/* up Facebook

Apr 14, 2010

போர்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு விசாரிக்கப்படவேண்டும் - அருந்ததி ராய்


மீபத்தில் மாவோயி்ஸ்ட் கெரில்லாக்களையும், பழங்குடிகளையும் ரகசியமாக சந்தித்து அவர்களின் நிலைமைகள் குறித்து ஊடகங்களில் எழுதிய கட்டுரைகளைத் தொடர்ந்து இந்திய பொலிஸ்துறை விசனமநடைந்திருந்தது. இப்போது அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவரைக் கைது செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் விதி-2005 என்பதற்கமைய அவர்மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் அவர் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தெரிவித்த கருத்துக்கள் இங்கே மீள பதிவிடுகிறோம்.
ஆ-ர்

போர்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு விசாரிக்கப்படவேண்டும். அந்நாட்டில் இடம்பெறும் சம்பவங்களை பார்க்கும்போது மிகக்கொடூரமாக உள்ளது. உலக நீதியின் முன் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத பயங்கரமான மனித உரிமை மீறல்கள் சிறிலங்காவில் இடம்பெற்றுவருகின்றன என்று இந்தியாவை சேர்ந்த ஊடகவியலாளர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நிலைவரம் குறித்து அவர் வழங்கியுள்ள சிறப்பு செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இராணுவத்தினரால் காவலிடப்பட்ட முகாம்களில் தடுத்துவைக்கபட்டுள்ளார்கள். இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களை முட்கம்பிவேலிகளால் அமைந்த “கண்காணிக்கப்படும் முகாம்கள்” என்று கூறுகிறார்கள். ஆனால், அந்த முகாம்கள் இரும்புத்திரைகளால் அமைந்த முகாம்கள் என்று அழைக்கப்படவேண்டும். அங்குள்ள மக்கள் வெளித்தொடர்பு இல்லாதவர்களாக இராணுவத்தின் அடக்குமுறைக்குள் சித்திரவதைகளை அனுபவித்துவருகிறார்கள். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தாம் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதாகவும் இவை அனைத்தும் பொய் என்றும் சிறிலங்கா அரசு கருதுமானால், அந்த முகாம்களுக்கு சென்று செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும்.

சிறிலங்கா அரசின் இந்த மனித உரிமை மீறல்களுக்கு இந்தியா முழு அனுமதி வழங்கியது போல, சிறிலங்கா அரசு தொடர்பான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமா என்ற விடயம் ஐக்கிய நாடுகள் சபையில் விவாதத்திற்கு வந்தபோது இந்தியா, சிறிலங்கா அரசின் பக்கம் நின்று தொண்டாற்றியிருக்கிறது. சிறிலங்கா விவகாரத்தில் அந்நாட்டுக்கு சாதகமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் இந்தியா செய்திருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை இங்குள்ள மக்களுக்கு சிறிலங்காவில் என்ன நடைபெறுகிறது என்ற ஒரு விடயமும் தெரியாது. ஏனெனில், இங்குள்ள ஊடகங்கள் மிகக்கவனமாக சிறிலங்கா விவகாரத்தை வெளியிடுவதில்லை. இங்குள்ள மக்கள் தமது நாட்டில் சிறுபான்மையினர் அரச அடக்குமுறையால் அல்லல்படும் நாகலாந்து, காஷ்மீர் பிரச்சினை தொடர்பாகவே பேசாமல் பொறுமைகாத்து வருகிறார்கள். அப்படியிருக்கையில், சிறிலங்கா விவகாரம் அவர்களுக்கு என்ன புரியப்போகிறது?

சிறிலங்காவிலும் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளது. உண்மையில், பயங்கரவாத தடைச்சட்டம் எனப்படுவது இன்றைய உலகில் சாதாரண மக்களை பயங்கரவாதிகளாக்கும் சட்டமாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. அப்படியிருக்கையில், சிறிலங்காவின் நிலைமை நீண்டகால அடிப்படையில் பார்க்கையில் நல்லபடியாக தெரியவில்லை.

தமது கெளரவத்தை களவாடும் அரசாங்கத்தின் அராஜகத்தை அந்நாட்டிலுள்ள மக்கள் வெகுகாலம் பொறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். நிச்சயம் எழுச்சி கொள்வார்கள். அது இப்போது நடைபெறாது. சில ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும்.

இப்படியெல்லாம் பேசுவதால், நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்று எண்ணிவிடவேண்டாம். இதுதான் அமெரிக்காவின் முன்னாள் அரச அதிபர் புஷ் கடைப்பிடித்த கொள்கை. அரசாங்கத்துக்கு ஆதரவாக பேசாதவர்கள் எல்லாம் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்தான் என்பது. விடுதலைப்புலிகள் தமது நலனை மட்டும் முக்கியப்படுத்தி அனைவரதும் நலன் என்ற விடயத்தை முக்கியப்படுத்தாத பார்வை குறித்தும் எந்த மக்களுக்காக போராடினார்களோ அவர்கள் தொடர்பாக பொறுப்புடன் செயற்பட்டிருக்கவேண்டும் என்ற விடயம் குறித்தும் என்பதிலும் எனக்கு விடுதலைப்புலிகள் மீதும் விமர்சனம் உள்ளது.

ஆனால், அரச பயங்கரவாத்ததாலும் இனவாதத்தாலும் சமநீதிவழங்காத அராஜகத்தாலும் தமது மக்கள் மீது கொடூரத்தை கட்டவிழ்த்துவிட்ட ஒரு அரசாங்கத்துக்கு எதிராக அவர்கள் வன்முறையை பிரயோகித்தார்கள் என்பதை நான் நம்புகிறேன்.

நன்றி - லங்கா டைம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்