/* up Facebook

Apr 30, 2010

பெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” என்ற நிறுவனமே - சுமதி ரூபன்


கனேடிய விடுமுறை நாட்களில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது “குடும்பநாள்”
காதல் தினம், அம்மா நாள், அப்பா நாள், பெண்கள் தினம் இப்படிப் பல தினங்கள் அடையாளப்படுத்தப்பட்டாலும் குடும்பநாள் என்பது விடுமுறையோடு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று.

உறவுகள் என்ற பார்வையை விடுத்து, வியாபாரம் என்ற பார்வையில் இந்நாளை நாம் ஆராய்ந்தால், இனி இந்நாளுக்காக வாழ்த்து மடல்கள், அன்பளிப்புப் பொருட்கள் அறிமுகப்படுத்தப் படும். உணவகங்கள் இந்நாளில் நிரம்பி வழியும், புதிய கழியாட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும், பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் இவையனைத்தும் வியாபாரத்தந்திரங்கள்.

உறவு முறை எனும் போது தற்போதைய இயந்திர வாழ்வோட்டத்தில் குடும்பங்கள் ஒன்றாகச் செலவிட நேரம் கிடைப்பதில்லை என்பதனால் இந்நாள் குடும்பங்கள் ஒன்றாகக் கழித்து மகிழ ஒதுக்கப்பட்ட நாள். ஆண்டுக்கு ஒருநாள் பெற்றோர் பிள்ளைகள் ஒன்றாக மேசையில் இருந்து சாப்பிட்டு தமது ஓராண்டு வாழ்நாளை அலசக் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்மவர்கள் ஊரில் இருந்த குடும்ப நெருக்கம் புலம்பெயர்ந்த பின்பு இல்லாமல் போய்விட்டது என்று புலம்புகின்றார்கள். எமது நாடு, புலம்பெயர்ந்த நாடுகள் என்று இங்கே பிரித்துப் பார்த்து வாழ்க்கை முறையை நாம் கணித்துவிட முடியாது. போர் சூழலில் அடிபட்டுக்கொண்டிருக்கும் எமது நாட்டை வளமான ஒரு வாழ்க்கை முறைக் கணிப்பெடுப்பிற்குள் கொண்டு வருவது தவறு. பதிலாக இந்தியத் தமிழர்களின் வாழ்க்கை முறையை நாம் தற்போது பார்த்தோமானால் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் என்ற நிலை மாறி கணவன் மனைவி இருவரும் வேலைக்கும் போகும் நிலை உருவாகியுள்ளது. அத்தோடு கூட்டுக்குடும்பம் என்ற அமைப்பு முறையும் மருகி வருவதால் குழந்தைகளை ஆயாவுடன் விட்டுச் செல்வது, பிள்ளை பராமரிப்பு நிலையங்களில் விட்டுச் செல்வது என்ற நிலமைதான் அங்கேயும் உருவாகியுள்ளது. உலகெங்கும் தோற்றியுள்ள விஞ்ஞான வளர்ச்சி மாற்றம், அது கொண்டு வந்துள்ள பொருளாதார நெருக்கடி என்பனவே இந்த வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளது.

குடும்ப அமைப்பின் உருவத்தைப் பார்த்தால்
"ஆதிகம்யூன்" காலத்தில் (காட்டு மிராண்டிக் காலம்) தாய்வழிச் சமூகமாகவே இருந்தது. அதாவது பெண்கள் எந்த ஒரு அடக்குமுறைக்குள்ளும் ஆளாகாமல் முழுச்சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். அதன் பின்னர் தோன்றிய, அநாகரீக காலத்தில," குடும்பம் என்ற இரத்த சொந்தங்களான கட்டமைப்புக்குள் பெண்களை வீட்டு வேலைகள் விவசாயம் குழந்தை பராமரிப்பு போன்றவற்றால் வெளி உலகை விட்டு ஒதுக்கும் நிலை ஏற்பட்டது. அடுத்து "நாகரீக காலம்" என்று கூறப்படும் தற்கால அமைப்பு குடும்பம் அரசு தனிச் சொத்து போன்றவையின் தோற்றம் (இவை ஆண்களின் உருவாக்கம்) பெண்களை முற்று முழுதான அடிமைத் தனத்துக்குள் தள்ளி விட்டிருக்கின்றது. இந்தக் காலத்தில் உறவுகள் மிகச் சுருங்கி கணவன் மனைவி குழந்தைகள் (சில இடங்களில் பெற்றோர்) என்று மிகுந்த சுயநல சமுதாயமாக உருப்பெற்றிருக்கின்றது. ஒரு சமூகமாக வாழ்ந்த வாழ்க்கை மருகிக் கூட்டுக்குடும்பமாக உருப்பெற்றுப் பின்னர் தனிக்குடித்தனமாக மாறித் தற்போது தனிப்பெற்றோர்களினால் ஆன குடும்ப அமைப்பு, ஓரினச்சேர்க்கையாளர்களினால் ஆன குடும்ப அமைப்பு என்று உருப்பெற்றிருக்கின்றது. மாற்றங்கள் வேகமாகிக்கொண்டிருந்தாலும், சமூகமும் அரசும் அதனை அங்கீகரிப்பதாகப் பாவனை காட்டினாலும் இன்னமும் குடும்பம் என்றால் கணவன் மனைவி குழந்தைகள் என்ற வடிவம்தான் குடும்பம் என்ற அமைப்பின் வரையறையாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. இந்த அமைப்பில் முற்றுமுழுதாகப் பெண் அடிமைத் தனமே மேலோங்கி நிற்கின்றது.

அடக்குமுறைக்குள் பெண்கள் தமது தனித்தன்மையை இழந்து அடிபட்டுப் போகாமல் சுதந்திரமாக வாழ பல வழிகள் இருப்பதாகப் பலர் (எம்மவர்கள் - அதாவது இறுக்கமான கலாச்சாரத்திற்குள்ளிருந்து வந்தவர்கள்) சொல்லிச் செல்கின்றார்கள். குடும்ப அமைப்பு சீராக இருக்கப் புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் தேவை என்றும் வழி முறைகளையும் சொல்லிச் செல்கின்றார்கள். இவர்கள் கூறும் விட்டுக்கொடுப்பென்பது பெண்களிடம் மட்டும் எதிர்பார்க்கும் ஒன்றாகவே இன்னமும் உள்ளது.

பெண்கள் சுதந்திரமாக வாழப் பல வழிகள் இருக்கின்றன என்று விட்டு பெண்கள் தனியாக வாழலாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது. இதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் - முதலாவது காதல் தோல்வி. காதலித்தவள் என்பதால் திருமணங்கள் பொருந்தி வராமை. கடந்த காலங்களில் இந் நிலமை மிக மோசமாகவே எம் நாட்டில் இருந்து வந்தது. அடுத்து வரதட்சணையின்னை (வறுமை) இறுதியாக தமது அந்தஸ்த்திற்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று திருமணப்பேச்சை இழுத்தடித்து பெண்ணிற்கு வயது ஏறிப்போய் திருமணமாகாமல் இருந்தல் போன்ற காரணங்களால் பல பெண்கள் தனித்து விடப்பட்டுள்ளார்கள். இந்நிலை இவர்கள் தாம் தனித்து வாழ வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முடிவல்ல. எனது சமூகத்தின் சீரழிவால் ஏற்பட்ட நிலமைகள் இப்படிப்பட்ட பல பெண்களை தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். என் கேள்வி இவர்களது பாலியல் தேவைகளை எப்படி எமது சமூகம் பார்க்கின்றது. திருமணம் ஆகாதவர்கள் எனவே இவர்களுக்கு அந்தத் தேவையில்லை என்பதுதான் எனது சமூகப்பார்வையாக உள்ளது. தவறி இவர்கள் யாருடனாவது உறவுகொள்ள நேடிட்டு அது வெளியே தெரியவரும் பட்சத்தில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள்..

திருமணமாகிப் பின்னர் ஒத்துவராததால் பிரிந்த பெண்களை எடுத்துப் பார்ப்போம். கனடாவில் பல பெண்கள் இருக்கின்றார்கள். சிலர் மீண்டும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சிலர் பல ஆண்டுகளாகத் தனியே இருக்கின்றார்கள். எனவே ஒரு பெண் தானாக விரும்பி தனியான வாழ்வு முறையைத் தெரிவு செய்வதென்பது எமது சமூகத்தில் மிகக் குறைவாக இருப்தோடு, எமது சமூக அமைப்புக் காரணமாகப் பலவந்தமாகத் தனிமைக்குள் தள்ளப்படும் பெண்களின் தொகையே அதிகமாக உள்ளது. இவ்வேளையில் எமது சமூக அமைப்பிலும், அதன் சிந்தனைகளிலும் எந்த மாற்றங்களையும் கொண்டு வர முனையாமல் குடும்பம் அதன் முக்கியம், அதன் பெறுமதி என்று வெறுமனே புலம்பித்திரிவதில் எப்பயனும் இல்லை.

சமதர்ம அரசின் தோற்றத்தில் பெண்கள் பொருளாதார பலத்தை பெற்று உற்பத்தியில் ஈடுபடும் போது சமத்துவமாகவே நடத்தப்படுவார்கள, இது மாக்ஸின் கூற்று. ஆண்டுகள் கடந்தாயிற்று சமதர்ம அரசு மூழ்கி முதலாளித்துவம் தலை தூக்கி ஆட்டம் காணும் நிலையில் பெண் விடுதலை என்பது வெறும் பேச்சோடு மறைந்து விடும் ஒன்றாகிப் போய்க்கொண்டிருக்கின்றது.

தமிழ் சூழலைப் பார்க்கும் போது படிப்படியாக பெண்களின் சிந்திக்கும் திறன் பெருகி பெண்நிலைவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பது ஒரு புறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இது மிகக் குறைந்த வீதத்திலேயே இன்னும் இருக்கின்றது. இந்தப் பெண்நிலைவாதிகள் கூட ஒரே கோணத்திலான பிரச்சனைகளை மட்டுமே அடையாளம் காண்கின்றார்கள். உதாரணத்திற்கு கணவனை இழந்தவளைப் (விதவை) புறக்கணித்தல், பெண் குழந்தை வளர்ப்பில் வேறுபாடு, உயர்கல்வி, சீதணப் பிரச்சனை, பூப்புனித நீராட்டுவிழாக் கொண்டாட்டம், சமனற்ற சம்பளம், இத்யாதி,.. இத்யாதி இப்படியாப் பலராலும் ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதனால் பெண் ஒடுக்கு முறைக்காக அடித்தளங்கள் அடையாளம் காணப்படாமலே போய் விடும் அபாயம் இருக்கின்றது. இன்னும் பெரும்பாலான பெண்கள் ஆண்-பெண் அசமத்துவ நிலையை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள்.


நன்றி - கறுப்பி
...மேலும்

Apr 29, 2010

உங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது!

ஹிமான்சு குமார்
தமிழில் : தேவிபாரதி

பழங்குடிகள் வாழும் தண்டேவாடாப் பகுதியில் 17 ஆண்டுகளாகப் பணிபுரியும் மனித உரிமைச் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமான ஹிமான்சு குமார் சத்தீஸ்கரில் உள்ள நிலைமை பற்றி மும்பை பிரஸ் கிளப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஆற்றிய உரை, பத்திரிகையாளர் ஜியோதி புன்வானியால் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கட்டுரையாக நவம்பர் 21, 2009 தேதியிட்ட EPW (Economic and Political Weekly) ஆங்கில வார இதழில் வெளிவந்துள்ளது.

உண்மையான இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இளைஞர்கள் கிராமங்களுக்குச் சென்று அவற்றுக்குப் புத்துணர்வூட்ட வேண்டும் என்னும் காந்தியின் நம்பிக்கையை அடியொற்றிப் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நான் தண்டேவாடாவுக்குச் சென்றேன். ஆசிரமம் அமைப்பதற்கான நிலத்தை எனக்கு அங்குள்ள கிராமவாசிகள் வழங்கினர். ஐந்தாவது அட்டவணையின் கீழ் அதற்கான அதிகாரம் கிராமசபைக்கு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அரசு 1000 போலீசாரையும் கண்ணிவெடியை அகற்றும் வாகனங்களையும் அனுப்பி என் ஆசிரமத்தை இடித்துத் தள்ளியது...! இறுதியில் பழங்குடி மக்கள் நானும் அவர்களைப் போன்ற ஒருவன் என்று என்னை ஏற்றுக் கொண்டனர். என் வீடும் இடித்துத் தள்ளப்படலாம்!

தண்டேவாடாக் காடுகளில் அவற்றின் ஆதிக்குடியினரைப் (aboriginals) போல் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றனர் பழங்குடிகள். அங்கு இயற்கை நீதி நிலவுகிறது. காடுகளில் குற்றங்கள் இல்லை, காவல் துறையினர் இல்லை. திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நான் தண்டேவாடாவுக்குச் சென்றேன். நானும் என் மனைவியும் சுவர்களில்லாத மேற்கூரையை மட்டும் கொண்ட குடிசை ஒன்றை அங்கே கட்டினோம். என் மனைவியை அங்கே விட்டுவிட்டு ஐந்தாறு நாட்கள்வரை மத்தியப் பிரதேசம் முழுக்கச் சுற்றிவிட்டுத் திரும்புவேன். அவள் ஒருபோதும் அஞ்சியதில்லை.

2005இல் தண்டேவாடாவில் உள்ள மாவோயிஸ்ட்டுகளை அபாயகரமானவர்கள் என சத்தீஸ்கர் அரசு உணர்ந்து ‘சால்வா ஜூடும்’ என்னும் அமைப்பைத் தொடங்கியது. ‘ஒருங்கிணைந்த அமைதி இயக்கம்’ என்பது அதன் பொருள். மாவோயிஸ்ட்டுகள் பழங்குடி மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆகவே பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களைக் காலிசெய்வது எனத் தீர்மானித்தனர். பழங்குடியினரை அவர்களது கிரா மங்களிலிருந்து வெளியேற்றிக் காவல் நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்ட முகாம்களுக்குத் துரத்தினர். குண்டர் படைகளின் உதவியோடு காவல் துறையினர் பழங்குடி மக்கள்மீது தாக்குதல் நடத்தி அவர்களை முகாம்களுக்கு விரட்டியடித்தனர்.

ஆனால் பழங்குடியினர் மலை மீது, காடுகளுக்குள் இயற்கைச் சூழலில் நீரோடைகளின் அருகில் வாழ்ந்து பழகியவர்கள். ஒவ்வொரு பழங்குடி மனிதனின் வீடும் மற்றொருவருடையதிலிருந்து வெகு தூரம் தள்ளியிருக்கும். முகாம்களில் அரசு அமைத்துள்ள கொட்டகை ஒன்றிலிருந்து வெளியே வந்தால் எதிரில் ஒரு கொட்டகை இருக்கும், பின்னால் மற்றொரு கொட்டகை. பழங்குடி மக்கள் அவற்றிலிருந்து தப்பிப்போக முயன்றால், ‘தேசப்பற்றுமிக்க’ நமது படை அவர்களைச் சுட்டுக்கொல்கிறது, பிடித்துச் சிறையில் தள்ளுகிறது, பழங்குடிப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துகிறது.

ஒரு தருணத்தில் 1,000 கிராமங்களைச் சேர்ந்த 54,000 பழங்குடி மக்கள் அந்த முகாம்களில் இருந்தனர். அரசு 644 கிராமங்களைத் ‘துப்புரப்படுத்தி’யிருப்பதாகச் சொல்லிக்கொண்டது. பழங்குடியினர் 50,000 பேர் காடுகளுக்குள் ஓடிவிட்டனர். அந்தச் சமயத்தில் முதலமைச்சர் ராமன்சிங் ‘முகாமுக்கு வந்திருப்பவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள், காடுகளுக்கு ஓடிப்போனவர்கள் மாவோயிஸ்ட்டுகளுடன் இருக்கிறார்கள்’ என அறிவித்தார்.

