/* up Facebook

May 31, 2010

பட்டம்மாள் - ஒரு சமூக நிகழ்வு - சேதுபதி அருணாசலம்

 


தனிப்பட்ட வேலைகள் காரணமாகக் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பயணங்கள் மேற்கொள்ளும்படியானது. பெரும்பாலும் திட்டமிடப்படாத பயணமாக இருப்பதால், தமிழக அரசுப்பேருந்துகளில்தான் பயணங்கள் மேற்கொள்கிறேன். ஒவ்வொரு பேருந்திலும், இரவாகட்டும், பகலாகட்டும் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து தமிழ் சினிமா திரைப்படங்களாகவோ, பாடல்காட்சிகளாகவோ, துண்டுக்காட்சிகளாகவோ கசிந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு முறை பயணம் ஆரம்பிக்கும்போதும் நடத்துநர் கர்மசிரத்தையாக ஒரு புதிய சினிமா சிடியை உள்ளே நுழைத்துப் பயணத்தை இனிதே ஆரம்பித்து வைக்கிறார். செயற்கையான வசனங்கள், காட்சிகள், வெட்டருவாளில் பொங்கி வழியும் ரத்தத் தெறிப்புகள், தலைக்கு மேலிருக்கும் சிறிய ஸ்பீக்கரிலிருந்து கரகரத்துக் கொண்டிருக்கும் சப்தங்கள். தமிழ்ச்சமூகம் சினிமாவுக்குள் கட்டுண்டு கிடக்கிறது. உலகின் எந்த ஒரு நிகழ்வுமே சினிமா தொடர்புடையதாக இருக்கும்போது மட்டுமே, அது தமிழ்ச்சமூகத்தின் கவனத்தைக் கவருவதாக இருக்கிறது.

சென்ற ஜூலை மாதம் 16-ஆம் தேதி மாலை அசுவாரசியமாய் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது திரு.பாரதி மணி அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி: “வருத்தமான தகவல்: டி.கே.பட்டம்மாள் மறைந்து விட்டார்”. உடனே அவரை அழைத்துப் பேசிவிட்டு பட்டம்மாளைப் பற்றிய நினைவுகளோடு அமர்ந்திருந்தேன். அச்சமயம் யதேச்சையாகத் தொலைபேசிப் பேசிய நண்பனிடம் “டி.கே.பட்டம்மாள் இறந்துவிட்டார்” என்றேன். “ஓஹோ?” என்றான். “நித்யஸ்ரீ மகாதேவனின் பாட்டி” என்றேன். “ஓ! அவரா? எப்படி? என்ன ஆச்சு?” என்றான்.

தொன்னூறு வயதில் மறைந்த கர்நாடக இசை மேதை டி.கே.பட்டம்மாளுக்கு அடையாளம் அவருடைய பேத்தி நித்யஸ்ரீ. சிறந்த கர்நாடக இசைக்கலைஞரான நித்யஸ்ரீயின் அடையாளம் அவர் தமிழ் சினிமாவில் பாடிய சில பிரபலமான பாடல்கள். தன்னிகரற்ற கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்த டி.கே.பட்டம்மாள் ஒரு கலைஞராக மட்டுமல்லாமல், வரலாற்று, சமூக நிகழ்வாகவும் தமிழ்ச்சமூகத்தில் ஒரு முக்கியமான ஆளுமை. ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தின் ஆரம்பப்புள்ளியாக இருந்தவர் என்பதில் ஊடக வியாபாரிகளின் களிமண் பொம்மையாகியிருக்கும் இன்றைய தமிழகத்தில் எத்தனை பேருக்குக் கவனமும், சுவாரசியமும் இருக்கும் என்று தெரியவில்லை.

இன்று கர்நாடக இசை என்றாலே அது பிராமணர்களுடன் அடையாளப்படுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. இயல்பாகவே பிராமணீயம் சார்ந்த விமர்சனங்களிலும், பார்வைகளிலும் கர்நாடக சங்கீதமும் சிக்கிக் கொள்கிறது. கவிஞர் சுகுமாரன் காலச்சுவடில் கங்குபாய் ஹங்கலுக்கு எழுதிய அஞ்சலியில் “பட்டம்மாளுக்குக் குலப் பிறப்பு என்ற சலுகையிருந்தது” என்று குறிப்பிடுகிறார். வெறும் எண்பது வருடங்களுக்கு முந்தைய சமூக நகர்விலிருந்து எத்தனை மாற்றங்களைக் கடந்து நாம் வந்திருக்கிறோம்!

உண்மையில், நிலைமை தலைகீழான ஒன்று! பிராமணப்பெண் என்பதாலேயே பட்டம்மாள் இசையில் தீவிரமாக இறங்குவது சவாலான ஒன்றாக இருந்தது. பட்டம்மாள் காஞ்சிபுரத்தில் 1919-ஆம் வருடம் ஓர் ஏழ்மையான பிராமணக்குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்தில் பிராமணர்கள் கர்நாடக சங்கீத ரசிகர்களாக இருந்தாலும், பல பிராமண ஆண்கள் கர்நாடக சங்கீதத்தில் ஜாம்பவான்களாக விளங்கினாலும், பிராமணப் பெண்கள் பாடுவது பெரும் அநாச்சாரமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அக்காலப் பெண் பாடகர்களாக இருந்தவர்கள் அனைவருமே தேவதாசிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே பாடகிகள் அனைவருமே சமூகத்தால் தேவதாசிகளாகப் பார்க்கப்பட்டார்கள். விளைவு, பிற ஜாதிப் பெண்கள் பாடுவதை அக்குடும்பத்து ஆண்கள் தடை செய்தார்கள்.

இயற்கையிலேயே சிறந்த குரல்வளம் பட்டம்மாளுக்கு இருந்தது. ஒரு குடும்ப நிகழ்ச்சியில் சிறுமி பட்டம்மாளின் குரலைக் கேட்டுவிட்டு இப்படிப்பட்ட ஒரு குரலைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று எந்த ஒரு நிபந்தனையும் முன்வைக்காமல் தாமாகவே சங்கீதம் கற்றுக்கொடுக்க முன்வந்தார் ‘தெலுங்கு வாத்தியார்’ என்றொருவர். அக்காலத்தில் காஞ்சிபுரத்தில் சிறப்பானதொரு இசைச்சூழல் நிலவியது. காஞ்சிபுரம் நாயனா பிள்ளை தமிழகம் கண்ட இசை மேதைகளில் ஒருவர். அவருடைய கச்சேரிகளை நேரில் கேட்டு ரசிக்கும் வாய்ப்பும் பட்டம்மாளுக்கு நிறையவே கிட்டியது. நாயனா பிள்ளையிடம் நேரடியாக இசை கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவருடைய கச்சேரிகள் பட்டம்மாளுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தன; அவருடைய கற்பனைத்திறனையும், படைப்பூக்கத்தையும் வளப்படுத்தின.

பள்ளியில் நடந்ததொரு விழாவில் பட்டம்மாள் பாடியது பலர் கவனத்தையும் கவர்ந்தது. பள்ளித் தலைமையாசிரியை அம்முக்குட்டி அம்மா பட்டம்மாளைப் பெரிதும் உற்சாகப் படுத்தினார். பள்ளி விழா செய்தித்தாளில் பட்டம்மாளின் புகைப்படத்தோடு வெளியிடப்பட்டது. இக்காலப் பெற்றோர்கள் தொலைக்காட்சிகள் நடத்தும் இசைப்போட்டிகளில் தம் குழந்தைகளோடு அமர்ந்து ரசிக்கிறார்கள்; கண்ணீர் வடிக்கிறார்கள்; விம்மிப் புடைக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து எழுதப்படும் கட்டுரைகளில் பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் செய்திக்குறிப்பைப் படித்து ஆனந்தக் குதூகலித்தார் என்று எழுதும் அளவுக்கு நம் சமூகப்பார்வை முன்னேறியிருக்கலாம். ஆனால் உண்மையில் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதருக்குக் கடுங்கோபம் வந்தது. பாட்டு, நடனம் இதற்காகவெல்லாம் பரிசு வாங்குவதோ, பிரபலமடைவதோ குடும்பப்பெண்கள் செய்யக்கூடிய காரியம் இல்லை. இதற்கும் மேலாக கொலம்பியா கம்பெனி பட்டம்மாளின் பாடலை இசைத்தட்டில் வெளியிட வேண்டுமென்று தீட்சிதரை அணுகியது. செய்திக்குறிப்புக்கே கொதித்தவருக்கு இசைத்தட்டு பெரிய கலாசார அதிர்ச்சியைத் தந்தது.

அதுவும் அப்போதுதான் HMV, கொலம்பியா என்ற இரண்டு பெரிய இசைத்தட்டுக் கம்பெனிகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுப் பல இசைக்கலைஞர்களின் இசைத்தட்டுகளை வெளியிட்டிருந்தன. புதிய, புதிய பாடகிகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தன. இசைத்தட்டுகளை வரவேற்பதைக் குறித்து ஜாதி பாகுபாடு இல்லாமல் பலரிடமும் தயக்கம் இருந்தது. புகைப்படம் எடுத்துக் கொண்டால் ஆயுசு குறையும் என்ற மூடநம்பிக்கையைப் போலவே இசைத்தட்டுகள் குறித்தும் அச்சம் நிலவியது. கொள்கை ரீதியாகவும் பல பெரிய இசைக்கலைஞர்களுக்கு இசையைப் பதிவு செய்வது ஒப்புதலாக இருக்கவில்லை. ஆனால் இசைத்தட்டுகள் புதிய இசைக்கலைஞர்களுக்குப் பெரும் விளம்பரத்தையும், கவனிப்பையும் பெற்றுத் தந்தன. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தமிழக இசைச்சூழலில் இசைத்தட்டுக் கம்பெனிகள் பெரும்பங்கு வகித்தன.

