் இருக்கு’ என்பார் வேட்டியைத் தொடை தெரிய ஏற்றிக் கட்டிய கறுத்த ஆள். நாம் வாயைத் திறப்பதற்குள் ‘சார் நல்ல ஐயிட்டம் இருக்கு. . . ஃபேமிலி கேர்ல்ஸ், காலேஜ் ஸ்டூடண்ட், பிராமின் கேர்ள்ஸ். . .’ என்ற தூண்டிலைப் போடுவார். இத்தகைய மாமாகள் நிரம்ப மதுரையில் திரிந்தனர். பாலியல் தொழில் செய்யும் பெண்கள் ‘வவ்வி’ யாகத் தெருவைச் சுற்றிக்கொண்டு, ‘ஆள்’ பிடிக்கப் பரிதாபமாக அலைந்து கொண்டிருந்தால், இன்னொருபுறம் அவர்களுக்கு ஆள்பிடிக்க ‘மாமாகளும்’ அலைவதும் பரிதாபம் தான். இத்தகைய ஆசாமிகளின் பிடியில் சிக்கிப் போய் விட்டு வந்த சிலர், ‘பிராமின், பேமிலி கேர்ள்’ என்று பெருமையாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். செய்வது ‘மேற்படி’ தொழில், அப்புறம் எப்படி குடும்பப் பெண் என்று போகிறவன் யோசிப்பதில்லை. பிராமின் பெண் என்று ஒரு சாதிப் பெண்ணைக் கேவலப்படுத்துவது, கல்லூரி மாணவிகளை கேவலப்படுத்துவது எனக்கு அந்த வயதிலே எரிச்சலையும் கோபத்தையும் தந்திருக்கின்றன. கண்களால் ஜாடை காட்டி, பேருந்து நிலையத்தில் நிற்கின்ற ஆணுக்கு வலை வீசிப் பிடிக்கும் பெண்ணைப் பார்த்தால், நூற்றாண்டு சோகம் பொங்கி வழியும். எதுவும் உத்திரவாதம் அற்ற நிலையில் தன்னுடைய உடலையே மூலதனமாக்கிக் குரூபி, நோயாளி, அங்கஹீனன், வயதானவன், அழுக்கானவன், அருவருப்பானவன் என எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும் இளம் பெண் ஏதோ ஒருவகையில் சபிக்கப்பட்டவள்தான். லாட்ஜ் மேனேஜர், மாமாகள், போலீஸ்காரர், உள்ளூர் ரவுடிகள் போன்றோருக்கு மாமூலாகப் பணத்தையும் உடலையும் தந்திடும் அவளுக்கு இறுதியில் என்னதான் மிஞ்சும்? வேறு எந்தத் தொழிலும் செய்ய விழையாமல், பாலியல் தொழிலுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் பெண்ணுடல் இறுதியில் வெற்றுப் பொருளாக மாறுவது கொடுமை தான்.

தமிழகக் கிராமங்கள் ஒழுக்கமும் நெறியும் போற்றக் கூடியவை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். எனக்குத் தெரிந்து எல்லாக் கிராமங்களிலும் விதிவிலக்கான பெண்களும் இடம் பெற்றிருந்தனர். இத்தகைய பெண் பெரும்பாலும் உள்ளூர் பெண்ணாக இருக்க மாட்டாள். வெளியூரிலிருந்து யாராலோ அழைத்து வரப்பட்டு, கைவிடப்பட்டவளாக இருக்கலாம். ஊருக்குப் புறத்தேயுள்ள ஏழைகள், தலித்துகள் குடியிருக்கும் பகுதியையொட்டிய வீட்டில் குடியிருக்கும் அப்பெண்ணின் சாதி எது என்று யாருக்கும் தெரியாது. ஊர்ப் பெரிய மனிதர்கள் முதல் பதினெட்டு வயசுப் பையன் வரை அவளுடன் உறவு வைத்திருப்பார்கள். ஒருத்தர் செயல் இன்னொருவருக்குத் தெரியாது என்ற நம்பிக்கையில் பலரும் அவளிடம் புழங்கிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய பெண்ணை ‘சுதந்திர போராட்ட தியாகி’ போல் சேவை செய்துள்ளதாக ஊர் இளைஞர்கள் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். நடுத்தர வயதானவர்கள் பேசிக் கொள்ளும்போது, ஊரில் எவன் எவனுக்கு முதன் முதலாகக் குறி விரைக்கிறதோ, அவளிடம் போய் வருவானுக என்று கேலியாகப் பேசிக் கொள்வார்கள். பகலில் தெருவில் நடந்து வரும் அந்தப் பெண்ணைப் பார்த்தால், முகத்தைத் திரும்பிக் கொள்ளும் ஆண்கள், இரவில் வேறு மாதிரி செயல்படுவார்கள். இரவு வேளையில் எங்காவது ஊருக்கு வெளியேயுள்ள மோட்டார் அறைக்கு வரும்படி அவளிடம் சொன்னால், ‘மொத்தம் எத்தனை பேர் வர்றீங்க’ என்பது தான் அவளுடைய கேள்வியாக இருக்கும் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஊருக்குப் புறத்தில் இருக்கும் முள்ளுக் காட்டினில் நடுவில் ஏழெட்டு¢பேர் ஒருத்தர் மாற்றி ஒருவராகப் போய் வருவதைப் பெருமையாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். தண்ணீரால் சுத்தப்படுத்திக் கொள்ள எந்த வசதியும் அற்ற இடத்தில் நடந்திடும் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர், வி.டி (பால்வினை நோய்) வந்து, பெனிசிலின் ஊசி போட்டு வந்ததையும் சத்தம் போட்டுப் பேசிக் கொள்ளும் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன். எங்கள் தந்தையார் வைத்திருந்த கடையில் மிகச் சிறிய வயதிலிருந்து இருந்ததால் எனது வயதுக்கு மீறிய கதைகளையும் சம்வபவங்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எங்கள் ஊருக்குத் தள்ளி வைகையை ஆற்றங்கரையில் மறுகரையில் ‘ரெட்டை வாய்க்கால்’ என்று ஓரிடம் இருந்தது. வைகை ஆற்றில் இருந்து பிரியும் பெரிய கால்வாய் இரண்டாகப் பிரிந்து அந்த இடத்தில் சென்றது. இருகால்வாய்களுக்கும் நடுவில் முள்ளுக்காடாக இருந்த இடத்தில் பட்டப் பகலிலே பாலியல் தொழில் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வாய்க்கால் தொடங்கும் இடத்தில் சைகிளில் குச்சி ஐஸ் விற்கும் வியாபாரி பகல் முழுக்க நின்று கொண்டிருந்ததாக அங்கு போய் வந்த என் ஊர்க்காரர்கள் சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன்.