நான் முதலமைச்சருக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினேன்-மாநிலத்தின் முதல்வராகிய நீங்கள் தம் சொந்த வீட்டில் வசிப்பதைத் தேர்ந்தெடுத்த மக்களை நக்ஸலைட்டுகள் என்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் அவர்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடுவீர்களா எனக் கேட்டேன். அவர் அதைத்தான் செய்தார். சில பழங்குடியினர் வசிப்பிடங்களின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்கள் திரும்பிவந்து தம் நிலங்களில் பயிரிட முயல்கிறார்கள். ஒவ்வொருமுறையும் அவர்கள் தம்மீது பிரயோகிக்கப்படும் கொடூரமான சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய விளைபொருட்கள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. இது போன்ற தருணங்களில் அவர்களை ஆதரிப்பவர்கள் நக்ஸலைட்டுகள்தாம். இதனால்தான் அவர்கள் நக்ஸலைட்டுகளைத் தம் நண்பர்களாகக் கருதுகிறார்கள்.

சால்வா ஜூடும் படையினருக்கு மது தேவை, கோழிகளும் இறைச்சியும் தேவை, பெண்கள் தேவை. ஒவ்வொரு நாளும் இவை அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. பழங்குடி மக்களிடமிருந்தே அவர்கள் இவற்றைப் பறித்துக்கொள்கிறார்கள். நாம் இவற்றைக் கண்டுகொள்ளாத குருடர்களாய் இருக்கிறோம். ஆனால் காவல் துறையினரை எதிர்ப்பதற்காகப் பழங்குடிகளில் ஒருவர் ஒரு கம்பைக் கையிலெடுக்கிறபோது மட்டும் நாம் கூச்சலிடுகிறோம்.

அரசு மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை பற்றிப் பேசுகிறது. ஆனால் வன்முறையைப் பிரயோகிப்பது அரசுதான். உள்துறை அமைச்சர் அமைதியைப் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் நீங்கள் எல்லோரும் தொடர்ந்து பழங்குடியினர்மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறபோது அமைதி எப்படி வரும்? பிறகு மாவோயிஸ்ட்டுகளிடம் வன்முறையைக் கைவிடுமாறு வற்புறுத்த வேண்டுமென்று நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள். தற்போதுள்ள நிலையில் பழங்குடி மக்கள் வெளியிலிருந்து வரும் ஒவ்வொரு மனிதனையும் தம் எதிரியாகவே பார்க்கிறார்கள். பழங்குடி மக்கள் தம் சக பழங்குடி மனிதனையேகூட எதிரியாகப் பார்க்கும் நிலையை அரசு உருவாக்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் அங்கு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உச்ச நீதிமன்றம் அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. எனினும் ஒரு கிராமத்தில்கூட மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒரேயொரு பழங் குடி மனிதனுக்குக்கூட இழப்பீடு வழங்கப்படவில்லை.

சால்வா ஜூடும் அமைப்பால் தண்டேவாடாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைப் பற்றி ஆராயுமாறு கடந்த 2008 ஜூன் 10இல் தேசிய மனித உரிமை ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. எங்கள் அமைப்பைச் சேர்ந்த களப்பணியாளர்கள் மூலம் பழங்குடி மக்களைத் தேசிய மனித உரிமை ஆணையக் குழுவிடம் அழைத்துச் சென்றோம். அவர்களில் சிலர் தேசிய மனித உரிமை ஆணையக் குழுவிடம் முறையிடுவதற்காக ஆந்திரப் பிரதேசம் வரை சென்றவர்கள். ஜூன் 11இல் நேந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு ஜீப்பில் வந்த சால்வா ஜூடும் உறுப்பினர்கள் அவர்களைத் தடுத்துநிறுத்தித் தாக்கினர். நாங்கள் உடனே காவல் துறைத் தலைமை இயக்குநரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தேசிய மனித உரிமை ஆணையக் குழுவைச் சந்திக்கச் சென்றது ஒரு குற்றச் செயலா எனக் கேட்டோம். அதனால் எதுவும் நடக்கவில்லை. தேசிய மனித உரிமை ஆணையத்திடம் முறையிடுமாறு மாவோயிஸ்ட்டுகளால் தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகப் பழங்குடி மக்களிடமிருந்து கட்டாய வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

காந்தியவாதியான நான் கடுங்கோபம் கொண்டேன். அதிகாரபூர்வமான உண்மையறியும் குழுவிடம் முறையிடச் சென்ற ஒரே காரணத்துக்காகப் பழங்குடியினர் என் கண்முன்னால் தாக்கப்பட்டார்கள். நாங்கள் அந்தக் கிராமத்தை விட்டுப் போவதில்லை என முடிவு செய்தேன். சால்வா ஜூடும் அமைப்பினர் அந்தக் கிராமத்தை எரிப்பதானால் முதலில் என்னை எரிக்கட்டும். தம் கிராமத்திற்குத் திரும்பிவருமாறு நாங்கள் மக்களை வற்புறுத்தினோம். ஜூலை ஒன்று அன்று நாங்கள் கிராமத்தைச் சுற்றி ஒரு மனிதக் கேடயத்தை உருவாக்கினோம். நேந்த்ராவில் ஆறு மாதங்கள்வரை தங்கியிருந்தோம். மக்களைத் திரும்ப அழைத்து வருவதற்காக எங்கள் தொண்டர்களை ஆந்திரப் பிரதேசத்திற்கு அனுப்பினோம். அவர்களுடைய முயற்சியால் மக்கள் திரும்ப அழைத்துவரப்பட்டு கிராமத்தில் தங்கவைக்கப்பட்டனர். மூன்றாண்டுகளாக அவர்களால் தம் நிலங்களை உழ முடியவில்லை. அவர்களுக்கு விதைகள் இல்லை. அவர்களுடைய கால்நடைகள் மறைந்துவிட்டன. அவர்களுடைய கிராமம் திரும்பத் திரும்ப எரிக்கப்பட்டது. நாங்கள் அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்தோம். இப்படித்தான் முதல் கிராமம் காப்பாற்றப்பட்டது. அருகாமைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு எங்களைச் சந்திக்கும் துணிவு ஏற்பட்டது. எங்கள் தொண்டர்கள் அதே பரிசோதனை முயற்சிகளை மீண்டும் தொடங்கினார்கள்.

பழங்குடியினர் எங்கள் தொண்டர்களின் பாதுகாப்புடன் லிங்காகிரி கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் என்னைச் சந்தித்தார். அது ஒரு சனிக்கிழமை பிற்பகல் 4:30 மணி. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். பாதுகாப்புப் படையினர் அனைவரும் தேர்தல் பாதுகாப்புக்குச் சென்றுவிட்டதால் எங்கள் பயணத்துக்குத் தன்னால் எவ்விதப் பாதுகாப்பும் வழங்க முடியாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நாங்கள் உங்களிடம் வேறு எப்போது பாதுகாப்புக் கோர முடியும்? அரசியல் சாசனப்படி ஒருவரைத் தன் சொந்த வீட்டுக்குப் போக முடியாதபடி யாரும் தடுத்து நிறுத்த முடியாது என நான் ஆட்சியரிடம் சொன்னேன். ஆனால் பழங்குடியினர் பாலத்தை அடைந்தபோது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். கடந்த மூன்றாண்டுகளாகப் போலீசாரால் அந்தப் பாலத்தைக் கடந்துவர முடிந்ததில்லை. நான் ஆட்சியரை அழைத்து நீங்கள் மக்களை அவர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப் போகிறீர்களா இல்லையா? எனக் கேட்டேன். இல்லையென்றால் அவர்களை உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற அவர் மறுப்பதாகவும் சொல்வேன் என்றேன். அன்று மாலை அனைவரும் பாலத்தைக் கடந்து சென்றனர்.

ஆனால் நிர்வாகம் அத்தோடு அந்தப் பிரச்சினையை விட்டுவிடவில்லை. அவர்கள் என் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். அதை விடுவிப்பதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. கிராமத்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரேஷன் பொருட்களில் பாதியைக் காவல் துறையினர் எடுத்துக்கொண்டு விட்டதை நாங்கள் கண்டுபிடித்தோம். இப்படிப்பட்ட செயல்பாடுகளைக் கொண்ட காவல் துறையை யாரால் காப்பாற்ற முடியும்!

பழங்குடியினர் மீண்டும் தம் நிலங்களில் பயிரிடத் தொடங்கினர். ஆனால் புனரமைக்கப்பட்ட அவர்களது கிராமங்களை காவல்துறை மீண்டும் தாக்கத் தொடங்கியது. நாங்கள் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறோம். இப்போது அங்குள்ள 30 கிராமங்களில் அமைதி நிலவுகிறது. இப்போது யாரும் அங்கே போக முடியும். அவற்றின் நிலையைப் பார்க்க முடியும். இந்தக் கிராமங்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுங்கள் என நாங்கள் அரசிடம் சொன்னோம். அங்குள்ள மக்கள் சௌகரியமாக இருக்கிறார்கள், ஆகவே அவர்களுக்குப் போரிடுவதில் ஆர்வமில்லை. ஆனால் அரசு அந்த மக்களை அவர்களது நிலங்களிலிருந்து விரட்டியடித்துவிட்டு அவற்றைச் சுரங்கம் தோண்டுவதற்காகத் தொழிலதிபர்களிடம் தர வேண்டும் என்னும் ஒரே நோக்கத்துடன் அரசு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது.

பிறகு பழங்குடியினர் தம் இளைஞர்கள் சால்வா ஜூடும் அமைப்பிடமிருந்து தமது கிராமங்களைக் காக்க வேண்டுமென முடிவுசெய்தனர். லத்திகள், விவசாயக் கருவிகள் எனக் கையில் கிடைத்தவற்றைக் கொண்டு அவர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். தானியங்களை மலைகளுக்குள் ஒளித்துவைக்கத் தொடங்கினர். இப்போது உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அந்த இளைஞர்களை நக்ஸலைட்டுகள் என வர்ணிக்கிறார். அவர்கள் அரசுக்கெதிராக ஆயுதமேந்தியிருப்பதாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்.

அரசுக்குத் தேவைப்படுவது அமைதி அல்ல, நிலங்கள்தாம். அரசு வெறித்தனமாக நடந்துகொள்கிறது. தான் செய்துள்ள குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. பாலியல் வன்முறை, ஆள் கடத்தல், தீவைத்தல் போன்ற கொடுங்குற்றங்கள் தொடர்பாக நாங்கள் சுமார் 1000 வழக்குகளைப் பதிவுசெய்ய முயன்றோம். ஆனால் அவை பதிவுசெய்யப்படவில்லை. அவை பொய்யான குற்றச்சாட்டுகள் என்பதால் அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்கிறார் காவல் துறைக் கண்காணிப்பாளர். ஒரு குற்றச்சாட்டு பொய்யானதா, உண்மையானதா என்பதைக் காவல் துறை முடிவுசெய்யக் கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம். குறிப்பாகக் குற்றச்சாட்டுக்குள்ளானவர் காவல் துறையைச் சேர்ந்தவராக இருக்கும்போது.

எங்களிடம் வந்த ஒரு பெண் தான் காவல் நிலையத்தில் இரண்டு நாட்கள்வரை போலீஸ்காரர்களால் கூட்டு வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்டதாகக் கூறினார். அது தொடர்பாக நாங்கள் அளித்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யக் காவல் துறைக் கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார். நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்றோம். பதிலளிக்கச் சொல்லி நீதிமன்றம் அரசைக் கேட்டது. காவல் துறைக் கண்காணிப்பாளர் தன் பதிலில், “நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் (குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சால்வா ஜூடும் அமைப்பினர்) நீங்கள் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்முறைக் குட்படுத்தினீர்களா? எனக் கேட்டோம். அவர்கள் ‘இல்லை, அந்தப் பெண் எங்களை அவதூறு செய்கிறாள்’ என்கிறார்கள். ஆக நம் காவல் துறையினர் பாலியல் வன்முறை போன்ற கொடிய புகார்களின் மீது இப்படித்தான் விசாரணை நடத்துகிறார்கள். குற்றம் சுமத்தப்பட்டவரைப் பார்த்து நீங்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டீர்களா என்று கேட்பார்கள். பிறகு அவர்கள் சொல்லும் பதிலை வைத்து முடிவெடுப்பார்கள்!

பினாயக் சென் விடுதலைக்காக நாங்கள் நடத்திய இயக்கத்தில் சால்வா ஜூடும் அமைப்புக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதையும் ஒரு கோரிக்கையாக வைத்தோம். சத்தீஸ்கர் பொதுப் பாதுகாப்புச் சிறப்புச் சட்டத் (சிலீணீttவீsரீணீக்ஷீலீ ஷிஜீமீநீவீணீறீ -றிuதீறீவீநீ sமீநீuக்ஷீவீtஹ் கிநீt)தின் கீழ்க் கைதுசெய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரினோம். எதுவும் நடக்கவில்லை. உண்மையில் இப்போது அந்தச் சட்டம் கிராமப்புற மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. “நீங்கள்தான் மாவோயிஸ்ட்டுகளுக்கு உயிர்கொடுக்கிறீர்கள், அவர்களுக்குப் பாதையமைத்துக் கொடுக்கிறீர்கள், நீங்களும் குற்றவாளிகள்தான்” என ஆட்சியாளர்கள் குற்றம் காட்டுகிறார்கள்.

“உங்கள் நீதித் துறை, நிர்வாக அமைப்பு, உங்கள் ஜனநாயகம்- நீங்கள், நீங்கள்தாம் அவற்றை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். பிறகு நக்ஸலைட்டுகளுக்குச் செய்வதற்கு அதிகமாக எதுவுமில்லை. ஒரு சமயத்தில் எழுதுவதும் பேசுவதும்கூடக் குற்றம் என்றாகிவிட்டது. பினாயக் சென் எழுத மட்டுமே செய்தார், நான் பேச மட்டுமே செய்தேன்-நீங்கள் என்ன செய்வீர்கள்? வேறுவழியின்றிப் பழங்குடி மக்கள் ஆயுதமேந்துவதைக் குற்றம் என எப்படிச் சொல்வீர்கள்?

ஜனவரியில் 19 பழங்குடி மக்கள் கொல்லப்பட்டார்கள். நான்கு பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர். நாங்கள் நீதி மன்றத்துக்குச் சென்றோம். அரசு வழக்கறிஞர் தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்துக்கொண்டிருந்தார். நீதிபதிகள் மாறிக்கொண்டிருந்தனர். சிறப்புக் காவல் படை அதிகாரிகள் மூன்று பழங்குடியினரைக் கொன்றனர். அவர்களுடைய விதவை மனைவியர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அரசு தன் பதிலில் அவர்களைக் கொன்றது நக்ஸலைட்டுகள் எனவும் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளைக் காவல் துறையினருக்கு எதிராகப் புகார் கொடுக்க நிர்பந்தித்தது அவர்கள்தாம் எனவும் சொன்னது. நீதிபதி எந்தக் கேள்வியுமில்லாமல் அதை ஏற்றுக்கொண்டார்.

சாதாரணக் கிராமவாசிகளைக் கொன்றுவிட்டு அவர்களை நக்ஸலைட்கள் என முத்திரை குத்துகிறார்கள். இவற்றையெல்லாம் மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் நாங்கள் கேட்டோம். ஆனால் பாதிப்புக்குள்ளான அந்தக் கிராமவாசிகளிடம் நீதிபதி சொல்கிறார், “நீங்கள் எந்த முகாமில் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அரசு உங்களைக் கவனித்துக்கொள்ளும்.”

செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’டின் முதல் கட்டத்தில் படையினர் ஒரு குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தினர். முதலில் அவர்கள் துப்பாக்கி முனையில் செருகப்பட்டிருந்த கத்தியைக் கொண்டு தந்தையைக் குத்தினர், பிறகு தாயை, அதற்குப் பிறகு அவர்களுடைய இளம் பெண் பிள்ளையை. அவர்களுடைய இரண்டு வயது ஆண் குழந்தையைத் தாக்கி அவனது பற்களை உடைத்தனர், நாக்கை அறுத்தனர். அவர்களுடைய கதையைப் பத்திரிகையாளர்கள் அறிந்துகொள்ள வேண்டுமென அவர்களை ராய்பூர் அழைத்துச் செல்ல முடிவுசெய்தேன். ராய்பூர் பிரஸ் கிளப் என்னிடம் முதலில் அவர்கள் நக்ஸலைட்டுகள் அல்ல என்பதற்கான நிரூபணத்தை அளிக்குமாறு கேட்டது. அரசுகூட அவர்களை நக்ஸலைட்டுகள் எனச் சொல்லவில்லையே என நான் அவர்களைக் கேட்டேன். அவர்களுக்குரிய அரங்கைப் பயன்படுத்திக்கொள்ள என்னை அனுமதிக்கக் கூடாது என அவர்கள் தீர்மானித்திருந்தனர். ஆக இப்போது பழங்குடி மக்களால் ஊடகங்களிடம் செல்ல முடியாது. அவர்கள் வேறு யாரிடம் செல்வார்கள்?

அனைத்துப் பாதைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுவிட்டன. காவல் துறை அவர்களைத் தாக்குகிறது. அரசியல் கட்சிகள் - அது காங்கிரஸாயினும் பிஜேபியாயினும் - சால்வா ஜூடும் பக்கம் இருக்கிறார்கள். நீதிமன்றங்கள் அவர்களது குறைகளைக் கேட்கத் தயாராக இல்லை. ஊடகங்கள் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. மாவோயிஸ்ட்டுகளைத் தவிர அவர்கள் வேறு யாரிடம் செல்வார்கள்? காவல் துறை அவர்கள்மீது தாக்குதல் தொடுக்கும்போது அவர்களைக் காப்பாற்றுவது மாவோயிஸ்ட்டுகள்தாம். உங்களுக்கு அமைதி தேவையென்றால் நக்ஸலைட்டுகளின் செல் வாக்குப் பெருகுவதற்கான மூலகாரணிகளுக்கு முடிவுகட்ட வேண்டும்.

எத்தகைய நிலைமையின் கீழ் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர முடியுமோ அத்தகைய நிலைமையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் அந்தச் சூழலில்தான் காவல் துறையினர் வயதான பழங்குடிப் பெண்களின் முலைகளை அறுக்கிறார்கள், வயதான ஆண்களைக் கத்தியால் குத்துகிறார்கள், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற ஒரு சூழலில் கிராமத்தவர்களின் கைகளில் சிக்கிக்கொள்ள நேரும் போலீசாரின் கதியைக் கற்பனை செய்து பாருங்கள். அரசால் வன்முறையை முடிவுக்குக்கொண்டுவரக்கூடிய நிலைமையை உருவாக்க முடியாது. அரசியல் கட்சியினர் நக்ஸலைட்டுகள் பெற்றுள்ள செல்வாக்குக்கான காரணங்களை யோசிக்க வேண்டும். ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு ஏன் செல்வாக்கு இல்லை என்பதை யோசிக்க வேண்டும். பழங்குடி இனத்தவர் ஒருவர் காவல்நிலையத்திற்குச் சென்று ஒரு பட்வாரி தன் பணத்தைப் பிடுங்கிக்கொண்டதாகப் புகார் கொடுத்தால் போலீஸ் அதை விசாரிக்க முன்வருமா?

உங்களுடைய காவல் துறை ஏழைகளின் வாழ்வுரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் துப்பாக்கியை உயர்த்துகிற நாளில் நக்ஸலிசம் முடிவுக்கு வரும். என் குழந்தையின் நடத்தையில் கோளாறு காணப்பட்டால் அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க முற்படமாட்டேனா? ஏன் இவ்வளவு பெரிய அளவிலான வன்முறை நிலவுகிறது என மாவோயிஸ்ட்டுகளிடம் நம் பிரதமரால் கேட்க முடியாதா என்ன? ஒரு பெரிய போராட்டம் காத்திருக்கிறது என நக்ஸலைட்டுகள் பழங்குடி மக்களைப் பல பதிற்றாண்டுகளாகத் தயார்படுத்திவந்திருக்கிறார்கள். ஒரு நாள் நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மரத்தடியில் படுத்திருந்த ஒரு முதியவர் என்னைக் கேட்டார், “Ladaai hogi, na?” “சண்டை நடக்கும், இல்லையா?”

அதனால்தான் நான் இந்தப் பகுதிக்குள் நுழைந்துவிடாதீர்கள் என மைய நீரோட்ட அரசியல்வாதிகளிடம் சொல்கிறேன். பழங்குடி மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள், நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் என அவர்களிடம் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இங்கே உள்ள பழங்குடியினர் உத்திரப் பிரதேசத்திலுள்ளவர்களைப் போன்றவர்கள் அல்ல. அவர்களால் உங்கள் மேல் பாய்ந்து உங்கள் பாதுகாவலர்களிடமுள்ள ஏ.கே. 47 துப்பாக்கிகளைப் பறித்துக்கொண்டுவிட முடியும். ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட துருப்புகளின் எண்ணிக்கையைவிட ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ நடவடிக்கையில் கொல்லப்படும் துருப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். ஆபரேஷன் கிரீன் ஹண்ட் நடவடிக்கையை அவர்கள் செப்டம்பரில் தொடங்கினார்கள். ஒரேயொரு மாவோயிஸ்ட்கூட இதுவரை கொல்லப்படவில்லை. ஆனால் கோப்ரா (COBRA) படையைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். துருப்புகளால் பழங்குடி இனத்தின் முதியவர்களையும் குழந்தைகளையுமே கொல்ல முடிந்திருக்கிறது. ஒரு 6 வயதுக் குழந்தை குத்தப்பட்டிருக்கிறது. 85 வயது முதியவர் ஒருவர் துப்பாக்கி முனையால் குத்தப்பட்டு அவரது படுக்கையிலேயே கொல்லப்பட்டார். காவல் துறை ரத்தம் சிதறும் படுகொலைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. பிறகு அரசு கேட்கிறது, “நீங்கள் அரசின் பக்கம் இருக்கிறீர்களா, நக்ஸலைட்டுகளின் பக்கம் இருக்கிறீர்களா?” நான் பகிரங்கமாகச் சொல்கிறேன், நாங்கள் உங்கள் காவல் துறையுடன் இல்லை. உங்களால் கொல்லப்பட்ட பழங்குடி மக்களுடன் இருக்கிறோம்.

வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் எப்படி நக்ஸலிசத்தின் செல்வாக்கைக் குறைக்க முடியும் என்பதைப் பற்றி திக் விஜய் சிங் ஒரு கட்டுரை எழுதினார். நான்கு கோரிக்கைகளை முன்வைக்கும்படி நான் அவருக்குக் கடிதம் எழுதினேன். உங்கள் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் அவற்றில் முதலாவது. 700 கிராமங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. கிராமவாசிகள் அவற்றிலிருந்து வெளியே போக முடியாது. வெளியாட்கள் யாரும் உள்ளே வர முடியாது. ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் சந்தைக்குச் சென்றால் அங்குள்ள சிறப்புப் போலீஸ் படை தன்னைப் பிடித்துக்கொள்ளும் என்பதை அறிந்துள்ள ஒரு பழங்குடிப் பெண் 85 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வேறொரு சந்தைக்குச் செல்கிறார். போக இரண்டு நாட்கள் திரும்பி வர இரண்டு நாட்கள் என அவரது சந்தைப் பயணம் நான்கு நாட்களை எடுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு வாரத்திலும் நான்கு நாட்களை நடப்பதில் கழிக்கிறார் அவர். நான் அவரிடம் ஏன் ஒரு மாதத்திற்கான அரிசியை மொத்தமாக வாங்கி வந்துவிடக் கூடாது எனக் கேட்டேன். அதற்கு அவர், “நாங்கள் கொண்டு செல்லும் மாஹுவா எவ்வளவு விலைக்குப் போகிறதோ அவ்வளவுக்குத்தான் எங்களால் அரிசி வாங்க முடியும். அது 20 ரூபாய்க்கு விற்றால் எங்களால் இருபது ரூபாய் மதிப்புள்ள அரிசிதான் வாங்க முடியும்” என்றார்.

நிலைமை இப்படி இருப்பதற்குக் காரணம் அரசுதான், நக்ஸலைட்டுகள் அல்ல. நக்ஸல் ஆதரவுப் பகுதிகளை ‘விடுதலை பெற்ற பகுதிகள்’ என வகைப்படுத்துவது அரசின் தந்திரங்களில் ஒன்று. அதன் மூலம் அரசு செயல்பட அனுமதிக்கப்படவில்லை எனப் புகார் கூறுவது அரசுக்கு முடியும். அரசின் செயல்பாடுகளை முடக்கியிருப்பது சால்வாஜூடும்தான். அங்கே அரசின் எந்த நிறுவனமும் செயல்படவில்லை, சட்ட அதிகாரமும் நடப்பிலில்லை. அரசியல் சட்டத்தின் 21ஆம் பிரிவின் வாழும் உரிமைகூட அங்கே இல்லை. பழங்குடிகள் வேட்டையாடப்படுகிறார்கள். வன்முறை சில தருணங்களில் அச்சத்திலிருந்தும் கையறுநிலையிலிருந்தும் உருவாகிறது.

முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ள இக்கிராமங்களில் அரசு எல்லாவற்றையும் இழுத்து மூடியிருக்கிறது. அங்கு எதுவுமே இல்லை. பள்ளிகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை. அங்கிருப்பவர்கள் அனைவரும் நக்ஸலைட்டுகள் என அரசு உயர் நீதிமன்றத்தில் சொல்கிறது. நக்ஸலைட்டுகள் சூறையாடுவதன் காரணமாக அப்பகுதிகளுக்குப் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை எனச் சொல்கிறது காவல் துறை. ஆகையால் கடந்த ஐந்தாண்டுகளாக அப்பகுதிக்கு அரிசி கொண்டுசெல்லப்படவில்லை. அதனால் அங்குள்ள ஒரு நக்ஸலைட்டாவது பசியால் செத்து விட்டிருக்கிறாரா என்ன? “நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக நாங்கள் காடுகளுக்குச் சென்றால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை எங்களை அடிக்கிறது என எங்களிடம் சில மருத்துவ அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆசிரியர்கள் சென்றாலும் அடிக்கிறார்கள். அவர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள். நீங்கள் காடுகளுக்குள் போனால் கடுமையாகத் தாக்கப்படுவீர்கள்” என்கிறார்கள். எதற்காக நாங்கள் தாக்கப்பட வேண்டும்? உங்களுக்கு நக்சல்களோடு தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். நாங்கள் உங்களைப் போல ஆயுதங்களுடன் போவதில்லை என நான் அவர்களிடம் சொல்கிறேன்.

பழங்குடியினரின் நிலங்களை எடுத்துக்கொள்வதற்குப் பழங்குடியல்லாதவர்களுக்கு தண்டேவாடா ஆட்சியர் மகிழ்ச்சியுடன் அனுமதி தருகிறார். அரசு தானே நிலத்தைப் பறிமுதல் செய்து அதை மற்றவர்களுக்கு வழங்குகிறது. ஆனால் மாவோயிஸ்ட்கள் அங்கே இருப்பதால் நிலங்களைப் பெற்றுக்கொண்ட அந்த நிறுவனங்களால் தம்முடைய தொழில் திட்டங்களைத் தொடங்க முடியவில்லை.

நக்ஸலைட்டுகள் மோசமானவர்கள், ஆனால் அரசு மிக நியாயமானது என்பதுதான் நமக்குத் தொடர்ச்சியாகக் கிடைத்துவருகிற சித்திரம். தண்டேவாடாவில் உள்ள பழங்குடி மக்களைக் கேட்டுப் பாருங்கள். நான் சில அரசியல்வாதிகளிடம் சொன்னேன் நீங்கள் மாவோயிஸ்ட்டுகளிடம் பேச வேண்டாம் நக்ஸலைட்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என நீங்கள் சொல்கிறீர்களே அந்தப் பழங்குடி மக்களிடம் பேசுங்கள் என்றேன். நீங்கள் ஜனநாயகரீதியில் அவர்களால் தேர்ந்தெக்கப்பட்ட தலைவர்கள். ஒருவேளை பொதுமக்கள் உங்களை நேசிக்கலாம். நீங்களும்கூட அவர்களை நேசிக்கக் கூடும். மக்கள் உங்களை நேசிப்பதைக் கைவிட்டுவிட்டு நக்ஸலைட்டுகளை நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால் அது ஏன் என்று யோசியுங்கள்.

அஹிம்சையே என் வழி. கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகரீதியிலான நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காகவும் மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள், அரசின் நலத்திட்ட உதவிகள், மக்களின் உரிமைகள் ஆகியவற்றிற்காக எப்படிப் போராடுவது என்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்க முயன்று வருகிறேன். நக்ஸலைட்டுகள் துப்பாக்கிகளை எடுத்துள்ளதால் அங்கே சென்று அஹிம்சையைப் பலப்படுத்த விரும்புகிறோம். அரசின் செயல்பாடுகள் இப்படியிருக்கின்றன. அவர்கள் உங்களை ஓட ஓட விரட்டுகிறார்கள். துன்புறுத்துகிறார்கள். பிறகு உங்களை நக்ஸலைட் என்று அழைக்கிறார்கள்.

நக்ஸலைட்டுகளைப் பற்றி வினோபா பாவே சொன்னார், “இந்த இளைஞர்கள் ஏழைகளின் மீதான அன்பினால் தூண்டப்பட்டவர்கள். நான் அவர்களை வணங்குகிறேன்” அவர் பூதான இயக்கத்தைத் தொடங்கியபோது நக்ஸலைட் இயக்கத்தை 30 ஆண்டுகள் பின்னடையச் செய்தார். நான் தண்டேவாடாவில் இருந்துவரும் இந்த 17 ஆண்டுகளில் நக்ஸலைட்டுகள் எப்படிப் பழங்குடி மக்களிடையே வேலைசெய்துவருகிறார்கள் என்பதைப் பார்த்துவருகிறேன். காட்டிலிருந்து ஒரு கட்டு விறகு எடுத்துச்செல்லும் பழங்குடிப் பெண்ணை வன அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்து தண்டிக்கிறார்கள். பழங்குடிகள் மூன்று ரூபாய்த் தண்டத்தொகையைச் செலுத்தத் தவறினால் அவர்களிடமிருந்து 300 ரூபாயைப் பறித்துக்கொள்கிறார்கள்.

பிறகு 1980களில் நக்ஸலைட்டுகள் அங்கு வந்தார்கள். அவர்கள் வனக் காவலர் ஒருவரைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிவைத்துப் பழங்குடியினரை விட்டு அடிக்கச் சொன்னார்கள். தங்களுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதைப் பழங்குடி மக்கள் உணர்ந்த முதல் தருணம் அது. தவறு செய்யும் வன அதிகாரிகளைத் தண்டித்திருந்தால் அரசு அங்கு வலுவடைந்திருக்கும். அவர்களுடைய கானக விளைபொருட்களுக்கு அரசு ஒருபோதும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ததில்லை. ஆனால் நக்ஸலைட்டுகள் அதைச் செய்தார்கள்.

