/* up Facebook

Apr 11, 2010

அங்காடித் தெருவின் கண்ணுக்குப் புலப்படாத உலகம் - மோனிகா


மிடில் சினிமா என்ற ஒரு மரபு சமீபத்தில் உருவாகியுள்ள ஒன்று. அழகியில் ஆரம்பித்து காதல், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், பூ, பள்ளிக்கூடம், நாடோடிகள் என தமிழ் சினிமாவின் பரப்பில் விரிந்துள்ள இந்த ஒரு சுகாதார சினிமா மரபு வழமையான அதன் பல விஷயங்களை மிகவும் நாசூக்காகவும் அழகாகவும் ஓரங்கட்டியுள்ளது.

வழமையான படங்களின் வாய்ப்பாடு:

நாயகன் மையப்பட்ட சினிமா கருத்தாக்கம் – சண்டைக்காட்சி மற்றும் பன்ச் வசனம். இதற்கு ஏற்கனவே சினிமாவில் காலூன்றிப்போன நடிகர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட முடியும்.
நகரத்தையும் நாகரிகத்தையும் இணைத்துப் (அறுபதுகள் முதல்) பேசக்கூடிய கருத்தாக்கங்கள். கிராமத்தைவிட நகரத்தில் வாழ்வாதாரங்கள் அதிகம் எனவும், படித்த மேல்தட்டு மக்கள் x பாமர அடித்தட்டு (சென்னை பாஷையை பேசிக்கொண்டு) கொண்ட கலவை மட்டுமே நகரம் என்ற தோற்றத்தை அளிக்கக் கூடிய படங்கள்.
கிராமத்துப் பெண்களை வெள்ளை உடை தரித்த தேவதைகளாகவும், நகரப் பெண்களை ஹீரோவை முதலில் மடியவைத்து பிறகு அவனிடம் மடிந்துபோகும் அடங்காபிடாரிகள் என்ற ரீதியிலான கதைக்கருக்கள்.
காதல் காட்சியுடன் தொடர்புள்ள பாடல்களை ஐரோப்பிய/ வெளிநாட்டு மண்ணில் போய் படம் பிடித்து காட்டுதல்
இப்படங்களிலிருந்து மாறுபட்டு உலகமயமாதலின் ஒரு உற்பத்தியான “ஷாப்பிங் மால்ஸ்” எனப்படும் பெருந்தன மளிகை/ஜவுளிக்கடைகளின் குளிர்சாதன உலகிற்குள் உள்ள ஒரு இரத்தவாடையெடுக்கும் வன்முறை உலகை வெளிச்சம் போட்டிக் காட்டிய சாதனை அங்காடி தெருவின் சாதனை. நீங்களும் நானும் இல்லை நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் எனப் பலரும் இக்கடைகளின்பால் ஈர்க்கப்பட்டவர்கள். அதே நேரம் அங்குள்ள பொருட்கள் நம் கண்களுக்குத் தெரியுமளவிற்கு அதன் ஊழியர்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

அருங்காட்சியகங்கள் முதல், வாகனங்கள், துரித உணவுக் கடைகள், அதி நவீன காப்பி கடைகள் என எல்லா அமைப்புகளையும் முதலாம் உலக நாடுகளின் கருத்தாக்கங்களின் அடிப்படையே கொண்டு பின் பற்றும் நாம் இவ்விரண்டிற்குமான வாழும் சூழலில் உள்ள இடைவெளியினை அறவே மறந்துவிடுகிறோம். கணினிப் புரட்சியினால் வானளாவி எழுந்துள்ள இந்நிறுவனங்களின் வளத்தில் கொழுத்துப் பெருகும் வாகனங்கள் செல்ல இடமின்றி நம் சாலைகளின் திக்கித் திணறிப் போகின்றன. கோயில், குளம், கடற்கரை, சடங்குகள், பூங்காக்கள்,கூட்டங்கள் என்ற இடங்களில் உற்றார் உறவினரைச் சந்தித்து வந்த நடுத்தர மேல்தட்டு சமூகம் இப்போது நகரத்தின் ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் வணிக வளாகங்களில் கூடுவதை நாகரிகமான ஒரு செயலாக்கிக் கருதுகிறது. மேலை நாடுகளில் வீடுகளை ஒரு தனிமைக்கான வெளியாகக் கருதுவதும் உணவகங்களின் நண்பர்களைச் சந்திப்பதும் அவர்களது நாகரிகத்தின் ஒரு பகுதி. அது விருந்தோம்பலுக்குப் பெயர்போன நமது மண்ணிலும் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இத்தகைய வியாபார உத்திகளுக்கு நடுவே தமது வாழ்வாதாரங்களைத் தேடும் ஒரு மூன்றாம் நிலை குடிமக்களின் கூட்டம் இந்த அங்காடிகளின் குளிரிலுக்குள்ளேயும் கூட புழுங்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஞாநி (குமுதம்:7.4.2010) தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கோ எதிர்ப்பு தெரிவிக்கவோ திராணி இல்லாதவர்களாக உள்ளனர் இவர்கள். மேலை நாடுகளைப் பின்பற்றி அமைப்புகளை உருவாக்கிச் சுகிக்கும் நமது நிறுவனங்கள் அங்குள்ளதுபோல தொழிலாளர் சமூக நலன்களை அளிக்க மறுக்கின்றன. அமெரிக்காவில் ஒரு கல்லூரி வாத்தியாரைக் காட்டிலும் ஒரு கட்டிடத் தொழிலாளியின் சம்பளம் அதிகம். தச்சுத் தொழிலாளர்களையும், உடல் ரீதியான உழைப்பில் ஈடுபடுபவர்களையும் நம் நாட்டினரைப்போல் அவர்கள் மிகவும் கீழ்த்தரமாகப் பார்ப்பதில்லை. வேலை நேரம், குறைந்த/அதிகபட்ச சம்பள வரம்புகள் போன்றவற்றில் திட்டவட்டமான நியதிகள் உள்ளன. உலகமயமாதலில் எல்லோரும் எல்லா பொருட்களையும் நோக்கி அலையவேண்டும். நீ ஒரு தேர்ந்த விவசாயியாக இருக்கலாம் என்றாலும் உன் உற்பத்திப் பொருளை ஏற்றுமதி செய்துவிட்டு நீ கேப்பைக் கூழ் குடிக்கவேண்டும். தையல்காரனாகிய நீ ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு நாளில் பனிரெண்டுமணிநேரம் கூலிக்காக தைத்துவிட்டு உனது சட்டையை ஏதாவது சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி அணிந்துகொள்ளவேண்டும். நீ எங்கே உணவருந்தவேண்டும்? எப்படிப்பட்ட உடையணிய வேண்டும்? உனது குழந்தைகளது பென்சில், பேனாக்களில் எத்தகைய கார்ட்டூன்கள் இடம்பெறவேண்டும்? உனது மனைவியின் நகப்பூச்சும் வாசனைத் திரவியமும் எந்த நிறுவனத்துடையதாக இருக்க வேண்டும்? இவை எல்லாவற்றையும் தீர்மானிக்கிற ஒரு வெளியை உன்னிடமிருந்து உறிஞ்சி உன் உள்மனத்தினுள் தனது தேர்வுகளைப் புகுத்த வல்லது இந்த உலகமயமாதல் என்ற வணிக உத்தி.