இப்படிப்பட்ட சூழலில் தீட்சிதரை சம்மதிக்க வைக்க அம்முக்குட்டி அம்மாளும், தீட்சிதரின் நண்பர் Dr.ஸ்ரீனிவாஸன் என்ற காங்கிரஸ் தலைவரும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்கள். பாடகிகளை தேவதாசிகளாகப் பார்க்கும் சமூகத்தில் தன் பெண்ணுக்கு எப்படித் திருமணம் செய்வது என்பது எந்த ஒரு தகப்பனுக்கும் இருக்கும் நியாயமான கவலைதான் தீட்சிதருக்கு இருந்தது. அப்போதுதான் Dr.ஸ்ரீனிவாஸன் ஒரு வாக்குறுதியைத் தந்தார். ஸ்ரீனிவாஸனின் வீட்டிலேயே தங்கி மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த ஈஸ்வரன் என்ற தன்னுடைய அக்கா மகனையே பட்டம்மாளுக்கு மணம் முடிப்பதாக வாக்களித்தார் ஸ்ரீனிவாஸன். இந்த வாக்குறுதி தீட்சிதருக்கு பெரும் பலத்தை அளித்தது. இத்தனைக்கும் Dr.ஸ்ரீனிவாஸனுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். வீட்டிலிருக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையை சங்கீதத்துக்காக விட்டுக்கொடுத்து பட்டம்மாளின் இசை வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார் ஸ்ரீனிவாஸன். இந்த ஸ்ரீனிவாஸன் காஞ்சி நகர முனிசிபல் சேர்மனாகப் பதவி வகித்தவர். பெரும் காந்தியவாதி. மருத்துவர். காஞ்சி நகர மக்களின் பெருமதிப்பைப் பெற்றவர். (இந்த ஸ்ரீனிவாஸனைத்தான் ஒரு தேர்தலில் முதல்முறையாக வெற்றிகொண்டு அண்ணாதுரை தன் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தார்.)

அம்முக்குட்டி அம்மாள், ஸ்ரீனிவாஸன் ஆகியோரின் பெருமுயற்சியால் மனம் மாறி கொலம்பியா கம்பெனியின் வேண்டுகோளுக்கிணங்கி இசைத்தட்டு வெளியிட சம்மதித்தார் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர். அந்த இசைத்தட்டின் பெரும்வெற்றி பலர் கவனத்தையும் பட்டமாள் பக்கம் திருப்பியது. தமிழின் முதல் பெண் நாவலாசிரியரும், பெண்கள் சுதந்திரத்தையும் வலியுறுத்துபவராகவும் இருந்த வை.மு.கோதைநாயகி அம்மாள், சென்னையிலிருந்து தொடர்ந்து காஞ்சிபுரத்துக்குப் பயணங்கள் மேற்கொண்டு தீட்சிதரிடம் தொடர்ந்து பேசி வலியுறுத்தி பட்டம்மாளைக் கச்சேரிகள் செய்ய வைத்தார்.


கொலம்பியா இசைத்தட்டுகள்
நன்றி: Roja Muthiah Reasearch Library

இந்த ஒரு மாற்றத்துக்குப் பின் தீட்சிதர் தாமாகவே முன்வந்து பட்டம்மாள் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தார். இதுவரை தெலுங்கு வாத்தியார் சொல்லித்தந்த சில கீர்த்தனைகள் தவிர வேறு முறையான இசைப்பயிற்சியைப் பட்டம்மாள் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடமிருந்தது இயற்கையான குரல்வளம், நாயனா பிள்ளை கச்சேரிகள் தந்த உத்வேகம் இவைதான்.

—oooOOOOooo—-

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் இன்னொரு முக்கியமான சமுதாய மாற்றம் தமிழகத்தில் ஏற்படுகிறது. அது ‘தேவதாசி ஒழிப்பு இயக்கம்’ கொண்டுவந்த தேவதாசிகளைக் குறித்த விழிப்புணர்வு. இந்த விழிப்புணர்வால் ‘பொட்டுக்கட்டி விடுதல்’ என்ற தீமை அழிந்தாலும், ஏற்கனவே தேவதாசி வம்சத்தில் பிறந்து, கோயிலைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த தமிழகத்தின் ஆகச்சிறந்த கலைஞர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அவர்கள் சமுதாயத்தால் உடலை விற்றுப் பிழைக்கும் விலைமகளிர்களாகப் பார்க்கப்பட்டார்கள். கோயில்கள் சார்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டன; பொருளாதார ரீதியான பாதுகாப்பு கைநழுவிப் போனது. தேவதாசிப் பெண்கள் திருமண பந்தத்துக்குள் வலுக்கட்டாயமாக இறங்க நேரிட்டது. அழகான, கலைகளில் மேதைகளாக விளங்கிய பெண்களுக்கு மட்டுமே திருமண பந்தம் கிட்டியது. பிற தேவதாசிப் பெண்கள் நடுத்தெருவுக்கு வந்தார்கள். வாழ்வாதாரமே பிரச்சினைக்குள்ளான போது அவர்கள் கலைகளில் லயிப்போடு ஈடுபடுவது இயலாமல் போனது. ஆகப்பெரும் இசை, நாட்டிய மேதைகளின் கலைப்பாரம்பரியம் அறுந்து போனது.

மேதைகள் மட்டுமே சூழலை உருவாக்க முடியாது, எந்தச் சூழலுக்கும் பல தரப்பட்ட மனிதர்களின் கூட்டு உழைப்பும், உரையாடல்களும், பங்கெடுப்பும், இயக்கப் பரிமாற்றமும் அவசியம் என்பது சூழல் இயல்பு பற்றிய அடிப்படை அறிவு. அந்தப் புரிதல் அங்கில்லை. அன்றுதான் இல்லை எனச் சொல்ல முடியாது, இன்றும் அது இல்லை. வெற்றி மட்டுமே வசீகரமாகத் தெரிந்த பண்பாடு வேரூன்றி இருந்தது. அதுவே இன்றும் தொடர்கிறது.

இப்படிப்பட்ட சூழலிலதான், பட்டம்மாளின் வரவு கலைக்கான புதியதொரு திறப்பை அளித்தது. தேவதாசிகள் மட்டுமல்லாமல் பிற பெண்களும் குடும்பவாழ்க்கைக்குள் இருந்து கொண்டே கலைத்துறையில் வெற்றிகரமாக ஈடுபடலாம் எனச் சமகாலத்தில் பல பெண்கள்-நாட்டியத்தில் ருக்மணிதேவி அருண்டேல், பாகவதத்தில் C.சரஸ்வதிபாய், கர்நாடக சங்கீதத்தில் டி.கே.பட்டம்மாள்-போன்றோர் நிரூபித்தனர்.

பாரம்பரியம் சார்ந்த மனத்தடையையும், பழமைவாதத்தையும் மீறுவதில் அக்காலகட்டத்தில் தீவிரமாக நிலவிய சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கும் பெரும்பங்கு இருந்தது. பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளில் பற்று கொண்டவர்; தீவிர காங்கிரஸ் அபிமானி. பட்டம்மாள் பள்ளி நாட்களில் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில் இறைவணக்கம் பாடியிருக்கிறார். அவ்வளவு கட்டுப்பெட்டியான நாட்களில் கூட பொதுக்கூட்டங்களில் எப்படி பட்டம்மாளால் பாடமுடிந்தது என்று கேட்டதற்கு “தேசபக்திக்கு முன்னால் வேறெதுவுமே தூசுதான். அதனால் தேசபக்திக் கூட்டங்களில் பாடுவதற்கு என் தந்தை எந்தத் தடையும் விதிக்கவில்லை” என்று சொல்கிறார் பட்டம்மாள். தேசத்துக்காக எந்த சமுதாய வழக்கத்தையும் மீறலாம் என்று நினைத்துப் பல சுதந்திரப் போராட்டக் கூட்டங்களில் தன் மகள் பட்டம்மாளை இறை வணக்கம் பாட வைத்திருக்கிறார் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர். அதைப் போலவே பட்டம்மாள் ஒரு பாடகராகப் பரிமளிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த Dr.ஸ்ரீனிவாஸனும் காங்கிரஸ் உறுப்பினர்தான்.

இக்காரணங்களாலோ என்னவோ பட்டம்மாள் இறுதிவரை ஒரு பெரும் தேசியவாதியாகவே இருந்தார். 1947-இல் சுதந்திரதினத்தன்று ஆல் இந்தியா ரேடியோவில் அவர் பாரதியாரின் தேசபக்திப்பாடல்களைப் பாடினார். அதற்காக அவருக்குத் தரப்பட்ட சம்பளத்தை வாங்க அறவே மறுத்து விட்டார். அப்பாடல்களைப் பாடியதைத் தன் தேசக்கடமையாகக் கருதினார் பட்டம்மாள். தான் இறுதியாக அளித்த பேட்டியில் கூட இந்தியாவைப் பற்றிப் பேசும்போது அவரால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. பாரதியார் பாடல்களில் பெரிய அத்தாரிட்டியாகவே கடைசிவரை விளங்கினார் பட்டம்மாள். பாரதியாரின் ‘ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே,’ ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’,’வெற்றி எட்டுத்திக்கும்,’ ‘விடுதலை, விடுதலை, விடுதலை,’ போன்ற பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் பட்டம்மாளுக்கும் முக்கிய பங்கு உண்டு.

—oooOOOooo—

எந்தத் துறையையும் போலவே இசைத்துறையும் அன்று ஆணாதிக்கம் நிறைந்த ஒன்றாக இருந்தது. “லய விவகாரங்களிலும், தாளக்கணக்குகளிலும் கவனம் செலுத்தும் அளவுக்குப் பெண்களுக்குக் கணிதநுட்பங்கள் கைவராது. ராகங்களை விரிவாகப் பாடும் அளவுக்கு அவர்களுக்கு கற்பனைத்திறன் கிடையாது.” போன்ற நம்பிக்கைகள் தீவிரமாக நிலவின. இந்த நம்பிக்கைகள், கோட்பாடுகளாகவும், கோட்பாடுகள் சம்பிரதாயங்களாகவும் மாறின. கர்நாடக சங்கீதத்தின் முக்கியமான அம்சமான ராகம்-தானம்-பல்லவியைப் பெண்கள் பாடவே கூடாது என்று ஒரு தீவிரமான கருத்து அந்நாட்களில் நிலவியது. அதை உடைத்தவரும் பட்டம்மாள்தான்.

பொதுவாகக் காஞ்சிபுரம் இசைக் கலாசாரம் லய விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்த ஒன்று. நாயனா பிள்ளை பாணியின் பாதிப்பு பட்டம்மாளிடம் பெருமளவு இருந்தது. பட்டம்மாள் பாடிய பல கீர்த்தனைகள் அச்சு, அசலாக நாயனாபிள்ளை பாடுவதைப் போல அமைந்திருந்தது. அந்த கிரகிக்கும் ஆற்றல் நாயனா பிள்ளையின் லய ஜாலங்களைப் பட்டம்மாளுக்குத் தந்திருந்தது. அதைப் போலவே பல்லவி பாடுவதற்கான உத்வேகமும் அவருக்கு காஞ்சி இசைச் சூழலிருந்தே கிட்டியிருக்க வேண்டும். (நாயனா பிள்ளையின் தாய் காமாக்ஷி அம்மாள்தான் முதல் முதலில் ராகம்-தானம்-பல்லவியைப் பாடிய பெண் என்று அறியப்படுகிறது.) திருப்பதி நாராயண்ஸ்வாமி நாயுடு, வித்யால நரசிம்மலு நாயுடு ஆகியோரிடம் கிட்டிய பயிற்சியும் பட்டம்மாளைப் பல்லவி பாடுவதில் பெரிய மேதையாக்கியது.