பழங்குடி மக்கள் ஒருபோதும் வன்முறையாளர்களாக இருந்ததில்லை. ஆனால் எப்போதெல்லாம் அவர்கள் தம் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்களோ அப் போதெல்லாம் அரசு போலீசை அனுப்பியது. நக்ஸலைட்டுகள் என் மீது ஒருபோதும் வன்முறையைப் பிரயோகிக்காதது ஏன்? வாருங்கள் குருஜி, உட்காருங்கள் என அவர்கள் என்னைக் கட்டிலில் அமரச் சொல்கிறார்கள். தொடக்கத்தில் மாவோயிஸ்ட்டுகள் தம் செல்வாக்குப் பகுதியில் எந்த அரசுத் திட்டங்களும் செயல்படக் கூடாது என அறிவித்தார்கள். ஆனால் நாங்கள் எங்கள் பணிகளைத் தொடர்ந்தோம். இப்போது அவர்கள் “நாங்கள் ஹிமான்சுவின் பணிகளில் குறுக்கிடமாட்டோம், அவருக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை” என அறிவித்திருக்கிறார்கள்.

மக்கள் காவல் துறைக்கு எதிரான, அப்பாவி மக்களுக்கெதிரான மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் வன்முறையைச் சரியாகப் புரிந்துகொள்ள அதன் ஆழங்களுக்குச் செல்ல வேண்டும். ஒரு ஷிறிளி கொல்லப்பட்டால் அப்பாவி ஒருவர் கொல்லப்பட்டுவிட்டதாக அரசு சொல்கிறது. ஊடகங்கள் அவற்றைச் செய்தியாக்குகின்றன. பழங்குடியினரில் ஒருவர் கொல்லப்படும்போது மாவோயிஸ்ட் தலைவர் கொல்லப்பட்டதாக அரசு சொல்கிறது. பழங்குடியினர் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனிதன் நம் மறைவிடங்களை போலீஸிடம் காட்டிக்கொடுத்து விடுவான் என்று அவர்கள் நினைக்கும்போது . . . நீங்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும்போது, உங்கள் வீட்டைவிட்டு நீங்கள் துரத்தப்படும் போது, காவல் துறையினரிடமிருந்து வெகுதூரம் விலகி, அவர்களால் கண்டுபிடிக்க முடியாத ஓர் இடத்தில் நீங்கள் வாழ நேரும்போது, யாராவது ஒருவர் வருகிறார், அவர் உங்களுடைய இருப்பிடத்தைப் போலீசாருக்குக் காட்டிக்கொடுத்து விடுவாரோ என்னும் சந்தேகம் உங்களுக்கு ஏற்படும்போது . . . ஒருமுறை எனக்கே அப்படியொரு நிலை ஏற்பட்டது.

காட்டில் நடந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்பிழைத்தவர்களை மீட்க உதவும்படி அரசு என்னிடம் கேட்டுக்கொண்டது. காடுகளுக்குள் செல்ல அவர்களுக்குப் பயம். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் பதற்றமுற்றிருந்தனர். பேச்சு வார்த்தைக்குப் பின் நான் சென்றேன். ஆனால் காவல் துறை என்னை ஏமாற்றியது. அளித்திருந்த வாக்குறுதிக்கு மாறாக அவர்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர். அவர்கள் தம் வழக்கமான பாணியில் வழியில் தென்பட்ட கோழிகளையும் மது வகைகளையும் சூறையாடத் தொடங்கினர். காவல் துறையினரை நான்தான் அழைத்து வந்திருக்கிறேன் என மாவோயிஸ்ட்டுகள் கருதினர். என்னை ஒரு மரத்தில் கட்டிவைத்தனர். உண்மை நிலை தெரியாததால் அவர்கள் என்னைக் கொல்லவும் வாய்ப்பிருந்தது. தம்மை ஏமாற்றும் சகாக்களையேகூட அவர்கள் விட்டுவைத்ததில்லை.

நான் அந்தக் கிராமத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். அவர்களில் யாருமே நாற்பது வயதைக் கடந்தவர்கள் அல்லர்-அதற்கு மேல் அவர்கள் வாழ்ந்ததும் இல்லை. குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச் சத்துப் பற்றாக்குறை இருந்தது. ஒரு எட்டு வயதுச் சிறுவன் என் பாதுகாவலுக்கு இருந்தான். அவன் ஒரு குல்லாய் அணிந்திருந்தான். கையில் விசில் இருந்தது. அவை அவனைப் பெருமிதம்கொள்ளச் செய்திருந்தன. நான் அவனிடம் காவல் துறையினர் அந்தக் கிராமத்துக்குக் கடைசியாக எப்போது வந்தார்கள் எனக் கேட்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு என அவன் சொன்னான். அவர்கள் என்ன செய்தார்கள்? 40 வீடுகளைக் கொளுத்தினார்கள், மூன்று பேரைக் கொன்றார்கள், அங்கு நின்றுகொண்டிருந்த பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்கள். பைலாடிலாக்குக்குச் சற்றே பின்புறம் உள்ள ஒரு கிராமம் அது. நிலக்கரிப் புழுதியால் மூடப்பட்டிருந்தது அக்கிராமம். அங்கு பள்ளிக்கூடம் இல்லை. வளர்ச்சியின் இந்திய உதாரணம் இது.

வன்முறையைக் கைவிடச் சொல்லி நீங்கள் மாவோயிஸ்ட்டுகளிடம் சொல்லுங்கள் என அரசு ஜனநாயக உரிமைக்கான அமைப்புகளிடம் கேட்கிறது. ஆனால் முதலில் உங்கள் படைகளிடம் வன்முறையைக் கைவிடச் சொல்லுங்கள் என நாங்கள் அரசிடம் சொல்கிறோம். உங்கள் காவல் துறைக்கெதிராக மனித உரிமை அமைப்புகள் கொடுத்துள்ள புகார்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யுங்கள். அதைக்கூடச் செய்யாமல் அவர்களை வன்முறைப் பாதையைக் கைவிட வற்புறுத்திக்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் என்ன சொல்ல வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? நாங்கள் அங்கே வாழ்கிறோம். எங்களுக்கு அங்குள்ள நிலைமை தெரியும். வெளியிலிருந்து பார்க்கும்போது சில நிகழ்வுகள் பயங்கரமானவையாகத் தோற்றமளிக்கும். ஷிறிளிக்களின் கும்பல் ஒன்று கிராமங்களை ஒன்றன்பின் ஒன்றாக எரித்துக்கொண்டிருந்தது. கிராம மக்கள் இந்தக் கும்பலைச் சுற்றி வளைத்துக் கொன்றனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் எந்த ஓர் அரசியல் தலைவரும் தண்டே வாடாவுக்கு வந்து பழங்குடி மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் என்ன எனக் கேட்டதில்லை. ஆகவே நான் பழங்குடி மக்களைத் தில்லிக்கு அழைத்துச் செல்ல நினைத்தேன். அங்கே பெரிய கவனம் கிடைக்கும் என எதிர்பா£ர்த்தேன். காயமுற்ற பழங்குடி மக்களைத் தில்லியின் நீஷீஸீstவீtutவீஷீஸீ நீறீuதீக்கு அழைத்துச் சென்றேன். ஒன்றுமே நடக்கவில்லை. நகரவாசிகளின் தற்போதைய நிலை இதுதான். கிராமங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. சௌகரியமாக வாழ்பவர்கள்தாம் அமைதியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்களது சௌகரியமான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அமைதி ஏற்பட வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையானது நீதி மட்டுமே. வினோபா பாவே சொன்னார், “எங்கே நீதி இல்லையோ அங்கே அமைதியும் நிலவ முடியாது” ஆனால் அரசு நீதியைப் பற்றிப் பேசுவதில்லை.

ஏன் லட்சக்கணக்கான குடிமக்கள் ஆயுதமேந்தியிருக்கிறார்கள்? நடுத்தர மக்களாகிய நம்மால் அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் நகரங்களில் வாழ்கிறோம். காவல் துறை நமக்காக இருக்கிறது. அரசு நமக்காக இருக்கிறது. நாம் ஒரு பக்கச் சார்புடையவர்களாக இருக்கிறோம். மறுபக்கத்தில் இருப்பவர்களுக்குக் காவல் துறை இல்லை, அரசு இல்லை. அவர்களுக்குச் சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லை. அவர்கள்தாம் ஆயுதம் தாங்கியிருப்பவர்கள். பல ஆண்டுகளாக அவர்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நிர்வாக அமைப்பு இருக்கிறது. சிலர் அந்த அமைப்புக்கு வெளியே இருத்தப்பட்டிருக்கிறார்கள். இதுதான் அவர்கள் போராட்டத்திற்குக் காரணம். பூமியின் இந்த நிலங்கள் யாருடையவை என்னும் ஒரு கேள்வி எழுமானால் அவை எல்லோருக்குமானவை எனப் பதில் கிடைக்கலாம். எனினும் நிலம் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு மிகக் குறைவாகவும் இருக்கிறது என்பதே எதார்த்தம். நீங்கள் நகரத்தில் இருக்கிறீர்கள், அதனால் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. நீங்கள் பிராமணர், அதனால் உங்களிடம் அதிக நிலம் இருக்கிறது, நீங்கள் படித்தவர், அதனால் உங்களிடம் அதிக நிலம் இருக்கிறது. மும்பையின் மரைன் டிரைவில் பிறந்த ஒரு குழந்தை தாராவியில் வசிக்கும் ஒரு குழந்தையின் வீட்டை இடிக்க முடியுமென்றால் அது ஏன் தலைகீழாக நடக்கக் கூடாது?

சமத்துவமின்மை நம் அமைப்பிற்குள்ளேயே இருக்கிறது. இயற்கை வளங்களின் மீது யாருக்கு அதிக அதிகாரம் என்பது குறித்து நிலவும் கருத்தியல் நம் மதிப்பீடுகளின் ஒரு பகுதியாகியிருக்கிறது, பிறகு அரசியல் அமைப்பின் பகுதியாகியிருக்கிறது. மேற்குறிப்பிட்ட இரண்டுமே நம் பொருளாதார அமைப்பால் பேணப்படுபவை. இந்த நம் சமூக அமைப்பின் அடிப்படைகள் இதன்படியே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புமுறைதான் ஏழைகளை ஏழைகளாகவும் பணக்காரர்களைப் பணக்காரர்களாகவும் வைத்திருக்கிறது. நாம் இந்த அமைப்பு குறித்து திருப்தியடைந்திருக்கிறோம். ஆனால் இந்த அமைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் நிலை என்ன? அவர்கள் இந்த அமைப்பு முறையை மாற்ற விரும்புகிறார்கள். இப்போது நடந்துகொண்டிருக்கும் போராட்டம் அமைப்புரீதியான வன்முறைக்கு எதிரானது. இந்த அமைப்பு முறை மாறாமல் எல்லோரும் சமம் என்னும் நிலை உருவாகாமல் இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வரமாட்டா.

விரக்தியுற்ற மனிதன் எவனோ அவன் போராடுவான். இது ஏழைகளின் போராட்டம். நக்ஸலைட்டுகள் அவர்களுக்கு அடையாளமாக மட்டுமே இருக்கிறார்கள். மார்க்ஸ் இல்லாமலிருந்திருந்தால், காந்தி இல்லாமலிருந்திருந்தால் அவர்கள் போராட மாட்டார்களா? போராடுபவர்களுக்கு மாவோயிஸ்ட்டுகளோ காந்தியவாதிகளோ தேவையில்லை. ஆனால் சில தருணங்களில் வினோபா, சில தருணங்களில் காந்தியவாதிகள் அல்லது மாவோயிஸ்ட்டுகள் அவர்களது போராட்டங்களில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். இந்தப் போராட்டங்களை ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கிவிடலாம் என மத்திய அரசு கருதுமானால் அது தவறான அணுகுமுறை. சில தருணங்களில் உச்சபட்சமான அடக்குமுறைகள் போராடுபவர்களுக்கு வலுவூட்டும்.

அமைதி வேண்டும் என மத்திய அரசு நினைக்குமானால் அதை அவர்களால் ஒரே வாரத்தில் அடைய முடியும். அவர்கள் பழங்குடியினரிடம் சென்று அவர்களுக்கு மகிழ்ச்சியை வழங்க வேண்டும். மூடப்பட்டிருக்கும் அங்கன்வாடிகளை, சுகாதார மையங்களை, பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் துன்பத்துக்கு இரையாக்குவதன் மூலம் நீங்கள் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுவிடலாம் என நினைக்கிறீர்கள். நீங்கள் நெருப்பின் மீது கம்பளியைப் போர்த்தினால் கம்பளி பற்றியெரியும். நீங்கள் உங்களுடைய சிளிஙிஸிகி படையை அனுப்புகிறீர்கள், அவர்கள் படுக்கையில் இருக்கும் ஒரு முதியவரைக் குத்திக் கொல்கிறார்கள். நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள் என மாவோயிஸ்ட்டுகள் சொன்னார்களோ அப்படியே நடந்துகொள்கிறீர்கள். அரசு என்பது ஒடுக்குமுறைக் கருவி என அவர்கள் நீண்டகாலமாகப் பழங்குடி மக்களிடம் சொல்லி வந்திருக்கிறார்கள்.

இப்போது உலகம் முழுவதும் ஏழைகள் சுமையாக, அடிப்படை வளங்களைக் குறைப்பவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இப்போது அவர்களை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டு எஞ்சியிருப்பவர்கள் பூமியின் வளங்களுக்குச் சொந்தக்காரர்களாகிவிட வேண்டும்! பழங்குடி மக்களே மிகப் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அரசு அவர்களை இனப்படுகொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இந்தத் திசையில்தான் நாகரிக சமூகம் சென்றுகொண்டிருக்கிறது. உங்களால் லட்சக்கணக்கான மக்களைக் கொல்ல முடியுமா? நீங்கள் நிச்சயம் அதற்கு முயல்வீர்கள். ஆனால் அவர்கள் கிளர்ந்தெழுந்து உங்களைக் கொல்ல முற்பட்டால் நீங்கள் உங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.

மூன்று வகையான ஏழைகள் இருக்கிறார்கள். (1) பணக்காரர்களான உங்களை அண்டிப் பிழைக்கும் பலூன் வியாபாரிகள், வீட்டு வேலைக்காரர்கள், கட்டுமானப் பணியாளர்கள் (2) படிப்பறிவற்றவர்களாக, தாழ்த்தப்பட்ட சாதியினராக இருப்பதால் ஒருபோதும் தம்மால் வசதி படைத்தவர்களாக ஆக முடியாது எனக் கருதுபவர்கள் (3) நீங்கள் உங்கள் வசதியைப் பெருக்கிக்கொள்வதற்காக யாருடைய நிலங்களை ஆக்கிரமித்திருக்கிறீர்களோ அந்த, முன்பு தங்களுக்குரிய காடுகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடி மக்களைப் போன்றவர்கள். அதனால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நீங்கள் சிதம்பரத்திடம் ஓடுகிறீர்கள். முதலிரண்டு வகையினரும் மூன்றாவது வகையினரோடு சேரும்போது நீங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிடுவீர்கள். இதில் எங்களுடைய நிலைப்பாடு என்ன? வினோபா சொல்வார், “அநீதியை ஏற்றுக்கொள்வது தவறு. அவ்வாறு பணிந்துபோவதற்கு எதிராக ஏழைகளை நான் தூண்டிவிடுவேன்” சத்தீஷ்கரில் இப்போது நடந்துகொண்டிருப்பவை மத்தியத் தர வர்க்கத்தின் ஒப்புதலற்று நடப்பவையல்ல.