பாலியல் பற்றிய பேச்சுகள் நம்மில் எல்லோர் மனத்திலும் வெவ்வேறு வடிவங்களில் பதிவாகியுள்ளன. வெளிப்படையான பாலியல் பேச்சுகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கின்றவர்களுக்குப் பிரச்சனைகள் குறைவு. மற்றபடி ஆண் மேலாதிக்க மனநிலையில் உருவாக்கப்படும் பெண் பற்றிய புனைவுகளை அப்படியே நம்பும் இளைஞனின் பாலியல் உணர்வு எதிர்காலத்தில் பாதிப்பிற்குள்ளாகிடும். எனக்குத் தெரிந்த பலரும் படுக்கை என்பதைப் போர்க்களம் என்பது போலவும், பெண்ணுடலைக் கதறக் கதற அனுபவிப்பதன் மூலம் ‘ஆண்’ மேலாண்மை நிரூபிக்கப்படுவதாகவும் நம்பிக் கொண்டிருந்தனர். சக உயிர் என்ற நிலையில் அன்பு வயப்பட்ட உள்ளங்களின் கூடல் என்பது அதியற்புதமானது என்ற கருத்து அப்பொழுது நிலவவில்லை. ஆணின் உடல் அனுபவிப்பதற்காகக் காத்திருக்கும் பெண்ணுடல் என்ற பரவசத்திலே அலைந்து கொண்டிருந்த ஆண்களின் உலகத்தில், பெண்ணின் பாலியல் துய்ப்பு பற்றிய பேச்சுக்கே இடமில்லை. திருமணம் நடக்கும் வரை பெண்ணுக்குப் பாலியல் பற்றி எதுவும் தெரியாது என்று நம்பிக் கொண்டிருந்த ஆண்களின் உலகம் ஒருவகையில் அபத்தமானது.

நுட்பமான பாலியல் பேச்சுகள், ஆணின் மொழியில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் காமமானது உடலில் தங்கியிருந்தது. இன்று திரைப்பட ஊடகம் தொடங்கி நீலப்படக் குறுந்தகடுகள் வரை சித்தரிக்கப்படும் பாலியல் விழைவு மன ரீதியாகச் சுருங்கிவிட்டது. நேரடியான பேச்சுக்கள், செயலை விட, காட்சிப் படிமங்களின் மூலம் நிர்வாண உடல்கள் சுயத்தின் அசலான காமம் அழிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர்க்கான காமத்தைப் பேணிடுவதற்கான சூழல் நசிந்து கொண்டிருப்பதுதான் இன்றைய காலகட்டத்தின் பேரவலம்.

ந.முருகேச பாண்டியன்

6 comments:

செந்தழல் ரவி said...

நல்ல பகிர்வு..

Anonymous said...

enna solla vara!!!!!! ippavey kanna kattudhey

செந்தில்குமார் said...

ஒவ்வொருவரும் அவரவர்க்கான காமத்தைப் பேணிடுவதற்கான சூழல் நசிந்து கொண்டிருப்பதுதான் இன்றைய காலகட்டத்தின் பேரவலம்.

தனல் உனர்ச்சி பொங்கும் வரிகள்

பெண்ணியம்

கால்கரி சிவா said...

அப்போ தமிழ் கலாசாரம் கற்பு என்று உதார் விடும் அரசியல் வாதிகள் எல்லாரும் ஹிப்போகிரைட்ஸ் தானே

Vino said...

"வெளிப்படையான பாலியல் பேச்சுகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கின்றவர்களுக்குப் பிரச்சனைகள் குறைவு. மற்றபடி ஆண் மேலாதிக்க மனநிலையில் உருவாக்கப்படும் பெண் பற்றிய புனைவுகளை அப்படியே நம்பும் இளைஞனின் பாலியல் உணர்வு எதிர்காலத்தில் பாதிப்பிற்குள்ளாகிடும்"

உண்மையான வரிகள்

Anonymous said...

This is a very nice blog. I thank the author for publishing such a wonderful and well written article. Print magazines in tamil hardly come up with well researched articles like this. Yes, they do sensationalize sex and try yearn big money. Now a days elderly people are complaining that younger generation is ruined by porn in internet. The same elederly people, however, might have read the type of books mentioned in this article. It would be nice if similar type of articles are written about 18th and 19th century sex life in tamil nadu. In a way it can save tamil people from spineless hypocrits who are shouting in favor of karpu. Their is a lot to learn about female sexuality. Recent research indicate lot unknown and unexplored things about female sexuality. I think these things has to discussed openly across the genders. This can significantly reduce family quarels, illcit relationships and associated murders.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்