ஒரு பிராமணப்பெண் மேடையேறிப் பாடுகிறார் என்பதோடு மட்டுமல்லாமால், ஒரு பெண் ராகம்-தானம்-பல்லவி பாடுகிறார் என்பதை ஒரு அதிசயமாகப் பார்ப்பதற்காகவும் அக்காலத்தில் பட்டம்மாளின் கச்சேரிகளுக்குக் கூட்டம் வந்தது என்று அறிய முடிகிறது. திருவையாறு ஆராதனை விழாக்களை முன்னின்று நடத்திய 90 வயதான செல்லம் ஐயரிடம் பட்டம்மாளைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது பட்டம்மாளை அவர் அடையாளப்படுத்துவதே அவர் பாடிய பல்லவிகள் வழியாகத்தான் என்று அறிந்துகொண்டேன். மேலும், மாயவரம், கும்பகோணம் பகுதிகளில் கச்சேரிகள் நடந்தபோது பட்டம்மாளின் பல்லவி பாடும் திறனையும், அவர் தாளங்களில் செய்யும் கணக்குகளைக் கவனிக்கவுமே பல்லவியில் தேர்ந்த விமர்சகர்களும், ஆர்வலர்களும் வருவார்கள் என்றும் அவரிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

பட்டம்மாள் கிராமஃபோன் ப்ளேட்டில் பாடிப் பதிவு செய்த ஜகன்மோகினி பல்லவி வெகுபிரபலமான ஒன்று. ‘ஆல் இந்தியா ரேடியோ’ தன் கருவூலத்திலிருந்து தொகுத்துத் தந்திருக்கும் ஒரு இசைத்தட்டிலிருக்கும் ‘மாமவா பட்டாபிராமா’ என்ற மணிரங்கு ராகம்-தானம்-பல்லவி நிச்சயம் ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஒன்று. நடுங்காத, அழுத்தமான குரல்வளம் இருந்த இளமைக்கால பட்டம்மாளின் குரலில் அவர் பல்வேறு தாளங்களில் அனாயாசமாகப் பாடும் அந்த ஒரு பதிவே பட்டம்மாளின் இசையை ஆளுமையை முழுமையாகக் காட்டிவிடும். (பட்டம்மாளின் மணிரங்கு ஆலாபனையை இங்கே கேட்கலாம்.)

அந்த AIR பதிவு கூட பட்டம்மாளின் ஆரம்பகாலக் கச்சேரி கிடையாது. பெண் வித்வான்கள் ராகம்-தானம்-பல்லவி பாடி அதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே அக்காலங்களில் ‘ஆல் இந்திய ரேடியோ’வில் நிலவவில்லை. திருமதி.இந்திரா மேனன் அதைத் தன்னுடைய ‘The Madras Quartet’ என்ற புத்தகத்தில் பதிவு செய்கிறார்:

“ஆல் இந்தியா ரேடியோ பெண்கள் பல்லவி பாடக்கூடாது என்ற ஆணாதிக்கவாதிகளுக்கு வால்பிடித்து வந்ததை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். வியாழன் மாலைகளில் அப்போதெல்லாம் ராகம்-தானம்-பல்லவி பாடப்படும். அதை மனதில் வைத்துக்கொண்டு ஒரு ஆவணப்படத்துக்காக 1940-களில் பட்டம்மாள் பாடிய RTP இருக்கிறதா என்று கேட்டேன். அந்த சமயத்தில் பட்டம்மாள் பாடிய RTP எதுவுமே இல்லை என்றார்கள். பட்டம்மாள் பாடிய ஜகன்மோகினி பல்லவி கிராமபோன் ப்ளேட்டைக் குறித்துக் கூறினேன். அதற்கு எனக்குக் கிடைத்த பதில்: பட்டம்மாள் அக்காலங்களில் RTP பாடியிருக்கலாம். ஆனால் வியாழன் மாலை RTP பதிவுகளுக்குப் பெண்களை அழைப்பதில்லை என்பதை ஆல் இந்தியா ரேடியோ கொள்கையாகவே வைத்திருந்தது.”

தமிழ்ப்பாடல்கள் இயக்கம் தீவிரமடைவதற்கு முன்னரே பட்டம்மாள் தமிழ்ப்பாடல்களைத் தொடர்ந்து மேடையில் பாடினார். பாரதியார் பாடல்கள், தேவாரம், திருப்புகழ், அருணாச்சலக் கவிராயர், நாமக்கல் கவிஞர் பாடல்களை அவர் நிறைய பாடினார். பாபநாசம் சிவனின் நேரடி சிஷ்யையாக இருந்து, அவருடைய பல படைப்புகளைக் கற்றுக் கொண்டார். கச்சேரியின் முதல் பகுதியில் தமிழ்ப்பாடல்களைப் பாடிய முதல் கலைஞரும் பட்டம்மாள்தான். பட்டம்மாள் தமிழ்ப்பாடல்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்திருந்தாலும், தமிழிசை இயக்கம் நடத்திய இசைக்கச்சேரிகளில் அவர் பாடவைக்கப்படவில்லை. அதைக் குறித்து தமிழிசை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த கல்கி கூட பின்னாட்களில், “பட்டம்மாள் தமிழிசை இயக்கக் கச்சேரிகளில் பாடவைக்கப்படாதது அவருக்கு அவமானமல்ல. அதைச் செய்யாத நமக்குதான் அவமானம்” என்கிறார்.

பட்டம்மாளின் காலப்பிரமாணம் மத்யம காலத்தில் அமைந்திருந்தது. (செளக்கம் - மெதுவாகப் பாடுவது; துரிதம் - வேகமாகப் பாடுவது; மத்யமம் - இரண்டுக்கும் நடுவாந்திரமாகப் பாடுவது). அதுவும் குரல் முதிர்ச்சியடைந்தபின் மத்யம காலத்துக்கு ஒரு புள்ளி கீழே எடுத்துக்கொண்டார். அவர் மேலெழுந்து வந்த நாட்களில் மத்யமகாலத்தைத் தாண்டிக் கொஞ்சம் துரிதகாலத்தில் பாடுவதுதான் இளைய கலைஞர்களின் அணுகுமுறையாக இருந்தது. ஆனால் பட்டம்மாள் அந்த ஃபாஷன்களில் சிக்காமல் மத்யமகாலத்தைத் தேர்ந்தெடுத்துப் பாடுமளவுக்கு முதிர்ச்சியடைந்தவராக இருந்தவர். இந்த காலப்பிரமாணம் வீணையின் இசையை ஒத்தது. பட்டம்மாளின் குரலும் வீணையின் ஒலியைப் போல கனமாகவும், அதே சமயம் இனிமையாகவும் இருந்தது. எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மியின் குரலை ஷெனாயுடனும், எம்.எல்.வசந்தகுமாரியை நாதஸ்வரத்துடன் ஒப்பிடும் உஸ்தாத் படே குலாம் அலிகான், பட்டம்மாளின் குரலை வீணையின் கம்பீரத்தோடு ஒப்பிடுகிறார்.

முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பட்டம்மாளின் வீணைக்குரலில் அபாரமாக ஒலித்தன. உண்மையில் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பெரிய களஞ்சியமாகவே விளங்கினார் பட்டம்மாள். சென்னைக்கு நேர்காணலுக்கு வந்திருந்த பட்டம்மாளின் குரலாலும், பாடுமுறையாலும் கவரப்பட்டு, அவரை வற்புறுத்தி சென்னையில் தங்கவைத்து தீக்ஷிதரின் பல கீர்த்தனைகளைச் சொல்லித்தந்தார் தீக்ஷிதரின் கொள்ளுப்பேரரான அம்பி தீக்ஷிதர். அம்பி தீக்ஷிதரின் மறைவுக்குப்பின் அவருடைய சிஷ்யர் T.L.வெங்கட்ராம ஐயரிடமிருந்துப் பல முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டார் பட்டம்மாள். கிட்டத்தட்ட நானூறு தீக்‌ஷிதர் கீர்த்தனைகள் பட்டம்மாளுக்குத் தெரியும் என்பது அவருடைய சீடர்கள் சொல்வது. த்யாகராஜயோகவைபவம், மாமவபட்டாபிராமா, ஸ்ரீ சுப்ரமணிய நம்ஸ்தே, மானஸகுருகுஹ போன்ற தீக்‌ஷிதரின் கீர்த்தனைகள் பட்டம்மாளின் தனிச்சிறப்பாக விளங்குபவை.

பட்டம்மாளின் உச்சரிப்பு மிகத் தெளிவாகவும், அழுத்தமாகவும் இருக்கும். குரல் இயற்கையிலே கனமாக இருந்தது. இசை ஆரம்பகாலங்களில் பட்டம்மாள் அதிகமாக இசை சார்ந்த நுட்பங்களில் அதிகம் கவனம் செலுத்தி, பாவத்தில் கவனமில்லாமல் இருந்ததாக ஒரு குற்றச்சாட்டும் இருந்தது. “எனக்கு 50 வயதாக இருக்கும்போது லய விளையாட்டுகளின் மீது இருந்த லயிப்பு விலகியது. பாவம்தான் மிக முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும் பாடப்பாட ஒரு முழுமையான மனத்திருப்தி என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. என்றைக்கு சிவகிருபை வருமோ என்று நான் பாடியது வெறும் வார்த்தைச்சரமல்ல. அது என் பக்தியை இசை வழியாக வெளிப்படுத்தியது. அந்த வரிகளின் நெகிழ வைக்கும் தன்மையை ரசிகர்களுக்குத் தருவதையே நான் மிக விரும்பினேன்” என்று ஒரு பேட்டியில் சொல்கிறார் பட்டம்மாள்.