வன்முறையின் விதையை, அபாயத்தின் விதையை நீங்கள்தான் தூவுகிறீர்கள். சால்வா ஜூடும் என்னும் அமைப்பு தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை வெறும் 5000 மட்டுமே. அது தோற்றுவிக்கப்பட்ட பிறகு அவர்களது எண்ணிக்கை 1,10,000 ஆக வளர்ந்திருக்கிறது. அதாவது 22 மடங்கு அதிகமாக வளர்ந்திருக்கிறார்கள். ஆபரேஷன் கிரீன் ஹண்ட்டின் முடிவில் உயிரோடு எஞ்சியிருக்கும் ஒவ்வொரு பழங் குடியும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முழுநேர ஊழியராக மாறுவார். மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களது ஆளுகைப் பரப்பும் அதிகரிக்கும். அவர்கள் மும்பைக்கும் தில்லிக்கும் வருவார்கள். நம் பாதுகாப்புப் படைகளில் பணிபுரியும் இளைஞர்களுக்காக நான் வருந்துகிறேன். எந்த வழியிலும் அவர்களுக்கு இழப்புதான். துணை ராணுவப் படைகளிலும் காவல் துறையிலும் சேரவில்லையென்றால் அவர்கள் பட்டினியால் மடிய நேரிடும். அவற்றில் சேர்ந்தால் அவர்கள் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்படுவார்கள். கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக அவர்களை ஏன் மரணத்தை நோக்கித் தள்ளுகிறீர்கள்? இளைஞர்களில் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினரோடு சண்டையிடச் செய்வதன் மூலம் கார்ப்பரேட்டுகள் தம் செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றன.

பஸ்தாருக்கு வாருங்கள் என நான் உங்களிடம் வேண்டுகிறேன். அங்குள்ள பழங்குடி மக்களோடு இணைந்து நில்லுங்கள்.

...மேலும்

Apr 28, 2010

பள்ளிக்கூட மாணவி சஹானா தற்கொலை


பரீட்சையில் உயர்கல்விக்கு தகைமை பெறாததால் இலங்கை கம்பொலை பகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சஹானா என்கிற இந்த மாணவியின் வயது 17. இவர் ஒரு இரைட்டையர். இரட்டையரான இவரது சகோதரி பரீட்சையில் தேர்ச்சிபெற்று உயர்கல்விக்கு தகுதிபெற்றுள்ளார்.

இவரது பெற்றோர்கள் சஹானாவை எதிர்காலத்தில் ஒரு மருத்துவராகவரவேண்டுமென்கிற கருத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் பெறுபேறுகள் வந்தவுடன் வீட்டில் நிகழ்நத விவாதத்தினால் நொடிந்ததபோன சஹானா தற்கொலைசெய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார். பெற்றோர் வீட்டிலிருந்து வெளியேறிய வேளையில் அறைக்கதவுகளை மூடிவிட்டு தன்மிது தீயிட்டு கொழுத்திக்கொண்டுள்ளார்.  விட்டிலிருந்து நெருப்பு வருவதைக் கண்ட அயலவர்கள் பூட்டிய கதவை திறக்க முடியாத நிலையில் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது சஹானா தீயெறிந்தவேளை அமர்ந்தபடி இருந்ததாக அயலவர்கள் கூறுகின்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போதும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறந்துள்ளார்.

இலங்கையில் பரீட்சையில் உயர்கல்விக்கு தேற்றாத மாணவர்கள் தோல்வியுற்றதாக கருதப்படும் கருத்து சமூகத்தில் நிலைபெற்றுள்ளது. இதன் விளைவாக விரக்திக்குள்ளாகி தற்கொலைசெய்துகொள்ளும் மாணவர்கள் பற்றிய செய்திகள் ஒவ்வொரு தடவையும் செய்திகளாகின்றன. உலகத்தில் தற்கொலைசெய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகமுள்ள நாடாக ஏற்கெனவே இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காதல்தோல்வி மற்றும் பரீட்சை "தோல்வி" என்கிற காரணகளும் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர வறுமையின் காரணமாகவும் தற்கொலை செய்துகொள்பவகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கவை. இவர்களில் பெறும்பாலானோர் பெண்களாவர்.
...மேலும்

Apr 27, 2010

இறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா


தொழில்ரீதியாக, நான் கதைகளைச் சேகரிப்பவள். கதைகளைச் சேகரித்துப் பத்திரிகைகளில் பதிவுசெய்வது என் பணி. மிகச் சில கதைகள் என்னுடனேயே தங்கிவிடுகின்றன.

சித்தியினுடையதும் செல்வியினுடையதும் சின்னப் பொண்ணுவினுடையதும் அப்படிப்பட்ட கதைகள்தாம். அதிலும் சித்தியைச் சந்தித்தது மிகவும் தற்செயலான விஷயம். வீரப்பன் இறந்து ஐந்து வருடங்கள் முடிந்ததையொட்டி அந்தப் பகுதி மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை எனது பத்திரிகைக்குக் கட்டுரையாக எழுதும் நோக்கத்தில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றபோது, சோளகர் தொட்டிக்குச் செல்லும் திட்டம் எதுவும் இருக்கவில்லை. அங்கே கட்டாயம் சென்று பார்க்க வேண்டுமென ச. பாலமுருகன் வற்புறுத்தி அனுப்பிவைத்தார்.

சுமார் நான்கு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு நாங்கள் சோளகர் தொட்டியைச் சென்றடைந்தபோது சூரியன் மறையத் தொடங்கியிருந்தது. நாங்கள் ஒரு பத்திரிகையிலிருந்து வந்ததையும் பாலமுருகன் அனுப்பி வைத்த விவரத்தையும் எங்களுடன் வந்த சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த ஜீவா சொல்லி முடித்தபோது அந்தச் சூழலில் சின்னதாக ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. சாலையில் நாற்காலிகள் போட்டு அமரவைத்தார்கள். மக்கள் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். சித்தி அழைத்து வரப்பட்டார். தன்னைத் தலையிலிருந்து கால்வரை அவர் புடவையால் மூடியிருந்ததற்குக் காரணம், வெறும் குளிர்தானா? ‘உன் கதையச் சொல்லு’, என்று யாரோ சித்தியிடம் சொன்னார்கள். “எத்தனதடவதான் சொல்லுவா, என்ன பிரயோஜனம்” என்று யாரோ பதில் சொன்னார்கள். சித்தி அமைதியாகவே இருந்தார். அந்த உரையாடலை எப்படித் தொடங்குவது என்று நான் தயங்கியபோது சித்தி வெகு இயல்பாக எனது கைகளைப் பிடித்துக்கொண்டு “காபி சாப்பிடறீங்களா” என்று கேட்டார். “உங்களுக்கு எதாவது சொல்லணும்னு தோணுதா?” என்று கேட்டேன். “இந்த உடம்புல ஒரு ஓட்டையைக்கூட விடாம அவங்க மின் கம்பி பாய்ச்சியிருக்காங்க. இப்போகூட வலிக்குது” என்று மட்டும் சொன்னார். கதைகளைச் சேகரிப்பதில் எனக்கிருக்கும் பத்து வருட அனுபவம் சித்தி சொன்ன அந்தச் சில வரிகளுக்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கவில்லை. அதற்கு மேல் சித்தியிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை. அவரும் எதுவும் சொல்லவில்லை. இழப்பீடாகச் சித்திக்குக் கிடைத்திருக்கும் இரண்டு லட்சம் ரூபாய் அவரது வலிகளை நீக்கிவிடவில்லை என்பது மட்டும் புரிந்தது.

வீரப்பன் இறந்த பிறகு தடதடக்கும் காவல் துறை வாகனங்கள் அதிர அதிர வந்து அவர்களை அலறவைப்பதில்லை என்பதைத் தவிர சோளகர் தொட்டியில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை. மிக அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டுமென்றாலும் பிள்ளைகள் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரம் நடக்க வேண்டும். அங்கிருக்கும் நாற்பது பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் அப்படி நடந்து சென்றுதான் படிக்கிறார்கள். “அதுவும் பத்தாவது வரைக்கும்தான். அதன் பிறகு படிக்க வேண்டுமானால் வேறு எங்கேயாவது தான் போக வேண்டும்” என்றாள் ஏழாவது படிக்கும் ஜோதிகா. “நான் சென்னையைப் பார்த்ததில்லை, அங்கே கூட்டிக்கிட்டுப் போறீங்களா? நான் மேலே படிக்கணும்.” சோளகர் தொட்டி உள்பட சத்தியமங்கலம் பகுதியிலுள்ள எந்த அரசுப் பள்ளிக்கும் அனேகமாக ஆசிரியர்கள் வருவதில்லை. வீரப்பன் இருந்தபோது பயம் காரணமாக வராமல் இருந்த ஆசிரியர்கள் அதன் தொடர்ச்சியாக இப்போதும் வராமல் இருக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். அனேகமான இடங்களில், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமாராகப் படித்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏதோ பணம் கொடுத்துப் பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் சில ஆசிரியர்கள்.

சோளகர் தொட்டிக்குச் சவாலாக விளங்கும் இன்னொரு பிரச்சினை, நில ஆக்கிரமிப்பு. வீரப்பன் பயம் இல்லாத காரணத்தால் பல பணக்காரர்கள் இந்த வளமான பகுதியில் நிலம் வாங்குகிறார்கள். ஆண்டாண்டு காலமாகக் காடு, மலைகளில் புழங்கிவந்த சோளகர் குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவது இந்தப் பிரச்சினையால்தான். “நாங்கள் வளர்ந்து திரிந்த நிலங்களுக்கு வேலிகளைப் போட்டு நாய்களைப் போல விரட்டுகிறார்கள்” என்கிறார் ஊர்த் தலைவராக அறியப்படும் ஜவுனா. வாழ்நிலங்களிலிருந்து துரத்தப்படும் பழங்குடியினரின் எதிர்வினைகள் நமக்கான படிப்பினைகளாக இப்போதும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. அந்த நிலை சோளகர் தொட்டிக்கும் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா எனத் தெரியவில்லை.


மலைகளில் மட்டுமல்ல, சமவெளிகளிலும் வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை ஐந்து வருடங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. குறிப்பாகப் பெண்களின் நிலை. பாலமுருகன் சொல்லும் வள்ளியின் கதை, யாரையும் நிலைகுலையவைக்கும். வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட பல பெண்களில் வள்ளியும் ஒருவர். சேத்துக்குளியைச் சேர்ந்த வள்ளியைப் பல பெண்களைப் போல அவரது கிராமமும் தள்ளிவைத்திருக்கிறது. காரணம், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது. அப்படித் தள்ளிவைக்கப்பட்ட வள்ளியை அவரது உறவினர்களே மீண்டும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திக் கொலைசெய்திருக்கிறார்கள்.

வீரப்பன் தேடுதல் வேட்டை விட்டுச் சென்ற பாதிப்புகளின் பல்வேறு வடிவங்களால் இன்னும் அச்சத்தில் வாழ்கிறார்கள் பல பெண்கள். 30 வயது சின்னப் பொண்ணுவைப்போல. மேட்டூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவர் சித்தாள் வேலை செய்துகொண்டிருந்தார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் அவரது முதல் கணவர் கொல்லப்பட்டார். “அப்போ நான் பாலியல்ரீதியாப் பாதிக்கப்பட்டவன்னு தெரிஞ்சதும் எங்க வீட்டிலேயே என்னை ஒதுக்கிவச்சுட்டாங்க. எனக்கு இழப்பீடு வாங்கித்தந்த மனித உரிமை ஆர்வலர்கள் அக்கறையாச் சொன்னதால இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று சொல்லும் சின்னப் பொண்ணு, தன் அம்மா தன்னை ஏசியதுபோல வேறு யாரும் தன்னைக் குற்றம் சொல்லக் கூடாது என்பதாலேயே காது கேளாத வாய் பேச முடியாத ஒருவரைத் திருமணம் முடித்திருக்கிறார். ஆனால் சின்னப் பொண்ணுவின் கணவர் முருகன், அவருடைய ‘களங்கப்பட்ட’ மனைவி பற்றி எழுதி எழுதிச் சித்ரவதை செய்வாராம். “இப்போதுகூட அவரைத் தெய்வமாத்தான் நினைக்கிறேன், பாலியல்ரீதியாப் பாதிக்கப்பட்டவ, ஏற்கனவே கல்யாணமானவ, என்ன யார் மறுமணம் செய்ய முன்வருவாங்க?! அவருக்கு நல்ல மனைவியாதான் இருக்கணும்னு நினைக்கிறேன். வீரப்பன் தொந்தரவெல்லாம் முடிஞ்சு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுன்னு நினைக்கறப்ப வேறவிதமான தொந்தரவுகள் இருந்துகிட்டுதான் இருக்கு. ரொம்பக் கொடுமையான வார்த்தைகள எழுதிக் காட்டுவாரு. படிக்கறப்ப செத்துடலாம்னு தோணும்” என்கிறார்.

செல்வியின் நிலையும் கிட்டத்தட்ட அதேதான். “தினம் தினம் சாகறேன், பேச்சுவாக்குலகூட யாராவது எனக்கு இப்படியொரு கொடுமை நிகழ்ந்திருக்குன்னு சொன்னாங்கனா அன்னிக்கு முழுவதும் நரகத்தில இருக்கறது மாதிரி இருக்கும்” என்கிறார் செல்வி.

செல்வி, சின்னப் பொண்ணு, சித்தி போன்று பல பெண்கள். இவர்கள் எல்லோருக்கும் இழப்பீடு கிடைத்திருக்கிறது. சமயங்களில் இவர்களது மறுமணத்துக்குத் தூண்டுதலாய் இருந்தது இந்த இழப்பீட்டுத் தொகைதான் எனச் சொல்லப்படுகிறது. பணத்துக்காக மணந்துகொள்பவர்கள் பிறகு வீரப்பன் தேடுதல் வேட்டை என்னும் இறந்துபோன பூதத்தின் நிழலாக மாறிவிடுகிறார்கள். வீரப்பனின் தேடுதல் வேட்டை புரட்டிப்போட்ட பாதையிலிருந்து இவர்களது வாழ்க்கை இன்னும் விலகவில்லை என்பதுதான் உண்மை. இனியும் விலகுமா எனத் தெரியவில்லை. சின்னப் பொண்ணு சொல்வதுபோல அந்தப் பெருவேட்டையின் தடயங்களை அவர்கள் தங்கள் உடல்களில் சுமந்துகொண்டிருக்கிறார்கள். பாலியல்ரீதியாக இன்னும் இறுக்கமாகவே இருக்கும் ஒரு சமூகத்தில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இழப்பீடோ மறுமணமோ அந்தத் தடயங்களை முழுவதுமாக நீக்கிவிடப்போவதில்லை.

அதனாலேயோ என்னவோ, அதிகார எதிர்ப்பைத் தனது கூறுகளில் ஒன்றாகக் கொண்டிருந்த வீரப்பன் இன்னமும் இங்கு ஒரு கதாநாயகன். வீரப்பனின் வீரம் பற்றிப் பல புனைவுகள் இந்தப் பகுதிகளில் இன்னமும் காற்றில் அலைந்துகொண்டிருக்கின்றன. மூலக்காட்டில் வீரப்பன் புதைக்கப்பட்ட இடத்தில் “இங்கே வீரம் விதைக்கப்பட்டிருக்கிறது” என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

செல்வியின் நான்கு வயது மகன் பார்த்தனுக்கு எதிர்காலத்தில் ‘வீரப்பனாக வேண்டும்’ என்பதுதான் ஆசை. செல்வி அதிர்கிறார். “ஒரு வீரப்பனால பட்டததான் இன்னிக்கு வரைக்கும் அனுபவச்சிட்டிருக்கிறோம். பேச்சுக்குக்கூட அப்படிச் சொல்லாத” என்று அவனை அணைக்கிறார்.