பாலியல் வன்முறையும் அதிகாரமும் இணைந்து செயல்படக் கூடிய வியாபாரச் சிறைகளை மிகவும் நாசூக்காக படம் பிடித்துக் காட்டியுள்ளது அங்காடித் தெரு. பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் போன்ற படங்களில் யதார்த்தத்தை அழுத்தமாகக் காட்டுவதற்காக வன்முறையையும் ரத்தத்தையும் கோரமாகக் காட்டத் துணிந்த காமிராவிலிருந்து அங்காடித்தெருவின் காமிரா மிகவும் மாறுபட்டுவிட்டது என்று நாம் மகிழ்ந்து நிமிரும் முன்னர் இதிலும் கடைசிக் காட்சிகளில் அவசியமே இல்லாத ஒரு அவலம் சித்தரிக்கப்படுகிறது. கண்ணாடியணிந்து வரும் கடையின் மேற்காப்பாளர் எல்லா வணிக நிறுவனங்களின் முகங்களுக்கும் பொருந்தக் கூடிய நபர். காதலை வாழ்விற்காக தொலைத்துவிட்டு தொலைந்துபோகும் முதுகெலும்பில்லாத காதலர்களுக்கு நடுவே அராஜகம் செய்யும் முதலாளியை எதிர்த்து நிற்கும் இரு உழைப்பாளிகள் வாழ்ந்துவிடக்கூடாது என்பதில் படத்தின் யதார்த்தம் குறியாக இருப்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது.

கனியாக நடிக்கும் அஞ்சலி கற்றது தமிழிலேயே நமது மனதைக் கவர்ந்தவர். இளம் வயதிலேயே தனது கிராமத்து வாழ்வினை நினைத்து மகிழ்ச்சியுறக்கூடியக் கூடியதாக உள்ளது காதலர்களின் வாழ்வு. வயதிற்கு வந்துவிடும் பெண்ணிடம் பார்ப்பனீயம் பேசும் கருணையில்லாத முதலாளிப் பெண்ணும் அதே நேரம் அவளை அணைக்கும் ஒரு சிறு தெய்வ வழிபாட்டுத் தளமும் சாதி அமைப்பையும் அப்படி நிலைகளில் பெண்களின் அவல நிலையையும் எடுத்துரைக்கும் ஒரு வெளிப்படையான கலகக் குரலை முன் வைக்கின்றன.

அடையாளம், அங்கீகாரம் போன்றவை மறுக்கப்பட்டு முகவரியில்லாதவர்களாக நகர நெரிசலில் தனது வாழ்க்கையைத் தொலைப்பவர்களில் ஒரு அங்கத்தினரை அங்காடித் தெரு தொட்டுக் காட்டுகிறது. இன்னும் இறங்க இறங்க இங்கே எத்தனையோ சாக்கடைகள் கிடைக்கலாம். ஆனால், இத்தனைக்குப் பிறகும் ரங்கநாதன் தெருவில் கூட்டம் குறையுமா?- என்பதுதான் நமது கேள்வி.
நன்றி - தூமை

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்