—oooOOOooo—

உண்மையில் பட்டம்மாள் என்ற சமுதாய நிகழ்வு வெறும் ஒற்றை ஆளைச் சார்ந்ததல்ல. அவர் திறமையைக் கண்டுணர்ந்து அதை வெளிக்கொணரப் பெரும்பாடுபட்ட அம்முக்குட்டி அம்மாள், தானாகவே சிறுமி பட்டம்மாளுக்கு இசை கற்றுத்தர முன்வந்த தெலுங்கு வாத்தியார், கிருஷ்ணசாமி தீட்சிதரின் மனமாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்த Dr.ஸ்ரீனிவாஸன், மனமாற்றத்துக்குப் பின் மிகப்பெரும் பலமாகவும், பல மணிநேரப் பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த கிருஷ்ணசாமி தீட்சிதர் என இந்த அனைவரும் தேடித்தந்திருப்பதுதான் இன்றைய கர்நாடக இசைச்சூழலின் ஆரோக்கியமான போக்கு. பட்டம்மாளின் முயற்சிக்குத் தன் பரிபூரண ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணசாமி தீட்சிதரே பட்டம்மாளின் கச்சேரிகளுக்குத் தம்பூராவும் மீட்டினார்! ஆணாதிக்க சமூகத்திலிருந்து மீண்டெழுந்த பட்டம்மாள் தன் குடும்பத்திலேயே இசைக்கு ஒரு பெரிய குருவாக விளங்கினார். தன் சகோதரர்கள் டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் இருவரையும் தேர்ந்த இசைக் கலைஞர்களாக்கினார்.

சிறுமியாக இருந்தபோது சில கீர்த்தனைகள் சொல்லித்தந்த தெலுங்கு வாத்தியாரைப் பிரபலமான பின்புதான் சென்னையில் மீண்டும் சந்திக்கிறார் பட்டம்மாள். பட்டம்மாளின் வீட்டுக்கு வந்த அவர், பட்டம்மாள் தட்சிணையாகத் தந்த காணிக்கையையும், ‘ஒரு மகளுக்குத் தந்தை தரும் தட்சிணையாக வைத்துக் கொள்’ என்று கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். பள்ளி முதல்வர் அம்முக்குட்டி அம்மாளையும் எர்ணாகுளத்துக்கு ஒரு கச்சேரிக்குச் சென்றபோதுதான் பள்ளிநாட்களுக்குப்பின் சந்திக்கிறார். மிகவும் உணர்ச்சிகரமாக சந்திப்பாக அமைகிறது அது. “என் இலட்சியம் நிறைவேறிவிட்டது. உன் திறமை வீண்போகவில்லை என்ற திருப்தியுடன் நான் நிம்மதியாகச் சாவை எதிர்கொள்ளமுடியும்” என்பவை கண்ணீருக்கிடையில் அம்முக்குட்டி அம்மாள் சொன்ன வார்த்தைகள்.

இன்று கர்நாடக சங்கீத உலகில் பெண்களின் நிலை மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் முன்னேறியிருக்கிறது. சென்ற தலைமுறையிலேயே பல பிரபல வித்வான்களின் மனைவிகள் வெளியுலகத்துக்குத் தெரியவராத மிகச்சிறந்த பாடகிகள். பல இசைக்கலைஞர்களின் திருமணத்தின்போது முதல் நிபந்தனையாக இருந்ததே, திருமணத்துக்குப் பின் மனைவி பாடக்கூடாது என்பதுதான். பட்டம்மாளின் தாய் ராஜம்மாளே மிக நல்ல குரல்வளம் உடையவர்; மிகச்சிறப்பாகப் பாடக்கூடியவர். ஒருமுறை வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பாடியதற்காகத் தன் மாமனாரால் கடுமையாகக் கடிந்து கொள்ளப்பட்டவர். பட்டம்மாளின் குரல் நமக்குக் கேட்கக் கிடைக்காத ராஜம்மாளின் குரல்; சமையலறைக்குள்ளேயே சிறு முனகலாகவும், ஆலாபனையாகவும் முடங்கிப்போன பெண்களின் குரல்; சமூக மாற்றத்தை முன்வைத்ததொரு தலைமுறையின் எளிய மனிதர்களின் குரல்.

தேசத்துக்காகப் பாடுவதைத் தன் கடமையாக நினைத்த பட்டம்மாளின் மறைவுக்கு, அவர் வாழ்ந்து மறைந்த மாநிலத்தின் முதல்வர் ஒரு சம்பிரதாயமாகக் கூட இரங்கல் தெரிவிக்காததும் நம் சமூக மாற்றத்தின் ஒரு புள்ளிதான்.


நன்றி - சொல்வனம்
...மேலும்

May 30, 2010

ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம்


சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த தலித்திய நாவலாகிய பாமாவின் ‘கருக்கு',கிறித்தவப் பெண்துறவியர் சார்ந்த அமைப்புக்களின் மீது கடுமையான சில விமரிசனங்களை முன் வைத்தது.

தீண்டாமையின் தீய கொடுக்குகளைக் களைவது ,மத மாற்றத்தாலோ துறவியாக மாறுவதாலோ சாத்தியமாகிவிடவில்லை என்பதைத் தன் துறவு வாழ்க்கை அனுபவத்தால் அறிந்து தெளிந்து அந்நாவலில் பதிவு செய்திருந்தார் பாமா.

தீண்டாமை என்ற ஒன்றை மட்டுமல்லாது குறிப்பிட்ட அந்தச்சூழலில் நிலவும் பன்முகச் சிக்கல்களையும்,அவற்றின் பரிமாணங்களையும் மிக விரிவான பின்புலத்துடன் அலசி ஆராய்கிறது சகோதரி ஜெஸ்மியால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் ’ஆமென்’ என்னும் அவரது சுயசரிதம்.

முதலில் மலையாளத்திலும்,பிறகு ஆங்கிலத்திலும் அதே சகோதரியால் எழுதப்பட்டு 2009இல் பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்நூல் கசப்பான பல உண்மைகளை மனத்தடைகள் இன்றி நேர்மையாக முன்வைக்கிறது.


இத் தடைகளைக்கடக்கவும்,துறவு வாழ்வில் தான் கைக்கொண்ட வாக்குறுதியைக் கைவிடவும் இச் சகோதரிக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலான அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில்....தன் உள்ளம் உணர்த்திய உண்மைக்கும்,துறவு மேற்கொண்டபோது,தான் செய்த சத்தியப்பிரமாணத்தால் கைக்கொள்ள வேண்டி வந்த சில சமரசங்களுக்கும் இடையே சிக்கித் தவித்த அவரது ஆன்மாவின் அவஸ்தையே அவரது சுயசரிதமாக உருப்பெற்றிருக்கிறது.

1974இல் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்த சகோதரி ஜெஸ்மி,பாமாவைப் போலவே தான் சார்ந்த துறவியர் அமைப்பைத் துறந்துவிட்டு ஒரு சாதாரண மனுஷியாக 2008இல் வெளியே வந்தவர்.

‘உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்
எல்லாம் கண்ணன் எம்பெருமான்’ எனச் சரணாகதி அடைந்த ஆழ்வார்களைப்போல இயேசுவிடம் மட்டுமே தன்னைச் சரணாக்கி ஒப்புவிக்கத் துடித்த உள்ளத்தின் குரலுக்குச் செவி கொடுத்தபடி உலகியல் வாழ்விலிருந்து ஒதுங்கித் துறவின் நிழலில் அடைக்கலம் தேடிக் கொண்ட இச்சகோதரிக்கு ,அந்நிழல் கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவின் நிழலாக இல்லை;
மாறாக அந்த நிழலின் குரூர நிஜங்கள் கொடூர வெம்மையுடன் அவரது ஆன்மாவையே சுட்டெரித்துப் பொசுக்கிப் போட்டிருக்கின்றன.
நொந்து போன அவரது ஆன்மாவின் அவலமுனகல்களே அவரது ஒப்புதல் வாக்குமூலமாக ‘ஆமென்’னிலும் பதிவாகி இருக்கின்றன.

இயேசுவும் நானும் என்ற பொருள்பட ஜெஸ்மி (Jesus and me-JES ME-Jesme) என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு துறவுஅமைப்புக்குள் பிரவேசித்த அவருக்கு அங்கே மிகுதியாகக் காத்திருந்தவை ,அவர் நம்பி நேசித்த வழிமுறைகளுக்கு முற்றிலும் நேர்மாறான ...அவர் சற்றும் எதிர்பார்த்திராத குரூரமான அதிர்ச்சிகள் மட்டுமே.
தங்களை இறைவன் ஒருவனுக்கு மட்டுமே ஒப்புக்கொடுத்தவர்களாய் ஒத்தநிலையில் வாழும் சகோதரிகளுக்கிடையேதான் எத்தனை வேறுபாடுகள் !
சமையலறையிலும் அன்றாடப்பணியிலும் ஈடுபடுத்திக் கொள்ளும் துறவிகளுக்கும் பிறருக்கும் இடையே வர்க்க வேறுபாடு,
படிப்பால்..உயர்குடிப்பிறப்பால்...நிறத்தால்..இனத்தால் பேதம் என்று ரகம் ரகமான பல வேறுபாடுகளைக் கண்டு அவர் உள்ளம் அதிர்கிறது.
பொறாமை,சினம்,பற்றுள்ளம் ஆகியவற்றை விட்டுவிட்டுச் சமரச நெறியில் வாழ
உறுதி பூண்டவர்களிடம்தான் எத்தனை சிறுமைக் குணங்கள்!

எல்லா அலைகளுக்கும் ஈடுகொடுத்து எதிர்நீச்சல் போட்டபடியே தன் தேர்வுகள் அனைத்திலும் சிறப்புத் தகுதியோடு வெற்றி பெறும் சகோ.ஜெஸ்மி ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி பட்டம் வரை எட்டிவிடுகிறார்;கல்லூரிப் பேராசிரியராகவும்,துணை முதல்வராகவும்,முதல்வராகவும் உயர்கிறார்.
ஒவ்வொரு கட்டத்திலும் மடத்தில் கூடவே இருப்பவர்களால்...மடத்தின் மேலிடப் பொறுப்பாளர்களால் தொடர்ந்து எழும் சிக்கல்களைத் தனது மாறாத இறைப் பற்று...துறவின்போது கைக் கொண்ட கீழ்ப்படிதல்நெறி இவற்றால் மட்டுமே எதிர்கொண்டபடி தன் பயணத்தைத் தொடர்கிறார் ஜெஸ்மி.

ஆன்மீகப்பிடிப்போடு ஒரு இலக்கியவாதியுமான சகோ.ஜெஸ்மியின் அழகியல் ரசனைகள்...,ஆன்மீகநெறிகளோடு அவற்றை ஒருங்கிணைக்க அவர் காட்டிய ஆர்வம்,தரமான திரைப்படங்கள் உலகத் திரைப்படங்கள் ஆகியவற்றில் அவர் கொண்ட ஈடுபாடு,அவற்றைத் தகுந்த விவாதங்களுடன் கல்லூரி மாணவியருக்கு எடுத்துச் செல்ல அவர் மேற்கொண்ட முயற்சி,பாலியல் தொழிலாளியான ஜமீலாவின் சுயசரிதத்தை வெளியிட முன்வரும் அவரது முற்போக்கான இயல்பு,வர்க்கபேதமின்றி எளியோரிடமும் யதார்த்தமாகப் பழகும் பாங்கு இவை அனைத்துமே தவறான புரிதலோடு பார்க்கப்பட்டு அவற்றுக்காகவே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுகிறார் அவர்.