சித்தியின் மீதும் செல்வியின் மீதும் சின்னப் பொண்ணுவின் மீதும் பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயம், வாழ்வு அவர்கள்மீது செலுத்திய வன்முறையை அவர்கள் எதிர்கொண்ட விதமும், வாழ்வின் மீது அவர்கள் இன்னமும் வைத்திருக்கும் தகர்க்க முடியாத எளிய நம்பிக்கைகளும்தான். ஜோதிகா உள்பட நாற்பது பிள்ளைகளும் ஆறு கிலோ மீட்டர் நடந்தாவது படித்தால்தான் தனக்கு நேர்ந்த கதி அவர்களுக்கு ஏற்படாது எனத் திடமாக நம்புகிறார் சித்தி. பார்த்தனையும் தன்னுடைய பிற குழந்தைகளையும் எப்படியாவது படிக்கவைத்து, பெரிய இடத்தில் வேலைக்குச் சேர்த்துவிட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறார் செல்வி. அவர்கள் எல்லோருமே மிச்சமிருக்கும் வாழ்வை வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

...மேலும்

Apr 26, 2010

வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!


சமையலறையிலும், குழந்தைப் பேறுவளர்ப்பிலும், பாலியல் இச்சைக்காகப் படுக்கையறையிலும் காலங்காலமாகக் கட்டிப் போடப்பட்ட பெண்கள், மனித குல வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு என வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு செந்நீர் சிந்தி, சில உயிர்களைப் பலிதானமிட்டு உணர்ந்த நாள் மார்ச் 8. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.

முக்கியமாக ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை. சமூகம் மரபாகப் பின்பற்றி வரும் எல்லாப் பிற்போக்குத்தனங்களுக்கும் பெண்தான் முதல் பலிகடாவாகின்றாள். சாதி, மத, இனங்களின் கவுரவமே ஒரு பெண்ணின் ‘தூய்மையை’ வைத்தே அளவிடப்படுகின்றது. கீழ்க்கண்ட இரண்டு உண்மைச் சம்பவங்களைப் பார்த்துவிட்டு இந்த விமரிசனத்தை மேற்கொண்டு பரிசீலிக்கலாம்.
···
ஈரோடு மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கீதா. வெண்ணெய்க்குப் பிரபலமான ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சதாசிவம். சொந்த மண்ணில் வாழ வழியில்லாதவர்களுக்கு சற்றே சிரமமென்றாலும், ஒரு குறைந்தபட்ச வாழ்வை உத்திரவாதம் செய்யும் திருப்பூருக்கு இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பதற்கு வந்தனர். தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லாப் பகுதிகளிலுமிருந்தும் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் திருப்பூரில் குவிந்துள்ளனர். பனியன் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கில் ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருப்பதால் மற்ற ஊர்களில் சிரமப்படும் காதல் வாழ்க்கை இங்கே ஒப்பீட்டுரீதியில் சற்றே சுலபமானது எனலாம்.

அப்படித்தான் சதாசிவமும், சங்கீதாவும் காதலித்தனர். பிழைப்பதற்கு வந்த ஊர் காதலுக்கு வழியேற்படுத்தினாலும், அவர்களின் பிறந்த ஊர்கள் இந்தக் காதலை அடியோடு நிராகரித்தன. இந்த உண்மைக்கதையை வெளியிட்டிருக்கும் ஜூனியர் விகடனில் (28.01.09) அவர்களின் சாதி குறித்த விவரமில்லை. இருப்பினும் இருவரும் ஓரே தகுதி கொண்ட வெவ்வேறான சாதிகளாகவோ, அல்லது இருவரில் ஒருவர் சற்றே ஆதிக்கசாதியாகவோ இருக்கலாம். எப்படியும் இருவரின் குடும்பத்தாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்பதோடு உறவை அறுத்துக்கொண்டு தலைமுழுகினர். வேறுவழியின்றி இந்த ஜோடிகள் திருப்பூர் கோவிலொன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகாவது தன் குடும்பம் தன்னை எற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் தந்தைக்கு தொலைபேசியில் பேசினார் சங்கீதா. தந்தையோ “உன் குடும்பத்தில் பிள்ளை பிறந்தாலும் எங்களுக்குச் சொல்லாதே! இழவு விழுந்தாலும் எங்கிட்ட வராதே” என வெட்டு ஒன்று துண்டு இரண்டென பேசி முடித்துக் கொண்டார். சதாசிவம் வீட்டிலும் இதே கதைதான் என்பதால், இந்தப் புதுமணத் தம்பதியினர் திருப்பூரில் தங்கள் குடும்ப வாழ்க்கையைத் துவங்கினர். சொந்த பந்தங்களின் ஆதரவின்றி ஒருவருக்கொருவர் ஆறுதலாக அந்த வாழ்க்கை நகர்ந்தது.

முதல் வருடத்திலேயே சங்கீதாவுக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சியின்றி இறந்தே பிறந்தது. தலைப்பிரசவத்துக்கு ஒரு பெண் தயாராகும்போது சுற்றமும் உற்றமும் புடைசூழ பார்த்துக் கொள்ளும். ஆனால் சங்கீதாவுக்கு அவளது கணவனைத் தவிர யாரும் துணையில்லை, வந்து பார்க்கவுமில்லை. பேறுகாலச் சிரமங்களை மிகுந்த சிரமத்துடன் பொறுத்துக்கொண்ட சங்கீதா அதன் பின் நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் கர்ப்பமானார்.

உறவுகள் அற்றுப்போய் தனித்தீவுகளில் வாழ்வது போல தனிமைப்பட்டிருந்த அந்த ஏழைத் தம்பதியினருக்கு ஒரு குழந்தையின் மூலம் புதிய உறவு வரப்போகின்றது என அளவில்லாத மகிழ்ச்சி! தன் மனைவியை அவளது தாய் பார்ப்பது போல பராமரித்து வந்த சதாசிவம், சங்கீதா கர்ப்பமான ஒன்பதாவது மாதத்தில் அதிக இருமலும் சளியுமாக அவதிப்பட்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் காட்டிய போது அவருக்கு காசநோய் முற்றியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஏதோ ஒரு நோய், கோவை சென்றால் சரியாகிவிடும் என்று புரிந்து கொண்ட அந்தப் பெண் கணவனைக் கோவைக்கு அழைத்துச் சென்றாள்.

திருப்பூரின் சாயப்பட்டறைகளினால் நொய்யல் ஆறு ரசாயன ஆறாக மாறி உயர்நீதி மன்றம் அதற்கு பல உத்திரவுகளைப் பிறப்பித்து சரி செய்வதற்கு முயன்ற விசயம் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் பலருக்கு பஞ்சுத் தூசியினால் ஆஸ்துமாவும், காசநோயும், தோல் வியாதிகளும் இருக்கின்றது என்ற விசயம் அரசால் கூட கவனிக்கப் படவில்லை. திருப்பூர் மருந்துக் கடைகளில் இந்த நோய்களுக்கான மருந்துகள்தான் அதிகம் விற்பனையாகின்றது என்றால் இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்காவின் வால்மார்ட்டுக்காக ஆர்டர்கள் எடுத்திருக்கும் திருப்பூரின் முதலாளிகள் இப்படி தொழிலாளர்களின் நுரையீரலையும், எலும்புகளையும் சிதைத்துத்தான் ஆயத்த ஆடைகளைத் தயாரிக்கின்றனர் என்பது யாரும் கவலைப்படாத ஒன்று.

சங்கீதா நிறைமாதக் கர்ப்பிணியாய் தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது தெரியாமல் கணவனைக் கருத்தாகப் பார்த்துக் கொண்டாலும், கோவை அரசு மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றாலும் காசநோய் முற்றிய சதாசிவம் ஒரு சில நாட்களில் இறந்து போகின்றார். இந்த உலகில் தனக்கென இருந்த ஒரே உறவையும் தொலைத்து விட்ட அந்தப் பெண் அழுது புரண்டாள். பிறகு கணவனின் பிணத்தை எரிப்பதற்கு பணமில்லாமலும், தூக்குவதற்கு ஆளில்லாமலும் தவித்த அந்த அபலைப்பெண் பைத்தியமாய்ச் சுற்றியிருக்கின்றாள். சவக்கிடங்கில் இருக்கும் கணவனின் பிணத்தைத் தொட்டு அழுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் உதவுமாறு கேட்டிருக்கின்றாள் சங்கீதா.

எந்தச் சனியன் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என குடும்பத்தினர் இரக்கமின்றி முறித்துக் கொண்டனர். பிறகு தோழமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைக் கேள்விப்பட்டு அவர்களின் உதவியை நாடியிருக்கின்றாள் சங்கீதா. இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் கணவனது இறுதிச் சடங்கை முடித்த சங்கீதாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கும். இருந்த ஒரே துணையையும் இழந்தவருக்கு ஆறுதலாக யாருமில்லை என்பதால் கைக்குழந்தையுடன் அவதிப்படப்போகும் சங்கீதாவின் எதிர்காலம் எப்படி நகரும்?
···
புது தில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு மேல்நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியளராகப் பணிபுரியும் மீரா நந்தா அவரது சொந்த ஊரான சண்டீகரில் அவர் கண் முன்னே ஒரு இளம் பெண் கடத்தப்படுவதைப் பார்த்துவிட்டு அந்த அனுபவத்தை ‘தி ஹிந்து’ தினசரியின் ஞாயிறு மலரில் (01.03.09 ) எழுதியிருக்கின்றார்.

பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் சண்டீகருக்கு வந்த மீரா நந்தா ஒரு பகல் பொழுதில் தனது வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கும் நீதிமன்ற வளாகத்தைக் கடந்து கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து ஒரு இளம்பெண் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். திடீரென வந்த ஒரு வெள்ளை வேனில் இருந்து இறங்கிய நான்கைந்து இளைஞர்கள், அவர்களைப் பார்த்துப் பதறி ஓடிய அந்தப் பெண்ணை விரட்டுகின்றார்கள். கணப்பொழுதில் அவளைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்து வேனில் ஏற்றிச் செல்கின்றார்கள்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த மீரா நந்தா அந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தபோது, நீதிமன்றத்தில் இருந்த மக்கள் கூட்டம் இச்சம்பவத்தைப் பார்த்து கூடுகின்றது. அந்தப் பெண் கடத்தப்பட்டதைப் போலீசிடம் புகார் கொடுக்கலாம் என்று அவர்கள் பேசியபோது கூட்டத்தில் நடுத்தர வயதிலிருக்கும் ஒரு சீக்கியர் குறுக்கிடுகின்றார். அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆபத்தில்லை எனவும், தான் அவளது தந்தை, வேனில் பிடித்துச் சென்றது அவளது சகோதரர்கள்தான் என்றும் அவர் நிதானமாகத் தெரிவிக்கின்றார்.
உடனே மீரா நந்தா பெற்ற மகளையே இப்படி அடித்துக் கடத்துகின்றீர்களே! நீங்களெல்லாம் ஒரு தந்தையா, உங்களுக்கு வெட்கமில்லையா என்று கோபத்துடன் கேட்கிறார். தனது மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு புத்திசாலிப் பெண்ணென்றும், அவளை ஒரு முசுலீம் இளைஞன் காதலிப்பதன் மூலம் அவளது வாழ்க்கை பாழாகக் கூடும் என்பதால் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்த அந்தக் காதலர்களைப் பிரிப்பதற்கு தான் எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் அந்தச் சீக்கியர் வாதிடுகின்றார்.

இதைக் கேட்டவுடன் கூட்டம் சமாதனத்துடன் கலைந்து செல்கின்றது. மீராவுடன் நான்கைந்து இளைஞர்கள் மட்டும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கலாம் என முடிவு செய்கின்றார்கள். காவல் நிலையத்தில் பொறுப்பிலிருந்த அதிகாரி சீக்கியரின் விளக்கத்தைக் கேட்டவுடன் திருப்தி அடைகின்றார். இப்போது மீராவுடன் ஒரு இளைஞர் மட்டுமே இருக்கின்றார். அந்த இளம்பெண் ஒரு மேஜர் என்பதால் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவளுக்கு முழு உரிமை உண்டென மீரா அதிகாரியிடம் வாதிடுகின்றார். உங்கள் மகளுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்வீர்கள் என அந்த அதிகாரி மீராவின் பதிலுக்குக்கூட காத்திராமல் அந்தத் தந்தையின் செயலை நியாயப்படுத்துகின்றார். அந்தச் சீக்கியரோ தான் குறுகிய எண்ணம் கொண்டவனல்ல, தனது மகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்திருந்தால் கூட அதை ஏற்றுக் கொள்வாரெனவும், ஆனால் ஒரு முசுலீமைத் தனது மகள் காதலிப்பதை ஏற்க முடியாது என்றும் வாதிடுகின்றார்.
இறுதியில் மீரா போலீசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தான் இந்தப் பிரச்சினையை ஊடகங்களுக்குக் கொண்டு செல்வதாக மிரட்டியதும் அந்த அதிகாரி இதைப் பற்றிக் கண்டிப்பாக விசாரிப்பதாக உறுதியளிக்கின்றார். அவரது செல்பேசி எண்ணை வாங்கிவிட்டு மீரா திரும்புகின்றார். அன்று மாலையே அந்த இன்ஸ்பெக்டர் மீராவுக்கு தொலைபேசியில் பேசுகின்றார், அதன்படி அந்தப் பெண்ணைச் சந்தித்து விட்டதாகவும், அவள் தனது சொந்த விருப்பத்தில் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டு அந்தப் பெண்ணையே பேச வைக்கின்றார். அந்தப் பெண்ணும் ஏதோ கடமைக்குப் பேசுவது போல தனக்கு ஒரு பிரச்சினையுமில்லை எனவும் சுரத்தில்லாமல் கூற, எந்தப் பிரச்சினை என்றாலும் தனது செல்பேசி எண்ணுக்கு அழைக்குமாறு கூறிவிட்டு மீரா இந்த சம்பவத்தை அசை போடுகின்றார். துயரம் தோய்ந்த அந்தப் பெண்ணின் முகம் அவரைத் தொந்திரவு செய்கின்றது.
···
சங்கீதா செய்த ‘குற்றம்’ சாதி மாறித் திருமணம் செய்தது, சண்டீகர் பெண் செய்த ‘குற்றம்’ மதம் மாறிக் காதலித்தது. சங்கீதாவின் பெற்றோரும், உறவினரும் அவளைப் புறக்கணித்து எந்த உதவியும் செய்யாமல் இருந்ததன் மூலம் அவளைத் தண்டித்தார்கள். சண்டீகர் பெண்ணின் குடும்பமோ அவளை வன்முறையின் மூலம் மிரட்டி அவளது காதலை நசுக்கித் தண்டிக்கின்றார்கள். தாங்கள் விரும்பியபடி மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்ற அந்தப் பெண்களுக்கு இந்தச் சமூகம் ஒப்புதல் தரவில்லை.