கல்லூரி நிதி திரட்டவும்..கல்லூரியில் மாணவரைச் சேர்த்துக்கொள்ளவும் கைக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி அவர் எழுப்பும் நியாயமான கேள்விகளால் தங்கள் மனச் சாட்சிக்குத் தொந்தரவு ஏற்படுவதைச் சகித்துக் கொள்ள அவரது மேலிடம் தயாராக இல்லாததால் அடுக்கடுக்கான பல நெருக்கடிகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலை.
துறவுநெறியில் கைக்கொண்ட ’கீழ்ப்படிதல்’என்னும் கோட்பாட்டுக்கு முரணாகச் செயல்படக் கூடாது என்ற ஒரே காரணத்தால்.. மனம் விரும்பாத பல சமரசங்களுக்கு அவ்வப்போது உடன்பட நேர்ந்தாலும்
‘கீழ்ப்படிதல்’என்பது குருட்டுத்தனமானதாக இருக்கலாகாது,அது பொறுப்புணர்வுடன் கூடிய கீழ்ப்படிதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்று தனக்கு மேல்நிலையில் உள்ள சகோதரியிடமே உரத்து முழங்கும் துணிவு கொண்டவராகவும் விளங்கியிருந்திருக்கிறார் ஜெஸ்மி.
(''...in this ultra modern age why do you still lecture on 'blind obedience'? Recently we were asked to develop 'responsible obedience'.But how can you still emphasize on the past explanations?'')

சகோ.ஜெஸ்மிக்குத் தரப்பட்ட நெருக்கடிகள் உச்சத்தை எட்டியும் அவற்றுக்கு அடி பணியாது ஆன்ம உரத்தோடு அவர் நின்றபோது அவரது மிகச் சிறிய உடல் உபாதையைப் பெரிது படுத்தவும்,அவர்க்கு மனப் பிறழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறியபடி முதல்வராக இருக்கும் அவரை நீண்ட விடுமுறையில் சிகிச்சைக்கு அனுப்பவும் கூடத் துணிந்து விடுகிறது அவர் தொடர்பு கொண்ட அந்த மத அமைப்பு.
தான் நேர்ந்து கொண்ட ஆன்மவாழ்வு..தனது தனி மனித ஆளுமை ஆகிய இரண்டுமே காயப்பட்ட நிலையில் அதற்கு மேலும் அதைப் பொறுத்துப் போகும் சகிப்புத் தன்மையைக் கைகழுவிவிட்டு......
இயேசுவின் மீது மாத்திரமே நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சாதாரணப் பெண்மணியாக அந்த அமைப்பிலிருந்து ஒரு வெளிநடப்புச் செய்கிறார் ஜெஸ்மி.

தில்லியிலிருந்து கேரளா நோக்கிச் செல்லும் பதட்டமான ரயில் பயணத்தில் தொடங்கி அவரது நினைவோட்டமாக விரியும் இந்த வாழ்க்கை வரலாற்று நூல் சுவாரசியமான ஒரு நாவலைப் போன்ற விறுவிறுப்போடு தொடங்கி முடிவு வரை தான் முன்வைக்கும் நிஜங்களால் மட்டுமே வசகர்களைக் கட்டிப்போட்டு விடுகிறது.

லௌகீக வாழ்வில் நிலவும் ஆண் பெண் ஏற்றத் தாழ்வுகளுக்கு மத அமைப்புக்களும் உட்பட்டவையே என்பதையும் ஜெஸ்மி குறிப்பிடத் தவறவில்லை.
பொது இடங்களுக்குச் செல்லுகையில் பெண்துறவிகளைப் போல உடுப்பணிந்து கொண்டு சென்றாக வேண்டிய அவசியம் ஆண் பாதிரிமார்களுக்கு இல்லை.
திருக்கோயில் பூசை நடத்தும் உரிமை,பாவமன்னிப்புக் கோரிக்கைகளுக்குச் செவிகொடுத்தல்,இறுதிச்சடங்குப் பூசை செய்தல் இவையெல்லாமே பெண்துறவிகளுக்கு மறுக்கப்படுவதோடு பெண்துறவிகளுக்கு இல்லாத வலுவான பொருளாதாரப்பின்புலமும் ஆண்பாதிரிமாருக்கு அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஜெஸ்மி.
துறவுக்குள் ஆண் நுழையும் சடங்கு புனிதமாகப் போற்றப்படுவது போலப் பெண்ணின் அத்தகைய பிரவேசம் மதிக்கப்படுவதில்லை என்பதையும் ஆதங்கத்தோடு எடுத்துக் காட்டும் இவ்வாழ்க்கை வரலாறு பெண்ணிய நோக்கிலும் கவனம் பெற வேண்டிய ஒன்றாகிறது.

ஒரு முறை பாவமன்னிப்புக் கோரியபோது தனக்கும் பாதிரியாருக்கும் நடந்த உரையாடலை இவ்வாறு வருணிக்கிறார் ஜெஸ்மி.
‘’நீங்கள் திரைப்படங்களுக்குச் செல்லக்கூடாது என்று உங்களுக்கான விதிமுறைகளில் எழுதப்பட்டிருக்கிறதா சிஸ்டர்’’-இது பாதிரியார்.
‘’இல்லை ‘’-இது ஜெஸ்மி.
‘’பாதிரியார்களுக்கான விதிமுறைகளின்படி அவர்கள் மது அருந்தக்கூடாது என்ற சட்டம் இருக்கிறதா’’
‘’அது பற்றி எனக்குத் தெரியாது’’
‘’ஆமாம்.விதிமுறை அப்படித்தான் சொல்கிறது.அதை மீறும்போது அவர்கள் பாவமன்னிப்பு கோரியாக வேண்டும்.ஆனால் நீங்கள் திரைப்படம் பார்ப்பதற்காகப் பாவமன்னிப்பு கோர வேண்டியதில்லை’’

ஒரு சில ஆண் துறவிகளின் சபலசித்தம்,பெண்துறவிகளைத் தங்கள் பாலியல் இச்சைக்குப் பலியாக்கும் அவர்களது இழிந்த போக்கு,பெண்துறவியர் மடங்களில் காணப்படும் இயற்கைக்கு முரணான சில மறைவான பாலியல் நடவடிக்கைகள் ஆகியவற்றையும் கூடப் பிற செய்திகளைப்போலவே ஒளிவுமறைவின்றிப் பதிவு செய்திருக்கிறார் ஜெஸ்மி.
ஆனால்,அவரது புத்தகம் வெளியானபோது (178 பக்கங்களைக் கொண்ட அவரது நூலில்) கிட்டத்தட்ட 5 பக்க அளவில் மட்டுமே இடம்பெற்றிருக்கும் இத்தகைய செய்திகளிலேயே மிகுதியான கவனத்தைச் செலுத்திய ஊடகங்கள் அவற்றில் மட்டுமே கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்சி அந்தச்சகோதரியின் வாழ்வையே ஒரு பரபரப்புப் பொருளாக மலினப்படுத்திவிட்டது மிகவும் வேதனைக்குரியது.
பெண் என்பவள் இல்லறத்தில் இருந்தாலும் துறவறத்தில் இருந்தாலும் இந்தச் சமூகத்தின் அக்கறை அவளது உடல் மீது மட்டும்தான் என்பதையே கரிசனத்தோடு விமரிசனம் எழுதுவதான பாவனையில் இதழுலகம் காட்டிக் கொண்டிருக்கிறது.

தான் சார்ந்திருந்த அமைப்பின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து வெளியே வந்துவிட்டபோதும் தான் இன்னமும் கூடத் திருச்சபையின் தீரமான,விசுவாசமான ஒரு பெண்ணாகவே தொடர்வதான பிரகடனத்தோடு முடிகிறது ஜெஸ்மியின் வாழ்க்கைச் சரிதம்.
திருச்சபைத் துறவிகளுக்கான வழிகாட்டுதல் நெறிகளைத் தீவிரப்படுத்தும் முனைப்புடன் வாடிகன் இயங்கிக் கொண்டிருக்கும் தருணம் இது; அத்துடன் காலமாற்றத்திற்கேற்ற வேறு சில கருத்தியல்களையும் இணைத்துத் தகுந்த களையெடுப்புக்களைச் செய்து திருச்சபைக்குப் புதுரத்தம் பாய்ச்சியாக வேண்டிய தேவையை முன்மொழிந்திருக்கும் ஜெஸ்மியின் வாக்குமூலம் காலத்தின் குரலாக உண்மைகளை ஒலித்திருக்கிறது.


...மேலும்

May 29, 2010

ஒரு பெட்டை நாயின் கூச்சல் - லீனா மணிமேகலை


மகாஸ்வேதா தேவியின் "திரெளபதி" என்ற கதையில் வரும் காட்சியில் ராணுவ அதிகாரி முன் திரெளபதி நிர்வாணமாக நிற்கிறாள். அவள் தொடைகளிலும், முலைகளிலும், அல்குல்லிலும் உறைந்துப் போன ரத்தம். "இவ துணியெல்லாம் எங்க? "என்ற ராணுவ அதிகாரியின் கேள்விக்கு "உடுத்த மாட்டேங்கிறா சார், கிழிச்சுப் போட்டுட்டா" என்கிறார்கள்.மேலும் அதிகாரியின் அருகில் வரும் திரெளபதியின் கரிய உடல் குலுங்க ஆவேசமாக சிரிக்கிறாள். அவளின் குதறப்பட்ட உதடுகளிலிருந்தும் ரத்தம். "துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாண்மாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா? சீ.. நீ ஒரு ஆம்பளையா?" என்று கேட்டுவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை சட்டையில் "தூ" என்று துப்பிகிறாள். "நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளண்ட்டர் பண்ணு" என்று சிதைக்கப்பட்ட முலைகளோடு தன்னை நெருங்கும் நிராயுதபாணியான டார்கெட் முன்னால் அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.அந்த பயம் தான் 'பெண் கவிஞர்கள் தம்மை திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஆடையை அவிழ்த்தெறிகிறார்கள்' என்ற விமர்சனத்தின் அடிப்படையும் காரணமுமாக இருக்க முடியும்.

தமிழ்ப் பெண் கவிதையின் தொப்புள் கொடியை சங்க காலத்தின் ரேகைகளிலிருந்து எடுக்கிறார்கள் பெண்ணியல் ஆய்வாளர்கள். பின், சமணம், பெளத்தம் என்று பெருமத காலங்களில் மடிந்து, பக்தி காலங்களில் சைவத்திற்கொரு காரைக்கால் அம்மையார்,வைணவத்திற்கொரு ஆண்டாள் என்று புனிதத்தில் தட்டுப்பட்டு, ஒரு நீண்ட தலைமறைவு காலத்தைக் கடந்து, 1970 களில் அரசல் புரசலாகத் தெரிந்து, 90களில் எழுச்சி பெறுகிறது. இது எழுச்சி அல்ல, சுழற்சி என்று சொல்பவர்கள் உண்டு. நிகழ்கால நோக்கில், பழங்கால இலக்கியங்களை ஆராயும் ஆய்வுகள் அடிக்கருத்தியல் மட்டும் சார்ந்தவையா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.சங்ககால பெண்பாற் புலவர்களின் பாடல்களிலிருந்து, அக்காலத்துப் பெண்களின் காதல், பொருளாதார சார்புத்தன்மை, வீடே "வெளியாக" இருத்தல், பரத்தையிடம் சென்று வரும் கணவனையும் 'கற்பு' நெறியோடு ஏர்றுக் கொள்ளுதல், உடன் கட்டை ஏறுதல், கைம்மை, காதலனை கையகப்படுத்தும் முயற்சிகள் என்பது போன்ற கருப்பொருள்களை சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பிரதிகளில் காண முடிகிறது. காமத்தை வெளிப்படுத்துதல், காதல் துணையை தேடிக் கொள்வதில் இருக்கும் தேர்வுரிமை, களவொழுக்கம், போன்றவற்றை சுட்டிக் காட்டி, சங்க காலத்தில் ஆண் பெண் சமத்துவம் நிலவியது போல சில விமர்சகர்கள் குறிப்பிட்டாலும், சங்ககாலச் சூழல் தாய்வழி சமூகத்தின் மிச்ச சொச்சங்களையும், தந்தை வழி சமூகம் வேரூன்ற ஆரம்பித்த காலகட்டைத்தையும் கொண்டிருந்ததாக கணக்கிலெடுக்க முடியும்.

பக்தி இயக்கம் தந்த கவி ஆளுமைகளான ஆண்டாளும், காரைக்கால் அம்மையாரும் புனிதப்படுத்தப்பட்ட பிம்பங்கள். அன்றாட வாழ்வின் பெண் இருப்புக்கும், அவர்களின் பனுவல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கருத்து ரீதியில் சமய நம்பிக்கையுடன் தன்னை அடையாளப் படுத்தும் அம்மையாரின் குரலில் மரபு வழிப்பட்ட பார்வையே பொதிந்துள்ளது. வேட்கை, விழைவு, இச்சை என்பனவற்றை முறைப்படுத்தி ஒருவித ஒடுங்கிய மன அமைப்பைத் தோற்றுவிக்கும் பக்தி உணர்வை காம விழைவாக எழுதிய ஆண்டாள் தனித்துவமிக்கவராகத் தெரிகிறார். ஆனால் கடவுளைக் காமுறுதல் என்ற "சலுகையினாலேயே" அவருடைய துய்ப்பும், திளைப்பும், மறுக்கப்படாமல் பெருக்கப் படுகின்றன, சிவனும், திருமாலும் பாலியல் பிரதிமைகளாக(Sexual Icons) மாறி பக்தைகளைப் பித்தாக மாற்றுவதும் லிங்கமையவாதத்தையே நிலை நிறுத்துகிறது.

2003 ல் எழுத வந்த எனக்கு முன் ஒரு நீண்ட பட்டியல் இருந்தாலும், வித்தியாசப்படுத்துதல் என்ற திசை நோக்கிய பயணம் 1990 களுக்குப் பிறகே பெண் கவிதைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. பாலினம் கடந்த எழுத்தை எழுதிவிட வேண்டும், பெண் எழுத்து என்பது மாதிரியான சொல்லாடலைக் கடுமையாக எதிர்க்க வேண்டும், பார்ப்பனியப் பெண்ணெழுத்து, பார்ப்பனியரல்லாதப் பெண்ணெழுத்து, தலித் பெண்ணெழுத்து என்றெல்லாம் பார்க்க கூடாது போன்ற அடையாள மறுப்பு அரசியலில் ஆர்வமும், குறிக்கோள்களும் மிகுந்தாலும், கடுமையான சிக்கல்கள் இருக்கின்றன.சாதி, மத, பாலின, வர்க்க வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தில், ஒரு தன்னிலை இவை எல்லாவற்றையும் கடந்துவிடும் இருப்பை அடைந்துவிட முடியுமா? அப்படியொரு இருப்பு சாத்தியமாகாதப் பட்சத்தில் எல்லாவற்றையும் கடந்தப் பிரதி மட்டும் எப்படி சாத்தியம் என்ற நெருக்கடி உண்டாகிறது.

உடலுக்கு வெளியே, கலாசாரத்திற்கு வெளியே, நிறுவனங்களுக்கு வெளியே, எல்லைகளுக்கு வெளியே, தேசங்களுக்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்ளும் முயற்சியாகத் தான் ஆணும் சரி, பெண்ணும் சரி எழுத வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் அற்பமாகவும், வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் தன்னிலைகளுக்கு கூடுதல் காரணங்கள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.இனத்தில், வர்க்கத்தில், பாலினத்தில், சாதியில் படிநிலையில் "மேலிருப்பவர்கள்" மீது சந்தேகமும், எச்சரிக்கையும், சுயமரியாதையும் கொண்டிருப்பதும், "கீழிருப்பவர்கள்" முன் குற்ற உணர்ச்சியும், "படிநிலை நீக்கம்" செய்ய விழையும் முனைப்பும், பழியையும் அதற்குரிய தண்டனையையும் கூட ஏற்றுக் கொள்வதுமாகத் தான் "இருப்பை" புரிந்துக் கொள்ள முடிகிறது.கலைச் செயல்பாடும் அதிலிருந்தே தொடங்க முடிகிறது. அந்த வகையில் சலனங்களை ஏற்படுத்தியவை, பொதுப் புத்தியை தொந்தரவு செய்தவை, நிறுவனங்களைக் கேள்வி கேட்பவை, சுரண்டல்களிலிருந்து இருப்பை விடுவிக்க நினைப்பவை, அசலான வித்தியாசங்களின் மீது வினை புரிந்தவை, 'பெண்மை' மேலானது - 'பெண்' இழிவானவள் அன்ற முரண்பாட்டைத் திருகியவை என்ற வகைகளில் பெண்ணெழுத்து கடந்தப் பத்தாண்டுகளில் தான் வினை புரிந்திருக்கின்றது.

"பெண்ணுடல் என்ற நிலத்தின் மீதே தந்தை வழி சமூகம் நிறுவப்பட்டது. பெண் தன்னிடம் சிதறிக் கிடக்கும் மன ஆற்றல்களையும், உடல் வல்லமையினையும் நோக்கு நிலையினையும் ஒன்றிணைக்க வேண்டுமானால் அவள் சிந்திப்பது உடலினூடாக நிகழ வேண்டும்" என்கிறார் பெண்ணியலாளர் அட்ரியன் ரிச். பெண் பெயரில் கையெழுத்துப் போட்டால் மட்டும் பெண்ணெழுத்து ஆகிவிட முடியாது.பாலின விழிப்புடன் எழுதும் சில ஆண் பிரதிகளிலும் பெண்ணெழுத்து நிகழ்ந்துவிடும் வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.

90களுக்குப் பிறகானப் பெண்கவிகள் முரணும் உடன்பாடுமாய் வெவ்வேறு தளங்களைத் தொட்டுச் சென்றிருந்தாலும், அவர்களின் பிரதிகளில் இருக்கும் "பிரதானப் போக்குகளை" அவதானிக்கலாம்.பெண் எழுத வந்ததே அரசியல் செயல்பாடு, மறுக்கப்பட்ட குரல்களின் வெளிப்பாடு, எதிர்ப்பின் தடயங்கள் என்ற அடிப்படையில் எழுத வந்த எல்லா பெண் கவிஞர்களையும் பொருட்படுத்த வேண்டும் என்றாலும், ஆணின், அதிகாரத்தின், நிறுவனத்தின் மொழியையே மறுபதிப்பு செய்யும் பிரதிகளை நிராகரித்து விடலாம்.அரசியல் மற்றும் கவித்துவத்தைக் கூட்டுவித்து வாசிப்பாளரை நுகர்வோராக மாற்றாமல் செயலூக்கமுள்ள பங்கேற்பாளராக மாற்றும் குறிக்கோளை ஓரளவு அடைந்திருக்கும் பிரதிகளாய் சிலவற்றை அடையாளங் காணலாம்.

"என் உடலுடன்
நான் உறங்க வேண்டும்
இடது கரத்தால் சிவனைப்
பிய்த்தெறிந்து விட்டு" என்ற மாலதி மைத்ரியின் கவிதை, பெண்ணின் நினைவு உலகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் ஆணின் உச்சக்கட்ட அடக்குமுறையை சிதைக்கிறது. ஆணை, அதன் வழியே அதிகாரத்தை வெளியே நிறுத்தும் துணிச்சலை அவர் பிரதிகள் செய்கின்றன. தாய்மை வழியாக குடும்ப அமைப்பை கையகப்படுத்தி சமூகத்தையும் கையகப்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை தாயை நோக்கி திரட்டிக் கொள்ளும் அரசியலை முன் வைக்கிறார்.மறு உற்பத்தி பெண்ணின் விடுதலைக்கு தடையாய் இருக்கிறது என்பதை மறுத்து தாய் - சேய் உறவை உயிரியல் அம்சமாகப் பார்க்கிறார். ஆண் - பெண் இணை முரணைத் தலைகீழாக மாற்றிப் போட்டு பெண் - ஆண் என்று பெண்ணை முதன்மைப் படுத்தும் செயல்பாடுகளை மாலதியின் கவிதைகள் செய்துப் பார்க்கின்றன.ஆனால் அந்த இணை முரணை, முரண்களாகவே நிறுத்திவிடாமல், சிதைத்துக் கலவையாக்கி விடும் எழுத்துமுறையை, பன்மைத்துவத்தை எழுதிப் பார்க்கும் சவாலை விட்டுவிடுகின்றன. பெண்ணை தனிமைப்படுத்தும் மாலதியின் கவிதைகள், அவளின் சுதந்திர இருப்பிற்கான மாற்று வழிகளை சொல்லத் தவறுகின்றன.