சாதிவெறியும், மதவெறியும் பெண்ணின் இரத்தக் கலப்பில்லாத தூய்மையை வைத்ததே தத்தமது கவுரவத்தைக் காப்பாற்ற நினைக்கின்றன. ஆனால் இந்தப் புனிதக்கடமை ஆண்களுக்கில்லை. ஆதிக்கசாதி ஆண்கள் ஊருக்கு வெளியே இருக்கும் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வது இந்தியா முழுவதும் நடக்கும் விசயம். இதை மட்டும் சாதியின் கவுரவக் குறைச்சலாகக் கருதாமல், ஆதிக்கசாதி ஆண்களின் கம்பீரமாக இந்தச் சமூகம் பார்க்கின்றது. மேலும் தன்மானத்துடன் வாழ நினைக்கும் தலித் மக்களைக் கேவலப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஆதிக்கசாதி வெறியர்கள் செய்யும் முதல் விசயம் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வதுதான். ஒரு ஆதிக்கசாதிப் பெண் ஒரு தலித் ஆணைக் காதலித்து திருமணம் செய்தால் ஊரே பற்றி எரியும். இந்தக் காதலை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலே இந்தியாவெங்கும் இருக்கின்றது.

வட இந்தியாவில் ஒரு ஆதிக்கசாதி அல்லது பிற்படுத்தப்பட்ட பெண் ஒரு முசுலீமைக் காதலித்தால் மேற்கண்ட வெறியால் இன்னும் தீவிரமாக எதிர்க்கப்படும். இதைத் தடுப்பதற்கென்றே இந்தி பேசும் மாநிலங்களில் இந்து மதவெறியர்கள் தனி இயக்கமே நடத்துகின்றார்கள். சண்டீகர் பெண்ணின் தந்தை கூறியதைப் பாருங்கள், இந்துமதத்தில் இருக்கும் தலித் ஆணைக் கூட ஏற்றுக் கொள்வாராம், ஆனால் ஒரு முசுலீமை ஏற்றுக்கொள்ள மாட்டாராம். உண்மையில் அப்படி ஒரு தலித்தை அந்த சீக்கியப் பெண் காதலித்தாலும் இதுதான் நடக்கும். என்றாலும், முசுலீம் என்றால் அந்தக் கவுரவ வெறி சில மடங்கு அதிகமாக இருக்கின்றது.

உலகெங்கும் முசுலீம்களைப் பற்றிய வெறுப்பும், தவறான கற்பிதங்களும் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதில் இந்தியாவைப் பொறுத்தவரை பிரிவினை காலந்தொட்டு நடந்துவரும், இந்துமதவெறியர்களால் இயக்கப்படும் இந்து முசுலீம் கலவரங்கள் அந்த வெறுப்பைப் பிரச்சாரம் ஏதுமின்றி ஒரு இந்துவின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன. எனவேதான் இந்தி பேசும் மாநிலங்களில் இதற்காக அதாவது இந்து மற்றும் ஆதிக்கசாதியின் கவுரவத்தைக் காப்பாற்றும் விதமாக யாரெல்லாம் அந்த எல்லையை மீறுகின்றார்களோ அவர்களெல்லாம் கொல்லப்படுவது சகஜமாக இருக்கின்றது. இந்தக் கவுரவக் கொலைகளில் பத்து சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நடக்கின்றது. முக்கியமாக இந்தக் கொலைகளுக்கு ஆளாவதில் பெரும்பான்மையினர் பெண்கள்தான்.
···
விஜய் டி.வியில் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா என ஒருமுறை விவாதிக்கும் போது எப்படி கடலை போடுவது, எதிர்பாலைக் கவருவது அல்லது கவிழ்த்துவது, இன்ன பிற அயிட்டங்களையெல்லாம் பயங்கரமாக அலசினார்கள். ஆனால் கலப்பு மணம் செய்தால் அதைத் தீர்மானிப்பது அரிவாள்தான் என்பதை அங்கிருக்கும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் எவரும் மருந்துக்குக் கூட தொட்டுப் பேசவில்லை.

இந்த விவாதம் நடந்து சில மாதங்கள் இருக்கலாம். இதே காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜிராவ் எனும் தலித் இளைஞரும், லட்சுமி எனும் கள்ளர் சாதிப் பெண்ணும் காதலிக்கின்றார்கள். கள்ளர் சாதி கோலோச்சும் இம்மாவட்டத்தில் இருக்கும் அபாயத்தைக் காதலர்கள் உணர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியாமல் திண்டுக்கல் சென்று ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த லட்சுமியின் மூன்று அண்ணன்கள் ஒரு டாடா சுமோவில் சில ரவுடிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் சென்று லட்சுமி கதறக் கதற அவளது கணவனை அடித்து வண்டியில் எற்றுகிறார்கள். சில நாட்கள் கழித்து அந்த தலித் இளைஞன் கொடைக்கானல் சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கின்றான்.

தனது அண்ணன்கள் கொலை செய்யுமளவு துணிய மாட்டார்கள் என நம்பிய அந்தப் பெண் இன்றும் அழுது கொண்டிருக்கின்றாள். சில ஆண்டுகளுக்கு முன் விருத்தாச்சலம் அருகே ஒரு தலித் ஆணும் வன்னிய சாதிப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண்ணின் ஊர்க்காரர்கள் அதாவது வன்னியர்கள் முன்னிலையில் அந்தக் காதல் ஜோடி உயிரோடு எரித்துக் கொளுத்தப்பட்டது. வழக்கு இன்றும் நடக்கின்றது என்றாலும் மொத்த ஊரே இதில் சம்பந்தப்பட்டிருக்கும் போது யாரைத் தண்டிப்பது?

ஸ்ரீராம் சேனா என்ற இந்து மதவெறி இயக்கத்தினர் மங்களூர் பஃப்புகளில் இருந்த மேல்தட்டுப் பெண்களைத் தாக்கியதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இதே போல காதலர் தினத்தில் சங்க பரிவாரங்கள் இந்தியா முழுவதும் செய்த அராஜகங்களையும் அறிவோம். ஆணாதிக்கத்தினோடு இந்து மதவெறியும் சேரும்போது அதனுடைய வெறி தீவிரமாகத்தான் இருக்கின்றது. இங்கும் கூட கவனியுங்கள் பெண்தான் குறிவைக்கப்படுகின்றாள். ஆண்கள் டாஸ்மாக் தொட்டு நட்சத்திர விடுதி மதுவறைகள் வரை குடித்து விட்டு ஆடலாம். ஆனால் இதை இயல்பு எனக் கருதும் இந்து மனம் பெண்கள் குடிப்பதை மாபெரும் கவுரவக் குறைச்சலாக நினைக்கின்றது. ஸ்ரீராம் சேனாவின் அத்துமீறலைக் கண்டித்து பல பெண்கள் அமைப்புக்கள் அந்த சேனாவின் தலைவருக்கு பிங்க் நிற ஜட்டிகள் அனுப்பித் தங்களது எதிர்ப்பைக் காண்பித்தன.

ஒரு பெண்ணுக்கு பஃப்புக்கு செல்வதற்கு சுதந்திரம் தேவை எனப் போராடுவதை விட சங்கீதாவும், சண்டீகரின் சீக்கியப் பெண்ணும் நடத்தும் போராட்டம் மிகவும் கடினமானது. மதுவறைகளுக்கு மேல்தட்டு பெண்கள் செல்வதை போலீசு உதவியுடன் கூட செய்து விடலாம். ஆனால் சங்கீதாவுக்கும், லட்சுமிக்கும் கறுப்புப் பூனைகள் போட்டாலும் பாதுகாக்க முடியாது. ஏனெனில் இங்கே முழுச் சமூகமுமே அந்த அபலைகளை எதிர்த்து நிற்கின்றது.

மேலும் மாநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களிடத்தில் இவர்களில் ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்களும் உண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 75% பேர் பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணத்தைத்தான் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்கள். படித்து, சற்றே வசதியுடன் வாழும் இந்த வர்க்கத்துக்கே இதுதான் கதியென்றால் அந்த ஏழைப் பெண் சங்கீதா என்ன செய்ய முடியும்?

ஆகவே பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?

இந்தக் கட்டுரை எழுதும் சமயத்தில் சங்கீதாவுக்கு குழந்தை பிறந்திருக்கலாம், சண்டீகர் பெண்ணுக்கு வேறு மணம் கூட நடந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்கள் தனிமையில் கதறி அழுதவாறு இந்த வாழ்க்கையை எப்படி ஓட்டப் போகின்றோம் என விரக்தியில் உறைந்திருப்பார்கள். ஒருவேளை தற்கொலைக்குக் கூட முயற்சிக்கலாம். பரவாயில்லை, விரும்பியபடி வாழ்வதற்கு கதியில்லாத போது உயிரை முடித்துக் கொள்வது ஒன்றும் மோசமானதல்ல.
-புதிய கலாச்சாரம் மே’ 2009
...மேலும்

Apr 25, 2010

நான் இருப்பதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்கான கல்லறை எனலாம்: நளினி


கடந்த 19 ஆண்டுகளாக சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள நளினி, சிறையில் தமக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம். இந்த கடிதம் அனுப்பப்பட்டதை தொடர்ந்து 20-04-2010 அன்று காலை 6.30 மணியளவில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் அறையில் துணிப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வேலூர் பாகாயம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

06-04-2010

அனுப்புனர்:
S. நளினி,
C 810,
பெண்கள் தனிச்சிறை,
வேலூர் – 632 002

பெறுனர்: சிறைத்துறை தலைவர்,
தமிழ்நாடு சிறைகள்,
சென்னை – 600 008.

வழி : உரியவர் ஊடாக

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.

நான் கடந்த 19 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் இருக்கிறேன். அதில் 13 ஆண்டுகாலம் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுட் சிறைவாசியாக இருந்து வருகிறேன். எனது கணவரும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருக்கிறார்.

இதுவரை சட்டப்படியும் சிறை விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டே நடக்கிறேன். எந்தவிதமான கெட்ட பழக்கங்களுக்கும் நான் அடிமை இல்லை. தவிர சிறை ஊழியர்களுக்கு கையூட்டு கொடுத்து அவர்களிடம் தேவையானவைகளை சாதிக்கும் பழக்கமும் எனக்கு இல்லை. இதனால் நான் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகிறேன். அவற்றில் முக்கியமானவை:

என்னை மனு பார்க்க வருபவர்களை பல மணி நேரம் காக்க வைத்து இழுத்தடிப்பது, எனது அம்மா, மாமனார், மாமியார் போன்ற வயதானவர்களை 2 மணி நேரம் முதல் 4 மணிநேரம் காக்க வைத்து திரும்ப அனுப்பிவிடுவது, அனுமதி மறுப்பது, மனு பார்க்க வருபவர்களை விரட்டி அடிப்பது, அவதூறாக பேசுவது, வாய் கூசும் விதமாக திட்டுவது என்று எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்கிறேன். என்னை மனுப்பார்க்க வருபவர்களை திட்டமிட்டு அலைக்கழிப்பது, மரியாதை குறைவான வார்த்தைகளால் இம்சிப்பது என்று யாரும் என்னை நேர்காண வரக்கூடாது என்ற விஷமத்தனமான வேலைகளை செய்கிறார்கள்.

என் வழக்கறிஞர்களை வேண்டுமென்றே காக்க வைத்து காரணம் கேட்டால் நான் தயாராகவில்லை என்று அவர்களிடம் என் மேல் பழிபோட்டு அவர்களை திசை திருப்புவது, அபாண்டமாக என்னையே என் உறவினர்களிடம் எதிராக பயன்படுத்துவது, தொடர்கதையே.

எனது நேர்காணலில் கொண்டு வரும் பொருட்களை எல்லாம் பயன்படு்த்தவே முடியாத அளவிற்கு சோதனை என்ற பெயரில் நாசம் செய்வது, துணிகளை கிழிப்பது, கொண்டுவரும் பைகளை கிழிப்பது என்று அதிகார துஷ்பிரயோகம் எல்லை மீறிக்கொண்டே போகிறது. நானும் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் சகித்துக் கொண்டும் போகிறேன்.

இதுவரை 19 ஆண்டுகளில் ஒருமுறை கூட சிறைவிதிகளுக்கு புறம்பான பொருட்களை கொண்டுவந்ததும் இல்லை. எனது நேர்காணலில் எனது உறவினர்களை சோதனை செய்து கண்டுபிடித்ததும் இல்லை.

சிறைவிதிமுறைகள் தண்டனை சிறைவாசியை 15 நாட்களு்ககு ஒரு நேர்காணல் மற்றும் வாரம் ஒரு கடிதமும் அனுமதிக்கிறது. கடிதத்தை நேர்காணலாக மாற்றி மாதம் 6 நேர்காணலும் பார்க்க முடியும். அதன்படியே கடந்த 5-6 வருடங்களாக அனுமதிக்கப்படுகிறோம். இந்த சிறையில் “ஏ” வகுப்பு சிறைவாசிகளுக்கான தனிமனு அறையும் கிடையாது. எம்மை சந்திக்க வரும் குழந்தைகளையும் நாம் தொடவும் முடியாத சூழ்நிலையே பெண்கள் சிறையில் நிலவுகிறது. ஆண்கள் மத்திய சிறைகளில் குழந்தைகள் தந்தையுடன் இருப்பதில்லை. ஆனால் பெண்கள் சிறையில் பெண்கள் குழந்தை பெற்றெடுப்பதுடன், கைக்குழந்தையுடன் கைதாகி வருவதால் பெண் சிறைவாசிகளுடன் குழந்தைகள் சிறையில் இருக்கிறார்கள். சந்திக்கவும் வருகிறார்கள். இது எமக்கு மிக அதிகமான மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்கான கல்லறை எனலாம்.

சிறை மருத்துவரும், வெளி மருத்துவமனையிலிருந்து வரும் மருத்துவர்களும் பரிந்துரைககும் உணவுகளோ, பழங்களோ, காய்கறிகளோ நாம் பெற வழியில்லை. நேர்காணலில் கொண்டுவந்தாலும் சோதனை என்ற பெயரில் அழுக்கான இடங்களில் வீசுவது, அழுக்கான கைகளால் சாப்பாட்டு பொருட்களை கையாள்வது, ஏதும் கேட்டால் அவற்றை திருப்பி அனுப்புவது போன்ற அராஜக போக்கு அவர்கள் விருப்பம் இல்லாத எமது உறவினர்களை திருப்பி அனுப்புவது என்று நாளொரு வண்ணமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் எம்மை யாரும் மனு பார்க்க வரக்கூடாது என்ற காரணம் எம்மை யாரும் மனுப்பார்க்க வரக்கூடாது என்ற காரணம் எம்மை யாரும் மனுப்பார்க்க வரக்கூடாது என்ற திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகமும், உள்நோக்கங்களும்தான்.

இதற்கான தீர்வுதான் என்ன? எமக்கு உரிய பரிகாரம் கிடைக்குமா? சிறைத்துறை நேர்காணல் நேரங்களை எமக்கான தனிப்பட்ட நாள் என்று ஏதும் அறிவுறுத்தப்பட்டால் அதன்படி நேர்காணல் செய்யவும் நான் தயாராகவும் இருக்கிறேன்.

உங்களின் அவசரமான தலையீடு மற்றும் உத்தரவுகள் எமக்கு உரிய பரிகாரம் அளிக்கும் என்று நம்பிக்கையுடன்.

நன்றி

என்றும் உண்மையுள்ள

S. Nalini.

நன்றி - மீனகம்
...மேலும்

Apr 24, 2010

குற்றம், தீர்ப்பு, தண்டனை-பெண்ணியவாதிகள் அறிக்கைஅறிக்கை
உ.ரா. வரதராஜன் மரணம் குறித்த, சமூக அக்கறையுள்ள குடிமக்கள், பெண்ணியவாதிகள் விடுத்துள்ள இவ்வறிக்கை 03.03.2010 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் உ.ரா. வரதராஜன் அவர்களின் இறப்பு குறித்து எங்கள் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் சமூக அக்கறையுள்ள குடிமக்கள் மற்றும் பெண்ணியவாதிகள் என்னும் முறையில் நாங்கள் பதிவு செய்கிறோம். அதே சமயத்தில் அவர் இறப்புக்கு முன் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பில் பல உண்மைகளைக் கட்சித் தலைமை வேண்டுமென்றே கருத்தில் எடுத்துக்கொள்ளாதது எங்களைச் சங்கடப்படுத்துகிறது என்பதையும் பதிவு செய்கிறோம். 24. 02. 2010 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்ட, மறைந்த தோழர் உ.ரா.வரதராஜன், சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்துக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக, இந்த உண்மைகள் கட்சித் தலைமைக்கு முன்பே தெரிந்தவை என்பது நிரூபணமாகிறது.