பெண் துறவை வழிமொழியும் ரிஷி, பெண் இருப்பையே வலியாகவும், மனப்பிறழ்வாகவும் வரிக்கும் சுகந்தி சுப்ரமணியன், மத்தியதர வாழ்க்கை, பணியிடம், குழந்தைகள் என்பது போன்ற "நல்ல" கச்சாவை மட்டும் கவிதையாக்கும் வெண்ணிலா, உழைக்கும் பெண்களைக் காட்சிப்படுத்தும் இளம்பிறை, காழ்ப்பையும் கழிவிரக்கத்தையும் அழகியலாக்கும் உமா மகேஸ்வரி என்று பெண்கவிகள் தங்களுக்கென்று அலாதியான உலகங்களை உருவாக்கிக் கொண்டு எழுதி வருகிறார்கள் என்றாலும் சமநிலையை குலைத்துப் போடும் பொறிகளே காலத்தின் தேவையாய் இருக்கின்றன.

பிரமிளிடமிருந்து படிமங்களையும், தேவ தேவனிடமிருந்து ஆன்மிகத்தையும், கோணங்கியிடமிருந்து இடுகுறி சொற்களையும் எடுத்துக் கொண்டு எழுதும் குட்டி ரேவதி, ஆண் மையங்களை குலைக்காமல் அதன் எச்சங்களையே அடுக்குகிறார். ஆணை அறியாதவனாக்கி " நான் வேறொரு உலகத்தைக் காட்டுகிறேன் வா" என்ற பெண்ணின் அழைப்பை கவிதைகளாக்குகிறார். அதன் மூலம் தன் ஆளுமையை கட்டமைக்கிறார். ஆணின் ஒடிபஸ் காம்ப்ளெக்ஸிற்கு வடிகாலாய் இருக்கின்றன இவரின் பிரதிகள்.அதிகார வடிவங்களை அப்படியே வைத்துக்கொண்டு உள்ளடக்கங்களை மட்டும் மாற்றிவிடுவது, அரசியலாக உடலை முன் வைக்காமல் வெறும் பேச்சாக அதைப் பெருக்குகிறது. அதனாலேயே தயாரிக்கப்பட்ட உடல்களை எப்படி வீழ்த்துவது என்ற கேள்வியை கேள்வியாகவே விட்டுச்செல்கின்றன.

"ரயில் நிலையத்தின் இரு மருங்கையும்
அணைத்துக்கொண்டிருந்த இரவின்
பால்வாசனையுடைய மேனியைத் தீண்டிய் ரயில்
வேகமெடுத்தது

மரத்தின் ரசத்தை உறிஞ்சி ஆடிய இலையொன்று
தன்னைக் கடந்த பருவத்தின் வேகம் நோக்கி
பழுத்து வீழ்ந்தது
முன்பின் பருவங்களின் நினைவுச் சின்னமாய்ப்
பூவின் மகரந்தங்கள் பெருக்கிய உடலை
மரம் சுமந்து நிற்கிறது

பொன்துகள் உதிரும் பலரியின் அழகை
நீயும் காணவேண்டுமென ஏங்குகிறேன்.

கிழவியின் உடலுக்குள் நீந்திய உடலில்
பைத்தியத்தின் குழப்பமற்ற கண்களுடன் தோன்றிய அவனோ
ஏழுகடல்கள் தாண்டி கூடு கட்டிய
மந்திரக்கிளியின் உயிர்தேடிச் சென்றிருக்கிறான்"


என்பது போன்ற இவரின் படிமமொழி தந்திரங்கள் வாசிப்பவரைக் களைப்படையச் செய்பவை.

"எல்லா அறிதல்களுடன்
விரிகிறதென் யோனி"
என்றெழுதும் சல்மாவின் வரிகள் ஒரு சராசரிப் பெண்ணின் எதிர்வினையை மட்டுமே ஆற்றுகின்றன.ஆணின் வஞ்சகத்தைக் காட்டிக் கொடுத்தாலும், அவனிடமே தன்னை ஒப்புக் கொடுத்துவிடும் இயலாமையாய் எஞ்சுகின்றன. ஆணின் விசாரணைக்குள்ளேயே இருந்துக் கொண்டு ஒரு பெண் தன்னை யார் என்று கண்டுபிடித்துவிட முடியாது என்பதை உணர்த்தும் பிரதிகள் இவருடையது. ஆனால் உடைமைவாதிகளான ஆண்களின் "எங்கே பறிமுதல் செய்யப்பட்டு விடுவோமா? எங்கே அடையாளமிழந்துப் போவோமா? " என்ற பயங்களை மிக நுணுக்கமாக வெளிப்படுத்த சல்மா தவறவில்லை.

"எலி கீறிய காலில் குருதி கசிகிறது
கரப்பான் எகிறிப் பறக்கின்றன
முதுகில் நடந்து சென்ற புலியின் சுவடுகளை
எப்படி பார்ப்பது" என்ற சுகிர்தராணியின் எழுத்தில் இருக்கும் களிப்பு ஒரு தாய்வழி சமூகப் பெண்ணிற்கே உரிய மூர்க்கத்திலிருந்து வருவது.போலி ஒழுக்கங்களுக்கு கட்டுப்படாத கச்சாவான எதிர் அழகியலை உருவாக்கியதில் சுகிர்தராணி முக்கியமானப் பங்காற்றுகிறார்..

பண்பாடுxஇயற்கை எதிர்வுகளில் இயற்கையோடு பெண்ணைப் பொருத்திப் பார்ப்பது, கொற்றவை, நீலி, பத்ரகாளி எனத் தொன்மத் தெய்வங்களோடு உருவகப்படுத்திக் கொள்வது, பெருங்கதையாடல்களை புறந்தள்ளி ஒருவித பேகனிஸ்ட்(Paganist) கலகத்தை செய்தாலும், உயர்வு நவிற்சிகள் விட்டில் பூச்சிகள் போல திரும்ப திரும்ப லிங்கமய அழகியலுக்குள்ளேயே விழவைக்கிறது என்ற அபாயத்தைப் புறந்தள்ள முடியாது.

ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டப் புனிதங்களின் மீது சந்தேகங்களும் அவற்றின் மேலான ஒரு ரண சிகிச்சையும் பெண்கவிதை உளவியலாக மேற்கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளலாம்.கலாசார அரசியலில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த சலனம் என்றாலும் இன்னும் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.

சமகாலத்தில் ஒற்றையிலையென, உலகின் அழகிய முதல் பெண் என்று இரண்டு தொகுப்புகளை எழுதியவள் என்ற அடிப்படையில், பெண் எழுத்து எம்மிடம் கோரி நிற்பவை எவை என்பதை உரையாடலாக வைக்கிறேன்.இந்த கட்டுரையில் நான் சொல்ல விழைவதெல்லாம் முற்றும் முதலான முடிவுகளல்ல. நான் 'சொல்வதெல்லாம் சரி' என்று நிறுவ நான் நிறுவனமும் அல்ல. விவாதங்களுக்கான வாசல்களுடன் தான் என் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வைக்கிறேன்.

மரபிலி பிரதிகளைக் கண்காணிக்கும் அதிகார எந்திரம் தன் ஒழுங்கு நடவடிக்கைகளை பிரதியாளரின் மீது நீட்டித்து தாசி, தேவடியாள், அவிசாரி, பைத்தியக்காரி, முண்டை, வேசி, விபசாரி என்று பெயர்களிட்டுப் பாலியல் ரீதியாக ஒடுக்குவது. பெண் படைப்பாளியை திமிர் பிடித்தவள் என்றும் அவளைப் பலரும் புணர்ந்து தான் ஒடுக்க வேண்டும், யோனி வழியாக மட்டுமன்றி வாய்/குதம் வழியாகவும் புணர்ந்து ஒடுக்க வேண்டும் என்று குரலிடுவது, எழுதுவது போன்ற வன்முறைகளை செய்பவர்களின் மீது பகையை அறிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகளோடு "பெண்" விசயத்தில் தானே அவர்கள் அப்படியிருக்கிறார்கள், மற்ற விசயங்களில் சேர்ந்து செயல்படலாம் என்று உடன்படும் பரந்த மனதுக்காரர்களின் இரட்டை வேடங்களை எழுத்தளவிலாவது தொடர்ந்து தோலுரிக்க வேண்டும். சாதி திமிரோடு இருக்கும் சக்திகளோடு எப்படி சகிப்புத் தன்மையைக் காட்ட முடியாதோ, அதே போல பாலினத் திமிரோடு இருக்கும் சக்திகளோடும் வேறு விசயங்களுக்கான கூட்டு நடவடிக்கைகளையும் மறுக்க வேண்டும். பாலின விழிப்பை முன் நிபந்தனையாக வைத்து பிரதிகளுக்குள்ளும், பிரதிகளுக்கு வெளியேயும் கறாராக இயங்க வேண்டும்.பெண்ணாக இருந்தும் ஆண்நிலைவாதக் குப்பைகளை எழுதுபவர்களும், அவர்களின் பிரதிகளும் இதில் விதிவிலக்கல்ல.

நடைமுறையில் பெண்வெளிக்கான , சுதந்திர இருப்புக்கான மாற்றுப் புனைவுகளை எழுதும்போது, நாம் வாழ்வதும் புனைவுகளுக்கு மத்தியில் தான் என்று உணரத் தலைப்பட வேண்டும். உண்மைகளையும், யதார்த்தத்தையும் திட்டமிட்டு குழப்பவேண்டும். மானுட சித்தாந்தங்கள் சந்தர்ப்பவசமாக ஏன் ஆண்களாலேயே எழுதப் படுகின்றன என்ற கேள்வியும், அவற்றின் மீது தீராத சந்தேகமும், அதிகார மறுப்பையும் பிரதிகளில் அச்சமில்லாமல் வைக்க வேண்டும்.ஆண் பெண் ஏற்றத்தாழ்வை இதுவரை வந்துப் போன எந்த சித்தாந்தமும், தத்துவமும், கோட்பாடுகளும், தீர்த்ததாய் வரலாறோ, நிதர்சனமோ இல்லை. பெண்ணினத்தின் மீது ஒரு அறிவிக்கப் படாத போர் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது என்பதை அரூபமாகவோ, நேரிடையாகவோ பிரதிகளில் வைப்பதை தவறவிடக் கூடாது.

அனுமதிக்கப் பட்ட வெளியில் மட்டுமே பயணிக்கக் கூடிய அபத்தங்களை பெண்மொழி தாண்டிவிட்டதாக கருதினாலும், பெண்ணிய அனுபவங்களை மானுட அனுபவங்களாக மாற்றுவதற்குரிய புத்தொளிகளை, சமூகத் தணிக்கை, அரசுத் தணிக்கை, சந்தைத் தணிக்கை, சுயத் தணிக்கை யெல்லாம் தாண்டி இன்னும் இன்னும் பெண்ணியப் பார்வைப் படாத தளங்களில் பாய்ச்ச வேண்டும்.