கடந்த இருபதாண்டுகளாக நாடு முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளும் மனித உரிமைக் குழுக்களும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் குறித்த பிரச்சினைகளைக் கையாள்வதில் பின்பற்ற வேண்டிய விசாரணை நியதிகள், விதிமுறைகள் குறித்துக் கடினமான போராட்டங்களை நிகழ்த்திச் செயல் திட்டங்களையும் வகுத்துள்ளனர். உணர்வுபூர்வமான தேர்வு, பாலியல் தேர்வு, திருமணத்திற்கு உள்ளும் வெளியேயுமான நெருக்கம் குறித்த நமது புரிதலைப் பெண்ணிய விவாதங்கள் விரிவுபடுத்தியிருக்கின்றன. தோழர் வரதராஜனின் இறப்புக்கு முன் நிகழ்ந்த சம்பவங்களைப் பார்க்கும்போது இது குறித்த கூர்மையான விவாதங்களுக்கு உடனடி கட்டாயத் தேவை எற்படுகிறது. இதன் காரணமாகவே நாங்கள் இவ்வறிக்கையை முன்வைக்கிறோம். இந்த அறிக்கை தோழர் வரதராஜனின் கடிதத்தை ஆதாரமாக வைத்துச் சம்பவங்களை அலசுகிறது. இக்கடிதம் மட்டுமே பொதுவெளியில் உலவிவரும் ஆவணமாக இருப்பதால் அது எழுப்பும் கேள்விகளைச் சார்ந்து எங்கள் பார்வையை முன்வைக்க வேண்டியுள்ளது.

தன்னைத் தற்கொலைக்கு இட்டுச்சென்ற துயரமான நிகழ்வுகளைக் குறித்து கட்சித் தலைமைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

1. அக்கடிதம் ஒரு பெண்ணிடம் ‘முறை தவறி’ நடந்துகொண்டதாகக் (அவருக்கு முறை தவறிய எஸ்.எம்.எஸ்களை அனுப்பியதாக) கூறி அவர்மீது நடத்தப்பட்ட விசாரணை குறித்த அவரது கடும் அதிருப்தியை முன்வைக்கிறது. வரதராஜன், அவருடைய கடிதத்தில் “கட்சி அமைத்த விசாரணைக் குழு, நீதி மற்றும் நடுநிலையான விசாரணைக் கான அளவு கோல்களை நிறைவு செய்யவில்லை” எனக் கூறியுள்ளார். கட்சிப் பதவிகள் அனைத்திலிருந்தும் நீக்கம் என அவர்மீது எழுதப்பட்ட ‘தீர்ப்பு’ அவர்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு அளவுக்கதிகமான தண்டனை என்றும் கூறியுள்ளார். குறிப்பாகத் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள், மத்தியக் குழு உறுப்பினர்கள்வரை உடல்ரீதியான உறவுகொண்டிருந்தது நிரூபிக்கப்பட்டபோதும் அவர்களின் மேல் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத பின்புலத்தில், அவரைப் பதவி நீக்கம் செய்தது மிகக் கடுமையானதும் அநீதியானதுமாகும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

இவை, சம்பவத்திற்குப்பின் பிரகாஷ் காரத் கட்சி முடிவை நியாயப்படுத்திக் கூறிய வாதங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. தோழர் வரதராஜனின் மரணத்திற்குப் பின் அவரைப் போற்றி அஞ்சலி செலுத்தும் போக்கைக் கேள்வி கேட்க வைக்கிறது.

2. இக்கடிதத்திலிருந்து விசாரணைக் கமிட்டி கையாண்ட விசாரணை முறை மிகுந்த கேள்விக்குரியது எனத் தெரியவருகிறது.

அ) ‘முறையற்ற நடத்தை’ என்று கூறப்படும் சம்பவம் நடந்த ஒன்பது மாதங்களுக்குப்பின், முதல் நபரின் (பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்) நேரடிப் புகார் இல்லாமலே, மூன்றாம் நபர்களால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆ) முதல் நபரின் தரப்பைப் பதிவுசெய்யாமலே, மூன்றாம் தரப்பு நபர்களின் வாய்மொழிச் சாட்சியங்களையும் தொலைபேசி உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைக் கமிட்டி தன் முடிவை எட்டியிருக்கிறது. முதல் நபரிடமிருந்து எழுத்து மூலமாக எந்த ஒரு பதிவையும் விசாரணைக் கமிட்டி கோரவில்லை என்பதே அவர்கள் எத்தகைய மேலோட்டமான விசாரணை முறையைக் கையாண்டனர் என்பதற்கு ஆதாரம். பாலியல் துன்புறுத்தலைக் கையாள்வதற்கான அடிப்படைக் கொள்கையில் முக்கியமானது, எக்காரணத்தைக் கொண்டும் மூன்றாம் நபர் புகார் அளிப்பதை (அவர் முதலாமவரின் சார்பாகக் கொடுத்தாலும்) ஏற்றுக்கொள்வதில்லை என்பது.

கீழ்க்கண்ட இரு காரணங்களுக்காக இத்தகைய கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

1) மூன்றாம் நபர்கள் அவர்களின் சொந்தக் காரணங்களுக்காகப் பிரச்சினையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் கலாச்சாரப் பாதுகாவல் என்னும் பிற்போக்குக் காரணங்களுக்காக மூன்றாம் நபர்கள் பிறர் வாழ்வில் தலையிடுவதைத் தவிர்க்கவும் உதவுகிறது.

2) முதல் நபரைப் பிரச்சினையின் மையமாக ஆக்குவதன் மூலம் அவர் தன்னுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெறவும் தன் குற்றச்சாட்டை அவர் (உரிய தீவிரத்துடன்) சரியாக முன்வைக்கவும் தொடர்ந்து வழக்கை நடத்தவும் ஏதுவாக்குகிறது. முதல் நபர் என்ன தீர்வை வேண்டுகிறார் என்பதையும் அவரே தேர்ந்தெடுக்க வழிவகை செய்கிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு முடிவு, பாதிக்கப்பட்டவரிடம் குற்றவாளி மன்னிப்புக் கோருவது அல்லது வேறு வகையிலான தீர்வு என விதி முறைகள், குற்றம் சாட்டுபவருக்குப் பிரச்சினையின் தீர்வை முன்வைக்க வழிசெய்கிறது.

இ) புகாருக்கு ஆதாரமாகக் கூறப்பட்ட எஸ்.எம்.எஸ் வாசகங்கள் வரதராஜனுக்கோ விசாரணைக் கமிட்டி உறுப்பினர்களுக்கோ கொடுக்கப்படவில்லை.

ஈ) முதல் நபருடனான தொலை பேசி விசாரணை வரதராஜன் முன்னிலையில் நடக்கவில்லை. பொதுவாக இரு தரப்பு வாதங்களும் எதிர்த்தரப்பின் முன் நிகழ்வதும், எதிர்த்தரப்பு தேவைப்பட்டால் அதைக் குறுக்கு விசாரணை செய்வதும் ஒரு விசாரணையின் நடுநிலைக்கான தேவை.

உ) இத்தகைய விசாரணைகளைக் கையாளும் விதிமுறைகளை மீறி, முதலில் புகார் அளித்த மத்தியக் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர் விசாரணைக் கமிட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டியவரே வழக்காடுபவராகவும் தீர்ப்பெழுதுபவராகவும் மாறி நீதி, நடுநிலை என்னும் வார்த்தைகளையே அர்த்தமிழக்கச் செய்துள்ளனர்.

3. குற்றம் சாட்டிய மூன்றாம் தரப்போ விசாரணைக் கமிட்டியோ என்ன குற்றம் சாட்டுகிறார்கள் என்னும் தெளிவற்ற நிலையில் இருந்ததை வரதராஜனின் கடிதம் சுட்டுகிறது.

வரதராஜன்

அ) ஒரு பெண்ணுக்கு (அவர் விசாரணையில் பங்குபெறவில்லை) எஸ்.எம்.எஸ் அனுப்பினார்.

ஆ) அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக அப்பெண்ணிடம் எஸ்.எம்.எஸ். வாயிலாகக் கூறினார் என ஒருவர் அளித்த புகார் கூறுகிறது.

விசாரணையில் தொடர்புடைய மற்றொரு நபர் அளித்த புகார், மேற்கூறியவற்றில் முதலாவது புகாரை மட்டும் முன்வைக்கிறது. இரண்டாவதைப் பற்றி ஏதும் கூறவில்லை. இந்த இரு புகார்களையும் கொடுத்தவர்கள் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் அல்ல. வரதராஜனும் அவருடைய மனைவியும் பின்னர் இருதரப்பு ஒப்புதலுடன் விவாகரத்துச் செய்ய முடிவு செய்தனர் என்பதையும் அக்கடிதம் சுட்டுகிறது. புகார் அளித்த இரண்டாவது நபரான, கட்சியின் பெண் உறுப்பினர், வரதராஜனின் மனைவியை “இது கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும்” எனக் கூறி தடுத்ததாகவும் கூறுகிறது. விவாகரத்து பெறத் தேவையில்லையென்றும் இதற்கு மாற்றாகக் கட்சி அவருடைய கணவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதி வரதராஜனின் மனைவிக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ‘முறைதவறிய’ செயல்கள் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்திற்கு முன்பே வரதராஜனின் மனைவி, பின்னர் அவர் அளித்த புகாரில் இல்லாத வேறு காரணங்களுக்காக அவரை விவாகரத்துச் செய்ய விரும்புவதாகக் கட்சிக்குக் கடிதம் எழுதியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

o

வரதராஜனின் கடிதத்தைப் படிக்கையில் ஏற்படும் இக்கேள்விகளின் நீட்சியாக வரதராஜனின் நடவடிக்கை குறித்த விசாரணைக் கமிட்டியின் மதிப்பீட்டை உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவருடைய ‘முறை தவறிய’ செயல் எது என்பது குறித்த புரிதல் அவர்களுக்கு இருந்ததா என்பதும் விளங்கவில்லை. பாலியல் துன்புறுத்தல், பெண்கள்மீதான வன்முறை குறித்த தங்கள் புரிதலைக் கூர்மையாக்கிக்கொள்ள இருபதாண்டுகளிலான பெண்கள் அமைப்புகளின் தொடர்ந்த பணிகள், சட்டரீதியான, செயல்முறைரீதியிலான, அரசியல்ரீதியான ஆழமான புரிதலை உருவாக்கியுள்ளன. இந்தப் பின்னணியில் “முறைகேடான” நடத்தை என்பதைப் பற்றிய விசாரணைக் கமிட்டியின் தெளிவின்மை முக்கியத்துவம் பெறுகிறது.

வேறு தளங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த விவாதங்களிலும் விசாரணை விதிமுறைகள் உருவாக்கலிலும் இணைந்து பணியாற்றியுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் இந்த விசாரணைக் கமிட்டியில் தொடர்புடையவர்களாக இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது.

அவர்கள் மட்டுமே அறிந்த காரணங்களுக்காக விசாரணைக் கமிட்டி உறுப்பினர்கள் வரதராஜன் விஷயத்தில் அவசரகதியில் முன் முடிவோடு செயல்பட்டனரோ என்ற கேள்வி எழுகிறது.

இதன் அடிப்படையில் கீழ்க்காணும் சில கருத்துகளை, தொடர வேண்டிய விவாதத்தின் புள்ளிகளாக நாங்கள் எழுப்புகிறோம்.

1. வழக்கின் சரி தவறுகளுக்குச் சற்றும் தொடர்பில்லாத நோக்கங்களுக்காக வரதராஜன்மீதான விசாரணை அவசரகதியில், தவறான முறையில் நடந்துள்ளது.

2. வரதராஜனைத் “தவறான பாதை”யிலிருந்து திருப்பிக்கொண்டுவர விரும்புவதாகக் கூறி புகழ்பெற்ற சிவில் உரிமை, பெண்கள் உரிமை வழக்கறிஞர் ஒருவர் விசாரணை தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். விசாரணையோடு தொடர்புடைய பெண் தலைவர் வரதராஜனின் மனைவியிடம் “விவாகரத்துச் செய்ய வேண்டாம் அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்” எனக் கூறியிருக்கிறார். இந்த இரு கூற்றுமே வலதுசாரிகள் முன்வைக்கும் கற்பு-ஒழுங்கு குறித்த பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்டுள்ளது. இடதுசாரிகளோ பெண்ணியவாதிகளோ முன்வைக்கக்கூடிய கூற்றாக இவற்றை ஏற்க முடியவில்லை. திருமணம், குடும்பம், பாலியல் நெருக்கம் குறித்த தொடர்ச்சியான ஆழமான விவாதங்களை பெண்ணியவாதிகள் மேற்கொண்டுவரும் வேளையிலும் பழமையான, ஒடுக்குமுறையான பாலியல் ஒழுங்கு குறித்த கரடுதட்டிப்போன கருத்தாக்கங்களே நம்மை வழிநடத்துகின்றன என்பது வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.

3. மிகவும் பிரச்சினைக்குரிய ஒரு விசாரணை முறையைக் கையாண்ட தன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனித உறவு, நெருக்கம், ஆகியவற்றைச் சிதைத்துள்ளது. ஜனநாயகவாதிகளாக, பெண்ணியவாதிகளாக நாம் உணர்வுபூர்வமான, பாலியல் விழைவைக் குறித்த ஆழமான, பொறுப்பான உரையாடலைச் சாத்தியப்படுத்துகிற வெளிப்படையான பொதுக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்பவர்களாகவும் அதை உருவாக்கக் கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். இது போன்ற விஷயங்களில் அவசரமான, அசிரத்தையான நடவடிக்கை என்பது ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தும்; வீட்டிலும் வெளியிலும் பாலியல், அரசியல் போலித்தனத்தை வளர்க்கவே உதவும்.

தன்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்துக்கொள்ளும் ஒரு கட்சி, திருமணம், இல்லற உறவு, குடும்பம் குறித்து இச்சமூகத்தில் நிலவி வந்துள்ள மதிப்பீடுகளை விமர் சனத்துக்குட்படுத்தியே கைக்கொள்ள வேண்டும். அது எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டாலும் குறைந்தபட்சம் இவற்றின் மீதான வெளிப்படையான விவாதத்திற்கேனும் இடமளிக்க வேண்டும்.

4. இறுதியாக, தன்மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் கட்சி “இது எங்கள் உட்கட்சி விவகாரம்” எனப் புறந்தள்ளுவது சரியல்ல. மனைவியை அடிக்கும், குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் “இது எங்கள் குடும்ப விஷயம்” எனக் கூறுவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. வரதராஜன் அவர்களின் கடிதம் பொதுவெளியில் வெளியானதற்குப் பின்னரேனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதில் அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் அவர்களுடைய ஒழுங்கு மனப்பான்மை பொதுவெளியில் ஏற்படுத்தியிருக்கும் கேள்விகளுக்கும் பதில் கூறியாக வேண்டும். தங்களுடைய செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

வ. கீதா, அ.மங்கை, கீதா ராமசேஷன் - பெண்கள் சந்திப்பு
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்