ஆணுக்குப் பெண் மேலானவளும் அல்ல, கீழானவளும் அல்ல, வேறானவள் என்ற புள்ளிக்கு பெண்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. ஆனால் அந்த வேறானவள் என்பதைப் பன்மைப் படுத்திப் பார்ப்பது அவசியம்.இன்னும் கவிதை தரிசிக்காத பெண் உலகங்களை, அனுபவங்களைக் கண்டெடுக்க வேண்டும்.

நுகர்வு, சந்தை நவீனங்கள் ஏற்படுத்தியிருக்கும் கொடூரமான பொய்மை, ஏமாற்று, ஏற்றத்தாழ்வு, அதிகாரத்துவம் போன்றவையின் நுண் அத்துமீறல்களை, அதன் வடிவங்களை எதிர்க்க சொற்களைப் பழக்கலாம், அல்லது புதிய சொற்களை உருவாக்கலாம்.

வடிவம், கூற்றுவகை, உத்தி, அமைதி, போன்ற ஒழுங்குகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற கெட்டி தட்டிப் போன மதிப்புரையாளர்களின் அதிகாரங்களைத் தாண்டி பென்ணெழுத்துக்கான விமர்சனத்திற்கென புதிய உபகரணங்களைக்(tools) கோர வேண்டும்.

மார்க்ஸியத்திற்கு உழைப்பு எப்படியோ அப்படித்தான் பெண்ணியத்திற்கு பாலியல்பு என்றார் காதரீன் மக்கின்னென்.உழைப்பை மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகச் சுரண்டும் அமைப்பில் வர்க்க வேறுபாடு தொழிற்படுகிறது. அதே போல பெண்ணின் பாலியல்பை அமைப்பு ரீதியாக சுரண்டும் அமைப்பில் பாலின வேறுபாடு தொழிற்படுகிறது. பாலியல்பு குறித்த விவாதம் பெண்ணிய அரசியலின் மையப்புள்ளியாக பெண்ணடிமைத்தனத்தைக் கருதவில்லை. இருபாலருக்குமான பாலியல்பு சுதந்திரத்தைக் கொண்டாடுவது, உடல் வேட்கையைக் கொண்டாடுவதை அங்கீகரிப்பது, இருபாலியல்பு, ஓரினச் சேர்க்கை ஆகியவற்றை தந்தைமை சமூகத்திற்கு சவால் விடும் கண்ணிகளாக அங்கீகரிக்கும் அரசியலைப் பெண்ணெழுத்து முன்னெடுப்பது முக்கியம்.

பெண்களை இணைந்து வேலை செய்ய விடாமல் செய்யும் தந்தைமை ஆதிக்க மதிப்பீடுகளில் உள்ளார்ந்த காலனியத்திற்கு அடிமைப்படாமல், ஆண்களின், ஆண்கள் நடத்தும் நிறுவனங்களின் ஏற்புக்காக நடக்கும் போட்டா போட்டியில் பெண்கள் ஒருவருக் கொருவர் வெறுப்பும், பகையும், பொறாமையும் விட்டொழித்து கவிதா செயல்பாடுகளில், அரசியல் நடவடிக்கைகளில், பொது எதிரிக்கு முன்னாவது இணைவது உத்தமம்.

உண்மையில்,பாட்டாளிகளை விடவும், தலித்துகளை விடவும் பெண் தான் தோல்விகளையே நீண்ட கால அனுபவங்களாக, போராட்ட வரலாறாகப் பெற்றவள். தலித்துகளுக்கு சோசலிச நிர்மாண வழியோ, அல்லது இன்றுள்ள முதலாளியப் பாதையோ திறந்திருக்கின்றன. பாட்டாளி மக்களுக்கு பொதுவுடைமை மார்க்கம் ஒரு இலட்சியமாகக் காட்டப்பட்டிருக்கிறது.ஆனால் விடுதலை பெற விரும்புகிற பெண்ணுக்கு மாற்றுவழி என்ன?

கவிதை சந்தேகமின்றி அதன் பயன்பாட்டு மதிப்புக்காக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றாக இருத்தல் வேண்டும். எல்லாப் பெரும் கவிதைகளும் ஒரு சரித்திரப் பூர்வமான சாட்சீய மதிப்பீடைக் கொண்டிருக்கின்றன என்கிறார் பிரெக்ட்.

பன்னெடுங்காலங்களாக மானுடத்திற்கான ரொட்டிகளை தயாரிக்கும் பெண்ணுக்கு கவிதைகள் எம்மாத்திரம்.(நாகை மாவட்ட "கலை இலக்கியப் பெருமன்றத்தின்" முட்டம் முகாமில் வாசிக்கப்பட்ட கட்டுரை. 16.05.10)
...மேலும்

May 28, 2010

புகழ்பெற்ற பெண்கள் - அன்னி வூட் பெசண்ட் (பெண் விடுதலைக்காகப் போராடியவர்)


படிமம்:Annie Besant 1895.gif

அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besantஅக்டோபர் 11847 – செப்டம்பர் 201933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர், பேச்சாளர்.


வாழ்க்கைக் குறிப்பு

ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். அன்னி ஐந்து வயதாக இருக்கும் போது தந்தையை இழந்தார். அன்னை ஹரோ நகரில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நடத்தி வந்தார். அன்னி தனது 19வது வயதில் 1867 ஆம் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கனவருடன் இணைந்து வாழ்வது அன்னிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து போன அன்னி நாத்திகரானார். கணவர் பெசண்ட், மனைவியை கோயிலுக்குச் செல்லும் படியும், கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்கும் படியும் வற்புறுத்தினார். சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னி கணவரிடம் இருந்து 1873 இல் பிரிந்து வாழ முடிவெடுத்தார்.


படிமம்:Annie Besant.png
1880களில் அன்னி பெசண்ட்

கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் அன்னி. சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள் எழுதினார். அன்னியின் அரசியல் போக்குகணவரிடம் இருந்து அவரை மேலும் பிரித்தது. பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இறுதியாக கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். அதிகாரபூர்வமாகப் பிரிவினை கிடைக்கவில்லை. இரண்டு குழந்தைகளும் பிராங்கின் பொறுப்பிலேயே இருந்தனர்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரப் படிப்பைத் தொடர்ந்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கெதிராகப் பரப்புரையை ஆரம்பித்தார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார்.

சீர்திருத்தவாதி

"நியூமால் தூசியன் அமைப்பு" என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார் அன்னி பெசண்ட். நாடாளுமன்ற அங்கத்தினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை என்று வற்புறுத்தி கூட்டங்களில் பேசினார். "லிங்க்" என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

பிரும்மஞான சங்கம்

The Secret Doctrine என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் 1889 ஆம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்காத்தில் உறுப்பினரானார். இதனை அடுத்துமார்க்சியவாதிகளுடன் தனக்கிருந்த உறவுகளைத் துண்டித்துக் கொண்டார். 1891 இல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்துபிரும்மஞானத்தில் ஒரு முக்கிய புள்ளியானார். அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில்இடம்பெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார்.
படிமம்:Olcott Besant Leadbeater.jpg
ஒல்கொட் (இடது),லெட்பீட்டர் ஆகியோருடன் அன்னி பெசண்ட்
1893 ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். சபையின் அமெரிக்கக்கிளையின் தலைவரான வில்லியம் ஜட்ஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கக் கிளை தனியாகப் பிரிந்தது. மீதமிருந்த சபை ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் என்பவராலும் அன்னி பெசண்டினாலும் தலைமை வகிக்கப்பட்டது.

இந்தியாவில் அன்னி பெசண்ட்

இந்தியா வந்த அன்னி பெசண்ட், சென்னையில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்துபல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காசியில் சில காலம் வசித்த அன்னி பெசண்ட் அங்கு இந்து சமய விளக்கங்களை முறைப்படி பெற்றார். இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழலானார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணைவு

அன்னி இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவராதலால், ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்.1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். இதன் மூலம் அவர் அரசியலில் இழுக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைமைப் பதவி

1907 ஆம் ஆண்டில் சூரத் நகரில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து, லக்னோவில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார். ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். நாடு முழூவதிலும் அதன் கிளைகள் உருவாயின. அன்னி பெசண்ட் தனது தலைமைப் பதவிக் காலத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார்.
அன்னி பெசண்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917ஜூன் 15 ஆம் நாள் ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசண்டையும் கைது செய்தது. இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம், மற்றும் முஸ்லிம் லீக் ஆகியன சத்தியாக்கிரகம் செய்யப்போவதாக அறிவித்தது. இதனால் நிலை குலைந்த ஆங்கில அரசு செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.
டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார். லாகூரில் ஜவகர்லால் நேருவின்தலைமையில் 1929 இல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது. காங்கிரஸ் சோசலிச சார்பாக கருத்துக்களை வெளியிட்டமை அன்னி பெசண்டின் கொள்கைகளுக்கு உரியதாக இருக்க வில்லை. இதனால் அவர் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக இயக்கங்களில் சேரவில்லை. காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன்போலவே ஈடுபாடு காட்டி வந்தார். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கும் இந்திய விடுதலைக்கு ஆதரவாக பொது மேடைகளில் உரையாற்றினார். 1929 இல் "பொதுநலவாய இந்தியா" என்ற பெயரில் ஒரு அறிக்கையை எழுதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்.

இறுதிக் காலம்

தனது எண்பத்தியோராவது அகவையில் தீவிர அரசியலில் இருந்து விலகிய அன்னி பெசண்ட் இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார். பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். எண்பத்தேழாம் அகவையில்1937 ஆம் ஆண்டு ச்செப்டம்பர் 20 இல் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். அவரது மறைவிற்குப் பின்னர், அவரது நண்பர்கள்ஜே. கிருஷ்ணமூர்த்திஆல்டஸ் ஹக்ஸ்லிரோசலின் ராஜகோபால் ஆகியோர் இணைந்து கலிபோர்னியாவில் ""ஹப்பி வலி பாடசாலை"யை அமைத்தாஅர்கள்.இப்பாடசாலை தற்போது அன்னி பெசண்டின் நினைவாக பெசண்ட் ஹில் பாடசாலை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அன்னி பெசண்ட் அமைத்த சென்னை அடையாறில் உள்ள பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.
படிமம்:Annie Besant plaque.JPG
1874 லண்டனில் (Colby Road, London SE19) அன்னி பெசண்ட் வாழ்ந்த வீடு
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்